Author: மீ. விசுவநாதன்

  • ஊக்க சக்தி

     
    மீ.விசுவநாதன்

    தென்பொதிகை மலைத்தொடரில் தெரியும் அந்த
    தெய்வீக அழகினிலே சொக்கிப் போவேன் !
    முன்பார்த்த இடங்கள்தான் என்ற போதும்
    முகம்சுளிக்கத் தோன்றாது முன்னே நிற்பேன் !
    சின்னதானப் பறவையெனப் பறந்து அங்கே
    சிலநொடிகள் தவமிருந்து மறந்து போவேன் !
    முன்னதானப் பிறப்பெல்லாம் முன்னே வந்து
    முகம்தடவி முத்தமிட மகிழ்ந்தி ருப்பேன் !

    பிறப்பென்றும் இறப்பென்றும் இருந்த போதும்
    பெரியதொரு கவலைகளில் கரைய மாட்டேன்
    சிறப்பெல்லாம் இயற்கைவளக் கொடைதான் என்னும்
    சிந்தனையில் இருக்கின்ற பயிற்சி பெற்றேன் !
    அறத்தொடு வாழுகின்ற விலங்கு பார்த்து
    அதனிடந்தான் அன்பினையே கற்று வந்தேன் !
    புறத்தோடு காணுகின்ற பொலிவைப் பார்த்து
    போய்விழுந்து துன்பத்தில் சிக்க மாட்டேன் !

    சித்தர்கள் இன்றுமிங்கே இருக்கி றார்கள்
    சிருங்கேரி பீடம்கூட இதில்தா னுண்டு !
    பித்தரெனத் திரிகின்ற பேர்க(ள்) உண்டு !
    பேசாம(ல்) இருக்கின்ற முக்த ருண்டு !
    புத்தினிலே இருக்கின்ற பாம்பைப் போல
    பொழுதெல்லாம் குகையிருக்கும் யோகி கூட
    சத்தியமாய் வாழ்கின்ற பொதிகை தன்னை
    தப்பாது நினைப்பதுவே தர்மம் என்பேன்.

    பெருகிவரும் அருவியெனக் கவிதை பொங்க
    பிள்ளையென இருக்கையிலே பாப நாச
    அருவியிலே குளித்தபடி வேண்டிக் கொள்வேன் !
    அடுத்தகணம் வாய்முணுத்தே தன்னை மறப்பேன்
    உருவிவிழும் வான்மழையாய் உள்ளே மெல்ல
    ஒளிமிகுந்த வார்த்தைகளால் கவிதை கேட்பேன் !
    கருவியிவன் மூலமாக அந்தக் கலைஞன்
    கடகடெனச் சொல்வதாக நம்பு கின்றேன் !

    (09.09.2016 13.15 pm)

    Share
  • ஆனை முகன்

     மீ.விசுவநாதன் 

    ga0078
    மஞ்சள் பிடித்து வைத்து
    மனத்தோடு புல்லைப் போட்டு
    கொஞ்சம் அமைதி யோடு
    குணவானே பிள்ளை யாரே
    தஞ்சம் அடைந்தே னுன்னை
    தவறிலாத பொழுதைத் தந்து
    நெஞ்சி லிருப்பாய் என்றால்
    நினைவெல்லாம் நிறைந்தி ருப்பான் !

    வேலை துவங்கி னாலும்
    வேதாந்தம் கற்கும் போதும்
    மேலை நாட்டிற் காக
    விமானத்தில் செல்லும் போதும்
    சேலை துவைக்கும் போதும்
    சிறுபொழுதைச் செலவு செய்து
    பாலை நிகர்த்த “பிள்ளை
    யார்”பாதம் பணிந்தி ருப்போம் !

    ஞானம் பரந்த நெற்றி!
    நம்பிக்கை ஊரும் கண்கள் !
    வானம் பரந்தி ருக்கும்
    வரையிலாத பக்தி தந்தம்!
    பானை வயிற்றுக் குள்ளே
    பசிநீக்கும் வள்ள ளாக
    ஆனை முகனை எண்ணி
    ஆனந்தம் பெற்று வாழ்வோம் !

    ( 05.09.2016 04.07 am

    Share
  • சந்தோஷச் செய்தி

    மீ.விசுவநாதன்

    எத்தனையோ நல்லவைகள் இங்கே – அந்த
    இடமெல்லாம் நானிருக்க வேண்டும்
    சத்தமின்றி செய்கின்ற நன்மை – என்
    சந்தோஷச் செய்தியாக வேண்டும் !

    கல்வியிலே வல்லவர்கள் வாழும் – இடம்
    கண்டுகண்டு நான்கூட வேண்டும்
    வல்வினைகள் ஆக்கமுடன் ஓங்கும் – என்
    வளர்தேசம் நானறிதல் வேண்டும் !

    நீர்நிலைகள் பூந்தோட்டம் யாவும் – எந்த
    நிலையினிலும் தூய்மையாக வேண்டும்
    ஊர்களுக்கே உபதேச மின்றி – என்
    உள்ளமிதை உள்வாங்க வேண்டும் !

    என்வீடு என்தெருக்கள் யாவும் – என்
    இதயமுடன் சுத்தமாக வேண்டும்
    பொன்பூமி என்தேசம் வாழ – என்
    பொல்லாமை குணம்மாற வேண்டும் !

    நீசெய்க என்றுசொல் லாமல் – நான்
    செய்கின்ற முதலாளாய் வேண்டும்
    வாய்ப்பேச்சு வேதாந்த மின்றி – என்
    வாக்கெல்லாம் உண்மையாக வேண்டும் !
    (02.09.2016 11.58 AM)

    Share
  • உன்குழல் கானம்

    -மீ.விசுவநாதன்

     

    baby-krishna

     

    பாடுறேன் பாடுறேன் பல்லாண்டு – என்
    பல்லாங் குழிமனச் சொல்லாண்டு
    கூடுறேன் ஓடுறேன் நிற்காமல் – பெருங்
    கூட்ட இரைச்சலைக் கேளாமல்!

    வஞ்சமோ துன்பமோ செய்யாமல் – மண்
    வாச உறவினைப் பேணுகிறேன்
    கொஞ்சமா கொட்டுறான் இன்பங்கள் – அக்
    கொலுவின் அழகிலே சொக்குகிறேன்!

    கண்ணனாய்ப் பிள்ளையாய் ஊரெங்கும் – தினம்
    களிகள் நடப்பதைக் காண்கின்றேன்
    வெண்ணெயாய் வெண்மையாய் உள்ளுக்குள் – என்
    வெப்பம் தணிப்பதை என்னென்பேன்!

    பச்சையாய்ப் புல்வெளி பார்த்தாலே – ஒரு
    பசுவாய்ச் சுவைக்கிற தோற்றம்தான்
    உச்சமாய்த் தோன்றுது கோவிந்தா – என்
    மூச்சில் உன்குழல் கானம்தா!

    (வாய்பாடு: விளம், விளம், காய், மா, விளம், காய்)

     

     

    Share
  • “கொஞ்சம் யோசி”

    மீ. விசுவநாதன்

     

    பெற்ற உதவியை மறப்பதும்
    உற்ற துணைதனை இழப்பதும் – மனமே
    கற்ற வழியெது எண்ணுவாய் – தீ
    தற்ற மொழியிலே சொல்லுவாய் !

    நித்தம் கவலையில் திளைப்பதும்
    சுத்த நினைவினை இழப்பதும் – மனமே
    சித்தம் அறிந்துடன் காட்டுவாய் – உன்
    குத்தம் குறைகளைக் கொட்டுவாய் !

    உருவில் அழகினைக் கருதியும்
    அருகில் பணத்தது புழுதியும் – மனமே
    உருகி உருகியே கொஞ்சுவாய் – உயிர்
    திருகித் தவிகையில் அஞ்சுவாய் !

    நீரில் மிதக்கிற எண்ணையாய்
    நாரில் விடுபடும் மலர்களாய் – மனமே
    நூறில் ஒருவராம் என்றிட – நீ
    சேறில் கமலமாய்த் தோன்றுவாய் !

    (அரையடி வாய்பாடு: மா, விளம், விளம்)
    (05.08.2016 07.39 am)

    Share
  • எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – “எழுத்துக்கு எழுபது”

    மீ. விசுவநாதன்

    3886e5c9-93f0-4cc8-8780-cfde35377b53
    சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தில் (05.07.2016) வெளியிடப் பட்ட “எழுத்துக்கு எழுபது” மலரைக் கண்டதும் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும் வனப்பும், படித்ததும் மனத்திற்கு நிறைவும் தந்தது. பாலகுமாரனின் இளமைக் காலம் தொட்டு, இன்று வரை அவரது முக்கியமான நிகழ்வுகளின் அழகழகான வண்ணப்படங்கள் மலருக்குச் சிறப்பு சேர்க்கிறது. இந்த அழகிய மலரைத் தயாரித்த திரு. சூர்யா பாலகுமாரன் உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள்..

    எங்கே படைப்பாளி கொண்டாடப் படுகிறானோ அங்கேதான் மிக உன்னதமான படைப்புகள் மலரும். அந்தப் படைப்புகளால் மனிதம் உயரும். அதற்கு மிகச் சரியான சான்று இந்த “எழுத்திற்கு எழுபது” மலர்.

    ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி கொண்டாடுவதும், அவனோடு சிநேகமாக இருப்பதை நினைத்து மகிழ்வதும் , அதிலும் மிக முக்கியமாக ஆயிரக்கணக்கான வாசகர்கள் அந்த எழுத்தாளனின் படைப்புகளைப் படித்தே உயர்ந்தோம் என்று பதிவு செய்வதும் அவ்வளவு எளிதாக நடந்து விடக்கூடியது அல்ல. அது ஏதோ ஒரு சிலருக்குத்தான் நிகழ்கிறது. அப்படி ஒரு நிகழ்வு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு வாய்த்திருப்பது நற்பேறு. அதற்கு விலையோ அவரது கடுமையான, இன்றும் அயராது தொடந்து செய்துவரும் உழைப்புதான்.

    இந்த மலரில் பல பிரபலங்கள் அவருடனான நட்பைப் புகழ்ந்தும், மதித்தும் எழுதி இருக்கிறார்கள். அவரது தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் தானூட்டிய தமிழ்ப் பாலை நினைவு கொண்டு அவரைக் கொஞ்சி இருக்கிறார். அவரது துணைவியர்கள் திருமதி. கமலா, திருமதி. சாந்தா, மகன் சூரியா, மகள் ஸ்ரீ கௌரி, என்று கும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.

    திருமதி. சாந்தா பாலகுமாரனின் எழுத்தில் ஒரு சிறந்த படைப்பாளியைத் தான் கணவனாக அடைந்திருக்கும் பெருமைக்கு மேல் அவர் யோகி ராம்சுரத்குமார் என்ற மாபெரும் சக்தியால் ஆட்க்கொண்ட திருமகன் என்ற நிறைவு தெரிகிறது. சூர்யா பாலகுமாரன் தன்தந்தையையே தன்குருவாகப் பதிவு செய்தவிதத்தில் தெளிவும், நெகிழ்வும் இருக்கிறது. அவரது எழுத்தில் தந்தை பாலகுமாரனின் குரல் கேட்கிறது.

    எழுத்தாளர் மாலன் தன் சிநேகிதனின் வளர்ச்சியில் மகிழ்ந்து, நெகிழ்ந்து பதிவு செய்ததில் கலப்படம் இல்லாத நட்பு தெரிகிறது. எழுத்தாளர் இந்துமதி பாலகுமாரனின் இயல்பான அன்பை விளக்கிய பகுதி அருமை. “பாலகுமாரனின் எழுத்து வலிமையைச் சொல்லி “உடையார்” நாவலின் தகுதியையும் மெச்சி, பாலகுமாரன் அவர்களுக்கு உயர்ந்த இலக்கிய விருதான “ஞானபீடம்” வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று சகபடைப்பாளியான இந்திரா சௌந்தர்ராஜன் பதிவு செய்திருக்கிறார்.

    தேவகோட்டை வா. மூர்த்தியின் கட்டுரை ஆழ்ந்த நட்புக்கு ஒரு உதாரணம். அதில் பாலகுமாரன் தன் தாயார் மறந்த பொழுது குமுதம் பக்தி ஸ்பெஷல் (May, 1,2007) இதழில் ,” என்னுடைய நண்பர்கள் பலரும் அவளுக்கும் நண்பர்கள். தேவகோட்டை மூர்த்தி என்னுடைய தோழன். அதே சமயம் என் அம்மாவுக்குச் செல்லப்பிள்ளை. துக்கம் கேட்டு நண்பர்கள் வரத் தொடங்கினார்கள். ஆறுதல் சொன்னார்கள். தேவகோட்டை வா. மூர்த்தி வரும் பொழுது கொஞ்சம் மனம் கலங்கினேன், தடுமாறி அழுதேன்” என்று எழுதி இருப்பதைப் படித்து விட்டு பாலகுமாரனின் அன்பை, தன்னோடு அவர் கொண்ட தோழமையை எண்ணி வியக்கிறார் தேவகோட்டை வா. மூர்த்தி. இதே எண்ணம்தான் பாலகுமாரன் அவர்களுடன் பழகிய அத்தனை பேருக்கும் இருக்கும். இந்தப் பரந்து பட்ட அன்புதான் பாலகுமாரனின் சொத்து.

    இயக்குனர் வசந்த் அவர்களின் கட்டுரை இந்த மலர்மாலையில் உள்ள வாசமிகு செண்பகப் பூவாய் மணக்கிறது. திரைப்படத் துறையில் பாலகுமாரனின் பங்களிப்பையும், தான் பாலகுமாரனின் எழுத்தால் எப்படி ஈர்க்கப் பட்டேன் என்பதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

    இவை எல்லாவற்றையும் விட பாலகுமாரனின் வாசககர்கள் பலர் தங்களது குடும்ப உறவின் மேன்மைகளும் , காதலும், சிநேகமும், கூடி வாழும் குணமும், குருபக்தியும் எப்படித் தங்களுக்குள் வந்தது என்ற பதிவுதான் இந்த மலருக்கான வைரமுடி.

    கபடமில்லாமல் எழுதியிருகிறார்கள். நல்ல எழுத்து எப்படி ஒருவரது வாழ்க்கையை மடைமாற்றம் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இந்த வாசகர்களின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. “மெர்க்குரிப் பூக்கள்” தொடங்கி “ராஜேந்திர சோழன்” வரை பாலகுமாரனோடு பயணித்த, இன்னும் பயணித்துக் கொண்டே இருகின்ற வாசகர்களின் அன்பே இந்த எழுத்துச் சித்தரின் வெற்றி.

    ” என் சிறப்புக்கெல்லாம் என் சத்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரின்” கருணையும், என் தாயார் சுலோச்சனா என்ற தமிழ்ப் பண்டிதையின் அன்பும், என்குடும்ப உறவுகளின் ஊக்கமும், சத்சங்க அன்பர்களின் நெருக்கமும், நட்புகளின் துணையுமே” காரணம் என்று கைகூப்பும்” பாலகுமாரனின் பணிவே இந்த மலரின் சாரம்.

    இந்த அருமையான “எழுத்துக்கு எழுபது” என்ற வண்ணமலரை வெளியிட்ட விசா பதிப்பகத்தினருக்கு பாராட்டுகள்.

    கடுமையாக உழைத்தால் தான் அடைய விரும்பிய உயரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய இந்த நூலை அனைவரும் படித்து மகிழ வேண்டும்.

    அன்புடன்,

    மீ.விசுவநாதன்

    04.08.2016

    Share
  • சிவனோடு ஒரு பேட்டி

    மீ.விசுவநாதன்

    விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

    சிவனே சிவனே உனைத்தேடி – நான்

    சிவலோகம் வரலாமா?

    மகனே மகனே வரவேண்டாம் – உன்

    மனம்தானே சிவலோகம் !

    அரனே அரனே உன்மேனி – எழில்

    அரவாய்நான் வரலாமா?

    அசடே அசடே வரவேண்டாம் -“நா”

    அசைவுதானே அரவுருவம் !

    அருவும் உருவும் இல்லானே – உனை

    அறிந்திடவே முடியாதா ?

    இருளில் இருந்து வெளியேவா – என்

    இருப்பைத்தான் அறிவாய்நீ !

    பஞ்ச பூத வடிவோனே – உன்

    பயனென்ன உரைப்பாயா ?

    கொஞ்சம் வயது போகட்டும் – உன்

    குணநலனால் தெளிவாய்நீ !

    (இன்று பிரதோஷ தினம் :  31.07.2016)

     

    Share
  • ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி

    மீ. விசுவநாதன்

    4f59dcc4-110d-4011-8f93-a72c20f30e7e

    எதையெதைநாம் பார்த்தாலும் இறையாய்த் தோன்றி 

           இல்லாத இடமில்லை என்றே நிற்கும் !

    அதையறியும் ஆற்றலினை எவரே பெற்றார்

          அணுவாக உள்ளுக்குள் அதனைத் தொட்டார் !

    விதையேதும் இல்லாமல் மரமாய் ஓங்கும் !

         விளக்கேது மில்லாமல் ஒளியை வீசும் !

    கதைபோலக் கேட்டாலும் கருத்தில் நீளும் !

          கவிகோடி சொன்னாலும் இன்னும் மிஞ்சும் !   (1)

     

    ஆதிசக்தி அவளேதான் அன்று தன்னை

        அழகான “பாலையாய்” மாற்றிக் கொண்டு

    ஜோதிமிகு சின்னப்பெண் உயிராய் வந்தாள் !

        ஒன்பதுதான் வயதுகொன்டாள் ! ஓர்நாள் போரில்

    மோதிபண்டா சுரனுடைய மகனைக் கொன்றாள் !

       முகமெல்லாம் பௌர்ணமியின் நிலவை வென்றாள் !

    ஒதிநித்தம் வணங்குகின்ற யோகிக் குள்ளே

        ஒளியாகி உபதேசம் இவளே செய்வாள் !          (2)

     

    வாலைப்பெண் இவளைநாளும் வாஞ்சை யோடு

       வாவென்றே இதயத்துள் இருக்கச் செய்து

    காலைகையை நன்னீரால் கழுவி விட்டு

       கருத்தோடு கங்கைநீர் கொண்டே ஆட்டி

    காலையிளங் கதிரோன் போன்ற வண்ணக்

       கஸ்தூரி மஞ்சளாலே அழகு கூட்டி

    ஓலைதனில் மையெடுத்து  கண்ணில் தீட்டி

      உச்சிதனில் சுட்டிவைத்துச் சொக்கச் செய்வோம் !  (3)

     

    பரந்திருக்கும் நெற்றியிலே பொட்டு மிட்டு

        பந்துபோன்ற கன்னத்தில் திருஷ்டி வைத்து

    அரன்நாமம் கேட்க்கின்ற செவியில் வைர

       அலங்காரக் குண்டலங்கள் பூட்டி வைப்போம் !

    சிரம்மீது வழிகின்ற முடியைப் பின்னி

       செண்பகப்பூ மல்லியென மணமாய் வைப்போம் !

    கரங்களிலே கல்யாண வளையல் சேர்த்துக்

       கலகலென சிரித்துவர மகிழ்ந்தி ருப்போம் !        (4)

     

     

    எடுப்பான சிவப்பினிலே ஆடை தைத்து

        இளம்பச்சை வண்ணத்தில் சட்டை போட்டு

    இடுப்பினிலே ஒட்டியாணம் மணிகள் கட்டி

         இருகாலில் தங்கத்தால் கொலுசும் போட்டு

    துடுக்கான பெண்கழுத்தில் நகைகள் கூட்டம்

         தொங்குகின்ற மங்கலத்தை நிறைந்து காட்டி

    கொடுப்பினைநீ எனக்கம்மா என்று அந்தக்

         குஞ்சுவிரல் பாதத்தில் பணிய வேண்டும் !       (5)

     

    நறுமணத்தைச் சுமந்திருக்கும் மலர்கள் கொண்டு

          நாமணக்க அவள்நாமம் சொல்லிச் சொல்லி

    சிறுமைகளைப் போக்கென்று கண்ணீர் சிந்தி

          சிறுமியவள் நினைப்பினிலே உருக வேண்டும் !

    அறுசுவையில் உணவெல்லாம் செய்து வைத்து

          அவளுண்ண அன்பாகத் தருதல் வேண்டும் !

     குறுநகையைச் சிந்துகின்ற குழந்தை கையில்

          கொத்தாகத் தாம்பூலம் கொடுக்க வேண்டும் !  (6)

     

    தூபதீப கற்பூர ஜோதி காட்டி

        பொல்லாத  திருஷ்டிதனைப் போக்க வேண்டும் !

    வேதகோஷக் குரலாலும் நல்ல பாட்டு

        இனிமைதரும் சுகத்தாலும் இன்பம் பொங்க

    பேதமின்றி வழிபாடு செய்ய வேண்டும் !

        பீடைகளே நெருங்காது நம்ப வேண்டும் !

    ஆதரவு தருகின்ற அருளாம் பெண்ணை

         அம்மாவென உணர்ந்தேநாம் போற்ற வேண்டும் ! (7)

     

    அபயமென ஒருகரமும் பாதம் காட்டும்

        அழகுயென ஒருகரமும், சுவடி, மாலை

    தவமெனவே இருகரமும், கருணை கொட்டும்

        தாமரையாய்த் திருமுகமும், நம்முள் சக்தி

    சிவமெனவே காட்சிதரும் வாலைப் பெண்ணை

        சிந்தித்தே இருப்போர்க்கு இறப்பு இல்லை !

    அவமானம் பெரும்புகழும் பேத மில்லை !

        அவனியிலே அவருக்கு இணையு மில்லை !       (8)

      

    அதிகாலை வேளையிலே வாலைப் பெண்ணை

         அவளுக்காம் மந்திரத்தால் தியானம் செய்தால்

    விதிகூட மெல்லமெல்ல விலகிப் போகும் !

          வீண்கோபம் விரக்திகூட நெருங்கி டாது !

    எதிலுமொரு ஆனந்தம் எளிதாய்க் கூடும்

          இதற்கொரு குருமூலம் தானே வாய்க்கும் !

     புதியதொரு பொற்காலம் உள்ளே பூக்க

           பூமகளாம் “பாலையின்” தாளைப் பற்று.             (9)

     

    (எண்சீர் விருத்தம்:

    அரையடி வாய்பாடு : காய், காய், மா, தேமா)

    Share
  • ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர்

    மீ.விசுவநாதன்

     

    மலரினால் பூசை செய்யும்

         வகைநா(ன்) அறிந்தே(ன்) இல்லேன் !

    சிலரது அறிவைப் போல

         சிறிதும் கொண்டேன் அல்லேன் !

    பலவகை திரியும் எண்ணம்

         படிந்த பாவி நானும்

    குலகுரு உந்தன் பாத

        குணத்தில் கரைந்து போனேன் !

     

    மனதிலே மாசு நீங்க

       மௌன மொழியால் நித்தம்

    முனகிடு குருவின் பேரை ,

        மூச்சுப் பயிற்சி யாலே

    சினமிலா பண்பு ஓங்கும் ,

        சிந்தைத் தெளிவு காணும்

    எனவொரு வழியைச் சொல்லி

        எனக்குள் வந்த ஞானி !

     

    உலகிலே வந்து விட்டேன்

       உற்ற துணையைத் தேடிப்

    பலமுறை அழுது விட்டேன்

        பலம்நீ என்று நம்பி

    நிலவொளி ஒத்த உந்தன்

       நினைவில் பற்று வைத்தேன்

    இலையெனத் தள்ளி டாமல்

        என்னுள் வரவு மானாய் !

     

    உருகியே உள்ளன் போடு

        உதவி எனவே கேட்டால்

    இருவினை தீரும் வண்ணம்

        இவரே அள்ளிக் கொடுப்பார் !

    “அபிநவ வித்யா தீர்த்தர்”

        அருளை வேண்டும் பக்தன்

    கவிதனை ஏற்றுக் கொண்டு

         கருணை பொழிவார் சத்யம் !

    Share
  • கருணை மந்திரம்

    மீ.விசுவநாதன்

    எனக்கொரு மந்திரம் வாய்த்துளது – அது

    எல்லோர் நலமும் நினைக்கிறது

    தனக்கொரு தந்திரம் கொள்ளாத – தினம்

    தவிக்கும் உயிரை அணைக்கிறது !

     

    இளமையில் ஓடிய கால்களுக்கு – இன்று

    இதமாய் தடவிக் கொடுக்கிறது

    அளவிலா அன்பினைத் தந்தவர்க்கு – கவலை

    அருகில் வராமல் தடுக்கிறது !

     

    பலமுறை வாழ்விலே தோற்றவர்க்கு – உள்

    பலத்தைக் அளித்துப் பழக்கியது 

    குலமுறை எதுவுமே பார்க்காமல் – நல்ல

    குணத்தைக் கண்டு மதிக்கிறது !

     

    தீவிர வாதமே தீர்வில்லை – “கருணை”

    தெய்வ மனத்தைத் திறக்கிறது

    தூவிய பூக்களின் வாசம்போல் – அது

    பூமி சுகிக்க மணக்கிறது !

    Share
  • செந்தூர் முருகன்

    மீ.விசுவநாதன்

    திருச்செந்தூர் ஷண்முகர்

    குடகு மலையோ பொதிகை மலையோ

    குறிஞ்சித் தலைவன் இடமதுதான் – என்

    குமரன் இருக்கும் குகையதுதான் – ஒரு

    படகு எடுத்துக் கடலில் மிதப்பேன்

    பயத்தை மறந்த பயணம்தான் – குக

    பக்தி கொடுக்கும் துணிவேதான் !

     

    செந்தூர் முருகன் சிரிக்கும் அழகை

    சிந்தை செய்வ தொருபழக்கம் – ஒரு

    சின்னப் பொழுதி(ல்) அவன்நெருக்கம் – நான்

    எந்தூர் திசையில் இருந்த போதும்

    இந்தப் பிள்ளை நினைவேதான் – என்

    இதயம் அவனின் அருளேதான் !

     

    வானம் முழுக்க வரைந்த விரல்கள்

    வடித்த உருவே முருகன்தான் – அதை

    வணங்க மனமும் அடங்கும்தான் – தன்

    மானம் நிறுத்த மலையில் தனித்த

    மகேச மகனே குருவானான் – அவன்

    மட்டும் எனக்குள் குடியானான் !

    Share
  • சிவபிரதோஷம்

     

    சிவசம்போ

    71a83413-c1ce-4cbe-bbed-a38b573d73b3
    மீ.விசுவநாதன்

    ஆத்தங் கரையுறை ஆதி சிவனிடம்
    அன்பு வைத்திருப்பேன் – மனம்
    அச்சம் தவிர்த்திருப்பேன் – அந்தக்
    கூத்தன் விழிதனில் கூடிய பின்னாலே
    கொஞ்சம் தனித்திருப்பேன்- கண்ணீர்
    கொட்டப் பனித்திருப்பேன் !

    கொத்துச் சடைமுடி கொண்ட பெருமகன்
    கூட நடந்திடுவேன் – தீபம்
    கொண்டு வழிபடுவேன்- இந்த
    வெத்து மனிதனை வேட்டை ஆடென
    விழுந்து கும்பிடுவேன்- சிவ
    வித்தை நம்பிடுவேன் !

    தும்பை மலரிலே தூய வெள்ளையாய்த்
    தோன்றும் உருவெடுப்பேன் – ஈசன்
    தோளை அரவணைப்பேன் – கங்கைச்
    சொம்பை கண்ணிலே கண்ட போதிலே
    சொக்கன் நினைவாவேன் – கயிலை
    சோதி பனியாவேன் !

    வெட்ட வெளியிலே விடையின் மீதிலே
    வீற்று அருள்கொடுக்கும் – உமை
    வேந்தன் அடிபணிவேன் – உயிர்
    விட்டு வெளியிலே செல்லும் போதிலே
    வேத ஒலியாவேன் – சிவ
    வீதி விளக்காவேன் !

    (இன்று பிரதோஷ தினம் : 17.07.2016)

    Share
  • வாயில்லாப்பிராணி

    மீ.விசுவநாதன் 

     

    எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி

    இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து

    தங்குவதற் கானகூடு பறவை செய்யும் !

    தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும்

    தங்களது உறவுகளை நன்றாய்ப் பேணும் !

    தவிக்கின்ற தன்குஞ்சு வாயில் ஊட்டி

    உங்களுக்கு நானிருக்கேன் என்று சொல்லி

    உடல்முழுதும் அலகாலே வருடிக் கொஞ்சும் ! 

     

    வாசலிலே போடுகிற அரிசிச் சோறு

    வாய்க்குள்ளே வைத்தபடி காதல் பேசும்

    பாசமுள்ள குருவிகளைப் பார்க்கும் போது

    பாசத்தைப் பணத்திற்காய்க் கொன்று போடும்

    தூசுபெறா மனிதகுணம் வெட்கிப் போகும் !

    துன்பத்தில் தன்னினத்தைத் தழுவிக் கொண்டு

    மாசுவராக் கருணையாலே இணைந்து வாழும்

    வாயில்லாப் பிராணிகளை வணங்கு கின்றேன் !

    Share
  • ஒளிப்பிழம்பு

     
    மீ.விசுவநாதன்
    ஊரெல்லாம் கண்விழிக்க உயரத்தில் உள்ள
    ஒளிகக்கும் ஆதவனோ வானில் மெல்லச்
    சீரோடு செங்கதிரைத் தெளித்துக் கொண்டே
    சிந்துகிறான் மஞ்சளுடன் நீலம் சேர்த்து !
    தேரோடும் வீதியிலே சாண நீரைத்
    தெளித்தபின்னே பெருக்கிவிட்டுப் புள்ளிக் கோலம்
    போடுகிற பெண்பார்த்துச் சிவந்த கண்ணாய்ப்
    பொலிகிறது கிழக்கினிலே ஒளியாம் கோளம் !

    விடிந்ததுபார் என்றங்கே பறக்கும் புட்கள் !
    வேதியர்கள் நீராட நதிக்கே செல்வர் !
    மடிந்ததுபார் இரவென்றே வெள்ளைக் கொக்காய்
    மடமடெனக் கதிரவனும் மேலே ஏறிக்
    கொடியுயர்த்திச் சாதிமதம் பாரா வண்ணம்
    குறைவின்றிக் கொட்டிடுவான் வெளிச்சப் பூவை !
    படிப்படியாய்ச் சூடுதனை பறக்க விட்டும்
    பசுமைக்குக் காவலனாய் இருக்கின் றானே !

    எத்தனையோ கோள்களெல்லாம் இருந்த போதும்
    எரிகின்ற சூரியனே உற்ற நண்பன் !
    வித்தகர்கள் வீசிவிடும் ராக்கெட் கூட
    விண்ணினிலே இவன்பக்கம் செல்வ தில்லை!
    நித்திலமாய்த் தோன்றுகிற நிலா வுக்கும்
    நீட்டுகிறான் தன்னொளியைக் குளிர்ச்சி யாக !
    புத்தியிலே காயத்ரி வேத மாகப்
    புகுந்திட்டப் பொன்னொளியைப் போற்று கின்றேன் !

    (10.07.2016)

    Share
  • சுத்த அறிவு

    மீ.விசுவநாதன்

    என்னு ளிருக்கும் இசைவெளியில்
    இமைக ளடைத்து ரசித்திருபேன்
    இன்னு மதிலே கரைந்தேபோய்
    இதயம் மறந்து தனித்திருபேன் !
    தன்னந் தனியே இருக்கையிலே
    தன்னை அறிய முயலுகிறேன்
    அன்னப் பறவை அறிவோடு
    அகத்தைப் பிரிக்கப் பயிலுகிறேன் !

    (07.07.2016)

    Share