டாக்டர் இராதா தியாகராசன்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு நவம்பர் திங்கள் நான்காம் நாள், என் வாழ்வில் நினைவிற்குரிய ஒரு பெருநாள். என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்ட நாள். வாழ்வின் உயிரெனப் போற்றப்படும் மொழித் திருப்பம் ஏற்பட்ட திருநாள்.

மேற்கு மலைத் தொடர்களுக்கு அப்பால் பிறந்து, கன்னித் தமிழின் கடிமணம் கமழப் பெறாத என்னுள்ளத்தில், தமிழணங்கின் தனி நடம் நிகழத் தொடங்கிய தனி நாளது.

நாளும் கோளும் நனி சிறந்த நன்னாளாகிய அந்நாளில், கலைத்தந்தை அவர்கள், பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களை எங்கள் வளமனைக்கு வரவழைத்து,பரிமேலழகரின் உரையோடு பொருந்திய திருக்குறளை அவர் கைகளில் வழங்கி, அடியேனுக்குத் தமிழ்ச் சுவையூட்டுமாறு பணித்தார்கள். “தண்டமிழின் மேலாந்தரம்” என்று சிறப்பிக்கும் திருமறையைக் கனிவோடு பெற்றுக்கொண்டு, ஔவையவர்கள் கலைத் தந்தையவர்களையும், தமிழின் நெடுங்கணக்கறியாத என்னையும், பரிமேலழகரின் உரையையும் மாறி மாறி விழித்த விழி, இன்னும் என் கண்விட்டகலாக் காட்சியாக நிற்கின்றது.

எழுத்துகள் முப்பத்துமூன்றும் கற்பித்துப் பின், பரிமேலழகரின் உரைப் பாயிரத்துக்குச் சென்றார். அவருக்கே இயல்பாய் அமைந்த கணீர் என்ற வெண்கலக் குரலோசையுடன் பாடம் கற்பிக்கத் தொடங்கினார்.

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்
அந்தமிழ் இன்பத்து அழிவில் வீடும்,
நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு,
உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு.

நடுங்கினேன். குன்று முட்டிய குருவிபோல் திகைத்தேன். குறிஞ்சி புக்க மான்போல் விழித்தேன். அதை எழுத்துக் கூட்டிப் படிக்கவே தடுமாறிக் கலங்கிய என் நிலைமை கண்டு இரங்கி, “வரட்டும் – வரட்டும் – மெல்ல வரட்டுங்க” என்று கருணை நிறைந்த உள்ளத்தோடு ஆர்வமொழி புகன்று, ஆறுதல் கூறி, எனக்கு ஊக்கம் ஊட்டி, மேலும் சென்றார்.

இங்ஙனம் மெல்ல, மெல்ல என்னுடைய நிலைமை அறிந்து, நான் எளிதில் உணர்ந்துகொள்ளும் பொருட்டு, மிக எளிமையாகவும், பெரும்பாலும் ஆங்கிலத்திலுமே கற்பிக்கத் தொடங்கி, எனக்குத் தமிழிலக்கியத்தின் பெருஞ் சுவையைக் காட்டினார். பவணந்தியார் கூற்றுக்கு ஏற்ப, “விழையாது, வெகுளாது, விரும்பி முகமலர்ந்து, கோட்டமில் மனத்தோடு என் உளம் கொள நூல் கொடுத்தார்.”

பாடம் கேட்கும் பேறு பெற்ற நான், அவர்பால் ஆழ்ந்த புலமையும், செந்தமிழ்த் திறனும் மட்டுமின்றி, ஆன்று அவிந்தடங்கிய சான்றாண்மையும், அறம் பயின்றமைந்த நல்லடக்கமும் தெளிந்து தோன்றக் கண்டேன். நாநலமும் பாநலமும் நனி சிறக்கக் கண்டேன். அவர்பால் பணிவுடைமையும், இன் சொல்லும் மட்டுமல்ல, நூலறிவும், நுண்ணறிவும் களிநடம் புரியக் கண்டேன்.

பயில்வோரும் பயிற்றுவிப்போரும் பல்லாயிரக் கணக்கில் உளராகலாம். தண்டமிழ் கற்போரும், கற்பிப்போரும் தமிழகம் எங்கும் காணப் பெறலாம். ஆனால் நல்வினை வயத்தால் எனக்குக் கிடைக்கப் பெற்ற இப்பேராசான் எங்குமுள்ள ஒரு வீட்டாசான் அல்லர். ஏதோ ஊதியம் கருதிப் பணியாற்றி, நேரத்தை ஓட்டிவிட்டுத் தம் வீட்டுக்குச் செல்வதே நினைவாகக் கடிகாரத்தை இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இயல்புடையார் வீட்டாசான்கள் சிலர்.

ஔவையவர்களோ, ஏற்றுக் கொண்ட பணி, தாம் செவ்வன செய்து முடிக்கக் கடமைப்பட்ட ஓர் அறப் பணியாக கருதினார். ஒரு சிறிதும் அயர்வின்றி, உள்நிறை விருப்பினோடும், ஓங்குயர் ஆர்வத்தோடும் உளம் தொடும் உண்மையோடும், ஒரு தளபதியின் தறுகண்மையுடனும், வீரத்துடனும், துணிச்சலுடனும் எடுத்த பணியைத் தொடுத்து நடத்தினார். இத்தகைய தளபதிகளைத்தான், இன்றைய சூழ்நிலையில் தமிழன்னை வேண்டி நிற்கின்றார்.

நூல் நயங்களையும் கருத்துச் செறிவுகளையும் விளக்கும் ஆர்வத்தில் பல மணி நேரங்கள் செல்வதைக் கூட அறிய மாட்டார். நான் அயர்வுற்று, அன்றைய பாடத்தை நிறுத்திக்கொள்ளும் எண்ணம் கொண்டு, அதனைக் குறிப்பாய் அறிவுறுத்த வேண்டி, “ஐயா நேரமென்ன ஆயிற்றோ” என்று வினவினால், “என்னிடம் கடிகாரம் இல்லைங்க” என்று சுருங்க உரைத்துப் பாடத்தை மேலும் தொடர்வார். இக்குறிப்பு பயனற்றதாகக் கண்டு, நான் சிறிது நேரம் கழித்து மீண்டும் “இன்றைக்கு இத்துடன் நிறுத்தலாமா?” என்று கேட்பேன். “முந்நூறாவது பாட்டுடன் நிறுத்தலாமே! இன்னும் –” என்று கூறிப் பின்னும் தொடர்வர்.

இங்ஙனம் அயரா உள்ளத்துடனும் தளரா ஊக்கத்துடனும் உண்மை அன்புடனும் நான் நன்கு கற்க வேண்டுமென்ற நல் விருப்பத்துடனும் – அவரெனக்குத் தமிழ் நல்லறிவு கற்பித்திலரேல் நான் இன்று தமிழில் இந்தச் சிற்றறிவும் பெற்றிருக்க மாட்டேன். கற்க வேண்டுமென்ற எனதார்வத்தை விட, எனக்கு நன்றாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் எனக்குத் தமிழறிவும் சமய உணர்வும் வாரி வழங்கிய இச்செம்புலச் செல்வரின் செம்மனப் பாங்கு பெரிதும் போற்றத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என் தமிழ் ஆசான்

  1. உள்ளன்போடு வெளிப்படும் கருத்துகள். நான் படிக்கும் காலத்தில்(1995-2000)அம்மையார் அவர்களைக் கண்டு வியந்தேன். சைவச் சித்தாந்த சாத்திரங்கள் நடைபெறும் கருத்தரங்குகளில் ஆர்வத்தோடு செவிமடுத்து அகமகிழ்ந்து இருப்பவர். சான்றோர் என்ற சொல்லின் பொருள் உணர்ந்த தருணங்கள் அவை. தூர நின்று மகிழ்ச்சிப் பெருக்கோடு பார்த்திருப்பேன். இப்போதும் என் காதுகளில் அந்த இனிமையான குரலோசையும் அவர்களின் சிரிப்பும் முட்டி மோதுகின்றன. நல்ல ஆன்மாவைத் தரிசனம் செய்த மன நிறைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *