அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)

0

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

சிறுபாத்திர வரிசையில் அடுத்து நிற்கும் தந்தை என்ற உறவுமுறை அகஇலக்கியத்தில் தலைவியின் தந்தை, தலைவனின் தந்தை, தலைவனே தந்தை என்னும் மூன்று நபர்களுக்கு உரியதாக இருப்பதே அப்பாத்திரத்தின் தனிச்சிறப்பாக  உள்ளது. அகஒழுக்கம் பேசும்  தொகை நூல்களில் எங்கும்; தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்வதாக மூன்று பாடல்கள் உள்ளன.

தந்தையின் பேச்சு

தன் செல்லமகள் தரையில் நடந்தால் கூடத் தாங்கமாட்டாமல் ‘தரையில் நடக்கிறாயே! உன் கால்கள் சிவந்து விடும்’ என்று அங்கலாய்க்கும் தந்தையின் இயல்பான அன்பின்  ஈர்ப்பைத் தோழி தலைவனிடம்;

“எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)

என எடுத்துரைத்து ‘உடன்போக்கு வேண்டாம்; பெண்கேட்டு வந்து மணந்து கொள்’ எனத் தூண்டுகிறாள்.

“இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே” (அகம்.- 282)

என்று மகள் விரும்பிய தலைவனுக்கே அவளை மணம்செய்து கொடுக்கச் சம்மதித்த தந்தை பற்றியும் தோழியே உரைக்கிறாள். மணம் செய்து கொடுக்க உடன்பட்டமை குறித்துப் பேசும் பிற பாடல்களும் உள (கலி.- 41, 107). மகட்கொடைக்குத் தந்தை ஒருப்பட்டமை பற்றித் தலைவியும் எடுத்துச்சொல்கிறாள் (குறுந்.- 51).

தந்தை பற்றிப் பேசும் தலைவன் 

காதல் வயப்பட்ட தலைவன் தன் காதலியின்  இளமைநலமும், செல்வச்  செழிப்பும் பற்றித்  தனக்குள் பேசிக் கொள்ளும் போது;

“பெருங்கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து”ப் (நற்.-140)

பந்தாடும் பருவத்தையும், செல்வத்தின் அடையாளமாக அவளது தந்தையின் வளமனை முற்றத்தில் இருந்த தேரையும் காட்சிப்படுத்துகிறான்.

தோழியிடம் உடன்போக்கிற்கு  மறுக்கும்போது;

“பெரும்பெயர் தந்தை நீடுபுகழ் நெடுநகர்” (நற்.- 162)

என்று அவளது மாளிகை வாழ்வையும், தந்தையின் நற்பெயரையும் எடுத்துச் சொல்லியே தலைவன் தயங்குகிறான். நகர் என்பது மாளிகையையே குறிக்கும்.

பாங்கனிடம் தான் விரும்பும் தலைவியின் பெருமை பேசும்போது உண்ண மறுத்து ஓடி ஒளிந்து தாயை அலைக்கழிக்கும் அவள்;

“செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்” (நற்.- 324)

வளமான வாழ்க்கை உடையவள் என்று தந்தையின் செல்வம் மிகுந்த மாளிகைக்குச் சிறப்பளிக்கிறான்.

தலைவியிடம் பேசும் போது; காதலித்த பெண்ணைக் கைப்பிடிக்கத் தமரோடு வந்து பெண்கேட்கும் முறை இருப்பினும்; திட்டவட்டமாகப் பெண் கொடுக்கச் சம்மதிப்பாரெனின்;

“நுந்தை நும் ஊர் வருதும்
ஒண்டொடி மடந்தை நின்னை யாம் பெறினே” (ஐங்.- 92)

என்று தலைவியின் தந்தை மனநிலை அறிய ஆவலுறுகிறான். இதுபோல் அவளது செல்வமிகுந்த வாழ்க்கை முறையைச் சுட்டும் போதும் (கலி.- 57), மாலைப்பொழுதில் அவளைச் சந்திக்கத் திட்டமிடும் போதும் (நற்.- 204), உடன்போக்கின் போது அவளை மகிழ்விக்கும் போதும்  (நற்.- 202, 362; அகம்.- 99) அவளது தந்தையைக் குறித்துப் பேசுகிறான்.

தந்தை பற்றிப் பேசும் தலைவி

களவுக்காலத்தில் பிரிந்து இருக்கும் தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தலைவி  ஆற்றோடு பேசும்போது; ‘என் விருப்பத்திற்கு உரிய காதலனின் மலையிலிருந்து உன்னைப் பூவால் மறைத்துக் கொண்டு வருகிறாய். ஆரியரின்;

“பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத்து அல்கி இன்று இவண்” (அகம்.- 398)

வேங்கை மரநிழலில் தங்கி; மழை பொழியப் பெருகிப் பின்னர் செல்வாயாக’ என்கிறாள். தன் தந்தையின் காடு இமயமலைக் காட்டை ஒத்தது என்னும் பெருமிதம் அவள் பேச்சில் விஞ்சி நிற்கிறது.

களவுக்காலக் கேண்மையில் தலைவனை நன்கு புரிந்து கொண்டு;

“கொள்ளாது போகாக் குணன் உடையன் எந்தை தன்” (கலி.- 61)

‘மனம் குறைவுறாதபடி வேண்டுவன கொடுத்து; என்னைக் கைப்பற்றாமல் போக மாட்டான்’ என; அவனது நினைத்ததைச் சாதிக்கும் பண்பைப் பற்றித் தோழியிடம் பேசுங்கால் தந்தை மனம் குளிரும் என்ற எதிர்பார்ப்புடன் தலைவி பேசுகிறாள். இதுபோல் தோழியிடம் பகற்குறி குறித்தும் (குறுந். – 269), இரவுக்குறி குறித்தும் (அகம்.- 370), அறத்தொடு நிற்க வற்புறுத்தியும் (கலி.- 111) பேசும்போது தந்தையைக் குறிப்பிடுகிறாள்.

பரத்தையை நோக்கிப் பேசும் தலைவி;

“எந்தை எனக்கு ஈத்த இருவளை ஆரபூண்” (பரி.- 20)

ஆகிய ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள்.

தந்தை பற்றிப் பேசும் தோழி

அறுவடை தொடங்கி விட்டதால் தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாள்; அவளைப் பகலில் சந்திக்க இயலாது என்று தலைவனுக்கு உணர்த்தும் தோழி;

“தந்தை வித்திய மென்தினை” (நற்.- 306)

என புன்செய் வேளாண்மை தலைவியின் தந்தைக்குரிய தொழில் என்பதை முதன்மைப்படுத்துகிறாள். இதுபோல் பிரிவுக் காலத்தில் தலைவியின் விருப்பம் பற்றியும் (ஐங்.- 6), பகற்குறி பற்றியும் (அகம்.- 80, 308), இரவுக்குறி பற்றியும் (நற்.- 98; அகம்.- 298), தாய்க்குத் தெரிந்தால் ஏற்படும் ஏதம் பற்றியும் (நற்.- 317) பேசும் போதெல்லாம் தலைவியின் தந்தை இடம் பெறுகிறார்.

தலைவியுடன் தந்தை பற்றிப் பேசும் தோழி தலைவன் சிறைப்புறமாக நிற்கக் குறியிடத்தைத் தேர்வு செய்கிறாள்.

“பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழுமீ”னை (அகம்- 20)

‘வற்றலாக உணக்க நாங்கள் கடற்கரை மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இருப்போம்’ என்று கூறும்போது; தலைவியின் தந்தை கடலில் மீன் பிடிக்கும் தொழில்  முதலிடம் பெறுகிறது. இதுபோல் அறத்தொடு நின்றமை குறித்தும் (குறுந்.- 374), தினைப்புனம் காக்கச் சொன்னமை குறித்தும் (நற்.- 134),  பேசும் போது தந்தை மதிப்புடன் சுட்டப்படுகிறார்.

செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழி;

“நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி”த்  (குறிஞ்சிப்- அடி- 20)

தலைவி தலைவனுடன் கொண்ட களவொழுக்கம் பால்வயத்தான் தந்தையின் காவலை மீறி நிகழ்ந்தது என்று கூறிடினும்; தந்தையின் செல்வவளத்தையும், மகளைக் காக்கும் பொறுப்புணர்வையும் சுட்டுவது நோக்கத்தக்கது. செவிலியிடம் தலைவியின் களவொழுக்கத்தை மறைக்கும் போதும் (அகம்.- 158) தந்தைக்கு இடமுண்டு.

தந்தை பற்றிப் பேசும் தாய்

மகட்போக்கிய தாயின் வாய்மொழியில்; தன்மகள் நற்பெயர் பெற்ற தந்தையின் அரிய காவலைக் கடந்து; என்னையும் நினைக்காமல்; தோழியரையும் பிரிந்து எவனோ ஒருவனுடன் சென்று விட்டாளே எனும் புலம்பல் வெளிப்படுகிறது.

“நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி” (அகம்.- 17)

என்ற பாடலடி தந்தையின் புகழையும், மகளை அவன் காத்த பொறுப்பையும் ஒருங்கு சொல்கிறது. இதுபோல் அவளை உண்ண வைக்கத் தான் பாடு  பட்டமையை  (அகம்.- 219) உரைக்கும் போதும் ‘தந்தை பங்கிற்கு இதை உண்’ என்று வற்புறுத்தியமை பற்றிக் கூறுகிறாள்.

உடன்போன மகளைப் பிரிந்த சோகம் தீராத தாய்; தான் தேடிச் சென்ற இடைச்சுரத்தில் இன்னொரு இணையான தலைமக்களைப் பார்த்தவுடன்; தன் மகளை ஒத்த அப்பெண்ணை அவளது காதலனுடன் ஊருக்கு அழைத்து வந்து விருந்து உபசரிக்கிறாள். தன்னைப் பிரிந்தவளின்

“தந்தை தன் ஊர் இதுவே” (நற்.- 198)

என்று சொல்லிக் கண்டோரிடம் தந்தையே மகளுக்கு உரிய முகவரி என்பதை அடையாளப்படுத்துகிறாள்.

பின்புலத்தில் தந்தை

ஆயத்துடன் விளையாடும் பரதவப் பெண்கள் மீன் வேட்டை முடிந்து வரும் திமில்களைக் காட்டி;

“எந்தை திமில் இது நுந்தை திமில் என” (நற்.- 331)

விளையாட்டின் இடையில் தம் தந்தை திமிலையும் பிறர் திமிலையும் அடையாளம் கண்டு சுட்டுவதைக் காண்கிறோம்.

திருமணத்திற்குப் பின் தன் வீட்டு முற்றத்தில் நிற்கும் பலா மரத்துக் கனிகளைக் குரங்குகள் உண்ணாதபடி அங்கே உரலில் குற்றும் கொடிச்சியின் உலக்கைப்பாட்டு அவளது தந்தையின் மலை பற்றியது.

“தந்தை மைபடு நெடுவரை பாடினள்” (நற்.- 373)

என்றே பாடற்பின்புலம் அமைகிறது.

உவமையில் தந்தை

வெண்கல் உப்பை விற்கச் செல்லும் போது; சேற்றிலே சிக்கிய வண்டியை அரிதின் முயன்று இழுக்கும் பகடு போல்; மீள இயலாதபடி  அவளது கண்கள் என் உயிரை நோகச் செய்கின்றன எனத் தலைவன்  சித்தரிக்கும் போது;

“எவ்வம் தீர வாங்கும் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி” (அகம்.- 140)

அவளைத் தவிர்க்க முடியாத தன் வருத்தத்தைத் தெரிவிக்க; தந்தையின் தொழிலையே  அடிப்படையாகக் கொண்டு  உவமிக்கிறான் தலைவன்.

தந்தையின் வாழ்விடமும் தொழிலும் இனமும்

தந்தை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அவன் வாழும்  நிலம், செய்யும் தொழில், சார்ந்த இனம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளன.

“தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை” (அகம்.- 58)

என்னும் பின்புலத்தில் குறிஞ்சித்திணை சார்ந்த தந்தை இடம்பெறுகிறான். அவன் குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே புலித்தோல் படுக்கையில் தூங்குபவனாகக் காணப்படுகிறான் காட்டில் ஆடு மேய்க்கும் தந்தைக்குக் கறவைக்கலம் கொண்டு கொடுக்க வேண்டிய தன் கடமையை  உணர்ந்து தலைவனிடம்;

“இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ” (கலி.- 108) என; ‘உன் நெஞ்சை என் இருப்பிடமாகக் கொள்வது எப்படிச் சாத்தியம் ஆகும்? அப்படிக் கொண்டால் என் தந்தைக்குக் கறவைக்கலம் கொடுப்பது எப்படி?’ என்று வினவும் தலைவியின் தந்தை முல்லைத் திணைமாந்தன் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

தன் தந்தைக்கு ஆற்றில் பிடித்த வரால் மீனை வஞ்சி விறகில் சுட்டு ஊட்டும் காட்சியைப் பின்புலமாகக் காட்டும் பாடல்;

“நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு”ப் (அகம்- 216)

பாசத்துடன் உணவளித்த பாணர் குலத்துப் பெற்றவன் மகள் உறவைப்  புனைந்துரைக்கிறது.

இரவுக்குறி நேரும் தோழி;

“நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்” (நற்.- 323)

பற்றித் தொடரும் போது அத்தந்தை பரதவன் என்று தெளிவாகிறது.

உப்பிற்கு மாறாகப் பெற்ற நெல்லைச் சோறாக்கி அயிலைமீன் குழம்பு ஊற்றி உண்ணக் கொடுக்கும் உமட்டியை;

     “………………… ………… ………… தந்தைக்கு
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியோடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.- 60)

என்று புனையும் பாட்டில் தந்தை மீன்பிடிக்கும் செய்தி முதலில் இடம் பெறினும்; உப்பு விற்ற உமட்டியின் தந்தையை உமணன் என்று சொல்வது ஏற்புடைத்தே.

மகள் உடன்போன பின்னர் அவளைத்  தேடியலையும் தாய்;

“கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்” (அகம்.- 145)

‘செல்வ வாழ்க்கையும்; நடந்தால் கூட அடி வருந்தும் மென்மையும் கொண்ட மகளைக் கோலால் முதுகில் நையப் புடைத்தேனே’ என்று தன்னையே நொந்து கொள்கிறாள். இங்கே ‘கூழுடைய தந்தை’ என்பதால் அத்தந்தை புன்செய் வேளாண்மை செய்யும் கிழான் என்று குறிப்பாக அறிய முடிகிறது.

தலைவியின் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பண்புகள்

தலைவியின் தந்தைக்கு  செல்வம் முதல்  பெருமையாகப் பலவிடங்களில் பேசப்படுகிறது. பிறந்த வீட்டில் தலைவி எவ்வளவு ஆடம்பரத்துடன் வாழ்ந்தாள் என்று சொல்லிப் பின்னர்த் தொடரும் போது தந்தையின் பெருமைக்கு செல்வமே காரணம் என உணர இயல்கிறது.

“தந்தை அல்குபதம் மிகுந்த கடியுடை வியனகர்” (அகம்.- 49)

என்ற தாயின் மொழி வயிற்றுப்பசிக்கு வாய்ப்பில்லாத செல்வமுடைய தந்தையைத் தான் நமக்கு அறிமுகம் செய்கிறது.

தன் செல்வத்தைத் தந்தை பலருக்கும் ஈந்தான் என்பதால்;

“இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும்
விழுப்பொருள்”

என அவன் புகழப்படுகிறான் (கலி.- 61).

தனது பங்காளிகளை எல்லாம் தாங்கும் பெருமை பொருந்திய;

“முளையணி மூங்கிலிற் கிளையொடும் பொலிந்த
பெரும்பெயர் எந்தை” (அகம்- 268)

என்று போற்றப்படுவது இன்னொரு சிறப்பு. மூங்கில் முளைகளைப் போல் பல கிளைகளைக் கொண்ட குடும்பம் நம் கற்பனைக்கு வளம் சேர்க்கிறது.

பரதவர் குலப் பெண்ணுடைய  தந்தையின் பெருமை; அவன் சுறாமீனைக் கொன்ற வினைத்திறன் என வெளிப்படுகிறது.

“கடும் சுறா எறிந்த கொடும்தாள் தந்தை” (நற்.- 392)

என்று அவன் போற்றப்படுகிறான்.

“அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே” (ஐங்.- 60)

என்று மருதநிலத் தலைவனிடம் தோழி கேட்பது பொதுவாகவே எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்ததைக் காட்டுகிறது.

தந்தைக்கு இழிவு

தலைவனோடு தான் கொண்ட  நட்பு தன் வாழ்வின் திசையை மாற்றப் போகிறது என்று புரிந்த பொழுது; உடன்போகுமுன் தன்னால் தந்தையின் நற்பெயருக்கு இழுக்கு நேரப் போகிறது என்று வருந்துகிறாள்.

“பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவி”த் (அகம்.-268)

தானெய்திய கேண்மையால் பழி ஏற்பட்ட கவலையில் சோர்கிறாள்.

தந்தையின் கடமை

மகள் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் இருவேறு நிலைகளைக் காண இயல்கிறது. வேளாளர் இனத்தந்தை  தன் மகளைக் காத்து நிற்பதொன்றே கடப்பாடுடையவன் எனக் கருதப்பட்டான்.

“………….. …………… …………  தந்தை
அருங்கடி காவலர் சோர்பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை” (அகம்.- 2)

என்று தோழி தலைவனை; இரவுப்பொழுதில் எவ்வாறு தந்தையின் காவலர் சோர்ந்து இருக்கும் நேரத்தில் வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்புகிறான். புனக்காவலுக்கு நேரமும் வாய்ப்பும் ஒதுக்கி அவளை ஏவல் செய்பவன் தந்தையே.

“எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்” (நற்- 206)

சேர்ந்து தம்மைப் புனக்காவலுக்கு அனுப்பியதாகத் தான் தோழி தலைவனிடம் உரைக்கிறாள். அறுவடைக்காலத்தில் தலைவி வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டி வரும் என்பது தொடரும் செய்தியாகும்.

வரலாற்றுக் குறிப்புகளில் தந்தை

அகப்பாடல்களில் பண்டைத்தமிழகத்து வரலாற்றுச்செய்திகள் பல விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் பெண்டிரின் தந்தையைச் சுட்டி அமையும் குறிப்புகளுள், சேந்தனின் தந்தை அழிசியின் ஆர்க்காடு போன்ற தலைவியின் நலம் என்னும் உவமையால்   பெருமைப்படுத்தப்படும் வேளாளனின் நெல்வளம் பின்புலமாக அமையத் தன் காதலியின் இதழ்ச் சிரிப்பைப் பற்றி நெஞ்சோடு;

“திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேன்கமழ் வியன்தார் இயல்தேர் அழிசி” (நற்.- 190)

எனப் பேசுகிறான் தலைவன். இதே பின்புலம் இன்னொரு பாடலிலும் (குறுந்.- 258) அமைந்து; அக்காலத்தில் யானை உடைய இக்குறுநில மன்னன் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தான் எனப் புலப்படுத்துகிறது.

அன்னி மிஞிலியின் வரலாறு அவள் தந்தை மேல் கொண்டிருந்த பாசத்தையும், மனஉறுதியையும், வீரத்தையும் காட்டுகிறது. கோசர் இரக்கமின்றி அவளது தந்தையின் கண்களைப் பிடுங்கி விட்டதால் (அகம்- 262) அவள் வஞ்சம் கொண்டு அவர்களைக் கொன்றாள் என்பதை;

“……………….. ………….. ……………………… தந்தை
கண்கவின் அழித்த தன் தப்பல் தெறுவர” (அகம்.- 196)

என அவள் பழி தீர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம்.

அகுதை என்னும் திணைமாந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மகளின் தந்தை; சோழமன்னன் பருவூர்ப் போரில் சேரபாண்டியரை  வென்றபோது தோற்ற வேந்தரின் யானைகளைக் கவர்ந்தான் (அகம்.- 96)

“இன்கடும் கள்ளின் அகுதை தந்தை” (குறுந்.- 298)

என்று கள்ளோடு சேர்த்துப்  புனையும் முறை திணைமாந்தர் சமுதாயத்தின்  அடையாளமாகத் தொகைநூல்களில் காணப்படுகிறது.

ஐயை எனும் மகளின் தந்தை தித்தன் எனும் வரலாற்றுச் செய்தி;

“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்” (அகம்.- 6)

எனும் பாடலடிகளில் உள்ளது. இது உறந்தையை ஆண்ட குறுநில மன்னன் பற்றியது. இவனை வீழ்த்தித் தான் சோழர் தம் தலைநகரை நிறுவினர்.

‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக்கொள்கைகள்

மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்னும் சமூகக் கொள்கை தந்தை பற்றிய பாடற்குறிப்புக்களால் விளக்கம் பெறுகிறது. அத்தகு காவலை மீறித் தன் காதலியை இரவுக்குறியில் சந்தித்தமை தலைவனுக்குக் குறிப்பிடத்தக்க பெருமிதத்தையும் கொடுக்கிறது.

“அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்
பனிமயங்கு அசைவளி அலைப்ப தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகம்- 162)

என்று தனது தீரச்செயலாகவே; தலைவியைச் சந்தித்த நிகழ்வைத் தலைவன் வருணிக்கிறான். நள்ளிரவில் பனிக்காற்றால் நடுங்கிக் கொண்டு காவலர் சோர்ந்து போகும் நேரத்திற்காகக் காத்து நின்று; தலைவியது தந்தையின் மாளிகைப் புறத்தில் நின்றமையை மனக்குறை ஏதுமின்றிச் சாதனையாகத் தான் தலைவன் கூறுகிறான். பாணர் குலத் தந்தையும் மகள் பாதுகாப்பைத் தலையாய கடனாகக் கொண்டமை;

“அருங்கடி அயர்ந்தனன் காப்பே எந்தை ” (நற்.- 295)

என்ற ஔவையாரின் பாடலடியில் புலனாகிறது.

ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றே சொல்லப்படுவதைக் காண இயல்கிறது. தலைவி தலைவனோடு செல்லும்போது;

“……… …………. ………  நுந்தை
மனைவரை இறந்து வந்தனை” (நற்- 362)

என்கிறான் தலைவன். ‘தாய்வீடு’ என்ற தொடரைக் காண இயலவில்லை.  குடும்பத்தலைவனாகிய தந்தையே எங்கும் முதன்மை பெறுகிறான். வேளாளர் வளமனை மட்டுமின்றிக் குறிஞ்சித் திணைமாந்தரின் வேங்கைப்பூ உதிர்ந்த முற்றமும்;

“…………………………. எந்தை வேங்கை
வீஉக விரிந்த முன்றில்” (நற்.- 232)

எனத் தந்தையையே முதலுரிமைக்குரியவன் எனச் சொல்வதைக் காண்கிறோம். அன்றைய சமுதாயத்திலிருந்த  ஆணாதிக்கம் தலைவியது ஊரைச் சுட்டும் முறையிலும் புலப்படுகிறது.

“கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே” (ஐங்.- 94)

என்று தலைவன் சொல்வது தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை என்ற போக்கில் தான் அமைந்துள்ளது.

வேளாளன் ‘அந்தணர்க்கு நீரோடு சொரிந்து ஈந்த பின்னர் எஞ்சிய பொருளுடன் சோற்றையும் எல்லோர்க்கும் தரும் பெருமையன்’ என்று தன் காதலியின் தந்தை பற்றிப் பாங்கனிடம் பெருமை பேசும் தலைவன்;

“நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே” (குறுந்.- 233)

என்று தலைவியின் ஊரை அவளது தந்தையின் ஊர் என்று சிறப்பிக்கிறான். அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்ற  அன்றைய சமுதாயக்  கொள்கை நோக்கத்தக்கது.

இல்லறத்தில் ஈடுபடும் தலைவியின் குடும்பம் வறுமையில் வாடும்  போது அதைத் தந்தையின் செல்வவளத்துடன்  முரண்படுத்திக் காட்டி;

“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்.- 110)

என்று பாடும் பகுதி கூடத்  ‘தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்துகொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது’ என்ற தலைவியின் கொள்கையைச் சிறப்பிப்பதாக அமைகிறது.

தன் தந்தை தனக்குச் செய்து கொடுத்த வளையலும் ஆரமும் இன்னொரு பெண்ணை அலங்கரித்து இருப்பதைக் கண்டவுடன் (பரி.- 20) ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள் தலைவி. திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தலைவி கேட்கும் கேள்வியில்  இருந்து அறிகிறோம்.

தலைவியின் காதலொழுக்கம் அறிந்து தந்தையும் தமையன்மாரும் தீர விசாரித்துச் சம்மததித்ததைத்  தலைவியிடம் தெரிவிக்கிறாள்  தோழி.

“பொய்யில் பொதுவர்க்கு அடைசூழ்ந்தார் தந்தையொடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

என மணம் உறுதி செய்யப்பட்டதைக் கூறும் அவளது சொற்களில்; திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெறுவதையும், அதைத் தந்தை முன்னின்று நடத்தினார் என்பதையும் புலப்படுத்துகின்றன.

தலைவியின் தந்தை- அன்றும் இன்றும் 

தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவன்;

“யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்” (நற்.- 8)

என்று வாழ்த்துவது இங்கு தலைவியைப் பெற்றவனையே  குறிக்கிறது. இன்றைய திரைப்படப் பாடற்போக்கும் செவ்விலக்கியத்தை அடியொட்டி அமைந்திருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் இடம்பெறும்

‘ஊதாக் கலரு ரிப்பன்- உனக்கு யாரு அப்பன்?
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்’

என்ற பாடல் செவ்விலக்கியக் கருத்தை இக்காலத் தமிழில் தருகிறது.

தொகுப்புரை

தொகை நூல்களில் எங்கும் தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்கின்றனர். அவரைப் பற்றித் தாயர்,  தலைவி, தலைவன், தோழி ஆகியோர்; தமக்குள்ளும், தத்தம் நெஞ்சோடும், பரத்தையிடமும், கண்டாரிடமும்,  காமம் மிக்க கழிபடர் கிளவியாக ஆற்றோடும் பேசுகின்றனர். பரதவர், குறவர், கிழார், ஆயர், உமணர், பாணர், வேளாளர் என அவரவர் இனத்தோடு குறிப்பாகவோ; அன்றி வெளிப்படையாகவோ சேர்த்தே தந்தையர் சுட்டப்படுகின்றனர். பின்புல வருணனை,  உவமை,  வரலாற்றுக் குறிப்புகள்  ஆகியவற்றிலும் தந்தைக்கு  இடமுளது.

தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை ஆவார். ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றும்; ‘தந்தை ஊர்’ என்றும் சுட்டினர். மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள்  என்பது அன்றைய  சமூகக் கொள்கை. திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்பினான். எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்தனர்.

செல்வமும் அதை ஈதலும் கிளை தாங்கலும் தந்தையின் பெருமை ஆகும். பரதவத்  தந்தையின் பெருமை சுறாமீனைக் கொல்லும் வினைத்திறன் ஆகும். தலைவியின் உடன்போக்கு தந்தைக்குப் பழி ஏற்படுத்தியது.

திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெற்றது. அதைத் தந்தை முன்னின்று நடத்தினார். தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது என்ற கொள்கை நிலவியது. அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்பது  அன்றைய சமுதாயக்  கொள்கை. இவற்றைத்  தந்தை பாத்திரம் மூலம் அறிகிறோம்.

தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவனின்; செவ்விலக்கியப் பாடல் போக்கை இக்காலத் திரைப்படப் பாடலிலும் காண முடிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *