நலம்தரும் நவராத்திரி

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஆஸ்திரேலியா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை எமது பாரம்பரியமானதாகும். அதனால்தான்” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அன்னைக்கு முதலிடம் அளித்திருப்பதைக் காண்கின்றோம்.” தாய்ச் சொல்லைத் தட்டாதே” என்கின்றோம். பூமியைய் தாய் என்கின்றோம். பொறுமையைத் தாய் என்கின்றோம். கருணையைத் தாய் என்கின்றோம். நதிகளையும் பெண்மையின் நிலையில் கண்டு தாய் என்றே போற்றி நிற்கின்றோம்.

உலகிலே உயர்ந்து நிற்பது எதுவென்றால், அது தாய்மைதான். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இல்லை எனலாம். இதனால்தான் தாய்மையைத் தெய்வத்துக்கு ஒப்பிட்டு, சக்தி வழிபாடே தொடங்கியது எனலாம். உலக இயக்கத்துக்கு சக்தியே முதன்மையானது. சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கமே அற்றுவிடும். இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே நவராத்திரி ஆகும்.

சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஆனால் சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுதான் நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக அம்பிகை விளங்குவதால் ஒன்பது ராத்திரிகள் அமைந்துவிட்டன என்றுதான் எண்ண முடிகிறது.

நவராத்திரி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம்இராமாயண காலம் வந்து நிற்கிறது. நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருவதைக் காண்கிறோம். தைமாதத்தில் வருவது மஹா நவராத்திரிபங்குனியில் வருவது வஸந்த நவராத்திரிஆனியில் வருவது ஆஷாட நவராத்திரிபுரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியையே இந்தியாவில் தமிழகத்திலும் இலங்கையிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நோக்கத்தக்கதாகும்.

நவம் என்றால் ஒன்பது என்பது எண்ணிக்கையாகும். அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தும் இதில் அடங்கி நிற்கிறது எனலாம். கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுட்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவாஇதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எங்களின் சமயம் எங்களுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்தான் வளர்ந்துகொண்டே வருகிறதே அல்லாமல் தளர்வுண்டு போகாதிருக்கிறது எனலாம். காரணம் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக்கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காண முடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்குப் பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம்.

அந்த வகையில் நலம் தரும் நவராத்திரியும் வந்து அமைகிறது. வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் தொட்டு நிற்பதுதான் நலம் தரும் நவராத்திரி.

ஆரோக்கியம் வேண்டும். பொருள் வேண்டும். நல்லறிவு வேண்டும். ஆரோக்கியம் என்னும் பொழுது வீரம் வருகிறது. பொருள் என்னும் பொழுது செல்வம் வருகிறது. அறிவு எனும் பொழுது கல்வி வருகிறது. கல்வியும் செல்வமும் வீரமும் வேண்டிப் பிரார்த்தித்து நிற்பதுதான் நவராத்திரியாய் மலர்கிறது. வீரத்துடனும்  செல்வத்துடனும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால்தான் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

வீரத்தைத் துர்க்கையாகவும்செல்வத்தை இலக்குமியாகவும்கல்வியை சரஸ்வதியாகவும் எங்கள் சமயம் காட்டுகிறது. இங்கே காட்டப்படும் மூன்றுமே பெண்களாய் அதாவது சக்தியாய் இருப்பது நோக்கத்தக்கதாகும்.

பெண்மை என்றால் தாய்மை. பெண்மை என்றால் பொறுமை. பெண்மை அடங்கினால் மென்மை. பெண்மை பொங்கினால் வெம்மை. பெண்மைக்குள்ளே எல்லாமே அடக்கம். பெண்மைதான் இயக்கம். அதனால்தான் கல்வியைசெல்வத்தைவீரத்தை வழங்கும் கடவுளர்களாகப் பெண்மை உருவாக்கப்பபட்டது. கல்வியைசெல்வத்தைவீரத்தை இலகுவாகப் பெற்றுவிட முடியாது. முயற்சி வேண்டும். அதற்கு அளவில்லாப் பொறுமை வேண்டும். விடாத துணிவு வேண்டும். இவை அத்தனையும் பெண்மை என்னும் சக்தியிடம்தான் நிறைவுற்று இருக்கிறது. எனவேதான் முச்சக்திகளை மூன்று முக்கிய வாழ்வியல் முறைகளுக்கும் தெய்வமாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள்.

அறிவுடன் செல்வமும் வீரமும் இணைந்து நின்றால் நிச்சயம் அங்கே வெற்றிதான். அறிவினை விட்ட செல்வமோவீரமோ வெற்றி என்னும் இலக்கினை அடையாது. பயனற்றே போய்விடும். இதனையே புராணங்கள் காட்டி நிற்கின்றன.

வாரணம் பொருத மார்பு – வரையினை எடுத்த தோள்கள் – சங்கரன் கொடுத்த வாள்அத்தனையும் இருந்தும் மாவீரன் என்னும் பெயர்பெற்ற செல்வாக்குடன் திகழ்ந்த இராவணன் ஏன் வீழ்ந்தான்படைபலம் நிறைந்துஅரண்மனைச் செல்வாக்குடன் அரசாட்சியில் இருந்த துரியோதனன் ஏன் வீழ்ந்தான்உரமும்  வரமும் பெற்ற சூரன் ஏன் வீழ்ந்தான்அறிவுடன் செல்வமும் வீரமும் அணையாது நின்றதே காரணம் என்று காப்பியங்கள் புராணங்கள் காட்டி நிற்கின்றன.

இறைச் சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைச்சக்தியே எமக்கு இயக்கச் சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை, செல்வத்தை, ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால் வாழ்க்கை வளமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும். இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவதுதான் நவராத்திரி ஆகும்.

கோவிலுக்குப் போய் கொண்டாடாமல் கோயிலுக்குப் போய் வழிபடாமல், வீட்டிலேயே இருந்து பாடிப் பரவி கைக்கொள்ளும் நிலையில் நவராத்திரி அமைந்திருக்கிறது.

கும்பம் வைத்து, கொலு வைத்து, கூடியிருந்து மலைமகளைஅலைமகளை, கலைமகளைப், பாடிப் பரவும் விழாவாக நவராத்திரி அமையப் பெற்றிருக்கிறது.

ஏனைய விரதங்களைப் போல் அல்லாமல், நவராத்திரி விரதம் கலைகளின் சங்கமமாய் அமைந்திருக்கிறது என்பதால் அனைவராலும் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனலாம்.

நவராத்திரியில் கொலு வைப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். கொலு வைத்தல் என்பது அழகுக்கோ அல்லது ஆடம்பரத்துக்கோ அல்ல. அந்தக் கொலு கூட வாழ்வியலின் தத்துவமேயாகும். ஒன்பது படிகள் வைத்துக் கொலு அமைக்கப்படுகிறது. ஒன்பது என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அதிலும் அர்த்தம் நிறைந்திருக்கிறது. முதற்படியில் ஓரறிவு உயிரினப் பொம்மைகள்இரண்டாவது படியில் இரண்டறிவு உயிரினப் பொம்மைகள் மூன்றாவது, நான்காவதுஐந்தாவது படியில் அந்த எண்ணிக்கை சார்ந்த உயிரின அடையாளங்கள்,  ஆறாவது படியில் மனித உருவப் பொம்மைகள், ஏழாவது படியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட ரிஷிகளின் பொம்மைகள்எட்டாவது படியில் தேவர்கள்நவக்கிரகங்கள்ஒன்பதாவது படியில் இறைவனது பொம்மைகள் என்று கொலு வைப்பது வழக்கமாகும். இங்கு கொலு வைக்கப்பட்ட முறையான உயிர்களின் வளர்ச்சி நிலையினைக் காட்டுவதாக அமைகிறது எனலாம். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்  காட்டிய “புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி, கல்லாய், மனிதராய், முனிவராய் தேவராய்…. ” என்பது நினைவுக்கு வருகிறதல்லவா?

வணங்கும் கோவில்வாழும் வீடுகற்கும் பள்ளிக்கூடம், தொழில்புரியும் தொழிற்கூடம்பணிமனைகள்அத்தனையும் கொண்டாடி மகிழும் விழாவாக விளங்குவது நவராத்திரி ஒன்றே எனலாம். பக்தியுடன் கூடிய பாட்டும் பக்தியுடன் கூடிய நடனங்களும்பக்தியுடன் கூடிய ஒன்று கூடலும் இணையும் நிலை காணப்படுவதால் நலம் தரும் நவராத்திரி என்பது பொருத்தமாய் அமைகிறது அல்லவா?

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வு அறியா மனம் தரும் நெஞ்சில் வஞ்சம்
இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *