கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 16

0

-மேகலா இராமமூர்த்தி

அங்கங்கள் அறுபட்டுத் துடித்துப் புலம்பிக்கொண்டிருந்த சூர்ப்பனகை, மரகத மலைபோல் இராமன் தவச்சாலை நோக்கி வரக் கண்டாள். அவனைக் கண்டதும் தன் வயிற்றில் அடித்துக்கொண்டு கண்ணீரும், செந்நீரும் பெருக, ”ஐயனே! உன் அழகிய வடிவின்மீது நான் கொண்ட ஆசையால் எனக்கு நேர்ந்த அவலைத்தைப் பார்!” என்று அரற்றினாள்.

அங்கங்கள் பங்கப்பட்டு நிற்கும் சூர்ப்பனகையைக் கண்டதும் ’இப்பெண் ஏதோ தீச்செயல் புரிந்து இளவல் இலக்குவனால் தண்டிக்கப்பட்டிருக்கின்றாள்’ என்பதை உய்த்துணர்ந்த இராமன்,  “அம்மா! நீவிர் யார்?” என்று வினவினான். அப்போது அவள் எழிற்கன்னி காமவல்லியாய் நில்லாமல் கோர அரக்க வடிவில் அங்கங்கங்களையும் இழந்து காட்சியளித்ததால் இராமனுக்கு அவளை அடையாளம் காண இயலவில்லை.

”என்னைத் தெரியவில்லையா? நான் தான் விண்ணுலகும் மண்ணுலகும் ஆளும் இராவணனின் தங்கை!” என்றாள் சூர்ப்பனகை.

அப்போதும் அவளை அடையாளம் கண்டுகொள்ள இயலாத இராமன், ”அரக்கர் வதியும் இடம்விட்டு இந்தத் தவச்சாலைக்கு நீவிர் வந்தது ஏன்?” என்று வினவ, ”காமக் கொடுநோய்க்கு மருந்து போன்றவனே! நான்தான் நேற்றும் வந்தேனே!” என்று அவனுக்குத் தன் முந்தையநாள் வருகையை நினைவூட்டினாள் அவள்.

தாம் இருந்த தகை அரக்கர்
புகல் ஒழிய தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு
என் செய வந்தீர் எனலும்
வேம் இருந்தில் எனக் கனலும்
வெங் காம வெம் பிணிக்கு
மா மருந்தே நெருநலினும்
வந்திலெனோ யான் என்றாள்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2946)

”அழகே வடிவாய் நேற்று வந்தவரா நீர்?” என்று வியந்துகேட்ட இராமனைப் பார்த்து, “உறுப்புகள் குறைந்தால் அழகும் குறையாதோ?” என்று பதிலிறுத்தாள் சூர்ப்பனகை. இவள் உறுப்பறை பட்டதற்கு இளவல் இலக்குவனே காரணமாயிருக்கவேண்டும் என்றெண்ணிய இராமன், இலக்குவன் இவ்வாறு செய்யக் காரணம் என்ன என்றறிய விழைந்து, ”இப்பெண்ணின் மூக்கையும் காதுகளையும் அரியுமாறு இவள்செய்த பிழை யாது?” என்று இலக்குவனைப் பார்த்துக் கேட்டான்.

”அண்ணா! இவள் கண்களில் கனல்பொங்கச் சீதையைத் தின்பவள்போல் அவளைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தாள்; தமியளாய் வந்தாளா? தன் கூட்டத்தாரையும் உடனழைத்து வந்தாளா?” என்பதை நானறியேன் என்றுரைத்தான் இலக்குவன். அப்போது இடைமறித்த சூர்ப்பனகை இராமனை நோக்கி,

”கருவுற்ற பெண் தவளை, தன் கணவனாம் ஆண் தவளையருகே ஒரு சங்கு தங்கியிருக்கக் கண்டு கோபம் கொண்டு நீரைக் கலக்கும் வளம்பெற்ற நாட்டையுடையவனே! தன் கணவனின் அருகே மற்றொரு மனைவியைக் கண்டால் பெண் மனம் எரியாதோ?” என்று கேட்டாள்.

ஏற்ற வளை வரி சிலையோன்
     இயம்பாமுன் இகல் அரக்கி
சேற்ற வளை தன் கணவன்
     அருகு இருப்ப சினம் திருகி
சூல் தவளை நீர் உழக்கும் துறை
     கெழு நீர் வள நாட
மாற்றவளைக் கண்டக்கால்
     அழலாதோ மனம் என்றாள். (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2950)

’சூல்தவளை சங்கோடு சினக்கும்’ அதாவது அஃறிணை உயிர்களே தன் கணவன் அருகே பிற பெண்ணிருக்கச் சினக்கும்போது, தான் விரும்பும் இராமன் அருகே மாற்றாளாய் ஒருத்தி நிற்கக் கண்டு சினவாமல் இருக்க இயலுமா எனக் கேட்கிறாள் சூர்ப்பனகை.

இவ் அடிகளை, துளைபொருந்திய தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நிழலில், கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை (ஆண் நத்தை), நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணம் கூட்டுவிக்கும் நீர் விளங்கும் கழனியுடைய நாடு” எனும் பொருள்தருகின்ற புறப்பாட்டு அடிகளோடு நாம் ஒப்பிடலாம்.

புழற்கால் ஆம்பல் அகலடை நீழற்
கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகிள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடு
(புறம்: 266 – பெருங்குன்றூர் கிழார்)

சூர்ப்பனகையின் சொற்களால் சினமுற்ற இராமன், ”நேரிய வழியில் போர் புரியாமல் மாயப்போர் செய்யும் அரக்கர்களை அழித்தொழிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்; விரைந்து இங்கிருந்து ஓடிப்போய் விடு!” என்றான்.

அப்போதும் அவள் விடாமல் தன்னை இராமன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவே, ”இவளைக் கொல்லுதலே இவளால் விளையும் தொல்லைகள் தீர ஒரே வழி” என்றான் இலக்குவன். இராமனும் அதனை ஆமோதித்து, ”இவள் இங்கிருந்து அகலவில்லையானால் அதைத்தான் செய்யவேண்டும்!” என்றான்.

இனியும் இவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர இயலாது என்றுணர்ந்த சூர்ப்பனகை, ”உங்களைக் கொல்லக் கூற்றுவனாம் கரனை அழைத்துக் கொண்டு வருகின்றேன்” என்று கறுவிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

குருதிவழிய அலங்கோலமாய் வந்துநின்ற சூர்ப்பனகையைக் கண்டு அவளுடைய சோதரன் முறையினனான கரன் நிகழ்ந்ததை வினவ,
”வில்லும் அம்பும் ஏந்திய மன்மதனை ஒத்த உருவத்தினரும், தயரதன் புதல்வர்களுமான இரு மானுடர் நம் கானகத்துக்கு அரக்கர்களை அழிக்க வந்துள்ளனர்; உரைப்பருங் காட்சியளாகிய பேரழகுப் பெண்ணொருத்தியும் அவர்களுடன் உள்ளாள். அவளை அண்ணன் இராவணனுக்காக நான் கொண்டுபோக எத்தனித்தபோது அவர்கள் என் மூக்கினைத் துண்டம் ஆக்கினர்” என்று மெய் பாதி பொய் மீதியாக நிகழ்ந்தவற்றைச் சொல்லிமுடித்தாள் சூர்ப்பனகை.

கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு எனச் சொல்லினாள்.
(கம்ப: கரன்வதைப் படலம் – 2978)

அதுகேட்டு, இராம இலக்குவரின் கதைமுடிக்கச் சினந்தெழுந்தான் கரன்!

கரன் ’பொருக்’கென்று போருக்கெழுந்ததைக் கண்ட அவனுடைய படைத்தலைவர்கள் பதினாலு பேரும் மானுடர்களை அழித்தொழிக்கும் நற்பணியைத் தங்களுக்குத் தருமாறு அவனை வேண்ட, அதனை ஏற்றுக்கொண்ட கரன் அவ்வீரர்களைப் போருக்கு அனுப்பினான்.

ஆனால் போரில் அவர்கள் அனைவரையும் இராமன் பருந்துகட்கு விருந்தாக்கிவிட, அதனையறிந்த கரன் தன் படைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு தானே போருக்குப் புறப்பட்டான்.

இராமனைக் கரனுக்கு அடையாளம் காட்டினாள் சூர்ப்பனகை. அப்போது கரனுடன் வந்திருந்த அகம்பனன் என்னும் கல்விவல்லானாகிய அரக்க வீரன், சூரியனைப் பரிவேடம் சூழ்தல், அரக்கர் கொடிமீது காக்கைகள் சண்டையிட்டு நிலத்தில் வீழ்ந்து புரளுதல் முதலிய தீ நிமித்தங்கள் தோன்றுவதைக் கண்டு அது குறித்துக் கரனிடம் தெரிவித்து, இராமனை எளிதில் வெல்லக்கூடிய மானுடன் என்று எண்ணாதே என எச்சரித்தான்.

அதுகேட்டு உலகம் நடுங்கும்படி நகைத்த கரன், ”தேவர்களைத் தேய்த்து உருத்தெரியாமல் அரைத்த அம்மிக்கல் போன்று விளங்குகின்ற என் எழிலார் தோள்கள், போரை வேண்டிப் பூரித்துப் பெருத்துள்ளன! இவை மானிடர்க்கு எளிதில் தோற்றுவிடக்கூடியவை என்றா கூறுகின்றாய்? ஆகா! நம் வீரம் மிக நன்று!” என்றான் ஏளனத்தோடு.

…நன்று நம் சேவகம்
     தேவரைத் தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில்
     தோள் அமர் வேண்டி
இரைத்து வீங்குவ மானிடற்கு
     எளியவோ என்றான். (கம்ப: கரன்வதைப் படலம் – 3045)

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *