புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                  
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

சொன்னதும் சொல்ல நினைத்ததும்

முன்னுரை

திருக்குறள் அதிகாரப் பொருண்மைகளைப் பகுத்துக் கொண்டு உரைகூறுவது பரிமேலழகர்க்கேயுரிய உரைநெறியாகும். அந்த வகையில் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் முதல் அதிகாரத்தின் முதற்பாடலை ‘முதற்கடவுளது உண்மை கூறுவதற்கானது’ என்று எழுதுவார். அதாவது ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ என்னும் உண்மையை முதற்பாடல் சொல்லுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் பாட்டின் கட்டமைப்பு அவ்வாறாக இல்லை.

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் என்னும் முதலை உடைத்து”

என்று கருதுமாறே அமைந்துள்ளது. என்ன சிக்கல்? உவமம் சரி. அந்த உவமத்தைப் பொருளோடு பொருத்தினால் உலகம் முன்னதாகவும் கடவுள் பின்னதாகவும் ஆகும். ஆகவே கடவுள் ‘உலகிற்குக் காரணம்’ என்னும் பொருள் கிட்டாது. பிறகு ஏன் திருவள்ளுவர் இவ்வாறு கூறினார்? உவமத்தை விளக்கிவிடலாம். பொருளில் கடவுளாகிய காரணத்தை விளக்க முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகை வைத்துத்தான் அதற்கான கருத்தாவை அடையாளப்படுத்த முடியும். கிழக்காற்றில் நீர் வருகிறது என்றால் மேற்கே மழை பெய்திருக்கிறது என்னும் அனுமானம் போல! எனவே பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

“காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின் மேல் வைத்துக் கூறினார்”.

இந்த விளக்கத்தில் கடவுள்தான் உலகினைப் படைத்தார் என்றால் கடவுளின் இருப்பை எப்படி நிலைநிறுத்துவது? அதனால் காரிய காரணமாக ஆராய்கிறார். ஆய்ந்து மேற்கண்ட விளக்கத்தைத் தருகிற பரிமேலழகர், அதனாலேயே உலகம் முன்னாக கடவுள் பின்னாக எனக் கருதுதல் வேண்டா. காரணமாகிய கடவுள்தான் முன்னது என்பதைக் கருத்தாகக் கொள்க என விளக்கம் தருகிறார்.

‘கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

என்று எழுதுகிறார். இது குறட்பாவின் கிடக்கை நிலைக்கு மாறுபட்டது. இந்தக் கருத்தினை வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகரின் அனுமானத்தில் வந்த ஆய்வுண்மை. சொல்லப்பட்ட குறட்பாவின் கருத்தினை மட்டும் கருத்திற் கொள்ளாது உண்மையில் அது சொல்ல வருகிற கருத்தினை உணர்ந்து கொள்வதே ஓதுதலின் பயன் என்பது பரிமேலழகர் எண்ணமாகும். இவ்வாறு குறட்பா ஒன்றாகவும் அது உணர்த்த வரும் கருத்து வேறொன்றாகவும் உள்ள பல இடங்களில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

எமனும் தோற்பான்!

மரணம் பலவகைப்படும். ‘இயற்கையெய்தினார்’ ‘காலமானார்’ ‘படுகொலை’ ‘பயங்கரக்கொலை’ ‘பரிதாபச் சாவு’ ‘தீக்கிரையானார்’ ‘வெள்ளத்தில் மூழ்கினார்’ ‘விபத்தில் மரணம்’ ‘உயிர் பிரிந்தது’ ‘வீரமரணம்’ என்னும் சொற்களெல்லாம் மரணத்தின் பல சூழல்களையும் தன்மைகளையும் குறிப்பிட்டுக் காட்டும். கொல்லாமையாகிய அறத்தினைப் பின்பற்றி ஒழுகுபவனை உயிர் பறிக்கும் எமன் அண்டமாட்டான் என்பது பின்வரும் திருக்குறளுக்கான பொருள்.

“கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று”. (326)

மேலே சொன்ன சாவுகள் பலவகையாயினும் எமனின் ‘கடமையுணர்வு’ என்ற அளவில் மாறுபாடு ஏதுமில்லை. சாவு எத்தகையதாயினும் அதற்கு விதியைக் காரணமாக்குவது உலகியல். இந்தக் குறளுக்குக்,

“கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்றுச் செல்லாது.”

என்று அழகர் எழுதியிருக்கும் உரையிலும் ‘கூற்றுச் செல்லாது’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘கொல்லாமை’ என்பதைக் கொலைக்கு எதிர்நிலையாகக் கருதுகிறாராம் திருவள்ளுவர். அது மேலே சொன்ன மரணங்களுள் கொலைக்கு நிகராம். ஊனுக்குக்காக, உணவுக்காகக் கொல்லப்படுவன அஃறிணை உயிர்களேயானாலும் அவையும் கொலையே என்பதே வள்ளுவர் கருத்தாம். அதனால்தான் அவர் கொல்லாமை என்று பெயர் வைத்தாராம்!. பிற உயிர்களைக் கொல்லாதவனுக்குச் சாவில்லை என்பதுதான் திருக்குறள் சீர்கள் தரும் பொருள். பரிமேலழகர் தனது சிந்தனையால் கொல்லாமை என்னும் சொல் நோக்கி இன்னொரு விளக்கத்தைப் பதிவு செய்கிறார். “உண்பவன் கொலை செய்யாவிட்டால் உண்பவனை எமனும் கொலை செய்யமாட்டான்”

“இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் ‘வாழ்நாள் மேல் கூற்று செல்லாது’ என்றார். செல்லாதாகவே ‘காலம் நீட்டிக்கும். நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து”

உரையறிஞர் எவர் சிந்தனைக்கும் அவ்வளவு எளிதாக பிடிபட இயலாத கருத்து இது. எமனால் கொல்லப்படான் என்றால் அவனுக்கு மரணமில்லை என்பது பொருளன்று. மரணம் ஒத்திவைக்கப்பட்டு, வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு அக்காலத்துள் ஞானம் பிறக்க, பாவங்களை ஒதுக்கிய நிலையில் உயிர் வீடு பெறும் என்னும் கருத்தைத்தான் இந்தக் குறள் கூறுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். மரணம் வராது என்றார் வள்ளுவர். உண்மையில் ஞானத்திற்காக மரணம் வரும் காலம் ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார் பரிமேலழகர்.

விலகும் அளவு வேதனையில்லை

அறத்துப்பாலில் ‘துறவு’ என்னும் அதிகாரம் உலக இன்பங்களைத் துறத்தல் என்பது பற்றிக் கூறுகிறது. துறவறவியலாக இருந்தாலும் பொதுவாகப் பொருளின் மீது வைக்கின்ற பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதைக் கூறுகிறது. “ஈட்டல், ஈட்டியவற்றைக் காத்தல் – காத்தவை குறைபடுதல், கெடுதல் ஆகிய அனைத்தும் துன்பம். எனவே இன்பத்திற்காகத் தேடும் பொருள் துன்பத்திற்கு உறைபதியானது” என நாலடியார் கூறுகிறது. திருக்குறளில்,

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்” (341)

என்ற குறட்பா “ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இல்லை” என்னும் பொருள் தாங்கி நிற்கிறது. மேலே காட்டிய நாலடியாருக்கு விளக்கமாகப் பரிமேலழகர்,

“ஈண்டுத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும் காத்தலானும் இழத்தலானும் வருவனவும் மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம்.”

என்று விளக்கமளித்திருக்கிறார். ‘யாதனின்’, ‘அதனின்’ ஆகிய இரண்டு சொற்களையும் இரண்டு முறை பயன்படுத்திய நுட்பம் நோக்கிய அழகர் அவைகொண்டு ஒரு கருத்தினைப் பதிவிடுகிறார். ‘எல்லாவற்றையும் ஒருசேரத் துறத்தல் இயலுமா?’ என்னும் ஐயத்திற்கு ‘அவ்வாறு துறப்பது தலை. இருப்பினும் பற்று வைத்துள்ள பொருட்களில் ஒவ்வொன்றாகத் துறக்க அவ்வொவ்வொரு பொருளாலும் வரக்கூடிய துன்பம் நீங்கும். இதனைத்தான் இந்தக் குறட்பா தனது கருத்தாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

“எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.”

என்பது பரிமேலழகர் கருத்தாக எழுதிக்காட்டும் தொடர். பற்று வைத்த பொருள்களிலிருந்து அதனை நீக்கினால் அவற்றால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது திருக்குறள் முற்றும் துறக்க இயலாதவர் ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அவற்றான் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது பரிமேலழகர் கண்ட கருத்து. “யாதனின் நீங்கியான் அதனின் நோதல் இல்லை. யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இல்லை” என்று நிரல்பட ஓதினால் பரிமேலழகரின் நுட்பம் புரியக் கூடும்.

கெட்டவனை நினைத்தால் நன்மை வருமா?

‘கஞ்சா அடித்தே கந்தசாமி செத்தான் தெரியுமா?’ என்று ஒருவர் மற்றொருவருக்கு அறிவுரை கூறினால் அவர் கஞ்சாவிற்கு விளம்பர அலுவலர் அல்லர். கந்தசாமியை உவமமாக்கி உயார்த்துகிறார் என்பதுமன்று. அவர் யாருக்கு அறிவுரை கூறுகிறாரோ அவருக்கு நன்மை தர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் திருவள்ளுவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” (539)

என்பதே அந்தக் குறட்பா. கடன் வாங்கிக் கந்தசாமி குடிக்கிறபோது ‘குடியால் அழிந்த குப்புசாமியை எண்ணிக்கொள்’ என்பது போல அமைந்த பாடல் இது.

“அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க”

என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதினார். ‘கெட்டவர்களை எண்ணுக’ எனச் சொல்வது திருவள்ளுவர் நோக்கமன்று. அவர்களை எண்ணினால் மகிழ்ச்சிக்கான காரணங்களால் வரும் ஆணவம் இல்லாது ஒழியும். ஒழியவே அவற்றால் வரும் சோர்வில் மயங்காது தப்பலாம் என்பது கருத்து. மகிழ்ச்சிக்கான காரணங்கள் செல்வம், இன்பம், வீரம் முதலியனவாம். அவற்றால் அழிந்தவர் இரணியன், சூரபதுமன், இராவணன், சச்சந்தன், துரியோதனன் முதலியோர். இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என எண்ணினால் எண்ணுபவர் அந்த மகிழ்ச்சியில் மதிமயங்கார் என்பது கருத்து. இதனைக்,

“கெட்டாரை உள்ளவே ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன் கண் மைந்துறார் என்பது கருத்து”

பிறர் பாட்டை மட்டும் நோக்கப் பரிமேலழகர் பாடியவரின் உள்ளத்தையும் பார்க்கிறார்.

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!

வினைசெய்யுங்கால் குணங்களின் மாறுபாட்டால் ஏற்படும் சோர்வு பேரழிவை உண்டாக்கும், என்பது அறிந்ததே. அதனால்தான் வள்ளுவர் தொடங்கிப் பாரதி வரைக்கும் அது கண்டிக்கப்படுகிறது. “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதும் காண்க. சோம்பலைச் சோம்பலாகவே கருதி அதனைக் கைவிட வேண்டும் என்னும் கருத்தினைப் பின்வரும் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.

“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்” (602)

இந்தக் குறளுக்குத் “தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியா வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.” எனப் பொழிப்புரை கூறிய பரிமேலழகர்,

“நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றாற்போல மடியில் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று  ஒழுகவே தாம் உயர்வர். உயரவே குடி உயரும் என்பார் ‘குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார்.”

என விளக்கமெழுதிக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் சோம்பலைச் சோம்பலாகக் கருதுக என்றுதான் இருக்கிறது. இது எப்படி ஒரு நீதியுரைத்ததாகும்? சோம்பலைச் சாதாரணமாகக் கருதாது அதனை (அதனால் வரும் கேடுகளை முன்வைத்து) அதுவாகவே கருதிக் களைய வேண்டும். இல்லாவிட்டால் குடி அழியும் என எச்சரிக்கை செய்கிறார்.

‘அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து’.

‘நினைக்க’ என்று வள்ளுவர் கூறுகிறார். ‘நீக்காவிட்டால் நின் குடி அழியும்’ என்னும் அவர் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிகிறார்.

நம்மையறியாரை நாமறிவோம்

‘அமைச்சு’ என்னும் தலைப்பில் அமைந்த அதிகாரம் அமைச்சனது தன்மைகளையும் செயல்களையும் கூற வந்தது. அதில் ஆறாவது பாடலாக அமைந்திருப்பது,

“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை?” (636)

என்னும் குறுட்பாவாகும். இந்த வினா வடிவத்தில் முடிந்திருக்கும் இதன் உள்ளடக்கம் “அறிவுள்ளவனால் இனங்கண்டு அழிக்க முடியாத எதிரிகள் உண்டா? என்பதே. இதற்கான பரிமேலழகர் பொழிப்புரை இப்படி அமைகிறது.

“(இயற்கையாகிய) நுண்ணறிவை (செயற்கையாகிய) நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை யாவையுள?”

இந்தப் பொழிப்புரையில் இயற்கையறிவு, செயற்கையறிவு என்னும் அறிவு மூலங்களைச் சுட்டும் பரிமேலழகர் குறட்பாவின் கிடக்கை நிலையிலேயே உரைகாண்கிறார். காணவே வினா வடிவத்திலேயே பொருளும் நிறைவடைந்துவிடுகிறது. வினாவைத் தொடுப்பதா படைப்பின் நோக்கம்? வழிகாட்டுவதுதான் படைப்பின் நோக்கம். “முன்னிற்பவை யாவுள?’ என்னும் வினாவிற்கு ‘ஏதுமில்லையாம்’ என முடித்து விடலாம். ஆனால் பரிமேலழகர் இன்னும் ஒருபடி மேலே சிந்திக்கிறார். சிந்தித்து எழுதுகிறார்.

பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து.

ஈரறிவும் கலந்தமைந்த அறிவுடைய அமைச்சர்களுக்கு அவற்றினும் மிக்க நுட்பமுடைய சூழ்ச்சிகள் இல்லாமற் போவதற்குக் காரணம் என்ன என்பதைத் தமது தனிநோக்கினால் கண்டறிந்து எழுதுகிறார். பகைவர் செய்வனவற்றை இவருடைய நுண்ணறிவால் அறியக்கூடுமாம். அறிந்து அவற்றை அழிப்பாராம். பகைவர் அறிய முடியாதவற்றையும் அழிக்க முடியாதவற்றையுமே இவர் எண்ணுவாராம். இதுதான் சொல்ல வந்த அமைச்சர் பெருமையாம். இவர் தரும் இந்த விளக்கத்தினால் தம்முடைய அறிவு நுட்பத்தையே முன்னெடுக்கிறாரேயன்றிப் பகைவர் அறிவு பற்றிக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அடுத்தவர்க்கே வேண்டுமெனின் அமைச்சர்க்கு வேண்டாமா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் அடக்கத்தைத் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். வாயைத் தவிர ஏனைய புலன்கள் அவற்றுக்கான பொறிகளையே குறிக்க, ‘வாய்’ என்னும் புலன் நாவையே  குறிக்கும். வாய் பேசாது. நாக்குத்தான் பேசும். மருத்துவர் ‘வாயைத் திற’ என்றால் இரு தாடைகளைத் திறப்பதைக் குறிக்கும். வாயை மூடு என்றாலும் அந்த நிலையே. ஆனால் ஒருவன் பேசுகிறபோது ‘வாயை மூடு’ என்றாலோ ‘நீ வாயைத் திறக்காதே’ என்றாலோ அப்போது அது தாடைகளைக் குறிக்காது. நாவினைத்தான் குறிக்கும். திருவள்ளுவர் ‘நாகாக்க’ என்றாரேயன்றி ‘வாய்காக்க’ என்றார் அல்லர். ‘நாநலம்’ என்றாரேயன்றி ‘வாய்நலம்’ என்றார் அல்லர். நாக்குத்தான் நலன் உண்டு. வாய்க்கு நாற்றந்தான் உண்டு. நாக்கு நாறாது. வாய்தான் நாறும். ‘நாவினால் ‘சுட்ட வடு’ என்றாரேயன்றி ‘வாயினால் சுட்ட வடு’ என்றார் அல்லர். ஆனால் எதிர்மறையில் ‘வாயுணர்வு மாக்கள்’ என்பார். வாயடக்கம் என்பது நாவடக்கமே.

“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று” (641)

என்னும் பாடல் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும்,

“அமைச்சர்க்கு இன்றியமையாக் குணம் ஆவது சான்றோரான் ‘நாநலம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.”

என்னும் பொழிப்புரை குறட்பாவிலிருந்து வெகுதொலைவு விலகிப்போயிருப்பதைக் காணலாம். ‘நாநலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று’ என்று பொதுவாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் உயிரான உள்ளடக்கம். பரிமேலழகர் இயல், அதிகாரம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிச் சொற்களை வருவித்து மிக ஆழமாக உரைகாண்கிறார். இது அமைச்சியலில் இருப்பதால் பொதுவாகச் சொல்லப்பட்ட இப்பாடற் கருத்தினை அமைச்சர்க்கு ஏற்றியுரைக்க விழைகிறார். அதனால்,

“பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.”

அழகரின் இந்தத் தொடரை நோக்காவிட்டால் பொழிப்புரையின் முதற்பகுதி விளங்காது. ஏனென்றால் அது குறட்பாவில் சொல்லப்படாத கருத்து. ஆனால் அதுதான் திருவள்ளுவர் சொல்ல வருகிற கருத்து. அமைச்சுப்பணி இல்லார்க்கே இது இவ்வளவு இன்றியமையாது எனின் அமைச்சுப்பணி உள்ளார்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. அவருக்கு மிக மிக இன்றியமையாதது என்பதையே திருவள்ளுவர் கருத்தாக்கிச் சொல்கிறாராம்.

இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

காமத்துப்பாலில் அமைந்துள்ள குறட்பாக்களுக்குத் துறைதழுவி உரையெழுதியவர் பரிமேலழகர். அதாவது திருவள்ளுவரை முற்றிலும் மறைத்துத் தலைமக்கள் கூற்றாகவே காட்சிப்படுத்தும் பேராற்றல் அந்த உரைக்கு உண்டு. ‘ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது’ என வரைவுகடாய தோழிக்குச் (தலைவன்) சொல்லியது’ என்னுந் துறையில் அமைந்த பாடல்,

“வீழும் இருவர்க்கும் இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு” (1108)

என்பதாகும். இந்தப் பாடலுக்குத் தலைமகன் கூற்றாகவே உரையெழுதியிருக்கிறார் பரிமேலழகர். அவன் தோழியிடம் இப்படிச் சொல்கிறான்.

“நீ சொல்லுகின்றது ஒக்கும். ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே!”

திருவள்ளுவரின் திருக்குறளைத் தலைவனுக்காக்கியதே நுண்ணியம். களவொழுக்கத்தில் வந்து சேர்வதும் சேர்ந்து பிரிவதும் துன்பமல்லவா? மணம் செய்து கொண்டால் பிரியாது இருவரும் எப்பொழுதும் முயங்கிக் கிடப்பதை நீ விரும்பவில்லையா? என்பதுபோல் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகன் தோழியின் கூற்றினை அப்படியே உள்வாங்கி “நீ சொல்லுகின்றது ஒக்கும்” அதாவது (நீ சொல்லுவது சரிதான்) என்பதுபோல விடையிறுக்கிறான். பாட்டில் தலைமகன் கூற்று இந்த அளவிற்கே அமைய. இதனால் ‘தலைமகன் கூறவரும் கருத்தென்ன?’ என்பது புலப்படவில்லை. தோழியை வழிமொழிவது அவன் பணியன்று. வரைவுடம்படாது களவொழுக்கத்தை நீட்டிக்கச் செய்வதே அவன் உட்கிடக்கை. அந்த எண்ணத்தைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து பதிவிடுகிறார் இப்படி.

“ஈண்டு இருவர் இல்லை. இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து”

‘நாங்கள் இருவராக இருந்தால் அல்லவா அவ்வாறு இணைய வேண்டும். நாங்கள் ஒருவராகவே நிலைப்பதால் நீ சொல்வது பொருந்தாது’ என்பதைத்தான் இப்படி ‘நீ சொல்லுகின்றது ஒக்கும்’ எனச் சொல்லுகிறானாம்.

தந்தவள் அவள்! நீக்க வேண்டியவள் நீ!

தலைவியைச் சந்திக்கும் முன்னர் அவனுக்குக் காதற் துன்பமும் தெரியாது. அது நீக்கும் நெறியான மடலூர்தலும் தெரியாது. ‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன?’ என்று தோழி வினவுகிறாள். தலைமகன் பின்வருமாறு விடைதருகிறான்.

“தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்” (1135)

“மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன்னர் அறியேன். இது பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்” என்பதே தலைமகனின் விடையாக அமைகிறது. தோழியின் வினாவிற்கு விடைசொல்வது அன்று தலைமகன் நோக்கம். அந்த நோயினால் ஏற்பட்ட துன்பத்தினையும் அது நீங்கக் கைகொள்ளவிருக்கும் மடலூர்தலையும் தவிர்ப்பதற்குத் தோழி உதவ வேண்டும் என்பதே அவன் உள்ளக்கிடக்கை. “நீ அவளிடம் சென்று என் காமத்துயர் சாற்றி, மடலூர்தலுக்கு முன்பாகவே மணவினை நிகழ ஆவன செய்க’ என்று அவன் கருதுவதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறதாம்.

“இவை அவள் தந்தன வாகலின் நின்னால் நீங்கும்” என்பது கருத்து.’

என்னும் நுட்பமான உரை பரிமேலழகருடையது. ‘யார் தந்தது என நீ கேட்டாய். தந்தவள் பெயர் சொன்னேன். எனவே நீக்கியருள வேண்டியது நின் கடன்’ எனத் தலைமகன் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

நிறைவுரை

திருவள்ளுவர் சொன்னவற்றை மேம்போக்காக நோக்காது அவர்தம் உள்ளத்தின் ஆழம் காண முயன்றவர் பரிமேலழகர். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திருவள்ளுவர் சொன்னது ஒன்றாக இருக்க, அவர் சொல்ல நினைத்ததைக் கண்டறிந்து பந்திவைக்கும் பரிமேலழகர் உரைத்திறன். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ (1274) எனத் தலைவன் தலைவியின் முறுவலை ஆராய்ந்ததைப் போலவே பரிமேலழகர் ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. தலைவன் கண்டது தலைவியின் காதல் பரிமேலழகர் கண்டது திருவள்ளுவரின் கருத்து. திருக்குறளில் ஏறத்தாழ 60 இடங்களில் பயின்று வந்திருக்கும் இத்தகைய உரைப்போக்கு அழகரின் உரைத்திறனில் ஒரு மணிமகுடமாகவே ஒளிர்கிறது.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *