Category: பொது

  • நல்லையல்லை!

    -மேகலா இராமமூர்த்தி

    நிலவைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. இன்பம் தருகின்ற அதன் தண்மையும், உடலை வருத்தாத நல்லொளியும் மக்கள் அனைவரும் விரும்பக்கூடியவை; அதனால் அல்லவோ ”நிலா நிலா ஓடி வா; நில்லாமல் ஓடி வா!” என்றும், ”அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?” என்றும் அந்த அம்புலியை ஆசையோடு அழைத்தனர் மக்கள்.

    அதுமட்டுமா? நிலவுதரும் இன்பத்தை, பயனைத் துய்ப்பதற்கென்றே அந்நாளில் நிலாமுற்றங்களை அமைத்தனர். 

    ”நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து” – (நெடுநல்வாடை – 95)

    நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து” – (சிலப் – அந்திமாலைச் சிறப்புச்செய் காதை – 31) என நிலாமுற்றம் குறித்துப் பேசுகின்றன பண்டைத் தமிழிலக்கிய நூல்கள். நிலாமுற்றத்துக்கு ’வேயாமாடம்’ என்ற பெயருமுண்டு.

    இன்பம் தருகின்ற ஒருபொருளே சில நேரங்களில் துன்பம் தருகின்ற ஒன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு. நிலவு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவ்வகையில் நிலா தொல்லையாக உலாவிய சூழலை விவரித்து அதனைச் சாடுகின்றது இந்தக் குறுந்தொகைப் பாடல்.

    இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்கும் ஆவலில், கல்லும் முள்ளும் காடும் மேடும் தாண்டித் தலைவியின் வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான் தலைவன் ஒருவன். இவ்வாறு இரவுநேரத்தில் நிகழும் தலைவன் தலைவி சந்திப்புக்கு ’இரவுக்குறி’ என்று பெயர்சூட்டியது சங்க இலக்கியம்.

    அவ்வேளையில் வானில் காட்சியளித்த முழுமதி, சூரியனைத் தோற்கடிக்கும் வகையில் தன் ஒளிக்கதிர்களை வாரியிறைத்து வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. அதனைத் தலைவியின் வீட்டுவாயிலில் நின்றவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள் தலைவன் தலைவியின் காதலுக்கு உற்றதுணையாகத் திகழ்ந்த தலைவியின் தோழி. 

    காதலர் சந்திப்பைப் பிறருக்குக் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு ஏதம் விளைவிக்கும் வகையில் பளீரென்று வானில் ஒளிவிட்ட நிலாவின்மீது சுளீரென்று கோபம் வந்தது அவளுக்கு. எனவே, நிலவை எரித்துவிடுபவள்போல் சினத்தோடு நோக்கியவள்,

    ”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடிப்பகுதியினையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்துகிடக்கும் பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் (குட்டி) தோன்றும் காட்டுவழியில் தலைவியோடு களவுக்காதல் வளர்க்க வரும் தலைவனுக்கு நீ நன்மை தருவாய் அல்லை!” என்றாள் கடுமையாக.

    ”கருங்கால் வேங்கை  வீயுகு  துறுகல்
    இரும்புலிக்
     குருளையின்  தோன்றுங்  காட்டிடை
    எல்லி
     வருநர்  களவிற்கு
    நல்லை
     யல்லை  நெடுவெண்  ணிலவே.”  (குறுந்: 47  நெடுவெண்ணிலவினார்)

     

    அப்போது தலைவியின் வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்த தலைவனின் காதுகளில் தோழி நிலவோடு நடத்திய சூடான உரையாடல் விழவே செய்தது. அவன் காதுகளில் விழவேண்டும் என்பதுதானே அவள் நோக்கமும்!

    நிலவு தனக்குரிய இரவுநேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடையதாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் எண்ணமே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள். 

    இரவுநேரத்தில் வானில் தோன்றும் முழுநிலா பகல்போல் ஒளியை விரித்துக் காதலர்க்கு இகலாகும் (பகை) எனும் செய்தியை,

    ”பகல்உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
    அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே” 
    (அகம்: 122 – பரணர்) எனும் அகநானூற்றுப் பாடலும் பேசுகின்றது.

    பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப்புலியின் குருளையைப்போல் உருமாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு புலி படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது.

    ஆதலால், தலைவன் இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வருதலும் ஆபத்தானதே; தவிர்த்தலுக்குரியதே; எனவே, இவ்வாறு உடலுக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களை விடுத்துத் தலைவியை விரைவில் மணந்துகொண்டு நிலாவின் இன்பத்தைத் தலைவன் நிம்மதியாய்த் துய்க்கலாமே என்பதை அவனுக்குணர்த்தும் உள்ளுறை குறிப்பு தோழியின் கூற்றில் ஒளிந்துகிடக்கின்றது.

    இப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தால் பாடலில் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்துப் புலவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பெயர் சூட்டிவிட்டனர் தமிழ்ச்சான்றோர்!

    இதில் இடம்பெற்றிருக்கும் ’நல்லையல்லை’ எனும் சொல்லானது பிற்காலக் கவிஞர்களையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றது; அதற்கான சான்று, கம்பராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

    இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் எனும் செய்தியை அறிந்த கைகேயியின் பணிப்பெண்ணும் தந்திரத்தில் வல்லவளுமான மந்தரை (கூனி) கடுஞ்சினம் கொள்கின்றாள். எப்படியாவது கைகேயியின் மனத்தை மாற்றி அவள் மகன் பரதனை நாடாளச்செய்யவேண்டும்; இராமனைக் காடேகச் செய்யவேண்டும் எனும் கொடுமனத்தோடு கைகேயியின் அரண்மனைக்குள் விரைவாக நுழைகின்றாள்.

    பால்போல் தெளிந்த மனமும், மைந்தன் இராமனிடம் அளவற்ற தாயன்பும் கொண்ட கைகேயியிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறாள். அதைக் கேட்டதுதான் தாமதம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கேகயன் குலக்கொடி, சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இரத்தினமாலை ஒன்றை மந்தரைக்குப் பரிசாய்த் தருகின்றாள். சீற்றத்தோடு அம்மாலையை வாங்கிய மந்தரை, தரை குழிவிழும் அளவுக்கு அதனை விட்டெறிந்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டுக் கைகேயியிடம் இராமனுக்கு எதிராகத் தன் துர்ப்போதனையைத் தொடங்குகின்றாள்.

    ஆரம்பத்தில் அதற்குச் சற்றும் செவிசாய்க்காத கைகேயி கூனியைப் பார்த்து, ”நீ எனக்கு நல்லவளுமில்லை; என் மகன் பரதனுக்கு நல்லவளுமில்லை; அவ்வளவு ஏன்… தருமத்தோடு சிந்தித்துப்பார்த்தால் நீ உனக்கே நல்லவளில்லை; விதியின் வேலையிது! அதனால்தான் உன் மனத்துக்கு இதமென்று படுவதைச் சொல்கிறாய் அறிவற்றவளே!” என்று வெகுள்கிறாள்.

    ”எனக்கு நல்லையும் அல்லை நீ
         என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை அத்
         தருமமே நோக்கின்
    உனக்கு நல்லையும் அல்லை
         வந்து ஊழ்வினை தூண்ட
    மனக்கு நல்லன சொல்லினை
         மதி இலா மனத்தோய்.” (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1470)

    இப்பாடலில் ”நல்லையும் அல்லை” என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதைக் காண்கின்றோம். சங்கப் புலவரான நெடுவெண்ணிலவினாரின் ’நல்லயல்லை’ எனும் சொல்லாட்சியையே கம்பர் இங்கே பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கண்கூடு.

    ”நல்லையல்லை” என்ற மந்திரச்சொல் கம்பரோடு நின்றதா எனில் இல்லை; 2017ஆம் ஆண்டு வெளியான “காற்று வெளியிடை” எனும் தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்தின் வரிகளில் உருவான ”நல்லை யல்லை நன்னிலவே நீ நல்லை யல்லை” என்ற பாடலிலும் இடம்பிடித்துக் ”காலத்தை வென்றவன் நான்” என்று மார்தட்டி நிற்கின்றது.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
    2. அகநானூறு – நாவலர் திரு ந.மு வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.
    3. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

     

    Share
  • கடந்த வருடத்தில் நனைந்த பொழுதுகள்

    கடந்த வருடத்தில் நனைந்த பொழுதுகள்

    சக்தி சக்திதாசன்

    ஓடியே போய் விட்டது 2023. எம் கைகளில் 2024 எனும் குழந்தையைத் திணித்து விட்டுத் தான் போய்.சரித்திரப் புத்தகத்தினுள் புதைந்து விட்டது.

    நடந்து முடிந்த விடயங்கள் நடந்தவையேதான். அவற்றைத் திருப்பிப் புரட்டிப் பார்க்கலாமே தவிர மாற்றியமைக்க முடியாது.

    ” நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டால் அவன் மூடன் ” எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றிலே வரும்.
    பின்

    ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும் ?
    ஒவ்

    வொரு திருப்பத்திலும் ஒரு பாடல் எமக்கு போதிக்கப்படுகிறது.

    சிலவற்றில் இன்பத்தை நுகர்கிறோம் சிலவற்றில் துன்பத்தில் துடிக்கிறோம்

    அவையிரண்டும் எமக்கு அனுபவப் பாடங்களே !

    அப்பாடங்களின் மூலம் நாம் கற்றுக் கொண்டது என்ன ?

    அதுவே இந்தத் திரும்பிப் பார்த்தலின் நோக்கமாகிறது.

    2023 ம் ஆண்டு பிறக்கும்போதும் நான் சென்னையிலே தான் அதன் பிறப்பினைத் தரிசித்தேன்.

    2023 சர்வதேசரீதியில் பல நிகழ்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது.

    2023 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கம் என் பிரத்தியேக வாழ்க்கை , என்னைத் தனது தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய இராச்சியம், நான் தமிழ்த்தாகம் தீர்க்கவும், ஆன்மீக விளக்கங்களுக்காகவும் தேடியோடும் இந்தியா , என் தாய்மண்ணான இலங்கை எனும் வகையில் எவற்றை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

    குழந்தைப் பருவம், வாலிபம், நடுத்தர வயது எனும் பருவங்களைக் கடந்து இன்று முதுமையின் வாசலினுள் நுழைந்த எனக்கு 2023 போதித்தது என்ன ?

    அறுபத்தியேழு எனும் இந்த அகவையில் நான் கற்றுக் கொண்டவைகள் இருபதில் தெரிந்திருந்தால் ?

    இன்றிருக்கும் எழுத்தாளன் சக்தி சக்திதாசன் என்பவன் இருந்திருப்பானா என்பது சந்தேகமே !

    என் வாழ்க்கைப் பாதையின் வளைவுகளும், நெளிவுகளும் எனக்குக் கற்றுக் கொடுத்தவைகளை எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை.

    2023ம் ஆரம்பத்தை தமிழகத்தில் சந்தித்த வேளையில் என்னை நான் அறிந்து கொள்ளும் பயணத்தில் என்னைத் தொலைத்தேன்.

    நாம் வாழ்வில் சந்திக்கும் யாவருமே எமக்கு எதையோ கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்கிறார்கள்.

    அக்கற்பித்தல்களுள் புதைந்திருக்கும் நேர்மறையான புரிதல்களை இனங் கண்டு கொள்வதே எமது சவாலாகிறது.

    தமிழகத்தின் ஆன்மீக வாசல்கள் என்னைத் தியானம் எனும் தீயில் புடம் போடும் வகைக்கு இட்டுச் சென்றது.

    என்னை நானே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு புதுப் பரிணாமத்துக்குள் புகுவித்தது.

    இந்தப் புதுப்புரிதல்களின் அடிப்படையில் எனக்குள் நான் என்னைத் தேடும் படலத்தின் அடுத்தபடியே 2023 எனக்குத் தந்த மாற்றம்.

    இங்கிலாந்து எனும் எனது வளர்ப்பு அன்னை பூமியில் 2013 விளவித்த மாற்றங்கள் பல.

    19 வயது வாலிபனாக இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தபோது அந்நாட்டின் முடியாட்சியை அலங்கரித்த இரண்டாம் எலிசபேத் மகாராணியை இழந்து ஒரு வருடப் பூர்த்தியைக் கண்டது 2023.

    மகாராணியை இழந்த இங்கிலாந்தின் மன்னராக உத்தியோகபூர்வமாக முடிசூடிக் கொண்டார் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ்.

    ஒரு நாட்டின் ராஜ வைபவமான முடிசூட்டுவிழாவை வாழ்வில் கண்டுகளிக்கும் சந்தர்ப்பத்தை அளித்தது 2023.

    பொருளாதரப் பிரச்சனை இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய தாக்கத்தைக் கொடுத்தது.

    ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது ஆசியப் பின்னனியைக் கொண்ட பிரதமர் ரிஷி சுனாக் அவர்களின் தலைமைக்குச் சவாலாக பல பிரச்சனைகள் உருவெடுத்தன.

    பொருளாதரா சிக்கல்களினால் ஊதியத்தில் முன்னேற்றம் காணாத தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் டாக்டர்கள் அடங்கலாக வேலை நிறுத்தங்களில் குதித்தனர்.

    தொடரும் யூக்கிரேன், ரஷ்ய யுத்தத்தில் யூக்கிரேனுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த பிரித்தானியாவை இஸ்ரேல், பாலஸ்தீனிய யுத்தம் மேலும் சிக்கலுக்குள் தள்ளியது.

    பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது அக்டோபர் 7 ம் தேதி மேற்கொண்ட மிலேச்சத்தமமான தாக்குதலின் பிரபலிப்பாக இஸ்ரேல் தொடங்கிய காஸா மீதான தாக்குதலின் நியாயத்தை ஏற்றுக்கொண்டாலும் உயிர்ச்சேதங்களின் அளவினைக் கண்டிக்க வேண்டிய தேவை இங்கிலாந்துப் பிரதமரை சங்கடமான நிலையில் தள்ளியுள்ளது.

    இங்கிலாந்து.பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டிய தேவையும் இங்கிலாந்துப் பிரதமருக்கு உண்டு.

    பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக அகதிகள் என்று கூறிக்கொண்டு உள்நுழையும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை வெள்நாட்டிலிருந்து குடியேறிய சந்ததி வழியான பிரித்தானிய பிரதமர் எவ்வாறு கையாள்கிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல அவரது கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வல்லமை படைத்தது.

    பிறக்கும் இந்த்ஜ 2024 இங்கிலாந்து நாட்டின் தேர்தல் ஆண்டாகும் என்பது அனைத்து அரசியல் அவதானிகளினதும் கருத்தாகும்.

    வாழ்வாதாரம், வெளிநாட்டவரின் குடியேற்றம், சர்வதேச அரசியல் நிலவரம் என இவையனைத்தையும் இங்கிலாந்துப் பிரதமர் எவ்வகையில் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.

    பொதுவாகவே 2024ம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பலமான தோல்விக்கு உள்ளாகும் என்றே பலரது கருத்தும் இருக்கிறது.

    அடுத்து இந்தியாவுக்கும் 2024 ம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு யார் இந்தொயாவின் பொருளாதார உயர்ச்சியை சரியான திசையில் எடுத்துச் செல்லப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப் போகிறது.

    2015ம் ஆண்டினைப் போலவே 2023ம் ஆண்டும் தமிழகத்தைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்தது.

    2015ல் கற்றுக்கொண்ட பாடம் 2023ல் உபயோகமாகிற்றா என்பது கேள்விக்குறியே !

    2023ல் இலங்கையில் நான் பயின்ற பாடசாலையான யாழ் பரியோவான் கல்லூரி தனது 200வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

    இவ்விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனது உள்ளத்தைத் தாலாட்டுகிறது.

    இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே மீண்டும் கிடப்பில் போடப்பட்டதைப் போல ஒரு உணர்வு.

    இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்குவது ஒரு பாரிய அரசியல் பிரச்சனை என்பதையும் இதைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளனவா ? எனும் கேள்வி பூதாகரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    ஆக மொத்தம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஒரு விடையில்லா வினாவாகத்தான் 2024க்குள் பிரவேசிக்கிறது என்பதே உண்மை.

    அடுத்து சர்வதேச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான அமேரிக்கா , இந்தியா, ரஷ்யா , சீனா எடுக்கப்போகும் சர்வதேச அரசியல் நகர்வுகளை எதிர்நோக்கியபடி ஒரு அச்சம் கலந்த உணர்வுடன் உலக மக்கள் இந்தப் புதுவருடத்தினுள் நுழைகின்றனரோ எனும் சந்தேகம் எழுகிறது.

    பொதுவாகவே ஒரு நாடகம் பார்ப்பது போன்றே இனிவரும் வருட நிகழ்வுகளை எதிர்கொள்வதே இன்றைய தேவை.

    இனம், மதம், நாடு, மொழி எனும் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மா எனும் நிலைப்பாட்டில் கிடைக்கும் ஆன்மீகப் புரிதல்களின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    வருட முடிவு, வருட ஆரம்பம் என்பன சாதாரண நிகழ்வுகளே !

    வருட முடிவோ அன்றி வருட ஆரம்பமோ எமது வாழ்வின் போக்குகளை மாற்றப் போவதில்லை.

    வருடமொன்றின் முடிவிலும், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் எமது எண்ணங்ளைக் கட்டுப்படுத்தி நேர்மறையான இலக்குகளை நோக்கிச் செலுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளக்கூடிய மனோதைரியத்தைக் கொண்டிருக்கிறோமா என்பதுவே முக்கியம்.

    கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் நனைவது தவறல்ல.

    வெறுமையாக நனைந்ததைத் தவறுதலாக மூழ்கி விட்டோம் என்றெண்ணி அதனுள் அமிழ்ந்து போவதே தவறாகும்.

    அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

    Share
  • இருட்டுக்கே கண் இல்லை

    இருட்டுக்கே கண் இல்லை

    பாஸ்கர்

    இந்த மாதம் முதல் வாரத்தில் நல்ல மழை நாளில் இரவு இயற்கை அழைப்புக்கு தூக்கத்தில் இருந்து விழிப்படைந்தேன். மின்சாரம் இல்லை. மிக கொஞ்சமான குளிர். எனது படுக்கை அறையில் இருந்து கழிவறைக்கு செல்லும்  வழி புரிபடவில்லை. தட்டு தடவி நடந்து வந்தால் அது சமையல் அறை. இயற்கையின் அவசரம் ஒரு புறம். எந்த பக்கம் நடக்க வேண்டும் என சில நிமிடங்கள் புரிபடவில்லை. ஏதேனும் பொருள் தட்டுப்படும் என நடந்தால் எனது இருட்டு பாதையில் எந்த பொருளும் கைக்கு அகப்படவில்லை. வெறும் சுவர் மட்டுமே தட்டுபட்டது. நடுவில் எங்கோ இடித்து கொண்டேன். இடிபட்ட இடத்தை உள்வாங்கி அதன் மூலம் கழிவறைக்கு செல்லலாம் என்ற யோசனை உதிக்கவில்லை.

    சிறு வெளிச்சம் இருந்து இருப்பின் சமாளித்து இருக்கலாம். இருட்டுக்கே கண் தெரியாத ஒரு பெரும் இருட்டு அது. மனக்கண்ணால் புரிந்து கொள்ளலாம் என்பதெல்லாம் ஒரு மாயை. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். பொறுமை வேண்டும். இப்போது கண் இருந்தும் பார்வை அற்றவன் போலானேன். ஏற்கனவே எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை . இப்போது இரண்டு கண்களும் பார்வை இழந்து போய் நின்றது போல அமைந்த நேரம் அது. பார்வை அற்றவர்களின் நிலை அப்போது ஆழ்ந்து புரிந்தது. அவர்களின் மிக துயரமான வாழ்க்கை என்ன என பிறகு புரிந்தது. வாழ்க்கையில் புரிதல் என்ற விஷயம் அறிவுப்பூர்வமாக இருப்பதின் அபத்தம் சின்ன வட்டம் தான் என புரிவது எவ்வளவு உண்மை. ஒரு விஷயம் ஆழ்ந்து புரிபடுவதற்கும், தகவலை பதிவாக இருப்பதற்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில் வாழ்க்கை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த இருட்டை நமக்கு வசதியாக தோதாக வைத்து கொண்டு இருக்கிறோம். நம் சொறிதலில் உள்ள சுகம் தான் நம்மை நகர விடாமல் செய்கிறது . எனக்கு அந்த அனுபவம் இருளில் கிடைத்த ஒளி.

    Share
  • மயிலை என்கிற மெட்ராஸ் என்கிற சென்னைப்பட்டினம் – வயது – 384

    மயிலை என்கிற மெட்ராஸ் என்கிற சென்னைப்பட்டினம் – வயது – 384

    பாஸ்கர்

    அறுபதுகளில் ஆரம்பித்து சென்னையை ரசித்து வருகிறேன். முதலில் எனக்கு அது மயிலாப்பூர். அப்புறம் அது மெட்ராஸ். இன்று எனக்கு சென்னை. அந்த பால்ய வயதில் எனக்கு ஊர் பற்றிய ஈர்ப்பு ஏதுமில்லை. சுற்றி வந்த தெருக்களும், குளங்களும், பூங்காக்களும், சினிமா கொட்டகையும், கொஞ்சம் பள்ளிக்கூடங்களும் தான் எனக்கு இந்த மண். ஒரு அரைக்கை வெள்ளை சட்டை, இடுப்பில் எப்போதுமே நிற்காத அரை டிராயர் (வீட்டில் நிஜார்) ஒரு சின்னப்பை தாண்டி உலகம் வேறில்லை.

    கொஞ்ச நாள் அம்புலிமாமா, பிறகு வளர்ந்த பின் முத்து காமிக்ஸ் என வாசிப்பு தொடர மெல்ல கல்கண்டுக்கு வந்தேன். படித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை ஊட்டியது எது என தெரியவில்லை. ஒரு குக்கிரராமத்தில் பிறந்து இருந்தால் இவை எல்லாவற்றையும் நான் இழந்து இருக்கலாம். பெரிய குண்டுமணி பங்களா என அழைக்கப்படும் அந்த ஆபிரகாம் தெரு குடியிருப்பு என்னை சீராட்டி கொண்டாடியது. நான் அவர்களின் செல்லம். என்னை அய்யா என அழைத்த நேசமான மக்கள் இன்று யாரும் இல்லை. ப்ரைனோ பேபி பைல்வான் பாஸ்கர் என கொஞ்சிய தந்தை பற்றிய நினைவு இன்றும் பசுமை. அய்யா பையா என என்னை கொஞ்சிய தாயும் மனதில் நீங்காமல் இருக்கிறார். விவரம் புரியாத வயதில் கள்ளமும் கபடும் நிச்சயம் இருக்க முடியாது என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி.

    அடிப்படையில் எங்கள் ஏழ்மை குடும்பம் எனக்கு பலம் தான். அது இல்லாமல் இருப்பின் என்னை நிறைய பேர் அண்டியிருக்காமல் இருக்க கூடும். எந்த பரிவுக்கும், பாசத்திற்கும் பின் ஒரு பரிதாபம் இருக்கவே செய்கிறது. இதை எல்லாம் நான் கடக்கவில்லை. அது என்னை கடந்தது. எத்தனையோ இரவுகள் பட்டினியுடன் கடந்து இருக்கிறேன். ஆனால் அன்புக்கூட்டத்தில் பசியின் வலி தெரியவில்லை. அண்டை வீட்டார் எங்கள் பசியை போக்க முயன்றார்கள். சிலர் துணி மணி கொடுத்தார்கள். கோவில் வாசலில் இலவச உணவுக்கு வரிசையில் நின்ற போது அவமானம் தெரியவில்லை. ஆனால் ஏன் பிறயோர் நிற்கவில்லை என கேள்வி மட்டும் எழுந்தது.

    ஆனால் வளர வளர பிம்பம் பெரிதாகிறது. பள்ளியில் மதிய உணவு யாருக்கு வேண்டும் என கேள்வி எழுந்த போது யாரும் எழுந்து நிற்கவில்லை. நான் மட்டும் எழுந்தேன். அந்த கூச்சம் பல நாள் என்னுள் இருந்தது. இதுவும் சென்னையின் கொடை என இப்போது சமாதானம் செய்து கொண்டாலும் அந்த வலியை மறக்க முடியவில்லை .

    எப்படியோ என்னுள் எழுந்த மொழி ஆசை தமிழ் தாண்டி ஆங்கிலத்திற்கும் சென்றது. படிப்பின் மீது ஈர்ப்பு இல்லை. பத்தாம் வகுப்பு பெயில். அப்பா பெல்ட்டால் அடித்தார். பிறகு அவரே மருந்தும் இட்டார். எந்த இன்னலிலும் யாரும் இந்த மயிலாப்பூரை விட்டு நகரவில்லை. அதற்கு நாதியும் இல்லை. எங்களுக்கு மெட்ராஸ் என்ற ஒரூ இடம் தனியாக இல்லை. இந்த இடம் தான் உலகம் என்றான பின் பெயரில் ஒன்றுமில்லை. இதனை இன்று வரை கெட்டியாக பிடித்து கொண்டு இருக்கிறேன். எங்கு சென்றாலும் இரவுப்பொழுது இந்த மண் தான். இது ஒரு கொள்ளும் புத்தி.

    சென்னையும் நானும் ஒன்றாகவே வளர்ந்தோம். அது இளமையாக இன்றும் இருக்கிறது. மூப்பு என்னை தழுவுகிறது. பார்க்கும் ஒவ்வொரு இடத்திற்கு பின்னும் ஒரு சரித்திரம் இருப்பது போல அவை எல்லாவற்றிலும் எனக்கு தனி நினைவுகள். என்னையும் தாங்கிய இந்த மண்ணையும் மக்களையும் தாண்டி எனக்கு வேறு உலகம் இல்லை. பிடித்துக்கொண்டே இருக்கும்போது நழுவும் காலம் போல மெல்ல பிடி தளருகிறது. நேசமும் வாஞ்சையும் இந்த மயிலை மீது தான். இது எனக்கு போதி மரம் போல ஒவ்வொரு நாளும் சென்னை புதிதாக பிறந்து கொண்டு இருக்கிறது.

    பெரும் வியப்பில் அதனை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இந்த உணர்வுக்கு எப்படி பெயரிட்டாலும் அதை அடைக்க முடியாது. ஒரு ஊரை, இடத்தை கவர்ந்து இருந்து மனசுக்குள் அதனை போஷிக்க முடியுமா? முடியும் என்பது எனது அனுபவம். இதற்கு காரணம் மயிலை என்கிற சென்னை. இந்த வானம் என்றும் எனக்கு கானம். இந்த தாகம் தீராகாதல். வாழ்க மயிலை, வாழ்க சென்னை.

    Share
  • நீயல்லால் தெய்வம் இல்லை

    நீயல்லால் தெய்வம் இல்லை

    சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்றது, ‘நீயல்லால் தெய்வம் இல்லை’. இந்த இனிய பாடலை வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    ஏது பிழை செய்தாலும்

    ‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே’ என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    நேற்று முடிச்சூர் ஏரி அருகில் மகிழுந்தில் சென்றபோது, இந்த அரிய காட்சியைக் கண்டேன். சட்டென்று இறங்கிப் படம் எடுத்ததில் இம்மட்டே எடுக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வை நான் காண்பது இதுவே முதல் முறை. இன்று உலகளாவிய பறவைகள் இடப்பெயர்வு தினம் என்பது எதிர்பாராத ஒற்றுமை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Vaaniyamma

    Vaaniyamma

    Baskar Seshadri

    Vaaniyamma was financially comfortable and amid such a popularity and name her death makes me feel so upset.

    Had she remained with some assistance at least she could have been taken for treatment immediately after the fall and we might not have a lost a soul in a small accident.

    Aged People who can afford to pay for the assistance should use the opportunity for the sake of their interest and safety. This is just not for the celebrity but whoever feels that they can spend on this comfort should note this to have a 24×7 Assistance.

    Age matters and fall goes together always. This is my personal view.

    Share
  • Mrs. Meenakshi Amma

    Mrs. Meenakshi Amma

    Baskar Seshadri

    Mrs. Meenakshi was born in Madurai in 1921 and married at the age of 13 and settled in Madras in 1935. Of course Its in Mylapore.

    She Lived in the famous VSV Koil street till 1975 and then moved to Thiruvanmiyur –  She loved mylapore her living town of those days and at the age of 63 She moved to Houston, Texas with her family/Sons.

    Mr. Vaidheeswaran her son is a regular donor to the homes here in chennai and in particular he did his bit during Covid times when i was handling my service in Chennai last two years.

    Few weeks ago he called and assured to donate this New Year time and he kept his word and it happened as a food donation today in the Home in Teynempet.

    Last December a week ago she celebrated her 101st Birthday with her Family in Texas happily.

    She is hale and Hearty and its a Pleasant news to Mylaporeans that she studied in Ever Famous Lady Sivaswami School.

    I am sure she must be senior most Living old student of this school. Namaskaram Amma. Our Pranams.

    I Wish the school can do a Small celebration on this through a Video Conferencing sometime.

    Share
  • அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது

    நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது

    கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்

    நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே

    எதுவும் இல்லை என்றே சொல்வார்

    பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்

    அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்

    பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே

    கதவை மூடிட கண்ணை மூடிட

    செய்திடும் தப்புகள் காண்பான்

    காலசக்கர மேந்திட புவிபோல்

    பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே

    கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்

    வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்

    நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்

    யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே

    வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல

    பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல

    உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல

    மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே

    பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ

    பாரில் முழுதும்  உனைக்கண்டால்

    கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்

    பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே

    பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை

    விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே

    Share
  • என் ஜன்னலுக்கு அப்பால்

    என் ஜன்னலுக்கு அப்பால்

    பாஸ்கர்

    ஒரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த வண்டி ஓட்டுனர் ஒன்று பெரும் சப்தம் எழுப்பி மிகவும் தொந்தரவு கொடுத்தார்.

    என்னால் சட்டென தடம் மாற முடியவில்லை. ஆயினும் இதை தெரிந்தும் அவர் சப்தம் எழுப்பினார்.

    இந்த முறை எனது கோபம் உச்சத்திற்கு சென்றது. நான் வழி விடவில்லை. இரண்டு முறை கை காட்டியும் அவர் சப்தம் என்னை மிகவும் பாதித்தது.

    இப்போது திரும்பவும் அதே சப்தம்.

    ஒரு வேளை மருத்துவ வண்டியோ என திரும்பி பார்த்தால் அது ஒரு பெரிய கார். நான் எப்போதும் போல ஓட்ட அவர் மீண்டும் சப்தம் எழுப்பினார்.

    இந்த முறை அவர் என்னை கடக்கும் போது “சார் சைட் ஸ்டாண்ட்” என்றார்.

    அப்போது தான் நான் கவனித்தேன். அவர் எழுப்பிய சப்தம் என்னை கவனப்படுத்தவே என புரிந்து கொண்டேன்.

    அந்த வண்டி கடக்கும் போது நான் திட்டியது எனக்கே உறைத்தது. நாம் ஒரு விஷயத்தை எப்படி கையாள அது எப்படி எங்கே இட்டு செல்கிறது என்பதற்கு இது சின்ன உதாரணம்.

    அனுமான்ம் தவறு என்பதற்கு இந்த நிகழ்வும் சான்று.

    வீட்டு வாசலை கடந்தால் எல்லாம் ஞானிகளும், ஆசான்கள் எனக்காவே காத்து கொண்டு இருப்பது போல இருக்கிறது வாழ்க்கை.

    எல்லோரும் எனக்கு தகப்பன் சாமி. கடைசி வரை இந்த பலப்பத்தையும் பென்சிலையும் பிடித்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

    Share
  • அவசரநிலை பிரகடனம் -1975 – நாற்பத்தேழு வருடங்கள் நிறைவு

    அவசரநிலை பிரகடனம் -1975 – நாற்பத்தேழு வருடங்கள் நிறைவு

    பாஸ்கர்

    கிட்டத்தட்ட நாற்பத்து ஏழு வருடங்கள் முன்பு இரவின் பிந்தைய நேரத்தில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தார். சட்டங்களை மொத்தமாய்க் கையில் அள்ளி, எதிர்ப்போர் எல்லோரையும் அடைத்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என உலகுக்குச் சொல்லத் துடித்த ஒரு கோபமான சிந்திப்பு. அடக்கி ஆள்வது என்பதே ஆணவ புத்தி. அது ராணுவத்திற்கு சரி. ஒரு தேசத்தில் ஆட்சி செய்யும் அரசு செய்யக் கூடாது. எமெர்ஜென்சி இந்திராவுக்கு ஆயுதம்.

    எதிர்க்கட்சிகள் திரண்டு இணைந்தன. எவ்வளவு தேசாபிமானிகள் அந்த எதிர்ப்பில் இருந்ததன் நிலையே எவ்வளவு பெரிய தவறை இந்திரா செய்கிறார் என்பது புரிந்தது. இந்திரா அசையவில்லை. அவர் மகன் சஞ்சய் இன்னொரு பக்கம் மீறல். பிளுமோடி, ஜார்ஜ் பெர்னான்டெஸ், செழியன், மொரார்ஜி, ஜெயப்ரகாஷ் நாராயண் என்ற எவ்வளவு நல்ல மனிதர்கள் எல்லாம் குமுறினார்கள். தெற்கின் மொத்த குமுறலைச் சொன்னவர் காமராஜர். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திரா சுடப்பட்டு இறப்பார் என்றும் , ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடக்கும் என யார் அறிந்தார்?

    எனக்குத் தெரிந்து அவசர நிலையைப் பெரிதும் எதிர்த்து, கொஞ்சம் கூடப் பயப்படாமல் அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கி வாழ்ந்த துணிவான மனிதர் என்றால் அது சோ. ராமஸ்வாமி தான். எங்கள் கல்லூரிக் காலத்தில் இந்திரா செய்வது தப்பு எனப் புரிய வைத்ததே அவர் தான்.

    இந்திரா செய்வதெல்லாம் நகைச்சுவை என்றும் அவருக்கு நாம் பரிசளிக்க வேண்டும் எனச் சொல்லி ஒரு பைசாவை மணி ஆர்டர் செய்யச் சென்ற பலருள் நானும் ஒருவன். கச்சேரி ரோடு தபால் அலுவலகம் அப்போது தான் புதிதாய்த் திறந்த நேரம். ஊழியர் ஒன்றும் சொல்ல முடியாது. இதைச் செய்யச் சொல்லி துக்ளக்கில் பிரகடனம் செய்ததே சோ தான். எங்கும் கூடி நின்று பேச முடியாது. இரவுக் காட்சி அரிது. சென்சார் கெடுபிடி அதிகம். ஆனாலும் கட்சிகளை எல்லாம் தாண்டி எதிர்க்குரல் கொடுத்த சோ ராமஸ்வாமி நமக்கு கிடைத்த அரண்.

    இருபது வண்ண மலர் சூடிய அன்னை இந்திரா நடந்து வந்தார் எனப் பிரசார பாரதி அரசின் ஊதுகுழலாயிற்று. பிரகடனம் செய்த நான்கு மாதத்தில் காமராஜர் மறைந்தார். ஒன்பது மாதங்கள் நடந்த பல அத்துமீறல்களுக்குப் பின் எமெர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அப்போது இந்திரா அம்மையாருக்கு வயது அம்பத்தெட்டு பின்னாளில் நானாஜி தேஷ்முக் இது பற்றியும் புத்தகம் எழுதினார். அவர் மட்டுமல்ல – இன்னல்களை அனுபவித்த தலைவர்கள் பலரும் எழுதினார்கள்.

    சில வருடங்கள் கழித்து அவசர நிலை நியாயம் தானோ எனச் சிலர் கூறி வந்த நிலைக்கு இந்திய அரசியல் சூழல் மாறியது. பின்னாளில் இதே சோ, சர்வாதிகாரமற்ற அவசர நிலை தேவை என்றே சொல்லிவிட்டார். ஆனாலும் பாரத சரித்திர வரைபடத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கருப்பு மசிக் குடுவை கவிழ்ந்தது உண்மை.

    Share
  • ரங்கன் என்கிற ரங்கப்பா

    ரங்கன் என்கிற ரங்கப்பா

    பாஸ்கர்

    ரங்கனோடு சினிமா பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி வரும்போது அவன் என் தொடையைக் கிள்ளி, “பார்ரா” என்பான்.

    அவன் என்னோடு கோலி, கில்லி ஆடினவன். சிறு வயது முதல் சிநேகம். எனக்குத் தெரிந்து டெர்லின் சட்டை போட்ட முதல் நண்பன். மூணு மாசம் பெரியவன். கோலி அடிக்கும்போது அவன் விரலை அழுத்திச் செலுத்தும் வேகம் ஆர்யபட்டா தான். எதிர்கோலி எகிறி விழும். அது கலர் கலராய் சுழன்று ஓடுவதைப் பார்ப்பது ஆனந்தம்.

    மஹா ரசிகன்.. எனக்கு சினிமா ரசனயை ஊட்டிய பலருள் இவனும் ஒருவன். கபாலி காமதேனுவில் இவனுக்கு எல்லாம் அத்துப்படி. கும்பலில் புகுந்து இவன் டிக்கெட் வாங்கி வரும் போது, எனக்கு இவன் சிவாஜியை விடப் பெரிதாய்த் தெரிந்தான்.

    கருட மூக்கு. படிப்பில் கெட்டி. என்னவோ என் மேல் அவனுக்கு ஒரு அன்பு. கூடவே வைத்துக்கொள்வான் ஒரு தளபதி போல். ஒரு நாள் எனக்கு ஜுரம் வந்த போது பக்கத்திலேயே இருந்தான். எனக்கு நட்பு தாண்டி ஒரு மரியாதை வந்துவிட்டது.

    பத்தாம் வகுப்பில் இடம் மாறும்போது அவன் நகர்ந்து போனான். மைதானத்தில், தெருவில் என எங்குப் பார்த்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினான். ஒரு நாள் அவன் குடும்பம் காலி செய்த போது கழிப்பறைக்குள் சென்று அழுதேன். வெளியே வந்த போது அவன் வீட்டில் யாரும் இல்லை.

    ஞாயிறு அன்று அபிச்வரியில் அதே கருட மூக்கைப் பார்த்தபோது கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது. இது மூன்றாம் வருடமாம். ஒருவேளை நான் பக்கத்தில் இருந்து, டேய், புனர்ஜன்மம் கணேசனைப் பத்மினி அடிக்கற காட்சி எனச் சொல்லி, தொடையைக் கிள்ளியிருந்தால் அவன் எழுந்துகொண்டிருப்பான்.

    Share
  • செம்போத்து என்கிற செம்பகம்

    செம்போத்து என்கிற செம்பகம்

    தமிழீழத்தின் தேசியப் பறவை செம்போத்து, இன்று நம் இல்லத்திற்கு வருகை தந்து, நமது எளிய உணவை ஏற்றுக்கொண்டது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதிசார குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2022

    அதிசார குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2022

    2022 ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்

    2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்

    2022 உங்களுக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share