Category: சிறுகதைகள்

கதைகள்

  • ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான்.

    ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும் அதிகமாகப் பசித்தது. அந்த பதினைந்து வயதுப் பையனுக்கு உடலை வளர்க்க வேறு வழி கிடையாது என்பது புரியவில்லை.

    ஒரே மகனை அகாலத்தில் பறிகொடுத்த துக்கம் ஆறாது, சற்றுத் தொலைவில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. “அதான் இந்த வயசிலேயே அப்பனை முழுங்கிட்டியே! போதாதா? இன்னும் இட்லியை வேற முழுங்கணுமா?” என்று பதிலுக்குக் கத்தினாள்.

    அவ்வளவுதான். தட்டை ஒரு பெரிய ஓசையுடன் தள்ளிவிட்டு, கையைக்கூடக் கழுவாது வாசலை நோக்கி நடந்தான் பையன்.

    அவன் கேட்டபடி இட்லியை எடுத்துக்கொண்டு வந்தவள், “இட்லி கொண்டுவான்னு என்னைக் கேட்டுட்டு, எங்கே போறான்?” என்றாள் முணுமுணுப்பாக.

    “சுப்பு போனதிலிருந்தே இவனுக்கு மூளை சரியில்லை!” என்று அனுமானித்தாள் பாட்டி. “எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார் தாத்தா!” என்று என்றோ இறந்துபோன கணவரை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

    `கட்டுப்பாடு,’ `ஒழுக்கம்’ என்று நினைத்து, கையில் பிரம்புடன் அவன் பின்னாலேயே நடந்தவர் அந்தத் தாத்தா.

    “ரெண்டு வயசுக் குழந்தையை ஏம்பா ஓயாம திட்டறீங்க? அதுக்கு என்ன தெரியும்?” என்று கெஞ்சலாகக் கேட்ட மகனை அலட்சியமாகப் பார்த்தார் கிழவர்.

    “ஆண்பிள்ளையை அடிச்சு, மிரட்டி வளர்க்கணும். அப்போதான் கெட்டுப்போக மாட்டான். கடைசிக் காலத்திலே நமக்கு ஆதரவா இருப்பான்,” என்று உபதேசித்தார். “இப்போ நீ இல்லியா?”

    தந்தை கையால் தான் வாங்கிய அடிகள் நினைவிலெழ, அதன்பின் மகன் வாயைத் திறக்கவில்லை. தன் சிறு வயதில் தான் அடைந்த ஆத்திரம், ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையாலாகாத்தனம், அதுவே தன்னையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்துகிறவனாக மாற்றியது – எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.

    அதன்பின் தந்தையைப் பிடிக்காது போக, `வயதில் மூத்தவர்களே இப்படித்தான்!’ என்றெழுந்த கசப்பு ஆசிரியர்களையும்கூட வெறுக்க வைத்தது.

    அரைகுறையாகப் படிப்பு நின்றுபோனது நிம்மதியாக இருந்தது. `படி, படி’ என்று அப்பா இனி உயிரை வாங்கமாட்டார்.

    தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின்னர்தான் தோன்றியது சுப்புவுக்கு, அப்பாவை எதிர்ப்பதாக நினைத்து, படிப்பை நிறுத்தியது சரியில்லையோ என்று. எதுவும் மாறவில்லை — அப்பாவிற்குப் பதில் மேலதிகாரி, ஓயாது அவனிடம் குற்றம் கண்டுபிடிக்கத், தன் மனப்பொருமலை மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் தணித்துக்கொள்ளப் பார்த்தான். ஆனால் நிம்மதி என்னவோ கிடைக்கவில்லை. `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்புதான் மிஞ்சியது.

    `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்பு எழ, வேகமாக நடந்த மாதுவுக்கு ரயில் நிலையத்தைப் பார்த்ததும் ஒரு வழி தோன்றியது.

    முதலிலேயே தண்டவாளத்தின்மேல் படுத்துக்கொண்டால், யாராவது பார்த்து, எழுப்பி விடுவார்கள் என்று யோசித்து, பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டான்.

    ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. “தம்பி! விழுந்துடப் போறே!”

    “விடுங்க,” என்று திமிறினான். “நான் சாகணும்”.

    அந்த மனிதருக்கு அறுபது வயதிருக்கும். “ஏம்பா? பெயிலாயிட்டியா?” குரலில் கனிவு.

    “ஊகும்”.

    “பின்னே?”

    “அப்பா செத்துப் போயிட்டாரு!”

    “அடப்பாவமே! துக்கம் தாங்காமதான் இந்த முடிவுக்கு வந்தியா?” தனக்குள் கேட்டுக்கொள்வதுபோல் பேசியவர், “வா! காண்டீனில் சாப்பிட்டபடியே பேசலாம்,” என்று, அவனை எதுவும் பேசவிடாது அழைத்தார். பிடித்த கை இன்னும் இறுகியிருந்தது.

    “காலையில ஏதாச்சும் சாப்பிட்டியா?” அவன் சாப்பிட்ட வேகம் அப்படிக் கேட்கவைத்தது.

    “ஒரே ஒரு இட்லி!” சுயபரிதாபத்துடன் வந்தது குரல். “இன்னொண்ணு கேட்டப்போ எங்க பாட்டி `அதான் அப்பனை முழுங்கிட்டியே’! ன்னு..,” குரல் விக்கியது.

    “அப்பாவோட அம்மாவா?”

    “ம்!”

    “பாவம்! அவங்க துக்கத்தை ஒம்மேல ஆத்திரமா காட்டி இருக்காங்க. நீ செத்துப்போனா, ஒங்கம்மாவும் பிள்ளையைப் பறிகொடுத்த வருத்தத்திலே இப்படித்தானே ஆகிடுவாங்க?”

    வாயருகே போன கை நின்றது. தன் உணர்ச்சிகளிலேயே ஆழ்ந்துபோன தனக்கு ஏன் அம்மாவைப் பற்றியும் நினைக்கத் தோன்றவில்லை?

    அம்மா!

    வாயில்லாப்பூச்சி!

    வீட்டுக்கு வெளியில் தன்னைப் பிறர் நடத்தியதுபோல் மனைவியிடம் அதிகாரம் செலுத்திய கணவன், மகனை மிஞ்சிய மாமியார்.

    தானும் போய்விட்டால், அந்த அப்பாவி அம்மாவின் கதி?

    அவனையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவனுடைய மனநிலை புரிந்திருக்க வேண்டும். “சீக்கிரமா சாப்பிடு. அடுத்த ரயில் வரப்போ, தண்டவாளத்திலே குதிக்கத் தெம்பு வேணாம்?” என்றார் கேலியாக.

    அவருடைய சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான்.

    Share
  • ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தனக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் என்று தாயிடம் புகார் செய்தபோது அவளுக்கு ஏழு வயது.

    அது ஏன் அம்மா சுகந்தி, என்றும் அப்பா `மலரு’ என்றும்,  பள்ளித்தோழிகள் சுகி என்றும் அழைக்கிறார்கள்?

    “எனக்கு ஏம்மா இவ்வளவு நீளமான பெயர் வெச்சீங்க?” என்று சிணுங்கினாள்.

    “அதவா கண்ணு? எனக்கு சுகந்திங்கிற பேரு பிடிச்சுது. அப்பாவோ, மலருன்னுதான் வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு!”

    புன்னகையால் விரிந்த இதழ்களை மூடிக்கொண்டாள் மகள்.

    “நாங்க ரெண்டு பேரும் விட்டுக்குடுக்கல. கடைசியில, `இதுக்கு என்ன சண்டை?’ன்னு சுகந்த மலர்னு வெச்சோம். அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? வாசனையுள்ள மலர்!”

    சமாதானம் மட்டுமல்ல, பெருமையும் ஏற்பட்டது சுகந்தாவிற்கு. தோட்டத்திலிருந்த மல்லிகையையும் ரோஜாவையும் விரும்பிச் சூடிக்கொண்டாள்.

    மலர் என்ற தான் எப்படி மாலாவாகிப்போனோம் என்று சற்றுப் பெரியவளானதும் புரிந்துகொண்டாள்.

    சீனர்களுக்கு ‘ர’ என்கிற எழுத்து தகராறு. அவர்கள் மொழியில் அது கிடையாதாம். சிலர் அதற்குப் பதில் லகரத்தைப் பயன்படுத்துவார்கள் — ராகவன் என்ற அவளுடைய மாமாவின் பெயர் `லகாவான்’ என்று மாறுபட்டுவிட்டதுபோல். சீன ஆசிரியைகளுக்கு அவள் மாலா.

    அடுத்த சில ஆண்டுகள் எவ்விதக் குழப்பமுமின்றி நகர்ந்தன.

    பன்னிரண்டு வயதில் அடையாளக்கார்டு எடுக்கவேண்டும்.

    “நீ எடுத்த பிள்ளையா? என்னடா, அப்பா அம்மா ரெண்டுபேர் சாயலும் இல்லியேன்னு பாத்தேன்!” என்று ஆசிரியை கூற, சுகந்தாவுக்கு எதுவும் புரியவில்லை.

    வீடு திரும்பியதும், “எடுத்த பிள்ளைன்னா என்னம்மா?” என்று கேட்டாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, தாயின் பதிலால் தன் வாழ்க்கையின் தடம் மாறிப்போகுமென்று.

    தாய் முதலில் பயந்தாள். பிறகு, `இதெல்லாம் மறைக்கக்கூடிய சமாசாரமா என்று உண்மையைச் சொன்னாள்: “மத்தவங்க குழந்தையை தன்னோட குழந்தையா வளக்கறது!”

    “ஏன் அப்படிச் செய்யணும்?”

    “பெத்தவங்களுக்கு ஏதோ அசௌகரியம்”.  வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன் கூறினாள்.

    “ஏழையா இருந்திருப்பாங்களா?”

    “அப்படியும் இருக்கலாம். ஏனோ அவங்களால குழந்தையை வளக்க முடியல. தத்து எடுக்கிறவங்களுக்குப் பிள்ளை பெறமுடியாம ஏதோ கோளாறு. இதனால இப்போ ரெண்டு பக்கத்திலேயும் நிம்மதி”.

    நிம்மதிதானா? மகிழ்ச்சி கிடையாதா?

    அதற்குமேல் எதுவும் கேட்காது, முகம் வாட அப்பால் நகர்ந்தாள் பெண்.

    `அம்மா’ என்று உயிரையே வைத்திருந்தோமே! அந்த அம்மா, மீனாம்பாள், தன்னைக் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கியிருக்கிறாள் — சாமான் போட்டு வரும் பிளாஸ்டிக் பையைக்கூட ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டு, வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுத்தப்படுத்தி வைப்பதுபோல!

    இந்தக் குடும்பத்தில் தானும் ஒரு குப்பை. என்றைக்காவது எதற்காகவாவது பயன்படும் என்று சோறு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

    அழுகை ஆத்திரமாக மாறியது. தனக்குச் சொந்தமில்லாதவளை எதற்காக `அம்மா’ என்று அழைப்பது?

    அப்போதிலிருந்து சுகந்தாவின் குணமே மாறிப்போயிற்று. பள்ளிக்கூடத்தில் அவளைப் போன்ற சில பெண்கள் தோழிகளாக அவளை ஏற்றுக்கொண்டபோது, `வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை!’ என்று தோன்றிப்போயிற்று.

    “நாம்ப சந்தோஷமா இருக்க கூடாதுன்னுதான் சாமி அம்மான்னு ஒருத்தரைப் படைச்சிருக்கிறாரு,” என்றாள் உமா. இத்தனைக்கும், அவளைச் சுமந்து பெற்ற தாய்!  இரவு நேரங்களில் மகள் தனியாகச் சற்றே பெரிய பையன்களுடன் ஊர்சுற்றுவதைக் கண்டித்ததால் எழுந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது.

    “சரியாச் சொன்னே, உமா,” என்று பாராட்டினாள் கமலி. “எங்கம்மாவை அவங்க வீட்டில அதிகம் படிக்கவைக்கல. அதனால, என்னை எப்பவும் `படி, படி’ன்னு பிராணனை வாங்கறாங்க,” என்று பொருமினாள். “போன பரீட்சையில நல்லா செய்யலேன்னு ரூமில போட்டுப் பூட்டிட்டாங்க. மூணு நாள்! அம்மாவாம் அம்மா!”

    தன்னையுமறியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டாள் சுகந்தா. இப்படியெல்லாம் செய்து தன்னைத் துன்புறுத்தவில்லை அம்மா என்று தான் நம்பிய மீனாம்பாள்.

    இருந்தாலும், `இனிமே என்னை அம்மான்னு கூப்பிடவேமாட்டியா?’ என்ற ஏக்கம் பெருக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் குடிகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு குரூர திருப்தி எழுந்தது சுகந்தாவுக்கு. வளர்ப்புத்தாயை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதுபோல் நடந்துகொண்டாள், தன்னையுமறியாது.

    உமாவின் பிறந்தநாள் விழா என்று போனவள், அங்கு முன்பின் தெரியாத ஒருவனுடன் நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு. அவன் அவளைவிட மூத்தவனாக இருந்தபோதும் அவளை மதித்துப் பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை. அவளுடைய அறிவையும் அழகையும் எப்படிப் புகழ்ந்தான்!

    வழக்கத்துக்கு விரோதமாக முன்ஹாலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அமைதியான முகத்துடன் மீனாம்பாள் உட்கார்ந்திருந்தாள்.

    அவளைக் கவனியாததுபோல உள்ளே செல்ல முற்பட்டாள் சுகந்தா.

    “இப்படி வந்து ஒக்காரு. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” வழக்கத்துக்கு விரோதமாக அவள் குரலில் இருந்த கண்டிப்பு சுகந்தாவைப் பணியவைத்தது.

    “நான் நல்லவிதமா வளத்தா, ஒன் பிறப்பை மாத்திடலாம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்போ தோணுது”.

    சுகந்தா விழித்தாள். என்ன சொல்ல வருகிறாள்?

    “ஒனக்கு இப்போ ரெண்டுங்கெட்டான் வயசு. நீ குழந்தையுமில்லே, வளந்த பெரியவளும் இல்லே. ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல. அதான் ஒன்னைப் பெத்தவ செஞ்ச தப்பையே நீயும் பண்ணறே!”

    சுகந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் கேட்க நினைத்ததைத் தானே சொல்கிறாள்.

    “அவளுக்கும் அப்போ பதினஞ்சு வயசுதான். கூடப் படிக்கிற பையனோட கண்ட கண்ட படங்களை ஒண்ணாப் பாத்துட்டு…! சுதந்திரம்னு நினைச்சு மனம்போனபடி நடந்துக்கிட்டா. அவ வயத்திலே நீ! படிப்பு பாதியில நின்னுபோச்சு.” பழைய சம்பவத்தில் மனம் நிலைக்க, சற்றே நிறுத்தினாள்.

    “மைனர் பொண்ணைக் கற்பழிச்ச குத்தத்துக்காக அந்தப் பையனைப் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப்போச்சு”.

    பிறக்குமுன்பே தாய் தந்தை இருவர் வாழ்க்கையையும் நாசமாக்கியிருக்கிறேன்!  சுகந்தா மெல்ல விசும்பினாள்.

    “அந்த அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாது, சுகந்தி. அப்புறம் ஒனக்குப் பிறக்கப்போற குழந்தையும் நிம்மதி இல்லாமத் திண்டாடும்”.

    சுகந்தாவின் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன.

    அப்புறம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?

    சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியேறியதும் பையனுடைய வாழ்க்கை சீரடைந்ததா?

    அதெல்லாம் தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது!

    `யார் எப்படிப் போனால் எனக்கென்ன!’ என்று அவற்றை ஒதுக்கித் தள்ளியபோது, தானும் அப்படி ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோமே என்ற நிம்மதி பிறந்தது.

    ஓடி வந்து, “அம்மா!” என்று விம்மியபடி மீனாம்பாளை இறுக அணைத்துக்கொண்டாள் சுகந்தா.

    Share
  • பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தான் தினமும் ஆபீஸ், வேலை என்று உயிரை விட, கிடைத்த நேரத்திலெல்லாம் மனைவி ஹாயாக சோபாவில் படுத்தபடி புத்தகங்கள் படிக்கிறாளே என்ற எரிச்சல்  பிறந்தது சிவாவிற்கு.

    “எதுக்கு எப்ப பாத்தாலும் துப்பறியும் நாவலே படிச்சுக்கிட்டிருக்கே?” முகத்தைச் சுளிக்காது கேட்டாலும், குரலும் தொனியும் அவளை மட்டம் தட்டுவது போலிருந்தது.

    தனக்குப் பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு தடை?

    முகம் மாறாது, “நாலு பக்கத்துக்கு ஒரு கொலை! யார் குத்தவாளின்னு யோசிக்கிறப்போ சுவாரசியமா இருக்கு. அதோட, நாம்ப அப்படியெல்லாம் கஷ்டப்படலியேன்னு ஒரு நிம்மதி!” என்று அடுக்கினாள் அலமேலு.

    அவளுடைய விளக்கம் அவனிடம் எடுபடவில்லை. “உருப்படியா எதையாவது படி. படிக்க விஷயமா இல்லே?” என்றபடி நகர்ந்தான்.

    அன்று வேலை முடிந்து வீடுதிரும்பும்போது, சிவாவின் கையில் ஒரு பை. “இந்தா, அலமு! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். ஒனக்குத்தான் படிக்கப் பிடிக்குமே!” என்று குத்தலாகக் கூறியபடி, ஒரு பையை மனைவியிடம் நீட்டியவன், “அதுக்காக வீட்டையும் குழந்தையையும் கவனிக்காம இருந்துடாதே!” என்று கேலிவேறு செய்தான்.

    பையைப் பிடுங்காத குறையாக வாங்கினாள் அலமேலு. உள்ளே பார்த்தவள் முகம் சுருங்கியது. அறுபது வயதுக்குமேல் ஆன கிழடுகள், `போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே!’ என்ற நப்பாசையுடன் படிக்கும் புத்தகங்கள்!

    அவளுடைய தாத்தாதான் இதையெல்லாம் படிப்பார்.

    அவளோ, `பெரியவங்க கதையெல்லாம் நீ படிக்கக்கூடாது!’ என்று அம்மா ஓயாது கண்டித்ததால், `அப்படி அதில் என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வத்துடன் எட்டு வயதிலிருந்தே காதல் நவீனங்களையும், பத்திரிகைகளையும் படித்தவள். படித்தது எல்லாம் புரியாவிட்டாலும், ஏதோ ரகசியக்குற்றத்தில் ஈடுபட்டதுபோன்ற த்ரில் ஏற்பட்டது.

    ஒரு வழியாகப் பதின்ம வயதை அடைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. `அம்மா பார்த்துவிடுவார்களோ!’ என்று பயந்து, பயந்து இனி படிக்கவேண்டாம்.

    ஒரு தலைமுறைக்குமுன், `நான் டான்ஸ் கத்துக்கட்டுமாம்மா?’ என்று தாயிடம் கேட்டதும், அவளுடைய பதிலும் மறக்குமா!

    `அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எப்படி ஆடினாலும், எல்லா ஆம்பளையும் ஒன்னோட ஒடம்பைத்தான் உத்து உத்துப் பாப்பான்!’

    அன்று அம்மா. இன்று கட்டியவரா!

    அப்போதுதான் இனிமேல் பிறர் சொல்வது எதையும் கேட்டு நடக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

    *                                               *                                                    *

    “ரேகாவை டான்ஸ் கிளாசில சேர்க்கப்போறேன்”. உத்தரவு கேட்டாற்போல் இல்லை. தகவல் தெரிவிக்க நினைத்தாள். அவ்வளவுதான்.

    “ம்!” தூக்கக்கலக்கத்தில் பதில் வந்தது.

    மறுநாள், “கிளாசில கொண்டுவிடுன்னு என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே!” என்று அவன் கறாராகச் சொன்னபோது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

    “சேச்சே!” தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு அளிக்கப்போகும் பெருமையுடன் மறுத்தாள்.

    எந்த நாட்டிய வகுப்பில் சேர்ப்பது என்று ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் கணவன் வாங்கிவந்த ஆன்மிகப் புத்தகத்தில் ஒன்றைப் புரட்டியபோது அகன்றது.

    பரமசிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடந்தது என்று ஆரம்பித்தது கதை.

    `ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டியப்போட்டியா! பலே!’ சுவாரசியம் மேலிட, மேலே படித்தாள்.

    முடிவு அவளுக்குப் பிடிக்கவில்லை. `ஊர்த்துவத் தாண்டவம்’ என்று, சிவன் காலைத் தலைக்குமேல் தூக்க, சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டாளாம்.

    சிவகாமி நாணினாள், களிப்புடன் சிரித்தாள், அதிர்ந்தாள் என்றெல்லாம் விதவிதமாக விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், கடவுள் செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டுவிட்டார்கள்.

    ஒரு பெண் தன் காலைக் கண்டபடி தூக்கக்கூடாது — இது ஆண்கள் விதித்த விதி.

    `எங்களுக்கு மட்டும் என்ன, காலிலே பலம் கிடையாதா? எத்தனை பாலிவுட் சினிமாவிலேயும், தொலைகாட்சியிலேயும் பார்க்கிறோம்!’ அலமேலுவுக்கு ஆத்திரம் பொங்கியது. `இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே பெண்களை அடக்கி வைக்கிறது நம் சமுதாயம்!’

    பரதநாட்டியம் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பெண்கள் இடுப்பை ஆட்டக்கூடாது, காலைத் தலைக்குமேல் தூக்கக்கூடாது என்று காலத்துக்கு ஒவ்வாத எதையெதையோ கடைப்பிடிக்கச் சொல்வார்கள்.

    *                                               *                                                    *

    அந்த நடன நிகழ்ச்சிக்கு இரு மாதங்கள் இருந்தன.

    வகுப்பில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள் மகள் மேடையில் ஆடப்போகிறாள்! அலமேலுவுக்குத் தலைகால் புரியவில்லை.

    “இதிலே பைஜாமா காஸ்ட்யூம் தைக்கணும். உடம்போட ஒட்டினாப்போல இருக்கணும்”. என்று தான் கையோடு கொண்டுவந்திருந்த புடவையைக் காட்டினாள். “மயில்கழுத்து கலர்! கிழிச்சுத் தைச்சா அழகா இருக்கும்”.

    “கொஞ்சம் பழசு போல இருக்கே!” என்று தயங்கினார் தையற்காரர்.

    “நான் சொல்றபடி செய்யுங்க. புடவையை அப்படியே, மடிப்பு கலையாம, புதுசாவே வெச்சிருக்கேன்,” லேசான அதட்டலும் பெருமிதமாகவும் வந்தது குரல்.

    அவளுடைய கல்யாணத்திற்கு அம்மா அதை வாங்கி வந்தபோது, `என்னைக் கேட்காமலேயே, எனக்குப் பிடிக்காத பச்சை கலரிலே ஒரு புடவை வாங்கிட்டு வரணுமா!’ என்று ஏற்பட்ட கொந்தளிப்பில், ஒருமுறைக்குப்பின் அதை உடுத்தவேயில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அந்தப் புடவைக்கு விமோசனம்.

    ஒரு சிறு தயக்கமும் ஏற்பட்டது. “அதெல்லாம் தெச்சுடலாம்மா. ஆனா லூசா தைக்கலாமே! சின்னப்பிள்ளை! ஒரே வருஷத்திலே போட்டுக்க முடியாம போயிடும்”.

    “தொளதொன்னு வேண்டாம். காலைப் பிடிக்கப் பிடிக்க இருக்கட்டும்”.

    இவளுடன் பேசிப் பயனில்லை என்று மேலே எதுவும் பேசாது அதை வாங்கிக்கொண்டார். வரும் வியாபாரத்தை விடுவதாவது!

    அருமை மகளுடைய உணவில் சில மாற்றங்களைச் செய்தாள் அலமேலு. ஆடத் தெம்பு வேண்டாமா!  தினமும் உருளைக்கிழங்கு, வெண்ணைபோன்ற `சத்துணவு’ வகையறா.

    எதிர்பார்த்திருந்த அந்த முக்கியமான தினம் ஒருவழியாக வந்தது.

    “எவ்வளவு அழகா இருக்கு, பாரு!” மயில் கழுத்து வண்ண பைஜாமாவைத் தடவிக்கொடுத்தாள் தாய். “போட்டுக்கோ, வா!”

    “ரொம்ப டைட்டா இருக்கும்மா!” என்று சிணுங்கினாள் பதின்மூன்று வயது மகள் ரேகா. அம்மாவின் போஷாக்கில் அந்தச் சில மாதங்களிலேயே உடலளவு மாறிப்போயிருந்தது.

    “இதுதான் இப்போ ஸ்டைல்! திருஷ்டி படறமாதிரி அழகா இருக்கேடி. ஹிந்தி சினிமா டைரக்டர் எவனாவது ஒன்னைப் பாத்தா, அப்படியே கொத்திட்டுப் போயிடுவான்!”

    சினிமா நடிகைமாதிரி இருக்கிறோமாமே? கர்வத்துடன் மேடை ஏறி, வளைந்து, நெளிந்து ஆடினாள் சிறுமி.

    அம்மா சொல்லியிருந்த சிவன்-பார்வதி கதை அப்பெண்ணின் நினைவிலேயே நிலைத்திருந்தது. `நான் அந்தக்காலத்துப் பெண்ணில்லை,’ என்று சற்றே கோபத்துடன் காலைத் தலைமேல் தூக்க, `டர்’ என்ற ஓசையுடன் தொடையருகே ஆடை கிழிந்தது. காற்றே படாது, உள்ளேயே அமுக்கி வைத்திருந்ததால் புடவை நைந்து போயிருந்ததால் வந்த வினை! உள்ளாடை எட்டிப்பார்த்தது.

    கண்களில் நீர் வழிய, பாதி நடனத்திலேயே அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, உள்ளே ஓடினாள் நடனமணி.

    முதல் வரிசையில் அமர்ந்து, `என் பொண்ணு!’ என்று பக்கத்திலிருந்தவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்த அலமேலு அதிர்ச்சியில் திறந்த வாயை இரு கரங்களாலும் பொத்தினாள். உடல் பின்னோக்கிச் சரிந்தது.

    ஈராண்டுகளாக வெளியில் எங்கும் போகமுடியாது வீட்டிலேயே அடைந்து கிடந்து அலுத்த மக்கள், `நாட்டியத்தை ரசிக்க முடிகிறதோ, இல்லையோ, நாலுபேரைப் பார்த்துப் பேசலாமே!’ என்று திரளாக வந்திருந்தார்கள்.

    “பாவம்!” என்ற சில குரல்கள் அவளுக்கும் கேட்டன.

    Share
  • ஸ்ராவணி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்


    மரணம். . . . .

    இரண்டாவது  நாளும் மருத்துவமனை  படுக்கையில் கிடக்கும் ஸ்ராவணியைத் தேடிவரவில்லை. ஆனால் வந்ததோ ஒரு தனியார் தொலைக்காட்சியின் மேக்கப்மேனும் ஒரு பெண் நிருபரும். இரண்டு கேமரா அசிஸ்டென்டுகளும் உடன் இருந்தனர். மருத்துவ அதிகாரிகளின் அனுமதி அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது.

    “இல்ல நாங்க ஒருவிதத்திலும் சிறுமியை  தொல்லை  செய்யமாட்டோம்.”

    நிருபரான ரேணுகா இரண்டாவது நாளும் மரணம் தேடிவராத மாணவியின் பெற்றோரிடம் நயமாகக் கூறினாள். மேக்கப் மேன் சுனில் பட் அதிகம் பேசாத குணம் உடையவனாதலால் தலையை மட்டும் ஆட்டி ரேணுகாவிற்குத் துணைநின்றான். எப்படியிருந்தாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் அவசரம்ங்கற தோரணை அவனது முகத்தில் ஓடியது.

    ”சொல்லப்போனா நேத்தே நாங்க வந்திருக்க வேண்டியது. எங்க துரதிர்ஷ்டம் என்ன நடந்துச்சுனு இன்னைக்குக் காலைலதா ஆபீஸ்க்கே தெரியுது. உடனே  நாங்க இங்க வர்றோம்.”

    ரேணுகா விளக்கினாள். அதற்குமேல் அவளுக்கொன்றும் சொல்வதற்கில்லை. தனது படபடக்கின்ற மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்து தனது பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தாள். ஆனால் மருத்துவமனைக்குள் புகைக்கலாமா என்ற சந்தேகத்தில் மீண்டும்  அதை பைக்குள்ளேயே வைத்தாள்.

    “டோன்ட் கெட் எக்ஸைட்டடு. டேக் இட் ஈஸி” சுனில் மெல்லிய குரலில் கூறினான்.

    ”ஐ ஆம் ஆல்ரைட்” அவள் சிரிக்க முயற்சித்தாள்

    சென்ட் தேரேசாஸ் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாவது மாடியிலிருந்து ஸ்ராவணி குதித்தது மிகக்கொடுமையான விஷயம் என்றாலும் இரண்டாவது நாளாகியும் மரணம் அவளைத்தேடி வரவில்லை. ஃபினோயில் வாசமுள்ள வழிகள், படிக்கட்டுகள் வராந்தா, மொட்டைமாடி என எங்காவது மரணம் பதுங்கி நின்றுகொண்டிருக்கும். இல்லை நிறம் மங்கின ஜன்னலுக்கருகில் நிலத்தைத்தொடாமல் வாயுவில் கலந்து ஜன்னல் கம்பிகள் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டிருக்கும். விழுந்து நொறுங்கிய பல பாகங்களையும் சேர்த்து வைத்துத் துணியால் மூடப்பட்ட ஒரு மண்பொம்மை போல கிடக்கிறாள்.

    பளீரென  ஓர்  ஒளி கண்களில்  பட்டபோது அவள் நெளிந்துகொண்டு கண்களைத் திறந்தாள். ஆனால் பாதி திறந்த கண்கள்  வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல்  மூடவேண்டியிருந்தது.

    “கட்”- ரேணுகா கூறினாள்.

    சென்ட் தேரேசாஸ் ஹைஸ்கூலின் தரைத்தளத்தில் உள்ள ஆபீஸ் அறையிலிருந்து சிஸ்டர் மெர்சிலின் மிருதுவான இருக்கையிலிருந்து மேக்கப்மேன் சுனில்பட்டைப்  பார்த்தார்.

    ”ஓ.கே”- சுனில் கூறினான்

    ரேணுகா கேமராவின் ஒரு பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு சிஸ்டர் மெர்சிலினிடம் பேசத்தொடங்குமாறு கை அசைத்துக் கூறினாள்.

    “ஸ்ராவணி, யெஸ் ஐ ரிமம்பர்…… அவள் மார்க்ஷீட் வாங்க தனியாகத்தான் வந்தாள். சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பினும்  இங்க  எம்முன்னாடி உட்கார்ந்து சில ரெஜிஸ்டர்கள சரி செய்திட்டிருந்தாங்க. அப்போதுதான் ஸ்ராவணி வந்தா”

    ஸ்ராவணி அறைக்குள் ஏறிவந்தபோது சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பனும் ஒரு நிமிடம் முகமுயர்த்தி அவளைப் பார்த்தனர். சிஸ்டர் இடா அவளுக்கு பௌதீக ஆசிரியர். வரலாற்று ஆசிரியர் க்ரிஸ்பின். முகபாவத்தில் எந்த மாற்றமும்  இல்லாமல் அவளைப் பார்த்தனர். இருவரும் தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். அவள் சிஸ்டர் மெர்சிலினுக்கு அருகில் நின்றாள். அவளுடைய முகத்தில் தயக்கம் தெளிவாகத்  தென்பட்டது.

    ”நீ இந்த முறையும் பாஸ் பண்ணல. இந்த மார்க்ஷீட்ட எடுத்திட்டுப்போய் பேரன்ஸ்கிட்ட காட்டு. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.” சிஸ்டர் மெர்சிலின் கூறினாள்

    சிஸ்டர் இடாவும் சிஸ்டர் க்ரிஸ்பினும் வேலைக்கிடையில் மெதுவாக  சிரித்தனர்.

    ’யூனிஃபாமும் புத்தகமும், ஷூஸும் எல்லாம் வாங்கி இங்க அனுப்பும்போது  மனசில என்ன நெனச்சீங்கனு அவங்ககிட்ட கேட்கணும். சிஸ்டர் மெர்சிலின்  மார்க் சீட்டை ஸ்ராவணிக்கு நேராக நீட்டினாள். அவள் மார்க் சீட்டை வாங்கிய உடனே சிஸ்டர்  காலிங் பெல்லில் விரல் அமர்த்தினார்.

    ஸ்ராவணி வெளியேறினாள். அடுத்த சுற்று தெல்மா ஜோர்ஜினுடையது. பிறகு மேகாஜெயின். அதுக்கப்புறம் பவ்யலட்சுமி, அவளுக்குப்பிறகு ராகேஸ்வரி. அடுத்தது நேஹா மைத்ரா. பிறகு அனுஸ்ரீ கிட்வானி  பிறகு டெல்னாஸ்  ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுமிகளின் நீண்ட வரிசை அவர்களுக்கு பக்கத்து வழியாக ஸ்ராவணி நடந்தாள்.

    ”இதுதான்  ஸ்ராவணியோட மார்க் சீட் ” ரேணுகா கேமராவின் நேராக அதை உயர்த்திப்பிடித்தாள். அடுத்தடுத்து கீழ்கீழாக குறிக்கப்பட்ட எண்களின் மேல் கேமராவின் நுண்ணியக்காட்சிப் படர்ந்தது. ரேணுகா மார்க் சீட்டின் மறுபக்கத்தைக் காட்டினாள். அங்கே எண்களில்லை. சில வார்த்தைகள். வித்தியாசமான ஒரு மன்னிப்புக்கடிதம். அதற்குக்கீழ் ’உங்களுக்கு சொந்தமான ஸ்ராவணி’

    ”நா  அவளோட அப்பா…….”

    அவர் ரேணுகாவின் முகத்தைப்பார்த்துக் கூறினார். கூட்டமான ஒரு தெரு வழியாக அவர் மூச்சு வாங்க ஓடினார். பலரும் இடித்துக்கொண்டு ஓடியதால் அவருடைய ஓட்டம் தடைபட்டது. சில வாகனங்கள் அவருக்கு அருகில் வந்து திடீரென பிரேக்கிட்டு நின்றன.  ஃபோன் சத்தங்கள் முழங்கின. வித்தியாசமான ஒரு போட்டிக்கிடையில்  மதம் பிடித்த குதிரையைப்போல அவர் பாய்ந்தார்.

    ’வித்யா மந்திர் ஹயர் செகன்ட்ரி’ பள்ளியில் பிரின்ஸிபல் அருணா தேசாய் ரிஸீவரைக் கீழேவைத்துத் தனக்கு முன்னால் உள்ள ஆங்கில ஆசிரியரான சாகரிடம் கூறினார்.

    ”சென் தேரேசாசில் ஒரு சிறுமி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். அந்த குண்டு சிஸ்டரோட அகம்பாவம் இனி  கொஞ்சம் குறையும். அவ வெளியில என்ன  சமாதானம்  சொல்லுவாள்

    ”நம்மை தோற்கடிக்கக் கிடைக்கற ஒரு வாய்ப்பையும் சென்ட் தரேசாஸ் வீணாக்கனதில்ல” சாகர் ஞாபகப்படுத்தினான்.

    ஆ……….மா……….

    ”இத நமக்கு பெரிசு பண்ணனும்”

    ”இப்ப நாம இதைப் பெரிசாக்கணும்”

    ”நம்ம சிஸ்டர் மேர்சிலினை இப்பவே போய் பாக்கலாம்”

    சில நிமிடங்கள் கழிந்து அருணா  தேசாவும், சாகரும் கிளம்பினர். அருணாதான் கார் ஓட்டினாள். சாகர் இடதுபக்கம் உட்கார்ந்தான். கார் சென்ட்தெரேசஸை இலட்சியமிட்டு அதிவேகமாகச் சென்றது.

    சிஸ்டர் மேர்சிலினாவின் முகம் திடீரென இனம் புரியாமல் இருண்டது. பார்க்க வந்தவர்கள் கதவுக்கருகில் நின்றனர்.

    அருணாதேசாவும் சாகரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு வரவேற்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற சிந்தையைப் பங்கிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

    ”ரொம்ப சங்கடமா இருக்கு சிஸ்டர் மேர்சலின்” – அருணா தேசாயி கூறினாள்

    சிஸ்டர் மேர்சிலின் மனதில் ஒரு முணுமுணுப்பு மேலிட்டது. ’தேவிடிச்சி சங்கடமா இருக்குதாமா’

    ”உட்காருங்க!…….”. மனதின் முணுமுணுப்பை அடக்கிக்கொண்டு உபச்சாரப்பூர்வமாக சிஸ்டர் மேர்சிலின் கூறினாள்.

