(Peer Reviewed) பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்

1

ச. கண்மணி கணேசன் (ப.நி.)

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

  1. புறம். புறநானூறு
  2. அகம். அகநானூறு
  3. நற். நற்றிணை
  4. ஐங். ஐங்குறுநூறு
  5. பதிற். பதிற்றுப்பத்து
  6. சிறு. சிறுபாணாற்றுப்படை       

0.0   முன்னுரை

0.1 பொறையாற்றுக் கிழான் என்று புறம். குறிப்பிடும் தலைவனும்; ‘நற்றேர்ப் பெரியன்…பொறையாறு’, ‘கைவண் கோமான்… நற்றேர்ப் பெரியன்’ என்று முறையே நற்றிணையும் அகநானூறும் புகழும் தலைவனும் ஒருவரா? இருவரா? யார்? எவ்விடத்தவர்? என்று காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

0.2   ஔவை சு.துரைசாமிப்பிள்ளை  உரையெழுதிக் கழக வெளியீடாகக் கிடைக்கும் புறநானூறு இருவரையும் ஒருவராகக் கொண்டு விளக்கிச் செல்வதே இவ்ஆய்விற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. உ.வே.சாமிநாதையரின் புறநானூற்றுப் பதிப்பு கிழார் வேளாளர் என்றும்; வேளிர் உழுவித்தவர் என்றும்  வேறுபிரித்து உரைப்பினும்; பிடவூர்  கிழான்  மகன் பெருஞ்சாத்தனை உழுவித்தவன் என்று சொல்லும் போது குழப்பம் ஏற்படுகிறது. மு.இராகவையங்கார் ‘வேளிர் வரலாறு’ என்ற தன் நூலில்; வேளிர் வந்தேறிகள் என்று முடிவு கூறியிருப்பினும்  கொண்கானக் கிழானை வேள் என்று உரைப்பது ஆய்விற்கு உரியதாகிறது. ‘கிழார்ப் பெயர் பெற்றோர்’ என்று புலவர் கா.கோவிந்தன் நாற்பத்தோரு கிழார்களைத் தொகுத்து எழுதிய நூல் ‘நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரெல்லாம் கிழார்களே’ என்று கல்வெட்டுகளின் துணை கொண்டு விளக்கும்போது சிக்கல் வளர்கிறது. இப்பெரியோரின் கூற்றுகளுக்கு விளக்கம் கூறுமுகமாகச் சமூகவியல் நோக்கில் பொறையூர்க்  கிழான் பற்றி ஆழமாக ஆராயும் போது; கிழார்  பற்றிய புரிதலும்   தெளிவடைகிறது.

0.3   புறம்.- 391, நற்.- 131& அகம்.- 100 ஆகிய மூன்று பாடல்கள் மட்டுமே முதல்நிலைத் தரவுகளாக அமைகின்றன. பிற தொகைநூற் பாடல்களும், இக்கால உரையாசிரியர் கூற்றுகளும், நூலாசிரியர் கருத்துக்களும் இரண்டாம்நிலைத் தரவுகள்  ஆகின்றன. சமூகவியல் ஆய்வாகக்  கட்டுரை அமைகிறது. கிழாரையும் வேளிரையும் சுட்டும் முறை ஒப்பீட்டு ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது.

1.0   சுட்டும் முறை

கோமான் பெரியன்

“பாடுநர் தொடுத்த கைவண் கோமான்” (அகம்- 100)

என்று சிறப்பிக்கப்படுவதால் பெரியன் ஒரு வேள் ஆவான். தொகை நூல்களில் ‘கோமான்’ என்ற விளிச்சொல் வேந்தரையும் வேளிரையும் சுட்டவே பயின்று வந்துள்ளது. வேந்தருள் அடங்காத பெரியன் ‘வேள்’ என்றே கருத இடமுள்ளது.  கிழாரை இடப்பெயரோடு மட்டுமே  சேர்த்துச் சுட்டும் முறையே  காணப்படுகிறது.

1.1   பாண்டிய வேந்தரை;

“கொற்கைக் கோமான்” (சிறு.- 62; ஐங்.- 188)

“தென்னர் கோமான்” (அகம்.- 209)

“தேர்வண் கோமான்” (ஐங்.- 55)

என்று பொதுவாகவும்; அம்மரபைச் சார்ந்த குடுமி என்னும் மன்னனை;

“குடுமிக் கோமான்” (புறம்.- 64)

என்றும் அழைத்திருப்பதைக் காண்கிறோம். துணங்கை ஆடிய  சேரனும், இன்னொரு குட்டுவனும் முறையே;

“வலம்படு கோமான்” (பதிற்.- 59)

“கைவண் கோமான் ” (அகம்- 270)

எனப்படுகின்றனர். அதியமானும் அவனது மகன் எழினியும் ஒன்றுபோல;

“அதியர் கோமான்” (புறம்.- 91, 392)

என்றே சுட்டப்படுகின்றனர். அத்துடன் அதியன்;

“அண்ணல் எம்கோமான்” (புறம்- 95)

என்றும் அழைக்கப்படுகிறான். வேள்பாரியை மீண்டும் மீண்டும்;

“பறம்பில் கோமான்” (சிறு.- 91; புறம்.- 158, 201)

என்றழைப்பதைக் காண்கிறோம். வையைநீரை மேலாண்மை செய்ததால்;

“பொய்யா யாணர் மையல் கோமான்” (புறம்.- 71)

என்று மாவன் புகழப்படுகிறான்.  பெயரிலேயே முடிசுமந்திருக்கும் மலையமான் திருமுடிக்காரி;

“கோவல் கோமான்” (அகம்.- 35) ஆயினன்.

