ஒருநாள் மனைவி – குறுநாவல் பற்றிய ஒரு திறனாய்வுப் பார்வை

0

ச.சுப்பிரமணியன்

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் உலகத்தில் பெருமளவு புழங்கிய தமிழ்ச்சொற்களில் ‘பெண்ணியம்’ என்பதும் ஒன்று. ‘புரட்சி’ என்பதையும் ‘புதுக்கவிதை’ என்பதையும் இதனோடு இணைத்துக்கொள்ளலாம். இந்த மூன்று சொற்களும் ஒரு நூற்றாண்டு கடந்து போய்விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் நீர்த்துப்போன சுண்ணாம்பாகவே காட்சியளிக்கின்றன என்பதை நடுநிலையாளர் உணர்வர். ஒப்புக்கொள்வர். காரணம், உள்ளத் தூய்மையோடு, மன உறுதியோடு, கொள்கைப் பிடிப்போடு முன்னெடுக்கும் எதுவும் இறுதியில் வெற்றி பெறும். அவ்வாறின்றிப் போலிப் பாராட்டிற்காகவும் வெற்று விளம்பரத்திற்காகவும்  அரசியல் வருவாய்க்காகவும் செய்யப்படுகிறபோது மூலத்தின் நோக்கம் சிதைவுக்கு ஆளாகிறது.

தந்தை பெரியாரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் பேரறிஞர் அண்ணாவும் திரு.வி.க.வும் மகாகவி பாரதியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பெண்விடுதலை பற்றிப் பேசியபோது அது ஆன்மாவின் குரலாக ஒலித்தது. அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. எத்தகைய கொடுமையான சூழலுக்குப் பெண்ணினம் ஆளாக்கப்பட்டிருந்தது என்பதைப் அப்பெருமக்களின் போராட்டங்கள் வெளிப்படுத்தின. விடியல் வந்தது. ஆனால் அது விடிந்தும் விடியாமலே போய்விட்டதுதான் காலச் சோகம். இன்றைக்கு நாளும் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்ட பிறகு அப்பெருமக்கள் முன்னெடுத்த பெண் விடுதலை, ஒரு பேச்சுப்பொருளாக மட்டுமே கருதக் கூடிய அளவுக்குத் தாழ்ந்து போயிருக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் தண்ணீர்ப்பள்ளி தமிழ் இராசனின் ‘ஒருநாள் மனைவி’ என்னும் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

பெண்ணைப் பாராட்டி மயக்கி வளைப்பது வேறு. அவள் அருமையுணர்ந்து இல்லற வாழ்க்கைப் பயணத்தில் அவளுக்குத் துணைநிற்பது என்பது முற்றிலும் வேறு. வித்தியாசமான பெண்களைப் பாத்திரங்களாக்கும் படைப்புலகத்தில் முற்றிலும் புதிய வித்தியாசமான கோணத்தில் ஓர் ஆணைப் படைத்துக் காட்டி அவன் பங்குபெறும் கதைக்கு ‘ஒருநாள் மனைவி’ என்று பெயர் வைத்திருக்கிற இராசனின் படைப்புத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இல்லறத்திற்குத் தேவை இதயம், மூளை அல்ல!

ஒரு கருத்து பொதுவெளியில் பதிவிடப்பட்டாலும் அது பதிவிடும்  குறிப்பிட்ட நபர்க்குரிய அனுபவத்தின் வெளிப்பாடாகவும் அறிவின் வெளிப்பாடாகவும் மட்டுமே கொள்ளப்படல் வேண்டும். இன்றைய நடப்பியலில் இல்லறத்தில் மனைவி தலைமையேற்கும் இல்லறம் சிறப்பாகவும் கணவன் தலைமையேற்கும் இல்லறம் அதனின் சற்றுக் குறைந்தும் இருக்கும் என்பது என் கருத்து. என் அனுபவம். ஐம்பது ஆண்டுகள் இல்லறத்தில் என் அனுபவம் இதுதான். இதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அனுபவம் பொதுவாக வேண்டும் என்றும் நான் விரும்பியதும் இல்லை. என்னுடைய அனுபவம் அது.

‘ஒருநாள் மனைவி’ என்னும் குறுநாவலில் இராசன் சொல்லியிருப்பது ஒரு வேறுபட்ட கோணமே. ஆனால் அனுபவக் கூறுகளைப் பொறுத்தவரையில் எனக்கு அது மிகவும் சாதாரணம். காரணம் நான் எப்போதும் மனைவிக்குக் கட்டுப்பட்டவன். இந்தக் கட்டுப்பாட்டுக்கும் பணிவுக்கும் ஒவ்வொரு நாளும் இல்லறக் கடமைகளில் என் மனைவி காட்டும் பொறுப்புணர்வும் உடல் வேதனையுமே காரணமாகும். ஒரு பெரிய அலுவலகத்தைப் பொறுப்புடன் பராமரிக்கும் பணியைவிட மிகவும் கடினமானது குடும்பத்தைக் கொண்டு செலுத்துவது. இந்த அனுபவத்தைத்தான் இடமாற்றம் செய்து சிந்தித்திருக்கிறார் இராசன்.

கணவனும் மனைவியும் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் இல்லறப் பதவிகளை இடமாற்றம் செய்து கொண்டால் அன்றையப் பொழுது எப்படியிருக்கும் என்பதன் அழகான கற்பனையின் விளைவே இந்தப் படைப்பு. உண்மையில் இதனைக் கற்பனையின் விளைவு என்பதும் பொருந்தாது. சமுதாயத்தில் பரவ வேண்டிய அமைதிப் பணி. கணவனின் ஆளுமையை மனைவி வியப்பதும் மனைவியின் அருமையைக் கணவன் உணர்வதுமாகிய ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்தாலேயொழிய இல்லறம் சிறக்க இனி வாய்ப்பில்லை. பொருளாதாரத்தை மையமாக்கிக் கட்டமைத்திருக்கிற இன்றைய இல்லறச் சிதைவு இன்னும் நொறுங்கிப் போகும் ஆபத்திருக்கிறது. இந்தக் கதை அந்தக் குறையைப் போக்கும் எழுத்தாக இருக்கலாம். இருக்க வேண்டும். இருக்கும்.

விரும்பியதும் வைத்ததும்

‘ஒருநாள் மனைவி – இருந்து பார்த்தவனின் இனிய அனுபவங்கள்’ என்றுதான் இந்தத் திறனாய்வுக் கட்டுரைக்கு நான் முதலில் பெயர் வைத்தேன். கணவன் மனைவியாகவும் மனைவி கணவனாகவும் இருந்து பார்ப்பதல்ல, வாழ்ந்து பார்ப்பதுதான் இனிமையான இல்லறம். இது கண்ணதாசன் சொல்வதுபோல ‘நான் கண்ட காட்சி காண நானல்ல நீங்கள் யாரும்’ என்பதைப் போன்றது. கற்பாருக்கு வரும் சிந்தனைக் குழப்பத்தை மனத்தில் எண்ணி அந்தத் தலைப்பை மாற்றித் ‘திறனாய்வு’ என்ற அளவில் அமைத்து அமைதியடைந்தேன். பெண்ணியத்தை மையமாக்கிய படைப்பிலக்கியங்களில் இந்தக் கதையின் பின்னணியில் உள்ள உண்மையாகிய கற்பனை எண்ணி மகிழத்தக்கதும் வியப்புக்குரியதுமாகும். முதிர்ந்த ஒரு நாவலாசிரியர்க்கும் அரிதாகத் தோன்றக்கூடும் இந்தக் கற்பனை, ஒரு காவல்துறை அதிகாரிக்குத் தோன்றியிருப்பது எண்ணிப் பார்க்க இயலாத படைப்பாளுமையாக நான் கருதுகிறேன்.

அடிமனத்துப் படைப்பு

‘தண்ணீர்ப்பள்ளி’ தமிழ்ப் பற்றாளரும் மொழியின உணர்வாளரும் கவிதைத் துறைக்குத் தமிழகக் காவல் துறை வழங்கிய சீர்வரிசைகளில் ஒருவருமாகிய திரு. ம.இராசனின் சிந்தனைக் கருவறையிலிருந்து வெளிவந்திருக்கும் மூன்றாவது சந்தனத் தமிழ்ப் படைப்பு, ‘ஒருநாள் மனைவி’ என்னும் இந்நூலாகும்.

‘வாழ்க்கைக் கவலைகளில்
நாங்கள் விட்ட பெருமூச்சு
கடற்கரைக்குப் போயிருந்தால்
கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்’

என்பார் நா.காமராசன். அவர் கூறும் வாழ்க்கைச் சிக்கல் பலவாயினும் ஒரு குடும்பத்தைக் கொண்டு செலுத்துவதும் அவற்றுள் அடங்கும். ‘இட ஒதுக்கீடே’ இல்லாத பதவி குடும்பத் தலைவி பதவிதான். அந்தப் பதவியின் கீழ்வரும் குடும்பங்கள் சிறக்கும். மற்றவை இறக்கும். இது என் கருத்து. இந்தச் சிந்தனைப் பின்புலத்தில் இல்லறக் கடமைகளை இயல்பாக ஆற்றிவரும் மனைவியின் துயரத்தை ‘அனுபவித்தே பார்த்துவிடுவது எனத் தன்னை மனைவியாக்கிக் கொண்ட ‘பைரவியின்’ (அந்த ஒருநாள் மட்டும் பைரவன் பைரவி ஆகிறான்.  பூவரசி ‘பூவரசன்’ ஆகிறாள். இது நமது கற்பனை) கடமைச் சித்திரிப்பைத் தமது இயல்பான தமிழால் காவியமாக்கித் தந்திருக்கிறார் இராசன். ‘இல்லறத்தை நடத்துவதற்கு மனைவி துணையாவாள்’ என்பது வள்ளுவம். இங்கே ‘துணை’ என்பது ‘இன்றியமையாமை’ என்னும் பொருளில் அமைகிறது. இதனைப் ‘புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு’ என்னும் தொடரால் பெறலாம். இல்லறம் முழுமையாகச் சிறக்க வேண்டின், வள்ளுவம் இதனை மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அத்தகைய குறிப்பு திருக்குறளில் இல்லாமையால் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் காண்பதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.

தலைப்பில் கையாளப்பட்ட உத்தி

வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தி வெளிவந்த திரைப்படங்கள் உண்டு. ஒரே இரவில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை ‘ஓர் இரவு’ என்னும் திரைப்படம் காட்சிப்படுத்தியது. கணவனுடைய உயிரைக் காப்பாற்றித் தருமாறு தன் முன்னாள் மருத்துவர் காதலனிடம் வேண்டும் ஒரு பெண்ணின் தவிப்பைப் படமாக்கிய இயக்குநர் ஸ்ரீதர் ‘நெஞ்சில் ஓர்  ஆலயம்’ என்னும் படத்தினை ஒரே அரங்கில் (செட்டில்) படமாக்கினார். வீட்டைவிட்டு வெளியேறிய பெண் ஒன்பது இரவுகளில் தான் சந்திக்கும் ஒன்பது வேறுபட்ட மனிதர்களைப் பற்றிய அனுபவத்தை அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் ‘நவராத்திரி’ என்னும் திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்.

தாயை இழந்த குழந்தைக்கு ஏழுநாட்கள் மட்டும் தாயாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இறுதியில் அந்தக் குழந்தையின் தந்தைக்கே மனைவியான நிகழ்வை இயக்குநர் திரு. பாக்கியராஜ் ‘அந்த ஏழு நாட்கள்’ என்னும் படத்தில் சித்திரித்தார். ‘உயிர்பெற்ற புகைப்படமே திரைப்படம்’ என்பதை உறுதிப்படுத்துதற்காகத் தான் எடுத்த ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தைக் கார்ட்டூனிலேயே தொடங்கிக் கார்ட்டூனிலேயே முடித்திருப்பார் ஸ்ரீதர்.

இவ்வாறு கதை சொல்லும் உத்திகள், படைப்பாளனின் வெளிப்பாட்டுத் திறனுக்கேற்ப மாறுபட்டு அமையும். இந்தப் பின்புலத்தில் இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எவருக்கும் வரும் ‘ஒரு மாதிரியான எண்ணம், எனக்கு வரவில்லை. நான் மிக உயர்ந்த ஒழுக்க சீலன், பண்பாளன் என்பது பொருளன்று. இது மாதிரியான இலக்கிய அனுபவங்களை நான் ஏற்கெனவே பெற்றவனாகையால் அதிர்ச்சியடையவில்லை.

படைப்பும் படைப்பாளன் உரிமையும்

படைப்பாளர்களுக்கு உள்ள உரிமை, படைப்புச் சார்ந்த கருத்து, மொழி, வடிவம், உத்தி என எல்லாத் தளங்களிலும் பரவியிருக்கிறது. அதனால்தான் தன் மனைவியின் கடமையை ஒருநாள் செய்து தன்னை அவளுக்கு மனைவியாக்கி அவள் படும் துன்பத்தை அனுபவித்துப் பார்க்கலாம், பார்க்க வேண்டும் என்னும் ஓர் ஆணின் உணர்வுகளை ‘ஒருநாள் மனைவி’ என்னும் தலைப்பில் இராசனால் வடித்தெடுக்க முடிந்திருக்கிறது. உரிமையைக் கடமையாகக் கருதும் எழுத்துப்பணி என்பது இதுதான்.

தாய்மைப் பதிவுகளில் வைரமுத்தின் தடுமாற்றம்!

இதே மாதிரியான உத்தியினைப் படைப்பாளர் வைரமுத்து தாம் எழுதிய ‘தமிழுக்கும் நிறம் உண்டு’ என்னும் நூலில் ‘அழைப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கையாண்டிருக்கிறார். இராசனின் இந்த நூலில் தலைப்பே கொஞ்சம் தடுமாற வைக்கிறது. வைரமுத்தின் அந்தப் பாடலில் பாடலின் இறுதிவரியைப் படிக்கிற வரைக்கும் நாம் அனுபவிக்கும் உணர்ச்சி வேறு. இறுதி வரிகள் நமக்குத் தரும் அதிர்ச்சி வேறு.

அந்தக் கவிதை, பாலியல் உணர்வால் தூண்டப்படும் பெண்ணொருத்தியின் விரக தாபத்தை வெளிப்படுத்துவதாகவே இறுதிவரை அமைந்திருக்கும். வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கும் வைரமுத்து, பிறருடைய வற்புறுத்தலுக்காக இந்தப் பாடலைத் தனது பெருமிதக் குரலில் படித்துக் காட்டுவார். ஆனால் ‘தயவுசெய்து இந்தப் பாடலின் கடைசி வரியை நான் உச்சரிக்கும் வரைக்கும் பொறுமை கொள்க’ என்று ஒரு வேண்டுகோளையும் அந்த மேடையிலேயே வைத்துவிடுவார். இது இப்போதும் இணையத்தில் (YOU TUBE) உள்ளது. யார் வேண்டுமானாலும் காணலாம். அந்தக் கவிதையின் சில வரிகளைத் தருகிறேன். பெண் பேசுகிறாள். பேசுபவர் பெண்ணா? தாயா? என்பதைப் படிப்பவர்கள்தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

“கூந்தல் கலைத்துப் பூக்களை உதிர்த்துவிடு!
………………………………………………
குளித்து வரும் என்னை மீண்டும் அழுக்காக்கு!
எதிர்பாரா இடத்தில் என்னைத் தீண்டு!
எவ்வளவு இயலுமோ அவ்வளவு தழுவு!
……………………………………..
உதட்டு எச்சிலால் என் உடல் பூசு!
…………………………………………..
மார்பகப் பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சு விடு!
………………………………
உன் நகர்த்துதலுக்காகத் துடித்ததென் ஆடை!
உன் நகம் கிழிக்க வீங்குதென் மார்பு!

படித்துப் பார்த்தீர்களா? ஒரு சராசரி வாசகன் இதனை ஒரு பெண்ணின் விரக தாபமாகத்தான் நோக்குவான். இது வைரமுத்துக்கும் தெரியும். அதனால் தான் அவர் கவிதையைத் தான் படிப்பதற்கு முன்பே நோக்கர்களை ‘இறுதிவரைப் பொறுக்க’ என எச்சரித்துவிடுகிறார். ஆனால்,

“நீ தந்த சுகமெல்லாம்……
நெய்யில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை!
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை!
பிரசவம் முடித்த பெருமூச்சில் கண்டதில்லை!
எங்கே மீண்டும் ஒருமுறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு!
தட்டாதே!
தாய்ச்சொல்லைக் கேள்!
பத்துமாதம் என் வயிறு சுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே!”

என்னும் இறுதி வரிகள் ஒரு தாய்மையின் எதிர்பார்ப்பையும் துடிப்பினையும் வெளிப்படுத்துவனவாக அமைந்து அந்தக் கவிதை நிறைவடைகிறது.

இந்த உத்தியை வைரமுத்து கடைப்பிடித்திருப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கவிதையில் அவர் வெளிப்படுத்த நினைக்கும் கருத்தும் உணர்ச்சியும் விரகதாபமா? தாய்மையின் ஏக்கமா? என்னும் வினாவிற்கு அவ்வளவு எளிதாக விடையளிக்க இயலாது என்பது என் கருத்து. இதற்கு வைரமுத்தின் மற்றொரு கவிதைப் பதிவினையே சான்றாக்க இயலும். ‘அவசரத் தாலாட்டு’ என்பது அவர் எழுதிய இன்னொரு கவிதையின் தலைப்பு. அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாகத் தாய் பாடும் தாலாட்டாக அமைந்த அந்தப் பாடலில் தாய்மையின் ஏக்கத்தை இப்படிப் பதிவு செய்திருக்கிறார் கவிஞர்.

“பேருந்தில் நசுங்கிப் பிதுங்குகின்ற வேளையிலும்
எடைகொஞ்சம் குறைந்து இறங்குகிற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கிக் குடியிருக்கும் வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும்கண்ணே!
தந்தை வந்து கொஞ்சுவதாய்த் தாய்மடியில் தூங்குவதாய்க்
கண்ணான கண்மணியே கனவு கண்டு நீயுறங்கு!
புட்டிப்பால் குறையவில்லை! பொம்மைக்கும் பஞ்சமில்லை!
தாய்ப்பாலும் தாயுமன்றித் தங்கமுனக் கென்ன குறை?”

இந்தத் தாலாட்டில் இருக்கும் தாய்மையின் ஏக்கம், கண்ணீர், தவிப்பு முதலியன ‘அழைப்பு’ என்ற கவிதையில் கிட்டுமானால், வைரமுத்து கையாண்ட உத்திக்கு வெற்றிதான். அதற்குப் பதிலாக ஒரு விரகதாபத்தின் வெளிப்பாடாகவே வாசகர்களால் உணரப்படுமாயின், என்னதான் இறுதிவரிகள் தாய்மையுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது என வாதிட்டாலும் கவிதை தனது நோக்கத்தில் அவ்வளவாக வெற்றி பெற்றதாகக் கருத முடியாது. காரணம் நான் முன்பே சுட்டியபடி நோக்கத்திற்கான வரையறை குழப்பமாக அமைந்துவிடுவதுதான். இப்படி நான் எழுதுவது வைரமுத்தின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கான திறனாய்வு என யாரும் கருதிவிடக் கூடாது. எடுத்துக்கொண்ட பகுதிகளுக்குள்தான் ‘சொல்லாடல்’ நிகழ்கிறது.

‘கைக்கு அடக்கமா நீ கடிச்சுப் பாக்க வாட்டமா’ என்று எழுதப்பட்ட வரிகள்,  ‘இலந்தைப் பழத்திற்காக என்று எழுதியவர் வாதாடலாம். கேட்கிறவன் சிந்தனையில் ‘அது இலந்தைப்பழம்தான்’ என்று பதிவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதற்குள் அந்த வரிகளின் பொருட்பரிமாணம் அவன் மனத்திற்குள் பதியமிட்டுவிடும். வாசகன் புரிந்துகொள்வதற்கு அவசர நிலையை அமல்படுத்த முடியாது.

திறனாய்வுப் பார்வையில் வைரமுத்தின் ‘அழைப்பு’ என்னும் கவிதையின் விளைவும் இதனையொத்ததே அதனால் எழுதியவரே கவிதை திசைமாறிவிடுமோ என்னும் அச்சத்தில் ‘அவசரப்பட வேண்டாம்’ என்று மேடையிலேயே வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார்.  இது மாதிரியான உத்திகளைக் கொண்டு கவிஞனால் படைக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் ‘கட்டியங்காரனை’ அமர்த்த இயலுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். வேண்டுமானால் ‘கட்டிலுக்கும் தொட்டிலுக்குமான சிலேடை’ என்றோ ‘தலைவி மடியும் தாய்மடியும்’ என்றோ ‘தலைவியும் தாயும்’ என்றோ தலைப்பிட்டிருக்கலாம். இது ஒரு சிலேடை அவ்வளவுதான். இருவேறு உணர்ச்சிகளின் ஒருவழிப்பாதை என்பது அவ்வளவாகப் பொருந்தாது!.

‘ஒருநாள் மனைவி’யாக இருந்த இராசன்!

இராசனின் ‘ஒருநாள் மனைவி’ என்னும் தொடரை உள்வாங்கிக் கொண்டு கதையைப் படிக்கத் தொடங்கிய நொடியிலிருந்து வெகு விரைவிலேயே படைப்பாளனின் நோக்கம் விரிந்து புலப்படுவதைப் பக்கத்திற்குப் பக்கம் காண முடிகிறது. ‘எண்ணியது வேறு இங்கே இருப்பது வேறு’ என்னும் எண்ணத்திற்கு வாசகன் உடனடியாக வந்துவிடுகிறான். தலைப்பினால் உண்டான  சலசலப்பு, சில நொடிகளிலேயே அடங்கிவிடுகிறது.

கட்டுக் குலையாத  கதை

‘ஒருநாள் மனைவி’ என்னும் காப்பியத்தில் குடும்ப நிகழ்வுகள் நிரலாகக் கோக்கப்பட்டுள்ளன. குடும்பத் தலைவியின் கடமைகளான ‘அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்’ என்னும் பாவேந்தர் வினாவிற்கு விடையாக மதனகோபால் –  மனோகரியின் வாழ்க்கைச் சிக்கலைத் தீர்த்து வைக்கிறாள் ‘பைரவன்’(வி). மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கல்யாணசுந்தரத்தின் மகள் கனிமொழியின் திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள். அவ்வப்போது குழந்தைகள் கேட்கும் அறிவுசார்ந்த வினாக்களுக்குத் தெளிவாக விடைகள் தரப்படுகின்றன.

பைரவன் ‘பைரவி’ ஆன கதை

சேவல் வரவேற்க, தெருப்பெருக்கும் பணியோடு நாட்கடனைத் தொடங்குகிறான் பைரவன். மயில்சாமி, அவன் மனைவி வண்ணக்களி. இவன் மனைவி பூவரசி என்னும் மூவர் செய்து முடித்த பணியைத் தனியொரு ஆளாய்ச் செய்து முடிக்கிறான்.

மாடு கன்று பராமரிப்புத் தொடங்கி, வாசல் தெளித்துக் கோலம் போட்டுப் பால்கார மணியிடம் பால் வாங்கிக் காய்ச்சிக் காபி போட்டுக் கணவன் கொடுக்க மனைவி அருந்துகிறாள். இந்த முரண் வானவில்லின் அழகு முரண்.

காலைச் சிற்றுண்டியாக இட்டளி அவித்து அதற்குத் துணையாகச் சட்டினியைச் செய்து பாத்திரத்தில் பாதுகாப்பு செய்தபிறகு குழந்தைகளுக்கு நீராட்டுதலைச் செய்கிறான். அதற்கு முன்பே குழந்தைகளால் மாசடைந்த பாய்களைத் தூய்மை செய்து, குழந்தைகளை நீராட்டி இவனும் குளித்துச், சிற்றுண்டி உண்டு, நண்பர் கல்யாணசுந்தரத்தின் வீட்டுத் திருமணத்திற்குக் குடும்பத்தோடு புறப்படுகிறான்.

திருமண விருந்தில் குழந்தைகளைக் குழந்தைகளாகவே நடத்தி, தான் உண்ட பொங்கலை விதந்து பேசி, வீடு திரும்பிய பைரவனுக்குப் பஞ்சாயத்துச் சிக்கல் ஒன்று எதிர்நோக்கியிருந்தது. அந்தச் சிக்கலின் நாயகன் மதனகோபால், நாயகி மனோகரி. சிக்கல் அவர்கள் பையனின் திருமணம் பற்றியது. அந்தச் சிக்கலையும் தீர்த்துவைத்தான் ஒருநாள் மனைவி ‘பைரவி’ (பைரவன்),

வாரத்தில் தன் இல்லத்தார் பயன்படுத்திய அழுக்குத் துணிகளையெல்லாம் துவைத்துக் காயவைத்த பைரவன், வேளாண்மை தொடர்பான புறநானூற்றுப் பாடலுக்கு உரைகண்டு மகிழ்ந்தான். மாலை நேரத்தில் சிக்கரி கலக்காத காபி போட்டுத் தந்தான்.

கணவனோடு மனைவி செய்ய வேண்டிய விருந்தோம்பலை மனைவியோடு கணவன் செய்யும் புதிய காட்சியை அறிமுகம் செய்யும் இராசன், தன் மகன் மாணிக்க விநாயகத்தை விளையாட்டுக்கு அழைக்க, வந்த அவன் நண்பன் ஞானவேலுக்குப் பிஸ்கட்டும் பாலும் கொடுத்து உபசரித்தான்.

இரவு உணவுக்காகக் களியும் கறியமுதும் செய்தளித்த பைரவர், அவற்றைச் சிறிய கிண்ணங்களில் வைத்துப் பணியாள் மயில்சாமிக்கும் அவர் மனைவி வண்ணக் கிளிக்கும் கொடுத்து அன்பு பாராட்டினார்.

மறுபடியும் அன்றைய நாளில் புழங்கிய பழைய பாத்திரம் முதலியவற்றைக் கழுவிச் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தபோது குழந்தை குமரனின் பேரழுகைக்குப் பரிகாரம் காணவேண்டியது இருந்தது. வயிற்று உபாதைக்கு வெந்நீரால் வழிகண்டு, படுக்கைக்குச் செல்கிற போது நள்ளிரவு மணி 12.00.

மனைவி கணவனாக அந்தக் கணவன் அவளுக்கு ஒருநாள் மனைவியான கதை இதுதான். ஒருநாள் நிகழ்ச்சிகளின் தொகுப்புப் படைப்பாளரின் வெளிப்பாட்டு உத்தியாலும் வண்ணனை அழகாலும் ஒரு முழுமையான படைப்பாகிச் சிறக்கிறது. பாவேந்தர், கவிதையில் சொன்னார். இராசன், உரைநடையில் பந்திவைத்திருக்கிறார்.

கனவில் வந்த காவிரிச் சிக்கல்

இந்தக் கதையில் ஓரிடத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணிக்கவிநாயகம் ‘மேகதாது அணை’ பற்றிய கவலையால் கனவில் உளறுகிறானோ என்று பெற்றோர்கள் ஐயப்படுவதாக வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஆறாம் வகுப்புப் படிக்கின்ற மாணவனின் பொது அறிவின் எல்லை பற்றிய ஐயம் தோன்றக் கூடும். இதற்கு ஒரு திறனாய்வாளன் என்ற முறையில் இரண்டு அமைதிகளைக் கூற இயலும்.

மாணிக்க விநயகத்தின் வளர்ப்பு முறை, பண்பு நலன்கள், அறிவு வளர்ச்சி முதலியவற்றையும் மாணவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தன் ‘வளைக்கரங்களால்’ பிணைத்துக் கொண்ட மின்னணுச் சாதனங்கள்,  மாணிக்க விநாயகம் போன்றவர்கள் கையில் பயன்படும் இலாவகத்தையும் புரிந்துகொண்டால் ‘காவிரிச் சிக்கல் கனவில் வந்தது’ வியப்பாக அமையாது.

இரண்டாவதாக ‘இலக்கியத் திறனாய்வு’ என்னும் அடிப்படையில் நோக்கினால், இவ்வாறு இயல்புநிலைக்கு மாறான சிந்தனைகளைப் பாத்திரங்களின் மேல் ஏற்றிக் கூறுவதற்குத் தமிழிலக்கிய உலகம் ஏற்பளித்திருக்கிறது. மகாகவி பாரதியார் ‘ஓடி விளையாடுகிற பிள்ளை’களுக்காகத் தாம் எழுதிய பாப்பாப் பாட்டில்,

“பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

என்று கூறுவான். பாதகம் செய்பவரைக் காவல் துறையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயத்தில் பாவம், குழந்தை என்ன செய்துவிட முடியும் என்பது மகாகவிக்குத் தெரியாதா? தான் காண விரும்புகிற ஒரு சமுதாயத்தைப் பாரதி பதிவு செய்கிறான். ஏனென்றால் ‘சிறுமை கண்டு பொங்கச்’ சொன்னவன் அவன். பாரதியாவது ஓடி விளையாடுகிற பிள்ளைக்கு மனஉறுதியை வலியுறுத்திப் பாடினார். அவர் நண்பர் பாவேந்தரோ, இன்னும் ஒரு படி மேலே சென்று, தொட்டிலில் உறங்குகிற குழந்தைக்குப் பகுத்தறிவுத் தாலாட்டுப் பாடுகிறார்.

‘சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு
நாணிக் கண்ணுறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு’

‘பெரியார் செய்த வேலையைப் பிள்ளை செய்ய வேண்டும்’ என்று அவர் விரும்புகிறார். இது படைப்பாளர் எல்லாருக்கும் இயல்பிலேயே அமைந்துவிடும் படைப்புரிமை. அவனுடைய விசாலமான மனத்திற்குள் எல்லாப் பொருண்மையும் அடக்கம்.

மரபு காக்கும் மாண்பு

தமிழ் மரபு தெரிந்தாலேயொழிய தமிழனைக் காப்பேன் என்னும் முழக்கம் வெற்று முழக்கமாகவே முடியும். இராசன் தமிழ் மரபறிந்தவர். வாசித்து  அறிந்தவர் அல்லர் வாழ்ந்ததனால் அறிந்தவர். பொதுவாக அளவு கடந்த மக்கள் கூட்டத்தைக் காண்போர் ‘எள் விழ இடமில்லை’ என்னும் உவமத்தைத்தான் பயன்படுத்துவர். நன்னிகழ்வுக்கும் எள்தான். தீய நிகழ்வுக்கும் எள்தான். ‘தீய நிகழ்வுக்குத்தான் எள் பயன்படுத்த வேண்டும் என்னும் தமிழ் இலக்கிய மரபு தெரியாததன் மக்கள் வழக்கு அது. ஆனால் இராசன் மிக அருமையாக,

‘நெல் விழுந்தால் கூட இடமில்லை’ (30)

என்று எழுதிக் காட்டுகிறார். தன் வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலத்திற்கான புள்ளிகளைக் கிள்ளி வைத்த நேரத்திலேயே அவர் மரபோடு ஐக்கியமாகி விடுகிறார். பொதுவாகச் சிறுகதை, புதினப் படைப்பாளர்களிடம் காண்பதற்கரிய ஆளுமை இது.

தொன்மப் புலமை

இராசன் வெளியிட்ட ‘அவர்’, ‘இலக்கியா’ முதலிய இலக்கியங்களைப் போலவே ‘ஒருநாள் மனைவியிலும்’ தொன்மக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குளிகை நேரம் பற்றிய விளக்கத்தில் சனீஸ்வரன் மனைவி ஜேஸ்டாதேவிக்குக் (29) குளிகன் மகனாகப் பிறந்ததை விளக்கும் இராசன், ‘பொன் கிட்டினாலும் புதன் கிட்டாது’ என்னும் மக்கள் வழக்கிற்கு அறிவியல் சார்ந்த விளக்கத்தைத் தருகிறார். இது பாராட்டுக்குரியதுதான் என்றாலும் இந்த அறிவியல் நுட்பத்தைத் தெரிந்துதான் அருணாசலம் இந்தப் பழமொழியைப் பேசுகிறானா என்னும் வினாவிற்கு விடை கிடைப்பது அரிது.

தாம்பூலத்தின் மூலங்களான வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியனவற்றிற்கு இராசன் தரும் அறிவியல் விளக்கம் பொருத்தமாக இருந்தாலும் மக்கள் அதனை ஒரு பழக்கமாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் கடமைக்காக பதவி மாற்றத்திற்கு ஆளான ‘பைரவி’ ,குடும்பத்தின் பழக்க வழக்கக் கட்டுமானத்தில் மிகக் கவனம் செலுத்தியிருக்கிறாள்(ர்) என்பது குறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

‘ஒருநாள் மனைவி’யின் படைப்பாளுமை

திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பாத்திரங்களைப் பக்கம் பக்கமாக வசனம் பேசவைப்பதில் கவனம் செலுத்துவார். சில நேரங்களில் ஊமையன் கூட பேசுமளவுக்கு அவருடைய படங்கள் அமைந்திருக்கும். பாலச்சந்தர், பாத்திரங்களை அறிமுகம் செய்கிறபோது வேறொரு கோணத்திலிருந்து காமிராவை நகர்த்திக்கொண்டே வந்து பாத்திரங்களை அறிமுகம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அளவோடு பேசவைப்பார். பாலுமகேந்திராவோ பேசும் பாத்திரங்களை ஊமையாகவே ஆக்கிப் பேசாத காமிராவை அதன் கோணங்களால் பேசவைப்பார். ‘வீடு‘ படமே இதற்குப் போதுமான சாட்சி. ஒன்றினைச் சொல்வது கவிதையாகாது. ஓர் அனுபவத்தை உணர்த்துவதே கவிதை. சில நேரங்களில் சிறுகதை நிகழ்வுகளின் சித்திரிப்பிற்கும், குறுநாவல், நாவல் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். இராசன் ஒரு சமையற் காட்சியைச் சித்திரிப்பதைப் பாருங்கள்.

“நல்லி எலும்புகளோடு சேர்ந்த அரைக்கிலோ இளம் வெள்ளாட்டுக் கறியை நன்றாக நீரில் கழுவித் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, வேண்டிய அளவு சின்ன வெங்காயத்தினைச் சுத்தம் செய்து வைத்தார். ஒரு பெரிய நாட்டுத் தக்காளிப் பழத்தைக் கழுவித் துண்டு துண்டாக வெட்டி வைத்தார். பின் சுத்தமாக இருந்த ஒரு வாணலியை எடுத்துக் கழுவிவிட்டு, அடுப்பின்மேல் வைத்து அடுப்பைப் பற்ற வைத்தார். சட்டி காய்ந்ததும் சிறிது நல்லெண்ணெயை ஊற்றினார். படபடவென எண்ணெய்க் காய்ந்து கலகலப்பை ஊட்டியபோது  வெட்டி வைத்திருக்கும் (இந்தத் தொடர் ‘வைத்திருந்த தக்காளி’ என்றிருந்திருக்க வேண்டும்) தக்காளி, சின்ன வெங்காயத்தினையும் போட்டு வதக்கினார்.

வெங்காயமும் தக்காளியும் சூட்டில் நன்றாக வதங்கிய பின், சட்டியைக் கீழே இறக்கி வைத்து, அவற்றை ஆறவைத்தார். பின்  அரைக்கிலோ கறிக்கு ஆகும் செலவுகளை (மளிகை மற்றும் மசால் பொருட்களை) அவரின் அம்மா சொல்லிக் கொடுத்தபடி மனத்திலேயே கணக்குப் போட்டு அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பட்டை, ஒரு ஏலக்காய், கசகசா கொஞ்சம் இவற்றுடன் ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் புதினா சேர்த்து, மிக்சியில் அரைக்காமல் அவர் அம்மா காலத்து அம்மிக்கல்லில் வைத்து அரைத்து வழித்தெடுத்தார்.  வதக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் (இந்தத் தொடரும் ‘வைத்திருந்த சின்ன வெங்காயம் என்றிருந்திருக்க வேண்டும்) தக்காளித் துண்டுகள் இரண்டையும் அரைத்து வழித்தெடுத்த சாந்துடன் கலந்து, கழுவி வைத்திருக்கும் கறியுடன் சேர்த்து கறிக்குழம்பு ஆக்குவதற்காக மட்டும் என்றும் பூவரசி பிரத்தியேகமாக வைத்திருந்த (தனி) பாத்திரத்தில் போட்டுக் கறியை வேகவிட்டார்.

கால்மணி நேரம் கறி வெந்து முடியும் முன்பாக ஐந்து மிளகாய், சீரகம், மிளகு சிறிது கொத்தமல்லி விதை சிறிது, ஒரு சிறிய மஞ்சள் துண்டு, இஞ்சி ஒரு துண்டு, இரண்டு பல் பூண்டு  இவற்றைத் தக்காளி, வெங்காயம் வதக்கிய எண்ணெய்ச் சட்டியில் போட்டு, லேசாக வறுத்து அம்மா பயன்படுத்திய அதே அம்மியில் வைத்து அரைத்துப் பசைபோல வழித்துக்கொண்டார். ஏற்கெனவே மசாலாப் பொருட்களுடன் சேர்த்து வைத்திருந்த கறியுடன் அரைத்தெடுத்த மசாலாவைக் கலந்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றிக், குழம்பைக் கூட்டி உப்பின் சுவையை அறியக் குழம்பைக் கொஞ்சம் உள்ளங்கையில் ஊற்றி ஊதி சுவைத்துப் விட்டு, குழம்பைக் கொதிக்கவிட்டார். இரண்டு கொதியில் குழம்பு கொதித்தபோதே பக்கத்து வீட்டுக்கெல்லாம் பைரவன் வீட்டில் கறிக்குழம்பு என்ற செய்தி, வானொலிச் செய்தியாக இல்லாமல் வான்வெளி வாயிலாகப் பரவிவிட்டது.” (76-77)

இது அறுபது வயதில் எழுதத் தொடங்கியவரின் எழுத்தென்றால் யாராவது நம்புவார்களா? கறி செய்த பக்குவம் இதுவென்றால் களி செய்த பக்குவம் களியைவிட மென்மையானது. வேளாண்மைத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்ற கணவர்தான் சமையற்காரர் என்பதைக் கருத்திற்கொண்டால் படைப்பாளர் சொல்லவரும் நடப்பியல் உண்மையை அறிந்துகொள்ள முடியும். ஒருநாள் நிகழ்வுகளாக இருப்பினும் நிரல் முரணாகாமல் வெறுங்கற்பனைக்கு இடந்தராமல் இயல்பான சித்திரிப்பால் படைப்பாளர் இதயம் கவர்கிறார்.

ஒருநாள் மனைவியில் உவமங்களின் ஆளுமை

பொதுவாகப் படைப்பிலக்கியங்களிலும் குறிப்பாகக் கவிதையிலும் உவமங்களே என்னைப் பெரிதும் ஈர்ப்பன. என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வும் உவமம் பற்றியதே. கவிதைகளின் தர மதிப்பீட்டிற்கு உவமங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என நான் கருதுகிறேன். கவிதையையும் கவிஞனையும் மதிப்பிடுவதற்கு உவமத்தையும் ஓர் அளவுகோலாகக் கொள்வது எனக்கு உடன்பாடே. அந்த வகையில் இராசன் கையாண்டிருக்கும் உவமங்கள் மிகச் சிறந்தன.

பயிரோடு சேர்ந்த பச்சையம் போல (33)

இணைப்பு நிலை அல்லது பிரியாத நிலைக்குத் தமிழியல் கண்ட உவமங்கள் ‘நிலைய வித்வான்களைப்’ போலச் சில உள. ‘நிலவும் மலரும்போல’, ‘நகமும் சதையும் போல’, ‘தமிழும் இனிமையும் போல’ என்பனவாக இருக்கும். புது மணமக்களை வாழ்த்துகிற பூவரசி ‘பயிரோடு சேர்ந்த பச்சையம் போல’ என்னும் உவமம் கொண்டு வாழ்த்துகிறாள். பயிரில் பச்சையம் என்பது உடன்பிறப்பது. கணவன் மனைவி உறவு என்பது கடவுள் அருள். ‘இம்மை மாறி மறுமையாயினும் நீ ஆகியர் என் கணவர்’ என்னும் தொடர்ப் பொருளை உணர்ந்தார்க்கு இராசனின் உவமம் திருமணப் பந்தத்தின் ‘பிறப்புரிமை’யைப் புலப்படுத்தும்.

‘இடைவாழைக் கன்றாக’ (37)

‘நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்’ என்பார் புலமைப்பித்தன். குழந்தைகளின் நடைக்கு ராஜநடையை ஒப்பிட்டார் அவர். (திரைப்படத்தில் வளர்ந்த நாயகனுக்குத் தாய் பாடுவதாக அமைந்தது) இராசன் இதுவரை நான் கண்டிராத உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். வாழைத்தோப்பில் தாய் மரங்களுக்கிடையே தோன்றி வளரும் இடைவாழைக் கன்றாகத் தந்தை தாய் இவர்களுக்கிடையே விநாயகம் நடந்து வந்தான் என்று காட்சிப்படுத்துகிறார். சுரதா போன்ற உவம வல்லாளர்களின் சிந்தனைக்கு மட்டுமே தோன்றக் கூடிய அற்புதமான உவமத்தைக் கையாண்டதன் மூலம் தமது படைப்பாளுமையின் ஆழத்தைக் கூடுதலாக்கியிருக்கிறார் இராசன்.

பத்திரப் பதிவு செய்துகொண்டு உரிமை கொண்டாடுவதைப் போல (40)

‘பெண் தன்னையொத்த ஓர் உயிர்’ என்னும் கருத்தாக்கம் நீர்த்துப் போனதற்கான காரணம் அறியக்கூடவில்லை. உறவுகளின் தலைமை, தாய்மை என்பது அறியப்பட்டிருந்தாலும் இந்த நிலை எதனால் எப்படி எங்கே தோன்றி வளர்ந்தது என்பது புதிராக இருக்கிறது. பெண் ஆணுக்கு இணை என்பதும் அத்தகையதே என்பது என் கருத்து. பெண் ஒப்பிட முடியாத உறவுகளுக்கு உரிமை பூண்டவள், மானுடத்தின் இயக்கத்திற்கு அச்சாணி. அவள் அசையாச் சொத்து அல்லள். அவள் உடைமை அல்லள். உடைமையாகக் கொண்டதன் விளைவைத்தான் சமுதாயம் இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மதனகோபால் மனோகரிக்குச் செய்யும் கொடுமையைப் பத்திரப் பதிவு செய்துகொண்ட உடைமையாகக் கருதுவதை உவமமாக்கி விளக்கிக் காட்டுகிறார் இராசன்.

வாய்க்குள் மீசை முளைத்ததைப் போல (63)

ஒட்டுமொத்த இலக்கியப் படைப்பில் வெற்றி கொள்வது வேறு. இலக்கியக் கூறுகள் ஒவ்வொன்றிலும் தமது தனித்த ஆளுமையை நிலைநிறுத்துவது என்பது வேறு. பின்னதற்குத் திருவள்ளுவரைச் சுட்டலாம். இராசன் ஒட்டுமொத்த இலக்கியப் படைப்பில் (நாவல்) வளர்நிலை அல்லது வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளார் என்பது உண்மை. ஆனால் உவமப் பயன்பாட்டில் தமது தனித்த முத்திரையைப் பதித்துவிட்டார் என்பதற்கு இந்த உவமப் பயன்பாடே போதுமானது. ’கோதுபடா மாங்கனி’ என்பதற்கு விளக்கவுரை எழுதவரும் இராசன் மல்கோவா அல்லது பங்கனப்பள்ளி மாம்பழங்களைக் கருத்திற்கொண்டு ‘கோது’ என்பதை விளக்குகிறார். மாம்பழத்தின் நார் பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு இருக்கும் பரிதாப நிலையைப் படம்பிடிக்க எத்தனிக்கும் இராசன் வாய்க்குள் மீசை முளைத்ததைப் போல என உவமத்தால்  காட்சிப்படுத்துகிறார். இனி இந்த உவமம் வினை, பயன், உரு, பண்பு என்னும் நான்கில் எவ்வகை என்பதைப் புலவர் பெருமக்கள் ஆராயலாம்.

காரமில்லாத ‘சாரியை’ மணம்

நானறிந்த வரையில் ‘மனம்’ என்ற சொல்லோடு வேற்றுமை உருபு இணையுங்கால் அத்துச் சாரியை கொடுத்து எழுதியிருக்கும் எழுத்தாளர் இராசனாகத்தான் இருக்க முடியும் என்று நம்புகிறேன். மகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபு இணையுங்கால் ‘அத்து’ என்னும் சாரியை பெறவேண்டும் என்பது வழக்கின் அடிப்படையில் தொல்காப்பியம் வகுத்த விதி.

“மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (தொல்185)

தமிழின் அத்தனை நிலைகளிலும் நிலைபெற்றுவிட்ட இந்தப் பிழையை நண்பர் இராசன் தவிர்த்து (மனத்தை 52, மனத்தில் 26, 52, 62) என்று எழுதியிருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

சாறு பருகும் நேரம்! சக்கை தந்த காரம்!

நல்லனவற்றைப் போற்றுவது திறனாய்வெனின் அல்லனவற்றைச் சுட்டுவதும் திறனாய்வுதானே? மொழியின் தூய்மையும் பெண்ணின் கற்பும் ஒரே தன்மையது. இங்கே தூய்மை என்பது பிறமொழிச் சொல் கலவாமை, இலக்கணப் பிழையின்மை மற்றும் எழுத்துப் பிழையின்மை முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். ‘ஒருநாள் மனைவியின்’ ஒருசில பக்கங்களில் எண்ணிக்கையில் குறைந்த பிழைகள் இருப்பதாக உணர்கிறேன். கருப்பஞ்சாறு குடிக்கையில் பல்லிடுக்கில் புகுந்து கொள்ளும் சக்கைத் துகள் போல அவை அமைந்து தொல்லை கொடுப்பதை என்னால் உணர முடிகிறது.

பொறுத்தத்துடன் (பொருத்தத்துடன்) 32
இவைகளோடு 54 (இவற்றோடு)
சம்மந்தம் (சம்பந்தம்) 22
துவங்கும் (தொடங்கும்) 13
களகளப்பை (கலகலப்பை) 54
கொள்ளைப்புறம் (கொல்லைப்புறம் 50)

‘தேறினான்’ என்பதும் அதனையொத்தது. தேர்வு, தேர்ச்சி, தேர்தல், தேர்ந்து என்றெல்லாம் இடையினம் இட்டு எழுதியவர்கள், ‘தேரினான்’ என்பதை மட்டும் ஒதுக்கி அதனைத் ‘தேறினான்’ என்றே எழுதுவார்கள், மாணவன் மருத்துவமனையில் இருப்பதைப் போல. எவ்வளவு பெரிய கொடுமை!

‘பந்தம்’ என்பது தொடர்பு, உறவு. ‘சம பந்தம்’ என்பது ‘சம்பந்தம்’ ஆகியிருக்கலாம். அது எவ்வாறாயினும் ‘சம்மந்தம்’ என்பது மந்தமானது. அப்புறம் சம்பந்தி சம் ‘மந்தி’ ஆகிவிடக்கூடும். இன்னும் விரிப்பின் பெருகும். இயன்றவரை நம் தாய்மொழியையே பயன்படுத்த வேண்டும். ஒரு மொழியில் பிற மொழிச்சொற்கள் கலப்பது இயற்கையாக இருக்க வேண்டும். வரலாற்று அடிப்படையில் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கலப்பதும் கலந்ததற்கு ஏற்பளிப்பதும் மக்களே தவிர, எழுத்தாளர்களோ பல்கலைக்கழகத் துறைகளோ அல்ல. அதே நேரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக அனைத்தையும் எழுத்துவடிவில் ஏற்பளிக்கவும் கூடாது. ‘பொருள் புரிகிறதல்லவா?’ என்பர் சிலர். ‘துவங்கியது’ என்றாலும் ‘தொடங்கியது’ என்றாலும் பொருள் புரிகிறது. நாம் எதனை எழுதலாம். இரண்டுமே மக்கள் வழக்குத்தானே!

‘சாரியை மேல் சாரியை’ போலிச்சுவை தரும். இராசன் ‘வெங்காயத்தையும்’ என்றும் எழுதுகிறார். ‘வெங்காயத்தினையும்’ என்றும் எழுதுகிறார். இரண்டும் ஒரே பக்கத்தில் (54) இடம்பெறுகின்றன. இது தவிர்க்கப்படல் வேண்டும்.  சாரியைச் சேர்ப்பதால் காரம் கூடுகிறதா என்ன?

‘பயிற்சியாகவோ அல்லது ஒரு முயற்சியாகவோ?’ (56) என்று எழுதுகிறார் இராசன். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர்களும் இப்படித்தான் எழுதுவார்கள். இப்படி எழுதுவதற்குத்தான் அவர்களுக்குப் பரிசு, இப்படி எழுதினால்தான் பரிசு. ‘ஓ’காரம் பிரிநிலைக்கண் வந்தால் அங்கே அல்லது வராது. அதாவது ‘அல்லது’ என்னும் சொல் உணர்த்தும் பொருளை ‘ஓகாரமே’ உணர்த்திவிடும். ‘பயிற்சியாகவோ முயற்சியாகவோ’ என்பதே சரி. 

‘வலி எங்கே மிகும்? ‘எங்கே மிகாது? என்றால் மருந்து போடாத இடத்தில் வலிமிகும். போட்ட இடத்தில் வலிமிகாது என்பது எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் வல்லினம் எங்கே மிகும்? எங்கே மிகாது என்று வினவினால் வழக்கம்போலத் தமிழாசிரியப் பெருமக்கள் ‘பார்த்துச் சொல்கிறேன்’ என்று பம்முவார்கள்.

மொழியறிவு தொடர்ந்த படிப்பினாலும் பயிற்சியினாலும் அமையும். தற்காலத்தில் அவை இல்லாத காரணத்தால் தமிழ் வட்டாரத்தில் உள்நாட்டுக் குழப்பம். பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. இதற்கு அடிப்படை எது என்றால்  பெயரெச்சம் எது என்பதைக் கண்டறியும் புலமை வேண்டும். அங்கேதான் சிக்கல்.

கொடுத்த (ப்) பாலை (49)

வடித்த (ப்) பாலை (37)

இவை போன்ற இடங்களில் வல்லினம் மிகாது. இலக்கணம் படிப்பினால் பெரும்பான்மையும் பயிற்சியினால் சிறுபான்மையும் அமையும். அந்தப் பையன் என்று எழுதலாம். அதற்காக வந்தப் பையன் என்று எழுதுவது பிழை. காரணம் ‘அந்த’ என்பது சுட்டுப்பெயர். ‘வந்த’ என்பது பெயரெச்சம். மனைவிக்கும் மதனிக்கும் வேறுபாடு அறியாவிட்டால் சிக்கல் எதில் போய் முடியும்? இந்தத் தவறும் பொதுமையான ஒன்று. இராசனுக்குத் தனியுரிமை கிடையாது.

‘வெண்கலச் சொம்பு நிறைய நன்னீர் கொடுத்தான், அவளது அன்புக் கணவர் பைரவன்.’ (20)

என்று ஒரு தொடர் அமைந்திருக்கிறது. கொடுத்தான் என்பது ஆண்பால். அதற்கேற்ப அந்தத் தொடர் இப்படி அமைந்திருக்க வேண்டும்.

கணவர் கொடுத்தார்

கணவன் கொடுத்தான்.

மதனகோபாலிடன் பொன்னுக்கும் புதனுக்கும் விளக்கம் கூறுவது எந்த வகையில் பயன்தரும்? ‘பழமொழி’ வந்து பல்லாயிரம் ஆண்டுகள். ‘பைனாகுலர்’ வந்து பத்து ஆண்டுகள். படைப்பாளர் எந்த நேரத்திலும் அரசியல்வாதியாகித் தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாவதைத் தடுக்க நினைக்கக் கூடாது.

படைப்பாளருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அருள்கூர்ந்து பழைய செய்திகளுக்குப் புதிய விளக்கம் தருவதைத் தவிர்த்துவிடுங்கள். கதிரவனுக்கு ஏழுகுதிரை பூட்டிய தேர் என்றால் அது VIBJYOR  என்னும் நிறங்களைக் குறிக்கும் என்பதும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்குக் கிரக விளக்கம் சொல்வதும், ‘குளிகையில் நற்காரியம் செய்யக்கூடாது’ என்பதற்கான புராண விளக்கம் தருவதும், ‘வலவன் ஏவா வானவூர்தி’ என்பதால் ஆளில்லா விமானத்தைத் தமிழன் அன்றே கண்டறிந்துவிட்டான் என்று நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதும் இனியும் வேண்டாம். ‘துப்பார்க்கு’ எனத் தொடங்கும் குறளை வைத்துத் தமிழன் கையில் அன்றைக்கே ‘துப்பாக்கி’ இருந்தது என்றால் என்ன ஆகும்? பட்டதெல்லாம் போதும்! படமுடியாது இனித் துயரம்! “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் ஓர் மகிமை இல்லை”

விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சும்

கதையின் நாயகன் பைரவன், வேளாண்மைத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பூவரசி தமிழாசிரியர், மாணிக்க விநாயகம், குமரன், மதனகோபால், மனோகரி, கல்யாணசுந்தரம், கனிமொழி, மணமகன், அனந்தராமன், பால்காரன் என விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய பாத்திரங்களைச் சுற்றிய ஒருநாள் இல்லற நடப்பை, நடப்பியல் சார்ந்து, கலைநயம் குறையாமல் எளிய தமிழால் எழிலோவியமாய் ஆக்கியிருக்கிறார். ‘அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீரைப்போலத் தமிழக மக்களின் வாழ்வாதாரமும் அதல பாதாளத்திற்குப் போய் விடுமோ?’ (15) என்னும் இராசனின் ஏக்கத்தில் சமுதாயப் பார்வையும் இருக்கிறது. இப்படித்தான் உவமம் சொல்ல வேண்டும் என்று தமிழாசிரியர்களுக்குப் பாடம் எடுப்பது போன்றும் உள்ளது.

“பூகோளம் இதுவரைக் கண்டிராத ஒரு புதுக்கோலம் எடுப்பாய் இருந்தது.” (17)

என்று ஒரு தொடர் கண்டேன். எனக்கு T..ராஜேந்தரின் ‘பூத்தால் மலரும் உதிரும்., நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை!’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. ‘விதைத்தேன்….இழுத்தேன்…வளைத்தேன் இணைத்தேன்…..முடித்தேன்’ (18) என்னும் வரிகள் எனக்குக் கண்ணதாசனையும் அவருக்கும் வழிகாட்டிய இராமச்சந்திரக் கவிராயரையும் நினைவூட்டியது.

கல்லைத்தான் மண்ணைத்தான்

காய்ச்சித்தான் குடிக்கத்தான்

கற்பித் தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான்

எனக்குத்தான் கொடுத்துத்தான்

இரட்சித் தானா?

அல்லைத்தான் சொல்லித்தான்

ஆரைத்தான் நோவத்தான்

ஐயோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான்

பதுமத்தான் புவியில் தான்

பண்ணி னானே.”’

என்பது கவிராயர் பாடல். இதனை ஒரு பொட்டலத்தாளில் கண்டு வியந்து போன கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘அத்தான் என் அத்தான்’ என்ற பாடலாகும். அதனைத் தொடர்ந்து ‘பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத் துடித்தேன்’ அவர் எழுதிய பாடலின் சரணத்தில்,

“மலர்த்தேன் போல்நானும் மலர்ந்தேன்!  உனக்கென

வளர்ந்தேன்! பருவத்தில் மணந்தேன்!

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்

இல்லாதபடி கதை முடித்தேன்!””

எனத் தமிழோடு கொஞ்சியிருப்பதைக் காணலாம். ‘அவன் நடந்து போகும் அழகைப் பார்த்துத்தான் யானைகள் நடைபழகியிருக்கும்’ (22) என்று இராசனின் சித்திரிப்பு,

‘மாதவள் தானும் ஆண்டு வந்துநீர் உண்டு மீளும்

போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் பூத்தாள் (2736) என்னும் கம்பனின் வரிகளோடு இணைத்துப் பார்க்க வைத்தது.

ஒரு படைப்பின் எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டும். ‘மனைவி அடுப்படியில், கணவன் குளியல் அறையில்’ என்னும் முறையை மாற்றிய பைரவன் அடுப்படியில், பூவரசி குளியல் அறையில் என்றால் அந்நேரம் என்ன ஆகியிருக்கும் என்பதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார். ஆசிரியர் கல்வியை இரண்டாம் நிலையிலும் பண்புகளை முதலிடத்திலும் வைத்து மக்களைப் பேணும் குடும்பமாகச் சித்திரித்துக் காட்டியிருப்பதன் வழி, தனது சமுதாய அக்கறையைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் இராசன்.

நிறைவுரை

மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக வளர்ந்து வரும் ஆலமரமெனப் படைப்பிலக்கிய உலகில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் தண்ணீர்ப்பள்ளி தமிழ்ப்பற்றாளன் இராசன் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறார். ‘ஒருநாள் மனைவி’ என்னும் கட்டுரைப் பொருளைக் கதையாக்கித் தந்திருப்பதில் அவர் அடைந்திருக்கின்ற வெற்றி பெரிதும் போற்றுதற்கு உரியதாகும். சிறுகதையை நாவலாக்க முனைந்து இடர்ப்பட்டு முக்கி முடியாமல் இறுதியில் குறுநாவலாக முடிந்து போன குறைப்பிரசவங்களெல்லாம் தமிழ்ப் படைப்புலகத்தில் வெகு இயல்பு. தமிழ்க்காவலர் இராசன் ஒரு சாதாரண கட்டுரைக்கான உள்ளடக்கத்தைச் சிறுகதையாகச் செதுக்கியிருப்பதில் சிறப்புத் தகுதியினைப் பெறுகிறார். இராசன் என் நண்பரென்பதனால் இலக்கியத் திறனாய்வில் எத்தகைய சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதை இதனை ஒருமுறை படிப்பாரும் உணரக் கூடும். இராசனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

பின்குறிப்பு

படைத்தவனைப் பற்றிப் படித்தவன்

செயப்படுபொருள் பற்றிய பார்வை மேலே. செய்தவன் பற்றிய பதிவு இது. மொழிப்பணிகளில் தமிழ்த்துறையாளர் செய்தவையும் அல்லாதார் செய்தவையும் சீர்தூக்கின் துலாக்கோலின் முள் எப்பக்கமும் அசையாது. அல்லாதார் நிரலில் சொல்லாடி வந்திருப்பவர் தண்ணீர்ப்பள்ளித் தமிழ்ப்பற்றாளர் திரு. ம.இராசன். கரூர் மாவட்டத்தில் இருந்தாலும் திருச்சிக்கு அருகில் உள்ள பெட்டவாய்த்தலைக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட தண்ணீர்ப்பள்ளி கிராமம் காவல்துறைக்கும் தமிழ்த்துறைக்கும் தந்திருக்கும் கொடை இவர். குடும்பத்திலும் உறவுகளிலும் பெரும்பாலோர் காவல் துறையிலேயே கடமையைச் செய்ய,  அந்தக் கடமை செய்த களைப்புப் போகக் கவிதை எழுதியவர் இவர். ‘அண்ணன்மார் வரலாறு’ அறியாதார் இலர். அதில் வரும் தெய்வங்களாகிய மகாமுனி – பெரியக்காள் என்பவையே இவர்தம் பெற்றோர்களின் திருநாமங்கள். பண்டைய இந்திய வரலாற்றையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் சென்னை மாநிலக் கல்லூரியில் பாடமாகப் பயின்று முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கல்லூரித் தொடக்கப் பருவத்தில் இவர் பணியாற்றியது வாத்துமுட்டைக் கடையில். 29 ஆண்டுக்காலக் காவல் துறைப் பணியில் 15 ஆண்டுகள் மத்திய குற்றப் பிரிவில் (CBCID) துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். இவர் காதலித்தது காவல் துறை. ஆனால் இவரைக் காதலித்து வந்தது தமிழ்த் துறை. ‘அவர்’, ‘இலக்கியா’, ‘வேரில் விழுந்த இடி’ என்பன இவர் அண்மையில் படைத்த மற்ற கதைப் படைப்புகள். காக்கிச் சட்டைக்குள் இருந்த கவிதை ‘நூல்களை’ அடையாளம் கண்ட பெருமை எனக்குண்டு என்றாலும் கதைகளில் சமுதாயப் பதிவுகளைச் செய்வதிலேயே இராசன் நாட்டம் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளாக மனச்சுரங்கத்துள் இருந்த நிலக்கரி, வைரம் பாய்ந்த நிலையில் இன்று படைப்புகளாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வெளிவந்திருக்கும் இந்த ‘ஒருநாள் மனைவி’ ஒரு வைரமே என்பதைக் கற்பார் உணரக் கூடும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *