நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

0

தி. விப்ரநாராயணன்

(டி. டி. திருமலை அவர்களின் மகன்)

ஒரு கட்டடத்தின் வெளியே வெள்ளை வேட்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவும் அணிந்துகொண்டு உயரமான, சிவப்பான, அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர், அலுவலக சாமான்களின் நடுவே அமர்ந்திருந்தார். அந்தத் தெரு வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் அவரை விசாரிக்கிறார்கள். எல்லோருக்கும் சிரித்துக்கொண்டே “அலுவலகத்தைக் காலி செய்யவேண்டுமென்று கட்டடச் சொந்தக்காரர் பல தடவை சொல்லியும் நான் காலி செய்யவில்லை. அதனால்தான் இந்த நிலை” என்று சொன்னார். இப்படி இரண்டு நாட்கள் வெளியிலேயே இருந்தார். பிறகு அவரின் நண்பர்கள் அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் பேசி அவர் அலுவலகத்தை அங்குத் தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றுத் தந்தனர். பிறகு சில நாட்கள் கழித்து,  தக்கர் பாபா வளாகத்திற்கு மாற்றிக்கொண்டார். இவர் வேறு யாருமல்ல. காந்தியவாதி திரு டி. டி. திருமலை அவர்கள்.

பிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள், தோத்தாத்திரி தெய்வநாயகம்  அய்யங்கார் – ஜானகி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

குடும்பப் பின்னணி

வைணவ வைதீகக் குடும்பம். நிரம்ப சொத்துகள் — தோப்புகள், சொந்த வீடுகள் / அறுவடை காலங்களில் நெல் வண்டிகள் தெரு முழுவதும் நிற்குமாம். தான தர்மங்களுக்கு அள்ளிக் கொடுப்பாராம். இவர் குடும்பம், திருப்பதி ஜீயர் பரம்பரைக் குடும்பம். தோத்தாத்திரி அய்யங்காரைத் தவிர்த்து அவர் மூதாதையர்களுக்கும் திருப்பதி கோவிலுக்கும் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்ததால் இவரைத் திருமலைப் பட்டு என்றுதான் அழைப்பார்களாம்.

அதனால்தான் இவருக்கு  ஐந்தாவது வயதில் உபநயனம், திருப்பதியில் நடந்திருக்கிறது.

இவருடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். இவர்கள் இவருக்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்கள். மூத்த தங்கை நடனத்திலும் இசையிலும் சிறந்தவளாக விளங்கினாள். எட்டு வயதிலேயே மேடைகளில் நடனம் ஆடவும் பாட்டுப் பாடவும் தொடங்கிவிட்டாள். அதனால் நடன ஆசிரியர்களும் பிரபல வித்வான்களும் வீட்டிற்கு வந்து தங்குவார்களாம். இருவருக்கும் 14 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது

திருமலையின் கல்வி

பத்தாம் வயதில்தான் இவர் கல்வி பயிலத் தொடங்கினார். அவ்வூரிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின் திருநெல்வேலியில் இருக்கும் இந்து கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்தார்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காந்தியின்  சத்திய சோதனை நூலைப் படித்து, போட்டியில் பரிசு பெற்றுள்ளார். ஆறாம் வயதில் ராஜபாளையத்திற்குக் காந்தி வந்தபோது, இவருக்கு இவர் அப்பா, கதர்ச் சட்டை அணிவித்தாராம். அதிலிருந்து கதர் தொடக்கமாயிற்றாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நேருவைப் பார்க்க ராஜபாளையம் போனதற்காக, நான்கணா அபராதம் கட்டினாராம். அதனால் பள்ளிப் பிராயத்திலேயே தேசிய உணர்வு அரும்பியிருக்கிறது.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து, சிறை சென்றிருக்கிறார்; ஆனால் அவர் அப்பா அவரைச் சிறையிலிருந்து அழைத்து வந்துவிட்டார். இருப்பினும் எட்டு மாதம் மறைவாக இருந்து ரகசியமாகத் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வழங்கியிருக்கிறார்; அதனால் பட்டப் படிப்பு  தடைபட்டது.

1942ஆம் ஆண்டு பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவியின் பெயர் சீதா. அவ்வூரைச் சேர்ந்தவர். ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு குழந்தைகள்.

இதற்குப் பின்  ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து,  அக்கட்சியின் தலைவராக இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் தலைமையின்கீழ் பணியாற்றிருக்கிறார். அப்பொழுதும் தேசிய உணர்வை மாணவர்களிடையே பரப்ப, பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறார்.

நகராட்சியில் துணைத் தலைவராக ஆறு வருடங்கள்  இருந்து ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செய்திருக்கிறார். குடிதண்ணீர் வசதிக்காக மந்திரிகளைப் பார்த்து ஆவன செய்திருக்கிறார்.

கலை இலக்கியம்

கல்லுரியில் படிக்கும்போது ஆஷாடபூதி என்ற ஆங்கில நாடகத்தில் நடித்து, நீதிபதி மகராஜன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரும் பேராசிரியர் அ.சீ.ரா.வும் நண்பர்கள். அ.சீ.ரா., இவருக்கு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். தாமிரபரணி நதிக்கரையில் பாடமும் இலக்கிய விமர்சனமும் நடக்கும். அங்கே மகராஜன் அவர்களும் வருவாராம். இதன் மூலம் திருமலை அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தியவர்கள், இவர்கள் இருவரும் தான். அதன்  விளைவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை இலக்கியக் கழகம் ஒன்றை நிறுவி அங்குள்ள பெரிய நூலகமான பென்னிங்டன் நூலகத்தில் கூட்டம்  நடத்தினார். மகராஜன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஊர்மக்கள் இவரது ஆர்வத்தைப் பாராட்டினர். மதிப்பு உயந்தது. மகராஜன் மூலம், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் உறவு 1946இல் கிடைத்தது. அவரை இலக்கியக் கழகத்தில் பேச வைத்தார். ரசிகமணி அவர்களுக்குத் திருமலை அவர்களிடம் தனி மதிப்பு ஏற்பட்டு, அவர் இறக்கும் வரை தொடர்ந்தது. அவர் நூற்றாண்டு விழாவின்போது ஒரு மலர் தயாரித்து வெளியிட்டார்.

அ.சீ.ரா. மகராஜன், டி.கே.சி அவர்களின் மூலம்தான் தனக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததாகவும், அவை காந்திஜியைப் புரிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவின என்றும் சொல்லுவார். மூவரும் இவருக்கு ஆசான்கள்.

குடும்ப நிலை

சமுதாயத்தில் மதிப்பு வளர்ந்தது, சொத்துகள் கரைந்தன. எல்லாம் தர்மத்தினால். ஆண்டாள் புத்தகாலயம் என்ற ஒன்றை நடத்தினார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமிக்கவர்கள், இலவசமாகவே புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. ஆனால் அவரோ அவர் அப்பாவோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். இப்பண்புதான் எதற்கும் கலங்காத நிலையைக் கற்பித்தது. பிள்ளைகள், மனைவி ஆகியோரை மாமனாரிடம் ஒப்படைத்துவிட்டு வேலை தேடச் சென்றுவிட்டார். 1953இல் இது நடந்தது. பம்பாய் சென்றார்; வேலை கிடைக்கவில்லை, 1944இல் தினமணியில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1954 முதல் 1955 வரை பூதான இயக்கத்திலும், 1956-57இல் பாரத் சேவக் சமாஜ அமைப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் மதுரை காந்தி நினைவு நிதியில் தத்துவப் பிரசாரக் வேலை பார்த்தார்.

இந்தக் காலம் பொன்னானது. மதுரையில் காந்தி மன்றம், பள்ளி – கல்லூரிகளில் காந்தியச் சிந்தனை வகுப்புகள் நடத்துவது, மாணவர்களுக்காகப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்துவது, மாணவர்களுக்குக் காந்தி பற்றிய செய்திகளைச் சொல்லுதல்  முதலியன இவரது பணிகளாக இருந்தன. அதனால் இவரைச் சுற்றி எப்பொழுதும் இளைஞர் படை இருக்கும். அதில் கிடைத்தவர்கள் தான் இவர் வாரிசாக இன்று தொண்டாற்றிவரும் குழந்தைசாமி அவர்களும் அண்ணாமலை அவர்களும். காந்தி ஜயந்தி விழாவில்  சாலமன் பாப்பையா, குமரி அனந்தன், நா. பாலுசாமி, சிற்சபேசன், மேலும் பிரபல கல்லூரிப் பேராசிரியர்கள் காந்தியத் தலைவர்கள் பங்கு கொள்வார்கள்.

1967-70 காந்தி நூற்றாண்டு விழா, கமிட்டிப் பொறுப்பாளராக இருந்து தென் மாநிலங்களைக் கவனித்தார். அஞ்சல் மூலம் காந்தி  என்ற புதுத் திட்டத்தைத் தொடங்கினார். காந்தி அமைதி நிலையச் செயலாளராக மதுரையிலும் சென்னையிலும் பொறுப்பேற்று காந்திஜியின் வாழ்க்கையயும் தத்துவங்களையும் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடமும்  எடுத்துரைத்தார்.

காந்தி அமைதி நிறுவனத்தில் 60 வயது வரை பணியாற்றினார். பின்னர் அப்பொழுது அமைச்சராயிருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் அறிவுரையின்படி காந்தி கல்வி நிலையத்தைத் தொடங்கி இறுதி வரை வளர்த்தார்.

1993இல் ஆகஸ்டு 11 ஆம் நாள் அவர் மறைந்தார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி

படிப்பு முடிந்ததுமே பிரம்ம ஞான சபையுடன் இவருக்குத் தொடர்பு எற்பட்டது. அந்த நூல்களைப் படிப்பார். ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்பார். அவருக்கும் திருமலை அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டது. அவர் வாழ்த்தினைப் பெற்றார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண்

சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் உண்டு. அவரை மாணவர்கள் மகாநாட்டிற்கு அழைத்து வந்தார்.

பொருளாதார நிபுணரும், காந்தியின் சீடருமான ஜே சி குமரப்பா அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன், க அருணாசலம், அவினாசலிங்கம் செட்டியார், நா மகாலிங்கம், கே எஸ் சுவாமிநாதன், காகா கலேல்கர் போன்றோரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆர் ஆர் திவாகர், இவரின் மானசீக குரு.

காந்திதான் அவருக்கு உயிர், அவரைப் பற்றி எடுத்துச் சொல்வதில் வல்லவர். வீடு வீடாக மதுரையிலும் சென்னையிலும் செல்வார். அப்பொழுது கதரைப் பற்றிப் பேசுவார். காந்திய நூல்களை விற்பார். உடன் அவர் உதவியாளர்கள் வருவர்.

ஒருமுறை, ஒரு பணக்கார வக்கீலிடம் சென்றிருக்கிறார். அவரிடம் காந்தி என்று தொடங்கினாராம். உடனே அவர் கோபப்பட்டு எழுந்து, ’செல்லுங்கள். நன்கொடை எதுவும் கிடையாது’ என்றாராம். இவர், ‘நீங்கள் நன்கொடை தரவேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்றாராம். காந்தியைப் பற்றிப் பேசாது, வாழ்வதன் பயனைப் பற்றிப் பேசினாராம். இவர் பேச்சில் மயங்கி, நூறு ரூபாய் நன்கொடை தந்தாராம்.

மற்றொரு சம்பவம் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியரிடம், ‘உங்கள் மாணவர்களிடம் காந்தியைப் பற்றிப் பேச வேண்டும். பேச அனுமதி தாருங்கள்’ என்றாராம்.

அவர் ’அதெல்லாம் முடியாது’ என்றாராம்.

பின் ’உங்கள் ஆசிரியர்களுக்காகவாவது’ என்றாராம்.

அதுவும் ’முடியாது’ என்றாராம்.

உங்களுக்காகவாவது என்றவுடன் அவர் சிரித்துவிட்டாராம். பின்னர் மாணவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசச் சொன்னாராம்.

மக்கள் மனத்தைக் கவர்வதில் சமர்த்தர். எல்லாம் தன்னலத்திற்கில்லை, காந்திக்காக.

சொற்பொழிவுகள்

எல்லாத் தரப்பட்ட மனிதர்களிடையேயும் பேசியிருக்கிறார். 45 ஆண்டுகள் சொற்பொழிவு செய்திருக்கிறார். ஆவேசமாகப் பேசுவார், அன்பாகப் பொருள்பட நகைச்சுவையாகப் பேசுவார். இவர் நகைச்சுவையைக் கேட்கவே, மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் வருவர்.  ரௌத்ரம் பழகு என்பதற்கிணங்க தலைவர்களிடத்தும் தவறுகள் இருந்தால் துணிச்சலுடன் சாடுவார், அவரிடம் பொய்யில்லை. வறுமையிருந்தும் நேர்மையுண்டு. ஆங்கிலத்திலும் நன்றாகப் பேசுவார்.

திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் பேசியிருக்கிறார்.

அவர் எழுதிய நூல்கள்

காந்தி என்ற வாழ்க்கை வரலாற்று நூல், பல பதிப்புகள் வந்தன.

வினோபா, காந்தியின் ஆத்ம நண்பர். இவருக்கும் ஆத்ம நண்பர். அதற்காக அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

பல இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

உலக இதய ஒலி என்ற மும்மாத இலக்கிய இதழ் ஒன்றை நடத்தினார். 1970 இலிருந்து 20 ஆண்டுகள் நொண்டி நொண்டி நடந்து வந்தது. அ சீ ரா அவர்களும், மகராஜன் அவர்களும்  ஊக்குவிக்க இவ்விதழ் வெளிவந்தது. அ சீ ராவின் ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என்ற கட்டுரை இதில் வெளிவந்தது. பின்னர் இது நூலாக வந்தது. மகராஜன், டி கே சி, நா பா, அகிலன், வல்லிக் கண்ணன், ல சண்முகசுந்தரம், துறைவன் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள் இதில் இடம் பெற்றன.

இதில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவர் நினைவாக அமுத கலசம் என்ற தலையங்கத் தொகுதியைக் காந்தி கல்வி நிலையம் வெளியிட்டது.

காந்திஜியின் வாழ்வும் வாக்கும், Voice of Gandhiji,  Joy of living  என்ற இதழ்களையும் நடத்திவந்தார்.

வட்டத்தொட்டி

ரசிகமணி டிகேசி  வட்டத்தொட்டி  உறுப்பினராக இருந்தார். அங்கு நடக்கும் இலக்கிய விமர்சனங்களை எல்லாம் ரசித்தார்.  உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு நண்பர்கள். கல்கி, மீ. ப. சோமு, ராஜாஜி, பி ஸ்ரீ, சுந்தா, போன்ற பிரபலங்களுடைய தொடர்பு கிட்டியது. சென்னையில் அதே வட்டத்தொட்டியை  ஜஸ்டிஸ் மகராஜன் ஆரம்பித்தார். மகராஜன் அவர்களுடன்  இலக்கியம் பற்றி இரவெல்லாம் பேசுவார்.  டி கே சி யின் முதன்மை ரசிகர் ல  சண்முகசுந்தரம் அவர்களுடன் நிகழ்ந்த இலக்கிய உரையாடல் பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

குடும்ப நிலை

1953இலிருந்து 1980 வரை தடுமாற்றம்தான். ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, சென்னை முதலிய இடங்களில் வாழ்க்கை அவர் மனைவியால்தான் நடைபெற்றது. அவருடைய கொள்கைப் பிடிப்புக்கு உறுதுணையாயிருந்தது அவர் மனைவிதான், விருந்தினர்களை அழைத்து வருவார், பணம் இருக்காது. கடன் வாங்கித்தான் பிழைப்பு நடக்கும். மேலும், பின்தங்கியோரைத் தம் வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைப்பார். எப்பொழுதும் சிலர் வீட்டிற்குச் சாப்பிட வருவார்கள். எப்பொழுதும் பூஜ்யமாகவே இருக்க வேண்டும் என்பார், சொத்தோ பணமோ சேர்க்கும் எண்ணம் வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார். அவருடைய உதவியாளர்களும் அப்படியே கடைப்பிடித்து வந்தனர்.

எத்தனையோ குடும்பங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். மண முறிவுகளைத் தவிர்த்திருக்கிறார். மன அழுத்தம் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் முதலியோருக்கு ஆலோசனை வழங்கிச் சரிசெய்திருக்கிறார்.

இவர் பணியைப் பாராட்டிச் சமுதாயம் ‘’காந்திய மாமணி‘ ’என்ற பட்டத்தைக் கொடுத்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களைத் தவிர்த்து, அண்ணல் வழியில் சென்று, ஹரிஜன முன்னேற்றத்திற்காகவும் கதரின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட என் தந்தையார் T. D. திருமலை அவர்களுக்கு இன்றிலிருந்து நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *