Author: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 150 (நல்ல)

    சேக்கிழார் பாடல் நயம் – 150 (நல்ல)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    அடியார்க்கு  உணவூட்டும்  அரிய செயலை  தாயனார் வறுமையுற்ற  காலத்திலும் , அச்செயலை  நீக்காத மனவுறுதி யுடையவர் என்பதை உலகோர் அறிய அவர்பால்  வந்த செல்வத்தை  அவரறியாமல்  மாற்றினார். தம்  செல்வம் வேழமுண்ட விளங்கனிபோல் உள்ளீடற்று அழிந்தமையால், சற்றும் தளராத தாயனார், சிவபிரானுக்கே உணவளிக்கும் சிவத்தொண்டி லிருந்து விலகாது வாழ்ந்தார். அவ்வகையில் வறுமை வந்த போதிலும் தாம் கூலிக்கு நெல்லறுத்து வரும் ஊதியத்தால் பெருமானுக்கு  அமுதூட்டினார். அந்த நிலையில்  அடியாரின் புண்ணியத்தால் வயல்களில் எல்லாமே இறைவன் அமுதுக்கு உரிய செஞ்சாலி நெல்லாக விளைந்தன! இது தாம் செய்த புண்ணியத்தால் வந்த பயன் என்று  அந்தக் கூலியைக் கொண்டு சிவனாருக்கு அமுதூட்டினார். இறையமுதுக்கு  உரிய நெல்லைக் கூலியாகப் பெற்றவர்தம் இல்லத்துணைவி, வீட்டுக்கொல்லையில் தாமாக வளர்ந்த இலைக்கறியினை உணவாக்கி அளித்து இறைப்பணிக்கு உதவினார்.

    அந்நிலையில் இல்லத்தின் பின் வளர்ந்த இலைக்கறி அற்றுப்போக, அப்போதும் மனம் வாடாமல் பருகும் நீரையே உண்ணும் உணவாகக் கணவனுக்கு இட்டார். அதனை உண்டு தம் சிவத்தொண்டைத் தொடர்ந்து செய்தார். அப்போது ஒருநாள் அடியார், மிகமுயன்று சேர்த்த செந்நெல், மாவடு, கீரை ஆகியவற்றைச் சுமந்து சென்றார். அவர் பின் அவர் மனைவியாரும் ஆனைந்தாகிய  பஞ்ச கவ்யத்தை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி புரிந்தார்.

    அப்போது தாயனார்  தரையில் தடுக்கி விழப்போனார். அவர் மனைவியார் தாம் ஏந்திவந்த  ஆனைந்தை மூடிய கையால்  கணவரை விழாமல் பற்றினார். உடனே அடியார் ஏந்தி வந்த கூடையும், மனைவியார் ஏந்தி வந்த மட்கலமும் தரைவெடிப்பினுள் கவிழ்ந்து விட்டன!  அதனால் அடியார் திருக்கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார். அப்பித்து அவர் செய்த அரிய செயலைச் சேக்கிழார் பாடுகிறார்.

    பாடல்

    ‘’நல்ல செங்   கீரை  தூய   மாவடு   அரிசி சிந்த
    `அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
    எல்லை இல் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன்’ என்று
    ஒல்லை இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.

    பொருள்

    தூய்மையான செங்கீரை, செந்நெல், மாவடு ஆகியவை தரைக்குள் மறைந்தமையால் ‘’எல்லையற்ற தீமை யாகிய பாவம் புரிந்தேன்; அதனால்  துன்பம் தீர்த்து உதவ வல்ல இறைவனுக்கு அமுது செய்யும் நற்பேற்றை இழந்தேன்“ என்று மனம் வருந்தித் தம்  கழுத்தை வாளால் அரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

    விளக்கம்

    இப்பாடலில் நல்ல  என்ற சொல் – புழுக்கடி, வாடல், முற்றல், பழுப்புமுதலிய கேடு இன்றி என்பதை குறித்தது . மென்கீரை  என்றது காண்க. நல்ல – நன்மை செய்யும் என்று இயற்கை யடைமொழியாகக்கொண் டுரைப்பினும்  ஆகும்.

    தூய, என்ற சொல்  மேல், கீரைக்கு நல்ல என்றதற் குரைத்தவாறே, மாவடுவுக்கும் பொருந்த உரைத்துக்கொள்க. ‘மன்னு பைந்துணர் மாவடு’ என இதன் இயற்கையினை முன்னர் உணர்த்தியதனால் இங்கு அதன் தன்மைகள் பொருந்தக் கொள்க.

    அரிசி  என்ற சொல், செந்நெல் இன்னமுது, தூய செந்நெல் அரிசி என இதன் இயல்பும் தன்மையும் முன்னரே கூறினாராதலின், முதன்மையாயின.  அதனால் இதனை இங்கு அடைமொழியின்றி அரிசி என வாளா கூறினார்.

    அல்லல்தீர்த்து ஆளவல்லார் என்ற தொடர், அல்லல் – பிறவித் துன்பமும் அதற்கேதுவாகிய இருவினைகளும். தீர்த்தல் – நுகர்வித்துக் கழிப்பித்தல். அல்லல் தீர்த்து என்றதனாற் பாசநீக்கமும், ஆள என்றதனாற் சிவப்பேறும் ஆகிய இருபயனும் குறித்தார். வல்லார் என்றது அவ்வன்மை இவர்க்கே எளிதின் அமைவதென்றும் வேறெவர்க்கும் இன்றென்றும் குறித்தபடியாம்.

    “தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை” என்ற புள்ளிருக்கு வேளூர்த்  திருத்தாண்டகமும், இவ்வாறு வரும் திருவாக்குக்களும் காண்க. திருத்தொண்டாற் பெறும்பேறு நிறைவுறும் இடமாதலின் இங்கு இவ்வாறு கூறினார்.

    அமுதுசெய்து (அதற்கு) அருளும் என்க. அமுதுசெய்து என்பது நியதியாகிய திருத்தொண்டினை ஏற்றுக்கொள்ளுதலையும், அருளும் அப்பேறு என்றது அதற்கு இறைவன் அருள் புரிதலினையும் குறிப்பன. அருளும் அப்பேறு – அருள்செய்யும் அந்த – அருளினைப் பெறுகின்ற அந்தப்பேறு.

    எல்லையில் தீமையேன் ஆதலின் பெற்றிலேன் என்று, பெற்றிலாமைக்குக் காரணம் கூறியவாறு.

    இங்கு – இவ்விடத்தே. இந்தவெடிப்பினுள். “போவது அங்கு இனியேன்?” என்ற முன்பாட்டுக் காண்க. இன்று என்ற பொருளில் வந்ததென்றலுமாம்.

    ஊட்டி – மிடறு. கழுத்தின் முன்பாகம். அரியலுற்றாராய் – அரியா நின்றார்!

    இப்பாடலால்  இறைத்தொண்டுக்குச் சிறிய ஊறு நேர்ந்தபோதும், அதனைத் தாங்க மாட்டாத அடியார் மனமும், உடனே அதற்குரிய தண்டனையைத் தமக்குத் தாமே  அளித்துக்கொண்ட  செயலும் விளங்குகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 149

    சேக்கிழார் பாடல் நயம் – 149

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இலைமலிந்த சருக்கம்

    அரிவாட்டாய நாயனார் புராணம் (மின்னு)

    இப்புராணத்தின் அடுத்த அடியாராகிய  அரிவாட்டாயனார் அருள் வரலாற்றை  இனிக்  காண்போம்.

    பொன்னிநாடெனும்  சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில், கரும்பும் செந்நெல்லும் வளர்ந்து தேனும் முத்தும் சொரியும் தாமரையும், நீலமலர்களும்  விளைந்தன. அவ்வூரில் செல்வம் மிக்க வேளாண் குடியில் தாயானார் என்னும் திருப்பெயர் கொண்ட அடியார் வாழ்ந்தார். அவர் சிவன் கழல் மறவாத சிந்தையர். அவர் அடியார்க்கு உணவளித்த பாங்கினை

    மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
    செந்நெ லின்னமு தோடுசெங் கீரையும்
    மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
    தன்ன வென்று மமுதுசெய் விப்பரால்.

    என்ற பாடல் கூறுகின்றது.  இப்பாடலின்  பொருள்:

    விளங்குகின்ற சிவந்தசடையினையுடைய வேதியராகிய சிவபெருமானுக்கு ஆகுமென்று செந்நெலரிசியின் இனிய அமுதுடன், செங்கீரையும், நிலைத்த பசுங்கொத்தாகிய மாவடுவையும் கொண்டு அவற்றை ஒவ்வொரு நாளும் நியதியாய் அவரை அமுது செய்விப்பர் (தாயனார்).

    விளக்கம்

    மின்னு செஞ்சடை  என்ற தொடர் அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் பாடிய

    “மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை”

    என்ற பாடலையும், பொன்வண்ணத்தந்தாதியின்,

    “மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை”

    முதலியதிருவாக்குக்களைநினைவூட்டுகிறது.

    சடைசெவ்வான வொளியுடையது என்க. தாயனார் அமுதுசெய்வித்து வழிபட்ட இறைவர் திருத்தண்டலை நீணெறியில் எழுந்தருளிய மூர்த்தி என்றறியப்படுகின்றது.

    இத்தலத்தேவராத்தில் “சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடையார்” என்று ஆளுடைய பிள்ளையார் இவரது சடையினைச் சிறப்பித்தருளியது சிந்திக்க.

    வேதியர்க்கு ஆகும்  என்ற தொடர்  வேதியரது பூசைக்கு உரியன ஆகும்செந்நெல்லைக் குறித்தது. வேதியர்கள் செந்நெல் உண்ணும் வழக்கும் குறிப்பதாம்.

    அன்புடைய மக்கள் தாம் உயர்வாக உவக்கும் உணவையே இறைவனுக்கு ஊட்டுவர். கண்ணப்பநாயனார் வேட்டையாடிச் சேர்த்து இறைவனை ஊட்டிய பண்பு இங்குச் சிந்திக்கத் தக்கது. இதுபற்றியே தாயனார் செந்நெல் அமுதினையே நாளும் இறைவனுக்கு அமுது செய்வித்தனர் என்க. அதுவே இனிய அமுது என்ற காரணத்தால் அதனை ஊட்டினர் என்பார் இன் அமுது என்றார்.

    கீரையும் மாவடுவும் உணவுக்கு ஒத்த உதவிச்சுவை தருவனவாதலன்றி அவையே உணவாதவில்லை. நெல்லரிசியமுதே உணவாம். இச்சிறப்புப்பற்றி அமுதோடு கீரையும் வடுவும் தந்தார் என்று   பிரித்தோதினார்.

    செங்கீரை – இது செந்நெல் அமுதுடன் ஒத்த சுவையும் குணநலமும் தருவது பற்றி இதனை ஊட்டினர் என்க.

    மன்னு பைந்துணர் மாவடு – வடுவின் பசுமையும் இளமையும் மாறாதபடியே பன்னாளும் நிலைக்குமாறு ஊறவைத்துப் பாதுகாக்கப்பட்ட என்ற குறிப்புப்பெற மன்னு  என்றார். மாவடு உணவைச் சீரணிக்க உதவுவது என்ப.  மிக இளைய உவர்ப்பிஞ்சு.

    அமுது செய்விப்பரால் என்ற தொடர்,  ஒவ்வொரு நாளும் நியதியாய் ஊட்டுவிப்பார். ஆல் – நியதிபிழையாத உறுதிக் குறிப்புத்தரும் அசை. செய்விப்பர் – பூசைக்குரிய சிவவேதியர்களைக்கொண்டு அமுதமைப்பித்து ஊட்டுவித்தார் என்ற குறிப்புப்பெறப் பிறவினையாற் கூறினார்.

    இப்பாடல் தாயனார் அடியார்களுக்கு உணவூட்டும் செயலின் முழுமையை உணர்த்துகிறது! இம்முறையில் சிறிதும் வழுவாமல் அவர் நடந்து கொண்ட அருமையை இனிமேல் காணப் போகிறோம்  என்பதைக் குறிப்பால்  உணர்த்துகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மானக்கஞ்சாறர் அளித்த கூந்தலை  வாங்குவர் போல நின்ற அடியார் அங்கேயே மறைந்து, ஆகாயத்தில்  மலைமகள் உமையம்மையுடன் இடப வாகனத்தின் மேல் இறைவனாக எழுந்தருளினார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிய  இவரும் வீழ்ந்து வணங்கினார்.

    அவ்வாறு வணங்கிய அன்பரிடம், நிலவைத் தாங்கிய சடையுடைய  இறைவன் ‘’ நம்பால்  உனக்கிருந்த பேரன்பை உலகறியச் செய்தேன்!’’ என்று அருளினார். இடப வாகனத்தின் மேல் எழுந்தருளிய இறைவரின் கணங்களின் நாதர் போற்ற, வானவர் வந்து சேர, அவர்கள் முன்னே உச்சியில் குவித்த கரங்களுடன் நேராகவே இறைவனருளைப் பெற்றார்.

    உடனே வானவர் வணங்க கொன்றைமலரணிந்த சடையுடைய இறைவன் கைலை சென்றார். அப்போது வண்டுகள் மொய்க்கும் மலர்க்கூந்தலை உடைய மணமகள் கரம்பற்ற, கலிக்காமனார் வந்தார். அங்கே நிகழ்ந்த இறைவனருட் செயலைக் கேள்வியுற்று, மனம் மகிழ்ந்தார், தாம் அப்பேறு பெற வில்லையே என்ற மனத்தளர்வு  நீங்க, இறைவன் அருளால் மீண்டும் கூந்தலைப் பெற்ற மணமகளைத் திருமணம் புரிந்து கொண்டு அந்தணர்க்குப்  பொருள்  தானம் செய்து திருமணத்தை ஊரினர் அனைவரும் சிறப்படைய தம் இனம் வளர , தம்முடைய நகர் நோக்கிச் சென்றார்.

    மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
    புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
    தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
    இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

    இவ்வாறு  தம் ஒரே மகளின் கூந்தலைத் திருமண நாளன்றே இறைவனுக்கு அளித்த  அடியாரின் பெருமையைப் போற்றுதல் தம்மளவில் இயலாது என்றார் சேக்கிழார்.

    பொருள்

    மனம் தளரும் இடர் நீங்கி என்ற தொடர், மனந்தளர்ந்ததனால் உண்டாகிய துன்பம் நீங்கியவராய், தேவதேவருடைய திருவருளினால் முன் புனைந்திருந்த வண்ணமே மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற மணமகளாரை மணஞ்செய்து;  நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து;சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச் சென்று சேர்ந்தனர்.

    விளக்கம்

    தேவ தேவராதலின் ஆக்குதல், அழித்தல் முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள், களையப்பட்ட கூந்தலை முன் இருந்தவாறே மீள வளரச் செய்தது புனைந்தமலர்க்குழல் – மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் என முன் அரிந்தெடுக்கப் பட்டவாறே மீளவும் உளதாயினமை குறித்தார். சிறுத்தொண்டநாயனார் சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப் பாலகனாக வரத் திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல் விரைவில் வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு, கலிக்காமனார் குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பதென்று மனந்தளர்ந்தனர் என்பார் சிலர். அருணிகழ்ச்சி காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை தளர்ந்தனராதலின் கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத் தரும் இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.

    புனைந்தமலர்க்குழல் – அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல், மலர்க்கூந்தல் என்றும், மீளக்குழல் வளர்ந்தபின், இங்குப் புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில், அடியில் அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று வாளா கூறிய நயம் சிந்திக்க.

    தனம் பொழிந்து – கல்யாணத்தில் மணமகன் வீட்டார் தமது இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற் சிறத்தல் இயல்பு. அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார் தம் நிலைமைக்கேற்றவாறும், அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில் வந்தவராய்த் திருவருள் பெற்றுப் போந்த மானக்கஞ்சாறனாரது பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல் மீளப்பெற்ற மகளாரது பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச் செய்த சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம் பொழிந்தனர் என்க. இதனால் அது பெருவதுவையாகி உலகெலாம் தலைசிறக்க ஓங்கி விளங்கிற்று என்பதாம். தலைசிறத்தலாவது – புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

    இனம்பெருக – மணத்தின் பின்னர் இருபாலின் இனத்தவர்களும் ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன் தம் சால்புநிறை சுற்றம் தலைநிறையக்  கூடி வர, அவர்களோடு மானக்கஞ்சாறனாரது நீள்சுற்ற மெலாம் ஒப்பரிய இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு ஒன்று கூடுதலாலும், முன் வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின் இனம்பெருக என்று தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.இனிச் சிவனடியார் இனம் வளர என்றும் நுட்பப்பொருள் காணலாம்.

    தம்முடைய எயில்மூதூர் – இது திருப்பெருமங்கலம்என்பதாம்.  இவ்வூர் ஏயர்கோன்  கலிக்காம நாயனார் புராணத்தில் விளக்கப் பெறும்.   இவ்வூர் திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் மட்சாலையில்,உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது திருவுருவமும் உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம் கொண்டாடுகின்றனர். பன்னிருவேலி என்ற கிராமமும் உண்டு. தலச்சிறப்பும் பிறவும் விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    வரலாறு

    ஏயர்கோன் இல்லத்திலிருந்து மணம்பேச வந்த முதிய அறிஞர்களை  முறைப்படி  வரவேற்றார். அவர்கள் மணம்  புரிந்தேற்க விரும்பியது கேட்டு,  ‘’எங்கள்  குலவழக்கப்படி மனமகளைத் தரும் வகையில் தருவோம்!’’ என்று அனைவரின் மனமும் மகிழும்படி உரைத்துத் திருமணத்துக்கு இசைவு தந்து அனுப்பினார்.

    சென்றவர் இருவீட்டாரும் இசைந்து  சோதிட நூல் கூறிய வண்ணம் திருமண நாள் குறித்தனர். அவ்வாறே திருமணம் புரிவிக்க விரும்பிப் பெண்ணைப்  பெற்ற   தம்சுற்றத் தாருடன் மிகவும் மகிழ்ந்து, வெண்மையான முளைப் பாலிகை, பொற்கலங்களுடன் மலர்கள் பூத்த அந்த ஊரிலேயே திருமண அலங்காரங்கள் செய்வித்தார்.

    மானக்கஞ்சாறர் மகளைக் கைப்பிடிக்க வந்த  ஏயர்குலக்கோனும் தம் சுற்றத்தாருடன் மேகத்துடன்  முரசும் முழங்கும் கஞ்சாரூரின் எல்லையில் வந்தார் . இவ்வுலகம் உய்ய மானக்கஞ்சரனார் மனத்திலுள்ள இறைவனும் இத்திருமணத்திற்குப் புறப்பட்டார்.

    தம் தலையை மழித்து நடுவில் சிகையில் கோத்து  அணிந்த எலும்பு மணியாக முன்பு திருமாலின் அங்கத்தில் இருந்த எலும்பைக் கடைந்து செய்த வெண்முத்து விளங்க , காதில் குண்டலம், என்புமணி கோத்த அழகிய தாழ் வடம், திருத்தோளில் அரவை நீக்கி அணிந்த உத்தரீயம், கரிய மயிரால்  முறுக்கப்பெற்ற பூணூல், அடியார் பிறவியை நீக்கும் திருநீற்றுப்பை, இவற்றோடு . முன்கையில் எலும்புமணி  கோத்த கயிறும், அரிய மறையாகிய கோவணத்தின்மேல் மறைத்த ஆடையும் அணிந்து, நிலத்தில் படிந்த திருவடியில் பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம்  ஆகிய பஞ்ச முத்திரை விளங்க, சாம்பல் மூடிய தழல் போல மேனியில் பூசிய திருநீறு அணிந்தவராய் , கொடிகள் நிறைந்த வீதியில் வந்து தம் அவர் இல்லம் புகுந்தார்!

    மாவிரத முனிவர் வடிவில் வந்த இறைவனைக் கண்டு, மகிழ்ச்சியுடன்  எதிர் சென்று மானக்கஞ்சாறர் ‘’அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளியமையால் நானும் உய்வடைந்தேன்‘’ என்று கூறி, வந்து சேர்ந்த மாவிரத முனிவரைக்கண்டு எதிரே சென்று, பணிந்தார். முனிவர் ‘’இங்கு எதோ மங்கல  நிகழ்ச்சி நடக்கிறது போலும்! ‘’என்றார். அதற்கு விடையாக , ‘’ என் ஒரே மகளின் திருமணம் நிகழ விருக்கிறது!’’ என்றார். உடனே முனிவர் உமக்கு எல்லா நலமும் உண்டாகுக’ என்றார். ஞானம் நிறைந்த தவ முனிவர் திருவடி  பணிந்து, வீட்டுக்குள்  புகுந்து, தேன் நிறைந்த மலர்களால் புனையப்பெற்ற கூந்தலையுடைய செல்வமகளை அழைத்துக் கொண்டு வந்து, திருநீல கண்டத்தை மறைத்து வரும் அந்த முனிவரை வணங்கச் செய்தார்.

    தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை நோக்கி;  கும்பிட்டு நின்ற உண்மைத் தொண்டனாரைப் பார்த்து; “அணங்கு  போல்வா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று சொன்னார்.

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    பொருள்

    இதைக்கேட்ட மானக்கஞ்சாறர் ‘’என்மகள் கூந்தல் சிவந்னடியாரின் பஞ்சவடிக்கு ஆம் ‘’என்று  கேட்கப்பெற்றேன்  என்றெண்ணி உடைவாளை உருவி பூங்கொடிபோல்  மலர்வைத்த தம் மக்களின் கருங்கூந்தலை அரிந்து, நம் பிறப்பறுக்க வந்தவரின் மலர்ந்த கரத்தில் அளிக்க

    விளக்கம்

    பொருளல்லாத இதனையும் பொருட்படுத்தி “இது பஞ்சவடிக்கு ஆகும்” என்றுசொல்லும் பேறு பெற்றேன் என்க. இதற்கு  முற்பிறப்பிற் செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால் இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிட்டும்; நான் என்ன புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.

    இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து, அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

    இருள் செய்த என்ற தொடர்  கருநிறங்குறித்து நின்றது. ஆகுபெயர். இருள் செய்த, இருள் – மயக்கம் எனக்கொண்டு, கூந்தல் அழகியது – உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக் கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர் அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள் செய்த – மயக்கம் செய்த – இனி உண்மை காணக் காரணமாயின- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.

    மானக்கஞ்சாறனார்போல் “மெய்ப்பொருளை யறிந்துண”ராத  ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள் – மயக்கம் – செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க. இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும் உன்னுக. இருள் – ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும், செய்த – உவம உருபெனவும் கொண்டு மேகம் போன்ற கரிய கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென என்றது காண்க.

    அடியில் அரிந்து என்ற தொடர்,  அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி நில்லாவகை அடியோடு களைந்து என்பதைக்  குறித்தது. . “பாசப் பழிமுதல் பறிப்பார்போல” என்றதுகாண்க.

    எதிர்நின்ற – முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர். “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்” என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள் என்று கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப் பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.

    “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
    மருளானாம் மாணாப்பிறப்பு”

    என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்றுவதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக் கொண்டு அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால் ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும் காண்க.

    இனி, உலகபோகப் பொருள்கள் பொருளல்ல என்று தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும் ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம்.

    மருள்செய்த பிறப்பு அறுப்பார் , என்ற தொடர்,

    “மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்” என்றபடி மருளினாலாகிய பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார்.

    பிறப்பு அறுப்பார் மலர்க்கரம் , என்ற தொடர்  தமது கையினாற் காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) – நீட்ட – (அவர்) – மறைந்து – வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என – கொண்டு – அரிந்து – நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர்  என எழுவாய் வருவிக்க.

    இப்பாடலில்,  தம் மகளின் திருமணத்துக்குக் கூந்தலில் மலர் சூட வேண்டுமே என எண்ணாமல், இறைவனடியார்  வேண்டியதை அப்போதே வழங்க வேண்டும்  என்ற  உறுதியம் , அடியாரை இறைவனாகவே கருதும் சிவத்தொண்டும் புலனாகின்றது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 146 (திருமகட்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 146 (திருமகட்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மானக்கஞ்சாறர்பணிவுடையார்; பாம்புடன், மதியையும் அணிந்த சடையை உடைய சிவபெருமானுக்குத் தொண்டாற்றும் பேறுடையவராய், அப்பெருமானுக்கே  ஏவல் செய்யும் செயலை  ஏற்றவர். பெருகி வரும்  செல்வம் முழுவதையும் நதியணிந்த சடையாரின் அடியாராம் செல்வ முடையாரின் நேரில் சொல்லுமுன், குறிப்பறிந்து கொடுப்பவர். அவருக்கு மகப்பேறின்மையால் திருவடிகளை யன்றி வேறு ஏதும் நினையாமல் மகவு பெற எண்ணி மனத்தால் வணங்கினார்.

    அவர் மனைவியார் வினைப்பயன் நீக்க உதவும் பெண்மகவை ஈன்றார். அந்த மகிழ்ச்சியால்  மங்கல இசை முழங்கி ஊரே மகிழ்ந்தது. சிவனடியார்க்  கெல்லாம்  அளவில்லாத செல்வத்தை வாரி வழங்கி அம்மகவை வளர்த்தார். அக்குழந்தை வண்டுகள் மொய்க்கும் சுருண்ட கூந்தலுடன், காதில் குழை யுடன், மேகலை அணிந்த சிற்றாடையுடன் கிண்கிணி அசையும் பாதங்களுடன், கைகளால் அரவணைத்து மகிழும் தாதியர் நடுவே வளர்ந்தது. அமுதம் போன்ற அம்மகள், இல்ல முகப்பில் மணல் வீடு அமைத்து, கிண்கிணி ஆட ஆடற்கலை பயின்று. மார்பு எழும் பருவத்தை அடைந்தார். அழகு வெளிப்பட, முத்துப் பற்களுடன், தளிர் போன்ற கரங்களுடன்  இடையை மார்பு வருத்தும் மணப்பருவம் அடைந்தார். அவரை,

    பாடல்

    திருமகட்கு மேல்விளங்கும்  செம்மணியின் தீபமெனும்
    ஒருமகளை மண்ணுலகில்  ஓங்குகுல மரபினராய்க்
    கருமிடற்று மறையவனார் தமராய கழல் ஏயர்
    பெருமகற்கு  மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர்.

    பொருள்

    திருமகளுக்கு மேலாக விளங்குகின்ற செம்மணியின் விளக்குப் போன்ற ஒப்பற்ற அந்தப் பெண்மணியாரை, இவ்வுலகில் ஓங்கும் வேளாண் குலத்தில் ஒத்த மரபில் வந்தவராய்த், திருநீல கண்டத்தையுடைய வேதியராம் சிவபெருமானுக்கு அன்பராகிய வீரக்கழல் அணிந்த ஏயர்கோன் கலிக்காமனாருக்கு மணம் பேசுவதற்குப் பெருமுதியோர்கள் வந்து சேர்ந்தனர்.

    விளக்கம்

    திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம்  என்ற தொடர்,  உருவாலும் திருவாலும் ஒளியாலும் அருளாலும் இலக்குமியினும் இவ்வம்மையார் மிக்கிருப்பர்; திருமகள் தரும் செல்வம் போல அழிந்துபடாது இவ்வம்மை காரணமாக வரும் செல்வம் இருகுடிக்கும் நித்தியமாகிய அருட்செல்வமாய் விளங்கிற்று; திருமகள் சிவனடியார் பணி கேட்டுத்திரியா நிற்க, இவ்வம்மையார் அருணிறைந்த அடியார்க்குத் துணைவியாராயினர்; மேலும் இவ்வம்மையாரது கற்பின் திறம் மழைக்குதவும் தன்மையுடையது என்றிவை முதலிய காரணங்களால் திருமகட்கு மேல் விளங்கும் என்றார்.

    செம்மணியின் தீபம் என்ற தொடர்,  இயற்கையாலும் தீட்டுதல் முதலிய செயற்கையாலும் மங்காத ஒளியுடையது என்பதைக்க குறித்தது..

    தீபம் என்ற சொல்லால்  அன்பின் பெருமையினையும் அருளின் பெருமையினையும் எடுத்துக் காட்டாக உலகில் விளக்கும் பொருளென்பார் இவ்வம்மையாரை விளக்கு என்றுவமித்தார்.

    ஒரு மகள் நாயனாரின் ஒப்பற்ற மகள்;  அவளை மணமகளாகக் கொள்வது பற்றிப் பேச, குலத்தாலும் மரபாலும்ஓங்கி ஒத்து உள்ளாராய். மரபு – பெரும்பிரிவு. குலம் – அதனுட் சிறுபிரிவு. குடி – கோத்திரம் – என்பர். நாயனாரை அரசர் சேனாதிபதியாம் குடி என்றதுபார்க்க. சைவ சமய பரமாசாரியராலும் பாடப்பெற்ற பெருமை பற்றியும்,  ஓங்கு குலம்என்றார்.

    கருமிடற்று மறையவனார் தமர்  என்பது, சுற்றத்தாரைக் குறித்துப் பெரும்பாலும் வழங்கும் இச்சொல் இங்கு அன்புபூண்ட அடிமைத் திறத்தின் தொடர்பு என்ற அதன் உண்மைப் பொருள் குறித்தது.

    தம்மவர் எனற்பாலது தமர் என வழங்குவதாம். தமர் –  இங்கு, வழிவழி அடிமைச்சார்பு குறித்தது. தமராதலின் நம்பிகள் தூது விட்டமைபற்றிச் சினந்தனர் என்பதும் குறிப்பு.

    மரபினராய் கருமிடற்று மறையவரின் தமராய் – ஒத்த குடியும், மரபும், இவற்றிற்குமேலாய்ச் சிவனடிமைத்திறமுடைமையும் என்றித்திறங்களை மகட்பேச வந்த பெருமுதியோர்.

    கழல் ஏயர் பெருமகன் – கழல் – வீரக்கழல். அரசர் சேனாதிபதிக் குடியின் அடையாளம் குறித்தது. ஏயர் பெருமகன் – ஏயர்கோன்,  என்பது தலைவன் – என்ற பொருளில் வந்தது.

    ஏயர் – இவரது குடிப்பெயராம். கேகயம் – ஒரு நாடு; கேகயர் என்பது ஏயர் என்று மருவி வழங்குவதாயிற்றென்பர் ஆராய்ச்சியாளர். இது குடிப் பெயர் என்பது , “ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக்குடியாம்” என்பதானறிக.பெருமுதியோர் – வயது நிறைந்த அனுபவத்தாலும்,அறிவாலும் முதிர்ந்தவர். இவர்களே இருதிறத்தார்க்கும் பொருந்துவனவற்றைத் தக்கபடி எடுத்து உரைத்து மணம் பொருந்த வைக்க வல்லவர்களாதலின் இன்னோரை அனுப்பி மணம் பேசுதல் முன்னாள் வழக்கு.  இவர்கள் வயதால் மட்டுமன்றி அறிவாலும் முதிர்ந்தோர் என்பதனை வந்த முதறிவோரை என வரும்பாட்டில்  கூறுவது காண்க.

    இப்பாடலால் மணப்பருவம் அடைந்த மகளுக்குத்  திருமணம் பேச ஏயர்குடியின்  தலைவராகிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் உறவின் பெரியோர் வந்தனர் என்பது புலனாகும்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 145 (அப்பதியில்)

    சேக்கிழார் பாடல் நயம் – 145 (அப்பதியில்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    13. மானக்கஞ்சாற நாயனார் புராணம்

    வரலாறு

    கஞ்சாறூர் என்ற ஊர், தலைச்சடைமேல் கங்கையணிந்த பெருமான் விரும்பிய  ஊராகும். நூல்கல் காட்டும்  அறவழியை உணர்ந்த புலவர் போற்றும் சிறப்புடையது. கொம்புகளில் கட்டிய  கூடுகளிலிருந்து தேன் பொழியப்  பழுத்த கனிகளின்  சாறு ஒழுகும்  வயல்களின் கரும்புகளின் சாறு  மணக்கும் ஊராகக் கஞ்சாறூர் விளங்கியது.

    நீலநயனங்கள் உடைய உழத்தியர்கள் களைபிடுங்கியபோது தப்பித்த கழுநீர்ப்பூக்கள் சிவந்து மலர்ந்தன. அதனைக் கண்டு நெற்கதிர்கள் தலை வணங்கின! இவ்வாறு மண்வளம் சிறந்த ஊர் கஞ்சாறூர். அங்கே  மேகம்போன்ற கூந்தலின்  இயல்பைக்  கண்ட மயில்கள் தம் தோகையை விலக்கி ஒதுங்கின. வான்மதியைத்  தோற்பிக்கும் முகத்தியராகிய உழத்தியர் கால்களைக் காட்டும் வயல்கள்  கதிர் காட்டின.

    அவ்வயலில் விளைந்த செந்நெல்லின் கதிர்கள் மேலும் வளர்ந்து அருகிலுள்ள வேலியில் வளர்ந்த பாக்கு மரங்களை உரசிய காட்சி, அம்மரங்களை அறுப்பது போல விளங்கின.  அருகில் வீட்டு மாடங்களில் வெயிலின் ஒளி வீசியது. அங்கு தோரணங்களாகிய துணிக்கொடிகளுடன், பூரண கும்பம் ஏந்திய  பெண்கொடிகளும், வீதிகளில்  சேர்வோரை மயக்கும்!

    வீடுகளில், அறவழியில்  பொருளீட்டும் உழவுத்தொழில் சிறந்தது. அங்கே மயிலனைய பெண்டிர் நடனமாட, முழவதிர்ந்து விழாக்கோலம் புனைந்து வீதி விளங்கியது.

    இந்த வருணனை மானக்கஞ்சாறர்  இல்லத்தில் நிகழும் திருமண விழாவை நமக்கு உணர்த்துகிறது.

    பாடல்

    அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
    செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்;
    மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை
    வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.

    பொருள்

    உண்மைப் பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து உணர்வினிற் கொண்டவரும், தூய வேளாள மரபின்சேமவைப்புப்போன்ற மேன்மையுடையவருமாகிய மானக்கஞ்சாறனார்,  அந்தத் தலத்தில் வழிவழி வாழ்கின்ற மேம்பாடுடையவராய் அரசரது சேனாபதியாகிய சுட்டிக் கூறத்தக்க குடிவிளங்கும்படி திருவவதாரஞ் செய்தனர்.

    இப்பாட்டினால் நாயனாரது மரபும், மரபின் உட்குடியும், உள்ள நிறைவும், வழிவழி வாழ்க்கையும் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கு பேசப்பட்டன.

    அறிந்து உணர்ந்தார் என்ற தொடர்  அறிதல் – உணர்தல் ஆகிய  வெவ்வேறு உணர்ச்சி நிலை குறித்தன. அறிந்து என்றதனாற் கேட்டலும் சிந்தித்தலும், உணர்ந்து என்றதனாற் தெளிதலும் நிட்டை கூடலும் உணர்த்தப்பட்டன. மெய்ப்பொருளானது ஞானேந்திரிய அறிவு அந்தக்கரண அறிவு என்னும் பாசவறிவினாலும், உயிரறிவு எனப்படும் பசு அறிவினாலும் அறியப் படாதாயும், சிவஞானமாகிய மெய்யுணர்ச்சியால் மட்டும் அறியப் படுவதாயும் உள்ள பொருளென்பது இங்குக் குறிக்கப்பட்டது.

    அவ்வூரில் வழிவழி நிலைத்த குடிகளுள் முதன்மையுடையவர். இக்காரணம்பற்றியே முதன்மையார், முதலியார் என்ற குடிப்பெயர்கள் போந்தன என்ப. இவர்களுக்கு ஊராண்மை நாட்டாண்மை முதலிய ஊர் முதன்மைப் பட்டப் பெயர்களும் வழங்கும். இவர்களின் குடிச்சிறப்புக்களை ஆசிரியர் பல இடத்தும் விதந்து பேசுகிறார். அரசர் சேனாபதியும் செப்பவருங் குடி – அரசரிடத்துச் சேனாபதியாகும் தொழிலும் வேளாளர்க்கு உரியது. இது இவர்களுட் சில குடிகளில் வழிவழியாய் வருவதொன்றாதலின் இவ்வாறு கூறினார். இந்நாயனாரது மகளாரை மணம் புரியவந்த ஏயர்கோனாரும் இதுபோலவே சேனாபதிக்குடியினில் வந்தவர் என்பது “ஓங்குகுல மரபினராய்” , “எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயுமென” என்றவற்றாலும், ஏயர்கோனார் புராணத்தினுள் “ஏயர்கோக்குடிதான்”, “மன்னிநீடிய வளவர் சேனாபதிக்குடியாம்”  என்று கூறுவதனாலும் விளங்கும்.

    திலகவதியம்மையாருக்கு மணம்பேசிய கலிப்பகையாரும் அரசர் சேனாபதியாராகப் போர்புரிந்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. இதனை “வேந்து விடுதொழிலிற் படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே”  என்ற தொல்காப்பியத்துள்ளும் காண்க.

    குடிவிளங்க – இவர் அவதரித்த குடி இவரால் விளக்கமடைய, குலவிளக்கு, குலதனம் முதலிய வழக்குக்கள் காண்க. ஒரு குலத்தில் வந்த பெரியார்  ஒருவரைச்  சுட்டி அக்குலம் பெருமையடைதல் வழக்கிற் காண்க. ஆசிரியர் சேக்கிழாரைக் குடிப்பெயராலே வழங்குவது இதனை விளக்கும்; “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” என்ற திருமுருகாற்றுப்படையும் சிந்திக்க. “கானவர்குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட”  என்றதும்  காண்க.

    விழுமிய வேளாண் குடிமை வைப்பு – வேளாண் குடியின் விழுப்பமாவது வாய்மை திறம்பாமையும், நினைப்பினாலும் தீமையில்லாமையும், தொழிலால்  தூய்மையும், கரவா வள்ளண்மையும் ஆம். “தீயவென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்” “தம்முரையும் வணிகனுக்கொருகால், சொன்ன  மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற மேன்மை” , “நம்பு வாய்மையினீடு”,”அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடி”  என்பன முதலாக ஆசிரியர் ஆங்காங்கும் காட்டிப் போந்தவை காண்க. “வேளாளரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந், தாளாளர்”, “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையெனா தீந்துவக்குந் தன்மையார்”, என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.

    விழுமம் – நன்மை (விழுமியார் – நல்லோர்). குடிமை வைப்பு அனைய – குடிக்குச் சேம நிதிபோல. முயற்சியின்றி யாவரும் பயன்பெறக் கூடியதும் எடுக்கக் குறையாததும் சேம நிதியாம். இவரது கரவாத வள்ளன்மை குறித்தது.

    மேன்மையினார் மானக்கஞ்சாறனார். இந்நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை. மேன்மையினாராதலின் இப்பேர் பெற்றார் என்று பேர்ப்பொருள் விளக்கம் செய்தவாறு.

    இப்பாடலில்  மானக்கஞ்சாறனார்  பண்பும், ஒழுக்கமும் அவரில்லத்திலும்  வீதியிலும் அனைவரும் ஆடிப்பாடி விழாக்கோலம்  கொண்டதும், இதே வரலாற்றின்  முன்னோட்டமாக  விளங்கின!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 144

    சேக்கிழார் பாடல் நயம் – 144

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி,
    விருப்பு உறும் அன்பு மேல் மேல் மிக்கு எழும் வேட்கை கூர,
    ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
    திருப்பணி பலவும் செய்து, சிவ பத நிழலில் சேர்ந்தார்.

    வரலாறு

    திருப்பனந்தாள் என்ற தலத்தில் தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோறும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குனிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அதனைக் கண்ட அப்பகுதியின் மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. அரசன் இரவும் பகலும் கவலையுற்று வருந்தினான். . மழுவேந்திய சிவந்த கையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய அம்மருங்குள்ள திருக்கோயில்களுக்கும் சென்று, தொழுது, மேற்போந்து, எல்லா வுலகங்களையும் காக்கும் பொருட்டு வேதவிதி வழுவாமல் ஆகவனீயம் முதலியமுத்தீக்களையும் வளர்த்துக் காத்துவருகின்ற மறையோர் வாழ்கின்ற செழிப்புடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.

    திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனார்  இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார்.

    ஒருமை பொருந்திய அன்பாகிய நாரினால் இயன்ற கயிற்றினாலே; திண்மையுடைய தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்னரும் அக்கருத்துக்கு மாறுபட்டு முன்போலச் சாய்ந்து நிற்க இறைவர்க்கு முடியுமோ?  கலயனாரது மனத்தில் எழுந்த ஒருமைப்பாட்டினைக் கண்ட அப்பொழுதே பெருமையுடைய பிரானார் நேரே நின்றனர்; தேவர்களும் ஆகாயத்தில் மகிழ்ச்சியினால் ஆரவாரித் தனராகிப் பூமாரி பொழிந்தார். மன்னவன்  சேனைகளும் களிறுகளும் மகிழ்ந்தன; அரசன் அடியார்முன் சென்று அவர் திருவடியைத்  தலைமேல் வைத்து வணங்கினான்.

    விண்ணிற் பறக்கின்ற முப்புரங்களும் வேகும்படி வேதப்புரவி பூண்ட தேரில் மேரு மலையை வலிய வில்லாக வளைத்து நின்ற செஞ்சடையப்பருடைய நேர் நிற்கும் நிலையினை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்! மண்ணைப் பிளந்து சென்ற திருமாலும் தேடிக் காணமுடியாத (சிவபெருமானது) மலர் போன்ற திருவடிக ளிரண்டினையும் பண்பு மிக்க அடியவர்களல்லது வேறு யாவரே அன்பினால் நேர் காண வல்லவர்?” என்று போற்றி அங்கே ஆலயத்திறைவனுக்கு உரிய திருப்பணிகள் செய்து புறப்பட்டான்!

    கலயனார் திருப்பனந்தாள்  இறைவன் கழலடி வாழ்த்திச் சிலநாள் அங்கே இருந்தார்.சில நாள்கள் கழிந்த பின்பு,  திருக்கடவூரிற் சேர்ந்து நிலைபெற்ற தமது திருப்பணியில் ஒழுகி வருகின்ற நாட்களிலே ஒப்பற்ற சீர்காழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக வேந்தராகிய மிக்குப் பெருகும் புகழுடைய ஆளுடைய அரசுகளும் ஒன்றாக அங்கு எழுந்தருளக் கண்டு  நிகரில்லாத மகிழ்ச்சி பொங்க அவர்களை எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து, தமது திருமனையில் எய்தி, எல்லையில்லாத அன்பின் மிக்க ஆறு சுவைகளும் பொருந்த அமைத்து ஊட்டி, அவர்களது திருவருளினைப் பெற்றதேயன்றி, மணமுடைய அழகிய கொன்றைமல ரணிந்த இறைவருடைய திருவருளினையும் பெற்றார்.

    கரும்பை வில்லாகவுடைய மன்மதனையும் இயமனையும் தண்டித்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரிலே (கலயனார்) நிலையாக வாழ்ந்து விருப்பம் பொருந்திய அன்பு மேன்மேலும் மிகுந்து எழுகின்ற ஆசை அதிகப்படவே, ஒருப்படுகின்ற மனநிலை உண்டாயினமையினால் தமக்கு நேர்பட்ட திருப்பணிகள் பலவற்றையும் செய்து சிவனது திருவடி நீழலிற் சேர்ந்தனர்.

    குங்கிலியக்  கலைய நாயனாரின் அரிய  சிவத்தொண்டுக்குக்  காரணம் அவர் செய்த குங்கிலிய தூபப்பணியே என்பதை,

    ‘’பெரும்புலர்  காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
    அரும்பொடு  மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பிநல்  விளக்கு  தூபம்  விதியினால் இடவல்லார்க்குக்
    கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!

    பொள்ளத்த  காயமாயப்  பொருளினைப்  போக மாதர்
    வெள்ளத்தைக்  கழிக்க வேண்டில் விரும்புமின்  விளக்குத் தூபம்
    உள்ளத்த  திரியொன்றேற்றி உணருமா றுணர வல்லார்
    கள்ளத்தைக்  கழிப்பர் போலுங் கடவூர் வீரட்டனாரே!

    மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும்
    மால் அயனும் கூடி தங்கள்
    சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி
    தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி
    கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல்
    என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
    விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி
    வெண்காடு மேவிய விகிர்தனாரே

    என்ற  திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன. ஆகவே இப்பாடல் கலயனாரின்  தனித்த சிறப்பைக் காட்டுகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 143 (ஊர் தொறும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 143 (ஊர் தொறும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
    பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
    சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
    ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.

    வரலாறு

    தாலிக்குக் பெற்ற  கலயனார், மிகவும் விரைந்து வீரட்டானக் கோயில் சார்ந்து, எனையாளும் ஈசனின் திருக்கோயில் சேம வைப்பில் தாம் கொண்டுவந்த  குங்கிலிய மூட்டைகளை முழுவதும் நிறைத்தார். மற்ற செயல்களை  மறந்து சடையுடைய ஈசனார் தம்  மலர்த்தாளைப் போற்றி அங்கேயே தம் திருப்பணிகளை செய்து கொண்டு இருந்தார்.அப்படி அங்கே  கலயனார் இருந்த போதில். இறைவன் திருவருளால் அளகையில் வாழும் குபேரன் தம் பெருநிதியத்தை எடுத்து பொற்குவை, நெற்பொதி மற்றும் எல்லாப் பொருள்களும் நிறைந்த பெருஞ்செல்வமாக்கிக்  கலயனார் இல்லத்தில் நீடித்து வளம் சேர்க்க வைத்தார்.

    அடியார் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி உறங்கும்போது, தவம் மிக்க கொடி போன்ற மனைவியரின் கனவில், இறைவன் செல்வம் பற்றி அறிவித்தார். உடனே விழித்தெழுந்த அவர் தம் இல்லத்தில்  நிறைந்த செல்வத்தைக் கண்டு மகிழ்ந்தார்! இவ்வாறு இல்லத்தில், குறைவின்றி  நிறைந்த  பொன்னும். நெல்லும் அரிசி முதலான பண்டங்களும் நிறைந்தது  இறைவனின் திருவருளால் என்று கரங்குவித்து வணங்கினார்.

    காலனையே கொன்ற சிவபிரான்,  கலயனார் அறிந்து கொள்ளும் வண்ணம் அவரிடம் ‘’நீ மிகவும் பசியால் வாடுகிறாய்; உன் இல்லம் சென்று பால் முதலிய இனிய  உணவுகளை உண்டு வருத்தம் நீக்குக!’’ என்றார்.அதைக்  கேட்ட கலயனார், இறைவனை வணங்கி அவர்  கூற்றை மறுத்துக்  கோயிலில் இருக்க அஞ்சி, உடனே திருக்கோயில் மாடவீதியில் உள்ள தம் இல்லத்தை அடைந்தார்!

    அங்கே பெருஞ் செல்வம் குவிந்திருந்ததைக் கண்டு, தம் மனைவியாரிடம், ‘’இங்கே மிகுந்த செல்வம் எவ்வாறு வந்தது?‘’ எனக் கேட்டார். ‘’நீலகண்ட னாகிய இறைவன் திருவருளால் வந்தது!’’ என்று தாம்  கண்ட கனவு பற்றிக் கூறினார்.  அதனைக் கேட்ட அடியார்,’’ என்னையும் ஆண்டுகொண்டு அருளிய எம்பிரான் கருணை இருந்தவாறு என்னே!’’ என்று தலை மேல் கரம் வைத்து வணங்கினார். திருமகள் போன்ற மனைவியார், உணவுக்குரிய கலங்களை எடுத்து,  இறைவனுக்கு  தீபம் ஏற்றி இனிய  உணவைச் சமைத்துப்  படைத்தார்! கலயனார் அதனை உண்டு பசியாறி மகிழ்ந்தார். அப்போது நிகழ்ந்ததைச்  சேக்கிழார் பெருமான் எழுதுகிறார்;

    பாடல்

    ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
    பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
    சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
    ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.

    பொருள்

    ஊர்கள் தோறும் பலிகொள்ளும் சிவபெருமானது திருவருளினாலே இவ்வுலகில் நிறைந்த செல்வமுடையவராகிய தன்மையில் சிறந்து  மிக்க அமுதினை, நல்ல  வளமான கறி, தயிர், நெய், பால் இவற்றுடன் நிறைத்து,  மிக்க அன்புடன் சிவனடியார்களுக்கு உதவுகின்ற நாளிலே,

    விளக்கவுரை 

    ஊர்தொறும்  என்ற தொடர்  எவ்வூரிலுமுள்ள எவ்வுயிர்களிடத்தும் என்ற பொருள் காட்டும் .

    பலிகொண்டு உய்க்கும்  என்ற தொடர்,  பலி – பிச்சை. கொண்டுய்க்கும் என்பது ஒரு சொன்னீர்மைத்தாய்க் கொள்ளும் என்ற பொருளில் வந்தது. பலியைத்தான் கொண்டு, பலி இட்டோரைத் தனது பதத்திற் செலுத்துகின்ற என்றலுமாம். இப்பொருட்கு உய்த்தல் – செலுத்துதல் – வைத்தல் என்க.

    “பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்”

    என்பது திருவாசகம்.

    உய்த்தலாவது – “நிரந்தரமாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்”தல் என்று கொள்ளுதலுமொன்று. இறைவன் பிட்சாடனராக எழுந்தருளிப் பிச்சை ஏற்கும் வரலாறு கந்தபுராணத்துட் காண்க. இதனைப் பற்பலவாறும் பாராட்டுவது அன்பர் வழக்கு.

    “துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்” என்று தாயுமானார் கூறியபடி இவர்கொள்ளும் பலியாவது ஆன்மாக்களின் பசுபோதமும் அதற்கு விடயமாகிய வினைப்பயன்களுமாம். ஊர்தொறும் – என்ற கருத்தைப்பற்றி

    “இங்குநம் மில்லங்கள்  தோறும்  எழுந்தருளிச்,
    செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை”

    என்ற திருவாசகத்தினை உன்னுக.

    ஒருவன் – ஒப்பற்றவன். “நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்” என்றபடி சிவபெருமான் ஒருவனே பதி – தலைவன் என்பதாம். ஒருவனது அருளினாலே ….. செல்வமுடையராம் பண்பின் நீடி – அவர் பிச்சை கொள்வாராயினும் தம்மை யடைந்தார்க்கு எல்லாச் செல்வமும் அருளவல்லார் என்றதனாற் பிச்சை கொள்வது தம்பொருட் டன்று என்பதாம்,

    “படங்கொண்டு பாயும் பூவணையும் தருவா யெனினும் படுதலைகொண்டு, இடங்கள்   தோறும்  இரப்பாய்  என்று  ஏசுவார்க்கென் பேசுவனே”

    என்ற திருவிளையாடற் புராணத்தினுள் இது சுவைபட விளக்கப்படுதல் காண்க.

    பாரினில் ஆர்ந்த செல்வம் – உலகின் உண்மை அனுபவங்களுக்கு எவ்வெச் செல்வங்கள் வேண்டுமோ அவை முழுதும் நிறைந்த என்றபடி,

    உடையராம் பண்பில் நீடி – பாரில் பலர் ஆர்ந்த செல்வமுடையராயிருந்தும் அவ்வுடைமையின் பண்பு இல்லாதாராய்க் கழிகின்றார்கள். அவ்வாறல்லாது அருளாற் பெற்றசெல்வமாதலின் அதனை உடையாராதலோடு உடைய பண்பினாலும் நீடினார் என்றுகுறிக்க உடையராய் நீடி என்னாது உடையராம் பண்பின் நீடி என்றார். அப்பண்பாவது செல்வம் பெற்றதால் ஆகிய நீடுபயன்பெறுதல். அப்பயனாவன அரன்பூசையும் அடியார்க்கமுது  அளித்தலுமேயாம்.

    நல்ல செழும் கறி தயிர் நெய் பாலாற் சீருடை அடிசில் உதவும் என்று கூட்டி உரைத்துக்கொள்க. நல்ல – குணத்தால் நன்மைதரும். இவற்றைப் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய மருத்துவ நூல்களுட் கண்டுகொள்க. தூய இடத்தில்  தூயனவாகப் பயிரிடப்பட்ட என்பதும் உடன்கொள்க. செழுமை – இளையவை – முதியவை என்று  அவ்வவற்றுக்கேற்ற நிலை, அழுகல் – வாடல் புழுக்கடி முதலிய கேடு இல்லாத நிலை முதலாகிய தன்மைகள். ஆல் – என்ற விகுதியை தயிர் நெய் என்பவற்றுடனும் தனித்தனியே  கூட்டுக. உணவுப்பொருள்களில் இவையேதலைமை பெற்றனவும் இன்றியமை யாதனவும் சத்துவமுடையனவும் ஆம். ஆதலின் கறி தயிர் நெய் பால் அடிசில் என்ற இவற்றைக் கூறினார். கூறினாரேனும் உடனுண்ணும் இனம்பற்றிப் பருப்பு முதலியவையும், சுவைதரும் தகுதிபற்றி உப்பு முதலியவையும் உடன் கொள்க.

    சீருடை அரிசி – என்று பாடங் கொள்ளின் செந்நெல்லரிசி என்றுரைத்துக் கொள்க. அதுவே அடிசிற்குச் சீருடையதாம்.

    ஆர்தரு காதல் கூர – நிறைந்த ஆசை மேலும் மிக. கூர்தல் – உள்ளது சிறத்தல்.

    அடியவர்க்குதவும் –  “உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல்” என்ற ஆளுடைய பிள்ளையாரது திருமயிலைத் தேவாரங் காண்க.

    இப்பாடலில் கலயனார் இறைவனுக்குக் குங்கிலியத்   திருப்பணி செய்த சிறப்புடன், அடியாருக்கு உரிய, மாகேசுர பூசை  என்ற  வகையில்  தகுதி மிக்க அடியாருக்கு  உணவூட்டும்  சிவப்பணியும்  செய்தமை புலனாகின்றது! இதனாலேயே இவருக்குச் சிவபிரான் கருணை நோக்கம் உண்டானதை இவர் வரலாற்றிலேயே அறிந்து கொள்கிறோம்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 142 (பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 142 (பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திருக்கடவூரில் வயல், வேள்விச்சாலை, குளங்கள், சோலைகள், இவற்றை மேம்படுத்தும் தொழில்கள் சிறந்தஇருந்தன. வேளாண் தொழில் செய்யும் பெண்கள் மருதப்பண்  இசைப்பர்; வேதம் ஓதும் அந்தணரின் அரங்க வழிபாடு நிகழும் இடங்களில் சாம கானம் ஒலிக்கும்; தூய பெரிய கொம்புகளையுடைய எருமைகள் படிந்து பால் சொரிவதால் கயல் மீன்கள் பாயும் செங்கமலங்களில் பால் மணம் வீசும்; மாடங்களின் மேலே தவழும்  மேகங்களில் யாகசாலைப்புகை கமழும்; அத்தகைய செல்வம் மிக்க ஊரில், கலயர் என்ற பெயருடைய அந்தணர் சிவபிரான் திருவடி பணியும் பக்தியும்  ஒழுக்கமும் மிக்கவர் வாழ்ந்தார். அவர் மார்க்கண்டேயன் என்னும் அந்தச் சிறுவனின் அச்சம் போக்க, அவனை நாடிவந்த இயமனின் உயிரைப் போக்கிய சிவபிரானுக்கு மிகவும் அதிகமான   குங்கிலியப்புகையை இடுகின்ற திருப்பணி செய்தார்.

    இந்நிலையில் இறைவன் செயலால் வறுமையுற்ற  போதிலும் அவர் தம்  பணியைத் தவறாமல் தொடர்ந்தார்.தம் நிலம் முதலிய பல்வகை வளங்களையும் விற்றமையால் உறவினர்  அனைவரும் துன்புற்றனர்.  வறுமையால் இருவேளை உணவின்றிக் குடும்பம் வாடியதால், கலயனார் மனைவியார் தம் பொன்தாலியைக் கொடுத்து நெல் வாங்கி வரக்  கேட்டுக் கொண்டார்.

    அதனைக் கொண்டு நெல் மூட்டைகளை வாங்க அவர் சென்றார். அப்போது ஒப்பற்ற குங்கிலிய மூட்டையைக் கொண்டு ஒருவன் அவரெதிரே வந்தான். அந்த மூட்டையில் குங்கிலியம் இருப்பதை அறிந்த கலயனார் மிகவும் மகிழ்ந்தார்.  திருப்பணிக்கு உகந்த  இக்குங்கிலியத்தை நான்  வாங்கிக் கொண்டால் நற்பேறு பெற்றவனாவேன் என்று அதனை விரும்பினார்.

    ‘’பொன் தருவேன், குங்கிலியம் தருக!’’ என்று அவர் பெற்ற சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்.

    பொன் தரத் தாரும்’ என்று புகன்றிட வணிகன் தானும்
    `என் தர இசைந்தது’ என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;
    அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு
    நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.

    பொருள்

    “நான் உமக்குப் பொன்னைத்தர நீர் இக்குங்குலியத்தினைத்தாரும்” என்று கலயர் சொல்ல, வணிகனும் “தேவரீர் எதனைக் கொடுக்க இசைந்தீர்?” என்றான்;’ கலயர் தாலியை ஈந்தனர்; அப்போதே அவன் அதனை வாங்கிக்கொண்டு அந்தப் பொதியைக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட கலயர் அங்குச் சிறிதும் நில்லாமல் உள்ள நிறைந்த பெருமகிழ்ச்சியுடன் விரைந்து சென்றனர்.

    பொன் தரத்தாரும் – இது வணிகனை நோக்கி நாயனார் கூறியது விலையாகப் பொன்னை நான் தர அதனைப் பெற்றுக்கொண்டு இக்குங்குலியப் பொதியினை நீர் தாரும்.

    விளக்கம்

    பொன் என்றது இங்குப் பொன்னாலாகிய அணியைக் குறித்துவந்தது. காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பார்க்குக் காரியமாகிய வேற்று விகாரங்காட்சிப் படாதாதலின் தாலி பொன் எனப்பட்டது.

    என் தர இசைந்தது என்ற தொடர்  பொன் என்றதனால் அப்பொன்னோ – பொன்னணியோ, யாது என்ற  வினாவைக் குறித்தது.

    தாலியை ஈந்தார் என்றதொடர்,  அவ்வாறு வினவிய வணிகனுக்கு அது இன்னதெனவாயினாற்கூறாது – சொல்லிக் காலந்தாழ்க்காது – செயலிலே தாலியை ஈந்து அவ்வழியால் விடைதந்ததைக்  குறித்தது. இச்செயல் பூசைக்கான பொருள் தேடுதலின் தீவிரம் குறித்தது.

    அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப  என்ற தொடர்,  அதனை வாங்கிக்கொண்டு அதற்கீடாக அந்தப் பொதியினைக்கொடுதான். விலைபற்றி நாயனார் சிந்தித்திலரேனும், கொண்ட பொருளுக்கு நேரொக்கக் கண்டவன்போல அவன் அப்பொதியினைக் கொடுத்தான் என்பது குறிப்பு. அதனைப் பெற்றுக்கொண்ட அடியார் அங்கு நின்றிலர் விரைந்து சென்றார் என்று  புலவர்  பாடுகிறார். பூசைச்சாதனம் அருமையிற் பெற்ற ஆர்வமும் தூபப்பணியில் வைத்த தீவிரதர அன்பும் குறித்தது.

    தமக்குரியதேயாயினும் உரித்தன்றேயாயினும், நன்றேயாயினும் தீதேயாயினும், ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைக்கவறியாது, உடைமை விற்றும் அடிமை விற்றும் உணவின்றிப் பட்டினி கிடந்தும் தாலியையும் விற்க முயன்றும் உணவு தேடுவது சோம்பர் செயலாம் என்று அறிவார் போன்ற சில நவீனர் இகழ்தலும் கூடும். மிடியும் பசியும் வருத்தியபோதும் தமக்குரிய தொழிலையன்றி வேறு தொழில் செய்து உயிர் வாழ எண்ணமாட்டார் பெரியோர் என்பது இந்நாயனாரது வாழ்க்கையாலறியப்படும் உண்மை நீதிகளுள் ஒன்றாம். ஆனால் எமது பெருமக்கள் தொழில் செய்தும், கூலிவேலை செய்தும் சீவித்தலை இகழ்ந்தாரல்லர்.

    “அல்லல்  நல்குர வாயிடக் கூலிக்கு, நெல்லறுத்தும்”

    என்ற அரிவாட்டாய நாயனார் சரிதமும்,

    “வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூறிக்,
    கொளமுயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின் மாறத்,
    தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங்,
    களனில்வரும் பணிசெய்துபெறுங்கூலி காதலித்தார்”,

    “செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
    பக்கமெழ மிகவுழந்தும், பாண்டில்வரு எருதுய்த்துந்,
    தக்கதொழிற் பெருங் கூலி தாங்கொண்டு”

    என்ற கலியநாயனார்சரிதமும், பிறவும் இவ்வுண்மையை விளக்குவன.

    ஆனால் இப்பெரியார்கள் பலரும் தத்தம் மரபுக்கும் தகுதிக்கும் உரிய தொழில்களையும் அவ்வகையிற் பெறும் கூலி வேலைகளையுமே செய்தமையும் குறிக்க. “புலி பசித்தாலும் புல் தின்னாது” என்று கொடுவிலங்கின் மேல் வைத்துக் காட்டும் நியதியையும் மறந்து, தொழில் யாவும் ஒன்றே – யாரும் எத்தொழிலும் செய்யலாகும் – ஏது செய்தேனும் பிழைத்தல் வேண்டும் என்று கூறும் நவீனக்கொள்கையினை அறிவுடையோர் கொள்ளார்.

    “ஈன்றாள்பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க,
    சான்றோர் பழிக்கும் வினை”

    என்ற நீதிக்கு இச்சரிதம் இலக்கியமாம். இதுபற்றியே “செயல் எலாம் தொழில்க ளாறே” என்று தொடக்கத்தில் வற்புறுத்திக் காட்டினார்.இவற்றால் வேதியர்க்கு வேறு தொழில்கள் உரித்தாகாமையும் காணப்படும்.

    “இறந்த மூப்பினராகிய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியால் வருந்து மெல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக” என்னும் அறநூற் பொதுவிதியினை அறிவுடைச் சான்றோர் மேற்கொள்ளார் ரென்பது துணிபு.

    இப்பாடலில்  கலயனாரின் சிவ பத்தித்திறம் கூறப்படுகிறது. தம் குடும்பம் வறுமையுற்ற போதும் அது கருதாமல், தம் மேற்கொண்ட திருப்பணியை மேற்கொண்டு அதனைய செய்த சிறப்பு கூறப்படுகிறது. சான்றோராகிய அடியாரின் தளராத மனவுறுதியையும், வறுமையைக் கண்டு கலங்காத   சிவபக்தித் திறத்தையும், சான்றோர்  என்றும் சான்றோரே என்பதையும்   விளக்குகிறது. இதன் விளைவை இவ்வரலாறு அடுத்து, விளக்கும்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 141 (வாய்ந்த)

    சேக்கிழார் பாடல் நயம் – 141 (வாய்ந்த)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    12. குங்கிலியக் கலைய நாயனார் புராணம்

    முன்னுரை

    திருத்தொண்டருள் பன்னிரண்டா மவராய்ச்  சிறப்பிக்கப் பெறுபவர், குங்கிலியக் கலைய நாயனார்  ஆவார். இவர் தம் வறுமையிலும் செம்மையராய்  தம் குங்கிலியப்புகை ஊட்டும் செயலில் வழுவாமல் வாழ்ந்தது மட்டுமின்றி அதன் பெருமையை உலகறியச் செய்யும் பொருட்டு, இறைவன் திருப்பனந்தாள் என்ற தலத்தில் செய்த திருவிளையாடலை மாற்றியமைத்த  வரலாறு இப்புராணத்தில் கூறப்பெறுகிறது!

    பாடல்

    வாய்ந்தநீர் வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டில்
    ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி யெறிநீர்க் கங்கை
    தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக்
    கய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும்.

    பொருள்

    நீர் பொருந்தியதனா லுளதாம் வளத்தினாலே சிறந்து ஒங்கி நிலைபெற்ற காவிரிபாயும் சோழநாட்டில்;.சிறப்புப் பொருந்திய வேதியர்கள் வாழ்தற்கிடமாகிய மதில்சூழ்ந்த ஊர்;  அலைகள்வீசும் நீரையுடைய கங்கையாறு தோய்ந்த நீண்ட சடையினையுடையாரும்;  தொண்டராகிய மார்க்கண்டேயர் மேல் உயிர்கொள்ள வந்த காலனை முன் உதைத்த சிவந்த திருவடியினையுடையாரும் ஆகிய சிவபெருமான்; நிலைத்து வாழ்வதான திருக்கடவூர் என்பதாகும்.

    விளக்கம்

    நீர்வாய்ந்த வளத்தால், அதாவது  நீரின் வாய்ப்பாவது உயிர்க்கும் பயிர்க்கும் நிலத்துக்கும் பொருந்தியதாகுதல். குடகு நாட்டினும் கொங்கு நாட்டினும் போந்த காவிரிநீர் இங்குச் சோழநாட்டில் வந்து  பொருந்திய  என்றலுமாம்.

    நீர் வளத்தால் ஓங்கி மன்னிய – நீர்வளம் ஒன்றானே சிறந்து நிலை பெற்ற. பொன்னிநாடு – சோழநாட்டைப் பொன்னிநாடு, நீர்நாடு; காவிரிநாடு என் பனவாதி பெயர்களாற் கூறுவது ஆசிரியர்மரபு. காவிரி, தான் தொடக்க முதலாகச் செல்லும் ஏனைநாடுகளிற் பயன் தராது, சோழநாட்டுக்கே பெரும் பயன் தருதலால் இவ்வாறு கூறுவது மரபு. கன்னடதேயத்திற் காவிரி பயன்றருதல் பின்னாள் வழக்கு.

    மறையோரின் சீராவன அவர்களது பிறப் பொழுக்கமாகிய வைதிகசீலத்தானும் வேத உள்ளுறையாகிய சைவசீலத்தானும் சிறப்புறுதல்.

    மறையோர் வாழும்பதி என்ற தொடர்,  இச் சரிதநாயகராகிய கலயநாயனார் மறையவர் மரபினராதலின் அதனை முற்குறிப்பாகக் காட்டியபடி. மறையோர் மரபினர் தனித்து வாழும் பதிகளும் உண்டு. இவை போல்வன சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களால்  அறியப்படும்.

    எதிர்நீர்க் கங்கை தோய்ந்தநீள் சடையார் – என்ற தொடர்  அலைகளால் நீரினை மேலே வீசும்  கங்கையாற்றைக்  குறித்தது. உலகங்களை அழிக்கவல்லதாய்ப் பல்லாயிர முகங்களாகப் பரந்திழிந்த கங்கை என்ற சரிதக்குறிப்பும் காண்க.  எறிநீர் என்றது இவ்வாறு மேல் அலைகளால் எறிதலேயன்றிக் கீழ் ஊற்றுக்கால்களின் வழிப் பல இடமும் செல்லும்படி பரப்புதலும் குறித்தது. திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தி னருகே உள்ள பரமானந்த கூபத்தில் ஐப்பசி மாதத்துப் பூர்வபக்க நவமியில் கங்கை வருகின்றது என்ற மரபும், திரு அவிநாசியிற் காசிக்கங்கைக் கிணற்றின் வரலாறும், திருக்குடந்தை மகாமக வரலாறும் இவை போன்றன அங்கங்குள்ள சான்றுகளும் இங்குக். கருத்தத்க்கன.

    தோய்ந்த நீள்சடை என்பது  எறியும் நீராயினும் அவ்வாறு எறியாது தன்மட்டில் அமைவதாகக் கொண்ட சடையைக் குறித்தது. தோய்ந்த – சடைக்கற்றையின் அளவில் கட்டுப்பட்டு நின்ற.  நீள்சடை – கங்கையின் பரப்புக்குத் தக்கபடி நீளும்சடை, மார்க்கண்டேயர் பூசிக்கும்பொருட்டுக் கங்கை வருகின்றதென்று வழங்கும் இத்தலத்துத் தீர்த்தமும், அதன் நீரினையே இங்கு அமிர்தகடேசருக்கு நாளும் திருமஞ்சனமாட்டும் வழக்குங் காண்க.

    காசியினின்றும் கங்கை கடவூர்வரை நீர் எறிந்து பரவுமாகில் இவரது சடையும் அவ்வளவும் நீண்டு இங்கு விளக்கமுறும் என்ற உட்குறிப்பும் காண்க. இக்குறிப்பினையே இச்சரிதத்தில் பலவிடத்தும்,  தேற்றம்பெற முதலில் வைத்துக்காட்டியதும் காண்க.

    மார்க்கண்டேயர் மேல்வந்த கூற்று, பதினாறு வயது என்ற அவர் வாழ்நாளின் எல்லை யணுகிற்று என்று அவருடைய உயிர் கவரும் பொருட்டு வந்த காலன். “தருமராசற்காய் வந்த கூற்றினை” என்ற திருத்தாண்டகம் காண்க. மேல்வந்த – குறித்துவந்த என்ற பொருளில் வந்தது. பண்டு – முன். இது ஒரு கற்பத்திற் காசியில் நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

    காய்ந்த சேவடியார் என்ற  தொடர்,  சேவடியினால் உதைத்துக் காய்ந்தவர் என்பதைக்  குறித்தது. இச்சரிதம் இத்தலத் தேவாரங்களிலெல்லாம் போற்றப்படுதலாலும், இப்புராணத்தினுட் பல இடத்திலுங் குறிக்கப் படுதலும் காண்க. இத்தலத்திற் காலசங்கார மூர்த்தி சிறக்க வழிபடப் பெறுகின்றதும், அவரது திருவிழா பெருஞ்சிறப்பாகப் போற்றப்படுகின்றதும் காணத்தக்கன.

    நீடியிருத்தல் என்ற தொடர், இப்பெருமையுடன் என்றும் நீங்காது விளக்கமாக வீற்றிருத்தல். இருப்பது, இருப்பதாகிய அவ்வூர்.

    கடவூர் – அமிர்தகடம், கலயம் சிவலிங்கத் திருமேனியாக உருக்கொண்டு எழுந்தருளிய ஊர் ஆதலின் கடவூர்  கால பயத்தைக் கடத்தற்குதவும் ஊர் என்றலுமாம்.

    இப்பாட்டினால் இப்புராணத்துக்குரிய ஆறு – நாடு – நகரம் – குடிவளம் – மூர்த்தி – தலம் – தீர்த்தம் – சரிதம் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கே கூறிய அழகு கண்டு மகிழத்  தக்கது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் (பேறினி)

    சேக்கிழார் பாடல் நயம் (பேறினி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    பாடல்

    பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
    ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
    மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

    இறைவன்  தம் வலத்திருக் கண்ணில் தம் கண்ணை எடுத்து அப்பிய வள்ளல்தன்மை மிக்க திண்ணனாரின்  சிறப்பை மேலும் காட்டத்   திருவுளம் கொண்ட பெருமான்தம், அடுத்த திருக்கண்ணிலும் செங்குருதி பாய்ச்சுவதை உலகில்  வேட்டுவக்  குலத்தின் தவத்தால் தோன்றி, தம் கொள்கை உறுதியால் தேவர்களை விட மேலாக விளங்கிய திண்ணனார் துண்ணெனக் கண்டனர்!

    அவ்வாறு கண்ட வேடுவர், ‘’ஆ! கெட்டேன். எங்கள் காளத்தி ஈசர் திருக் கண்களுள் ஒன்றில்  வழிந்த குருதி நின்றபோது, மற்றைத் திருக்கண்ணிலும் குருதி பொங்கி நிறைந்து வழிகிறதே! ஆ! நான் இதனைக் கண்டு அஞ்சமாட்டேன். என்வசம் மருந்து உள்ளதே! இன்னும்  ஒரு கண் எனக்கு உண்டு! அந்தக் கண்ணையும் தோண்டி அப்பி  இத்துன்பத்தை ஒழிப்பேன்! என்றார்.

    நெற்றியில் கண் ஒன்று  பெற்ற இறைவனின் குருதி பொழியும் இடத்  திருக்கண்ணில், எவ்வாறு தம் இடக் கண்ணை எடுத்து அப்புவது? என்று  நேர்ந்த சிக்கலைச் சிந்தித்தார். தம் இடக்கால்  விரலை இறைவனின் குருதி பொங்கும் திருக்கண்ணில் ஊன்றி , அடையாளம் வைத்துக் கொண்டார்! தம் உள்ளத்தில்  நிறைந்த பாசத்துடன், ஒப்பற்ற அம்பொன்றை  திண்ணனார் தம் இடக் கண்ணில் வைத்து  ஊன்றினார்!  அதனைக் கண்ட தேவதேவர் திருவுள்ளத்தால்  அச்செயலைப்  பொறுத்துக்   கொள்ள இயலவில்லை!

    அப்போது அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது!  அதன் மேலிருந்து  திண்ணனார் உள்ளத்தை வசமாக்கிக் கொண்ட அற்புதச் செயலைச் செய்த திருக்காளத்தி இறைவன்  திருக்கரம் உயர்ந்து  அன்புடன் தம் கண்ணைத்  தோண்டும் கரத்தைத் தடுத்தது. அப்போதே நாகப்பாம்பைக்  கங்கணமாக  அணிந்த அவர் தம் அருள்வாக்கு, ‘’ நில்லு  கண்ணப்ப, நில்லு கண்ணப்ப! எனதன்புடைத் தோன்றலே  நில்லு கண்ணப்ப! ‘’ என்று பதற்றத்துடன்  கூறியருளிற்று!

    வேடர்தலைவர் தம் கண்களைத்   தோண்டி அப்பியதையும், அவர் அளித்த ஊனமுதை உகந்து ஏற்றுக் கொண்ட இறைவன் திருக்கரம் விரைந்து திண்ணனார் கரத்தைப் பிடித்துத் தடுத்ததையும் ஆகம அறிவு மிக்க அந்தணர் கண்டுணர்ந்தார்!  அப்போது பிரமன் முதலான தேவர்கள் பூமாரி பொழிந்தனர்! வேதங்கள் ஒலித்தன! என்றெழுதிய சேக்கிழார் பாடுகிறார்;

    பாடல்

    பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
    ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
    மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

    பொருள்

    இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’ எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!

    இப்பாடலின் பொருள்

    தமது பெருமானது திருக்கண்ணினுக்கு வந்த ஊற்றினைக் கண்டுபயந்து; தங்கண் இடந்தப்பும் கையை – என்ற தொடர் தமது இடக்கண்ணைத் தோண்டி அப்புதற்கு உதவநின்ற கண்ணப்பரதுகையை; ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு – இடபக்கொடியை உயர்த்தியவராகிய காளத்தியப்பர் தமது கையினாற் பிடித்துக்கொண்டு; மாறிலாய்! – ஒப்புயர்வற்றவனே!; என்வலத்தில் – எனது வலது பக்கத்தில்; நிற்க என்று மண்ணு பேரருள் புரிந்தார் – நிற்பாயாக என்று நிலைபெற்ற பெரிய திருவருளினைச் செய்தனர்.

    பேறு இனி இதன் மேல் உண்டோ? (ஆதலால்) இனி யிதன்மேற் பெறத்தக்க பயன் வேறேதும் உண்டோ? இல்லை.

    விளக்கவுரை

    இங்கு வலப்பக்கத்தில் நிற்க என்றருளப் பெற்ற கண்ணப்ப நாயனாரும் அவ்வாறருளி அவரது இடப்பக்கத்தில் தாம் அமைந்து நின்ற காளத்திநாயனாரும் பூட்டிய வில்லின் இருதலை போலப் பிரித்துணராத நிலையிற் பிணைந்தனர் என்பது குறிக்க இவ்வாறு பூட்டுவிற் பொருள்கோள் பெற வைத்தது குறிக்க.

    நற் பேறு – இங்கு இதன்மேல் உண்டோ என்றதனால் சிவசாயுச்சியமாகிய முடிந்த பதம் குறித்தது. அருள்ஞானக் குறியினின்று அருள் நோக்கத்தால் மலமூன்று மற்றாராய், அவனேதானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி செய்தனராதலின் இவர் பெற்றது பரமுத்தியேயாம் என்றும், வேறு சிலர் கூறுவதுபோலச் சிவபூசையாகிய கிரியைக்குரிய சாமீபமாகிய பதம் மட்டுமன்று என்றும் விசேட உரை காண்பர் ஆலாலசுந்தரம் பிள்ளை.

    உண்டோ? – ஆன்மாக்கள் அடையத்தகும் பேறு இதற்கு மேல் வேறொன்று மி்ல்லை என்று வினா எதிர்மறை குறித்தது. “கற்றதனா லாய பயனென் கொல்” என்புழிப்போல வேறு இல்லை என்னாது உண்டோ என வினாச்சொல்லாற் கூறியது உறுதிப் பொருள் தருதற்பொருட்டு.

    “கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பரா”தலின் கற்றதனாலாய் முடிந்த பயனைப் பெற்றனர் என்ற இத்திருக்குறட் பொருட்குறிப்பும் காண்க கண்ணப்பர் தாம் யாவரினும் மிக்க பேறுபெற்றனர் என்பது கருத்து. இதுபற்றியே திருவாதவூரடிகள் முதலிய பரமாசாரிய மூர்த்தி மற்றும் எல்லாப் பெரியோர்களாலும் துதிக்கப்பெற்றனர் என்க.

    திருக்கண் – பிரானது ஞானத் திருமேனியில் எவ்விதவூனமும் இல்லாத கண். வந்த – தோற்றப்பட்ட. ஊறு – உறுவது. ஆகுபெயராய்ப் புண்ணையும் அதிற் பெருகிய உதிரத்தையும் குறித்தது. ஊறு – பேறு தொழிலாகு பெயர்கள்.

    அஞ்சி – அவர்க்குத்தீங்கு – ஊறு – நேர்ந்ததற்கு அஞ்சினாரேயன்றித் தம்கண்ணைத் தோண்டுதற்கு அஞ்சினாரல்லர் என்பதுதோன்றத் தங்கண் இடந்து அப்ப என்றார்.

    அப்ப உதவும் கை – உதவும் – வலது கண்ணைத் தோண்ட உதவின என இறந்த காலப் பெயரெச்சமாகவும், இடது கண்ணைத் தோண்ட உதவி நிற்கும் என காலப் பெயரெச்சமாகவும், இவ்வரிய செயல்களிரண்டினையும் உதவும் என்ற ஒரு சொல்லாலே குறிக்க உதவும் சொல் அருமை காண்க.

    உதவும் கை – உயிரின் இச்சையறிந்து உதவுவது கையின் பண்பு என்பது குறிப்பு; “உடுக்கை யிழந்தவன் கை போல” என்ற திருக்குறளானறிக என்பார் சுப்பராய செட்டியார்.

    ஏறு உயர்த்தவர் – காளத்தி நாதர். தருமசொருபமாகிய விடையினை ஊர்ந்து அருள்வது போலஅதனையே கொடியாக உயர்த்தியும் கையாற்பிடித்தவாறு அவ்வறத்தின் வழியே அன்பு செய்த இவரையும் கையாற் பிடித்துத் தமது சாயுச்சியத்திற்கு உயர்த்தினர் என்றது குறிப்பு.

    தம்கையால் – சிவலிங்கத்திருமேனியினின்றும் தோன்றிய கையினாலே, உதவும் கைக்குப் பிரதி உபகாரம் தமது கையாற் பிடித்தலாம் என்பது போலக் கையாற் பிடித்தனர் என்றதும் குறிப்பு. இது பெண்ணொரு பாகனது வளையலணிந்த இடக்கை என்று காளத்தியில் உள்ள வடமொழிக் கல் வெட்டுக் கூறுகிறது.

    என்வலத்தில் – வலத்தில் – வலப்பக்கத்தில், இடப்பக்கத்தில் உமையம்மையாரும் திருமாலும் உள்ளார்கள் என்ற குறிப்பினால் வலத்தில் என்றார். இடம் அம்மையாரது பாகமாக, வலம் தமது பாகமாதலின் அதனில் நிறுத்தினார் என்பதுமாம். அம்மையாருக்கு இடமே இடமாகக் கொடுத்தவர் இவர்க்கும் வலமே இடமாகக் கொடுத்தார் என்ற நயமும், சக்கரம் வேண்டித் தமது ஒரு கண்ணைத் தோண்டி அருச்சித்த திருமாலுக்கு எளிய இடப்பாகமும், தனக்கென ஒன்றும் வேண்டாது இறைவன் திருக்கண்ணில் வந்த ஊறுகண்டு அஞ்சி அதன்பொருட்டே தமது ஒருகண்ணை அப்பி மற்றொது கண்ணையும் உதவ நின்றும் பணி செய்த இவர்க்கு வலப்பாகமும் கொடுத்தனர் என்ற நயமும்காண்க. வலம் – மேம்பாடு – வெற்றி – எனக்கொண்டு அன்பே சிவமாவது சிவத்தின் வலமாதலால் அதனில் நீ நிற்பாய் என்றார் என்ற குறிப்புமாம்.

    மாறு இலாய் வலத்தின் நிற்க என்க – ஒப்பும் உயர்வுமில்லாதவனே நீ வலத்தில் நிற்பாயாக. வலத்தின் நிற்க – எனப் பிரித்து, வலம் – வல்லமை, இன் – உவமவுருபு எனக்கொண்டு, அருள் வடிவாகிய சத்தி “நீரின் தன்மை அனல் வெம்மையென” அகலாது சமவாயமாக நீக்கமின்றி நிற்றல்போல, அன்பு வடிவமாகிய நீ் பிறிவறியாது அத்துவிதமாக நிற்க என்பதும் குறிப்பு.

    “ஒளியென்ன நில்லென்றான்” என்பது பஞ்சாக்கரப்பஃறொடை.

    நிற்க – நிலைபேறு பெற்று நிற்க என்றலுமாம்.

    மன்னு பேரருள் – நிலைபெறும் பெரியதிருவருள். அன்பிற் பெரியவருக்கு அருளாற்பெரியது செய்தனர் என்க.

    சிறப்புப் பொருள்

    இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய  அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!  அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது! பின்னர் அதுவே இடபக் கொடியாக உயர்ந்தது. இங்கு அறம் மேலோங்கியதை உணரலாம்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 139 (நின்ற)

    சேக்கிழார் பாடல் நயம் – 139 (நின்ற)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    பெருமான் மேலும் கூறினார்,’’ மலைமேல் வந்து திண்ணன் செய்யும் பூசைக்கு முன் என்மேல் அந்தணர் தூவ  விழுந்து அரும்பும் மெல்லிய மலர்களை நீக்குவதற்காக, விருப்பமாகிய வெள்ளம் வாய்க்கால் ஆனது போல் என்மேல் அவன் வைத்த  செருப்புடைய சிற்றடி, அவனது குழந்தைப்  பருவத்தின் சிவந்த அடியைவிடச்  சிறப்புற இருந்தது! அன்பே உருவான அவன் சிறுவாயாகிய அமுத கலசத்தில் பொங்கிய எச்சில் நீராகிய அபிடேக நீர்,  சிறந்த ஜானு என்ற முனிவரின் வாயில் புகுந்து காது வழியாக வழிந்த ஜானவி என்ற நதியாகி, என் ஜடாமுடியில் தங்கியகங்கையை விடவும், எனக்குப் புனிதமானது! அவ்வேடனது பக்தியே மலராகி விரிந்ததுபோல் அவன் தூவிய செம்மையான மலர்கள் தேவர்களின் பூமாலையை விட உயர்ந்தவை! அவன் எனக்கிடும் ஊன் உணவு  வெந்து, பக்குவம் ஆகிவிட்டதா என உண்டு பார்த்து இட்ட படையல் எனக்கு மிக இனியவை! அவன் என் முன்னே நின்று கூறும் என்னைமட்டுமறிந்த,  அறியாமை மிக்க  மொழிகள்,வேதியரும் முனிவர்களும் துதிக்கும் ஞானம் மிக்க வேத தோத்திரங்களை விட  நல்லவை!

    வேதியரே, உமக்கு  அவன் செயல்களை நான் காட்டுகிறேன்; அப்போது அவனுடைய பக்தியின் சிறப்பை நேரில் கண்டறிவாய்! உன் மனக்கவலை தீரும்! ‘’ என்று வேதியரின் கனவில் கூறி மறைந்தார்!

    இரவெல்லாம் துயிலாமல் இருந்த வேதியர் வியப்பும் அச்சமும் கொண்டு,காலையில் கதிரவன் உதிக்கும்போதே, எழுந்து குளித்து, பூசைப் பொருள்களுடன்  மலைமேல் ஏறி, மரபுப்படி பூசை செய்தபின் சிவன் பின்னே மறைந்து நின்றார்!

    அன்று திண்ணனார் ஆறாம் நாளில்  வேட்டையாடி ஊன் அமுதும் , மஞ்சுநாத் புனித நீரும் , மலர்களும் கொண்டு  பூசைக்கு வந்தார். அப்போது அவர்முன் பறவைகள் சிந்திய இரத்த அடையாளம்  தீய சகுனம் உண்டாக்கிற்று‘’ ஐயோ, என் அப்பனுக்கு  என்ன ஆயிற்றோ? என்றெண்ணி ஓடோடி வந்தார்!  அப்போது, சிவபிரான் , திண்ணனாரின் அன்பினை வேதியருக்குக் காட்டத் திருவுளங்கொண்டார்! அவர் தம் வலக்கண்ணில் கண்டோர் துணுக்கம் அடையும் வண்ணம் இரத்தம் பெருகிப் பாய்ந்தது! அதைக் கண்ட வேடுவர் விரைந்தோடி வந்தார்!

    இறைவன் கண்ணில் இரத்தத்தைக் கண்ட வேடர் மயங்கினார்; வாயிலிருந்த பொன்முகலி நீர் சிந்தியது; கையிலிருந்த ஊனுணவு வில்லுடன் வீழ்ந்தது; தம் தலைமேல் சூடியிருந்த மலர்கள் எங்கும் வீழ, அவர் பதறி வீழ்ந்தார்!

    எழுந்து சென்று இரத்தத்தைத் துடைத்தார், ஆனாலும்அது  பொங்கியது! என்ன  செய்வதென்று அறியாமல் திகைத்தார்; இதனை யார் செய்திருப்பார்? என்று எழுந்து  திக்கிலும் தேடினார்; கையில் வில்லை எடுத்தார்; ஓரம்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ‘’இந்தமலையில் எனக்கு எதிரியாக வெல்லும் மறவர் உளரோ? விலங்குகளில் சிங்கம்  போன்ற கொடியவை இப்படிச் செய்தனவோ? அறியேன்.’’ என்று நீண்ட மலைச் சாரலெங்கும் தேடினார். எங்கும் புதிய வேடரைக் காணவில்லை. எங்கும் தீய விலங்குகளைக்  காணவில்லை. எங்கு தேடியும் காணாமல் மீண்டும் இறைவரிடம் வந்து, பெருத்த வருத்தத்துடன் அவர் திருவடி பற்றிக் கண்ணீர் பெருக்கிக் கதறினார்.

    ‘’இப்படிப் பாவிநான்  பார்க்கும் படி பரமனுக்கு வந்த தீங்கு யாதோ? உயிரினும் இனிய எங்கள் அத்தனுக்கு வந்த தீங்கு எதுவோ? அடைந்தவர் பிரியவியலாத குற்றமற்ற இறைவனுக்கு என்ன வந்ததோ? என்ன செய்வதென்று அறிந்து கொள்ள இயலவில்லை.

    எம் இறைவனுக்குத் தீங்கு செய்தவரை எங்கும் காணேன்; வேடர் குலத்தினர் புண்ணுக்கு மருந்து செய்யும் முறைகளை இப்போதே பொய் அறிந்து செய்து கொண்டு வருவேன்’’  என்று ஓடினார் .  தம் கூட்டத்திலிருந்து பிரிந்த காளை  போன்று அருகேயிருந்த காடுகளில் அச்சத்துடன் திரிந்தார்; ஆங்காங்கே இருந்த மூலிகைகளை எடுத்துக் கொண்டோடி வந்து கசக்கி  இறைவன் கண்ணில் பிழிந்தார்; அந்த மருந்தாலும் கடவுளின் கண்ணின் இரத்தம் குறையாதது கண்டு இனி என்ன செய்வது? என்று சிந்தித்தார்; ‘’ஓ! ஊனுக்கு ஊனை  வைத்தால்  உற்ற நோய் தீர்க்கும்! ‘’ என்பார்களே! அதற்கேற்ப இனி உடனே புண்ணான இறைவன்  கண்ணுக்கு மாற்றாக என் கண்ணைத் தோண்டி அப்பினால் இரத்தம் குறைந்து நோய் தீரும்! என்றெண்ணி, விரைந்து எழுந்து தம் ஒருகண்ணை அம்பினால் தோண்டி எடுத்து இறைவன் திருக்கண்ணில்  அப்பினார்! இங்கு சேக்கிழார் பாடுகிறார்;

    பாடல்

    நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;
    குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
    ‘நன்று நான் செய்த இந்த மதி’ என நகையும் தோன்ற,
    ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.

    பொருள்

    குருதிநின்றதைக் கண்டார்; அந்தப்பெரு மகிழ்ச்சியினாலே நிலத்தினின்று உயரப்பாய்ந்து குதித்தார்; மலை போல வளர்ந்த தமது தோள்களைக் கொட்டினார்; கூத்தும் ஆடி “நான் செய்த இந்த மதி – யோசனை – மிக நன்று” என்று சிரிப்புத் தோன்றப் பொருந்தியகளிப்பினாலே உன்மத்தர் போன்ற நிலையில் மிக்கவராயினர்.

    விளக்கம்

    குருதி வெளிவராத நிலைமையைக் கண்டாராதலின் செங்குருதி நின்றது கண்டார்; மகிழ்ச்சியில் துள்ளினார்.

    நிலத்தினின்று ஏறப்பாய்ந்தார் – இங்குக் கூறிய ஏறப்பாய்தல், தோள்கொட்டுதல், கூத்தாடுதல், நகை தோன்றுதல், உன்மத்தர் போலாதல் எனுமிவை பெருமகிழ்ச்சியால் வெளிப்படக்காணும் உடற்செயல்கள். முன் குருதி கண்டபோது மனமும் மெய்யும் மொழியும் முடங்கி மயங்கிச் சோர்ந்து

    நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார் . குருதி நிற்கக்கண்ட இப்போது அவை தழைக்கத் தாமும் நின்று ஏறப்பாய்ந்தார். ஏறப்பாய்தல் – நின்ற இடத்தினின்றும் உயரக் கிளம்பிக் குதித்தல்.

    குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் – வளர்ந்த – குருதி கண்டபோது கையிற் சிலையுடன் ஊனும் சிதறிவீழ்த்தித் தோள்கள் மெலிந்தன; குருதி நிற்கக் காணலும் அம்மகிழ்ச்சி மிகவே அவை குன்று போல வளர்ச்சிபெற்றன!. நாயகனைப் பிரிந்த சோகத்தால் நாயகிக்கு உடல் மெலிந்து கைவளை கழலுதலும் அவனைக் கூடியவழி உடல் பூரித்துக் கைவளை உடைதலும் முதலியனவாக அகப்பொருள்  நூ ல்களிற் பேசப்படும் நிலைகளி னியல்பை இங்கு பொருத்திப் பார்க்க.

    கூத்தும் ஆடி  என்ற தொடர்  தம்மை மறந்து கூத்தாடுதல்,  மிக்க மகிழ்ச்சியின் விளைவு என்பதைக் குறித்ததது.

    “கும்பிடுதலும், தட்டமிடுதலும், கூத்தாடுதலும்
    உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு”

    என்ற சிவஞான சித்தியார் பாடலின்  பொழிப்புரையும் காண்க.

    “ஆசையொடு மரனடியா ரடியாரை

    யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து” என்ற ஞான சாத்திரத் திருவாக்கிற் கண்டவாறு இங்குத் திண்ணனார் அரனையே யணைந்தனர்; அரனை ஆசையொடும் அடைந்தார்; அவர் கருமந் தன் கருமமாகச் செய்தார்; அவர் பிரேரணையாகிய அருண்ஞானக் குறியின்நின்று தம்மை மறந்து அவரையே கும்பிட்டு அருச்சித்தார்; இங்கு அவரது நோய்தீரக் கண்டபோது உவகையினாற் கூத்தும் ஆடினர்; சீவன் முத்த நிலையாகிய பரம உபசாந்தம்  இது,  என்பது க. சதாசிவ செட்டியார் உரைக் குறிப்பு. என் அறிவு நன்று என்று தம்மையே மெச்சிக்கொண்டார்

    ஒன்றியகளிப்பினாலே உன்மத்தர் போல – பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது வந்து சேர்ந்த. களிப்பினாலே உன்மத்தர் போலாகுதல், மதமிகுந்தபோது உளதாம் உட்கரண புறக்கரணநிலை. மத்தம் – மதத்தாலாகும் நிலை.  இந்நிலையின் மெய்ப்பாடுகளின் மிகுதியுடையராயினார்.

    தாம் செய்த அபூர்வமான செயலால் விளைந்த நன்மையைக்  கண்ட திண்ணனாரின் மகிழ்ச்சிக் கூத்தினை இப்பாடல் குறித்து நம்மையும் மகிழ்விக்கிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 138 (அவனுடைய)

    சேக்கிழார் பாடல் நயம் – 138 (அவனுடைய)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
    அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.

    வரலாறு

    இவ்வாறு அந்தணர் சென்றபின், கையில் ஏந்திய வில்லை  வளைத்துக்  காட்டில்  வேட்டையாடித்  திண்ணனார் செய்த செயலை  மொழிந்து தீவினை தீருவேன் என்று  சேக்கிழார்  மொழிந்தார். மலைச்சாரலின் பாறைக ளிடையே மேய்ந்த  காட்டுப்பன்றிகள், மான் இனங்கள் ஆகியவற்றை  ஒளிந்து நின்று கொன்றார். இவ்வாறு பகல்நேரம் வேட்டையாடினர்.

    வேட்டையாடிய விலங்குகளை  ஓரிடத்தில் சேர்த்து , அவற்றை வாளால் வெட்டித்  துண்டுகளாக்கி, அவற்றையோக் கோலில்  கோத்துத் தேக்கிலையில்  தேனூற்றி, வரிசைப்பட அடுக்கினார். விறகுகளை முறித்து அடுப்பில் அடுக்கி , அரணிக்கட்டையில்,  தீ மூட்டி வளர்த்து. கோலில் கொத்தி எடுத்த இறைச்சிகளை வேகவைத்து, வதக்கி அம்பு நுனியால் கிழித்து  வகிர்ந்து அவற்றின் உறுப்பாகிய தசைகளை ஒரு தேக்கிலையில் வைத்து அவற்றின் சுவை காணாத தொடங்கினார்.

    எண்ணற்ற கடவுளருக்கு இடத்தக்க உணவை வேள்வித் தீயில் வைத்தது போல் திருக்காளத்தி இறைவர்க்கு ஏற்கும் வகையில் தம் வாயில்  இட்டுச்  சுவை பார்த்தார். பதத்துடன் வெந்த இறைச்சியை மீண்டும் தேக்கிலையில் உமிழ்ந்து, தேனைக் கலந்து, எடுத்துக்கொண்டு வழக்கம் போல் பூமாலையைத் தலையிலும்,  தூய அபிடேக நீரை  வாயிலும் எடுத்துக் கொண்டு மலைக்கு வந்து சேர்ந்தார். அவ்வாறு  வந்து காளத்தி மலை ஏறி காட்டில் திரிவோர்க்குத் தலைவனாகவும், தேவர்களின் தலைவராகவும்  விளங்கும் இறைவனை அடைந்து, முன்பு அந்தணர் செய்த பூசை அடையாளங்களை அகற்றி தாம்  செய்த பூசையையே மீண்டும் செய்து முடிப்பார்.

    தேக்கிலையில் ஊனையும் அமுதையும்  வைத்து, ‘’ இன்று மற்ற நாளை விட விடச்  சுவையாக இருக்கும்; பன்றி, மான், வரையாடு, கடமான் இவற்றின் உறுப்புக்களால்  நான் அமைத்த இறைச்சி அமுதை முன்னதாக, அடியேனும்   சுவைத்துப் பார்த்தேன்; தேனோடு  கலந்த இவ்வுணவு தித்திக்கும்!’’ என்று தாயன்போடு கூறினார்;  இவ்வாறே உணவூட்டி  தம் ஒப்பற்றது பூசைகளைச்  செய்து, மேலும் மேலும் பெருகிய அன்புடன் இரவெல்லாம் சிவனெதிரில் உறங்காமல், இரவில் வேட்டையாடிய  பொருள்களுடன் வந்து சேருவார்;

    சிவகோசரியாரும் நாள்தோறும் வந்து, காட்டுவேடர் தலைவராகிய திண்ணனார் செய்த பூசையைக் கண்டு மிகவும் மனத்தளர்ச்சி யடைந்து, அப்பூசை அடையாளங்களை நீக்கித்  தாம் கடைப்பிடிக்கும்  ஆகமவிதிப் படியே  தம்மாலான அருச்சனை செய்து வந்தார்.

    ஒவ்வொருநாளும்  சிவகோசரியார் வந்து, வேடன் செய்த பூசை கண்டு தளர்ச்சியடைந்தார். அது தீமை என்றெண்ணி ஆகம விதிப்படி அருச்சித்தார். திண்ணனாரின் உறவினர்கள் அவரிடம் பலவாறு பேசியும் அவர் கேளாமையால் அவரைக் கைவிட்டனர்.

    முன்னமே திருக்காளத்தி இறைந திருவருட் பார்வையால் திண்ணனார் வேதியில் வைத்த இரும்பு பொன்  ஆனாற்போல் தான் என்ற உணர்வு நீங்கி, இருவினைகளும் விளக்க மும்மலமும் அற்று அன்பே வடிவமாய்த் திரிந்தார். அதனை அறியாத  சிவ வேதியர், ‘’என்தலைவரே, இவ்வாறு தவறு  செய்தாரை நீங்களே தண்டிக்க வேண்டும் ‘’ என்று வேண்டினார்.

    அன்றிரவு  வேதியர் கனவினுள் சிவபெருமான் காட்சி தந்தார். அவனை வலிமை மிக்க வேடுவன் என்று நினைக்காதே! அவன் செய்த நற்செயலை நானே கூறுகிறேன், கேள்.”   என்று கூறியதாக  சேக்கிழார் பாடுகிறார்.

    ‘அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
    அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.

    விளக்கம்

    வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு என்றதொடர், இதனையே முன்னர்ப் பொருவில் அன்புருவம் , அன்பு பிழம்பாய்  என்றார். பிழம்பு , வடிவம் என்பன ஒரு பொருளன. அன்பே ஒரு உருவமாயிற்று என்பதாம்.

    அறிவு எல்லாம் நமைஅறியும் அறிவு  என்ற தொடர்,  அறிவு முழுமையும் நம்மையே யறிந்தது – வேறொன்றினும் செல்லவில்லை. என்பதைக் குறித்தது.

    செயல் எல்லாம் நமக்கு இனிய ஆம்  செயல்கள் என்ற தொடர் ,  எல்லாம் நமக்கு இனிமை செய்தற்பொருட்டே  நிகழ்ந்தன. அஃதாவது வைகறை எழுந்து போந்து வேட்டையாடி அமுது முதலியன கொண்டுவருதல், மஞ்சனமாட்ட முன்பூசை மலர்களைக் காற் செருப்பால் மாற்றுதல் முதல் இரவிற்றுயிலாது காத்தல் வரை எல்லாச் செயல்களும் நமக்கு இனியவை இவையிவையேயாம் என்று கொண்டு, அதன்பொருட்டே செய்யப்படுவன.

    “திருக்காளத்திநாயனார்க் கினிய செய்கை இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டு”  செய்யப்பட்டன என முன்னர்க் கூறியது காண்க. இவ்வாறு செய்யப்பட்டன ஆதலின் அவை நமக்கு இனியனவேயாம். இவை நாமே விதித்த ஆகமவிதிப்படி இனியன வல்ல என்று கொள்ளப்படினும், அவ்வாகமங்களே அன்பினை எல்லாவற்றுக்கு மேலாக விதித்தலால் இவை இனியனவென்று அன்பின்  பெருக்காற் செய்யப்பட்டன வாதலின் இவையெல்லாம் நமக்கு இனியனவேயாம் என்றபடி.

    “இனியன வல்ல வற்றை இனிதாக நல்கு மிறைவன்”

    என்ற  ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.

    செயல் எல்லாம் – செயல்கள் எவையாயினும் – விலக்கப்பட்டனவாயினும் – அவை முழுதும் என்றும் அறிவித்துப்  போயினர்.

    நிலை இவ்வாறு – அன்பு இச்சை என்பன ஒரு பொருளனவாதலின் அஃது இச்சையினையும், அறிவு ஞானத்தினையும், செயல் கிரியையினையும் உணர்த்துவன; எனவே அவரது இச்சை முதலிய மூன்றும் இறைவனையே விடயித்து நின்றன ஆதலின்

    “அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க,
    மலமாயை தன்னொடு வல்வினை யின்றே”

    என்று சிவஞானபோதத்திற் சொன்னபடி இறைவனது பணியில் நின்றார் திண்ணனார். அவரது இச்சை முதலியவை வேறொன்றினையும் கருத வில்லை.

    இங்கு நிலை இவ்வாறு என்றது இத்தன்மையிற் சிவத்தையேயன்றி மற்றொன்றிலும் செல்லாது சிவத்தோடு ஏகனாகி இறைபணி நின்ற நிலை குறித்தது. இந்நிலையில் நின்றாராதலின் மலமாயை தன்னொடு வல்வினையின்றாயின என்பதனை இந்தத் திருப்பாட்டில் விரித்துக் கூறினார்.

    அறிநீ – “அறிவிக்க வன்றி அறியா வுளங்கள்”  என்று சிவஞானபோதத்துக் கூறியபடி இறைவன் காட்டு கின்றாராதலின் அறிநீ – என்றார். அறிவிக்கும் முறை அடுத்த பாட்டிற் கூறுகின்றார். அருள் செய்வார் – செய்வாராகி. முற்றெச்சம். அருள்செய்வார் – மறை முனிவர்க்கருள் செய்து என அடுத்த பாட்டுடன் கூட்டுக.

    பின் குறிப்பு  (1806 – ன்கீழ் “பொருப்பினில் வந்து” என்பது முதலிய ஐந்து பாடல்கள் சில பிரதிகளிற் காணப்படுகின்றன. பல பிரதிகளில் அவை இல்லை. மேலும் கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரர் அருளிய பொருள்களை அவை அப்படியே கைக்கொண்டு மொழிந்து கொண்டனர்  என்பது பின்னர் அவ்வவற்றின்கீழ்த் தந்துள்ள பகுதிகளால் இனிது விளங்கும். சரித ஆதரவாகக் கொள்ளுதலன்றி இவ்வாறு பிறர் பொருளை எடுத்தாளுதல் ஆசிரியர் சேக்கிழார் மரபன்று. அன்றியும் அவற்றிற் பல பொருள்கள் முன்னர் உரைக்கப்பட்டன. ஓரிடத்துரைத்த  உவமை முதலியவற்றை ஆசிரியர் கூறியது கூறல் என்னும் குற்றம்படப் பின்னுங்கூறார் அல்லாமலும்

    அவற்றின் வாக்கும் போக்கும் ஆசிரியருடையவற்றினின்றும் வேறுபடுகின்றன. இன்னும் பார்க்கின் அவையில்லாமலே சரிதம் தொடர்ந்து செல்கின்றதும் காணலாம். காஞ்சிபுரம் சபாபதி முதலியார், ஆறுமுகத் தம்பிரானார் முதலிய ஆசிரியர்கள் அவற்றை வெள்ளிப் பாடல்கள் என்றே கொண்டனர். இக்காரணங்களால் அவை இடைச்செருகல்கள் என்று அறியப்படுதலின் இங்குப் பதிக்கப்படவில்லை. ஆயினும் சில பிரதிகளிற் காணப்படுதலால் இப்புராண இறுதியிற் குறிப்புக்களுடன் பதிக்கப்பட்டன.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 137 (பணிந்தெழுந்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 137 (பணிந்தெழுந்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திண்ணனார்  குடுமித்தேவரை  தரிசித்தபோது இருள் பரவத்தொடங்கியது. மூங்கிலிலிருந்து முத்துக்கள் உதிரும் மலைமேல் நிலவு ஒருபக்கம் ஒளி வீசியது. குகைகளில் நாகம் உமிழ்ந்த மணிகள் வெயில்போல் ஒளி வீசின. அங்கிருந்த பலவகை மாணிக்க மணிகளின் ஒளியும், பச்சைக்கற்கள் நீல மணிகள் ஆகியவை உண்டாக்கிய ஒளியும் சூரிய சந்திரர் போல் விளங்க அதுகண்டு இருளும் இரவும் ஒதுங்கின, ஒளிவீசும்  தீப மரங்கள், குரங்குகள் குகையில் வைத்த மணிகளாகிய விளக்குகள், ஐம்புலம் அடங்கியவரின் தியானசோதி ஆகியவை எப்போதும் இருப்பதால் திருக்காளத்தி மலையில் இரவின் இருளே இல்லை. அங்கே கண் துயிலாத திண்ணனார்  நள்ளிரவில் பறவைகள் எழுப்பும் ஒலி கேட்டார். இறைவனுக்கு அமுது கொண்டு வர எண்ணி அங்கிருந்து நீங்கினார். பன்றி முதலாயின எழுந்து  இயங்காத போதில் கையில் வில்லுடன் திண்ணனார் சென்றார். திண்ணனார் சென்ற அழகை உலகிற்குக் காட்ட, முகம் காட்டிய கதிரவன் அவர் வேட்டையாடுவதைக் காட்ட இருளை நீக்கிக் கதிர்க்  கைகாட்டினான்.  அப்போது, சிவாகம விதிப்படிப் பூசை புரிவதற்கேற்ற மலரும், நீரும் கொண்டு  மலைமேலிருந்த மருந்தாகிய பெருமானை வழிபடும் வழக்கமுடைய  சிவகோசரியார்,  சிந்தையில் பக்தியுடன் தேவர் தலைவராகிய பெருமானை நோக்கிச் சென்றார்.

    அங்கே இறைவன் திருமுன்பு வெந்த இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கண்டு விலகியோடி, ‘’உசிதமற்ற இந்தப் பொருள்களைக் கண்டு, ‘’ஐயோ கெட்டேன், இதனை யார் செய்தார்?’’ என்று மனமழிந்தார்.  சற்றும் அச்சமற்ற வேடுவரே இதனைச்  செய்திருப்பார். இவ்வாறு அவர் செய்து போகலாமா?இது நின் திருவுளத்துக்கு ஏற்றதோ? ஏறி பதறி அழுதார்.

    மலைமேல் எழுந்தருளும் இறைவனின் பூசனை தாமதமாகியதால் இனியும் நான் உயிர்வாழ்வதோ? என்று கூறி அங்கிருந்த இறைச்சி, எலும்புடன் இலையும், செருப்படி மண்ணும், நாயடி மண்ணும் தம் கையில் இருந்த திருவலகால்  ஒதுக்கித்  தள்ளினார். பின்னர் பொன்முகலி  நீரில் மூழ்கி விரைந்து வந்தார்;  உசிதமற்ற செயலால் விளைந்த தீமையினை நீக்கப் பவித்திரமான கழுவாய் புரிந்தார்; பின்னர் திருமஞ்சனம் முதலாகிய முழுமையான வழிபாட்டைப் புரிந்தார். இறைவன் திருவடி பணிந்தார்.

    பணிந்தெழுந்து, “தனிமுதலாம் பர” னென்று பன்முறையால்
    துணிந்தமறை மொழியாலே துதிசெய்து, சுடர்த்திங்கள்
    அணிந்தசடை முடிக்கற்றை யங்கணரை விடைகொண்டு
    தணிந்தமனத் திருமுனிவர்  தபோவனத்தி  னிடைச்சார்ந்தார்.

    பொருள்

    பணிந்து எழுந்து, “எல்லார்க்கும் சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார்” என்று பலமுறையாலும் துணிந்து ஒலமிடும் வேத மந்திரங்களினாலே துதித்து, ஒளியையுடைய சந்திரனை யணிந்த சடைக்கற்றை முடி யினையுடைய அங்கணராகிய காளத்தியப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு, தணிவு பெற்ற மனமுடைய சிவகோசரியாராகிய திருமுனிவர் தாம் தவஞ் செய்யும் வனத்திற் சார்ந்தனர்.

    விளக்கம்

    “தனிமுதலாம் பரன்” என்று பன்முறையால் துணிந்த மறை மொழி – விசுவகாரணன், விசுவரூபன், விசுவாதிகன், விசுவசேவியன் என்பன முதலாக வேதங்களாலே பலவகையாலும் துணிந்து துதிக்கப் பெற்ற வேதமந்திரங்கள்.

    பன்முறையால் என்பது,  பல முறைகளாலும்  என்பதைக் காட்டியது. பன்முறையாவன நமக சமகங்களிற் கூறியபடியும் மற்றும் பலபடியும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் எனத் துணிந்து துதித்தல். இவற்றை, சிவபெருமான் யாவுமானவர்; அவரே யாவுமல்லாதவர்; சிவனை ஒப்பாரும் அவனின் மிக்காருமில்லை; சிவன் எண்குணமுடையவர்; சிவபெருமான் ஒருவரே பிறப்பில்லாதவர்; சிவன் வேதாகம் முதலிய எல்லா நூல்களுக்குங் கர்த்தா; சிவபெருமான் எண்ணிறந்த கண், கால், சிரம் முதலியவற்றை யுடையவர்; அவர் எல்லா நாமங்களாலுங் கூறப்பட்டு எல்லாமாயுள்ளார்; அவர் சோதியுட் சோதி; சிறியதிற் சிறியர்; பெரியதிற் பெரியர்; சிவனே பசுபதி; அவரே தேவதேவர் என்பன வேதவாக்கியங்களாகும்.

    மறை மொழி – அதர்வசிகை, சுவேதாசுவரம் முதலியன. இங்குப் பவன் முதலிய எட்டு நாமங்களாற் றுதித்துப்பூசை முடிவில் அட்டபுட்பம் சாத்தும்முறை குறிக்கப்பட்ட தென்பார்.

    சுடர்த்திங்கள்   என்ற தொடர்,  முன்னர்க் குறைந்த ஒளியை மீண்டும் சிவனருளால் வளரப்பெற்று அந்த ஒளியை உணர்த்தியது.

    திங்கள் – மூன்றாம் பிறைச் சந்திரன். திருவருளாலே வளர்த்த ஒளி என்று குறிக்கச் சுடர் என்று சிறப்பித்தார்.

    திங்கள் அணிந்தசடை – அங்கணர் – இவ்விரண்டும் சேரக் கூறியது, இறைவர் தமது திருமுன்பே இவ்வநுசிதம் நிகழப் பார்த்தனரே என்றெழுந்த முனிவரது மனக்கொதிப்பையும் பதைப்பையும் மாற்றி அங்கண்மையுடன் அவர்க்கு உண்மையன்பின் திறத்தைத் தேற்றம்பெற உணர்த்தியருளும் திருவருளின் அங்கண்மை பற்றியாம்.

    தணிந்தமனம் – காம முதலிய தீக்குணங்களை யெல்லாம் வென்று? ஆன்ற சாந்தமுடைய மனம். இது பெருமுனிவர்களது மனத்தின் நன்மை யென்பார் திருமுனிவர் என்றார். இக்கருத்துபற்றியே வரும்பாட்டிற் பெருமுனிவர் என்றதும் காண்க.

    “அறத்திற்கே யன்புசார் பென்பவறியார்,
    மறத்திற்கு மஃதே துணை” என்றதிருக்குறளும் காண்க.

    “பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றும்,
    செற்ற மேவிய சீலமு முடையராய்த்திகழ்வார்”.

    என்றதும், “மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்” என்று திருநந்திதேவர் கேட்ட வரமும் காண்க. முன்னர்க்கொதித்த மனம் பூசையினால் தணிந்த மனமாயிற்றென்று உரை கூறுவாருமுண்டு.

    விடைகொண்டு – வழிபாட்டின் முடிவில் இறைவனை வணங்கி விடை பெற்றுச் செல்லுதல் மரபு.

    இப்பாடலில், சிவகோசரியார்  உள்ளத்துடிப்பும், பதற்றமும், பின்னர் அவர் செய்த கழுவாயும், மீள் பூசையும், வேடன் செய்த  வழிபாட்டின் மேல் கொண்ட சினமும்  புலப்படுகின்றன. இச்செயல்  இயல்பானதே!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 136 (சார்வரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 136 (சார்வரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    மலைமேலிருந்த சிவக்கொழுந்தை நேரில் கண்ட திண்ணனார் மகிழ்ச்சி  வேகத்தால்  அருகில் சென்று  தழுவி முகம்சேர்த்தி நின்றார்; அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது; கண்ணீர் மல்க அப்பெருமான் மேல் பரிவு கொண்டவராய் ‘‘அடியேன் கண் முன் இவ்வாறு உள்ளாரே!’’ என்று நின்றார்;  வேடுவர் வாழும் மலைமேல் யானை, வேங்கை, கரடி ,சிங்கம் திரிகின்ற இடத்தில் துணை புரிவார் யாருமின்றி இப்படி இருக்கலாமா?  என்று மனம் வருந்தினார்; தம் கையிலிருந்த வில் கீழே விழ, ‘’இங்கே இவர்மேல் பச்சிலையும் பூவும் பறித்து இட்டுச் சிதைத்தவர் யார்?’’ என்று கேட்டார்; அருகிருந்த நாணன் ‘’இதை நான் அறிவேன்!  முன்னர் உன் தந்தையுடன் வேட்டையாடிய போது இங்கே வந்தோம்; அப்போது இவரை நீராட்டி இலை, பூ, ஆகியவற்றைச் சூட்டி ,  ஒரு பார்ப்பனர் ஏதோ சொன்னதைக் கண்டோம்; இன்றும் அப்பார்ப்பனரே செய்திருப்பார்!‘’என்றான். திண்ணனார் உள்ளத்தில் அன்பெழுந்தது! அன்புடன் அந்தப் பார்ப்பனர் செய்தவை, திருக்காளத்தி இறைவனுக்கு இனிய செய்கை போலும் என்று எண்ணினார்.தாமும் அதையே செய்ய வேண்டும் என்று அங்கேயே ஆதரவாய் நின்றார்; ‘’இவர் நான் காணத் தனியாய்  இருந்தார்! இவருக்கு உணவூட்ட இறைச்சியிட்டவர் இல்லை! இவரை என்னால் பிரிய இயலாது; என்செய்வேன் ‘’ என்று சிந்தித்து, ‘’இவருக்கு இறைச்சியை நானே கொண்டு வர வேண்டும்!’’ என்று கூறி, அங்கிருந்து செல்வார்; மீண்டும் வருவார்; அரவணைப்பார்; மீண்டும் போகாமல் அன்புடன் நோக்குவார்; கன்றைவிட்டு நீங்கிய பசுவைப்போல் நிற்பார்; ‘’நானே சென்று நல்ல இறைச்சியைக் கொண்டுவந்து கோதற அமைத்து ஊட்டுவேன்!’’ என்பார்; ‘’துணைவரின்றி நீர் இங்கே இருப்பதா? என்று நீங்க மனமில்லை; உங்கள் பசியை எண்ணி இங்கே நிற்கவும் மனமில்லை!’’ என்று கண்ணீருடன் இங்கிருந்து வில்லேந்திப் புறப்பட்டார்.

    பொன்முகலி  ஆற்றை அடைந்த அவரிடம் நாணனுடன் சோலையில் நுழைந்தார். அங்கிருந்த காடன், ‘’தீ மூடிட்டி வைத்துள்ளேன்! வேட்டையாடிய பன்றியின் உறுப்புகளைப்   பாருங்கள்! என் இவ்வளவு தாமதம்?’’ என்றான். உடனே நாணன், ‘’இவர் மலைமேலிருந்த  சிவனை அணைத்துக்கொண்டு. பொந்தினைப் பிடித்துக்கொண்டு விலகாமல் நின்ற உடும்பு போல அங்கேயே நின்றார், அவர் உண்ண  இறைச்சி எடுத்துக் கொண்டு போகவே இங்கு வந்தார்! நம் வேடுவர் குலத்துத் தலைமையை விட்டு நீங்கினார்; அவருக்கே ஆட்பட்டார்!’’ காடன் ‘’என்செய்தாய்? ‘’என்று கேட்டதை உணராமல், பன்றியை  நெருப்பில் வாட்டித் தசையை அம்பில் கோத்து எடுத்துக்கொண்டு, அவற்றை வாயிலிட்டு அதுக்கி , நல்ல  பதத்தில் உள்ளவற்றை ஓர்  இலையை  மடக்கி தொன்னையாக்கி எடுத்து  வைத்துக்  கொண்டார். மற்றோர் ‘’;இவன் என்ன செய்கிறான்? தசையுணவை வாயிலிட்டு  மீண்டும் உமிழ்ந்து, பசியுடையவன் போல, எமக்கும் தராமல் வேண்டாதவற்றை வீசி எறிகின்றான்?,  இவனுக்கு இறைவன் மேல் மயக்கம் வந்து விட்டது! இதனைத் தீர்க்க நாம் வேட்டுவிச்சியுடன் நம் ஏவலரையும் அழைத்து வருவோம்!’’ என்றெண்ணி அகன்றார்.

    வேடர்கள் அகன்றதை நினையாமல், அந்த இலை மடக்கில் ஊன் அமுதை ஏந்தி, இறைவனுக்கு நீராட்ட எண்ணி, நதிநீரை வாய்க்குள் அடக்கிக் கொண்டு, கொய்த பூக்களை சடைமேல் கட்டிக்  கொண்டு, கையில் வில்லேந்தி, மறுகையில் உணவை ஏந்தி எடுத்துக் கொண்டு, ‘’எம்பிரானுக்குப் பசிக்குமே!’’ என்று வருந்தி ஏங்கித் திண்ணனார்  விரைந்து மலைமேல் ஏறினார்.

    ‘’நம் தலைவர் பசியால் வாடினாரே!’’ என்று விரைந்து சென்று சிவலிங்கத் திருமேனி முடிமேல் இருந்த மலர்களைக் காற் செருப்பால் தள்ளி, வாயிலிருந்த அபிடேக நீரை அன்பையே உமிழ்வார் போல முடிமேல் உமிழ்ந்தார்! தலைமேல் சூடி வந்த பூமாலையைச்  சாத்தி, இலை  மடக்கில்  இருந்த ஊன் உணவை இறைவன் எதிரே வைத்தார். கொழுத்த தசைகளை அம்பில் கோத்து, அழலில் காய்ச்சிய ஊனைப்  பல்லிலிட்டு அதுக்கி , நாவால் அதன் சுவையைப்  பார்த்து, ‘’ இந்த இறைச்சி மிகவும் சுவையாய் இருக்கிறது! இறைவனே, அமுது செய்க!’’ என்றார்.

    அப்போது இன்னும் இறைவருக்கு உணவிட வேண்டும் என்ற அவர்தம் ஆசையைக் கண்ட கதிரவன் வணங்கியபடியே மலையில் மறைந்தான்! இரவு நெருங்கவும், ‘’இங்கே கொடிய விலங்குகள் உள்ளன’’ என்றெண்ணி அன்புடன்  கையில் வில்லேந்தி மலைமேல்  இருந்த இறைவன் பக்கத்தில் சிலை போல் நின்றார்! இதனைச் சேக்கிழார் ,

    ‘’சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர் தாமும்
    கார்வரை யடவி சேர்ந்தும்  காணுதற்கு  அரியார் தம்மை
    யார்வம்  முன்பெருக ஆரா அன்பினில்  கண்டு கொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார் நீளிரு ணீங்கநின்றார்’’

    என்று பாடினார்

    பொருள் :   சார்தற்கரியனவாகிய தவங்களைச் செய்தும், மேகங்கள் தவழும் மலைகளையும் காடுகளையும் சேர்ந்தும், முனிவர்களும் தேவர்கள் தாமும் காணுதற்குஅரியவராகிய சிவபெருமானை ஆசைமுன்னே பெருக ஆராத அன்பினாலே கண்டுகொண்ட படியே நேர்பெற நோக்கி நின்றார்; நீண்ட இருள் நீங்கும்படி நின்றார் (திண்ணனார்).

    விளக்கம்:

    சார்வரும் தவங்கள் – விரதம், யோகம்முதலியன. தவம் – தபித்தல் – வாட்டுதல்  என்ற பொருளில் வந்தது.  இங்கு உடலைவாட்டிப் புலன்களை ஒறுக்கும் முயற்சியிற் செய்யப்படுவனவாகிய சாதனங்களைக் குறித்து நின்றொழிந்தது. அவை வெயிற்காலத்துத் தீயினிடை நிற்றல். குளிர்காலத்து நீரினிடை நிற்றல், இட்டிகளை இயற்றல் முதலியன.

    “மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள், மக்களை மனைவியை
    யொக்கலை ஓரீஇ,
    மனையும் பிறவும்  துறந்து நினைவருங், காடும்  மலையும் புக்குக்
    கோடையில் ,
    கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி, ஐவகை நெருப்பின்
    அழுவத்து நின்றும்,
    மாரி நாளிலும் வார்பனி நாளிலும், நீரிடை மூழ்கி நெடிது
    கிடந்தும்,
    சடையைப் புனைந்தும்  தலையைப் பறித்தும் , உடையைத் துறந்தும்
    உண்ணாது  உழன்றாங்கு
    காயும்  கிழங்கும்  காற்றுதிர்சருகும், வாயுவும்  நீரும்
    வந்தனஅருந்தியுங்,
    களரிலும்  கல்லிலும்  கண்படை கொண்டுத், தளர்வுறும்
    யாக்கையைத் தளர்வித்து
    அம்மை முத்தி யடைவதற் காகத், தம்மைத் தாமே
    சாலவு மொறுப்பர்…

                  – திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (19)

    என்று பட்டினத்தடிகள் இவற்றை விரித்துரைத்தது காண்க.

    முனிவர் – மனனசீல முடையார். அமரர் – சாவா மருந்துண்ணல் முதலியவற்றால் மரணத்தைத் தடுத்து நிற்பவர்  வானோர்; இவர்கள் முதலியோரினும் உயர்ந்த நிலை யுடைமையால் முனிவர் முன் வைக்கப் பட்டனர்.

    வரை அடவி – வரைகளையும் அடவிகளையும். அடவி மரங்கள் அடர்ந்த காடு, தவங்கள் செய்தும் அடவி சேர்ந்தும் என்க. செய்து சேர்த்தும், சேர்ந்து செய்தும், எனக் கூட்டியுரைப்பினுமாம்.

    “புற்று மாய்மர மாய்ப்புனல் காலே யுண்டியாய் அண்ட வாணரும் பிறரும்,
    மற்றி யாருநின் மலரடி காணா மன்ன!”

    என்பது திருவாசகம்.

    காணுதற்கு அரியார் – அருந்தவங்களாலும் காண்டற்கரியார். இவை ஆன்மபோத முனைப்பினாற் செய்யப்படுவன ஆதலின் அரியராயினார். அன்பு மிகுதியால் ஆன்மபோதம் சிவபோதத்துளடங்கி நின்றவழி இறைவர் எளியராய் வெளிப்பட்டருளுவர் என்பதை  எல்லா நூல்களும்  கூறும்.

    “முத்திக் குழன்று முனிவர் குழா நனிவாட –
    அத்திக் கருளிஅடியேனை யாண்டுகொண்டு –
    பத்தி கடலுட் பதித்த பரஞ்சோதி”

    என்பது  திருவாசகக் கருத்து.

    ஆரா அன்பினிற் கண்டுகொண்டே – மேன்மேல் வளர்ந்து மீதூரும் அன்பதனுள் இறைவன் வெளிப்பட, அவனைக் கண்டவண்ணமாகவே.

    “பாசங்கழித்த கண்களால்  அரனுருக் கண்டுகொண்டு”

    என்பது திருவிளையாடற் புராணம்.

    நேர் பெற நோக்குதல் – காண்பானும் காட்சிப் பொருளும் காட்சியும் வேறு தோன்றாமல் ஒன்றாம் வண்ணம் ஊன்றிப்பார்த்தல்.

    நின்றார் – அச்செயலிலே நிலைத்து நின்றனர். மேற்பாட்டில் அகலா நின்றார் என்றதும் காண்க. மேற்பாட்டால் அவர் நின்ற புறச்செயலும், இப்பாட்டால் அவர் நின்ற அகச்செயலும் கூறப்பட்டன.

    நீள் இருள் நீங்க நின்றார் – நீள் இருள் – நீண்டு சென்றதாகிய அவ்விரவு. தலைவனிடத்துப் பணிசெய்யும் அன்புமிகுதி யுடையார்க்கு அந்தப் பணிவிடைக்கும் தமக்கும் இடையில் இடையூறாய்த் தடுத்துநிற்கும் காலம் சிறிதேயாயினும், ஊழிபோல நீண்டுக் காட்டும் என்பது அகத்திணை யினியல்பாம்.

    “மிகுபுலவிப் புனர்ச்சிக்கண் ஊழியாம்  ஒருகணந்தான்;
    அவ்வூழி யொருகணமாம்”

    என்று இதன்இயல்பை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்து ஆசிரியர் சுவைபடக் காட்டுவது காண்க.

    நீங்க நின்றார் – நீள் இருள் நீங்குதலை எதிர்பார்த்து நின்றார்.  “புலரும் படியன் றிரவும்” என்றபடி, இந்நீண்ட விரவு நீங்குவதனையும், பொழுது விடிவதனையும், இறைவனைப் பின்னரும் ஊட்டுவதனையும் எதிர்பார்த்து நின்றனர். இனி, நீள் இருள் நீங்க – அநாதியே பந்தித்து உயிருடன் தொடர்ந்த நீண்ட இருளாகிய ஆணவமலம் நீங்கியதனாலே – முன்னர் அங்கணரது அருட்டிரு நோக்கம்  எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கியதனாலே; நின்றார் – சிவத்தோடொன்றாய் நிலைபெற்றனர் என்ற குறிப்பும் காண்க. ஆணவமலம் நீங்காதவழிக் கறங்கோலைபோல ஆன்மா ஒருவழியில் நில்லாது சுழற்சியுறும்.

    “மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொருமத்துறவே”,

    “வன்மத்திட வுடைந்து, தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன்”

    என்ற திருவாசகங்கள் காண்க. ஆதலின் ஆணவமலம் நீங்கியதனால் நின்றார்.

    நீங்க நின்றார் – மேற் பாட்டில் அகலா நின்றார் என்றார்; எவ்வகை நின்றாரெனின்? நேர் பெற நோக்கி நின்றார்; எவ்வளவும் நின்றார் எனின்? நீளிருள் நீங்கு மளவும் நின்றார் என இவ்விரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து பொருள் பொருந்த உரைத்துக் கொள்ள நின்றன.

    நோக்கி நின்றார் …. நீள் இருள் நீங்க நின்றார் – இருள்நீங்க – உயிர்கள் இருளை நீங்க என்று கொண்டு, அவர் நோக்கி நின்றதானால் உலகத்தில் உயிர்கள் அன்பின் நிலைகண்டு ஆணவ இருள் நீங்கி உய்யுமாறு நின்றார் என்றதொரு குறிப்பும் காண்க.

    நீங்கநின்றார் – நின்றாராகிய திண்ணனார் என வினையாலணையும் பெயராக்கிப் பெரிய மலவிருள் அகத்தினின்று நீங்கும்படி நின்றவராகிய திண்ணனார் நேர் பெற நோக்கி நின்றார் என்று பொருள் கூட்டி உரைக்கலாம்.

    இப்பாடலில் முனிவரும் சித்தரும் யோக்கியரும் களவிறந்த நெடுங்காலம் தம் செய்தும் காண வியலாத  பெருமானைத்  திண்ணனார் தவமேதும் செயாமலே  எளிதாக, ஆறாத அன்பினால் மட்டுமே நேரில் கண்டார் என்பதும்,  பெருமானும் இவரைக் கண்டார் என்பதும், இவர்  பக்திக்  குறிப்புக் கொண்டு   நோக்கியபடியே , தம்  மலவிருள் நீங்கும் வரை நின்றார். என்று விளக்கப் பெறுகிறது!

    Share