அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

0

ச. கண்மணி கணேசன்
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

முன்னுரை 

குயவன் ஒரே ஒரு அகப்பாடலின் பின்புலத்தில் வருணிக்கப்படுகிறான். சிறுபாத்திரம் என்னும் தகுதியையும் வேறு ஒரு அகப்பாடலில் மட்டுமே பெறுகிறான். பண்டைத்தமிழர் சமுதாயத்தில் நிலவிய பன்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் துணைசெய்வதே இப்பாத்திரத்தின் சிறப்பம்சம் ஆகும்

புற இலக்கியத்தில் குயவன் 

புறப்பாடல்களில் ஈமத்தாழி செய்யும் குயவன் ‘கலம்செய் கோ’ என்று அழைக்கப்படுகிறான் (புறம்.- 228& 256).

“வேட்கோச் சிறாஅர் தேர்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போல” (புறம்.- 32)

என்னும் உவமையில் இடப்பெறும் வேட்கோ என்பதும் குயவனையே குறிக்கிறது. பச்சை மண்ணைச் சக்கரத்தில் வைத்துத் தம் கைவினையால் செய்யும் சிவந்த பாண்டங்கள் அவர்கள் திறத்திற்கேற்ப வடிவம் பெறுவது போல என்பதால்; மண்ணைக் குறிக்கும் ‘வேள்’ என்னும் அடிச்சொல் குயவனுக்கும் பொருந்தி வருவது ஒருதலை.

குயவனின் தோற்றமும் பொறுப்பும்

அகப்பாடலின் இடப்பின்புலம் விளங்கத் தோன்றும் குயவன்; ‘பளிச்’சென்று கொத்தாகப் பூத்திருக்கும் நொச்சி மலர்களைத் தெரியலாக்கி அணிந்திருக்கிறான்; அவனது கடமையும் பொறுப்பும் மதிப்பிற்குரியன.

“மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
பலிகள் ஆர்கை பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்” (நற்.- 293)

என்பதால் அகன்ற ஊர் மன்றத்தில் விழா எடுக்குங்கால் தெய்வத்திற்குரிய  பலியைப் படைக்கும் தகுதி பெற்றவன் குயவன் என்பது பெற்றோம். அப்பலிப்பொருட்களை உண்ணுதற்குக் காக்கைகளை அழைப்பவனும் அவனாகிறான். பதிற்றுப்பத்து போருக்கு முந்தைய முரசு வழிபாட்டில் காட்சிப்படுத்தும் கிணைப்பொருநராகிய திணைமாந்தர் இங்கு ஒப்பீட்டிற்கு உரியவர் ஆகின்றனர். குயவனும் பலிகொடுத்துக் காக்கையை அழைப்பது தமிழ்ச் சமூகம் பற்றிய தனி ஆய்விற்கு உரியது.

குயவனின் தொழிலும் அகப்பாடலில் இடப்பின்புலத்தை விளக்கும் காட்சிக்கு உவமை ஆகிறது.

“இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்.- 308)

என்ற பாடலடிகள்; தலைவனது மலையின் உச்சியை மறைத்துக் கொண்டு  வெண்மேகங்கள் சூழ்ந்திருக்கும் காட்சி குயவனின் சூளையிலிருந்து வெளிப்படும் புகை போல அடர்ந்திருந்தமையை உணர்த்துகின்றது.

குயவனின் செயல்

குயவன் எந்த அகப்பாடலிலும் பேசவில்லை; அவனுக்குப் பேசும் உரிமை ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல் இல்லை. அவனை அழைத்துத் தலைவி பேசுவதால் அவனுக்குச் சிறுபாத்திரத் தகுதி கிடைக்கிறது.

“கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்
சாறு என நுவலும் முதுவாய்க் குயவ” (நற்.- 200)

என்ற பாடலடிகள் முன்னர் சுட்டிய நற்றிணைப் பாடலில் உள்ள குயவனின் தோற்றத்தை மீண்டும் அரண் செய்கின்றன. இங்கும் குயவன் நொச்சித் தெரியல் சூடியுள்ளான்.

‘யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்’ என்னும் தொடர் பத்துப்பாட்டிலும் காப்பியங்களிலும் பயின்று வரும் வாய்மொழிப்பாடற் கூறு என்பதால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட நாட்டார் வழக்காற்றின் துளி ஒன்று இன்று நமக்குக் கிடைத்திருப்பது  நினைந்து இன்புறத்தக்கது.

அவன் அணிந்திருந்த நொச்சித் தெரியலுக்குத் தலைவி சொல்லும் உவமை பண்டைச் சமூகச் செய்தியைத் தாங்கியுள்ளது. நெற்கதிரைக் கண்ணியாகக் கட்டியது போல அந்த நொச்சிப்பூக்கட்டு காட்சி அளித்ததாம். இந்த உவமை உணர்த்தும் குறிப்பு என்னவெனில் பாடலின் தலைவி ஒரு வேளாளர் குலப்பெண் என்பதாகும். நான்காம் வருணத்தாராகிய வேளாளர் நெல்வேளாண்மை செய்தவராதலால் அவர்கள் தொடர்பான செய்திகளில் நெல் பற்றிய குறிப்புகள் ஏதேனும் ஒரு வடிவில் இடம் பெறுவதுண்டு. பாடலில் ஆம்பல் பூக்களால் கட்புலனுக்கு இனிதாகத் தோன்றும் பழனப் பொய்கை உள்ள ஊர்க்காட்சி தொடர்வதும் அவள் வேளாளர் குலப்பெண் என்பதை உறுதி செய்கிறது. நீர்மேலாண்மையும் நெல்வேளாண்மையும் சேர்ந்தே நிகழ வேண்டியவை அல்லவா.

குயவன் விழா அறைகிறான்; தெருவெங்கும் அவன் சாற்றுவதைத் தலைவி அவனை விளிக்கும் முறையில் புலப்படுத்துகிறாள். விழா அறையும் நிகழ்ச்சி தமிழின் முதற்காப்பியங்கள் இரண்டிலும் உள்ளது. அங்கு வேந்தர் ஆளுகையின் கீழ் பொதுமக்களுக்கு ‘முதுகுடிப் பிறந்தோன்’ விழா அறைவான். முதுகுடியினராக அறியப்படுவோர் மாங்குடி கிழார் வரிசைப்படுத்தும் துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போராவர். அவ்வரிசையில் குயவருக்கு இடமில்லை. ஆயினும் ‘முதுவாய்க் குயவ’ என்று அழைப்பது அவன் தொன்றுதொட்டு விழா அறையும் தகுதி பெற்றவன் என்பதைக் காட்டுகிறது. இதனால் குயவர் தமிழ் மண்ணின் மைந்தர் அல்லர்; தமிழகத்துப் பூர்வ குடியினர் அல்லர்; வேளிர் வந்தேறியதைப் போன்றே குயவரும் வந்தேறினர்; வேளிர் ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் விழா அறைவதும், பலிப்பொருள் செலுத்துவதும், காக்கைகளை அழைப்பதும் குயவரின் பொறுப்பாக இருந்தது என்பது பெறுகிறோம். ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் தம் (The pot route) ஆய்வுக்கட்டுரையில் சொல்லும் செய்தி உறுதிப்படுகிறது.

“இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அகன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக்
கைகவர் நரம்பிற் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
ஐதகல் அல்குல் மகளிர் இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே” (மேற்.)

என்ற பாடலின் பிற்பகுதியில் தலைவி தமிழ்நாட்டுச் சமூகநிலைமை பற்றி  மேலும் தெளிய  வைக்கிறாள். ‘முதுவாய்க் குயவ’ என குயவனைப் புகழ்ந்த தன் வாயால் பாணனைப் ‘பொய்பொதி கொடுஞ்சொல்’ பேசுபவன் என்று இழித்து உரைக்கிறாள். இது தலைவனின் புறத்தொழுக்கத்திற்கு பாணன் துணை இருப்பதை விரும்பாத தலைவியின் விமர்சனம் ஆகும். ‘பாணனால் ஏற்படும் துன்பங்கள் பெருகுகின்றன; பெண்கள் இவனை நம்பவேண்டாம்’ என்றும் சேர்த்து அறிவிப்பாயாக என்று குயவனை வேண்டுகிறாள்.

குயவனையும் பாணனையும் ஒப்பிட்டு; குயவனின் பேச்சைப் பெண்டிர் ஏற்றுக்கொள்வர் என்னும் நம்பிக்கையோடு; பாணனின் பேச்சை நம்பக்கூடாதென்று; ஒருவரோடொருவர் முரண்படும் ஏற்றத்தாழ்வை வெளிப்படையாகச் சுட்டி; முகத்துக்கு நேரே துணிவுடன்; யாழின் நரம்பை மீட்டிக்கொண்டே  பாடும் தொழில்வல்ல பாணனின் குறையைக் கூறச் சொல்லும் தலைவியின் முயற்சியில் இனச்சாடலின் சாயல் தென்படுகிறது என்று சொல்வது மிகையாகத் தோன்றவில்லை.

முடிவுரை

ஒரே ஒரு பாடலில் சிறுபாத்திரம் ஆகும் குயவன் சமூகச் செய்திகளைத் தாங்கி இருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக உள்ளான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *