Author: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 135 (திங்கள்)

    சேக்கிழார் பாடல் நயம் – 135 (திங்கள்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    திங்கள்சேர்  சடையார்   தம்மைச்   சென்றவர்  காணா  முன்னே,
    அங்கணர்    கருணை   கூர்ந்த   அருள்திரு    நோக்கம்   எய்தத்
    தங்கிய   பவத்தின்   முன்னைச்   சார்புவிட்  டகல ,  நீங்கிப்
    பொங்கிய   ஒளியின்நீழல்   பொருவில்  அன்புருவம்   ஆனார்.

    பொருள்

    விரைந்து சென்று  சடையில்  பிறைநிலவை  அணிந்த  பெருமானைநேரில் காணா முன்னரே, திண்ணனார் பால்  அழகிய கருணைக்கண்  கொண்ட சிவனார் அருள்  பார்வை இவர்பால்  பொருந்தியது.  அதனால், இவருக்கு  இறுதியாகத்  தங்கிய வேடர்குலப்  பிறப்பு, இதுகாறும்  பெற்றிருந்த பழவினைச்  சார்புடன்  இவரை விட்டு  நீங்கியது! பெருமானின் பேரொளிப் பிழம்பில்  திளைத்து ஒப்பற்ற  அன்பே உருவமாய்  விளங்கினார்.

    விளக்கம்

    சென்றவர் சடையார் தம்மைக் காணாமுன்னே என்று மாற்றப்பட்ட தொடர், நேர்படச் சென்றவராகிய  திண்ணனார், பெருமானைக்  காணுதற்குமுன் என்றது காணாமுன் என நின்றது.

    அங்கணர் என்ற சொல், கிருபைக் கண்ணுடையவரைக்  குறித்தது. கண்ணுக்கு அழகாவது கண்ணோட்டமுடைமை. கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்த என்று இப்பொருளை இங்குச் சொற்பொருள் விரித்துக்காட்டினார். அருட்பார்வை செய்கின்றாராதலின் அங்கணர் எனும்  பெயராற்கூறினார்.

    கருணைகூர்ந்த நோக்கம்,  அருட்டிரு நோக்கம் எனக்கூட்டுக. கருணைகூர்ந்த

    நோக்கமாவது இருவினைப்பயனை ஊட்டித் திரோதான உருவமாய் நின்ற மறக்கருணைமாறி, அறக்கருணையாய்ச் சிறந்த நோக்கம்.

    அருள்திருநோக்கம் என்பது சட்சுதீட்சை, இதனை,

    “சிஷ்ய : ஸமீக்ஷ்யதே பாசபந்த விமோக்ஷாய தீக்ஷேயம் சாக்ஷுஷீபவேத்”

    (பாசபந்தம் நீங்கும்பொருட்டுச்சீடன் [ஆசாரியனால்] பார்க்கப்படுகின்றான்) என்று ஆகமங் கூறும்.

    “முன் சினமருவு திரோதாயி கருணையாகித்
    திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே”

    என்ற சிவப்பிரகாசம்  என்ற ஞானசாத்திரத்தால் கருணைகூர்ந்த திருநோக்கம் விளக்கப்பட்டது.

    நோக்கம் எய்த   என்ற தொடர்,   அருட்பார்வை இவர்பாற்பொருந்த எனப் பொருள் பட்டது.

    “தானென்னைப்,
    பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்,
    நீத்தான் நினைவுவேறாக்கினான் – ஏத்தரிய,
    தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்,
    கண்ணூறு தேனமுதங் காட்டினான்”

    என்ற நெஞ்சு விடுதூதுங் காண்க. இத்திரு நோக்கம் முன்னாட் கயிலாயத்தில், காளத்திசார்ந்து பூசைசெய்து

    “சாருநாள்  ஏலவே முத்தியும்   ஈதும்போ” வென்று அருளிச்செய்த காலத்து இறைவன் பார்த்த அருட்பார்வையின் தொடர்ச்சியாதலின், அவர் (திண்ணனார்) காணாமுன் எய்தியது. அவரது முன்னைத்தவம் இதற்குக் காரணமாம். ஏனையோர்க்கும் அவ்வாறு  எய்தாமைக்கு அவ்வவர் தவ மின்மையே காரணமெனவும் இறைவன் யாவரையும் ஒன்றாகவே காண்பவன் எனவும் கண்டு கொள்க.

    தங்கியபவம்  என்பது,  இவ்வுலகில்வந்த வேடராகிய இப்பிறப்பு. பவம் – பிறத்தல் உண்டாதல். இனி, இதற்குத் தங்கிய – எஞ்சி நின்ற, பவம் – பிறப்பு என்று கூறலுமாம். இவ்வொருபிறப்பே இவர்க்கு எஞ்சிநின்றது என்றபடி.

    முன்னைச்சார்பு விட்டு அகல  என்ற தொடர்,  முன்னைச்சார்பு – அநாதியே தொடர்ந்துநின்ற சார்பாகிய மல மாயை கன்மங்கள். விட்டு அகல- விடுத்துப்போக. விடுதல் – சேர்க்கையின்றாதல். நீங்கி – அவற்றினின்றும் விடுபட்டு.

    அருள்திருநோக்கால் முன்னைச்சார்புவிட்டு நீங்குதல் என்பதன்  விளக்கம்:

    “உயிர், தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தால்  தனக்கு அந்தரியாமியாய் இதுகாறும்  உள் நின்று  உணர்த்திவந்த பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங் கொண்டெழுந்தருளிவந்து சீவதீக்கைசெய்து, ‘மன்னவகுமாரனாகியநீ ஐம்பொறிகளாகிய வேடருட்பட்டு வளர்ந்து நின் பெருந்தகைமை அறியாது மயங்கியிடர்ப்பட்டாய்: நின்பெருந்தகைமையாவது இவ்வியல்பிற்று  என்று  அறிவுறுப்ப, அறிந்த போதிலேயே, அவ்வேடரை விட்டு நீங்கி, அன்னிய மின்றி, அநன்னியமாந் தன்மையின் நிலைபெற்று, அம்முதல்வன்றிருவடிகளையணையும்” என்று சிவஞான போதம்எட்டாஞ் சூத்திரத்தின் பிண்டப்பொழிப்புரைக்கும் ஆற்றால் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் இதனை விளக்கியதுகாண்க.

    பொங்கிய ஒளியின் நீழல் என்ற தொடர்,  பொங்குதல் – விரிந்துவிளங்குதல். ஒளியின் நீழல் ஒளியினது நீழலின்கண். ஒளி என்றது ஈண்டுக் காளத்திநாதரை. நீழல் – அவரது திருவடி. அத்திருவடியினிடத்து.

    “திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே யுன்னை
    யல்லாலொன்று முணரேனே”

    என்ற ஆளுடையநம்பிகளதுதேவாரமும்,

    “அடித்தொண்டர் துன்னு நிழலாவன …….. அடித்தலமே”

    என்ற திருவிருத்தமும்

    “தண்ணிழலாம்பதி” என்ற சிவஞானபோதம் ஒன்பதாஞ்சூத்திரமும், அதனுரையுங் காண்க. இறைவனைப் பேர்ஒளியாகத் தியானித்தல் சிவாகமங்களில் விதிக்கப்பட்டது.

    “ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்” என்ற அப்பர்சுவாமிகளது  தேவாரமும்,

    “ஞாயிறு கடற்கண் டாஅங்கு ,
    ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”

    என்ற திருமுருகாற்றுப்படையும், பிறவும்காண்க.

    கண்டம், கண்டாகண்டம் அகண்டம் என ஒளிகள் மூவகைப்படும். கண்டஒளிகளாகிய விளக்குமுதலியவையும், கண்டா கண்ட ஒளிகளெனப்படும். கதிரவன்,  மதிமுதலியனவும் அகண்ட ஒளியாகிய சிவ வொளியி்ன்முன்னர்ப் பிரகாசிக்கமாட்டா. சிவவொளியே ஏனைஎல்லா வொளிகளுக்கும் ஒளிதரும் காரணமாம் ஆன்மஞானம் ஏனை அந்தக்கரணஞானம். இந்திரியஞானங்களின் மிக்கு அவற்றிற்கு மூலமாய் நிற்பதுபோலச் சிவவொளியே ஏனைஎல்லாவொளிகட்கும் மேலாய்நிற்பது. அது சுயஞ்சோதி,பரஞ்சோதி, அலகில்சோதி என்று பலதிறப்பட அறியப்படும்.  “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்ற திருவாசகத்தில் இவ்வியல்பு விளக்கப்பட்டமை காண்க.

    “ஒளியாய்  ஒளியதன்  ஒளியாய்   ஒளியதன்
    ஒளியும்  தணிதரும்  ஒளியாகி”  என்ற பேரூர்ப்புராணமும்   காண்க.

    பொருவில் அன்பு உருவம் ஆனார், என்ற தொடர், திருவடி  நீழலின்கண்ணே

    அன்பு அடங்காது மீதூர அந்த அன்பே தமக்கு வடிவமாக ஆயினார். முன்பு செய்ததவத்தினீட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்டிற்று; அருட்டிரு நோக்கத்தால் முன்னைச் சார்புவிட்டு அகன்றது; அகலவே பொங்கிய ஒளியின்  நீழலை நேர்பட்டார்; படுதலும், அதனிடத்து அடங்காது மீதூர்ந்த அன்பே தம்   வடிவமாகப்பெற்றார் என்பதாம்.

    இனி, அன்பே சிவம்; சீவன்சார்ந்ததன் வண்ணமாவன்; சிவனைச்சார்ந்தசீவன் அவனதுருவாகிய அன்புருவமாவன் என்றலுமாம். “பரிவின் றன்மை யுருவு கொண் டனையவன்” கல்லாடம்.

    இப்பாடலால் இறைவனின் அருள் திருநோக்கம் எய்திய திண்ணனார், தம் பழம் பிறப்புகள், பழவினைகள் ஆகியவற்றின்  தொடர்பு  முற்றவும் நீங்கப் பெற்றார்  என்பதும், இறைவனின் திருவருட் பேரொளி அவரை ஒப்பற்ற  அன்பே உருவமாய்  ஆக்கியதும் பெறப்பட்டது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 134 (நாணனும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 134 (நாணனும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    அவர்கள் விரைந்து நடந்தபோது பற்பல வளங்களையும் அலைகளில் திரட்டி ஓடும் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்.அங்கே உயர்ந்த மரத்தினடியில் வேட்டையாடிய பன்றியை காடன் என்பவனை,  தீக்கடைக்  கோலால் நெருப்பை  உருவாக்கச் சொல்லிவிட்டு, நாணனும்  திண்ணனாரும் மலைமேல் ஏறத்தொடங்கினர்!  தெளிந்த சிந்தையுடன் திண்ணனார் பொன்முகலி நதியில் முதலில் நீராடினார்; நதியின்  கரையேறினார். மலைச் சாரலை அடைந்தார். (முறைப்படி நீராடி உடல் தூய்மை பேணி, பிறவிக்கடலின் கரையேறியதை இந்நிகழ்ச்சி குறிக்கிறது!)

    அப்போது மலையுச்சியிலிருந்து பெருமுழக்கம் திண்ணனாருக்குக் கேட்டது!

    (இது அவருக்கு மட்டும் கேட்ட தேவ துந்துபி ஓசை! வேதம் நான்கும் விஞ்சையர் வீணையிசையும் ஐவகை ஓசைகள்) ஈதென்ன ஓசை? என்று கேட்ட திண்ணனாரிடம் நாணன், ‘’மலையருவியில் தேன்கூட்டினைச்  சுற்றும் வண்டோசை  போலிருக்கிறது’’ என்றான் . அப்பொழுது,திண்ணனார்  முன்பு செய்த தவத்தால்  முடிவற்ற இன்பம் தரும் அன்பீனும் ஆர்வம் பொங்கியது! அவருடைய எலும்புகள் கட்டுவிட்டு உருகின; வேட்கை மிகுந்தது. இப்போது சேக்கிழார் பாடுகிறார்,

    பாடல்

    நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
    பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி,
    ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
    நீள் நிலை மலையை ஏறி, நேர் படச் செல்லும் போதில்.

    பொருள்

    நாணனும் அன்பும் தமக்குமுன்னே குளிர்ந்த மலையை ஏறிச்செல்ல;  திண்ணனார்தாமும்;  பேணுகின்ற தத்துவங்கள் என்கிற பெருகும் படிகளையேறிச் சத்தியே வடிவமாகிய சிவத்தைச்சார அணைபவர்களாகிய சிவயோகிகள்போல ஐயரது நீண்ட நிலைமையுடைய மலையைஏறிநேர்படப் போகும்போதில்,

    ஆர்வம்  காதல்  வேட்கை  என ஒன்றினொன்று மிக்க மூன்றுநிலையில் வெளிப்பட்டது. இவை இச்சா சத்தியின்றொழில். அது. (இச்சை) முன்னர்ச்சென்றது. பேணுதத்துவங்கள்.- பேணுதல் – போஷித்தல் -வளர்த்தல். கண்ணுக்கு விளக்குப்போலத்தத்துவங்கள் ஆன்மாவுக்குச்சகலநிலையில் அறிவு இச்சை செயல்களின் வளர்ச்சிக்குக்கருவியாய் அவற்றைவளர்த்தலின் பேணுதத்துவங்கள் என்றார். “வருமிவள் நம்மைப் பேணு மம்மைகாண்” என்ற காரைக்காலம்மையார் புராணங் காண்க. பேணுதல் – வழிபாடு செய்தல் என்றலுமாம். “கொன்றையா னடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்ற திருத்தொண்டத்தொகை காண்க. தத்துவங்களை வழிபாடுசெய்தல் சிவபூசையில் பதுமாசன பூசையிலும், நிர்வாணதீட்சையில் அத்துவ சோதனையிலும் நமாந்தமாகத் தத்துவங்களை வழிபடுதல். இம்முறைகள் ஆகமங்களில் விதிக்கப்பட்டன.

    தத்துவங்கள் என்னும் பெருகுசோபானம்  என்ற தொடர் ,  இங்குத் தத்துவமென்றது சுத்தம் அசுத்தம் என்ற இருவகை மாயைனின்றுந் தோன்றிய நிலமுதல் சிவமீறாக உள்ள முப்பத்தாறினையுமாம். இவைகளைத் தத்துவம் என்றது எல்லாஉயிர்களுக்கும் போகத்தைக் கொடுப்பனவாய்ப் பிரளயம்வரை உள்ளன என்னும் பொருள் பற்றியாம். நிலம்முதலாக ஒவ்வொன்றினையும் ஏறி அனைத்தையுங் கடந்து பரம் பொருளை அணைதற்குப் படிகள் போல இவை அமைதலின் தத்துவப்படி – தத்துவ சோபானம் என்பர்.

    முதலாவதாகிய நிலம் நூறுகோடி 1யோசனைப்பரப்புடையது. நிலத்துக்குப் பத்துமடங்கு விரிந்தது அப்புதத்துவம். இவ்வாறே அப்பு முதல் குணதத்துவம்வரை ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விரிவுள்ளன; அதன் மேற் பிரகிருதிமுதல் அசுத்தமாயாதத்துவம் வரை ஒன்றுக்கொன்று நூறுமடங்கு விரிவும், சுத்தவித்தைமுதல் சதாசிவதத்துவம் வரை ஒன்றுக்கொன்று ஆயிரமடங்கு விரிவுமுடையன. அதன்மேற் சத்திதத்துவம் இலக்கம்மடங்கு விரிவுடையது. அதன்மேற் சிவதத்துவம் எல்லைகடந்தது. இவ்வாறு இவை ஒன்றினொன்று மேல்விரிந்து செல்லுதலின் பெருகு சோபானம் என்றார்.

    ஆணையாம்சிவம் – புறப்பொருளை நோக்காது பேரறிவுமாத்திரமாய் நிற்கின்ற சைதன்னியமே சிவம். அச்சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தைநீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலில் உள்ளதாகிய இரக்கமே அருள். ஆதலின் ஆணையாம் சிவம் என்றார். அருள் – சத்தி – ஆணைஎன்பன ஒருபொருட்சொற்கள்.

    “ஆணையின் நீக்க மின்றி நிற்குமன்றே” என்பது சிவஞானபோதம்.

    இனி, அச் சிவமென்னும்பொருள் உயிர்கட்கு அருளும்பொருட்டுத் தோன்றுங்கால் அருளாகிய ஆணையினிடமாகத் தோன்றுதலின் ஆணைஆம் என்றார் என்றுரைத்தலுமாம். இப்பொருட்கு ஆணை – ஆணையினிடத்து, ஆம் – தோன்றும் என வுரைத்துக் கொள்க.

    “முன்னருட் சத்திதன்பால் முகிழ்க்குந்தான் முளையான்”

    என்ற சிவஞானசித்தியாரும், அதற்கு “அவன் யாண்டுஞ் சத்தியினிடமாகவே தோன்றுவானன்றித் தானாக வேறு தோன்றான்” என்னும் பொழிப்புரையுங் காண்க. இதற்குத் தனக்குமேற்பட்ட ஆணையில்லாத சிவம் என்றுரைப்பாருமுண்டு.

    சார – முன்சார்ந்துநின்ற பாசச்சார்பைவிட்டுச் சிவத்தைச்சார, ஆணவத்தொ டத்துவிதமாதலை விட்டு, மெய்ஞானத் தாணுவினோ டத்துவிதமாய்ச் சார என்க. சார்பு – “சார்புணர்ந்து” என்ற திருக்குறளுங்காண்க.

    அணைபவர்போல – அணைபவர் – சிவயோகிகள். இவர்கள் நிலமுதற் சிவமீறாகிய 36 தத்துவங்களையும் படிமுறையானே ஏறி நீக்கிச் சிவத்தை அணைந்து சார்வர்.

    “பூதமுங் கரணம் பொறிக ளைம்புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும், நாதமுங்கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநா ளுளதோ?”

    என்றபட்டினத்தடிகள் திருப்பாட்டும்,

    “ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்,
    பேறாவடியேன் பெறுமாறுளதோ?”

    என்ற கந்தரனுபூதியுங்காண்க.

    ஐயர் – பெருமையுடையவர். ஐம்புலன்களையும் வென்றமுனிவர். ஐயர்மலை – ஐயர்கள் வாழ்கின்றமலை என்பதாம்.

    “ஐந்துமா றடக்கி யுள்ளா ரரும்பெருஞ் சோதி யாலும்” என்றுபின்னர்க் கூறுவதனால் இம்மலையில் முனிவர்கள் தவஞ்செய்து வாழ்தல் பெறப்படும்.

    இனி, ஐயர் – இறைவன் என்று கொண்டு, அவர் எழுந்தருளிய மலை என்றலுமாம்.

    நீள்நிலை – நீள் – நெடுந்தூரம் வடிவத்தாலும் நீளுவது. நீள்நிலை – முக்காலத்திலும் ஒப்ப நீளும் தன்மையுடையது. இத்தலம் ஐந்துயோசனை அகலமும் பத்துயோசனை நீளமும் உடையது என்பது திருக்காளத்திப்புராணம் சூதசங்கிதை முதலியவற்றா னறியப்படும். இதுகயிலையேயாதலின் என்றும் அழியாது நிலைத்த தன்மையுடையது என்க.

    நேர்பட – எதிர்ப்பட. எந்தப்பேற்றினைப் பெறுதற்கு அவதரித்தனரோ அதனைப் பெற. எதிர்ப்படுதல் என்பதுணர்ந்தும் நேர்படுதல் என்னும் சொல் ஈண்டு நேர்ப்பட்ட வழிப் பெறும் பயனைப்பெற என்ற பொருளில் வந்தது.

    “கீழ்ச் செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” என்ற திருவாசகத்தின் சொல்லும் பொருளும் இங்குவைத்துக் காண்க.

    அணையும் போதில் அங்கணர் அருட்டிரு நோக்கமெய்த என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 103

    1. யோசனையாவது 24 அங்குலம்கொண்ட முழத்தினாலே 16000 கொண்டது ஒரு குரோசமாக, நான்கு குரோசங்கள் கொண்டது ஒருயோசனையாம். எனவே 64000 முழம் ஒரு யோசனை எனப்படும். இதுபற்றி “சாளரத்திற்றோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதி நுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும் அஃதெண்மடங்கு கொண்டது திரிசர அணு. அஃதெண்மடங்குகொண்டது கசாக்கிரம். அஃதெண்மடங்கு கொண்டது இலீக்கை. அஃதெண்மடங்கு கொண்டது யூகை. அஃதெண்மடங்கு கொண்டது இயவைநெல்லு. இயவை நெல்லகலம் எட்டுக்கொண்டது ஓர் அங்குலம். அங்குலம் இருபத்துநான்கு கொண்டது ஒருமுழம். முழம் நான்குகொண்டது ஒருவில். வில்லிரண்டுகொண்டது. ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரங்கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்குகொண்டது ஒரு யோசனை; ஆகலான் இந்த அளவையாற் சாதராண புடவிதத்துவமாகிய அண்டம் நூறுகோடியோசனை ஆழ வகல நீளங்களையுடையது” என்று சிவஞானபாடியம் 2, 3-ல் “அரவுதன்” என்ற வெண்பாவின்கீழ் உரைத்தவைகாண்க. வில் ஒரு அளவு என்பது “பட்டிகை யெட்டா தங்கு நூறு விற்கிடக்கை முன்னே போனது” (திருஞான – புரா – 815) என்றதனாலும் அறிக.

    இத்திருப்பாடலால் முதலில், திண்ணன்  திண்ணனார் என்னும் சிவனடியாராகும் உயர்நிலை  படிப்படியாக உரைக்கப் பெறுகிறது.பின்னர் அடியார்  முதலில் நீராடி உடல் தூய்மை பெறுதலும், அடுத்து பிறவிக்கடலின்  கரையேறலும், அடுத்து  ஆர்வம் , காதல், வேட்கை ஆகிய மூன்று  தத்துவப் படிகளில் அடியார் மேலேறி ஆணையாம்  சிவத்தைச் சார்தல் கூறப்படுகிறது. பின்னர் உயிர் பசுத்துவத்தை விட்டு மேலேறி பதித்தத்துவத்தை அறிந்து காதலும் வேட்கையும் கொண்டு,   மேலேறி நேர்படச்  செல்லும் அருமை முறையாக விளக்கப் பெறுகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 133 (ஆவதென்)

    சேக்கிழார் பாடல் நயம் – 133 (ஆவதென்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    97. ‘ஆவது என் ? இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
    போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
    மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்
    தேவர் அங்கு இருப்பது எங்கே ? போகு’ என்றார் திண்ணனார் தாம்

    வரலாறு

    வேட்டைக்கு  அணுக்கத் தொண்டர்களுடன்  சென்ற திண்ணன், நெடு நேரம் நெடுந்தூரம் சென்று ஒரு காட்டுப்பன்றியை இரண்டாக்கி  வீழ்த்தி  நின்றான்! அவனை வந்தடைந்த  காடனும் நாணனும் இச்செயலைக் கண்டு வியந்தனர். பசியைப் போக்கிக்கொள்ள  எண்ணி, அதனை அறுத்துச்  சுட்டு உண்ண முயன்றனர்! காட்டுச் சுள்ளிகளில் தீ மூட்டிய போது, ‘’உண்பதற்குத்  தேவையான  குடிநீர்  எங்கே உள்ளது?’’ என்று திண்ணன் கேட்டான். உடனே, நாணன் ‘’இப்பெரிய தேக்குமரச்   சோலையைத் தாண்டி அப்புறம் சென்றால் நீண்ட மலையடிவாரத்தில்  நீர்நிறைந்து ஓடும் பொன்முகலி ஆற்றைக் காணலாம்’’ என்றான். உடனே திண்ணன்  அங்கே சென்றபின் இதனை உண்ணலாம் , எடுத்துக் கொண்டு வாருங்கள்!’’ என்று கூறி அந்த இடம் நோக்கிச் சென்றான்! வாறு அரைக்காத தூரம் நடந்த போது, சிவந்த கண்ணை உடைய காளையை  உடைய சிவபிரான்  எழுந்தருளும் திருமாளை சாரலில் உள்ள சோலையை அடைந்தனர். ‘’இதோ, நம்முன்  தோன்றும் இக்குன்றில்  ஏறுவோம்! ‘’ என்று திண்ணன் கூற, நாணன் ‘’ இக்குன்றில் நற்காட்சி  கிட்டும்! இங்கே மலைமேல் கோணம் இல்லாத குடுமித்தேவர் இருப்பார், கும்பிடலாம்!’’ என்றான். சைவநெறியின்  ‘ நற்காட்சி, இறைவன் இருப்பு, தரிசனம் ‘ ஆகியவற்றைத்  திண்ணனுக்கு  நாணன்  உபதேசித்த சிறப்பைக் கண்டோம்! அப்போது திண்ணனின்  உள்ளத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி  மிக்க  அனுபவத்தைச் சேக்கிழார்  கூறுகிறார்!

    பாடல்

    “ஆவதென்? இதனைக் கண்டு  இங்கு  அணைதொறும்  என்மேல்  பாரம்
    போவது  ஒன்று உளது போலும் ; ஆசையும் பொங்க  மேன்மேல்
    மேவிய நெஞ்சும் வேறு  ஓர் விருப்பு உற  விரையா நிற்கும்;
    தேவர்  அங்கு இருப்பது  எங்கே? போது ” என்றார் திண்ண னார்தாம்.

    பொருள்

    “இவ்வாறு ஆவது என்னை? இம்மலையைக்கண்டு இவ்விடத்தே அணுகிச் செல்லுந்தோறும் என்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம் உளதாகின்றது; ஆசையும்பொங்கி மேலும்மேலும் பொருந்திய நெஞ்சமும் வேறொரு விருப்பம் கொண்டதாக விரைந்துசெல்லாநிற்கும்; அங்கே தேவரது இருப்பிடம் எங்குள்ளது? போவாயாக” என்று திண்ணனார் கூறினார்.

    விளக்கம்

    கண்டுஇங்கு அணைதொறும்என்ற தொடர், மேலே  கூறியபடி பேசிக் கொண்டு இருவரும் மலையைநோக்கி நடந்து செல்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார்.

    போவது போலும் உளது – . அடிபெயர்த்து வைக்குந்தோறும் அவ்வளவிற்குச் சிறிது சிறிதாய்  என்பாரம்   குறைவது போன்ற அனுபவம் நிகழ்கின்றது. போலும்  என்ற சொல்  போல்வதாகிய நிகழ்ச்சி.

    ஒவ்வொன்றாய்க் குறையும்அளவு,  உளது ஒன்று போவது என்றும், அணைதொறும் என்றும் கூறினார்.

    ஆசையும் பொங்கி  என்ற தொடர்,  தோன்றும் குன்றில் நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசையும் பொங்கியதைக்   குறித்தது. அவ்வாறெழுந்த ஆசை அடங்காது மேலும் மேலும் பொங்கி வளர்ந்தது என்க.

    நெஞ்சும் – விரையாநிற்கும் என்பது , மனவேகத்தைக்  குறித்தது. உடல் அணைவதன் முன்னே நெஞ்சு மிக விரைகின்றது. நெஞ்சும்- உடலோடு  மனத்தையும்  குறித்தது. கம்பராமாயணத்தில்  இராமனைக்  கண்ட அனுமன் உள்ளத்தில்  நிகழ்ந்த மாற்றங்களை,

    ‘’துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி
    தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
    என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
    அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன்’’

    என்ற  பாடலில் காணலாம்.

    வேறுஓர் விருப்புஉற –  வேட்டையாடி உண்ணும் விருப்பத்திலிருந்து வேறு பட்ட  இறைநாட்டம்  பெற்ற  இயல்பு! காணவேண்டுமென்னும் ஆசையே யன்றி, இன்ன தென்றறியப்படாத மற்றோர் விருப்பமும். இன்னதென்று உணரவாராமையின் வேறுஓர் என்றார். இது முன்னைப்பிறவியின் தொடர்ச்சிபற்றி இவருள்ளத்தில் எழுந்தது.

    கம்பராமாயணத்தில்  அனுமன் வீடணன் இராமனிடம்  வந்த  போது, அவன் அரசாட்சியை அடைவதற்கு  மேலாக இறைவனைச் சரணடையும் ஆசையும்  அவன் பால்  இருந்தது  என்பதைக்

    ‘’கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல்
    அருத்தியும் அரசின் மேற்றே’’

    என்று கூறுவதும், இங்கு  நோக்கத்தக்கது.

    “முந்தை யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த மலரின் வாசம்போற்,
    சிந்தை மலர உடன்மலருஞ் செவ்வி யுணர்வு”

    என்ற சண்டீசநாயனார் புராணமும்,

    “ஒருமைக்கண்  தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும்  ஏமாப் புடைத்து”

    என்ற திருக்குறளும் இக்கருத்தை விளக்குவன.  “முன்பு செய் தவத்தி னீட்டம்” என்று பின்னர்க் கூறுவதும் காண்க.

    தோன்றுங் குன்றில்  நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசை இவராற் காரணமறியப்பட்டதும் இங்கு உறும் வேறு ஓர் விருப்பம் காரணம்  அறியப்படாததும் ஆம்.

    தேவர் என்று  நாணன் சொல்லியதனால் இவர் அறிந்த குடுமித்தேவர். அங்குத் தேவர் எங்கே இருப்பது? என்க. எங்கே – மலையில் அவர் இருப்பதாகக் குறித்த இடம் எது? என்றபடி. அங்கு – அக்குன்றில் – சேணுயர்மலையில். போது – போவாயாக.

    தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணுற்றாறும்  தன்னின் வேறாகக்கண்டு கடந்த நிலையில், உடல்முதலிய கருவிகரணங்கள் பாரமாகக்காணப்பட்டுக் கழல்வனவாம். அதுவரை அவற்றிற்  பற்றுண்டு அவற்றைச் சுமை என்று உணராது சுகமென்றும், அவற்றையே தான் என்றும் கண்டு, சுமந்து திரிந்த உயிர் இப்போது சுமை என்று அறிந்தது. பெரும்பாரம் சுமந்திளைத்தவன் அதுகுறையக்  குறையக் களிப்பது போல, இந்நிலையடைந்த உயிரும் களிப்படையும். இப்பாரம் குறையக் குறைய இறைவனை அணையும் ஆசையும் மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒற்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன்கண் உவர்ப்படைந்து, அதனை  விட்டுப் பின்னர் மெய்ஞ்ஞானத் தாணுவினோடு ஒற்றித்து நிற்கத் தலைப்படும்.

    “துருத்தியாங் குரம்பை தன்னில்  தொண்ணூற்றங்கு  அறுவர்  நின்று
    விருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
    அருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
    அருத்தியார்க் கன்பர் போலும்  அதிகைவீ ரட்டனாரே!

    என்ற அப்பர் திருநேரிசைக் கருத்தையும் காண்க. இந்த அருத்தியே  கம்பராமாயணத்தில்  எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விளைவின் தன்மை இப்பாட்டில்   திண்ணனார் தம் அனுபவநிலையைக் கூறும்வகையாற் குறிக்கப்பட்டது. இது 96 பாட்டுக்களையுங் கடந்த மேல் 97-வது திருப்பாட்டாக அமைந்த தெய்விக அமைப்பும் காண்க. மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையை அடையும்போது இத்தன்மைத்தானதொரு நிலையை அடைந்தனர். இதனை,

    பித்திது  எனப்பிறர்  நகைக்க  வரும் நாலாம்
    சத்திபதி   யத்தமது  சத்தறிவு  தன்னைப்
    பொத்திய   மலத்தினும்  வெரீஇச்சுமை   பொறுத்தோன்
    ஒத்துஇழி  பிணிப்புறும்  ஒருத்தனையும்   ஒத்தார்.

    எனப்பாடுகிறது. இப்பாடல் இறைவனருள்  வாய்க்கப் பெற்ற உயிர்கள் அடையும்  பல்வகைப் படிநிலைகளை  அறிமுகப் படுத்துகிறது. இறைவன் அருள் வாய்த்தமையால்   திண்ணன், திண்ணனார்  எனப் போற்றப்  பெற்ற  சிறப்பை இப்பாடலில் கண்டு கொள்க.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம்’  என்ன நாணன்,
    ‘காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    வரலாறு

    முதல்வேட்டைஎனப்பட்ட கண்ணிவேட்டைக்குக்  கிளம்பினான்திண்ணன். அவ்வாறு வேட்டைபயின்று வளர்ந்து பதினாறாண்டு அகவை அடைந்தான். அந்த உடுப்பூர்வேடர்குலத்தார் கானகத்தில் வேட்டையாடிப் பன்றி, புலி, கரடி, காட்டுமான், கலைமான் ஆகியவற்றை வேட்டையாடி விருந்துண்டு வாழ்ந்தனர். அப்போது முதுமையால்தளர்ந்த வேடர்குலத்தலைவன் நாகன், ‘’என்முதுமையால் தளர்ந்தேன்! இனிஇந்தவேடர்குலத் தலைவன் என்னும் பொறுப்பைத் திண்ணனுக்கு அளிப்பேன்!  தேவராட்டியை அழைத்து , காடு கிழாளுக்கு பலியூட்டி. பூசைசெய்ய அழைக்க!’’ என்றான். வேட்டுவர்  குலத்தின் பூசைமகளாகிய மூத்த  வேட்டுவச்சி, ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு  வேண்டிய உணவைஅளித்துப் போற்றிய காடன்,’’ என்மகன்   திண்ணனை வேடர்குலத் தலைவனாவதற்கு உரிய வழிபாடுசெய்து உதவுக”  என்றான், முதியோளும்‘’ இவன்வேடர் குலத்தலைவன் ஆவதற்குரிய சகுனங்கள் சிறப்பாக இருக்கின்றன!’’ என்றாள்.

    நாகனும் தன்முன் வந்து வணங்கிய  மகனைத் தழுவி, முறைப்படி தலைவனுக்குரிய முதல் சுரிகை, உடை தோல்  ஆகியவற்றை வழங்கினான் திண்ணனும் தந்தையை வணங்கி மறுநாள் அதிகாலையில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  தலைவனுக்கு உரிய வகையில், தலை, தோள், மார்பு, கை, இடை, ஆகியவற்றில் வீரம் காட்டும் அணிகளை அணிந்து கொண்டு காலில்  வீரக்கழல்  மற்றும் செருப்பும்  அணிந்து வேடர் கூட்டமாகிய தோழர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்!

    எல்லாரும் எல்லாத்திக்கிலும்  பரவிச் சென்று பற்பல விலங்குகளை விரட்டி, திண்ணனார் வேட்டையாட உதவினர். அப்போது காட்டின் கொற்றவைக்கு பலியூட்டி முதியவள் வந்தாள். திண்ணனுக்குத் தலையில் சேடை என்னும் அட்சதை தூவி வாழ்த்தினாள். உடனே திண்ணன்  வேட்டைக்குப் புறப்பட்டதைச்  சேக்கிழார்,

    தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
    வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
    ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
    மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.

    என்றுபாடினார். மேலும்  அவர் எய்த அம்பில் அடிபட்ட விலங்குகளை,

    தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்;
    வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா;
    நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;
    மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.

    என்று,  வேட்டையின் சிறப்பினை ஓசைநயம்படப் பாடினார்! காட்டுக்குள் நெடுந்தூரம்   வேட்டையாடிக்   கொண்டே விரைந்த  திண்ணனுடன், தொடர்ந்து  சென்ற  நாணனும் காடனும் ஓரிடத்தில் பெரிய காட்டுப்பன்றி இரண்டு துண்டாகி வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர்! ‘’நாம் பல காததூரம்  வந்தோம்! இவர்  தனியாக முன்னேறி வந்து,  ஆடவர்களின் தலைவனாகி இதனைக்   கொன்றான், அச்சோ!’’  என்று போற்றினர், அதனச் சுட்டு உணவாக்கிக் கொள்ள முயன்ற போது. தண்ணீரில் வேக வைக்க வேண்டுமே! என்று திண்ணன் கூறிய போது  நாணன் தண்ணீர்  ஓடும்  பொன்முகலி யாற்றைக் காட்டினான்.  அங்கே இப்பன்றியைக் கொண்டுபோவோம் என்று கூறிச்சென்ற திண்ணன், அங்கிருந்த மலையைக்  கண்டான். இவ்வாறு மலைக்காட்சியைக்  காட்டியபோது அங்கே மலையும், சாரலும். கோயிலும் ஒன்றாகி, ‘’நிர்விகற்பக்காட்சி’’ யாகப் புலப்பட்டது ; பின்னர் நெருங்கிச் சென்று காணும் போது, தனித்தனியாகிச்  ‘’சவிகற்பககாட்சி’’ ஆயிற்று. நற்காட்சி என்ற சித்தாந்த நிலையை இங்கே சேக்கிழார்  குறிப்பிட்டார்! இதனை இப்பாடலில் காண்போம்.

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    பொருள்

    “நாணணே! முன்னே தோன்றும் குன்றின்கண் சேர்வோம்” என்று திண்ணனார் சொல்ல, நாணன், “நீ அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்; சேணில் உயரும் இந்தத் திருக்காளத்தி மலையின்மேல் எழுந்து செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர் இருப்பார்; நாம் கும்பிடலாம்” என்று சொன்னான்.

    தோன்றும் குன்றில் – முதலிற் கண்ணுக்குப் புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக் கவர்ந்தது.

    நீகாணப்போதின்- காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகை யிடங்களுக்குப் போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு. ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக் குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும் வற்புறுத்திக் கூறுகின்றான் “குன்றின் நண்ணுவோம்; அதனைக் காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்” என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப் பாராட்டத்தக்கது.

    காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில் நாயனார் காண்பதற்கே அங்குப் போகின்றார். ஏனையோர் போலல்லாது,

    “ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டுகொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார்”  என்பது காண்க.

    நல்ல காட்சியே காணும் – காட்சி – காணப்படுவது. காணும் – காணப்படும்.  இவர்காணும் காட்சி இறைவனது அருள் திரு நோக்கம் பெற்று அவன் காட்டக்காணும் காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம் புறமாகிய கரணங்களால் எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ அதனையே காணுதல்.

    “கண்காள் காண்மின்களோ – கடல் –  நஞ்சுண்ட கண்டன்றனை,
    யெண்டோள் வீசிநின் றாடும்  பிரான்றனைக் (கண்காள்)”

    என்றது தமிழ்மறை.

    இந்த …. கும்பிடலாம் – நல்லகாட்சி இதுவாமென்று நாணன் கூறியது. சேண்உயர் – வானில் உயர்ந்துவிளங்கும். உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த் “தோன்றும் குன்று” என்றார். அவ்வாறு திண்ணனார் “தோன்றும் குன்று” என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று வாயினாற் பேர் கூறினான். “பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால் நீண்ட, குன்று” (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது அவன் சொல்லியபடியே “தோன்றும் குன்று” என்று பேர்குறியாது கூறியது காண்க.

    மலைமிசைஎழுந்து செவ்வே – மலையினின்றும் வேரூன்றி முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் – கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் – குற்றம். இது கோண் – கோணைஎனவும் வழங்கும்.

    “யான்செய்தேன் பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக்
    கோணை”

    (சிவஞானசித்தியார் – 10, சூத்திரம் – 2).

    குடுமித்தேவர் – குடுமி – உச்சி. மலையின் உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால் தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்

    சிகையாயுள்ள அதர்வசிகை “ஏனையவற்றை யெல்லாங் கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது” என்று முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன் இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும் போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.

    நாணன் மேலே  சொல்லியவை

    “குன்றினுக் கயலேயோடும் குளிர்ந்த பொன் முகலி”

    என்றது இவரை வழிப்படுத்திய முதல்உபதேச மொழி;

    இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச மொழிகளாம். மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும் கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது காண்க.

    இறைவனை அறிந்து கொள்ளுதலாகிய நற்காட்சி மூலம்  அவரை அடைய வேண்டும் என்பதும், அடையும் வழிமுறையும் , அடைதலும் ஆகிய  சித்தாந்த  நெறி   இப்பாடலில்  விளக்கப்பெறுகின்றது. இறைவனை  அடையும் வழியை   முன்பே அறிந்தவர் மூலம் தெரிந்து  கொள்ளுதல் என்ற வகையில்  நாணன்  திண்ணனுக்குக்  கூறிய உபதேச  மொழியாகக்   கொள்ள வேண்டும். சமய உலகில்  உபதேசம்  எங்கிருந்து வேண்டுமானாலும்  கிட்டும் என்பது சாத்திரம்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 131 (பொன்தட)

    சேக்கிழார் பாடல் நயம் – 131 (பொன்தட)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
    வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
    அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
    கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்

    வரலாறு

    திண்ணன்  தம் ஐந்தாம் வயதில் சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி வீட்டில்  கட்டினார்.  பின்னர் வில்லாற்றல் உடைய முதியோர்  இவருக்கு வில்வித்தை கற்பித்தனர். அதனை ஒரு விழாவாகவே கொண்டாடினர். திண்ணன்  வில்லை வணங்கி அவ்வித்தை பயின்றார். ஊரவரும் உதவி புரிந்தனர். விற்பயிற்சிக் களத்தை அடைந்த திண்ணன் மிகவும் பணிவுடன் அதனைக் கற்றான். இதனைச் சேக்கிழார் பாடுகிறார்;

    பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
    வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
    அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
    கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்!

    இப்பாடலின் பொருள்

    அழகிய பெரிய மலையின் சாரலில் விருப்ப மிக்க (விற்றொழிலின்) கடன்களை யெல்லாம் முன்னர்ச் செய்துவைத்த விற்றொழிற் களத்திலே சேர்ந்து விதிப்படி முறையாக வணங்கிப் பொருந்திய அன்றைய நாளிலே தொடங்கி, ஒவ்வொருநாளும் வலியவில்லை ஆளுந்தொழிலினை முற்றுப் பெறுமாறு, என்னை ஆளுகின்ற கானவர்குலத்தில் அரியராய் அவதரித்த சிங்க வேறுபோன்ற திண்ணார்.முழுவதும் கற்றுத்  தேறினார்.

    நயம்

    பொன்தட வரையின் பாங்கர் – இது விற்றொழில் பயிற்றும் பயிற்சிக் களமிருந்த மலைச்சாரல் குறித்தது.

    புரிவுறு கடன்முன் செய்த – செய்யத் தக்கனவாகிய கடன்களை முன்னமே செய்து வைத்திருந்த. அவை, தொழிற் பயிற்சிக் களத்தில் முன்னர்ச் செய்து வைக்கத்தக்க கடவுட்பராவுதல் முதலிய கடமைகள். வில்லினையும் மாணவனையும் காப்பணிவித்தலும், சிலையைச் சூழ்ந்து ஏழு நாள் குறிச்சியை வலங்கொள்ளுதலும், விற்பிடிப்பித்தலும், முதலிய கடன்கள் குறிச்சியிற் செய்யப்படுவன.

    விற்றொழிற் பயிற்சிக்களம் குறிச்சிக்குப் புறம்பாய் அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். சிலைபிடிப்பிக்கு நன்னாளின்முன்னர் அவ்விடத்திலும் இதுபோலவே செய்கடன்களை முன்னரே செய்துவைத்தல் மரபு. சிலை பிடிப்பித்த பின்னர்க் குறிச்சியினின்று மாணாக்கனை ஆசிரியன் அக்களத்துக்கு அழைத்துச் சென்று விற்றொழில் பயிற்றுவிக்கத் தொடங்குவான். அச்சிறப்பு இங்குக் கூறப்பட்டது.

    விற்றொழிற் களம் – விற்றொழில் கற்றற்குரிய களம். முற்காலத்தில் கலைபயில் இடங்கள் நகர முதலிய குடியிருப்பு இடங்களை அடுத்துப் புறம்பே அமைப்பது ஊர் அமைப்பாகும். விற்றொழிற் பயிற்சி யிடமாகிய களமும் இவ்வாறே குன்றவர் வாழும் ஊராகிய குறிச்சிக்குப் புறம்பே அதனை அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். இவ்வமைப்பு இக்கலைப் பயிற்சிக்கு இன்றியமையாததுமாம். என்னை? அம்புகளைக் குறிவைத்து எய்யும் கலையாதலின் அதற்குரிய அகன்ற வெளியும், மரங்கள் முதலிய பிறவும் வேண்டப்படும்; தனியிடமல்லாது குடியிருப்புக்கு அணிமையாயின் அங்கு வாழ்வாருக்கு இப்பயிற்சியால் இடையூறு நேரும்; இவை முதலிய காரணம் பற்றி விற்றொழிற்களம் பொன்  தடவரையின் பாங்கர் அமைக்கப்பட்ட தென்க. ஊர்ப்புறம்பே ஒதுகிடைகளும் யாக சாலைகளும் அமைந்த அமைப்பினைச் சண்டீசநாயனார் புராணத்தில்  கூறியதும்காண்க.

    விதிமுறை வணங்கி – வில்லின் தொழிற்கலை பயிலத் தொடங்கும் மாணாக்கன் முதலில் வில்லினையும், ஆசிரியனையும் அதற்குரிய கடவுளையும் வேலன் முதலியவர்களையும் பெரியோரையும் வணங்குதல் மரபு. அம்மரபாலே வணங்கி.

    மேவும் அற்றை நாள் –   வில்விழா முடிவுறுகின்ற ஏழாம் நாளாகிய அன்று.

    நாளும் – ஒவ்வொருநாளும், கல்விப்பயிற்சி முற்றும்வரை அதனை நாடோறும் பயிலவேண்டும் என்பது முறை. அடற்சிலை – சிலைக்கு வலிமையாவது அதனை ஏந்தியோன் எண்ணியாங்கு வினைமுடிக்கத் தக்கதாகி உதவுதல்.

    முற்றக் கற்றனன் – முற்ற – நிறைவெய்த. கலையின் முற்றுதலாவது அதனாலாகிய முடிந்த பயனைத் தருதல்.

    “கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்,
    நற்றாள்   தொழாஅர்  எனின்” என்பது திருக்குறள்.

    முற்றக்கற்றதனால் இது இறைவர்க்குப் பகலிற் கானவூ னமுதமாக்குதற்கும், இரவிற் காவல்புரிவதற்கும் பயன்பட்டதென்பதும்  புலப்படும்.

    ‘’என்னை ஆளும்’’  – இது கவிக்கூற்று. சிலைக்கலை முற்றும் கற்று நிரம்பிய இவ்விடத்தில் ஆசிரியர் நாயனாருக்கு ஒரு வணக்கம்செய்து மேற்செல்கின்றார். நாயனாரது சரிதத்தை உலகச்சார்பு பற்றியதும் சிவச்சார்பு பற்றியதும் என இருபகுதியாகப் பிரிப்போமாயின் உலகச்சார்பின் பகுதி நிரம்புகின்றநிலை இது. இனி இது முற்றியபின் நாயனார் வேட்டையிற் புக்குச் சென்றவாறே சிவச்சார்பு பெறப்போக உள்ள பகுதி தொடங்குகின்றது.

    “ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” (சிவஞானபோதம் – 8ம் சூத்திரம்) என்றபடி உண்மையில் வேடர் சேரியில் வளர்கின்ற மன்னவ குமாரராகிய திண்ணனாரது; அந்தச் சேரியில் வளரும் வளர்ச்சித்திறங் கூறும் பகுதி இங்கு முற்றுப்பெறுகின்றது.

    இனித் “தவத்தினி லுணர்த்த விட்டு….அரன்கழல்செல்” வதாகிய பகுதி தொடங்குகின்றது என்ற உண்மையுங் காண்க. சிவவழிபாட்டுக் கிரியைகளுட் புகுமுன் நியாசங்கள் முதலியவற்றாற் சுத்திசெய்துகொண்டு புகும் ஆகமவிதிபோல இங்குச் சிவச்சார்பு பெறப்புகும் நாயனார்க்கு வணக்கம்செய்து ஆசிரியர் மேற்பகுதி தொடங்குகின்றார். இஃது ஆசிரியரது மரபு.   ‘’என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்’’  என்றது  அத்தகைய மரியாதையைக்  குறித்தது.

    கானவர்க்கு அரிய –  வேடர் குலத்துக்குக் கிடைத்தற்கரிய பேறாகக் கிடைத்தவர் என்பது கருத்து. சிங்கம் – சிங்கம் போன்றார். உவமையாகு பெயர்.  இதனுடன்

    ‘’ஏரார்ந்த  கண்ணி   யசோதை இளஞ்சிங்கம் ‘’ என்ற ஆண்டாளின்  திருப்பாவையும் கம்பரின்,

    பரதனும் இளவலும்  ஒருநொடி பகிராது
    இரத்தமும் இவுளியும் இவரினும், மறைநூல்
    உரைதரு  பொழுதினும் ஒழிகிலர் எனைஆள்
    வரதனும்  இளவலும்  எனமரு   வினரே!

    என்ற பாடலும்  இங்கே ஒப்பு நோக்கத்தக்கன.

    இப்பாடலில், திண்ணன், பின்னர் கண்ணப்ப நாயனாராக விளங்கப் போகிறார் என்ற பக்தியுணர்வு மேம்பட்டமையால், அவரை வழிபட்டு, ‘’என்னை ஆளும்  கானவர்க்கரிய  சிங்கம்’’ என்று  சேக்கிழார் கூறுவது எண்ணியெண்ணி  உருகத்தக்கது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப்
    பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச,
    இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி,
    வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி்.

    வரலாறு

    பிறந்த குழந்தையைத்  தந்தை எடுத்தணைத்தான்; சிறுகுடி மக்கள் கொண்டாடி விழா எடுத்தனர்; புலிக்குட்டி போன்ற குழந்தை உலகமே போற்ற விளங்கியது; அக்குழந்தையின் திண் என்றிருக்கும் உடலைக் கருதித் ‘’திண்ணன்’’ என்றே பெயரிட்டு  அழைத்தனர்;அக்குழந்தைக்கு மரபுப்படி காப்பாக,  வேப்பங்கொட்டை கோத்த அணியை அணிவித்து வளர்த்தனர்; தெய்வத்துக்குப் பான்மடை கொடுத்தனர்; குழந்தை  தலையில் புலிநகச்  சுட்டியையும்,  மார்பில்  வெண்பல் தாலியையும்  அணிவித்தனர்;  மணிகள் பூட்டிய சதங்கையுடன்  நாய்க்காசு, தாயத்துடன் கூடிய அரைஞாணையும்  அணிவித்தனர்; அந்நாளில் குழந்தை,  பெற்றோர் மார்பில் சளுவாய் ஒழுக,  மழலைச் சொல் பயின்றது. அப்போது நடந்த நிகழ்ச்சியைச்  சேக்கிழார் பாடுகிறார்; அப்பாடல்

    பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கைநீட்டப்
    பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
    விருசுடர்க் குறுகண் டீர்க்கு மெழில்வளர் கண்ணீர் மல்கி
    வருதுளி முத்த மத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி,

    பொருள்

    குழந்தை பொருகின்ற புலியாகிய பார்வைமிருகத்தின் திறந்த அகன்ற வாயினைச் சிறு குகையென்று கருதித் தமது அழகிய கையை அதனுள் நீட்ட;  அன்பு மிக்க தந்தை அதனைக் கண்டு பரிந்து பசுந்தழை யொன்றைக் கையிற் கொண்டு ஒச்சவே; சூரிய சந்திரர்கள் என்னு மிரண்டு சுடர்களுக்கு உளதாம் துன்பத்தைத் தீர்க்கும் அழகு வளரும் கண்களின் நீர் நிரம்பி வருகின்ற துளியாகிய முத்தத்தை அந்தத் தாயாகிய தத்தை வாய்முத்தங்த்தால்  மாற்றினாள்;

    விளக்கம் :-  பார்வை விலங்காகிய  புலிக்குட்டியின் திறந்த வாயை ஏதோ ஒரு பேழை எனக்கருதியது.

    சிங்கம், புலி முதலிய விலங்கினங்களின் மேல்வாய் கீழ்வாய்ப் பற்கள் வளைந்து குறடுபோலப் பொருந்தி மாட்டிக் கொள்ளுந் தன்மையுடையன; ஆதலின் இரைகண்ட போது எளிதின் வாய்திறந்து பற்ற இயலாதன; இதுபற்றி அவை பெரும்பாலும் வாயை அகலத்திறந்து வைத்திருக்கும்  இயல்புடையன என்பர்.

    இவ்வாறு திறந்துள்ள அகன்ற வாய் சுருங்கி நீண்டு உள்ளே செல்லுதலால் குகை எனக்கருதி, குகையினுள்ளே உள்ளது எது அதனைப் பற்றுவோம் என்று

    உள்ளே கை நீட்டுதல் சிறுவரியல்புகளில் ஒன்றாம்.

    பின்னர் இக்குழந்தை,   வேட்டையாடி வந்து, சிவபிரானுக்கு அமுதூட்டிக் காவல் புரிந்தும், “இருசுடர்க்கு  உறுகண்   தீர்க்க”  அம்பினால்  தமது கண்ணைப் பேழ்ந்து அப்பிக் கண்ணப்பராகியதும் கையாதலின் அதனை முற்கூறி அழகு படுத்தினார். இவ்வாறு இளம்பிராயத்தும் பின்னர்க் காளைப்பருவத்தும் கொடிய விலங்குகளுடன் பழகியதனாலும் போர் செய்து வென்றதனாலும் இவரது திருமேனியில் அவற்றால் புண்செய்யப்பட்ட வடுக்கள் விளங்கின என்று,

    “வடிவே,
    மறப்புலி கடித்த வன்றிரண் முன்கை,
    திறற்படை கிழித்த திண்வரை யகலம்,
    எயிற்றெண்கு கவர்ந்த விருந்தணெற்றி”

    என நக்கீரதேவர் திருமறத்தில் திருக்கண்ணப்ப தேவர் அருளினார். ஆயின் அவ்வாறு நாயனாரது திருமேனியில் ஊறுபட்ட தெனக் கூறவும் மனமொருப்படாத ஆசிரியர்,  அதன் அறிகுறியாக இங்குச் சிறு வயதிற் புலியின் வாயில் இவர்கை நீட்டினார் என்ற ஒருசெய்திமட்டுங் கூறி ஏனைய வெல்லாம் அநுமானத்தா லுணர்ந்து கொள்ளவைத்தாரென்க.

    நீண்டகாலம் கழித்துத் தவங்கிடந்து அரிதிற் பெற்ற பட்டத்திற்கு உரிய மகனாதலிற் பரிவுடை என்றார். புலிவாயிற் கைநீட்டுவதாகிய பெருங்கேடு தரத்தக்க பெருஞ் செயலைத் தடுக்க முயல்பவன் அதற்குரியபடி பெருந் தண்டஞ் செய்து ஒறுக்காது பசுந்தழை கொண்டு, அதனைக் கொண்டாகிலும் அடித்து ஒறுக்காது ஓச்சுவதும் இவனது பரிவு காட்டும். ஓச்சுதல் – ஓங்குதல். அடித்துத் தண்டிப்பான் போன்ற பாவனை காட்டுதல்.

    அம்மையார் ஊட்டிய திருமுலைப்பால் உண்டுபால்வடிந்த வாயுடன் நின்ற ஆளுடைய பிள்ளையாரை,

    “எச்சின்மயங் கிடவுனக்கு  ஈது  இட்டாரைக் காட்டென்று,  கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சி” னார் அவரது தந்தையார் சிவபாதவிருதயர். இங்கு நாகன் புலிவாயிற் கைநீட்டிய தன் மகனாரை மாறுதானும் கொண்டோச்சச் சகியாது பைந்தழை கொண்டு  ஓச்சினான் என்றதும் அவனது பரிவு காட்டுவதாம்.

    இருசுடர்க்கு  உறுகண் என்ற தொடரால்  நாயனாரது சரிதக் குறிப்பும் கண்ணப்பர் என்ற பெயருக்குக் காரணக் குறிப்பும் பெற இதனைமுன்னபே கூறினார்.  இருசுடர்கள் சூரியசந்திரர்கள். இவர்கள் முறையே சிவபெரு மானது வலது கண்ணும் இடதுகண்ணுமாவார்.

    உறுகண் ஆவது உதிரம் பாய்ந்தது. தீர்க்கும் – உதிரம் வாராது தடுத்து  நின்ற. இவை பின்னர் இவர் சரித நிகழ்ச்சிகளின் முற்குறிப்பாக இங்குக் கூறினார்.

    எழில்வளர்கண் என்ற தொடர்,  இவரது கண்கள் அழகால் வளர்ந்தே நின்றன. அவை

    “கொன்றைதங்கு வேணி யார்தமைக், கண்ணினீடு
    பார்வையொன்று கொண்டு”

    “காணுதற்கரியார் தம்மை, ஆர்வமுன் பெருக ஆரா
    அன்பினிற் கண்டு கொண்டே”  எஞ்ஞான்றும் நிற்பன என்பதைக்குறித்தது. இவற்றில் ஒன்று இறைவனது கண்ணில் அப்பப்பட்டு அவரது கண்ணே யாயிற்று. ஆதலால் எழில்வளர்கண் என்றார்.

    நீர் கண் மல்கி வரும் துளி முத்தம் – நீர், பெருகும்போது முதலிற் கண்களில் நிறைவதும். பின்னரே துளிகளாக வீழ்வதும் இயல்பாம்.

    அத்தாய் என்றசொல்  தந்தையினும் மிக்க பரிவுடைய அந்தத் தாயைக்குறித்தது.

    துளிமுத்தம் – வாய்முத்தம் – சொற்பின்வருநிலை. ‘ஊனுக்கூன்’ எனுமுரை என்று நினைவுற்று இறைவன் கண்ணோய்க்குக் கண் மாற்றுக ஒப்பு முறை (Homeopathic) மருந்தாய் உதவும் மருந்துப் பண்டமாகிய இக்கண்கள் அந்தம் ஒப்புமுறை மருந்தினிலையில் நோய்க்கு மாற்றாகப் பழகித் தேர்ந்தன என்ற குறிப்புப் பெறத்  துளிமுத்தம் பெற வாய்முத்தம் மாற்றி எனக் கூறிய நயமும் காண்க. வாய் முத்தம் கொள்வதற்குத் துளிமுத்தம் மாற்றி எனப் பண்டமாற்றுக் குறிப்புப் பெறக் கூறிய சுவையை இங்கேகாணலாம்.

    வாய்முத்தங் கொள்ளுதல்  என்பது,  பிள்ளைப்பருவங்கள் பத்தினுள் முத்தப்பருவம் என்பது குறித்தது. இவ்வாறே முன்னர்

    “மழலைத் தீஞ்சொல்  வண்ணமென் குதலைச் செவ்வாய்
    குதட்டியேவளராநின்றார்”

    என்றது செங்கீரைப்பருவங் குறித்ததென்பர்.

    இப்பாடல் கண்ணப்பரின் குழந்தைப்பருவச்செயல் பிற்காலத்தில், அவர் செய்த செயற்கரிய செயலை, முன்னதாகக் கூறும் நயத்துடன் விளங்குகிறது. சிவபிரான்  வலக்கண்ணில் உதிரம் பாய நின்றது; பின்னர் இடக்கண்ணில் உதிரம் பாய நின்றது; இரண்டும் சூரிய சந்திரராகிய இருசுடருக்கு நேர்ந்த துன்பம்! அதை நீக்கத் தம் கண்களையே எடுத்து அப்ப முயன்ற  அரிய செயல் இங்கே  முன்னதாகப்   போற்றப் பெறுகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல்  நயம் – 129

    சேக்கிழார் பாடல் நயம் – 129

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    வரலாறு

    திருத்தொண்டர் புராணத்தின்  பதினோராம்  அடியார்  கண்ணப்ப நாயனார்  ஆவார். அவர் வாழ்ந்த நாடு கண்ணப்பர் திருநாடு எனப்போற்றப்பெறும்  பொத்தப்பி நாடாகும். அங்கே உடுப்பூர் என்ற பழமையான  ஊரில் கண்ணப்பர் பிறந்து வளர்ந்தார்.  அவ்வூரில் யானைத்தத்தங்களை ஊன்றி வேலியிட்டு அரண் அமைத்தனர். அங்கே கொன்றவர் எனப்பட்ட வேடுவர் வாழ்ந்தனர். அவ்விடத்தில் நாய் விளா மரநிழலில் உறங்கும். கொடிய விலங்குகளைக் கவரும் பார்வை விலங்குகளுடன் , ஐவன நெல் காயும்.

    அங்கே புலிக்குட்டி, யானைக்கன்று இவற்றுடன் சிறுவர்   விளையாடுவர்;வந்தணையும் மான்களைத்  தழுவி வேட்டுவ மகளிர்  விளையாடுவர். அங்கே இசைக்கருவிகளின் பேரோசையும், வேடர்களின் கொல் , எறி ,  குத்து ஓசையுடன் அருவியின் ‘கல்’ என்ற ஓசையும் கேட்கும். கரிய நிறத்துடன் , அச்சமும் கருணையும் அற்றவராய், ஊன் தசை உணவும் உண்ணும் வேடர் தலைவனாக   நாகன் என்பான் இருந்தான; முன்பு தவம் செய்திருந்தாலும் இப்போது குற்றத்தையே குணமாகக் கொண்டான். அவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவன். அவன் மனைவி தத்தை.

    மறவர் குலக்கொடியாகிய  தத்தை, புலிப்பல்ளுடன் சங்கினைக் கோத்து அணிந்து, பெண்சிங்கம் போல் இருந்தாள்.  அவளுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று பலரும் கூற, முருகப்பெருமான் திருவருள் வேண்டி வழிபாடுகள் செய்தாள். கோயிலுக்கு கோழி,மயில் ஆகியவற்றை நேர்த்திக் கடனாக விட்டு, பெரிய திருவிழா நடத்தினாள். அதனால் மலையை வேலால் பொடித்த வேலேந்திய முருகன் திருவருளால் ஆண்குழந்தை பிறந்தது. அதனைச் சேக்கிழார்,

    ‘’கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
    ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
    ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே
    பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது’’

    என்று பாடினார். இப்பாடலின் பொருள்:

    வேடர்களது குலம் விளங்கும்படி தத்தையின் வயிற்றிலே கருப்பம் தரித்ததாக, ஊனமில் பலிகளைக் கொடுத்துக் கடமையாயுற்ற வெறியாட்டுடனே, ஒவ்வொன்றாய் ஆயின அந்த மாதங்கள் சென்றனவாக, முன்னே அளவில்லாது செய்த தவத்தினாலே நற்பான்மையுடைய நிறைமதியை உவர்க்கடல் பெற்றது போலத் தத்தை மகவினைப் பெற்றெடுத்தபோது, என்பதாகும். அந்தக் கண்ணப்பர் பிறந்ததால் வேடுவர் குலம், சிவபாத விருதயரால் கவுணியர் குலமும் , சேக்கிழாரால் பெற்றோர்  குலமும் விளக்கம் பெற்றது போல்  உயர்ந்தது!ஒரு பெரியார் ஒரு குலத்தில் அவதரித்தாராயின் அவரால் அக்குலமுழுவதும் விளக்கமடைந்து உய்யும் என்பது ஆன்றோர் துணிபு. திருவண்ணாமலைக் கார்த்திகைச் சோதி தரிசித்தவரின் “கோத்திரத்தி லிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ மென்றார்” என்ற அருணாசலபுராணமுங் காண்க.

    குழந்தை கருவில் வளரும்போது மாதந்தோறும் வரும் ஊனங்களை நீக்க பலிகள் இட்டனர்.  இம்மாதங்களின் வரும் ஊனங்களைத் திருவாசகத்தில் (போற்றித் திருவகவல்).

    “மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்,
    தீனமில் கிருமிச்செருவினிற் பிழைத்தும்
    ஒருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்தும் ,
    இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும்,
    மும்மதிதன்னுளம் மதம்பிழைத்தும்,
    ஈரிருதிங்களிற் பேரிருள்பிழைத்தும்,
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ,
    ஆறு திங்களி னூறலர்  பிழைத்தும்,
    ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும்,
    மெட்டுத்  திங்களிற் கட்டமும் பிழைத்தும் ,
    ஒன்பதில் வருதரு துன்பமும்பிழைத்தும்,
    தக்க தசமதி தாயொடு தான்படும்,
    துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும்…..”

    என்று, மணிவாசகப் பெருமான் அருளியனவற்றை இங்கு நினைவு கூர்க.

    ஆன அத்திங்கள் செல்ல  என்ற தொடர் ,  கருப்பம் தரித்தபின்,

    “கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும்
    வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, யுருவாகிப் புறப்பட்டு”

    என்றபடி வளர்ச்சி முற்றுவதான பத்துத்திங்களும் நிரம்பிச் செல்ல.

    “முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்” என்பது திருமந்திரம்.

    இதனை 280 நாட்களுக்குமேல் முந்நூறு நாட்களுக்குள் என்பர் நவீன சாத்திரிகள்.

    செய் அளவில் தவத்தினாலே  என மாற்றுக  தத்தையும்நரகனும் செய்தவம் – கானவர்குலஞ் செய்தவம் – மாதவஞ் செய்த தென்றிசை செய்தவம் – அன்புநிலை உணராது ஆணவத்தி னழுந்தி உழலும் உயிரெல்லாஞ் செய்தவம் என்று பலவாறு கூட்டி யுரைக்க நின்ற அழகுங் காண்க.

    “முந்தை யெம்பெருந் தவத்தினாலென்கோ
    முனிவ ரிங்கெழுந் தருளியது” என்பதற்கேற்ப

    ‘’உவரிசெய் தவத்தினால் பால்மதி யீன்றாலென’’ என்று கூட்டி யுரைக்க. பாற்கடலைத் தேவர்  கடைய அதிற் பிறந்தது மதி என்பர். அதுபோலத் தானும் ஒரு மதியினையீனும் பொருட்டு உவரியாகிய கருங்கடலும் தவஞ் செய்து பெற்றதுபோல என்பதாம். கடல் தவஞ்செய்தல் எதற்காக எனின் தனது கருமை, உவர்ப்பு மண்ணீருமாகாத தன்மை, கழிநாற்றம் முதலிய இழிபுகளைப் போக்கும்படிக்கும், பாற்கடல் பெற்ற அந்த மதிக் குழவியின் மேம்பட்ட குழவிமதியாகிய  கண்ணப்பரை ஈன்றெடுக்கவும் ஆம் என்க.

    அக்குழவியின் மேம்படுதலாவது அது வெண்மதியாய்க், கலைகள் வளர்வதும் தேய்வதும் உடையதாய்த், தேவரில் ஒன்றாய், இறப்பும் பிறப்பும் உடையதாய், இறைவனாற் காக்கப்பட்டுள்ளதாய் நிற்பது; தான் பெறும் இக்குழவி அவ்வாறன்றிக் கருங்கதிர் விரிக்குமேனிக் காமர் பெற்றுடையதாய், பதினாறாண்டில்  கலைவளர்வதாய்ப், பின்னர் என்றும் குறைவில்லாததாய், இறப்பும் பிறப்பு மில்லாததாய், இறைவன் பக்கத்திருந்து அகலாது அவருக்குக் காவல் புரிவதாய் உள்ளது என்பதைக்  குறித்தது.

    உவரி – தத்தைக்கும், பான்மதி – நாயனாராகிய மகவுக்கும் உவமை, உருவும் தொழிலும் பற்றி வந்தது. பான்மதி – நற்பான்மையும் நிறைவும் பெற்ற மதி என்க. முழுமதி தோன்றும்போது சிவந்து காட்டும். அன்றியும் இம்மகவு பின்னர்க் “கருங்கதிர் விரிக்குமேனி” யுடையதாம். குழவிகள் பின்னர் எந்நிறமுடையனவாக ஆயினும், தாய் வயிற்றினின்றும் பிறக்கும்போது புதிய இரத்தஊற்றத்தினால் எல்லாக் குழவிகளும் செம்மை நிறமே தந்நிறத்தின் மிக்குக்காட்டும். இங்குத் தத்தையீன்றபோது உவரியின் தோன்றும் பான்மதி போன்றிருந்த  இம்மகவு, தாதை எடுக்கும்போது “காளமேகம்”  ஒப்பாயினதென் றுரைத்தலும் காண்க.

    இனி, இறைவனது நெற்றிக் கண்ணாகிய கனற் கண்ணினின்றும் அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் “பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு” என்றபடி “வெம்புந்திய கதிரோனொளி” யென விளங்குபவர். இம்மகவு அவரது தண்ணருளாலே போந்தது ஆதலின் இது மதி போன்றது என்றார் என்றலுமாம்.

    ஞாயிற்றின் ஒளி, “வெம்புஉந்திய” தாகலின் வெப்பமுடையது; அதனைப் பல உயிர்களும் தரித்தாற்றலாகாதாம்; ஆயினும் அந்த ஞாயிற்றின் ஒளிபெற்று விளங்கும் மதி அமுதமாக்குவது;

    “தோற்று மன்னுயிர் கட்கெலாம்  தூய்மையே
    சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்,
    ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல் வெண்,
    நீற்றின் பேரொளி” (308) போன்றது;

    அது ஞாயிற்றின் கதிரொளியைத் தான் பெற்று அதனால் தண்ணிதாய் விளங்குவது என்பது பௌதிக சாத்திர உண்மை. அதுபோல இந்தப் பான்மதியும் முருகனாகிய ஞாயிற்றின் அருளொளியால் விளங்கி உலவி உலகுக்கு அன்பாகிய தண்ணொளி பரப்பி உய்விப்பதாயிற்று என்றதொரு குறிப்பினாற் பயனுவமையாயிற்று.

    மகப் பயந்த  போது – தத்தை மகவை ஈன்றபோது. தத்தை என்பது வருவிக்க. பயந்தபோது – பொழிந்தது – ஆர்த்த என வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

    இப்பாடலால்  வேட்டுவக்குடியிலும் சிறந்த சான்றோர் பிறப்பர் என்பதும், பால் மதி உப்புக்கடலில் தோன்றியது போல் கண்ணப்பர் பிறந்தார் என்பதும்,

    இவற்றுக்கெல்லாம்  காரணம் முருகப்பெருமானின் திருவருளே என்பதும், புலனாகின்றது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்?
    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்;
    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    வரலாறு

    போர் புரியும் இடத்தில்  தமக்கு நேரே நின்ற அதிசூரனைத்   தன்  முன்னே தானுண்ணும்  புலால் உணவைக்  கண்ட  சிங்கம் போல ஏனாதி நாதர் நின்றார். அவரை இப்புராணத்தில்  சேக்கிழார் புலி என்று குறிப்பின் சிங்கம் என்றதன்  நயம் உணரவேண்டும்.  அவர் முன் தன்  முகத்தைக்  கேடகத்தால் மறைத்துக்   கொண்டு கைவாளுடன்  அதிசூரன் போர்செய்ய முயன்றான். அவன் முன்னே தாள்  பெயர்த்து  நெருங்கினார் ஏனாதி நாதர். அப்போது அதிசூரனும் நகர்ந்தான். அப்போது அதிசூரன் நெற்றியில் வெண்மையான திருநீற்றை நாயனார் கண்டார்.உடனே  அதிசூரனைச் சிவனடியார் என்றே கருதினார் ஏனாதி நாதர். ‘’இவர் கருத்தின் வண்ணமே நான் நடந்து கொள்வேன்’’ என்று அதிசூரனின் கைவாளை  நீக்காமல் படையேந்தாத சிவனடியாரைக் கொல்லும் அபவாதம் ஏற்படாத படி இணங்கிநின்றார்!

    பொருள்

    அப்படிப்  போரிடுவது போல் நின்ற ஏனாதி நாதர்  திருவுள்ளத்தை இறைவனே அறிவார்; மற்றவர்  அறியார். அப்போதே  அதிசூரன் வஞ்சித்துக் கொல்லும்  தன்  கருத்தை நிறைவேற்றினான். அவர் நின்ற தன்மையை அறிந்த மின்னுகின்ற  சிவந்த சடையை உடைய சிவபெருமான், அவருக்கு அருள் புரிந்து சிவபதம் வழங்க  வந்தார்!

    விளக்கம்

    ஏனாதி நாதர்  திருவுள்ளம் திருநீற்றைப்  பெரிதும் போற்றியதாகும். சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது

    “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகின்
    தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
    சிங்காரமான சிவனடி சேர்வரே”

    என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.

    இத்தகைய  திருநீற்றின்மேல் மிக்க பற்றுக் கொண்ட ஏனாதிநாதர் , தம் முயற்சியால் பெற்ற  அனைத்தையும்  நீறு பூசிய அடியாருக்கே கொடுத்தார். அவ்வகையில்  அதிசூரனைக்  கொல்லும்  ஆற்றல்  இருந்தும்  திருநீறு பூசிய அவன் கரத்தால் கொல்லும்படி, பெருந்தன்மை  காட்டினார்!  காக்க  வேண்டிய  தம்முடம்பைக்   காவாது  நிற்றல்,  சிவத்தொண்டு புரிவதற்கே  யாகும்!

    பொய்யாகச் சிவவேடம்  புனைந்த  அதிசூரனை அவ்வேடமுங்  காவாதது இயல்பே!   இவர் காத்த  உடம்பை   சிவத் தொண்டுக்காகவே   இழந்த  செயலால்  இவருயிர்    இறைவனடிக்  கீழ் இன்புற்றது என்பது  இப்பாடலின் கருத்து என்பார்  ஆறுமுகநாவலர்!

    நயம்

    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்  என்ற  தொடரில் அங்கே   நின்ற  சிவாபராதியாகிய அதிசூரன்,  ஏனாதி நாதராகிய சிவனடியாரைக்  கொன்றான் என்று கூற உள்ளம் கூசியமையால்,  அதனைக் கூறாமல்   கருணையே உருவான சேக்கிழார் பெருந்தகை, ‘’தன்  கருத்தே  முற்றுவித்தான்’’  என்று கூறினார்!

    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    என்ற  பகுதி,   சிவபெருமானும் அதைத் தாங்கிகொள்ளாமல் விரைந்து, உடனே ஓடோடி வந்து வெளிப்பட்டார்  என்ற அவர்தம்  கருணைத்  திறத்தைக் காட்டுகிறது! அடியார் சொல்லக்   கூசினார்; இறைவன் கூசாமல்  சென்றார்! என்ற நயம்  எண்ணி  நெகிழத்  தக்கது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் தீங்கு புரியார்  என்பதை  அறிந்து, என்றும் திருநீறு பூசி அறியாத  அதிசூரன்,  அன்று  திருநீறணிந்து போர்க்களத்துக்கு  வந்தான். அதனைச்  சேக்கிழார்,

    ‘’வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
    உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
    வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
    புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்’’

    என்று பாடுகிறார்  இப்பாடலின் பொருள்:

    திருவெண்ணீற்றினை நெற்றி முழுதும் பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே வஞ்சனையாகிய கறுப்பினையும் உடனே கொண்டு அழகிய

    சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த பலகையினையும் கைகளிற் கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான்.

    விளக்கம்:

    திருநீறு என்பது  பாவம் அறுத்து   திருவருளைத்  தரும் புண்ணியம்   மிகுந்த  வீபூதியைக்  குறிக்கும். அதற்குரிய மேன்மையைக்  குறிக்காமல் இங்கே, வெண்  நீறு என்று குறித்தது, இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய பயன் தந்து பாவமறுக்காமல் அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து, வெண்ணீறு  ஆகும் அளவில் மட்டும் நீன்ற தென்பார்,  ‘திருநீறு’  என்னாது வெண்ணீறு என்றார். இங்கு இவன்பால் திருநீற்றின் நிறமாத்திரம் வெண்மையாய் நின்ற தென்பார் பின்னர், கறுப்புமுடன் கொண்டென்று உடன் சேர்த்துக் கூறியதும் காண்க.

    நெற்றிவிரவப் புறம்பூசி – தாங்கிய நெற்றியினார் என  முன் பாட்டில்  கூறிய பொருள் இங்கு நினைவு கூர்க. “பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்” என்று திருக்கூட்டச்சிறப்பிற் கூறியபடிக்கில்லாமல், 1. பொய்யாக வேடமிடுதற்காக  2. நீறு புறத்தேயும், 3. அதற்கு மாறாகக் கறுப்பு உள்ளத்தேயும் இருந்தது என்று குறிக்கப் புறம் பூசி என்றும், கறுப்பு முடன் கொண்டு என்றும் கூறினார்.

    இது அவனது நான்காவது வஞ்சனை. கறுப்பாகிய வஞ்சம், கோபம் முதலிய தீக்குணங்கள் தாமதகுணத்தின்பாற்பட்டவை. தாமதத்தின் நிறம் கறுப்பு என்ப. நெற்றி விரவ நீறுபூசுதல் நல்லசெயலாக விதிக்கப்பட்டது. அதனைக் குற்ற மென்று கூறலாகாது; குற்றம் வேறாக அவன் உள்ளத்தில் நின்ற தென்று எச்சரிப்பார் நெஞ்சில் கறுப்பும்  உடன் கொண்டென்று உடன் கூறினார். திருநீற்றுப் பொலிவுடன் இது சேர்த்தெண்ணத் தகாதென்பார் இழிவு சிறப்பும்மை தந்து கறுப்பும் என வோதினார்.

    வண்ணச்சுடர்வாள் – மணிப்பலகை என்பன  தனிப் பொருளுடையன; நாயனார் ஏந்தியவற்றைச் சுடர்வாள் – பொற்பலகை  என்ற ஆசிரியர், இங்கு மாற்றலனாகிய பாதகனால் ஏந்தப்பட்டுப் பாதகத்துக்குத் துணையாய் நின்ற இப்படைகளை இழிவாகக்  கருதாமல் இவ்வாறு அடைமொழிகள் தந்து சிறப்பித்தது  ஏனெனில், பகைவன் ஏந்தியவை என்று காணாது,-  “அண்டர்பிரான் சீரடியா ராயினார்”  ஒருவர் ஏந்திய படைகளாக நாயனார் இவற்றை நற்பாவனையிற் காண்டலாலும்,- இவை அவர்தந் திருமேனியுந் தீண்டும் பேறு பெறுதலாலும், – “பற்றலர்தம்  கைவாளால்  பாச மறுத்தருளி”  என்றபடி இவை இறைவனது திருவருட் சொரூபமாகிப் பாசமறுக்கும் கருவிகள்  ஆயினமையாலும்,  இவ்வாறு சிறப்பித்தார் என்க. அன்றியும் அவனது தீச்செயலுக்குக் காரணமாய் நின்றது அவனது வஞ்சகக் கறுப்பேயன்றி வாளும் பலகையுமன்று என்பதும் குறிப்பு.

    புண்ணியப் போர்வீரர் – என்ற தொடர்,  அதிசூரன் போல வஞ்சனை நெறியாகிய மறநெறியாற் போர் புரியாது அறநெறியாற் போர் புரிபவர் என்பார் இவ்வாறு கூறினார். புண்ணியம் என்னும் அடைமொழி பாவப்போரை நீக்குதலின் இது   பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.

    சொன்ன இடம் – முன்னர் ‘வேறிடம்’, ‘அக்களம்’ என்றபடி பிறர்கண்ணுக்குப் புலப்படாது வஞ்சிக்க ஏற்றதாய் அவன்தானே குறித்த இடம்!  அவன்தன் வஞ்சகத்தை முற்றுவித்தற்கு இந்த மறைவிடத்தை ஒருபெருஞ் சாதனமாகக் கொண்டான் என்பது உணரத்தக்கது.

    புகுந்தான் என்ற சொல்,  அவர் தனிநின்றாராக,  இவன் எண்ணியபடி வலிந்து புகுந்து மூண்டு மறம்பூண்டான் என்பதை  உணர்த்தியது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான்.

    ஏனாதி நாதரும் போராட ஆயத்தமானார். இருவர் பக்கமும் படை திரண்டது. ஊருக்கு வெளியே பொதுவான இடத்தில் எதிர்த்துப் போர் புரிந்து வென்றோர் அரசுரிமை கொள்ளலாம்  என முடிவுசெய்து, போர்க்களத்தில் திரண்டனர்.

    இருவகைப் படையினரும் கடுமையாக மோதிப் போர் புரிந்தனர். ஈசன் அருளாலும், தம் வலிமையாலும் அதிசூரன் படைகளை  ஏனாதி நாதர் அழித்தார். அப்போது அதிசூரன் படையின் நிலையைச்  சேக்கிழார் கூறுகிறார்.

    பாடல்:

    தலைப்பட்டார்  எல்லாரும்  தனிவீரர் வாளிற்
    கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு,
    நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
    அலைப்பட்ட ஆர்வம் முதல்  குற்றம்போல்  ஆயினார்.

    பொருள்

    கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும், ஒப்பற்ற வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற் கொல்லப்பட்டொழிந்தனர். இது கண்டு, வந்தெதிர்க்காத படைஞர் படுகளத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல ஆயினார்கள்.

    விளக்கம்

    தலைப்படுதல் – கூடுதல் – ஒன்றுதல். இங்குப் போரில் முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல் குறித்தது. அவர்களுள்  அதிசூரன் பக்கத்தார் அரசன் வாளால்  கொல்லப்பட்டார்.

    போர்க்களம்  பலவகைப்படும்;   ஓர் இடத்திற்குப் பெயர் அவ்வப்போது அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு இந்த இடம், முதலில் இந்தவெளி, போர் குறித்து இருபடையும் சேர்ந்தபோது “செருக்களம்”ஆயிற்று. அதன்பின் போர் மூண்டு நிகழும்போது போர்செய்களம் என்றாயிற்று. பின் படைஞரது போர் ஓய்ந்தபின் மேலும் போர் நிகழ நிற்றலின் பறந்தலை  எனப்பட்டது. இங்குத் தனிவீரர் வாளிமுன் எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது கொல்லப்பட்டாராதலின் கொல்களம் எனப்பட்டது காண்க. பின்னர் இவ்வகையிலும் நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம்  அக்களம்,  இடம்  எனப்பட்டது. இவ்வாறு  காலம் மாறிய வகையைச்  சேக்கிழார் பாடுகிறார்.

    முட்டாதார் என்ற சொல்,  மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர் வந்து போரில் முனையாதவர்களைக்  குறித்தது. போர்க்களத்தில் கொல்லப் படாதவர்கள் வேறிடத்திற்குச் சென்று மறைந்தனர். பொதுவாக நமக்கு மெய்யுணர்வு  வெளிப்படும்போது, முன்னிருந்த ஆர்வம் முதலான மறைந்தது போல் ஒளிந்தனர். . செயலற்றுப் போய் அங்கு எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து மறைந்தனர் என்னாது “குற்றம்போல் ஆயினார்” என்றிவ்வாறு கூறியது அவர்கள் யாதாயினர் என்றே தெரியா வகை மறைந்தனர் என, வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக் கூறியவாறு.

    நிலைப்பட்ட மெய்யுணர்வு – மெய்யுணர்வு – உண்மைப் பொருள் உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய செம்பொருளைக் காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது அருட்கண்ணாகிய சிவஞானத்தால் விளங்கிச் சிவம் – உயிர் – பாசம் என்ற பொருளைக் காணும் மெய்யுணர்வாம். அவ்வகை உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள் முனைந்து நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும், ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச் “சார்புணர்ந்து சார்புகெட”, “மூன்றன் நாமம்கெட” என்ற திருக்குறட் பாக்களின் கீழ்க் கண்டு கொள்க.

    மெய்யுணர்வின் இயல்பும், ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும், மெய்யுணர்வின் முன் குற்றம் நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுள்  காண்க.

    நிலைப்பட்ட – “கல் லெறியப் பாசி கலைந்து நன்னீர் காணுதல்போல” அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது பின்னர் அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது குற்றங்கள் அறவே ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பாார் நிலைப்பட்ட என்று சிறப்பித்தார்.

    “இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர் பஞ்சுத்துய் போலுமாதலின்” என்றார் பரிமேலழகர். நிலைப்பட்ட மெய்யுணர்வாவது திருவடி மறவாதிருத்தல். “மறக்குமா றிலாத வென்னை”  என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்”  என்ற புராணமும் முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது. ஆர்வம் முதல் குற்றம் – இவை காமம் – வெகுளி – மயக்கம் என்ற மூன்றென்பர்.

    “காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
    நாமங் கெடக்கெடும்  நோய்”

    என்ற குறளின் கீழ் “அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும்; அது பற்றி எனக்கிது வேண்டுமென்னும்  அவாவும், அதுபற்றி அப்பொருட்கண்   செல்லும் ஆசையும், அது பற்றி அதன் மறுதலைக்கண்  செல்லுங் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்தென்பர். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலால் மூன்றென்றார்” என்றெல்லாம்   பரிமேலழகர்  உரைத்தவை காண்க. இவற்றைக் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறாகவும் வகுப்பர்.

    “கலையமைத்த காமச்செற்றக் குரோத லோப மதவருடை,
    உலையமைத்திங்கு  ஒன்றமாட்டேன்  ஓணகாந்தன் தளியுளீரே”

    என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரம்  காண்க. இவையெல்லாம்  அடங்க “ஆர்வமுதற் குற்ற” மென்றார். இவை மூலமலத்தின் காரியம். நெல்லிற்கு உமி தவிடும் நீள்செம்பினில்  களிம்பும்போல.

    அலைப்பட்ட என்ற தொடர் ,  இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப் பெயர்ந்த என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும்,ஏனைய குற்றங்கள் ஒரு காலத்து அலைப்பட்டொழிவன என்றும் குறித்ததும் காண்க.

    இங்கு உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட மெய்யுணர்வுடையார் ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார் அதிசூரனும் அவன் படை வீரருமாயின பொருத்தமும் அழகும் கண்டு களிக்க.

    கொல்களத்தினும் நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக விளங்கினார் நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை மாற்றான் நெற்றியிற் கண்டபோதே அவனது கொள்கைக்கு குறிவழிநின்ற நேர்மையாலும், அதன்மேலும் நிராயுதரைக் கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே மலைவார்போற் காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா படைதாங்கி நின்ற நேர்மையாலும் துணியப்படும்.

    இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த ஞான தேசிகர்பால்  அறியத்தக்கன.

    வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண் நின்ற நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு உரியவாறு கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும் அலைப்பட்ட குற்றமும் உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம். இங்குப் போரில்  படை மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக் கிடக்கும் கொல்களத்தின் இடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே கண்ணப்ப  நாயனார்  புராணத்தில், திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

    “பலதுறைகளின்   வெருவரலொடு    பயில்வளையற    நுழைமா
    வுலமொடுபடர்    வனதகையுற    வுறுசினமொடு    கவர்நாய்
    நிலவியவிரு   வினைவலையிடை   நிலைசுழல்பவர்   நெறிசேர்
    புலனுறுமன   னிடைதடைசெய்த    பொறிகளினள   வுளவே”

    என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும், இவ்வாறுள்ளன பிறவுங் கண்டுய்வோமாக.

    ஆகவே  இப்பாடலின்மூலம், சித்தாந்தக் கருத்தின் வழியே, வெகுளி  மயக்கம் முதலான  குற்றங்கள்   காமத்தின் வழியே உருவாதலைச் சேக்கிழார்  மிகவும் நுட்பமாக  விளக்குவதை  அறிந்து மகிழ்கிறோம்; உணர்ந்து நெகிழ்கிறோம்! இப்பாடலில் ஏனாதி நாத நா யனார் அருள்  வரலாற்றையும் முற்படக்  கிளந்த  நுணுக்கத்தை உரையாசிரியர் திறம் போற்றுதற்குரியது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நள்ளார் களும்போற்றும்  நன்மைத் துறையின்கண்
    எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள்
    தள்ளாத தங்கள்  தொழிலுரிமைத் தாயத்தின்
    உள்ளான்  அதிசூரன்  என்பான்  உளன் ஆனான்.    5

    பொருள்

    பகைவர்களும் பாராட்டும் படியான நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில் இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி பிணைந்துள்ள தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய் அதிசூரன் எனப்படுவான்  ஒருவன்  இருந்தான்.

    விளக்கம்

    ‘நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை’   இத்தொடர் நன்மைத் துறை யாதலின் பகைவர்களும் போற்றினார்கள். பகைவராலும் பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை யொழுக்கம் சென்றது என்பதாம்.  நள்ளார் – இவர்பால் வாள்விஞ்சை பயின்ற அரசரால் வெல்லப்பட்டோரும் வெல்லப்பட நின்றோரும் ஆகிய பகைவர். போற்றும் பாராட்டும் வகையால்  பகைத்திறம் ஒழிந்து உய்யும். இவர் அன்பர் ஆதலின் இவர் எவரையும் நள்ளாராகக் கொண்டவர்  அல்லர். . இவர் பாற் படைபயின்ற அரசர்க்கே அரசகாரியத்தில் நள்ளார் உளராவர் என்க. அங்ஙனமாயினும் ஒருவன் தாயபாகப் பொறாமை கருதி இவர்பால் ஏற்கத்தகாத  இகல்புரிவானாயினான் எனச் சரிதந் தொடங்கிச் செல்லுமுகத்தால் இப்பாட்டில் இவரது இயல்பு ஒழுக்கங்கூறி அவ்விகல் கொண்டோனையும் உடன் கூறிய உள்ளுறை காண்க.

    “புல்லாதார் முரண்  அடக்கிப் பொருள் கவர்வார் என்பதெவன்?,
    செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை,
    வல்லாரும்  தம் தமது ஏத்த  அரிய பொருள் வரவிடுத்து,
    நல்லாராய்  ஒப்புரவு நட்படைய நடக்கின்றார்” (திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்) என்ற திருவிளையாடற் புராணக்கருத்தை இங்கு வைத்துக் காண்க.

    நள்ளார்களும் போற்றுதல் பகைமை பற்றி யிகழாது, நெறிவழுவாது நிற்கும் தன்மை நோக்கிப் புகழ்தல். நன்மைத்துறை – நல்லொழுக்கம்   திருநீற்றினன்பு.  எள்ளாதசெய்கை இயல்பு – என்றும் கைவிடா தொழுகும் தன்மை. இயல்பு – அவர் நினைந்து மேற்கொள்ள வேண்டுவதொன்று  அன்று – இஃது   அவர்   இயற்கையேயாம் என்னும்படி.

    விபூதியைப் பாதுகாக்கு நன்னெறியில் நூல்களால் புகழப் படாத திருத்தொண்டினை நூலாராய்ச்சியின்றி இயற்கையாகவே கொண்டு ஒழுகுகின்ற

    – என்பது இராமநாத செட்டியார் உரைக் குறிப்பு.

    தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயம் – விலக்க முடியாத வண்ணம் தமது தொழிலின் உரிமை பெற்ற தாயபாகம்  உடையவன். தாயத்தின் உள்ளான் – தாயாதி. தாயத்தால் மட்டும் உள்ளானேயன்றி வேறு எவ்வகையானும் உள்ளானல்லன் என்பது குறிப்பு.

    அதிசூரன் என்பான் – என்பான் – எனப்படுவான். தன்னையே தான் சாலமதித்துத் தன்னை அதிசூரன் என்று சொல்லிக்கொள்வான் என்று  உரைத்தலு மொன்று. உளன் ஆனான் – அவ்வகையிலே உள்ளவனாயினன்.

    அரிசூரன் – என்பது பாடம்.

    திருநீறு  அணிந்து  போரின்கண் நின்ற சிறப்பே அவனுக்குப் பெருமை தந்தது  என்பதை இப்பாடல்  குறிப்பாகப்  புலப்படுத்துகிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

    சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருத்தொண்டர்  புராணம்

    10. ஏனாதி நாதர்புராணம்

    வரலாறு

    அடுத்து ‘ஏனாதி நாதர்’   என்று போற்றப்பெற்ற சிவனடியார்  வரலாற்றைச்  சேக்கிழார்  எழுதிய  பாடல்கள் வழியே காண்போம். குளிர்ச்சி மிக்க  வெண்கொற்றக்  குடையால் உலகிற்கே  தண்ணளி வழங்கிய  வளவன் ஆளும் சோழ நாட்டில் இயற்கை அரண் கொண்ட வயல்கள் சூழ்ந்த   மூதூர் எயினனூர் ஆகும். அவ்வூரில் வாழ்ந்த ஏனாதி நாதர் என்னும் அடியாரின் வரலாறு பெரிய புராணத்தின் பத்தாம் பகுதியாகும்.  முதலில் அடியாரை ஊரைச் சேக்கிழார்  அறிமுகம் செய்கிறார்.

    பாடல்

    வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலிற்
    றாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையதாய்
    வாழக் குடிதழைத்து மன்னியவப் பொற்பதியில்
    ஈழக் குலச் சான்றா ரேனாதி நாதனார்.

    பொருள்

    குளிர்ச்சி பொருந்திய வயல்களில் நாணற்கரும்பினோடு மென்கரும்பும் தாழும்படி கதிர்ச்சாலிதான் ஓங்கிவளரும் தன்மையுடையதாக (அதனால்) வாழ்வு பெறும்படி பெருங்குடிகள் தழைத்து நிலைபெற்ற அந்த அழகிய நகரிலே ஈழக்குலச்சான்றார் மரபிலே வந்தவர் ஏனாதிநாதனார் என்ற பெரியார்.

    விளக்கம்

    வேழக்கரும்பு – மென்கரும்பு – கரும்புவகைகள். வேழக்கரும்பு – நாணற்கரும்பு என்று வழங்குவர். இவை கடினமான தண்டுடையனவாம். நரி முதலிய பிராணிகள் நாசம் செய்யக்கூடாதனவாகி நாணல் போன்ற சிறிய தண்டுடையன. இவற்றின் கடினத்தன்மையைக் “கருஞ்சகட மிளகவளர் கரும்பு” என்றருளினர் ஆளுடைய பிள்ளையார்.

    மென்கரும்பு – மெல்லிய கரும்புவகை. இவற்றின் மேல்பாகம் இலகுவில் உடைந்து சாறுதரக்கூடியன; இவை சாறுமிகவுடையன; இவற்றைச் சாறுபிழிந்து பயன்படுத்துதலோடு மக்கள் நேரே பல்லினாற் கடித்தும் உண்டு சுவைப்பர். மென் என்றது இலகுவில் உடைத்துச் சாறுபெறுதற்குற்ற மென்மைத் தன்மை குறித்தது.

    “விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
    கரும்பு தேன் பொழியுங் கணமங்கலம்”
    என்று  சேக்கிழார் பின்னர் கூறுவார்.

    மென் கரும்பை ஒடு விகுதி தந்து வேழக்கரும்பினைச்சார வைத்தது பெரும்பான்மை இந்நாட்டின் இவ்வகையே மிகும் சிறப்புப்பற்றி. கரும்பின் வகை விசேடங்களை, சேக்கிழார் நன்கு அறிந்தவர்.

    கரும்புதாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை – கரும்புதாழும்படி நெல் ஓங்குவன. கரும்பல்ல நெல்லென்ன என்ற பாட்டில் உரைத்தவற்றை நினைவுகூர்க.

    கதிர்ச்சாலி – விட்டபருவத்துள்ள நெற்பயிர். இவை தழைத்தோங்கி நிமிர்ந்து பரந்து நிற்கும் இயல்புடையன; நீர் – நிலம் – உரம் -விதை-  வலிமை – முதலிய வளங்களால் சாலியின் தண்டுகள் பருத்து நிமிர்ந்து மென்கரும்பின் தண்டு போல்வன. நெல்லும் கரும்பும் இந்நாட்டு வயல்களில் அடுத்துக்காண உள்ளன. இரண்டும் மருதத்துக்குரியன. நெல் நிமிர்ந்து கதிருடன் நிற்கும் பருவத்தே கரும்பு சாய்ந்து கிடக்கும் காட்சியினாலே கரும்பு தாழச் சாலி

    ஓங்கும் தன்மையதாய் என்றார். தாழ – வீழ்ந்து தாழ்ந்து கிடக்க என்றும், குறைந்து காட்ட என்றும் இருபொருளும்பட வைத்தமையால்  இப்பாடல் தன்மைநவிற்சியணி.

    நெல்இன்றியமையாத உணவுப் பொருளாதலும், கரும்பு அவ்வாறன்றி உருசிவேண்டுவார்க்கு அமுதுக்கு உருசிதரும் அறுவகையினுள் ஒன்றாகி ஒரோ வழி வேண்டப்படுதலின் அத்துணைச் சிறப்பில்லாது அதனினும் தாழ்தலும், அதனால் மேலே மிகுதலும் குறித்த நயமும் காண்க.இங்கு வயலின் விளைபொருள்களுள் உயர்ந்த இருவளங்கள் கூறினார். வலியகரும்பு தாழ மெல்லிய சாலி ஓங்கும். என்றதனால் அரனுக்கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள், என்றபடி அடியார் தோற்றங் காட்டும் மெலியனாகிய அதிசூரனுக்கு வலியராகிய நாயனார் தலைவணங்கித் தாழும் இச்சரித நிகழ்ச்சி பற்றியதோரர்  உட்குறிப்பும் நிற்பது காண்க. இவ்வாறு உலகியற் பொருள்களை அவ்வச்சரிதக் குறிப்புக் கண்ணாற் கண்டு காட்டுதல் ஆசிரியர் மரபு.

    வாழக்குடிதழைத்து  என்ற தொடர், வாழ – மேற்கூறியவாறுள்ள நிலவளத்தால் வாழ்வடைய. குடி தழைத்து மன்னிய – குடி அரச அங்கம் ஆறனுள் ஒன்று.

    “படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு,அரண், ஆறும்
    உடையானரசருள் ஏறு” என்பது குறள்.

    வாழஎன்பதனைச் சாலி என்பதனோடு சேர்த்து சாலி தன்மையதாகி வாழ என்றலுமாம்.

    தழைத்து  என்ற சொல் ,  மக்கள், செல்வம், அறிவு, ஒழுக்கம், இறை வழிபாடு   முதலியவற்றால் மிகுத்து என்பதைக்  குறித்தது!

    மன்னிய – நிலைபெற்ற. வழிவழியாய் வந்த.

    வாழ் அக் குடி என்று பிரித்து வாழ்கின்ற அந்தக் குடிகள் என்றலுமாம்.

    ஈழக்குலம் – இஃது சான்றார் குடிவகைகளில் ஒன்று. ஈழம் இங்கு ஈழநாட்டின் தொடர்பு பற்றியதோ என்று சிலர் ஐயங் கொள்கின்றனர். ஈழம் – கள் என்ற பொருளில் வழங்குதலின் ஈழக்குலம் என்றது கள் இறக்கும் தொழில் பூண்ட குலம் என்றும், அது சான்றார் மரபில் ஒருபிரிவு என்றும் கூறுவர். மலைநாட்டில் இத்தொழில் செய்பவர் ஈழவர் என்ற பெயரால்வழங்கும் ஒரு சாதியினர் உண்டு. கொங்கு நாட்டில் இத்தொழில் செய்வோர் சான்றார் (சாணார் என மருவி வழங்குவது) என்ற மரபுப் பெயரால் வழங்கும் ஒரு சாதியினரும் உண்டு.

    இங்கு ஆசிரியரும், வகை நூலுடையாரும், புராண சாரமுடையாரும் ஈழக்குலம் என்று குலத்தோடு புணர்த்தியே கூறியிருத்தலின் இ.:.து ஈழம் என்ற நாட்டின் றொடர்பாற் போந்ததென்று கொள்ளுதற் காதாரமின் றென்பர். புராண வரலாற்றில் குலங் குறியாது சான்றார் ஏனாதிநாதர் என்று கூறினார். குலம் – மரபின் உட்பிரி வென்பது வழக்கிலும் காண்க. சான்றார் – சான்றவர் மரபினர். சான்றார் ஏனாதிநாதனார் என்க. பெயர்ப் பயனிலை கொண்டது. ஏனாதிநாதனார் – “ஏனாதிநாதன்” என்ற முதனூலாட்சியை எடுத்தாண்டபடி. இச்சரிதத்துப் பிறஇடங்களிலும் இவ்வாறே கூறியதும் காண்க. “ஏனாதிநாதனை” என்று வகை நூலிலும், “ஏனாதி நாதர்” (11) என்று புராண சாரத்தினும், புராண வரலாற்றினும், “நீண்டபுக ழேனாதி நாதர்” என்று திருநாமக் கோவையினும் ஒப்பக் குறித்தல் காண்க. ஏனாதிநாதர் என்பது அவர் பெயர் போலும். எனவே ஏனாதிநாயனார் என்பது தவறென்க.

    ஏனாதி என்பது முன்னாளில் அரசர் சேனைகளின் அதிபர்களாகிய உத்தியோகத்தின் பெயர் என்றும், இதற்கடையாளமாக நெற்றியி லணியும் ஏனாதித் தங்கப்பட்டமும் விரலுக்கு ஏனாதி மோதிரமும் அரசர்கள் தருதல் மரபாமென்றும், சிந்தாமணி – மணிமேகலை-புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களால் அறிகின்றோம். ஏனாதி, எட்டி, காவிதி முதலியன பட்டப்பெயர்களாம். எனத்  தொல்காப்பியம் கூறும்.  நாதர் – தலைவர் – முதல்வர் – என்ற பொருளில் வந்தது. Commander-in-Chief  முதலிய நவீனப் பெயர்களும் காண்க.

    ஏனாதி நாதர் என்பது இவ்வாறு அவரது உத்தியோகப் பெயராய் நின்றதோ? அன்றித் “தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலா மாசிரியத் தன்மை”  என்றதனால் அதுவே இக்குடியில் வந்த முதல்வர்க்கு இயற்பெயராய் வழங்கிற்றோ? என்பது ஐயம். குலச்சிறை – என்ற பெயரும் இவ்வாறே  காணப்படுமென்பர்.

    இப்பாட்டான், நிலவளம், குடிவளம் நாயனாரது பெயர், மரபு ஆகிய பலவும் கூறினார்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 123 (ஆளுடை)

    சேக்கிழார் பாடல் நயம் – 123 (ஆளுடை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    எறிபத்தர்  வரலாற்றின்  நிறைவுப்  பகுதி இது. யானை, பாகருடன் கொல்லப் பட்டுக்  கிடந்ததையும் எறிபத்த  நாயனார்  சினம்பொங்க நின்றதையும்  கண்ட அரசர்,  அவர்முன் சென்று இவ்வாறு வெட்டிக் கொன்றது எதனால்? எனக்  கேட்டார்.  உடனே  எறிபத்தர் தேவர்களின் தேவராகிய ஈசரின் அன்பர் சிவகாமியாண்டார் இறைவனுக்குச்  சாத்தக் கொண்டுவந்த மாலையை, இந்த யானை தும்பிக்கையால்,பாகர் தடுத்தும் சிதற வீழ்த்தியது. அதைக்கண்டு  சினந்து நானே இதனையும் பாகரையும் வெட்டிவீழ்த்தினேன்.

    என்றார். அதுகேட்டமன்னன் அஞ்சியபடி  அடியாரைப்பணிந்தான்.இவ்வாறு சிவாபராதம் புரிந்த யானையின் உரிமையாளனாகிய என்னையும் கொல்வதேமுறை! உங்கள்   கையில்  உள்ள நல்ல  மழுவால் கொல்லுதல் தகாது! என்   கைவாளால்  கொல்லுக என்று நல்ல தீர்வுக்காகத் தம்வாளை உருவித்தந்தார்.

    அதைக்கண்ட எறிபத்தர், சிவபெருமான்  பால் இவர்  கொண்ட அன்புக்கு ஓர் அளவேஇல்லை; என்றெண்ணி அந்த வாளை வாங்காமல், சற்றுயோசித்து, வாங்கா விட்டால், அரசரே  தம்மைக் கொன்று கொள்வார், என்றெண்ணி ‘’இவர்தந்த  வாளால் இவரைக் கொன்று நான்  செய்யவிருக்கும் பிழையை நீக்க இவரால் உதவி  செய்யப்பெற்றேன்! தம்களிறும் பாகரும் மடிந்த பின்னும் உடை வாளைத்  தந்து என்பிழைநீங்க என்னையும்கொல்க!’’ என்ற அரசருக்கும்தீங்கு நினைத்தேனே, என்று எண்ணி, முதலில் என்னுயிரை நீக்கிக் கொள்வேன்!  என்று  அந்த வாளால்  தம்கழுத்தை அரிய முற்பட்டார். ‘’ஆகா!  இப்பெரியோரின்   செயல் எத்தகையது? நான்  கெட்டேன்!’’ என்று விரைந்து அடியாரைத்  தடுத்து வாளுடன்  கரத்தையும்  இறுகப்  பிடித்துக்  கொண்டார்.

    இருவரும் விடாமல் முயன்றபோது, அன்பர்களின் பரிவால் வந்த துன்பத்தை நீக்கும்படி, கழுத்தில் கருத்த விடமேந்திய கருணையாளராகிய  இறைவன் அருளால், வானில் ஓர்ஒலி எழுந்தது! வணங்குதற்கு உரிய சிவபத்தித் திறத்தால் சிறந்தஉங்கள் தொண்டின் சிறப்பை உலகமே அறிந்து  கொள்ளும்  வகையில்,    கூத்தப்பிரான்  அருளால் இன்று இந்த யானை அடியாரின் மலரைத்  தள்ளியது!’’ என்ற  அளவில்  பாகரும் வெட்டுப்பட்ட  யானையுடன்  பிழைத்து  எழுந்தனர்! கழுத்தில் வைத்தவாளைக் கைவிட்டு எறிபத்தரும், மன்னரும் இறைவன்திருவடி போற்றிப்  பணிந்தனர்! அப்போதுவிண்ணவர் பூமழை பொழிந்தனர். வானில் எழுந்த ஒலியை இருவரும்போற்றும்போதே, பூக்கூடையினுள் இறைவனுக்கு உரிய மலர்மாலை  நிறைந்தது; அத்திருவருளைக் கண்டு சிவகாமியாண்டார் திகைத்து எழுந்துநின்றார்!

    தேன் நிறைந்த வெற்றிமாலை யணிந்த மன்னன்முன்னே உறக்கத்திலிருந்து எழுந்தாற்போலே  முட்டிப்போர்புரியும் ‘பட்டவர்த்தனம்’  என்றயானையை நோக்கிப்  பாகர்கள் வந்தனர். அடியாரும்  ‘’அரசே! அடியேன் மகிழும்படி இந்த யானை மேல் ஏறி வருக!’’ என்றார். அவ்வாறே குதிரைமேல் வந்த  அரசரும் செய்தார்! அப்போது  மக்களின் வாழ்த்தால்  எழுந்த  பேரொலியால்  உலகமே மகிழ்ந்தது! இறைவன் திருவடியைத் தலைமேற்கொண்டு சோழ மன்னனும் அரண்மனை புகுந்தான்  .பூக்கூடை தாங்கிய  சிவகாமி யாண்டார் திருக்கோயில் சேர ,   எறிபத்தரும் சோழவரசன்  பெருமையைப் போற்றித் தம்  தொண்டினைத்  தொடர்ந்து செய்து, கயிலை மலையில் சிவகணத் தலைமை   பெற்றார். அவர் செய்த  வலிய தொண்டே சிவதன்மம் ஆகும் என்பதைத்  திருக்களிற்றுப் படியார் என்றசாத்திரம்,

    “மெல்வினையே யென்ன வியனுலகு ளோர்க்கரிய
    வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் – சொல்லிற் சிவதன்மமாம்”

    என்று கூறுகின்றது. இதனைச்   சேக்கிழார்,

    ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
    வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
    நாளும் மற்று அவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றி,
    நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்

    என்ற பாட்டில் கூறுகிறார். இதன் பொருள் ஆளுடைய தொண்டராகிய எறிபத்த நாயனார் செய்த வீரச் செயலினையும், தம்மையுங் கொல்லும்படி தமது உடைவாளையுங் கொடுத்து நின்ற சோழனாரது பெருமையினையும், நாளும்நாளும் அவர்க்கு அருள்கள் நல்கும் நம்பராகிய இறைவர் தாமே அளந்தாலன்றி, நீளச் செல்கின்ற இந்தத்  திருத்தொண்டின் தன்மைகளை நினைக்குமிடத்து யாவர் அளக்கும் வன்மையுடையா ராவர்? (ஒருவருமிலர்.)

    விளக்கம்:

    ஆளுடைத் தொண்டர் என்றதொடர் தாம் அடியார்க்கு ஆளாகவும் தம்மை அவர்களது உடைமைப் பொருளாகவும் கொண்ட தொண்டர் என்பதைக் குறித்தது

    அடுத்து, ஆண்மை – வீரச் செயல். அதாவது யானையின் பலமும், அதுவும் மதங் கொண்டதும், பாகரும் பலராய்ப் பெரிய அரசரின் வலிய சார்பு கொண்டதும், தமது தனிமையும் முதலிய ஒன்றும் எண்ணாது திருத்தொண்டினுக்குச் செய்த அபசாரம் ஒன்றினையே கருதிச் செய்த தீரச் செயலை இங்கு  எண்ணுக.

    நல்கும் நம்பர்தாம் அளக்கில் அன்றி  என்றதொடரை,

    “அன்புடையாரை அறிவன் சிவன்”,

    “அழுதுகாமுற்று  அரற்றுகின் றாரையும்,
    எழுதும்  கீழ்க்கணக்கு  இன்னம்பரீசனே”,

    “விடமுண்டவெம் அத்த னார்  அடியாரை யறிவரே”,

    என்பன  விளக்கும்!  அளத்தல் – அளவிட்டறிதல்.

    நீளும்  என்றசொல்,  எஞ்ஞான்றும் எவ்விடத்தும் பொருந்த நீள்கின்ற என்ற பொருள்தந்தது. தத்தம் பயன்களைத் தந்து அழியும் பசு புண்ணியங்கள் போலன்றி, அழியாது பெருகும். ஆண்மையும் பெருமையும் தொண்டின் திறங்கள் என்பதாம்.

    யார் அளக்க – வல்லார்? வினா ஒருவருமிலர் என்று குறித்தது. அளக்கவல்லார் என்றது அளந்து இனைத்து என்று அறிவால் நிச்சயிக்கும் வன்மையுடையா ராதலை.

    மேற்பாட்டில் வரலாற்றை  நிறைவு செய்த ஆசிரியர், இவ்வரலாற்றில் நிகழ்ந்த தொண்டின் நினைப்பரிய பெருமைகளைச் சிந்தித்துக் கொண்டு அதில் தாம்பெற்ற அற்புத உணர்ச்சியை இதனைக் கற்போருக்கும் அழகு பெற ஊட்டுகின்றார். இவ்வரலாறு ஆசிரியர் கற்பித்த கற்பனையாய் இதன் அருமை பெருமைகளை உணர்த்தி நின்றது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்:

    புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
    அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
    பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்

    வரலாறு:

    இவ்வளவு  பெரிய  யானைமுன்னே இந்த உண்மைத்   தவமுடைய அடியார் சென்றபோது  நடந்ததை அறியாத மன்னன் யானையும்   பாகரும்  மாளும்   வண்ணம்  வெட்டியதே போதுமோ? எனக்கேட்டார். அது  கேட்ட  எறிபத்தர், ‘’அரசே, இறைவனுக்குச்  சாத்த சிவகாமி ஆண்டார் எடுத்து வந்த மாலையைச் சிந்தி  வீழ்த்தியது! நானும் அதனையும்   பாகரையும்  வெட்டி  வீழ்த்தினேன்!’’ என்றார். அதுகேட்டு மன்னன் அடியார் திருவடியில்   வீழ்ந்து இறைவனடியாருக்குச்  சிவாபராதம் செய்த யானையையும் பாகரையும் கொன்றது போதாது! என்னையும்  கொல்வதே  சரி, அதுவும் மங்கல மழுவால் கொல்லாமல், என்   வாளால் கொல்க ‘’ என்று  தம்  உடைவாளை எடுத்து நீட்டினார்.

    மனம்   வருந்தித்  தம்     உடைவாளை  எடுத்து  நீட்டிய  மன்னரை நோக்கிய  எறிபத்தர், இறைவன்பால் இத்தகைய  அன்பு  கொண்டவர்  பெருமையை எண்ணி   அரசர்   தந்த உடைவாளை உடனே  வாங்கிக்    கொண்டார், அப்படி வாங்கா  விட்டால் தாமே வெட்டிக்கொள்வார்  என்ற காரணத்தால் விரைந்து வாங்கினார்.  புகழ்ச்சோழரும் வணங்கி, என்னைக் கொன்று என்பிழை தீர்க்க இவரே முயல, அருளிய இறைவன் கருணையை எண்ணிமகிழ்ந்தார்! ‘’யானையும் பாகரும் செய்த பிழையைத்   தன் பிழையாகக்  கருதி, வாளைத்  தந்த அன்பனாருக்கு  நான்   தீங்கு  நினைத்தேன்;  ஆதலால் இப்போது நானே என்   உயிரை  மாய்த்துக்  கொள்வேன்’’ என்று அவ்வாளைத்  தம் கழுத்தில்  வைத்து அரிந்து கொள்ள முயன்றார்!

    பாடல்:

    புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
    அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
    பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்

    பாடலின் பொருள்: நினைந்து அவர் கொடுத்த வாளை அன்பர்தம் கழுத்திற் பூட்டி அரியத் தொடங்கிய போதிலே, “பெரியோர் செய்கை யிருந்த படி இது என்ன? ஓ! கெட்டேன்!” என்று எதிர் விரைந்து போய் மிகப் பெரிய தமது தோள்களாற் கூடி அரசரும் அந்த வாளினையும் அதைப் பிடித்த அன்பரது கையினையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டனர்.

    விளக்கம்:

    புரிதல் – தீர எண்ணுதல் – முற்றும் நினைத்தல் – தம் முன்பு உவகை கொண்டதைப் புரிந்தும், வெட்டுக  என்று  தொழுதலைப்புரிந்தும்,  விரும்பிக் கொடுத்த வாள்.

    இப்பாடலில் அன்பர்  எறிபத்தரையும்  அரசர் புகழ்ச்சோழரையும் குறித்தன. அடியாரைப்  பெரியோர்  என்றது,  சிவாபராதம் தம்பால் ‘நிகழ்வதனால் தாம்

    எரிவாய் நரகத்துக் காளாகாதபடி தடுத்து உதவும் பெற்றியாற் பெரியோர் என்றார். செய்தற்கரும் செயல் செய்தலாற் பெரியோர் என்றார் என்றலுமாம்

    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்ற தொடர்,  நாம் எதிர்பாராத வண்ணம் இவ்வாறு இருந்தபடி இது என்ன! ஆச்சரியம்! கெட்டேன்! எதிர்பாராதபடி அதிவிரைவில் தீங்கு நிகழக்கண்டபோது வரும் அவலச்சொல்  ‘கெட்டேன்’ என்பதாம் . இவ்வாறு தமக்கிறுதியைத்  தாமே தேடிக்கொள்ளும் செய்கை ஒரு பெரியார்பால் நிகழ்வது தம்மாற் கூடிற்றே என்று எண்ணியபோது பேரவலம் மனத்து நிகழ்ந்தது.  அதனைக் குறிக்கக் கெட்டேன் என்ற அவலச்சொல்  வந்தது. வலிய மழுவை  வீசி,  வன்பெருங் களிற்றினையும் எறிந்து வீரஞ்செய்து வென்ற பெரு வீரர் செயலையும் விலக்குதற்குரிய பெருவன்மை நோக்கி இவ்வாறு சிறப்பித்தார்.

    கூடி – கிட்டி – சேர்ந்து, கழுத்தை அரியவொட்டாமல் வாளுங் கையும் சேர்த்துப் பிடித்தனர் என்க. ஊறு செய்யும் கருவி வாளாதலின் முதலில் இவரது கையின் பிடியினுள்ளே கொண்டு தடுக்கப்பட்டது வாளென்பார்,  வாளும் என்று அதனை முன்வைத்துக் கூறினார். தோளால் – கையால், பெருந்தோளுடைமை உயர்ந்த உடலிலக்கணமாம்.

    இப்பாடலில் அரசராகிய புகழ்ச்சோழர்,அடியாராகியஎறிபத்தர், ஆகியோரின்    சமயத்துக்கு ஏற்ற விரைந்த மதிநுட்பம், செயல் ஆகியவை  புலனாகின்றன!

    ‘’மதிநுட்பம்  நூலோடு  உடையார்க்கு  அதிநுட்பம்
    யாவுள  முன்நிற்   பவை! ‘’

    என்ற  குறளை நினைவூட்டும் பாடல் இது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

    சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
    பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு
    மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற
    உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்’’

    வரலாறு

    தாம் ஏந்தி வந்த பூக்கூடையைப்  பட்டத்து யானை தட்டிச்  சிதைத்தது கண்ட சிவகாமியாண்டார், அந்த  யானையைத் தொடர்ந்து ஓட  இயலாமல் கீழே விழுது கதறினார். இதனை எறிபத்தர் முன் பாகர்கள் கூறினார். அதுகேட்டு

    ‘’பெருமான் அந்தணர் அனுப்பிய யானைத்தோலை உரித்த காலம், கயமுகாசுரன் காலம்  முதலாக சிவபெருமானின் வழிப்பகை களிறே!’’ என்று கருதிய எறிபத்தர்  அதனைக் கொன்று வீழ்த்துவேன் என்று கொலைமழுவை எடுத்தார்.

    சிவகாமியாண்டாரிடம் யானை செய்ததையும், அது சென்ற திசையையும் அறிந்து கொண்டு அத்திசையில் விரைந்தோடி, சிங்கம் போல் யானைமேல் பாய்ந்தார். இதனைச்  சேக்கிழார்

    ‘’செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.’’ என்று பாடுகிறார். (**இங்கே ஒரு குறிப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ‘’கிடைத்தனர்‘’ என்ற சொல்லுக்கு எதிர்த்தனர் என்று பொருள் கொள்ள வேண்டும்; ‘கிடைக்கும்’  என்று இப்போது கடைகளில் எழுதும் சொல் பிழை பட்டது என்பதைப் புரிந்து கொள்க )

    இதுவே இறைவனை  எதிர்த்த யானை என்றெண்ணி அதன்மேல் பாய்ந்தார்.பாகரால் அடக்க வியலாத யானை அடியார் இறைவன்பால் கொண்ட அன்பின்முன் நிற்கவில்லை. அதன் தும்பிக்கை வீழுமாறு விறன்மிண்டர் வெட்டினார். அந்த யானையுடன் அருகில் வந்த பாகர் மூவர், போரிட வந்த இருவர் ஆகிய  ஐவரைக் கொன்று மலை போன்ற தோளுடன் விறன்மிண்டர் நின்றார் .

    இதனை அங்கிருந்தார்  விரைந்து சென்று அரண்மனைக் காவலரிடம் கூறினர். அது கேட்டு அரசனிடம் சென்ற காவலர் நம் பட்டத்துயானையை எவரோ வெட்டி விட்டார்  என்றனர். உடனே அரசன் வெகுண்டு வாயிலுக்கு வந்தான். அவருடன் அரசரின் சேனைகள் யாவும் தொடர்ந்தன. பட்டத்து யானையை வெட்டியவர் பகைவரோ என்றெண்ணிய மன்னன்,அங்கே அடியார் மட்டுமே வெட்டுண்ட யானையுடன் நிற்பதைக் கண்டான். சிவனடியாரைக் கண்ட மன்னன் இவர் கொலை செய்ய மாட்டார் என்று கருதி, அங்குள்ளோரை ‘’யார் யானையைக் கொன்றவர்?’’ என்று முழங்கினான். அப்போது அங்கிருந்தோர், ‘’மன்னனே நம் யானையைக் கொல்ல எந்தப் பகைவராலும்  முடியாதே, இதோ இங்கே மழுவேந்தி  நிற்கும் சிவனடியார் தாம் கொன்றார் ‘’   என்றனர்.

    அப்போது மன்னன் இறைவனடியார்  எதோ பிழை நிகழாவிட்டால் கொல்ல மாட்டார்! யாரோ பெரும் பிழை புரிந்துள்ளார் ‘’ என்றார் மனத்துள் நினைந்து தம் படைகளைத் திரும்ப அனுப்பித் தம் குதிரைமேலிருந்து இறங்கினான்.

    இப்பாடலின்பொருள்

    “குழை யணிந்த காதினையுடைய சிவபெருமானுக்கு அன்பராகிய குணத்தின் மிக்க இவர், பிழைபட்டிருந்தாலல்லது கொலைசெய்யமாட்டார்; ஆதலின் பிழை நேர்ந்ததுண்டு.” என்று மனத்தினுட் கொண்டு, மழைபோலமதஞ் சொரியும் யானை, படை முதலிய சேனைகள் மேல்வராமற்றடுத்து, தாம் மேல் கொண்டுவந்த கொற்றக்குதிரையினின்றும் உலகமன்னர் (தனியிடத்து) இழிந்தனர்.

    இப்பாட்டில் குழையணி காதினான் என்ற தொடர் சிவபெருமான் குழையணிந்தசேவியர் என்பதைக்குறிக்கும் இறைவனது திருவுருவத்தில் ஆண்பாகம் வலப்பாகம். வலக்காதிலணிந்த குழை வலிய வீரம்பற்றிய மறக்கருணை குறிக்கும். அவனன்பராகிய இவரும் பிழைநீக்கும் மறக்கருணையாலே இது செய்தாராதல் வேண்டும் என்பது குறிப்பு.

    ‘’குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்’’ என்றதொடர்  குணத்தால் மிக்காராதலின் பிழை கண்டல்லாது கொல்லுதலைச் செய்யார் என்ற நியதியை அரசர் இங்குத் தம்முள் நிச்சயித்துக் கொண்டனர். எவ்விடத்தும் கொலைதீது என்று வெறு முழக்கம் செய்து ஆரவாரிக்கும் பொய்க்கொள்கை இங்கு மறுக்கப்பட்ட நேர்மை நோக்குக. பிழைபடிற் குற்ற நீங்கத் தண்டித்தல் இறைவன் மறைவழிக் காட்டிய நீதியாம். இதனை நன்கறிந்து நீதிசெலுத்திய அரசாராதலின் இவ்வாறு துணிந்தனர். இவரது புராண சரிதத்தில், பின்னர் இவர் சேனை செய்த அபராதத்துக்குக் கழுவாயாகத் தாமே தீப்புகுந்தமையும் இங்கு வைத்துக் காண்க. பிழைபடிற் கொல்லுதல் பிறவுயிர்கள் ஈடேறவும், அவ்வுயிர்,மேலேதருமன் தண்டனைக்குத் தப்பவும் ஆம் என்பது.

    ‘’பிழைத்ததுண்டு’’ என்றதொடருக்குப்  பிழை நேர்ந்ததுண்டாம் என்பது பொருள்  இது கருதலளவையாற் போந்த முடிபு. அனுமானம் என்பர். நெருப்பில்லாத விடத்துப் புகையில்லை. ஓரிடத்துப் புகை காணப்பட்டபோது தீ அங்குக் காணப்படாவிடினும், நெருப்புண்டு எனக் கொள்ளுதல்போல ஈண்டுக் காணப்படாத பிழையாகிய காரணத்தைக் காணப்பபட்ட தண்டமாகிய காரியத்தினின்றும், பிழைபடினன்றிக் கொல்லார் என்ற ஏதுவினைக் கொண்டு துணிந்தனர்.

    படின் அன்றிக்  கொல்லார்,  படிற் கொல்வார் என்பதனை வலியுறுத்த இரண்டு எதிர்மறைகளாற் கூறினார்.

    “ஞாயிறு படரி னல்லதைக் காண்டல் செல்லாக் கண்”

    என்ற விடத்துப், “படரிற் காண்டல் செல்லும் கண்ணென  அதனை எதிர்மறை முகத்தாற் கூறினார் இன்றியமையாமை விளக்குதற்கு!” என்று மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போதப் பாயிரத்துட் காட்டினமை காண்க.

    ‘’சேனை வரவினை மாற்றி’’   என்றதொடர்  சேனை அழிவு செய்யு முயற்சி யின்மிக்கு வேகத்தால் வருதலால் அவை, உண்மை அறியாமையாலே, மேல்வந்து  அடராதபடி சேனை வரவினை மாற்றினார். தடுத்து நிறுத்தினார்.

    இனி, மேல்நின்று இழிந்தனன் என்றதொடர்  கீழே இறங்கினார் என்பதைக் குறித்தது . தான் மேற்கொண்டு வந்த அளவில் சீற்றமாகிய தலைநிமிர்ந்த நிலையினின்றும், தணிந்து இறங்கிய நிலையினையடைந்தனர் என்பதும் குறிப்பு.

    இப்பாடல், அளவில் சீற்றங் கொண்டெழுந்து வந்த மன்னனுக்கு, இச்செயல் அன்பர் செய்தார் என்றறிந்தவுடனே அத்தனை சீற்றமும் மாறிச் சிவாபராதத்தில் அச்சம் மிக்கதாகி,  எஞ்ஞான்றும் பிறழாத அவரது அன்பு நெறியொழுக்கத் திண்மையினைக் காட்டுகிறது. இங்கே,

    ‘’எண்ணித் துணிக கருமம்  துணிந்தபின்
    எண்ணுவம் என்ப  திழுக்கு!’’

    என்றதிருக்குறள் எண்ணற்பாலது.

    Share