காவிரியின் சங்கமத்தருகே  இருந்த கழாஅர் முன்றுறைப் பரதவர்க்குத் தலைவனாக இருந்து உழுவித்த மத்தி;

“பரதவர் கோமான்” (அகம்.- 226) எனப்படுகிறான்.

மதுரையில் ஓடும் வையைக்கு வடக்கே உள்ள செல்லூரிலிருந்து வேளாண்மை செய்தவன்;

“செல்லிக் கோமான்” (அகம்.- 216) என்கிறார் புலவர்.

 வேங்கடமலை அருகில் இருந்த வேள்;

“கள்வர் கோமான் புல்லி” (அகம்.- 61) ஆவான்.

 நல்லியக்கோடன்;

“கிடங்கில் கோமான்” (சிறு.- 160)

“குறிஞ்சிக் கோமான்” (சிறு.- 267)

என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். மேற்சுட்டிய சான்றுகள் தவிர வேறெங்கும் தொகைநூல்களில்  கோமான் என்ற சொற்பயன்பாடு இல்லை. இவற்றுள் எந்தப்பாடலிலும் எந்த ஒரு கிழாரும் கோமானென்று சுட்டப்படவில்லை

1.2   தொகை நூல்களும், அவற்றைத் தொகுத்தோரும் கிழார்களைச் சார்ந்த ஊர்ப்பெயர் அல்லது மலை அல்லது ஏதேனும் ஒரு  நாட்டுப்பகுதியின் பெயரைக்  கிழார்க்கு  முன்னொட்டு ஆக்குகின்றனர்.

கோவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், மாங்குடி கிழார் போன்று பாடல் புனைந்தோர், புறநானூற்று அடிக்குறிப்பில் சுட்டப்படும் பெருஞ்சிக்கல் கிழான் (புறம்.- 349), பதிற். பதிகம் (9ம் பத்து) சுட்டும் மையூர் கிழான், தொகை நூல்களைத் தொகுத்தோராகக் கூறப்படும் உப்பூரிகுடி கிழான் மகன் உருத்திரசன்மன் (அகம்.), கூடலூர் கிழார் (ஐங்.) அனைவரும் இடப்பெயருடன் தொடர்புபடுத்தப்பட்டே உள்ளனர்.

“சிறுகுடி கிழான் பண்ணன்” (புறம்.- 388)

என்றே பண்ணன் பாடலில் அழைக்கப்படுகிறான்.

“கொண்பெருங் கானத்துக் கிழவன்” (புறம்.- 155)

என்று கொண்கானக் கிழான் பாடப்பட்டுள்ளான்.

“அம்பர் கிழவோன் நல்லருவந்தை” (புறம்.- 385)

என்று அழைக்கப்படுபவனை அம்பர்கிழான் அருவந்தை என்று ஆவணப்படுத்தி உள்ளனர்.

“பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன்” (புறம்.- 395)

என்று பாடல் குறிப்பிடத்;  தொகுப்பாளர் பிடவூர் கிழான்மகன் என்று  உரைத்துள்ளனர்.

“கரும்பனூரன்” (புறம்.- 384)

என்று புலவர் சுட்டுபவனைக்; குறிப்பு எழுதியோர் கரும்பனூர் கிழான் என்கிறார்.

“வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன்” (புறம்.- 181)

எனும் பண்ணன்  வலாரெனும் இடத்துடன் சேர்த்துப் பாடப்படுகிறான்.  தொகுத்தோர் இவனைக் கிழான் என்பர்.

“ஈர்ந்தையோனே”- (புறம்.- 180)

என்று அழைக்கப்படுபவன் ஈர்ந்தையூர் கிழான் என்று சொல்லிச் சென்றுள்ளனர் குறிப்பெழுதியோர்.

“பெரும்பெயர் ஆதி”- (புறம்.- 177)

என்று பாடலில் அழைக்கப்படுபவன் மல்லிகிழான் காரியாதி என்று உரைத்துள்ளனர் தொகுத்தோர்.

1.3   ‘பதிக்குரியோர் என்னும் பொருள் கொண்ட கிழார்’ என்றே பிறரும் விளக்கமளிக்கின்றனர் (கா.கோவிந்தன்- கிழார்ப்பெயர் பெற்றோர்- ப.- 21) ஆதலால்; பொறையாற்றுக்கிழானும் கோமான்  பெரியனும் வெவ்வேறானவர் எனத் தெளியலாம்.

2.0   கோமான் ஆண்ட பகுதி

பெரியன் மருதமும் நெய்தலும் மயங்கும் பொறையாற்றின் சங்கமத்துறையாகிய  புறந்தை முன்றுறையைச் சார்ந்து கோமானாக இருந்து  ஆண்டான். இப்புறந்தை இன்று ஆற்றின் பெயராகிய பொறையாறு என்றே வழங்குகிறது. பொறையாற்றுக் கிழானும் அதே ஊரைச் சார்ந்தவனாகப் பாடப்படுகிறான்.

2.1   உலோச்சனார் வருணிக்கும் புறந்தை முன்றுறையில்;  முழங்காத மேகம் சூழ்ந்த இரவில் அலை முழக்கும் அவிந்துள்ளது. கொழுமீன் பிடிக்கும் பரதவர் கருமையான கடலில் மடுத்த அம்பியில் இருள் நீங்க ஏற்றிய விளக்கு; வேந்தன் பாசறையிலுள்ள யானையின் முகபடாம் போல ஒளி வீசுகிறது. விரிந்த பூங்கொத்துக்களுடைய புன்னை மரங்கள் மிகுந்த கானலில் நாரைக்கூட்டத்தின்  ஆரவாரம் கேட்கிறது. குளிர்ச்சியோடு புலரும் இருள்நீங்கா விடியலில் எருமை புதிதாக மலர்ந்த நெய்தல் பூக்களை உண்கிறது. தாழை வேலியை உடைய தோட்டங்கள் உள்ளன.

“பெருந்திரை முழக்கமொடு இயக்கவிந்து இருந்த
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்……..
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் ………
……………………………….பெரியன் விரியிணர்ப்
புன்னையங் கானற் புறந்தை முன்றுறை
வம்ப நாரை இனன் ஒலித்த…… தண்புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தலம் புதுமலர் மாந்தும்
கைதை அம்படப்பை……… ஊரே” (அகம்.- 100)

என்ற வருணனையில் எருமையும் படப்பையும், நாரையும் மருதவளமாக அமைய; புன்னை, முழங்காத கடல், மீன் பிடிப்பவர், தாழை வேலி, நெய்தல் புதுமலர் ஆகியவை நெய்தல் வளமாக அமைந்து; அது ஒரு ஆற்றின் சங்கமத்துறை என்று புலப்படுத்துகின்றன.

2.2 கள்மணம் கமழும் பெருமை உடையது பொறையாறு. திரைத்த முதிர்ந்த அரையை உடைய வளைந்த தாழையில்; சுறாமீன் கொம்பு போல்  இருபுறமும் முள்ளை உடைய இலை முறியும்படி; இறா மீனைத் தின்ற நாரைக்கூட்டம் தங்கும் என்கிறார் உலோச்சனார்.

“திரைமுதிர் அரைய தடந்தாழ் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முள்தோடு ஒசிய
இறவார் இனக்குருகு இறைகொள இருக்கும்
………………………………பெரியன்
கள்கமழ் பொறையாறு” (நற்றிணை- 131)

என்ற பாடலிலும் தாழை, இறாமீன் ஆகியவை நெய்தல் வளத்திற்குக் கட்டியம் கூறுவன. குருகுக் கூட்டமும், மலர்களின் தேன் மிகுதியால் கள்மணம் கமழும் பொறையாறும்  மருதவளத்தின் பெருமை சாற்றுவன.

2.3 இருபாடல்களும் பேசுவது போன்றே; பொறையாற்றுக் கிழானைப் புகழும் புறப்பாடலும் பேசுகிறது.

“இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
புதைந்த புன்னைச் செழுநகர் ..….
……………………………… வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய” (புறம்.- 391)

கல்லாடனார் பாடியிருக்கும் இப்பாடல் பொறையாற்றுக் கிழானைப் பாடியது என்று தொகுத்தோர் அடிக்குறிப்பில் சொல்லி உள்ளனர். இப்பாடலிலும் கடல், கழி, மீன், புன்னைமரம் அனைத்தும் நெய்தல் வளமாக இருக்க; வயலும் விளைச்சலும் புதா என்னும் நாரையும் மருதவளமாக அமைந்து ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்  துறைக்குரிய வருணனையாகக் காணப்படுகிறது.

2.4 பொறையாற்றின் இருப்பிடத்தை வங்கக் கடற்கரையை ஒட்டிய தரங்கம்பாடியை அடுத்து இன்றும் அடையாளம் காண இயல்கிறது (பார்க்க- வரைபடம்- 1). ஆற்றின் பெயர் மாற்றம் பெற்று இருப்பினும் பொறையார் பழைய பேருந்து நிலையம், பொறையார் மீன் சந்தை, பொறையார் காவல் நிலையம்  போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. முற்சுட்டிய பாடல்களில் காணப்படும் மருதம் நெய்தல் ஆகிய இருதிணைகளுக்குரிய வருணனை இந்நிலப்பகுதிக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

வரைபடம்- 1  பொறையாறு

3.0   பொறையாற்றுக் கிழானின் பணியும் இனமும் 

3.1 பொறையாற்றுக் கிழான் வயலில் இறங்கி உழுத திணைமாந்தராகிய பொருநரின் தலைவனாக வாழ்ந்து  கொடையிலும்  சிறந்திருந்தான்.

பொறையாற்றுக் கிழான் முதுகுடிகளை உடைய மூதூர்க்குத்  தலைவனாக இருந்தான்.

“……………………………… பசித்தென
ஈங்கு வந்திறுத்த என் இரும்பே ரொக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்……
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என
நின்னுணர்ந்து அறியுநர் என்னுணர்ந்து கூறக்
காண்கு வந்திசின் பெரும ” (புறம்.- 391)

எனும் கல்லாடனாரின் பாடற்பகுதியில் முதன்மை பெறும் கருத்து; பொறையாற்றுக் கிழான் முதுகுடியினர் வாழும் ஊரின் தலைவன் என்பதாகும். தொல்தமிழகத்து முதுகுடியினர் யார்யாரென்று மாங்குடி கிழார் தன் பாடலில் தொகுத்துரைத்துள்ளார்.

“துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியுமில்லை ” (புறம். – 335)

இம்மேற்கோளில் இடம்பெறும் பறையரில் கிணைப் பொருநரும் அடங்குவர். ஏனெனில் கிணை ஒருவகைப் பறை. அதை முழக்கிக் கலைக்குழுவினரோடு சேர்ந்து சென்று பரிசில் வாழ்க்கை வாழ்ந்தவரைத் தொகை நூல்களில் பல இடங்களில் காண்கிறோம்.

“அவைபுகு பொருநர் பறையின் ஆனாது” (அகம்- 76),

“பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்” (சிறு.- 203)’

“நலங்கிள்ளி நசைப் பொருநரேம்
பிறர் பாடிப் பெறல் வேண்டேம்” (புறம்.- 382)’

“புன்தலைப் பொருநன் அளியன் தானென” (புறம்.- 390)

என்ற மேற்சுட்டிய மேற்கோள்கள் மட்டுமின்றிப் பொருநராற்றுப்படை என்ற பாட்டும் தமிழகத்துப் பூர்வகுடிகளாகிய பொருநர் எனும் பிரிவினர் பறைக் கலைஞர்  என்று  எடுத்துக்காட்டுகின்றன. இக்கிணைப்பொருநரே கோமான்களிடம் வீரராகவும் பணியாற்றினர். அறுவடை விழாவின் போது பொருநர் கிணைமுழக்கிக் கொண்டாடினர் (பதிற்.- 90) அதனால் கல்லாடனார் தன்னைப் பொருநன் என்று சுட்டிக் கொள்வது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகிறது.

தான் ஒரு பொருநன் என்பதை அறிந்த அம்மூதூர் மக்கள்; முன்னரே ஒருமுறை வந்து பொறையாற்றுக் கிழானிடம் இரந்து பெற்றவனெனினும்; மீண்டும் இரங்குதற்கு உரியன் என்று கருத்துரைத்ததை எடுத்துக்காட்டிப் பாடித்  தன் வறுமையும் பசியும் தீர மீண்டும் வந்ததாகச் சொல்கிறார்.

கோவூர் கிழாரும் தன்னைப் பொருநன் என்று சுட்டிக் கொள்கிறார்.

“அன்ன நன்னாட்டுப் பொருநம் யாமே” (புறம்.- 386)

புறந்தையில் வாழ்ந்த மக்கள் கல்லாடனாரும் தாமும் தம் தலைவனும் ஒரே இனத்தவர் என்று அறிந்தும் புரிந்தும் இருந்ததால் கல்லாடனாரை மீண்டும் பொறையாற்றுக் கிழானிடம் சென்று வேண்டக் கருத்துரைக்கின்றனர் எனச் சொல்வது மிகையாகாது. இதனால் பொறையாற்றுக் கிழான் தமிழ் மண்ணின் பூர்வகுடிகளைச் சேர்ந்த பொருநர்களின் தலைவன்  என்பது ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.

3.2 மரபுசார் புன்செய் வேளாண்மை செய்த கிழார்கள் தாம் சார்ந்திருந்த வேளிருக்காகவோ அன்றி வேந்தனுக்காகவோ நெல்லைப் பயிர் செய்த உழவர்களை மேலாண்மை செய்து; செல்வத்தில் சுருங்கி இருப்பினும் கொடையில் சிறந்து; விருந்தயர்ந்தனர் என்பதைத் தொகைநூல்களில் பரக்கக் காண இயல்கிறது.

பொறையாற்றுக் கிழான் நெல் வேளாண்மை செய்தான் என்பதை;

“வேலி ஆயிரம் விளைக நின் வயலே” (புறம்.- 391)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது. அவனது கொடைப்பண்பைக் கல்லாடனார் தேடி வந்தமையினின்று அறிகிறோம்.

மதுரைக்காஞ்சி கிழாரது வேளாண்மை தொடர்பான செயல்களை வரிசைப்படுத்துகிறது.

“மென்தொடை வன்கிழார்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஓப்பும் இசையே” (அடி.- 93-95)

என்று தொடருமுன் ஏற்றம் இறைத்தல், பன்றிப்பத்தரால் கயம் வற்றும்படி வயலை நீரால் நிறைத்தல், பகடு கொண்டு கடா விடுதல், பறவைகளிடமிருந்து கதிர்களைக்  காத்தல் முதலிய பல படிநிலைகளுடன் தொடர்புறுத்தியே பேசுகிறது. இதனால் கிழார் வேளாண் தொழிலில் ஈடுபடும் உழவரின் தலைவர் என்னும் கருத்து மேலும் வலுப்படுகிறது.

பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன் உறந்தைக்குக் கிழக்கில் ஆண்ட நெடுங்கை வேண்மானின் பிடவூரைச்  சேர்ந்தவன் என்று  புறநானூறு வெளிப்படையாக எடுத்துச் சொல்கிறது.

“செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன்” (புறம்.- 395)

எனும் செய்தி நெடுங்கை வேளுக்காகக் காவிரி பாயும் மருதநிலத்துப் பிடவூரில் நெல்வேளாண்மை செய்த உழவர் தலைவன் அவன் என்று முடிவு செய்ய ஏதுவாகிறது. அவனிடத்துப்;

“பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்” (மேற்.)

மாந்தியமை பற்றிப் புலவர் மகிழ்ந்துரைப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுகுடி கிழான் பண்ணன் மழை பொய்த்த போதும் தன் புன்செய் வேளாண்மை மூலம் கிடைத்த உணவைத் தானமாக அளித்ததால் தான் அவனது தலைவனாகிய சோழன் கிள்ளி வளவன் அவனைப்;

“பசிப்பிணி மருத்துவன்” ” (புறம்.- 173)

என்கிறான். நெல் விளைய இயலாத வறட்சிக்காலத்தில் மக்களின் பசிப்பிணி நீக்கினான். அதனால்

“யான் வாழுநாளும் பண்ணன் வாழிய” (புறம்.- 173)

என்றும் புகழ்கிறான். அவனது வேளாண்மையை விதந்தோதிப் புகழ்கின்றனர் புலவோர். பண்ணனது உழவு வினைக்குரிய எருதுகளையும், ஏற்றத்தையும்; கிணைப்பறை கொட்டி இசைத்துப்

“………………….பண்ணற் கேட்டிர்………………….
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா
நாடொறும் பாடேனாயின்” (புறம்.- 388)

எனப் பேசியுள்ளார் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார். பாடலைப் பாடியவர் ஒரு மள்ளர் என்பதும் பண்ணன் வேளாண்மை செய்தமைக்குரிய  ஆதாரமாகும்.

கரும்பனூர் கிழானிடம்;

“நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை.…
நீர்நாண நெய் பெய்து……….
மென்பாலான் உடனணைஇ
வஞ்சிக்கோட் டுறங்கு நாரை
அறைக்கரும்பின் பூவருந்தும்” (புறம்.- 384)

நிகழ்வு பற்றிப் புலவர் பாடக் காரணமாய் அமைவது அவன் செய்த நன்செய் வேளாண்மை எனில் மிகையாகாது. நெய்யை நீர்போல ஊற்றி நிணம் கலந்த அடிசிலை உண்ணக் கொடுத்தான் என்பதும், நன்செயில் இரை தேறிய நாரை வஞ்சிக்கிளையில் உறங்குமுன் கணுவுள்ள கரும்பின் பூவை உண்டது என்பதும் அவன் நன்செயில் பயிர் செய்தமைக்குச் சான்றாகின்றன. நிலம் வறண்ட காலத்தில் தயங்காது என்னிடம் வந்து வயிறாரப் பாலிற் கரைத்தும் பாகில் பெய்தும் உண்டு செல்க என்று அவன்  சொன்னதைக் கிணைப் பொருநர் ஆவணப்படுத்தி உள்ளனர்.

“பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
இருநிலம் கூலம் பாறக் கோடை”யில் (புறம்.- 381)

இருந்ததாகப் புலவர் பாடுமிடத்து; பாலில் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும். பாகிற் கொண்ட உணவாவது உழுந்தங்களி ஆகும். இவை மழையின்றி வறண்ட கோடை காலத்தில் கரும்பனூர் கிழானிடம் விருந்தினர் உண்ட புன்செய்ப் பயன்கள்.

விருந்தயர்ந்த புலவர் அவனது செல்வநிலை பற்றிக் கோமான்களாகிய குறுநில மன்னருடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் (புறம்- 381). வேளிரிடம் இருக்கும் செல்வம் மக்கள் துய்க்க இயலாத முள்நிறைந்த புதரில் மிகுதியாக ஊழ்க்கும் பழங்களை ஒத்தது என்கிறார். மேலும் அச்செல்வம் அங்கே பொழியும் மழை போன்று பயனின்றிப் போனது எனவும்; அதற்கு மாறுபட்டு இவனிடம் அளவோடு இருக்கும் பொருள் பிறர் பசி தீர்க்கப் பயன்படுகிறது எனவும் விவரிக்கிறார். இங்கு அளவோடு வளமிகுந்த கிழாரின் நிலை; பயன்பாடு கருதி; குறுநில மன்னராகிய வேளிர் நிலையுடன்  முரண்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

மல்லிகிழான் காரியாதியின் கொடைப்பண்பைப் பேசும் ஆவூர்  மூலங்கிழாரும் பனங்குடையில் பன்றிக்கறி சேர்த்த உணவை உண்பதன் மனநிறைவைப் போற்றிப் பாடியுள்ளார்.

“…………………………… எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்”- (புறம். – 177)

என்ற புகழ்மொழி; இரவலர் குறுநில மன்னரிடம்; அதாவது வேளிரிடம் கண்ணொளி கெடக் காத்து நின்று பெறும் பரிசிலைக் காட்டிலும் காரியாதியின் பன்றிக்கறி விரவிய உணவு உயர்ந்ததென்கிறது. இரந்து செல்வோர் எல்லோரும் ஒப்ப இரும்பனங்குடையில் எய்ப்பன்றித் தசையின் நிணம் மிகுந்த வெள்ளிய சோற்றுக் கட்டியைப் பெற்றனர் என்பது அவனது கொடைத்தன்மையை விளக்குகிறது.

4.0   வந்தேறியும் பூர்வகுடியினனும்

4.1 பொறையாற்றுக்கிழான் தமிழகத்துப் பூர்வகுடியினன் ஆவான். இடப்பெயரோடு  சேர்த்தே அழைக்கப்பட்டமைக்குக் கிழார்கள் அவ்விடத்து அழுந்துபட்டிருந்த வாழ்க்கையினை உடையோராய் இருந்தமையே காரணம் என்று சொல்வது ஏற்புடைத்தாகும். கோமான் பெரியன் வந்தேறிகளாகிய வேளிருள் ஒருவன்.

கோமான் பெரியனுக்காக  உழுதவரை மேலாண்மை செய்தவன் எனினும்; பொறையாற்றுக் கிழானைப் பாடும் போது;

“வேலி ஆயிரம் விளைக நின் வயலே” (புறம்.- 391)

என வாழ்த்தக் காரணம்; பெரியனைக் காட்டிலும் பொறையாற்றுக் கிழானுக்கு அம்மண்ணோடு இருக்கும் பிரிக்கவியலாக் குடியுரிமை ஆகும். குறுநில மன்னராகிய வேளிர் வந்தேறிகள் என்பதை மு.இராகவ ஐயங்கார் ஏற்கெனவே ‘வேளிர் வரலாறு’ என்ற நூலில் நிறுவி இருக்கிறார்.

அங்ஙனமே கொண்கானக் கிழானைப் பாடும் மோசிகீரனார்;

“நின் கொண்பெருங் கானம்” (புறம்.- 154)

என்று அழுத்திப் பாடுவதன் காரணம் கொண்கானத்தில் உழுவித்து ஆண்ட வேள்நன்னன் மரபைக் காட்டிலும் கொண்கானக் கிழானுக்குத் தன் குடியுரிமை காரணமாக அம்மண்ணின் மேலுள்ள பிரிக்கவியலா உரிமை என்பதே ஆகும்.

கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியைப் போற்றிப் பாடும்போது;

“பூவா வஞ்சியும் தருகுவன் …
…மாட மதுரையும் தருகுவன்…
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின்”…(புறம்.- 32)

எனப் பரிசில் வாழ்க்கை மேற்கொண்ட தமிழகத்துப் பாணரை அழைத்துத் ‘தொன்று தொட்ட உரிமை இம்மண்ணின் மேல் இருக்கும் காரணமாக நாம் வஞ்சியைக் கேட்டாலும்; மதுரையைக் கேட்டாலும் சோழன் தரவல்லவன்’ என்கிறார். இங்கே கிழமை பற்றிப் பேசுவதன் காரணம்; கிழார்கள் தமிழகத்தின் பூர்வகுடிகள் என்பதாம்.

5.0   மாற்றுக்கருத்துகளும் விளக்கங்களும்

உ.வே.சாமிநாதையர் பொறையாற்றுக் கிழானைப் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை எனினும்; பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை உழுவித்தவன் என்று கூறுவதற்கு விளக்கம் காணவேண்டி உள்ளது. (புறம்.- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- ப.- 57) இது ஆய்வுலகின் தொடக்க காலத்தில் நிலவிய குழப்பநிலை அன்றி வேறில்லை. அவன் நெடுங்கை வேளுக்காக உழுதோரின் தலைவன் என முன்னர்க் கண்டோம் (பார்க்க- பொறையாற்றுக் கிழானின் பணியும் இனமும்).

மு.இராகவையங்கார் பொறையாற்றுக் கிழான் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை எனினும் கொண்கானக் கிழானை வேள் என்று  கூறுவதற்கு விளக்கம் காணவேண்டி உள்ளது (வேளிர் வரலாறு- ப.- 17). கொண்கானத்தை ஆண்ட நன்னன் எனும் வேளிர்குலத் தோன்றலின் செல்வ வளத்தைப் பொன்னோடு சேர்த்துப் பேசும் தொகைநூற் பாடல்கள் (நற்றிணை- 391; பதிற்.- 40) இருக்க; கொண்கானக் கிழான் விதந்து போற்றப் படுவது; இருவரும் வெவ்வேறு இனத்தினர் என்பதாலேயே எனலாம்.

“திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்” (புறம்.- 154)

என்கிறார் மோசி கீரனார். கடல் போல் செல்வம் மிகுந்த மன்னர் அருகில்  இருந்தும் உயிர்க்கு ஆதாரமாகிய குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைக்காக உன்னை உள்ளி வந்தேன் என்று கொண்கானக் கிழானின் கொடைத்தன்மையைப் புலப்படுத்துகின்றார்.

கொண்கானக் கிழானது குன்று இரு பெருமைகளை உடையது.

“நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்” (புறம்.- 156)

என்பது முதலாவது ஆகும். அதாவது இரவலர் ‘எமது எமது’ என்று கூறிட்டுக் கொள்ளப் பின்னர் உண்ண இயலாமல் கிடக்கினும் கிடக்கும் என்பதாம். இரண்டாவது வேந்தரைத் தாமுடற்றும் போரில் திறைகொண்டு பெயர்க்கும் தலைமைத் தன்மையாம்.

“நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்கும் செம்மலு முடைத்தே” (மேற்.)

என்னும் அடிகள் மூலம்; வேந்தர் திறை செலுத்தும் வண்ணம் கொண்கானக் கிழான் தன் தலைவனாகிய வேளுக்காகப் போர் செய்ய வல்லவன்; வீரத்தில் சிறந்தவன் எனும் கருத்து பெறப்படுகிறது. இதனால் கொண்கானக்  கிழானை வேள் என்று சுட்டுவது ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகிறது. அவன் கொண்கானத்து மன்னருக்காக வேந்தருடன் போரிட்டுத் தோற்கடித்துத் திறை செலுத்த வைத்தவன்.

புலவர் கா.கோவிந்தன் பொறையாற்றுக் கிழான் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை. ஆனால் அவர் எடுத்துக் காட்டும் கல்வெட்டுகள் நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரெல்லாம் கிழார் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ள காரணம் என்னவென்பது ஆய்வுக்குரியது (கிழார்ப் பெயர் பெற்றோர்- ப. 5&6). தொகை நூல்களில் கிழார் எனும் சொல்லும் அதன் அடியாகப் பிறக்கும் பிற சொல் வடிவங்களும் 84முறை பயின்று வந்துள்ளன (http://tamilconcordance.in/TABLE-sang.html). அனைத்து இடங்களிலும் தலைமை என்னும் பொருளன்றி வேறு பொருள் சொல்ல இயலவில்லை. தலைவர்  என்னும் பொருள் கொண்ட கிழார் என்னும் சொல் காலப்போக்கில் நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது எனல் தகும்.

முடிவுரை

பெரியன் மருதமும் நெய்தலும் மயங்கும் பொறையாற்றின் சங்கமத்துறையாகிய புறந்தை முன்றுறையைச் சார்ந்து கோமானாக இருந்து  ஆண்டான். இப்புறந்தை இன்று ஆற்றின் பெயராகிய பொறையாறு என்றே வழங்குகிறது. பொறையாற்றுக் கிழானும் அதே ஊரைச் சார்ந்தவன் ஆவான். பொறையாற்றுக் கிழான் குறுநிலமன்னன் பெரியனுக்காக உழுத திணைமாந்தராகிய உழவரின் தலைவனாக வாழ்ந்து கொடையிலும் சிறந்திருந்தான். பொறையாற்றுக்கிழான் தமிழகத்துப் பூர்வகுடியினன் ஆவான். இடப்பெயரோடு  சேர்த்தே அழைக்கப்பட்டமைக்குக் கிழார்கள் அவ்விடத்து அழுந்துபட்டிருந்த வாழ்க்கையினை உடையோராய் இருந்தமையே காரணம் என்று சொல்வது ஏற்புடைத்தாகும். கோமான் பெரியன் வந்தேறிகளாகிய வேளிருள் ஒருவன்.

