பிரியதர்சினி இந்திரா காந்தி

0

பாஸ்கர் சேஷாத்ரி

இந்திரா காந்தியைப் போல ஒரு சர்வாதிகாரத் தலைவரை அன்றைய அளவில் கேள்விப்பட்டிருக்க முடியாது. எழுபதுகளில் துக்ளக் வாசகன் என்ற பெரிய ஈர்ப்பில் இந்திரா காங்கிரஸ் மீது எனக்குப் பெருங்கோபம் இருந்தது. சோவைப் போல பல்லாயிரம் பேர், இந்திராவின் நகைச்சுவைக்கு ஒரு பைசாவை மணிஆர்டர் செய்து அதனை அவர்களின் அலுவலகம் பெற்றுக்கொண்டது, எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அப்படி அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயப்ரகாஷின் சிறை அடைப்பு, பெர்னாண்டஸ் மீது வழக்கு, சென்சார் அடக்குமுறை (மெட்ராஸ் ஹை கோர்ட் வாசலில் பறிமுதல் செய்யப்பட்ட துக்ளக், கருப்புச் சந்தையில் நூறு ரூபாய்க்கு விற்றது) எனப் பல நிகழ்வுகள் இன்னும் என் மனத்தில் இருக்கின்றன. எல்லாச் செயலும் எனக்கு அப்போது இந்திரா எதிர்ப்புதான். ஆனாலும் அவர் ஆளுமை எனக்குப் பெரிய ஆச்சரியம். தான் நினைத்ததைச் செய்யத் தடை வரும் போது, அதனை உறுதியாய் எதிர்கொள்ளப் பலம் வரும்போது ஒரு சர்வாதிகாரம் தலை தூக்குவது இயல்பு என அப்போது புரியவில்லை. ஏன் அவர் மகன் சஞ்சய் காந்தி இறந்தபோது கூட அவர் மேல் ஒரு சோகம், இரக்கம் வரவில்லை . கிட்டத்தட்ட அது எனக்கு என் மேல் திணிக்கப்பட்ட அல்லது நான் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் எதிர்ப்பு நிலை.

பின்னாளில் இந்திய நாட்டிற்கு ஓர் அவசர நிலைப் பிரகடனம் தேவை எனச் சோவே சொல்லும் அளவிற்கு இன்று அரசியல் அதல பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டு இருப்பது வேறு விஷயம். இந்த எல்லாக் கோபமும் வெறுப்பும் ஒரே நாளில் உடைந்து போய், இந்திரா எதிர்ப்பு என்ற எனது கொள்கை உடைந்து போனது அந்த அக்டோபர் முப்பத்து ஒன்றாம் தேதி 1984.

அன்று காலை தான் அவர் சுடப்பட்டார். நான் சுமார் பத்து மணியளவில் என் அலுவலகத்தில் இருந்தபோது (வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலை) கணக்காளர் தான் அதனைச் சொன்னார். ஆனால் அவர் பேச்சில் உறுதித்தன்மை இல்லை என்பதால் ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பக்கம் வந்து விசாரித்த போது உண்மை தெரிந்தது. கிட்டத்தட்ட கலவரமான சூழல். அலுவலகம் வந்து இயக்குநரிடம் சொன்னேன். இந்தக் கோழைத்தனமான வன்முறைக்குப் பின், எனக்கு இந்திராவின் மேல் பெரிய மரியாதையும் மதிப்பும் வந்தது. இந்திரா மரணத்திலும் இவர்களை ஜெயித்தார்.

ஆனால் அது அன்றைய காலக்கட்டம், அன்றைய உண்மை. எத்தகைய பெரிய, கலவரமான, பயங்கரமான மரணம் அது. ஒரு பாயின்ட் பிளான்க் ரேஞ்சில் இருபத்து ஏழு குண்டுகள் உடம்பைத் துளைத்தன என்றால் எவ்வளவு பெரிய மூர்க்கமான வன்மம் அது? உயிர் பிரிந்ததன் முக்கிய காரணமே பெரும் அதிர்ச்சி என்று அகில இந்திய வானொலி பறை சாற்றியது. எனக்கு விவரம் தெரிந்து நான் கலவரமானது இந்த நாள் தான். முப்பத்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அவர் முந்தைய நாள் ரத்தம் சிந்தத் தயார் எனப் பேசியபோது ஒரு தமாஷ் என்ற நினைத்த மனம், அடுத்த நாள் உயிர் விட்டபோது கலங்கியது, எனக்குள் நிகழ்ந்த ஒரு மாற்றம். புளூ ஸ்டார் ஆபரேஷன் நிகழாமல் இருந்து இருந்தால், நாம் இந்திராவைக் காப்பாற்றி இருக்கலாமா எனத் தோன்றுகிறது. சென்றதினி மீளாது மூடரே என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்ன தான் என் சின்ன எதிர்ப்பு ஒரு பொருட்டல்ல என்றாலும், இந்தக் குற்ற உணர்ச்சி, என்னை விட்டுப் போகாது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *