கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 8

0

-மேகலா இராமமூர்த்தி

’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ இயல்புகொண்ட மெய்யடியார்களைப் போல, நாடாளும் வாய்ப்பையும் காடேகும் கட்டளையையும் ஒன்றாகவே மதித்தான் இராமன். சிற்றன்னை கைகேயியை வணங்கிவிட்டு அவள் அரண்மனையிலிருந்து அகன்றவன், தன்னைப் பெற்ற அன்னையான கோசலையைக் காணப் புறப்பட்டான்.

கவரி வீசுவோர் முன்னேவர, வெண்கொற்றக் குடை பிடிப்போர் பின்னேவர, பச்சைமா மலைபோல் மேனியும் பவளவாய் கமலச்செங்கணும் கொண்ட தன் மகன் அரசனாய் முடிபுனைந்து, கம்பீரநடை பயின்று, தன்னைக் காணவருவான் என்ற எதிர்பார்ப்போடு தன் அரண்மனையில் காத்திருக்கின்றாள் கோசலை. ஆனால் இராமனோ அரசனுக்குரிய அலங்காரங்கள் ஏதுமின்றித் தனியனாய் வருகின்றான்.

உண்மையிலேயே அவன் தனியனாகத்தான் வருகின்றானா? இல்லை! அவனுக்கு முன்னால் விதி செல்ல, பின்னால் தருமமானது இரங்கி அழுதுகொண்டே வருகின்றது என்கிறார் கம்பர்.

குழைக்கின்ற கவரி இன்றி
     கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்ல
     தருமம்பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்
முன்ஒரு தமியன் சென்றான்.
(கம்ப: நகர்நீங்கு படலம் – 1695)

அன்னையின் அருகில்வந்த இராமன் அவள் பாதம் பணிந்து நிமிர்கின்றான். அவன் தோற்றத்தைக் கண்ட கோசலை அவனைப் பார்த்து, “மகனே! முடிபுனைவதில் ஏதேனும் இடையூறு நேர்ந்துவிட்டதா?” என்று ஐயத்தோடு வினவுகின்றாள்.

”அம்மா! உங்கள் அன்புக்குரிய திருமகன் பரதன் முடிசூட விருக்கின்றான்!” என்றான் இராமன். மகனைக் கூர்ந்துநோக்கினாள் கோசலை. அவள் திருவாயிலிருந்து பின்வரும் சொல்முத்துக்கள் உதிர்ந்தன!

”மகனே! பரதன் முடிசூடுகின்றானா? மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுதல் அரச வழக்கமன்று என்ற ஒருகுறையை வேண்டுமானால் நாம் இவ் விசயத்தில் சொல்லலாமே தவிர, பரதனைப் பொறுத்தவரை உங்கள் மூவரைவிடவும் நிறைகுணங்கள் கொண்டவன்; உன்னைவிட நல்லவன்! எக்குறையும் அற்றவன்; ஆக, அரசனாக இருக்க முழுத்தகுதியும் வாய்ந்தவன் அவன்” என்று பரதனுக்குப் புகழாரம் சூட்டுகின்றாள் நான்கு புதல்வர்களிடத்தும் அன்பினில் எவ்வித வேற்றுமையும் பாராட்டாத அருமைத் தாயான கோசலை.

முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு மும்மையின்
நிறை குணத்தவன்
     நின்னினும் நல்லனால்
குறைவுஇலன் எனக்
     கூறினள் நால்வர்க்கும்
மறுஇல் அன்பினில்
     வேற்றுமை மாற்றினாள். (கம்ப: நகர்நீங்கு படலம் – 1698)

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ’நின்னினும் நல்லனால்’ என்ற தொடர் வெண்ணிக் குயத்தியார் எனும் புலவர்பெருமாட்டியின் சங்கப் பாடலில் பயின்றுவந்துள்ள ’நின்னினும் நல்லன்’ தொடரை நமக்கு நினைவூட்டுகின்றது.

அப்பாடல்…

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே.
(புறம்: 66)

தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சோழமன்னன் கரிகாலன், சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும், வேளிர்குலத்தைச் சேர்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்று வாகை சூடினான். அப்போரில் சேரமானுடைய மார்பில் பாய்ந்த வேலானது, அவனுடைய முதுகைத் துளைத்து வெளியேறியது; அதனால் அவனுக்குப் புறப்புண் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நாணியவன், அதன்பின்னர் உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்துறந்தான்.

வெண்ணிப் பகுதியைச் சேர்ந்தவரான குயத்தியார் இந்நிகழ்வினை நன்கறிந்திருந்தார். அதனால் கரிகாலனைச் சந்தித்தபோது, மன்னா! நீ போரில் வென்றதனால் வெற்றிக்குரிய புகழடைந்தாய் என்று அவனைப் பணிந்துரைத்ததோடு நில்லாமல், புறப்புண்ணுக்காக நாணி உயிர்துறந்த பெருஞ்சேரலாதன் உன்னைவிடவும் மிகுபுகழ் எய்தியிருக்கின்றான். ஆதலால் நின்னினும் நல்லன் அவனே என்றும் துணிந்துரைந்தார்.

இத்தொடரால் கவரப்பட்ட கம்பர், இராமனைவிடவும் நல்லவன் பரதன் என்று கோசலை அவனைப் புகழுமிடத்து, ’நின்னினும் நல்லனால்’ என்று பொருத்தமாய் அந்தச் சங்கச் சொல்லாடலைக் கையாண்டிருக்கின்றார். 

பரதன் குறித்த கோசலையின் பாராட்டுமொழிகளை ஆமோதித்தான் இராமன்!

”சரி மகனே! அரசனின் ஆணை எதுவாயினும் அதனை ஏற்று நடப்பதுதான் உனக்குரிய அறமாகும்; ஆதலால் பரதன் நாடாளட்டும்! நீ அவனோடு ஒன்றுபட்டிருந்து நெடுங்காலம் வாழ்வாயாக!” என்று அவனை வாழ்த்தினாள் கோசலை.

”அம்மா! நான் நல்வழியில் செல்வதற்கு ஏற்றவகையில் எனக்கு மற்றொரு பணியையும் அரசர் அளித்திருக்கின்றார். அதன்படி நான் கானகம் சென்று மாதவம் செய்வாரோடு ஏழிரண்டு ஆண்டுகள் வசித்துத் திரும்பவேண்டும்.” என்று தேர்ந்தசொற்களால் இராமன் தன் கடமையை விளக்க, அதனைக் கேட்ட கோசலை அதிர்ந்துபோனாள். அவள் கண்கள் கண்ணீர்மழையைப் பொழியத் தொடங்கின.

”மைந்த! அரசற்கு நீ இழைத்த பிழைதான் என்ன? எதற்கு இப்படியோர் கட்டளை!” என்று கதறியவளைக் கண்டு, ”அம்மா! இப்பணி எனக்கு நன்மையே செய்யும்; நீங்கள் கலங்காதீர்கள்!” என்று தேற்றினான் இராமன்.

கோசலை தன் மகன் மனத்தை மாற்றுவது கடினம் என்றுணர்ந்தவளாய், அரசனைக் கண்டு இக்கட்டளையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்றெண்ணிக்கொண்டு கைகேயியின் அரண்மனை நோக்கிப் புறப்பட்டாள்.

இதற்கிடையில் அண்ணனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்ட செய்தியை அறிந்த இலக்குவன், கடுங்கோபத்தோடு ஊரையே அழித்துவிடும் ஆவேசத்தில் வில்லின் நாணொலி எழுப்பினான். அவ்வொலியின் அதிர்வைக் கேட்ட இராமன் இளையவனின் மனக் குறிப்பறிந்தான். அவனை நோக்கி விரைந்துவந்தவன், ”இத்துணைக் கடுமையும் கோபமும் எதற்கு இலக்குவா?” என்று வினவ, ”என்னை எதிர்க்கவரும் அனைவரையும் வீழ்த்தி உன்னை அரசனாக்குவேன் அண்ணா!” என்று சீற்றத்தோடு உரைத்தான் இலக்குவன்.

புன்சிரிப்பை உதிர்த்த புயல்வண்ணன், ”தம்பி நதியிலேயே நீரில்லை எனில் அது நதியின் குற்றமில்லை; அதுபோல் அரசாட்சி எனக்குக் கிட்டாமல் போனது நம் தந்தையின் குற்றமுமில்லை; நம்மைப் பேணிவளர்ந்த அன்னை கைகேயியின் குற்றமுமில்லை; அவளுடைய மகனான பரதனின் குற்றமும் இல்லை!”

”பின் யாருடைய குற்றம் என்கிறாயா? இது நம் ஊழ்வினையால் விளைந்த குற்றமே அப்பா! இதற்குப்போய் நீ பிறரிடம் கோபிப்பது சற்றும் முறையில்லை” என்று இலக்குவனைச் சமாதானப்படுத்தினான்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது என்றான்.
(கம்ப: நகர்நீங்கு படலம் – 1824)

இந்தப் பாடலின் கருத்தில் மனம்நெகிழந்த கவியரசு கண்ணதாசன், இதனை மேலும் எளிமைப்படுத்தி,
”நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை;

விதிசெய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா? என்றுதியாகம்’ திரைப்படப் பாடலில் பயன்படுத்தினார்.

 [தொடரும்]

*********
கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *