விசாலம்

“கைக்குட்டை காதல் கடிதம்..   எழுதிய உறவா” என்ற பாட்டு டிவி யில் வர,  அதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அப்படியே எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. இந்தப் பாட்டு யாருக்குத்தான் தெரியாது?

ஆம்,  கைக்குட்டை, மிகச் சின்னப் பொருள் தான் ஆனால் அதன் மஹத்துவமோ சொல்லி முடியாது. இதை வாங்க அதிகச் செலவுமில்லை. இதை வைத்துக் கொள்ள அதிக இடம் தேவையும் இல்லை, அது இல்லாமல் நாமும் இல்லை. முகம் துடைக்க வேண்டுமா? உடனே  நம் கையில் கைக்குட்டையை எடுத்துக் கொள்வோம், சாப்பிட்டு முடித்தவுடன் எடுப்பதும் கைக்குட்டை. தும்மல் வந்ததா? கேட்கவே வேண்டாம் கையில் தயாராக வருவது இதுதான். கொல் கொல்லென்று  இருமலா  உடனே வாயைப் பொத்திக் கொள்ள உதவும் இது. சிலர் சேர்ந்தாற் போல் ஐந்து தும்மல் தும்மி விட்டு கிருமிகளைத் தாராளமாகப் பரவ விட்டுப் பின் மெதுவாகக் கைக்குட்டையைத் தேடுவார்கள். அப்படி ஒரு ரகம்… கண்வலியா ,அழுகையா,,,, உடனே    நாம்  அடைக்கலம் புகுவது  இதில்தான்.

பெண்களுக்குக்   காரியம் சாதித்துக் கொள்ள உதவும்  அஸ்திரம்  கண்ணீர். அந்தக் கண்ணீரைக் கேவிக்கேவித்  துடைக்க, பின் ஓரக்கண்ணால் எதிராளியின் முகத்தைப் பார்த்து   முகத்தை மூட உதவுகிறது இந்தக் கைக்குட்டை.

சில  பெண்மணிகளுக்குப் புடவைத் தலைப்பே  கைக்குட்டையாகிவிடும். ஒரு    சிலர் பிரயாணத்தின் போது ரூபாய்களைக் கைக்குட்டையில் சுருட்டிப் பின் தன் சட்டைக்குள் பத்திரப்படுத்துவார்கள், மிகப் பத்திரமான பாதுகாப்புதான்.

சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்துப் போகும் போது, அங்கு மூக்குச்சளியைத் துடைக்க உதவுவதும் இந்தக் கைக்குட்டைதான்.

முன காலத்தில் பலர் மூக்குப்பொடி போடுவார்கள் அவர்களுக்கு மிக உதவியாய் இருந்தது இந்தக் கைக்குட்டை. அதன் கலர் வெண்மை இல்லாமல் மூக்குப்பொடி கலரில் இருக்கும்.  இதற்கென்று தனியாகத் துணி வாங்கி தைத்துக் கொள்வார்கள் அந்தக் கைக்குட்டையைத் தோய்ப்பது  ஒரு சவால் தான்.

கைக்குட்டை காதலையும் வளர்க்கிறது, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் போது  வேண்டுமென்றே கைக்குட்டையைக் காதலன்  வைத்து விட்டுச் செல்ல காதலி அதை எடுத்து, அந்த வாசனையை அனுபவித்துப்  பின் அதில் அவன் பெயரை அழகாக வர்ண நூலால்   அலங்கரித்து அதை  அவன் ஞாபகமாக வைத்துக் கொள்வாள். சில சமயம்  அதை அவனுக்குத்  திருப்பிக் கொடுக்கும் சாக்கில் அவனைப் பார்க்கச் செல்வதும் உண்டு. இந்தக் கைக்குட்டையால் பல சந்திப்பு ஏற்பட்டு   பின் காதல் மலரும். சில சமயம் கைக்குட்டை காற்றில் பறந்து வந்து  தூது விடும், சினிமாவில் இதை வைத்துச் சில கதைகள் ஓடும். கைக்குட்டையில்  சந்தன அத்தரைத் தடவி வைத்துக் கொண்டால் அதன் மணம் ஊரைத் தூக்கும்.  ரொம்ப நேரம் நம்முடனே இருக்கும்.

சில சமயம் நொறுக்குத்தீனி எதாவது சுருட்டிக் கொள்ள வேண்டுமா?  கைக்குட்டை உதவ வரும். சாவிக் கொத்தையும்  இதில் கட்டிக் கொள்ளலாம். பெங்காலிகள் புடவைத் தலைப்பில் சாவியை கட்டிக் கொண்டு   தங்கள்  தோளில் போட்டுக் கொள்வதைப்போல்.

கிரிமினலிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, கிட்நேப் செய்ய வேண்டுமா? கைக்குட்டையில் க்ளோரோபார்ம்  வைத்து  குறிப்பிட்ட நபரின் முகத்தில் வைத்தால் அவ்வளவுதான். மயங்கிய நபரைக்   குண்டுக்கட்டாய் காரின் உள்ளே அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடலாம்.   கைக்குட்டையால் கழுத்தை நெரிக்கலாம். பெரிய கைக்குட்டையால் கை கால்கள் கட்டலாம், திருட்டுப் பொருட்களை அவசரத்தில் கைக்குட்டையில்    முடிந்து தலைத் தொப்பிக்குள் மறைக்கலாம். கைத்தடயங்களையும் இதைக் கொண்டு அழிக்கலாம்.

விபத்தின் போதும் இது மிக உதவும்.    இரத்தத்தைத் துடைக்க, எலும்பு முறிந்தால்   அந்த நேரத்திற்குச் சேர்த்துக் கட்ட, பாம்பு  கடித்தால்   உடனே  இரத்தம்  மேலே   பரவாமல்   இருக்க ஒரு கட்டுப்போட      இந்தக் கைக்குட்டை உதவுகிறது.

இந்தக் கைக்குட்டையின்  பூர்வீகம் என்ன? இது முதலில்  ஆங்கிலத்தில்  கோர்டேஃப் என்று இருந்தது. பிரன்சு மொழியில்  குவ்ரேசீஃப் என்று இருந்தது, இதைத் தலையில் முடியாகக் கட்டிக் கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். முதலில் ரோமன் நோபிள் ஒரு பெரிய லினன் துணியைச்  சதுர வடிவமாகச் செய்து காட்ட  பின்  மக்கள் அதை   வியர்வை துடைக்க உபயோகித்தனர். கிரேக்கர்கள் அதில் பலவகையான வாசனைத் திரவியமும் தடவி கமகமக்க  வருவார்கள்.     இவர்கள் பெரிய செல்வந்தராக இருப்பார்கள். இதன் பிறகுதான் சிறிய கைக்குட்டை உபயோகத்திற்கு வந்தது.

உடல் தூய்மையைப் பேணிப் பாதுகாக்க இங்கிலாந்தில் “இரண்டாம் ரிச்சர்ட் மன்னர்” இதைக் கண்டுபிடித்தார். முன்பு   போரில்    சரண் அடையவும்,    போர் நிறுத்தவும்   வெள்ளைக் கொடிக்குப் பதிலாக   இதை உபயோகித்தனர்.     வட அமெரிக்காவில்    டிஷ்யூ பேப்பரைக் கைக்குட்டைக்குப் பதிலாக   உபயோகித்தனர்.    சுகாதாரத்திற்கு    இதுதான்   சிறந்தது என்றனர்.   ஜப்பான் , சிலோனில்  கைக்குட்டை  மிக நாகரீகமாகக் கருதப்படுகிறது.

முதன் முதலில் கிளீனெக்ஸ் என்ற கம்பெனி  முதலில் மேக்கப் சாயங்களைத் துடைத்துப் போட  டிஷ்யூ தயாரித்தது. பின் மூக்கு சிந்த  துணியே சரியாகுமென்று எண்ணி  இது போல் ஹேன்கி தயாரித்தனர். “பண்டானா என்ற பெரிய கர்சீப்    தயாரித்தனர். அதில்  பளீரென்ற  அழுத்தமான வர்ணங்கலான சிவப்பு,  நீலம்,  பச்சை போன்றவை இருந்தன. இதைத் தலையில் அழகுக்காகவும்  மோட்டார் சைக்கிளில் போகும் போது தலை முடி பறக்காமல் இருக்கவும்  கட்டிக் கொண்டனர். சிலர்   தங்கள் குழுவின்  அடையாளச் சின்னமாக  இதை வைத்துக் கொண்டனர். அமெரிக்காவில்   “கிரிப்ஸ்குழு” நீல வர்ணத்தில் இதை உபயோகித்தனர்.

இதை மடித்து வைத்துக் கொள்ளும் ஸ்டைலும்  பலவிதம். சதுரத்திலும் முக்கோணத்திலும்  ஒருபக்கம் மட்டும் தெரிவது போலவம்   அவரவர் விருப்பப்படி உபயோகிக்கலாம். இந்தக் கைக்குட்டையினால் மூக்கை மூடிக் கட்டிக் கொண்டு மாசு படர்ந்த காற்றைத் தவிர்க்கலாம். துர்நாற்றம் இருந்தால் மூக்கை மூடிக் கொண்டு தப்பித்துக் கொள்ளலாம். காதலிக்கு எதாவது காயம் பட்டால் தன் கைக்குட்டையைக் கிழித்து  அவளுக்குப் பட்டி போட்டு அவளைக் கவரலாம்.

கடற்கரையில் தலையில்  முண்டாசு போல் கட்டி சூரிய வெளிச்சத்தை அனுபவிக்கும் சிலருக்கு, கிரிக்கெட்  மேட்சில்  கைக்குட்டையால் ஊக்கமூட்டும் சிலருக்கு, கவ்வாலி பாடும் போது கைகளில் கட்டி கொண்டு பாடும் பலருக்கு,  என்று கைக்குட்டையின்   உபயோகம் எண்ணில் அடங்காது.

சரி, இப்போது   கைக்குட்டையை ஆட்டி   பை பை …….சொல்லட்டுமா?

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *