Month: February 2026

  • பல்லழகன் – பகுதி – 19

     

    திவாகர்

     

    “சரி, கல்யாண் ஞாபகமிருக்கா?”

     

    “கல்யாண்.. அது யாரு? சாரி, மேடம் உங்களையும் நான் பார்த்ததில்லே.. கல்யாண் யாருன்னும் தெரியாது.!”

     

    “ஓ! அப்போ நீங்க திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி இல்லையா?”

     

    “அது நான்தான்.. என் பேரை அப்படி யாரும் கூப்பிடமாட்டேங்க.. மூர்த்தின்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ கூட என் தம்பியோட மோட்டார் சைக்கிள் திருட்டு போயிடுச்சு. அதுக்குக் கம்ப்ளயின் கொடுக்க என் பேரை மூர்த்தின்னுதான் கொடுத்தேன்.. எப்படியோ என் முழு பேரு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. அதுவும் அழகான பொண்ணு வாயால இப்படில்லாம் கூப்பிடறதுக்கே கொடுத்து வெச்சிருக்கணுங்க.. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. நான் வரேங்க..”

     

    என்று சொல்லிவிட்டுப் போனவனைத் தடுக்கிறாள்.

     

    “என்ன மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி.. இவ்வளோ சீக்கிரம் மறந்துட்டா எப்படி? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க விசாகப்பட்ணம் ரயில்வே ஸ்டேஷன்ல ஹவ்ரா மெயில் ஏற வந்தீங்க.. உங்க நண்பர் கல்யாண் ஏஸி கோச்லயும் நீங்க எஸ்-! கோச்’லயும் ட்ராவல் பண்ணீங்களே.. மறந்துட்டீங்களா..”

     

    “ஓ.. நீங்க அங்க இருந்தீங்களா.. ஆமாங்க நம்ம தெத்துப்பல்லன் இருந்தான் இல்லே…. ஓ.. ஆமாம்.. அவன் பேருதான் கல்யாண் இல்லே..ஓகே.. ஓகே.. இப்போ ஞாபகம் வந்துடுத்து.. நீங்க கூட அந்த ஏஸி கோச் கீழே நின்னுட்டிருந்தீங்க.. தெத்துப்பல்லன் மிஸஸா.. நீங்க.. ஓ! சாரிங்க.. அப்போ உங்க எதிருல இனிமே கல்யாண்னுதான் கூப்பிடணும்.. சின்ன வயசுலேர்ந்து திருச்சி ஸ்கூல்லேர்ந்து சினேகிதம் இல்லையா..”

     

    அவன் பேச, அவள் பேச.. பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. அவள் அவனிடம் விடைபெறுகிறாள்.

     

    கோம்டி கல்யாண் வீட்டுக்கு வருகிறாள்  அங்கே ரவியும் இருப்பதைப் பார்க்கிறாள்.

     

    “என்ன கோம்டி! சுமதி பத்தி எனக்கு இப்போதான் கல்யாண் சொன்னான். சாந்தி கூட இப்போ வரைக்கு இதுபத்தி வாயே திறக்கலே.. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சுமதி ரொம்ப பாவப்பட்ட பொண்ணுதான்.’

     

    ‘சரிதான்.. பாவப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சுதான் நீ அவ கூட சுத்தறியாடா.. எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே..’

     

    ரவி ஆச்சரியமாக் அவளைப் பார்க்கிறான்.. ‘ஹேய்.. உனக்கு எப்படித் தெரியும்?  இது சாந்திக்குத் தெரியுமா?’

     

    ‘தெரியுமே.. நானும் அவளும் சேர்ந்துதானே உங்க மூணு பேரையும் பார்த்தோம். சூபர் மால்ல அன்னிக்குக் காலைல மேட்சிங்க் பார்த்துப் பார்த்து டிரெஸ் வாங்கினீங்களே..’

     

    கல்யாண் எழுந்தான். மேலும் கீழும் அவளைப் பார்த்தான். ‘கோம்டி! உங்க மனசுல இன்னும் ஒரு குறை இருக்கு இல்லே!’

     

    “கரெக்ட்! இன்னும் ஒரே ஒரு குறை இருக்கு கல்யாண். அதையும் தீர்த்துட்டோம்னா நாளைக்கு நிதானமா எல்லாத்தையும் முடிச்சுடலாம்.. நாம சுமதியை விசாரிக்கவே இல்லை.. எனக்கு அவளைப் பத்தி தெரியும்.. இருந்தாலும் இந்தக் கொலை நடந்த பிறகு ஒருவாட்டி சந்தேகம் தீர விசாரிச்சுட்டா எனக்கு ஒரு நிம்மதி இருக்கும்.. என்ன சொல்லறீங்க.. நீங்க ரெண்டு பேரும் கூடவே இருக்கணும்?”

     

    “நிச்சயமா கோம்டி.. ஆனா இப்போ சுந்தர் வரணுமே.. நான் அவனுக்காக வெயிட் பண்றேன்..”

     

    “சுந்தர் வரமாட்டான் கல்யாண்.. அவன் எஸ்கேப் ஆகறதுக்கு ட்ரை பண்றச்சே போலீஸ் பிடிச்சாச்சு. நாளைக்கு இன்ஸ்பெக்டர் மோகனோட வருவான்.”

     

    “சுந்தர் தப்பிக்கப் பாத்தானா.. பிடிச்சுட்டாங்க இல்லே.. போகட்டும்.. இப்போ நாம சுமதி வீட்டுக்குப் போகணும்.. வாங்க இப்பவே போலாம். என் கார்லயே போலாம்.”

     

    கல்யாண் காரில் போகிறாள். மூவரும் சுமதி வீடு இருக்கும் சாலையில் காரை நிறுத்தி விட்டு சுமதி வீட்டுக்குள் நுழைகிறார்கள்

     

    சுமதி வீடு

    சுமதி வீட்டின் முன்னறையில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அவள்  முகத்தில் கல்யாணைப் பார்த்ததும் புன்னகை.. கல்யாணும் அவளிடம் அன்பாகப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகிறான். சுமதி வருகிறாள். இருவரையுமே ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.

     

    “என்ன டாக்டர்.. எப்படி இருக்கீங்க.. அட கல்யாண் அண்ணா கூட வர்றீங்க..”

     

    சுமதியின் தோளில் தட்டி அன்பாகப் பேசுகிறாள்.

     

     

     

    “இப்போ எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க? நான் லாஸ்ட் டைம் இங்க வரச்சே உங்கம்மா ரொம்ப கோபமா இருந்தாங்க.. ஆனா இப்போ சந்தோஷமா இருக்காங்க.. அன்னிக்கு நாம சரியா பேச முடியலே.. அந்தாளு கந்தசாமிகிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொன்னே.. ஞாபகமிருக்கா.. இப்போ அந்த ஆளே போயாச்சு.. கல்யாண் சார்புல இந்த கேஸுல நான் தலையிட்டுருக்கேன். உனக்குதான் தெரியுமே.. இன்வெஸ்டிகேடிவ் வேலையும் நான் பண்ணறேன்னு.. அதனால உன்கிட்டே கொஞ்சம் தகவல் வேணும்னு கல்யாணையும் கூப்பிட்டுண்டு வந்திருக்கேன்.”

     

    “எங்கிட்டே என்ன டாக்டர் தகவல் வேணும்? கந்தசாமிதான் போயாச்சே.. விட்டுடுங்கம்மா.. அந்த ஆளு ரொம்ப ரொம்ப மோசமானவன்மா.. அவன் போனது நல்லதுதான். நீங்களே பார்த்தீங்க இல்லம்மா.. விடுங்க..”

     

    “இல்லே சுமதி! எனக்கு சில விஷயங்கள் தெரியணும்.. இந்த வீட்டுல மூணு பேருன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரே.. அவரே பார்த்தாரே.. இன்னொருத்தர் எங்கம்மா?”

     

    “ஓ.. என் தங்கையை கேக்கறிங்களா? அவளை இப்போ ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கேன்மா.. அடுத்த வாரம் ஆபரேஷன்மா. இதோ கல்யாண் அண்ணாதான் எல்லா செலவையும் ஏத்துண்டு இருக்கார்.”

     

    “அவ உன் தங்கையா சுமதி.”.

     

    ஆச்சரியமாக பார்த்தாள் சுமதி..

    “டாக்டர்.. விட்டுடுங்க டாக்டர்.. எதுக்கு எல்லாம் மறுபடியும் சொல்லணும்..வேண்டாம்.. விடுங்க..”

     

    “விடமுடியாது சுமதி.. நான் எங்கம்மாகிட்டயே அன்னிக்கு உனக்காக சண்டை போட்டேன் தெரியுமா.. எப்படியும் போலீசுக்குப் போயி தகவல் தெரிவிப்பேன்னு சொன்னப்போ நீ ஒரு விஷயம் சொன்னியாம்.. உனக்கும் கந்தசாமிக்கும் ஏதோ ஒரு உறவுன்னு.. நான் அன்னிக்கு விட்டுட்டேன். ஆனா போலீசுக்கு அன்னிக்கே சொல்லியிருந்தா அந்த ஆள் இன்னிக்கு ஜெயில் களி தின்னுண்டுருப்பார்.. ஒரு கொலையையும் தடுத்திருக்கலாம் இல்லையா..”

     

    அப்போது வரை சும்மா இருந்த சுமதியின் அம்மா இப்போது வந்தாள். சுமதியைத் திட்டினாள்.

     

    “எத்தனை நாளைக்கு மறைச்சு மறைச்சு வெச்சிருப்பேடி.. சொல்லிடு.. ஊருக்கெல்லாம் தெரியணும்.. இதோ கல்யாண் தம்பியும் வந்திடுச்சு இல்லே.. நம்ம மடியில கனமில்லேடி.. நமக்குப் பயமும் இல்லை..டாக்டரம்மா.. நான் சொல்லறேன்.. இதை நீங்க வெளியே சொல்லறதும் சொல்லாததும் உங்களுக்கு விட்டுடறேன்..”

     

    ‘ஆமாம் சுமதி.. எல்லாத்தையும் கோம்டி தெரிஞ்சுகட்டும்னுதான் நான் அவங்களை இங்கே அழைச்சுண்டு வந்தேன். அம்மா சொல்ற மாதிரி நம்ம மடியில என்ன கனம்? உண்மை ஊருக்கும் தெரியட்டுமே. ‘ கல்யாண் சொன்னதும் அவள் அம்மா அழுதாள். சுமதிக்கும் கூடவே கண்ணீர் வந்தது. கல்யாண் அவள் அம்மாவின் தோளைப் பற்றித் தடவிக்கொடுத்தான்.

     

    சுமதி மெதுவாகப் பேசினாள். “டாக்டரம்மா.. இது ரொம்ப வருஷக் கதை.. அந்த கந்தசாமியைப் பத்தி நான் எதுவும் இப்போவரைக்கும் பேச விரும்பலேன்னா காரணம் இருக்கும்மா.. இதோ எங்கம்மா இருக்காங்களே.. இவங்க வேற யாருமில்லேம்மா.. கந்தசாமியோட பெண்டாட்டிதான்.”

     

    கந்தசாமிக்கு கல்யாணம் ஆயிருச்சா? கோம்டி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

     

    சுமதி பெருமூச்செறிந்தாள். ‘அதாவது தாலி கட்டாத பெண்டாட்டி.. அவங்களுக்குப் பிறந்தவதான் நான்.. இதெல்லாம் கல்யாண் அண்ணாவுக்குக் கூட சமீபத்துலதான் தெரியும். எங்கம்மாவை திருச்சியில பார்த்துட்டு அவங்க ரொம்ப அழகா இருந்தாங்கன்னு எப்படியோ வளைச்சுப் பிடிச்சுக் கல்யாணம் கட்டறேன்னு பொய் சொல்லி அங்கயே யாருக்கும் தெரியாம குடும்பம் நடத்திட்டு நான் பொறந்தவுடனே எங்கம்மாகிட்ட வர்றதையே நிறுத்திட்டாரும்மா..

    எங்கம்மாக்கு என்ன பண்றதுன்னு தெரியாம என்னையும் தூக்கிண்டு அவங்க வீட்ல போய் அவங்க அப்பா அம்மாகிட்டே போய் சொல்லணும்னு போனா எங்கம்மாவை அவரே வாசல்ல நிறுத்தி எங்களை திருப்பி அனுப்பிச்சிட்டாரு. அதுக்கப்பறமா பணம் கொடுத்தாராம். எங்கம்மா அந்தப் பணத்தைத் தூக்கி அவரு மேலயே போட்டு தாலி கட்டிட்டு குழந்தைக்கு அப்பனா இருந்தா வா’ன்னு சொல்லிட்டு அவரை துரத்திட்டாங்க.. பாவம்.. அந்தாளோட இருந்த பாவத்துக்காக நான் பொறந்தாலும் எங்கம்மாவுக்கு என் மேல பாசம் அதிகம்.. நாலு வீட்டுல பத்துப் பாத்திரம் தேச்சு அதுல வந்த பணத்துலதான் என்னை வளர்த்தாங்க.. திருச்சிலயே நர்ஸிங்க் பண்ணவெச்சுட்டு வேலை பண்ண சென்னை வந்தோம்மா.. உங்க கிலினிக்லதான் எனக்கு முதல் வேலை கொடுத்தீங்க.. சந்தோஷமா பார்த்தீங்க.. எங்கம்மாவுக்கு மனசு சரியில்லாம இருந்ததாலே அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வரும்.”

     

    “உங்கப்பாதான் கந்தசாமின்னு உனக்கு இவங்க எப்போ சொன்னாங்க சுமதி?”

     

    “நான் உங்க கிலினிக்ல வேலை செய்யறச்சே முதல்ல தெரியாதும்மா.. எதுக்குன்னா அவரோட முகமே எனக்குத் தெரியாது, அந்த ஆளும் தனக்கு ஒரு குழந்தை பொறந்துருக்கு அது கஷ்டப்பட்டு வளருதுங்கிறது நல்லா தெரிஞ்சாலும் அந்த நினைவே இல்லாம இத்தனை வருஷம் காலம் தள்ளிட்டாரு.”

     

    “அப்போ எப்போதான் இவருதான் உன் அப்பான்னு உனக்குத் தெரிஞ்சுது. நம்ம கிலினிக்ல கிட்டதட்ட ஒருவருஷம் வேலை செஞ்சிருக்கே.. எதிர்வீடு வேறே..  ஐ மீன் என் க்லினிக்ல அன்னிக்கு சண்டை வரச்சே உன்னைத் துன்புறுத்தி எதையோ உன்கிட்டேயிருந்து பிடுங்கினாரே.. அன்னிக்கு அவரு உங்கப்பாதானு தெரியாதா?”

     

    “அன்னிக்குத் தெரியும்.. அதாவது அன்னிக்கு மூணு நாள் முன்னாடிதான் இவரோட உறவும் இவரோட கதையும் தெரியும். நான் உங்ககிட்டே வேலை பண்ணும்போதே மார்னிங்க் சமயத்துல இன்னொரு ஆஸ்பத்திரில பார்ட் டைம் வேலை பண்ணிண்டு இருந்தது உங்களுக்குத் தெரியும். அங்க எங்கம்மாவை ஒரு நாள் அட்மிட் பண்ணிட்டு க்ளூகோஸ் ஏத்திண்டிருந்தேன். அப்பதான் இந்த கந்தசாமி ஒரு சின்னப் பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்து அங்க அட்மிட் செஞ்சார். அந்தப் பொண்ணுக்கு உடம்பெல்லாம் காயம். அட்மிட் பண்ணிட்டுப் போனவுடனே எங்கம்மா அவரைப் பாத்துட்டு அந்தக் கடங்காரன் இங்கே ஏண்டி வந்தான்னு என்னைக் கேட்டாங்க. விவரம் சொன்னாங்க. எங்கம்மாவை அந்த ஆள் பாக்கலே. நானும் சரியா பாக்கலே. அவரு போனவுடனே உடம்பெல்லாம் புண்ணாகிப் போன அந்த சின்னப் பொண்ணைப் போய் கேட்டேன். அந்தப் பொண்ணு ஒரே அழுகைதான். என்னம்மா சொல்லும்மான்னு ரொம்பவே பயந்து போய் ஒடுங்கிப் படுத்துடுச்சு. ஆதரவா கேக்கறச்சே அது ஒரு அனாதைப் பொண்ணு.. இங்கே ஆசிரமத்துல இருக்கறச்சே இந்த ஆள் கடற்கரைக்குப் போகலாம்னு சொல்லி கடற்கரைல மயக்க மருந்து போட்டு அப்படியே யாருக்கும் தெரியாம கார் பின்னாடி டிக்கில படுக்க வெச்சிருக்கான். தன்னைக் கடத்திண்டு போய் சின்னஞ்சிறிசுன்னு கூடப் பார்க்காமே வெறி பிடிச்ச நாயாட்டம் குதறிக் கெடுத்துட்டு அத்தோட துணியில்லாம அவளோட உடம்பை கன்னா பின்னான்னு போட்டோ எடுத்துருக்கான். அது அழுது சத்தம் போடுதுன்னு சின்னக் குழந்தைன்னுப் பாக்காம அடிச்சிருக்கான்மா. இந்த ஆஸ்பத்திரி டாக்டர் தெரிஞ்சவர்னு இங்கே வைத்தியம் பண்ணியிருக்கான். ஆசிரமப் பெண்களுக்கு இவருதான் டாக்டராம்.. வாழவேண்டிய பொண்ணும்மா.. சின்னப் பிஞ்சுக் குழந்தைம்மா அது..” என்று சொல்லிவிட்டு சுமதி அழுதாள். சுமதியின் அம்மா கூடவே அழுதாள்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். “இப்படிப்பட்ட வெறிபிடிச்ச நாய் ஜன்மத்தை என்ன செய்யலாம் கோம்டி?” அவன் கண்ணிலும் கண்ணீர் வந்தது.

     

    கோம்டி கொஞ்சம் அமைதிப்படுத்தினாள்.

    “புரியுதும்மா.. அவருதான் உங்கப்பாங்கிறதுக்கு ஏதாவது அடையாளம் இருக்காமா? தப்பா நினைச்சுக்காதே.. ஒரு லீகலாவும் உலகத்துக்குத் தெரியணும் இல்லையா?”

     

    “இப்போவரைக்கும் அவர் லீகலா இருந்தாரா என்ன? இனிமேயும் அப்படியே இருந்துட்டாப் போச்சு. அதான் எனக்குத் தெரிஞ்சுடுச்சு இல்லையா.. இனிமே இவங்களை பாத்துக்கறது என் பொறுப்பு இல்லையா கோம்டி.””

     

    கல்யாண் சொன்னதை மறுத்தாள் கோம்டி. “எல்லா விஷயங்களுக்கும் சட்டபூர்வமான சாட்சி இருக்கணும். எனக்கு முக்கியமா அது வேணும்.”

     

    “எதுக்கும்மா?”

     

    “எதுக்குன்னு சொல்லறேன்.. அதுக்கு முன்னாடி என்னோட க்லினிக்லேர்ந்து உன்னைத் தர தரன்னு வெளியே இழுத்துண்டு போயி உன் ஹேண்ட்பேக்லேர்ந்து ஒரு சாமானை எடுத்துண்டார் இல்லையா அது என்ன சுமதி?”

     

    “டாக்டர்.. ஆஸ்பத்திரிலேர்ந்து விஜயா, அதுதான் அந்தப் பொண்ணோட பேரு.,. அவளைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணோம்.. டாக்டர்கிட்டே பேசினேன். அவர் சொன்னாரு.. அவள் கதையைப் பத்தி.. அனாதைப் பொண்ணும்மா.. அது எங்கே போனாலும் யாரும் கவலைப் படமாட்டாங்க.. நீ அழைச்சுண்டு போய் அவளைப் பாத்துக்கறதா இருந்தா தாராளமா அழைச்சுண்டு போ. ஆனா அந்த கந்தசாமிகிடே ஒரு வார்த்தை சொல்லிடு.: அப்படின்னாரு. எனக்கு கோபம்தான் வந்துது. அந்தாள்கிட்டே போய் நான் ஏன் கேட்கணும்னு நானே அந்தப் பொண்ணை இங்கே அழைச்சுண்டு வந்துட்டேன். விஷயம் கேள்விப்பட்ட கந்தசாமி எங்கவீட்டு அட்ரஸை ஆஸ்பத்திரிலே வாங்கிண்டு தேடிண்டு வந்தார். வந்தார்னு எதுக்குச் சொல்லணும்.. வந்தான்.”

     

    தொடரும்

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

                                                63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

     

    வேத உள்ளுறை ஆவன

      விரிபுனல் வேணி

    நாதர் தம்மையும் அவர்

      அடியாரையும் நயந்து

    பாதம் அர்ச்சனை புரிவதும்

      பணிவதும் என்றே

    காதலால் அவை இரண்டுமே

      செய் கருத்து உடையார்

    சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
    திருநீலநக்க நாயனாரை
    “ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் ‘நான்முகன்’ வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

    சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார்.  அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

    நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.  

    நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

        நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

    யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

        குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

    காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

        காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

    வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

        விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

    திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருவாசகத்தில்,

    சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

    மரைக ளேத்தித் தடமலர்

    சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

    அம்மநாம் அஞ்சுமாறே

    உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்.  வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், “யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

     தேவாரத்தில்,

    அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

    அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

    ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

    உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

    அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

     அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

     பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

    பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

    என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், “பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

     சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

    எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

    அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

    அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

    திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

    இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

    இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

    பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

     எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

     “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

    தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

    விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
    றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
    ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
    பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

    என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

    “ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம்.  . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

    சீல மெய்த் திருத்

      தொண்டரோடு அமுது செய்தருளி

    ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

      நம்பர் நண்ணும்

    காலம் முற்பெற அழுதவர்

      அழைத்திடக் கடிது

    நீல நக்கனார் வந்து அடி

      பணிந்து முன் நின்றார். 

     

    நின்ற அன்பரை நீல

      கண்டப் பெரும் பாணர்க்கு

    இன்று தங்க ஓர் இடம்

      கொடுத்து அருளுவீர் என்ன

    நன்றும் இன்புற்று நடு

      மனை வேதியின் பாங்கர்ச்

    சென்று மற்று அவர்க்கு

      இடம் கொடுத்தனர் திருமறையோர். 

     

    ஆங்கு வேதியில் அறாத

      செந்தீ வலம் சுழிவுற்று

    ஓங்கி முன்னையில் ஒரு

      படித்து அன்றியே ஒளிர

    தாங்கு நூலவர் மகிழ்வுறச்

      சகோட யாழ்த் தலைவர்

    பாங்கு பாணியாருடன் அருளால்

      பள்ளி கொண்டார்.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • இல்லங்களில் அழகாய் இன்ப தீபம் ஒளிருதே

    மா. நந்தினி
    சேலம்

    இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
    வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
    அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
    நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
    நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
    ஒரு நாள்
    நிறைவேற்றித் தருவார்.
    தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
    உடலும்,
    மனமும் அமைதி அடையும்
    கார்த்திகை தீபம் ஏற்றும் போது
    இறைவனின் அருளை பரிபூரணமாக
    பெறலாம்!!

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மாண்புடை மாதம்
    மாதவன் சிவனை வாழ்த்திடும் மாதம்
    கோதைத் தமிழும் வாசகர் தமிழும்
    இறையின் தத்துவம் இயம்பிடும் மாதம்

    இறையின் தத்துவம் இயம்பிடும் வகையில்
    மாதங்கள் அனைத்தையும் வைத்தனர் முன்னோர்
    தையில் தொடங்கி மார்கழி வரைக்கும்
    தத்துவம் சமயம் வைத்தனர் முன்னோர்

    மார்கழி மகத்துவம் தொடரும் வகையில்
    தையில் பொங்கல் தைப்பூசத் திருநாள்
    ஆன்மீகம் அறிவியல் அனைத்தும் அளிக்கும்
    அற்புத நாளாய் அமைவது சிறப்பே

    உலக சிருஷ்டி தொடங்கிய நாளாய்
    அமைவதே தைப் பூசத் திருநாள்
    சக்தியும் சிவனும் ஐக்கிய மாகும்
    முக்கியம் மிக்கதும் இத் திருநாளே

    நீரும் சிவனே நெருப்பும் சிவனே
    மண்ணும் சிவனே விண்ணும் சிவனே
    சிவனின் நினைப்பால் வந்தவன் கந்தன்
    கந்தனைத் தந்ததும் தைப்பூச நன்னாள்

    கந்தனின் கையில் வேலினைக் கொடுத்து
    வந்திடு வினைகளைப் போக்கிடும் வகையில்
    செந் திருவான சக்தியின் செயலும்
    அமைந்த நன்னாளே தைப்பூசத் திருநாள்

    காவடி எடுப்பார் கந்தனின் சன்னதி
    கந்தனை எண்ணியே சன்னதி குவிவார்
    தைப்பூசத் திருநாள் கந்தனின் பெருநாள்
    எண்ணியே எண்ணியே அடியவர் பரவுவார்

    நல்லன அனைத்தும் தொடங்கிடும் நாளாய்
    தைப்பூசத் திருநாள் அமைவதே முக்கியம்
    ஏடு தொடக்குவார் காதும் குத்துவார்
    இறை நினைப்புடனே எல்லாம் தொடங்குவார்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    பொங்கலை  அடுத்து வந்திடும் பெருநாள்
    பக்தியை விதைக்கும் பக்குவத் திருநாள்
    இத்தரை சிறக்க மலர்ந்திடும் பெருநாள் !

    Share