Category: மரபுக் கவிதைகள்

  • மனிதனைத் தேடுகின்றேன் !

    கவிஞர் ஜவஹர்லால் 

     

    முகத்திலே தாம ரைப்பூ

    முறுவலைக் காட்டு கின்றான்;

    அகத்திலோ அறிய வொண்ணா

    ஆயிரங் கோணல்; இந்தச்

    செகத்தையே வெல்லு மாப்போல்

    சிரிப்பலை கொழிக்கும்; என்றும்

    அகத்திலும் மலர்ந்து நிற்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    பேச்சிலே இனிமை கொட்டும்;

    பின்னவன் இழைக்கும் நாசி

    மூச்செலாம் வஞ்சம் வெட்டும்;

    முனைப்பெலாம் கொடுமை பேசும்;

    பேச்சினைப் போலத் தூய்மை

    பொங்கிட நெஞ்சந் தன்னை

    ஓச்சிடும்  மனித  னான

    ஒருவனைத் தேடு கின்றேன்.

     

    மற்றவன் உயர்ந்தால் உள்ளம்

    மகிழ்பவன் இருக்கின் றானா ?

    மற்றவன் வழுக்கி னால்கை

    வழங்குவோன் வாழ்கின் றானா ?

    மற்றவன் புகழில் சொந்த

    வயிறெரிந் திடாமல் வாழக்

    கற்றவன் தன்னைக் கண்ணாற்

    காணநான் தேடு கின்றேன்.

     

    நண்பனே என்ற ணைப்பான்;

    நறுக்கென இறுக்கு மந்த

    அன்பெனும் அணைப்புக் குள்ளே

    ஆயிரம் வஞ்சம் நந்தம்

    என்பினை நொறுக்கி மெல்ல

    இதயமும் துளைத்தெ டுக்கும்;

    அன்பினை அன்புக் காக்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    சிரிக்கிறான்; விரியு மந்தச்

    சிரிப்பிலே வஞ்சப் பாயை

    விரிக்கிறான்; நல்லோர் தம்மை

    வீழ்த்தியே மகிழு கின்றான்;

    விரித்திடும் நாட கத்தில்

    வஞ்சனே வெற்றி காண்பான்;

    சிரித்திடும் பண்பு கொஞ்சும்

    செல்வனைத் தேடு கின்றேன்.

    Share
  • நீயே சொல்லு!

    கவிஞர் ஜவஹர்லால்

     

     

    வாடாப்பா படைத்தவனே! உன்ப டைப்பின்

     வாழ்வுமுறை கண்டுமனம் மகிழ லாம்வா!

    போடாப்பா அத்திசையில் கொஞ்சம்; சற்றுப்

     பொறுத்துப்பார்! நடையோரம் கிழிந்து போன

    நாடாவைச் சிற்றாடை என்னச் சுற்றி

     நடைபயிலும் அரைவயிற்றைப் பார்த்தா யாநீ!

    தாடாப்பா உன்கரத்தை; தயங்கா தேநீ!

     தள்ளுகொஞ்சம் பள்ளத்தில் விழப்போ கின்றாய்!

     

    பள்ளத்தைத் தாண்டப்பா; இங்கே என்ன

     பள்ளமென்றா கேட்கின்றாய்? அடடா   இஃதைப்

    பள்ளமென்றா சொன்னோமிங் குறைவோர் கேட்பின்

     பதைத்துமனங் குமுறிடுவார்; குளிக்க உண்ண

    நல்லதென அன்னவர்கள் போற்று கின்ற

     நனிசுவைநீர் இதுதான்நீ அறிந்து கொள்வாய்;

    நில்லப்பா! ஏன்மூக்கைப் பிடித்தாய்? நாற்றம்

     நினக்கொத்து வரவிலையோ? மேலே போ!போ!

     

    ஈதென்ன திரைச்சீலை?’ என்கின் றாயா?

     இதுதானுன் படைப்புக்கள் பல்லோர் வாழும்

    தீதில்லாப் பேரில்லம்; வேண்டும் போது

     தெருத்தாண்டி இடந்தாண்டி அமைத்தற் கேற்பத்

    தோதான துணிவீடு; உள்ளே கொஞ்சம்

     துணிவோடு நுழையப்பா! தோலை என்பின்

    மீதாகப் போர்த்ததுபோல் இருப்ப வள்தான்

     வீட்டுக்குப் பேரரசி! பேருக் குத்தான்;

     

    அய்யய்யோ என்றகுரல் கேட்கு தாப்பா!

     அடடேநீ ஏனப்பா ஓடு கின்றாய்?

    மெய்யெல்லாம் புண்ணாக வெளுத்து கின்ற

    மேலோனும் அவன்கையில் மத்த ளம்போல்

    மெய்சோர அடிவாங்கும் பெண்ணும் உன்றன்

     மேன்மையினா லுயிர்பெற்ற பொருள்தா மப்பா!

    பொய்யில்லை எண்ணிப்பார்; இந்தக் கோலம்

     போற்றிவளர்த் திடவாநீ படைத்தாய்? சொல்லு!

     

    தெருமுனையின் சிறுவீட்டைப் பாராய்; அங்கே

     சிரிக்கின்ற தாரென்றா வினவு கின்றாய்?

    வருவண்டை இதழ்வீசி அழைத்துக் கண்ணின்

     வலைதன்னிற் பிணைத்திட்டு மேனி காட்டித்

    தருபொருளைக் கொண்டுதினம் வாழு மந்தத்

     தண்மலரும் உன்படைப்பே; அவள்தான் அந்தோ

    வருகின்றா ளுனைநோக்கி; விரைந்து வா!வா!

     வலைதன்னி லுனையுமவள் வீழ்த்தப் பார்ப்பாள்.

     

    அதற்குள்ளா சலிக்கின்றாய்? அறத்தால் வாழும்

     அருமைமிகும் உன்படைப்பைக் காண வா!வா!

    புதர்க்குள்ளே பதுங்குகின்ற முயலைப் போலப்

     பூமியிலே வாழ்கின்ற நல்லோ ரைப்பார்!

    இதற்கில்லை அதற்கில்லை எதற்கு மில்லை;

     என்றங்கே இல்லையெனும் பாட்டே கேட்கும்;

    எதற்கிந்த நிலையென்றா எனைக்கேட் கின்றாய்?

     என்னப்பா படைத்தவனே! நீயே சொல்லு!

    Share
  • ஸ்ரீராமன்

                      மீ.விசுவநாதன்

     

    sri-rama-pattabhishekam

     

     

     

     

     

     

     

     

     

     

     

    அவரைப்போல் ஒவ்வொரு நாழியும் – நான்

    ஆக நினைக்கிறன் அன்போடு

    சுவரைப்போல் ஆணவம் நின்றெனை – தினம்

    சுற்றி அடிக்குது வம்போடு !

     

    நினைவெல்லாம் உத்தமப் பாதையை – நான்

    நேரே கடந்திட விழைகின்றேன்

    பனையளவாய்ப்  பந்தமும் பாசமும் – உடன்

    பற்றி இழுத்திடத் தவிக்கின்றேன் !

     

    அரண்மனையின் வாழ்விலும் தாழ்விலும் -அவன்

    அமைதி அடைந்ததை அறிகின்றேன்

    முரண்பலவாய்க் கொண்டுள என்னுளே – ராம

    மூல ஒலியினை உணர்கின்றேன் !

     

    தர்மமான  வாழ்வினைப் போற்றிட – இறை

    தானே ராமனைக் காட்டியது

    நிர்மலமாய் உள்ளமும் நின்றிட – ராம

    நீதி காப்பதே முக்தியது !

        (இன்று 04.04.2017 ஸ்ரீ ராமநவமி)

    Share
  • கூத்து

    கவிஞர் ஜவஹர்லால்

     

    காலமெனும் மேடையிலே

    கோலமிட்டு வேடமிட்டுக்

    காட்டுகிறோம் நாம்பலவாய் வித்தை-ஆய்ந்து

    கூட்டிடிலோ அத்துணையும் சொத்தை

     

    காதலென்றும் மோகமென்றும்

    காதலின்றேல் சாதலென்றும்

    கதறுகிறார் இளைஞரெல்லாம் இங்கே-அந்தக்

    காதலெல்லாம் ஓய்ந்தபின்னர் எங்கே?

     

    மாடுமனை வீடுமக்கள்

    கூடுகின்ற மக்களெலாம்

    மாட்சியுள்ள போதிருப்பார் கூடி-நாம்

    வீழ்ச்சியுற்றால் பறந்திடுவார் ஓடி

     

    செத்தபிணம் தனைச்சுற்றிக்

    கத்தைகத்தை யாய்மாலை

    சாத்துகிறார் போர்த்துகிறார் ஆடை-நாளும்

    சாம்பிணத்துக் கேதுமில்லை ஆடை

     

    வறுமையென்றும் ஒழிப்பென்றும்

    வகைவகையாய்க் கொள்கைகளை

    வகுத்துரைத்து வாக்குவாங்கிச் செல்வார்-அவர்

    வென்றபின்னே ஏழைபக்கம் நில்லார்

     

    யாரிடத்தில் யார்தஞ்சம்

    யாரொடுயார் கூட்டணியாம்

    நாட்டிலொரு பெருங்கூத்தே நடக்கும்-என்று

    நாட்டுமக்கள் அக்கூத்தை முடிக்கும்?

    Share
  • வேறெதும் வேண்டுமோ ?

    கவிஞர் ஜவஹர்லால்

     

    புள்ளினம் வானில் பறக்குதே ! – வானப்

    பரப்பினில் வெளிச்சமும் பாயுதே !

    நல்லதோர் காலைப் பொழுதென – இங்கு

    நவின்றிட வேறெதும் வேண்டுமோ ?

     

    கீச்செனக் குருவிகள் பாயுதே ! – அந்தக்

    கீழ்வானம் ஒளியினில் தோயுதே !

    ஆச்சிதோ காலைப் பொழுதென – இங்கே

    அறைந்திட வேறெதும் வேண்டுமோ ?

     

    உச்சியில் வெய்யில் எறிக்குதே ! – கால்கள்

    ஓரிடம் நிற்க மறுக்குதே !

    மெச்சியே நண்பகல் இதுவென – இங்கு

    முழங்கிட வேறெதும் வேண்டுமோ ?

     

    வேர்வையில் உடலெலாம் குளிக்குதே ! –மூச்சு

    மேலுறக் கீழுற வாங்குதே !

    சீறிடும் உச்சிப் பொழுதென – இங்குச்

    செப்பிட வேறெதும் வேண்டுமோ ?

     

    மாடுகள் வீடு திரும்புதே ! – வீட்டு

    மல்லிகை முல்லை மலருதே !

    தேடியே மாலைப் பொழுதென – இங்குச்

    சொல்லிட வேறெதும் வேண்டுமோ ?

     

    கதிரொளி மேற்கினில் வீழுதே ! – இருள்

    கட்டியங் கூறி வருகுதே !

    மதிவரும் மாலைப் பொழுதென – வாய்

    மலர்ந்திட வேறெதும் வேண்டுமோ ?

    Share
  • அழகென்னும் தெய்வம்

     

     

     

    கவிஞர் ஜவஹர்லால்

    fall image

     

     

     

     

     

     

     

     

    பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

    புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

    காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

    கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

    சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

    திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

    ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

    அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

     

    காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

    கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

    சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

    சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

    காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

    கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

    மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

    மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

     

    மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

    மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

    மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

    மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

    மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

    மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

    மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

    மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

     

    தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

    திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

    தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

    செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

    தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

    தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

    தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

    தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

    சி.ஜெயபாரதன்

    image (2)

     

     

     

     

     

     

     

     

     

     

     

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

     

    [37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில்

    குயவன் கரங்கள் ஈரக்  களிமண் பிசையும்.

    எதற்கும் அடங்கா  நாக்கு முணுமுணுத்து,

    மெதுவாய் தம்பி ! மெதுவாய் எனக்கெஞ்சும்.

     

    [37]

    For in the Market-place, one Dusk of Day,

    I watch’d the Potter thumping his wet Clay:

    And with its all obliterated Tongue

    It murmur’d – ‘Gently, Brother, gently, pray! ‘

     

    [38] பண்டை முதல் அதுபோல் கதையாய்

    அடுத்தடுத்த மானிட வம்சா வழியே மீண்டு,

    அந்த மண்கட்டி பூமியை நிரப்பிய வண்ணம்

    படைப்பாளி மானிடமாய் வடிக்க விலையா ?

     

    [38]

    And has not such a Story from of Old

    Down Man’s successive generations roll’d

    Of such a clod of saturated Earth

    Cast by the Maker into Human mould?

     

    [39] கிண்ணம் நிரப்பு; அது மீள எது தூண்டும்

    காலம் எப்படிக் கடக்குது நம் கண்முன்னால்

    நாளை பிறந்திலது, நேற்று கடந்துளது

    ஏன் கவலை அவற்றால் இன்றினிக்கும் போது

     

    [39]

    Ah, fill the Cup: – what boots it to repeat

    How Time is slipping underneath our Feet:

    Unborn To-morrow, and dead Yesterday,

    Why fret about them if To-day be sweet!

     

    Share
  • ஒருஆயுள் கைதியின் கோரிக்கை

     

    மீ.விசுவநாதன்

    தேவைக்கு மேலொரு காசினைத்
    தேடினால் நான்குற்ற வாளிதானே!
    நாவைத்தான் கட்டிடா நானுமோர்
    நாட்டிலே பொய்கூறும் பிள்ளைதானே !
    சேவைக்கு நெஞ்சிலே கொஞ்சமும்
    சிந்தனை செய்யாத கள்ளனானேன் !
    சாவைத்தான் எண்ணிடா மானுடச்
    சாத்திரம் கூறுமொரு வேடனானேன் !

    மாடாக நித்தமும் வேலைசெய்
    மாந்தரின் கூலியிலே சூடுவைதேன் !
    கோடானு கோடியாய்ச் சூதினைக்
    கொட்டியே நல்லோரை நோகடித்தேன் !
    கூடாத நட்பினால் கூடியே
    கொஞ்சமா கொண்டாட்ட(ம்) ஆடிருப்பேன்?
    தேடாத ஈசனைத் தேடுறேன்
    தீவினை தீர்த்தெனையும் காத்திடாயோ !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு:
    காய், கூவிளம், கூவிளம், கூவிளம்,காய்,காய்)

    (14.12.2016 10.08 am)

    Share
  • ஆனை முகன்

     மீ.விசுவநாதன் 

    ga0078
    மஞ்சள் பிடித்து வைத்து
    மனத்தோடு புல்லைப் போட்டு
    கொஞ்சம் அமைதி யோடு
    குணவானே பிள்ளை யாரே
    தஞ்சம் அடைந்தே னுன்னை
    தவறிலாத பொழுதைத் தந்து
    நெஞ்சி லிருப்பாய் என்றால்
    நினைவெல்லாம் நிறைந்தி ருப்பான் !

    வேலை துவங்கி னாலும்
    வேதாந்தம் கற்கும் போதும்
    மேலை நாட்டிற் காக
    விமானத்தில் செல்லும் போதும்
    சேலை துவைக்கும் போதும்
    சிறுபொழுதைச் செலவு செய்து
    பாலை நிகர்த்த “பிள்ளை
    யார்”பாதம் பணிந்தி ருப்போம் !

    ஞானம் பரந்த நெற்றி!
    நம்பிக்கை ஊரும் கண்கள் !
    வானம் பரந்தி ருக்கும்
    வரையிலாத பக்தி தந்தம்!
    பானை வயிற்றுக் குள்ளே
    பசிநீக்கும் வள்ள ளாக
    ஆனை முகனை எண்ணி
    ஆனந்தம் பெற்று வாழ்வோம் !

    ( 05.09.2016 04.07 am

    Share
  • மாக்கருணைக் கொடையன்றோ !

              எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார்

    நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய்

    புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும்

    புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் !

     

    வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள்

    உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி

    கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து

    நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் !

     

    நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே

    நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே மிளிர்ந்துநிற்கும்

    நோயகல வீனைதீர நூறுமுறை அடியழித்துக்

    காதலுடன் நல்லூரான் காலடியைப் போற்றிநிற்பார் !

     

    முத்தமிழைத் தந்தகந்தன் அத்தமிழைக் கேட்பதற்காய்

    எத்திக்கும் எதிரொலிக்கும் எழில்கொஞ்சும் எங்கள்தமிழ்

    தமிழ்கேட்ட அனைவருமே தமைமறந்தே இருப்பார்கள்

    இவையாவும் நல்லூரான் இருப்பிடத்தின் பெருமையன்றோ !

     

    துறைதோய்ந்த நல்லறிஞர் துணிவுநிறை இளையோர்கள்

    அவையேறித் தமிழ்சாற்றி அனைவருக்கும் விருந்தளிப்பார்

    மறையுடனே திருமுறையும் மனம்சிறக்கச் செய்துநிற்கும்

    மங்கலங்கள் நல்லூரான் மாக்கருணைக் கொடையன்றோ !

     

    நல்லூரை நினைத்துவிடின் நம்மனத்தில் மாற்றம்வரும்

    எல்லாமே எங்களுக்கு இறையெனவே எண்ணவரும்

    நல்லசித்தர் பரம்பரையே நல்லூரில் உருவாச்சே

    நாமுமங்கு சென்றுவிடின் நாளுமே நன்மைவரும் !

     

     

    Share
  • “கொஞ்சம் யோசி”

    மீ. விசுவநாதன்

     

    பெற்ற உதவியை மறப்பதும்
    உற்ற துணைதனை இழப்பதும் – மனமே
    கற்ற வழியெது எண்ணுவாய் – தீ
    தற்ற மொழியிலே சொல்லுவாய் !

    நித்தம் கவலையில் திளைப்பதும்
    சுத்த நினைவினை இழப்பதும் – மனமே
    சித்தம் அறிந்துடன் காட்டுவாய் – உன்
    குத்தம் குறைகளைக் கொட்டுவாய் !

    உருவில் அழகினைக் கருதியும்
    அருகில் பணத்தது புழுதியும் – மனமே
    உருகி உருகியே கொஞ்சுவாய் – உயிர்
    திருகித் தவிகையில் அஞ்சுவாய் !

    நீரில் மிதக்கிற எண்ணையாய்
    நாரில் விடுபடும் மலர்களாய் – மனமே
    நூறில் ஒருவராம் என்றிட – நீ
    சேறில் கமலமாய்த் தோன்றுவாய் !

    (அரையடி வாய்பாடு: மா, விளம், விளம்)
    (05.08.2016 07.39 am)

    Share
  • உமையாள் திருப்புகழ் -7

    விவேக்பாரதி 

    தான தந்தன தானா தனாதன 
    …தான தந்தன தானா தனாதன 
    …..தான தந்தன தானா தனாதன – தனதானா ! 

    சீறு மங்கர வோடே சடாமுடி 
    …சீத ளம்பயி லாதே  நிலாவொடு 
    …….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !

    தீது மெங்கிலு மூடே யெழாதற
    …தீரு மந்நிலை மாதே அழாதிர
    …….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !  

    ஏறு மங்கரி காடே புகாதரு 
    …ளேகி யெம்மன நாடே சடாரென 
    ……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும் 

    ஏம மென்றுமெ சாகா துராவிட 
    …ஏடி சங்கரி மாயே அடாசிடு 
    ……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி 

    நீற ணிந்திடு வோமே கனாவிடை 
    …நீளு மெம்மட நாவே கெடாமொழி 
    …….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே 

    நீச மென்றிடு நோயே படாதுயர் 
    …நீல கண்டனைப் போலே யுலாவிட 
    ……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே ! 

    ஊற றுந்திட ஊழே தொடாதுற 
    …ஊரெ ழுந்திட நீயே வொரேகதி 
    …….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே 

    ஊசி தன்னிடை நீயே நியாயமு 
    …மூரி லிங்ஙண மேவீ விழாவுற 
    ……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !

    Share
  • உமையாள் திருப்புகழ் – 6

    விவேக்பாரதி

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் 
       தந்ததன தந்தனம் – தந்ததானா ! 

    முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் 
    …முந்திவர வென்றதும் – தன்றனோடு 

    முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் 
    …முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !

    துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! 
    …துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் 

    துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் 
    …துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !

    கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் 
    …கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் 

    கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங் 
    …கண்டவிட மன்னனின் – சம்புமாரி !

    சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் ! 
    …சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச் 

    சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ் 
    …சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி ! 

    Share
  • நாராய் அழு


    விவேக்பாரதி 

     

    நேரிசை ஆசிரியப்பா 

     

    கதிரவ னுதியாக் கருநிறக் காலை
    சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின்
    பால்நிற மன்ன படுவழ கோடே
    கால்நிற முள்ளக் கருநிற நாராய் !
    பெறுமல கதிலே பேருரு கொண்ட
    உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் !
    உனதருங் கூட்ட மோய்விட மெல்லா
    மெனதருந் தலைவ ! னேவு கணையன் !
    விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் !
    கண்ணினி லதனைக் காட்டா மனிதன் !
    அப்துல் கலாமெனு மதிசயக் கார !
    னொப்பிலா தலைவன் ! ஒழுகிய பண்பன் !
    தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
    யுலகினைக் கண்ட உத்தம வில்லன் !
    வீணையும் மீட்டும் வித்தகக் காரன் !
    ஆணைக ளன்பாய் அவழ்த்திடும் மன்னன் !
    அழகிற குன்போ லக்கினிச் சிறகைத்
    தொழுதிட விரித்த தொல்லறி வாளன் !
    தென்றிசை தோன்றி எண்திசை யெங்குந்
    தன்பெய ரொலிக்கத் தமிழ்சொலுந் தீரன் !
    நாடிதை யாண்ட நாயக ! னென்கோ !
    ஆடிடா குணத்த ! னழிவினுக் கழிவை !
    ஆண்டவ னென்னு மாணவக் காரன்,
    ஆண்டவ னுயிரை அருகி லிழுத்துச்
    சுயநலச் செய்கை சுயவுரு காட்டிக்
    கயவனைப் போலே கடமையைச் செய்திங்
    கின்றோ டோராண் டாச்சென
    நின்றல றிடுவாய் நீயழு வாயே !

     

    Share
  • உமையாள் திருப்புகழ் 5

     

    விவேக்பாரதி

     

    தனனதந்த தத்தத்த தந்த

    …தனனதந்த தத்தத்த தந்த

    ……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !

     

    மணமறிந்த தெத்திக்கு மந்த

    …மதுவருந்த தித்தித்த வண்டு

    ……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு

     

    மரமுவந்து கொட்டிக்க னிந்த

    …மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்

    ……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு

     

    கணமுமிங்கு சுற்றிக்கி டந்த

    …கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்

    ……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு

     

    கடவுளென்னு மொப்பற்ற வொன்று

    …கவலைதுன்ப மெத்திக்க ளைந்து

    ……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு

     

    பணியொடந்த கட்டிச்ச தங்கை

    …பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து

    ……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்

     

    பருவமங்கை சக்திக்க தம்ப

    …பதமறிந்து துக்கத்தெ ழுந்து

    ……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை

     

    அணிதிரண்டு சுற்றிக்கி டந்து

    …அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து

    ……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !

     

    அயிலையந்த யிக்கட்ட ழிந்து

    ….மமரரங்கு சுற்றத்தை வெல்ல

    ……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !

     

     

    Share