அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 284

  1. எல்லா விளக்கும்…

    இருளை அகற்றிட ஏற்றிடும் விளக்கு
    இருக்கும் இடமே ஒளியால் சிறப்பு,
    இருட்டு மனிதன் இதயத்தில் இருந்தால்
    இதனை ஓட்டிட உண்மையே விளக்கு..

    எத்தனை விளக்குகள் வகைகள் பலவாய்
    ஏற்றி வைத்தே அழகு பார்த்தாலும்
    குத்து விளக்கின் அழகைப் போலக்
    குடும்பப் பாங்காய் எதுவும் இலையே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. படக்கவிதைப் போட்டி 274

    இருமுக விளக்கு
    இல்லற விளக்கு
    இருள் அகல் விளக்கு
    இறை அருள் விளக்கு

    சொல்லக விளக்கு
    சுடரொளி விளக்கு
    பன்முக விளக்கு
    பாவை கை விளக்கு

    ஒளிச்சுடர் விளக்கு
    ஓங்கச் செய் விளக்கு
    ஒற்றுமை ஆக்கும் விளக்கு
    ஓங்கார விளக்கு

    கார்த்திகை விளக்கு
    காரிருள் விலக்கு
    வள்ளலார் விளக்கு
    வாழ்வு மலரச் செய் விளக்கு

    சுதா மாதவன்

  3. தீப ஒளி

    கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
    வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
    இருளெனும் மௌனம் விரட்டிட
    வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை

    மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
    வெளிச்சக் கீற்றெனும் தேவதை
    அறியாமை இருளை நீக்கி உண்மை
    ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை

    இருளை விலக்கி வாழ்வில் தினமும்
    வெளிச்சம் செதுக்கும் உளி
    காரிருள் நீக்கிப் பார்வையில்
    தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி

    தனிமை வெக்கைப் போக்கி
    துணையைக் காட்டும் இன்ப வளி
    இனிமைப் பொங்கி நம் இல்லம் சிறக்க
    ஒளிரட்டும் நல் தீப ஒளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *