தைபூச நாயகன், கைபேசும் வேலோடு,
மைபூசும் வள்ளி மணவாளன், -வைகாசி
நன்நாள் விசாகத்தில் நீலமயில் ஏறியுலா,
தென்பழனி விஞ்ச்சில் தவழ்ந்து ….கிரேசி மோகன்….
தைபூச நாயகன், கைபேசும் வேலோடு,
மைபூசும் வள்ளி மணவாளன், -வைகாசி
நன்நாள் விசாகத்தில் நீலமயில் ஏறியுலா,
தென்பழனி விஞ்ச்சில் தவழ்ந்து ….கிரேசி மோகன்….
எம்.ரிஷான் ஷெரீப்
தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது.
பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்?
அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.
சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன.
அவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘In Our Translated World’ என ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’ வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய ‘விகடன்’ பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக’ தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.
கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.
உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !
– எம்.ரிஷான் ஷெரீப்
நாகேஸ்வரி அண்ணாமலை
சென்ற வாரம் நியுயார்க டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ‘குழந்தைகள் இல்லாத வாழ்க்கை’ (அமெரிக்காவில் இப்போது cancer-free, fat-free என்று சொல்வதுபோல் child-free என்ற ஒரு வார்த்தையையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள்.) என்ற ஒரு கட்டுரையைப் படித்தபோது இந்தியாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் அதுவும் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதும் ஞாபகத்திற்கு வந்தன. தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்று அறிந்து இரு தரப்புப் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பெண்ணின் மேல்தான் பழி விழும். மருத்துவ ரீதியாகப் பெண்ணிற்குத்தான் நிவாரணம் தேடுவார்கள். இருவரையும் சோதித்துப் பார்ப்பதெல்லம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறதோ என்னவோ சில தசாப்தங்களுக்கு முன்னால் கண்டிப்பாக இல்லை.
எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் தன் மூத்த மருமகள் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருந்தபோது அவரைப் பலவாறாகத் துன்புறுத்திவிட்டார். கடைசிவரை அந்த மருமகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இன்னொரு விஷயம். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மருமகள்களையும் அந்த மாமியார் படுத்திய பாட்டைச் சொல்லி மாளாது. திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்குளேயே அந்த டாக்டரைப் பார், இந்த டாக்டரைப் பார் என்று மருமகள்களை விரட்டிக்கொண்டிருப்பார். நல்ல வேளை மற்ற நான்கு மருமகள்களும் ஓரளவிற்கு சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொண்டார்கள். குழந்தைகள் இல்லாவிட்டால் உடனேயே மருமகளைத்தான் – அதுவும் மாமியார்கள் – குறைசொல்வார்கள். மருமகளிடம் குறை கண்டே ஆக வேண்டும் என்று அலையும் மாமியார்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத மருமகளைக் குறை கூறித் தீர்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அது அமைந்துவிடுகிறது. வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரிதான்.
கருத்தரித்த ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ளப் பயப்பட்டதைப் பார்த்து என் பாட்டி, ‘இதில் பயப்பட என்ன இருக்கிறது? உலகம் தோன்றியதிலிருந்து பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறிவிட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இன்னொன்றையும் கூறினார். ‘ரயிலிலோ பேருந்திலோ நாம் பயணம் செய்யும்போது நம் பக்கத்தில் இருப்பவர்கள் நம்மோடு உரையாடினால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்பார்களேயொழிய எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க மாட்டார்கள்’ என்றார். சில தலைமுறைகளுக்கு முன்னால் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். அப்போது பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிழைப்பதில்லை. அதனாலும் நிறையப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் கருத்தடைச் சாதனங்களும் புழக்கத்தில் இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது. இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள் இந்தியாவில் இல்லை. (மனிதத் திமிங்கலங்கள் நிறைந்த இந்த உலகத்தில் என் குழந்தையை விட்டுச் செல்லவா என்று பயப்படும் தாய்மார்களும் இந்த உலகத்தில் இருக்கும் ஜனத்தொகை போதாதென்று இன்னொரு ஜீவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்து ஜனத்தொகையை இன்னும் அதிகரிக்கவா என்று எண்ணும் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.) எங்கள் நண்பர் ஒருவர்தான், அவர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நான் திருமணம் செய்துகொள்வது பற்றியோ குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியோ ஒரு போதும் நினைக்காத அளவிற்கு விவேகி’ என்று தன்னைத்தானே பெருமையாகப் பேசிக்கொண்டார். இவரை விட்டுவிடுவோம். இவர் ஒரு அதிநவீனவாதி (ultra modern)! எல்லா ஜீவராசிகளிடமும் (தாவரங்கள் உட்பட) தங்களுடைய மரபணுக்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருப்பதாகச் சொல்லலாம். இயற்கையை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதாக நினைப்பவர்கள்தான் இந்த உந்துதலைப் பொருட்படுத்தாமல் அல்லது புறக்கணிப்பவர்களாக இருப்பவர்கள். இயற்கையின் இந்த உந்துதலை இவர்களால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது என்பது எனக்குப் புரியாத விஷயம். இப்போது இம்மாதிரியான, இயற்கையைப் புறக்கணிக்கும் போக்கு அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.
அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அமெரிக்காவிலும் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்ற வாசகங்களை மருத்துவரின் மேஜையின் மீது காணலாம். அதே காலகட்டத்தில் பெண்ணியக் கருத்துகள் தோன்றிப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் அல்ல, அவர்களுக்கு இன்னும் நிறைய காரியங்களைச் சாதிக்கச் சுதந்திரம் வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. மேலும் பெண்கள் வேலைக்குப் போவதும் கூடியது. வேலைக்குப் போகும் பெண்களால் வேலையில் கவனம் செலுத்துவதும் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதும் கடினமாயிற்று. குழந்தைகளை வீட்டில் பராமரிப்பதற்கு இந்தியாவில் இருப்பது போல் பாட்டி, தாய், சித்தி, அத்தை என்று யாரும் இல்லை. குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாதிகளிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நிறையப் பணம் வேண்டும். பெண்கள் நிறையச் சம்பாதித்தால் மட்டுமே அது சாத்தியம்.
சமீபத்தில் வெளிவந்துள்ள “Selfish, Shallow and Self-Absorbed: Sixteen Writers on the Decision Not to Have Children” என்ற புத்தகத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பதினாறு பிரபலங்கள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. மிகப் பெரிய நடிகரான ஜார்ஜ் க்லூனியும் ஒப்ராவும் இதில் அடங்குவர். டையர் என்னும் ஒருவர் தான் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பத்து நிமிடங்களிலேயே அவருடைய ஆட்டம் தடைப்பட்டதாகவும் அதன் பிறகு அங்கு ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும் குழந்தைகளைவிட அவர் அதிகமாக வெறுப்பது அந்தக் குழந்தைகளைக் கொண்டாடும் பெற்றோர்களைத்தான் என்றும் கூறியிருக்கிறார். குழந்தைகள் பெற்றோர்களைப் படாதபாடு படுத்துவதாகவும் இவர் குறை கூறியிருக்கிறார்.
குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களிடையே நிறைய போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தாங்களும் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலர் குழந்தைகளுக்கு நிறையப் பொருள்கள் வாங்க வேண்டியிருப்பதால் இயற்கை வளங்களை நிறைய வீணடிக்க வேண்டியிருப்பதால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறுகிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் நிறைய வேலைகள் இருப்பதாகவும் தங்களுக்கென்று செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதும் சிலரது கவலை.
இப்படி சிலர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றாலும் சநாதனக் கத்தோலிக்கர்களும் யூதர்களும் இன்னும் நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.. சமீபத்தில் நியூயார்க்கில் எட்டுக் குழந்தைகளில் ஏழு குழந்தைகளை இழந்த குடும்பம் யூத ஐதீகத்தில் நம்பிக்கை வைத்திருந்த குடும்பம். கருத்தடைச் சாதனங்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருப்பதும் கருக்கலைப்பு செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருப்பதும் கத்தோலிக்கர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வற்கு காரணங்களாகக் கூறலாம். திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களும் அமெரிக்காவில் அதிகம். அந்தத் தாய்மார்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
குடும்பம் என்பது மாறிக்கொண்டுவருகிறது. கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடும்பம் வந்து இப்போது தனி நபரே குடும்பம் என்று மாறிக்கொண்டிருக்கிறது!
-கவியோகி வேதம்
ஒரு ‘குறுக்கிய’ மரத்தின்(‘போன்ஸாய்”-ன்) குலுங்கும் அழுகை
(நாட்டுப்பாடல்–கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)
வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா? – சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல மாத்தி மகிழ்வதா? – எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா? 
(*ஜப்பான் குள்ளன்)
அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா? – தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன் காதில் விழலையா? – அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?
ராமாயணம் ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா? – மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா? – என்ன
தெய்வக்’குத்தம்’ செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!
உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா? – சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ – முறுக்கறேடா!
உன்நாத்தக் குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ? – ஏன்!
ஓர்அருவியெ என்உருவில பார்த்து மகிழணுமோ?
அப்படியும் முயற்சிசெஞ்சு துளிரெவிட் டாலும் – மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ? – எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு ரொம்ப ஏக்கமோ?
‘சைக்கோசெல்’ திரவம்விட்டு மேலும் குறுக்கறே! – உன்
‘சைக்கோத்’தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப் பார்க்க ஆசைடா! – பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!
உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ? – ‘மர’
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ? – அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?
தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது! – நீ
செஞ்சவேலை யாலஒடம்பில் கோபம் பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா? – மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?
-முகம்மட் ஜரூஸ்
பத்துமாசம்தான்
கருவிடம்
தருவாளவள்
பத்தியங்களும் 
சுகமென்று
சுமப்பாளவள்…!
கருவிலே
கணுக்காலால்
நீ
இடித்தாலும்
கதறாது
சிரிப்பாளவள்…!
உன்னுருவம்
காணவே
உறக்கமிழப்பாள்
உறக்கத்திலும்
உன்னையே
நினைப்பாளவள்…!
இடுப்பு வலியைக்
கொடுத்துப்
பிறப்பாய் நீ
மூச்செடுக்கவே
உயிரையும்
கொடுப்பாளவள்…!
அகலவிழித்து
அகிலம்
பார்ப்பதற்கு
அலாதித்
துன்பங்களைச்
சகித்துக்
கொள்வாளவள்…!
அசதியும் மறையும்
அகிலமும்
தூங்கும்
அன்னையிவள்
ஆராரோ
தாலாட்டுக் கேட்க…!
இன்னும் ஒரு
ஜென்மம்
எடுத்தாலும்
இவளுக்கு
ஈடு
செய்யலாகுமா…?
எத்தனை சேவை
புரிந்தாலும்
இவள் அன்புக்கு
நிகராகுமா..?
இவளின்றிதான்
அந்த
அன்பும் நிறைவாகுமா…?
-ரோஷான் ஏ. ஜிப்ரி, இலங்கை
கண்கொத்திப் பாம்பின்
சாயல் ஒத்த
உன் பார்வைவிழ
என் கிளை பிரிகிறது!
தனித்த தண்டவாளமாய்
இழுபட்டுப் போயிற்று
வாழ்வின் இருப்பு!
கூட்டுப் பிரார்த்தனையின்
அதிஉச்ச நம்பிக்கையை
நீ வீசிய சிறுகல் சிதைத்திற்று!
இந்த வதைகளில்
எந்த ரசமும் இருப்பதற்கான
சாத்தியமும் இல்லை இனி…
அது வெறும் மெழுகுச் சிலையாய்
உருகி வடிந்து உறைகிறது
என்பதைத் தவிர!
தவத்தின் உச்சகட்டங்களைத் தாண்டி
மனம் விரும்பியதென்று மார்தட்டிப்
பசி மறந்து, துயில் துறந்து
பெருக்கிய முற்றம்
இன்றுன் ஆக்கிரமிப்பின்
அத்துமீறல்களுக்குள் அகப்பட்டுச்
சீர்குலைந்து சிதறிய வாசலாய்!
பொறிகலங்க வைக்கும் அறங்களைப்
புகட்டவும், போதிக்கவும்
சாத்தியமாகும் உன்னால் என்பதைச்
சாட்சி பகிர்ந்திற்று
சமகால நடவடிக்கைகள்!
வார்த்தைகளால் தீயிட்டுக் கொளுத்தவும்
வஞ்சித்தலால் கூந்தல்கட்டி விரட்டவும்
அறியுமாயிருந்த உனக்கு
இழப்பு, தவிப்பு எதையும் நீ
அறிந்துணர அவகாசம் எடுக்கவில்லை!
சுவைமிகு என் மனசின் துணுக்குகளைப்
படித்துப் பார்க்கத் தவறும் எல்லாக்காலத்திலும்
ரசம் வடியும் தேனீயாய்
இறுதிக்கணம்வரை
நான் சுற்றி அலைவேன்
நீ கலைத்துவிட்ட இவ்வெளியில்!
-ஆர். எஸ். கலா
பட்டாடை உடுத்திப் பவனிவர
ஆசை ஆனால் பணம் இல்லை…
பட்டுமெத்தை மேல் படுத்து உருண்டு
விளையாட ஆசை
ஆனால் பணம் இல்லை…
தினமும் அறுசுவை உணவு உண்ண
ஆசை ஆனால் பணம் இல்லை…
விதம் விதமாக நகை போட்டு
அழகு பார்க்க ஆசை
ஆனால் பணம் இல்லை…
வானூர்தியில் உலகம் சுற்றி வரஆசை
ஆனால் பணம் இல்லை…
மாடி வீட்டின் மேல் இருந்து வேடிக்கை
பார்க்க ஆசை
ஆனால் பணம் இல்லை….
சீரும் சிறப்புமாகத் திருமணம் நடக்க
வேண்டும் என்று ஆசை
ஆனால் பணம் இல்லை…
பல முதியோர் இலங்களுக்குச் சென்று
பல வழியில் உதவி செய்ய ஆசை
ஆனால் பணம் இல்லை…
இந்தப் பணத்துக்காகப் பல வேலை தேடிச்
செய்ய ஆசை
ஆனால் படிப்பு இல்லை…!
மனதில் உறுதி உள்ளது இதயத்தில்
ஆசை உள்ளது நிறைவேற வழி
இல்லை…
ஏழையாகப் பிறந்தேன் ஏழையாக
வளர்ந்தேன் ஏழையாக வாழ்கின்றேன்
ஆனால் பணத்துக்காக அழைக்கின்றேன்
அழைக்கின்றேன் அழைத்துக் கொண்டே
இருக்கின்றேன்!
-துஷ்யந்தி, இலங்கை
விழியென்னும் தடாகமதில்
மொழியெல்லாம் உயிர் பெற்றுச்
சிந்தனைச் செடிகளாய்
கவியிதழ் பூக்களாய்
தமிழ்க் கோத்த மாலையாய்
பிறந்திடும் அவன் பார்வையிலே!
தூய்மையின் நிறம் சொல்லும்
வெண் கடுதாசி ஏடுகளும்
அவன் பேனாவின் மைபடப்
பேரழகு பெற்றிடும் – இன்னும்
சில துளிக் கவிக்காய்
ஏங்கியே நின்றிடும் – அவன்
பாக்களின் சொல்லாலே!
மாயத்திரையை நுகர்ந்து
மனதிலே அழகிய கோலமிட்டு
யதார்த்த வரிகளாய் அமைத்து
ரசிக்கும்படியாய் அமைத்து
சொற்களோடு விளையாடும்
அவன் அழகிய எண்ணங்களே!
எளிமையாய் வாழ்ந்திடும்
அமைதியை நேசித்திடும்
உறவுகளை மதித்திடும்
உணர்வுகளை ரசித்திடும்
உள்ளங்களைப் படித்திடும் – அவன்
இயல்பான வாழ்க்கையே!
வீசும்தென்றல் கூட அவனிடம்
பேசிடும் மொழிகள்…
இருளின் சுவடுகள் அவனிடம்
காட்டிடும் கவிதைகள்…
அந்திவானமோ அவனிடம்
தூவிடும் சிந்தனைகள்…
கொட்டும் மழையோ அவனை
நனைத்திடும் தேன் தமிழாலே…
ஏனெனில்,
அவனோ இயற்கை அன்னை
தன் கைகளாலே செதுக்கிவிட்ட
குழந்தையே….!!!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
எத்தனைப் போராட்டம்
எத்தனை இன்னல்
எத்தனை சோகம் 
எத்தனைக் கனவு
எத்தனை வியாதி
எத்தனைச் சோதனை
எத்தனை எத்தனை…
அத்தனையும் வாழும் வாழ்வில்!
உடைந்து நொறுங்கிய கண்ணாடித்துண்டுகளாய்
ஓட்டமுடியாச் சிதறல்கள்!
உள்ளத்தின் உணர்வுகளில்
வாழ்வின் தழும்புகள்!
இதய நாளம்
உயிர்ப் பிரிவின்
சோகத்தில் துடிக்கின்றது!
இதயத்தில் அவள் எண்ணங்களே
நினைத்து நினைத்து அழுது வடிக்கும்
என் மனசு!
மரணம் என்று யார் சொன்னது..?
மரணித்து விட்டார் என்று!
கமலினி அக்கா
ஹயாத்தோடு செல்லுகின்றார்
மறுமை நாளில் எழுப்பப்படுவார்!
நாமின்று உயிரோடு வாழ்கின்றோம்
என்றோ ஓர்நாள் நாம்தான்
மண்ணில் மரணிக்கப்படுவோம்!
-ரா.பார்த்தசாரதி
உலகில் அனைவரும் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் நல்லது
நல்ல உணவும் உடற்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு நல்லது
சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்
தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்!
உடலில் ஆயிரம் வியாதி பெயரோ ஆரோக்கியசாமி!
நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம் தேவை
உடல் ஆரோக்கியம் பெறச் சத்துணவு தேவை
உடல் வலிமை பெற நல்ல உடற்பயிற்சி தேவை!
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்
ஆரோக்கியமாய் இருந்தால் வாழ்க்கை வளர்ச்சியடையுமே
நல்ல உணவும் உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே
மனதில் இறுக்கம்இன்றி ஆரோக்கியத்தைப் பேணுவோமே!
—கவிஞர் காவிரிமைந்தன்.
ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ… அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட… இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்… வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்… அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!!
காதலியிடம் தான் வேண்டுவன எல்லாம் கேட்கும் பாணியைப் பாருங்கள்… அவளும் தருவதைத் தந்து பெறுவதில் குறியாய் இருக்கிறாள்! இன்ப நாமாவளியில் இருவர் இதயங்கள் இணைகின்றன! எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையும் அதற்கேற்ப கவிஞர் வாலியின் வரிகளும் இசைத்தமிழாய் வலம் வருகின்றன! எளிய வார்த்தைகளில் புதிய பாணியில் சொல்லப்பட்ட காதல் பாட்டாக..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்த மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி திரையில் தோன்றும் இன்பத்தமிழ்த் தேனாறு இசையின்வாயிலாக வழிகிறது! இறைவன் எழுதிவைத்த தேவகுயில்கள் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு இன்பநாதம்! தமிழ்த்திரையின் மொத்த ராஜ்ஜியத்தில் இவர்களின் பங்காக… அவற்றுள் ஒன்றே இப்பாடல் என்றாக… இதோ நன்றாக. .. என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டுமாம்.. பாடலைக் கேளுங்கள்… பதில் கிடைக்கும்!!
காணொளி: https://youtu.be/l3-cs57NsRg
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
காதலர் நெஞ்சம்
கொஞ்சட்டுமே
காவிய வாழ்வை
மிஞ்சட்டுமே
[என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]
காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகி விழுந்தாள்
வெட்கத்திலே
[என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
____________________________________________
பாடல்: என்னைக் காதலித்தால் ……
படம்: ஆசைமுகம்
கவிஞர்: வாலி
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
(1954 – 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ்நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார்.—சி. ஜெயபாரதன்.
(1883-1931)
மனித இதயம்
“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.” – கலில் கிப்ரான்.
ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
ஓதும் !
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனிக்கும் போது ?
கடவுளின் படைப்பு
கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.” – கலில் கிப்ரான்.
“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.” – கிளாடி பிராக்டன் (Claude Bragdon)
“நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது !” – கலில் கிப்ரான்
நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீடிக்கும் வரலாற்று நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிப்ப தில்லை
ஒரு ரகசியத்தை !
“கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன். இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு ! அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது. ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் !”- கலில் கிப்ரான்
அன்பின் மகிமை,
அழகின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
அவற்றில் வாழப் பிறந்தேன் !
அவ்விதத்தில்
நானிங்கு வசிக்கிறேன் !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !

கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு
லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.
வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.

சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.
கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..
++++++++++++++++++
பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.
பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.
இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் இவரது …
1 படி தாண்டிய பத்தினிகள்
2 இதயம் பலவிதம்
3 வசந்தம் வருமா?
4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5 வாழத்தான் பிறந்தோம்
6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7 நாங்களும் வாழ்கிறோம்
8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
9 இல்லாதவர்கள்
10 அவசரக்கோலங்கள்
பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
மேலதிகத் தகவல்கள்:
http://jyothirlathagirija.blogspot.com/
https://plus.google.com/112576644547569337452/posts