துணைநூற் பட்டியல்

  1. அகநானூறு- களிற்றியானை நிரை- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2009
  2. அகநானூறு- மணிமிடை பவளம்- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
  3. இராகவையங்கார்,மு.- வேளிர் வரலாறு- மதுரைத்தமிழ்ச்சங்கம்,செந்தமிழ்ப்பிரசுரம் 33- 1913
  4. ஐங்குறுநூறு- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் க., சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2009
  5. நற்றிணை- கழக வெளியீடு- 614- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
  6. பத்துப்பாட்டு- பாகம் i- கழக வெளியீடு 856- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் க., சென்னை.- 2007
  7. பத்துப்பாட்டு- பாகம் ii- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்  கழகம்,சென்னை.- 2008
  1. பதிற்றுப்பத்து- கழக வெளியீடு 523- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
  2. புறநானூறு- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- 3ம் பதிப்பு 1935- லா ஜர்னல் பிரஸ், சென்னை.
  3. புறநானூறு- பாகம் i- கழக வெளியீடு 438- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 2007
  4. புறநானூறு- பாகம் ii- கழக வெளியீடு 598- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 2007
  5. கோவிந்தன்,கா.- கிழார்ப் பெயர் பெற்றோர்- கழக வெளியீடு 684-முதல் பதிப்பு- 1954
  6.  http://tamilconcordance.in/TABLE-sang.html 

Brief note on author:

Dr.(Mrs) S. Kanmani Ganesan a lecturer in Tamil published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. It’s worthy to mention her publication – ‘Murukan Cult In Cilappathikaaram’ in Murukan The Lord Of The Kurinchi Land released by the Institute Of Asian Studies, Chennai. She has also translated the traumatology section of the book- An Introduction To Orthopaedics And Traumatology authored by Dr.M.Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal of an autonomous institution.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி வல்லமை முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு.

· ஆய்வு நெறியை முழுமையாகக் கருத்திருத்திப், பழந்தமிழ் வரலாற்றுச் செய்தியொன்றினை எல்லோருக்கும் புரியவேண்டும் என்னும் முயற்சியோடு வடிவமைக்கப்பட்ட கட்டுரை என்பதில் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

· இலக்கியப் பதிவுகளை மிகக் குறைந்த விழுக்காடே வரலாற்று ஆவணங்களாகக் கருதும் வரலாற்றியல் ஆய்வு நெறியில் சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி  இருவேறு வேந்தர்களை அடையாளப்படுத்துவதில் கட்டுரையாளர் காட்டியுள்ள ஆர்வம் சங்க இலக்கியப் பதிவுகளின் நம்பகத்தன்மையை மேலும்  கூட்டுகிறது.

· பொருத்தமான வலிமையான தரவுகளைத் ‘தரவிறக்கம்’ செய்வதில் கட்டுரையாளரின் உழைப்பு தென்படுகிறது.

· தற்கால ஆய்வுக் கட்டுரைகளில் காண முடியாத உ.வே.சா, ஔவை, மு.ரா. கா.கோவிந்தனார் முதலிய சான்றோர்களின் பெயர்களைக் காண்பது ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவாக, தரு  நிழலாக, நிழல் கனிந்த கனியாகத் தோன்றுகிறது.

· “பொய்யா யாணர் மையல் கோமான்” (புறம்.- 71) என்று மாவன் புகழப்படுகிறான்” என்னுந் தொடர் “பொய்யா யாணர் மையல் கோமான் மாவன்” என்று மாவன் புகழப்படுகிறான்” என்றிருப்பதே நெறி!.  முன்னமைந்த நான்கு சொற்களும் மாவனுக்குப் பெயரடைகள் அல்லவா? அவற்றோடு ‘மாவன்’ இருந்தால்தான் அது அகச்சான்று!.

· “அங்ஙனமே கொண்கானக் கிழானைப் பாடும் மோசிகீரனார்; “நின் கொண்பெருங்கானம்” (புறம்.- 154) என்று அழுத்திப் பாடுவதன் காரணம் (4.0) என்னும் கட்டுரையாசிரியர் “அழுத்தம் எங்கே இருக்கிறது?” என்பதைக் காட்டியிருக்க வேண்டுமல்லவா?

· ‘வேளிருக்காகவோ  அன்றி வேந்தனுக்காகவோ” (3.2) என்னுந் தொடரில் பிரிநிலை ஓகாரத்தைத் தொடர்ந்து ‘அன்றி’ வருவது நெறியன்று.

· “கோடை காலம்” என்று எழுதுவது கட்டுரையாசிரியர் அதனை உம்மைத்தொகையாகக் கருதி போலும்! ‘கோடையாகிய காலம்’ என்பதே பொருளாயின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையே. எனவே ஒற்று மிகுத்தே எழுதுதல் வேண்டும். இல்லையாயின். அதனை உம்மைத் தொகையாக விரித்துப் பொருளமைதி கூற வேண்டும்!


பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *