செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(326)

அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவிவியான்
கேடும் நினைக்கப் படும்.

-திருக்குறள்  – 169 (அழுக்காறாமை)

புதுக் கவிதையில்...

பொறாமை நிறைந்த நெஞ்சம்
கொண்டவனிடம்
பெருஞ் செல்வமும்,
பொறாமை குணமற்ற
நல்லவனிடம்
வறுமையும்
வருவது அரிது..

அவ்வாறு வந்தால்,
அது
எவ்வாறு நேர்ந்ததென்று
காரணம் ஆராயப்படும்…!

குறும்பாவில்...

அழுக்காறுடையோனிடம் அதிக செல்வமும்,
அதில்லா நல்லவனிடம் வாட்டும் வறுமையுமிருந்தால்
அதன் காரணம் ஆராய்ந்தறியத்தக்தாகும்…!

மரபுக் கவிதையில்...

அடுத்தவர் மீதே அழுக்காறை
அகத்தே கொண்ட மனிதனிடம்
எடுத்திட அளவிலா செல்வமது
எப்படி வந்து சேர்ந்ததென்றும்,
கெடுக்கும் பொறாமை நினைவில்லாக்
கேடிலா நல்லான் நலிந்திடவே
அடுத்திடும் வறுமையின் காரணமும்
ஆராய்ந் தறிந்திட வேண்டுமன்றோ…!

லிமரைக்கூ..

பொறாமையுடையோனின் செல்வ இருப்பு,
அதில்லா நல்லவனுக்கு வந்திடும் வறுமைக்கும்
காரணமறிதல் அனைவரின் விருப்பு…!

கிராமிய பாணியில்...

வேண்டாம் வேண்டாம்
பொறாமக் கொணம் வேண்டாம்,
குடியக் கெடுக்கும்
பொறாமக் கொணம் வேண்டாம்..

நெஞ்சில பொறாம கொண்டவங்கிட்ட
நெறஞ்ச செல்வம் சேருறதும்,
பொறாம கொணமில்லா நல்லவன்
வறுமயில வாடுறதும்
எப்பவும் நடக்கிறதில்ல..

அப்புடி நடந்தா
அதுக்கான காரணத்தக்
கட்டாயம் கண்டறியவேணும்..

அதால
வேண்டாம் வேண்டாம்
பொறாமக் கொணம் வேண்டாம்,
குடியக் கெடுக்கும்
பொறாமக் கொணம்
வேண்டவே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *