Category: மரபுக் கவிதைகள்

  • திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனாரின் திருக்குமரன் அருளாலே அருணகிரி
    அமுதமாய் திருப்புகழை அள்ளியே வழங்கினார்
    அள்ளியே வழங்கிய அமுதத் திருப்புகழை
    தமிழன்னை மனமேற்றித் தானணைத்துக் கொண்டாள்

    சம்பந்தப் பெருமானே சந்தத்தின் தந்தை
    அவர் வழியைப் பற்றினார் அருணகிரிநாதர்
    அன்னைத் தமிழன்னை அகமகிழச் சந்தத்தை
    அள்ளி அள்ளி வழங்கினார் அருணகிரிநாதர்

    இத்தனை சந்தங்கள் எப்படித்தான் வந்தனவோ
    எண்ணியே பார்த்திட்டால் வியப்புத்தான் எழுகிறது
    பக்தியுடன் அருணகிரி பாடிவைத்த அனைத்தும்
    சித்தமதைத் திருத்த வந்த தத்துவங்களாகும்

    அருணகிரி வாழ்விலே அளவிலாத் துன்பம்
    துன்பத்தைத் தாங்காமல் துடித்தாரே அருணகிரி
    மண்ணைவிட்டு மறைந்துவிட மலையுச்சி நின்றார்
    விழுகின்ற வேளையிலே வேலவனே தாங்கினார்

    தாங்கி நின்றவேலவன் தமிழ்பாடு என்றார்
    முத்தைத் தருவே முதலாக வந்தது
    திருமுருகன் தாங்கியதால் திருப்புகழே மலர்ந்தது
    தமிழன்னை செய்தவத்தால் சந்தக்கவி நிறைந்தது

    திருப்புகழைப் பாடினால் செய்தவினை அகலும்
    திருப்புகழைப் பாடினால் சிறப்பாக வாழ்ந்திடலாம்
    திருமுருகன் ஓடிவந்து திருவருளைத் தந்திடுவான்
    தினமுமே திருப்புகழைப் பாடிடுவோம் வாருங்கள்

    துன்பமும் துயரமும் சொல்லாமல் ஓடிவிடும்
    துரத்துகின்ற வல்வினைகள் பொடிப்பொடியாய் ஆகிவிடும்
    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்
    திருத்தமுடன் வாழுதற்குத் திருப்புகழைப் படித்திடுவோம் !

    Share
  • மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    திருவாத வூரார் சிறப்பினை அறிந்து
    அரசனே நாடி அமைச்சர் ஆக்கினான்
    அமைச்சராய் இருந்தார் அலங்காரம் வெறுத்தார்
    அவரது அகமோ புனிதமாய் இருந்தது

    ஆடம் பரங்கள் அரசுச் சுகங்கள்
    அமைச்சராய் இருந்தும் அகமேற்க வில்லை
    ஆண்டவன் நினைப்பு ஆன்மீகச் சிந்தனை
    திருவாத வூரரின் சிந்தையை நிறைத்தது

    பொன்னையும் பொருளையும்  பொருட்டென எண்ணா
    மன்னனின் அவையில் இருந்தார் அவரும்
    மன்னனின் மனத்தின் மாறு பாட்டினால்
    அமைச்சராய் இருந்தவர் அல்லற் பட்டார்

    அல்லல் பட்டதை ஆண்டவன் பொறுக்கா
    அமைச்சரைக் காத்து அரசனை மாற்றினார்
    வாதவூர் பிறந்தார் பரமனைக் கண்டார்
    மனதில் உள்ளதை மாணிக்கம் ஆக்கினார்

    மனிதராய் பிறந்த மாணிக்க வாசகர்
    சொல்லச் சொல்ல சொக்கன் எழுதினார்
    சொக்கனே சொக்கினார் சுந்தரத் தமிழில்
    செந்தமிழ் தேனாய் திருவாசகம் மலர்ந்தது

    உருகா மனத்தையும் உருகிட  வைக்கும்
    திரு வாசகத்தைத் தேனே என்போம்
    உருவாய் அருவாய்  இருக்கும் இறைவன்
    உணர்வாய் இருப்பான் திரு வாசகத்தில்

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே
    அழுதார் தொழுதார் அவனடி பற்றினார்
    அழுகை அனைத்தும் அருந்தமிழ் ஆனது
    ஆனது அனைத்தும் தத்துவக் குவியலே

    அறுபத்து மூன்று நாயன் மாரும்
    அரனது அருளினைப் பெற்றவர் ஆவார்
    திரு வாசகத்தேனை ஈந்தவர் மட்டும்
    சிவனது பாதத்தின் அருகிலே அமர்ந்தார்

    உருவில் ஆணாய் உணர்வில் பெண்ணாய்
    திருவாசக மனைத்தும் செப்பினார் வாசகர்
    அதனால் உருக்கம் அதனால் இரக்கம்
    அனைத்தும் வாசகர் தமிழாய் மலர்ந்தது

    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவனருள்
    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவமே
    எண்ணில் அடங்கா எத்தனை தத்துவம்
    தத்துவம் அனைத்தும் தளையெலாம் போக்கும்  !

    Share
  • அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீல வானத்தில் நெருப்புக் கோளம்
    வெடித்துச் சிதறி வெந்தணலாய் வீழ்கிறது
    நிலமெங்கும் நெருப்பாறு நீண்டோடி நிற்கிறது
    சிதறிய உடல்கள் பரவியே கிடக்கிறது

    ஓலமிடும் குரல்கள் உலுக்கியே நிற்கிறது
    வானிருந்து குண்டுமழை பொழிந்தபடி இருக்கிறது
    வட்டமிடும் கழுகாக வந்துவிழும் எறிகணைகள்
    மனிதவுயிர் பாராமல் பலியெடுத்து நிற்கிறது

    நீள்கடலும் வானும் நீண்டநிலப் பரப்பும்
    போர்முழக்கம் கேளா செய்துவிடல் வேண்டும்
    போரரக்கன்  ஓட  பேரெழிச்சி  கொண்டு
    சமாதானச் சங்கெடுத்து ஊதிவிட வேண்டும்

    மண்ணாசை பொன்னாசை மாறாத ஆசை
    வாய்பேசாக் குழந்தைகளை வதைக்க வருகிறதே
    பள்ளிகள் மீதெல்லாம் அள்ளியே வீசி
    பாலகர்கள் மடிவதனை  வேடிக்கை பார்க்கிறதே

    ஊரெல்லாம் பற்றியே எரிகின்ற வேளை
    உப்பரிகை உல்லாசம் ஒருகாலும் நிலைக்கா
    பிணந்தின்னும் பேய்களாய் மாறுகின்ற மனங்கள்
    பிணமாகப் போவதை அறியாத தேனோ ?

    ஓலமிடும் குரல்கள் ஓய்ந்துவிட வேண்டும்
    நீள்நிலத்தில் அமைதி  நிறைந்து விடவேண்டும்
    ஆரழுதும் நிற்கா ஆறுதலே வேண்டும்
    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    Share
  • மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
    வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
    தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
    நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

    கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
    கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
    நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
    நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா

    அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
    அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
    உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
    உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

    சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
    எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
    வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
    இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய்

    துட்டரைத் துரத்தவேணும் கெட்டாரைத் திருத்தவேணும்
    மட்டில்லா மதுகுடிப்பார் மனம்மாற வைக்கவேணும்
    அட்டகாசம் செய்வாரை அடக்கியே வைப்பதற்கு
    ஆயுளை நீடித்து அளித்திடுவாய் ஆண்டவனே

    அன்னதானம் செய்யவேணும் அறப்பணிக ளாற்றவேணும்
    ஆதரவற்றோரை அரவணைத்துப் பார்க்க வேணும்
    மெலியாரை வருத்தும் வலியராரை திருத்தவேணும்
    நிலமீது எனக்கிறைவா நீண்டநாள் தந்திடுவாய்

    தளராத மனம்வேணும் அன்பகலா நிலைவேணும்
    உளமுழுதும் பழுதில்லா உயர்குணமே வேணும்
    வழுவில்லா நாளெல்லாம் வாழவே வேணும்
    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    Share
  • பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    அவர் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய விருத்தம் இது.

    ஆண்பால் ஒளவை!

    – அண்ணாகண்ணன்

    பாட்டாலே பாரதிநீ! பளபளக்கும்
    பைந்தமிழால் அவன்தாசன்! படைத்த நூலால்
    கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும்
    கீழடையாத் தரத்தாலே ஷெல்லி! சென்ற
    நாட்டாலே புகழ்நாட்டும் தாகூர்! கொண்ட
    ஞானமதால் இறக்காத மில்டன்! நீதான்
    பூட்டாலே அடங்காத புஷ்கின்! வீழும்
    பூந்தமிழை வாழவைக்கும் சேது ராமன்!

    கற்பனையால் காதலினால் கண்ண தாசன்!
    கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ! கவிதை சொல்லும்
    கற்பகமாய் நின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும்
    கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டீஸ்நீ!
    அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்!
    அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட
    உற்சவமே வாஸ்கோட காமா! என்றும்
    உண்மைகளின் சீருருவே சேது ராமா!

    கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல
    கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ! வெண்பாப்
    புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்!
    போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்நீ!
    குவியாத தாமரைநீ! ஒட்டக் கூத்தன்!
    கொலுவீற்ற தமிழால்நீ ஆண்பால் ஒளவை!
    செவிமோதும் அமுதத்தால் சேது ராமன்
    செம்மாந்த தமிழ்போல நீடு வாழி!

    Share
  • மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
    மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
    முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
    மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
    கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
    கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
    மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
    மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

    நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
    நலம்சேர் கோவைப் பதிவாழ்க
    முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
    முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
    பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
    புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
    அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
    அணிசேர் கோவைப் பதிவாழ்க

    வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
    வளம்சேர் கோவைப் பதிவாழ்க
    செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
    செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
    இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
    எழில்சேர் கோவைப் பதிவாழ்க
    குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
    குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

    – அண்ணாகண்ணன்

    Share
  • நினைவுகள் கரைந்திடும் மாயம்

    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

    மரத்தில் பூத்த கதிர் மலர்
    காமபாணம் கொண்டது
    நிலத்தில் பூத்த கவி மலர்
    காதல்நாணம் கொண்டது
    குளத்தில் பூத்த பதுமமோ
    இதழ்விரியச் சிரித்தது மின்
    தளத்தில் பூத்த பதிவிலோ
    தமிழும் பொழியச் சிவந்தது

    இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
    விழித்ததும் மறைந்து போகும்
    உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
    முதிர்வினில் மறந்து போகும்
    பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
    பிணியினில் மறத்து போகும்
    பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
    இறப்பில் எரிந்து போகும்

    பயணம் முடிந்த தருண மெல்லாம்
    சீட்டை கிழித்திடும் நாளும்
    அயனம் மாறிடும் உதய மெல்லாம்
    ஏட்டைப் புரட்டிடும் மேலும்
    சயனம் நிரந்தர மாகிடுமேனி
    சடலம் என்றவர் காணும்
    நயனம் பெருகிடும் நீராற்றில்
    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

     

    Share
  • கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்
    சத்தியமணி. தில்லி

    கணுப் பொங்க லிட்டேனே
    காணும் பொங்க லிட்டேனே
    மனப் பொங்க லிட்டேனே
    மங்களப் பொங்க லிட்டேனே
    மஞ்சள் பொங்க லிட்டேனே
    வண்ணப் பொங்க லிட்டேனே
    தரையில் கோலமும் இட்டேனே
    மஞ்சள் இலைகளை வைத்தேனே
    திரியில் விளக்கு ஏற்றியபின்
    தாயின் முகத்தை நினைத்தேனே
    கீழ்திசை நோக்கிட பரிமாற
    கவளப் பிடிகளைப் படைத்தேனே
    காக்கை குருவிகள் கிளிகளையும்
    சாப்பிட வேண்டி துதித்தேனே
    உங்களைப் போலொரு கூட்டாக
    ஒற்றுமை கற்பிக்க அழைத்தேனே
    உடன் பிறந்தோமென உணர்வோடு
    ஒருதாய் பெற்ற உறவாலே
    பிரிவு வெறுப்பென இல்லாமல்
    பரிவுடன் வாழ்ந்திட வாழ்த்திடவே!
    பதவி பணவெறி தாக்காமல்
    உதவி கரங்களை விழைந்திடவே!
    நன்றி மறவா எண்ணமுடன்
    கடந்த காலம் நினைத்திடவே
    தன்னலப் பொந்தினில் இல்லாது
    தருவதும் பெறுவதும் நிறைந்திடவே
    கரும்பை இணைப்பது கணுவாகும்
    பாசம் இணைப்பது உறவாகும்
    கரும்பின் இனிப்பினு மேலாகும்
    பிறவிக்கு அன்பும் அமுதாகும்
    ஊணும் உயிரும் உறவாடும்
    காணும் பொங்க லிதுவாகும்

     

    Share
  • அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தை, சிவனைப் போற்றிடும் குடும்பம்
    சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
    பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
    பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர்

    சிவனை, சைவத்தைச் சிந்தையில் இருத்திட
    பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
    பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
    நற்றவச் செல்வமாய்  நன்றாய் வளர்ந்தனர்

    இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
    நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
    பெற்றவர் மகிழ்ந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
    காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்

    காலம் ஓடின பெற்றோர் பிரிந்தார்
    கணவனை இழந்தாள் தம்பியை அணைத்தாள்
    தம்பிக்குத் தாயாய் ஆகியே நின்று
    தம்பியைக் காத்திட சாமியை வேண்டினாள்

    தம்பி பெயரோ மருள் நீக்கியார்
    மருளது அகன்றிட வழிவகை செய்தாள்
    படித்தான் படித்தான் பலதும் படித்தான்
    சஞ்சலப் பட்டதால் சமணத்தில் கலந்தான்

    தம்பியின் போக்கால் தமக்கை நொந்தாள்
    எம்பிரான் திருவடி பற்றியே நின்றாள்
    சமணத் தலைமை ஏற்றிட்ட தம்பி
    தன்னுள் மாற்றம் வருவதை உணர்ந்தான்

    சகோதரி வேண்டுதல் சங்கரன் ஏற்றான்
    தம்பியை மாற்றிடச் சங்கரன் விரும்பினான்
    சூலை வந்தது சூழ்நிலை கலைந்தது
    மீளவும் தம்பி சைவம் பற்றினான்

    பற்றிய தம்பி பாடினான் பாடினான்
    நற்றமிழ் நாவில் ஊற்றென வந்தது
    நெற்றிக் கண்ணனும் பற்றினான் பாடலை
    நாவுக் கரசனாய் வாழ்ந்திட அருளினான்

    தரும சேனராய் சமணத் தலைவராய்
    இருந்தவர் மாற்றம் எரிச்சலைத் தந்திட
    சமணர் எதிர்த்தார் தண்டனை கொடுத்திட
    ஆண்ட அரசனை அணுகினார் அனைவரும்

    அரசனும் சமணன் ஆட்சியும் சமணமே
    அதிகாரம் அனைத்தும் சமணத்தின் வசமே
    கைது செய்திடக் கட்டளை பிறந்தது
    காவலர் விரைந்தனர் கைதினை மேற்கொள

    அரசன் ஆணையை அறைந்தனர் காவலர்
    அரனின் அடியார் ஆத்திரம் கொண்டார்
    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    துணிவுடன் சொல்லிப் பணியவே மறுத்தார்

    வெகுண்டான் அரசன் வில்லங்கம் விளைந்தது
    சமணக் கூட்டம் சந்தோஷம் கொண்டது
    நீற்றறை பூட்டினார் நஞ்சினை ஊட்டினார்
    யானையை ஏவியே கொன்றிட முயன்றார்

    கல்லுடன் கட்டிக் கடலினுள் வீசினார்
    நற்றுணை நாமமாய் நமச் சிவாயவே
    உற்றிடு துணையாய் ஆகியே நின்றது
    கற்றுணை அங்கே தெப்பமாய் மிதந்தது

    நாதனின் அருளால் அனைத்தும் அகன்றன
    நாட்டினை ஆண்டவன் பணிந்துமே நின்றான்
    சைவம் தழைக்க வழியும் பிறந்தது
    சங்கரன் நாமம் தமிழெலாம் நிறைந்தது

    நாவுக் கரசரை நற்றமிழ் பெற்றது
    நம்சைவம் நல்லதோர் அடியாரைக் கண்டது
    திருமுறை புதியதோர் கருவினைப் பெற்றது
    தத்துவம் வித்துவம் தமிழினை நிறைத்தது

    புதுமையைப் புகுத்தினார் புரட்சியைக் காட்டினார்
    சமுதாயம் தழைக்கச் சைவத்தை வளர்த்தார்
    திருவருள் நம்பினார் செப்பினார் திருமுறை
    குருவென இறையின் திருவடி பற்றினார்

    அரனைத் தொழுவார் அனைவரும் சமமென
    அரிய தத்துவம் அப்பர் மொழிந்தார்
    ஈசன் நாமத்தை இதயம் இருத்துவார்
    இன்னல் அகன்று இருப்பார் என்றார்

    நிலைபெற இருக்க எண்ணிடும் யாவரும்
    நித்தம் கோவில் செல்லுக என்றார்
    படி முறையாகப் பலபல செய்திடப்
    பலரும் உணர்ந்திடப்  பாடமும் நடத்தினார்

    வணங்கத் தலையும் வாழ்த்த வாயும்
    கும்பிடக் கையும் பூக்கொய்திட விரல்களும்
    நற்பணி செய்ய நடந்திடக் கால்களும்
    தந்தவன் இறைவன் என்றுமே மொழிந்தார்

    தொண்டினை முதலாய்க் கொண்டவர் அப்பர்
    என்றுமே உழவாரம் ஏந்தியே நின்றார்
    உழைத்திடல் உயர்வெனக் கண்டவர் அப்பர்
    உழைப்பவர்க்கு இறைவனும் உதவுவான் என்றார்

    பக்தி உலகினில் முத்தாய் ஒளிர்கிறார்
    பக்குவம் பெற்றிட்ட பரமனின் அடியார்
    ஓடும் செம்பொனும் ஒன்றென நோக்குவார்
    ஓரிறை சிவனென உலகிடை வாழ்ந்தவர்

    எண்பத் தொன்றில் இறைவன் அழைத்தான்
    இன்தமிழ், இசைத்தமிழ் கேட்டிட  அழைத்தான்
    துன்பப் பட்டார் துயரிடை உழன்றார்
    என்பும் தோலுமாய் இறையடி  அடைந்தார்

    ஆளுடைப் பிள்ளையார் அப்பரே என்றார்
    ஆண்டவன் நாவுக்கு அரசரே என்றார்
    அன்னையும் தந்தையும் மருணீக்கியார் என்றார்
    ஆளுமைச் சேக்கிழார் வாகீசர் ஆக்கினார்

    தாண்டக வேந்தராய் தமிழன்னை கண்டாள்
    தமிழிசை மறவாப் பாடல்கள் தந்தார்
    ஆண்டவன் விரும்பிட அருந்தமிழ் கொடுத்தார்
    அடியார்க்கு எளியனாய் அப்பர் மிளிர்ந்தார்

    Share
  • குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!

    குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!

    குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!
    ஆதியிலே எழு நீதியிலே அடர் போதியிலே வருக!
    தேதியிலே பர வீதியிலே சரி பாதியிலே வருக!
    நேர்த்தியிலே சுப பூர்த்தியிலே உயர் கீர்த்தியிலே வருக!

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    –  அண்ணாகண்ணன்

    Share
  • மங்கையர் தினம்

    மங்கையர் தினம்

    தினம் தினம் இனிக்க மங்கையர்
    தினம் வந்தது தானாய்….1
    இதிகாசம் பதிக்கும் கலிகாலம் பழிக்கும்
    சலியாத தாய்மை பணி…2
    தொடராகும் தொடக்கம் துவளாத வரைக்கும்
    சுடராகும் குலத்தில் பெண்..3
    மகளாய் மனையாய் தமக்கை தோழியாய்
    சகமாய் வந்தாள் தாய்..4
    அன்பை காட்டி அகத்தை கூட்டி
    பண்பை தருவது பெண்..5

    Share
  • குரு சரணமாலை

    குரு சரணமாலை

    திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
    உருவாகி ஊட்டும் குரு
    மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
    காயமெலாம் காக்கும் குரு
    ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
    தானந்த மாகிடும் குரு
    துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
    இன்பம் கொடுக்கும் குரு
    பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
    அருவிகள் அருளாக குரு
    பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
    மழையாக மந்திரம் குரு
    ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
    தானங்க மாகிடும் குரு
    தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
    குறையாத வளந்தான் குரு
    வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
    சித்தியுள் நிறைந்த குரு
    முடியாத காரியம் விதியென காரணம்
    அடியாலே நிகழ்த்தும் குரு
    ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
    வழங்கும் பகவான் குரு

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    Share
  • அனுமன் பத்து

    அனுமன் பத்து ( 200423)

    முடியாத செயல்களும் முடிக்கும் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு …1
    இயலாது இராமன் துயரறுத்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…2
    படியாத அசுரரை அழித்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…3
    ஏய்க்கும் ஏமாற்றும் மாயர்வீழ ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…4
    ஆபத்தை அழித்து அருளால் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…5
    துன்பம் அணுகாது காப்பாய் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…6
    ராமஜய ராமஜப ராமசுப ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…7
    வாலிலே பலமோடு வரமாய்வா ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…8
    திக்கெலாம் நிறைந்து காக்கின்ற ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…9
    மறைவாய் மாயையது அணுகாது ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…10
    பத்தும் துதிக்க பத்திரம் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கி யருள்.

    Share
  • அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது

    நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது

    கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்

    நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே

    எதுவும் இல்லை என்றே சொல்வார்

    பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்

    அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்

    பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே

    கதவை மூடிட கண்ணை மூடிட

    செய்திடும் தப்புகள் காண்பான்

    காலசக்கர மேந்திட புவிபோல்

    பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே

    கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்

    வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்

    நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்

    யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே

    வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல

    பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல

    உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல

    மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே

    பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ

    பாரில் முழுதும்  உனைக்கண்டால்

    கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்

    பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே

    பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை

    விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே

    Share
  • இயல்பாய் வாழ்வோம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இயல்பாய் வாழ்வோம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இசைக்கவி ரமணன் இயற்றிய ஓர் அமர கவிதை. இதில் ஒவ்வொரு சொல்லும் அமுதம். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share