    ”அருணாவும்  சாகரும் திடீர்னு இங்கெ!!!!!……”

    ”குழந்தைங்க இப்படி அவங்களப்பத்தி ஓர் உணர்வில்லாமப்  பழகினா நாம என்ன செய்யமுடியும்? சமூகம் நம்மைத்தானே  குத்தஞ்சொல்லும்.”

    சிஸ்டர் மேர்சிலானாவின் மனது மறுபடியும் சகிக்கமுடியாமல் புலம்பியது. ’காமப்பிசாசு. அழுக்கு   டிச்சிலிருக்கற புழு, மூதேவி.’

    ’ஆமா’- சிஸ்டர் மேர்சிலினா  ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய் கூறினாள்.

    ”இனி இப்போ  பேப்பர்காரங்க இத ஊதி பெரிசு பண்ணுவாங்களே அதுதா பிரச்சனை”.  சாகர்  சுட்டினான்.

    ”டி.வி.காரங்க சும்மா இருப்பாங்களா? ”அருணா கேட்டாள்.

    ரேணுகா, சுனில் பட்டின் காதுகளில் ஏதோ கூறினாள். சுனில் கேமரா ஆஃப் செய்தான். அந்த நிகழ்வின் இறுதியில் ஸ்ராவணி கண்கள் மூடிக்கிடந்தாள்.

    ஒரு முழக்கம் கேட்கிறதே அவள் செவிமடுத்தாள். கடல் அலைகள். கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு நேராக உயர்ந்து வீசி பலவகை நீர்க்கைகளாக அவை வாயுவில் கலந்தன. எல்லைக்கருகில் நிற்கிறவர்கள் ஆரவாரம் செய்தனர். மின்சார விளக்குகளின் ஒளியில் நீர்க்கரங்கள் மின்னியது. ஸ்ராவணி தம்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  பின்னால் நகர்ந்தாள்.

    அப்போது கறுப்பு நிறக் கோட்டும் பெரிய தொப்பியும் வைத்த ஒருவன் இருட்டிலிருந்து அவளுடைய முன்னால் வந்தான். தோளில் மாட்டின பையிலிருந்து ஒரு கத்தி எடுத்து அவன் தனது கழுத்தில் குத்தினான். ஸ்ராவணி பயந்து சத்தமிடத்தொடங்கினாள். அவனின் கை அசைந்தது. கைப்பிடிவரைத் தாழ்ந்து இறங்கிய கத்தி மறுபடியும் வெளியில் நீண்டு வந்தது. அவன் சிரித்தான். இரண்டு பன்றிகள் போல இருந்தது. ட்ராகுலாவின் முகமாயிருந்தது அவனுக்கு. ஸ்ராவணி அடக்கிப்பிடித்த சத்தத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் தனது செயற்கைப் பற்களை கைகளில் உமிழ்ந்துவிட்டு சத்தமாக சிரித்தான்

    . ஹ……..ஹ….ஹ….ஹ…….

    ”ஸ்டார்ட்” ரேணுகா கூறினாள்

    சுனில் கேமரா ஆன் செய்தான்.

    மாறுவேடக்காரனுடைய சிரிப்பு ஸ்ராவணியின் காதுகளில் முழங்கிக்கொண்டிருந்தது.

    Share
  • அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    யசோதா அவசர அவசரமாக மூன்று டிஃபன் பாக்ஸிலும் எலுமிச்சம்பழ சாதத்தைப் போட்டாள். உருளைக்கிழங்கு வறுவல், சின்னவன் சேதுவிற்கு காரமில்லாமல் தனியாக, பெரியவன் குமாருக்கு பெப்பர் போட்டு மொறுமொறுவென்று, கணவன் கணேசுக்கு ரொம்ப வறுக்காமல் மிருதுவாக. பொரியல் டப்பாவை நிரப்பினாள். சுடுதண்ணீர் வைத்து மூன்று பாட்டில்களிலும் ஊற்றினாள். மூன்று லஞ்ச் பேக் ரெடி. கணேஷ் இருவரையும் ஸ்கூலில் இறக்கிவிட்டு பிறகுதான் வாடகை எடுக்க வேண்டும். பெரியவன் குமாரின் பத்தாம் வகுப்பு பி ப்ளாக் ஒருபக்கம், சேதுவின் மூன்றாம் வகுப்பு இ ப்ளாக் ஒருபக்கம். பெரியவன் தனியாக போய்க் கொள்வான். சின்னவன வகுப்பு வாசல் வரை கொண்டுபோய் விடவேண்டும். ஆம்னி வேன் இ.எம்.ஐயில் வாங்கினது இது ஒரு சௌகர்யம். தனது பிள்ளைகளை கூட்டிட்டு வர்ற அதே வழியில் அதே பள்ளியில் படிக்கும் மேலும் இரண்டு மாணவிகள் வண்டியில் வருவார்கள்.  ஒருத்தி 3-ம் வகுப்பு சேதுவின் க்ளாஸ் மற்றொருத்தி ஏழாம் வகுப்பு.

    அவசர அவசரமாக மூவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தனர். அவர்கள் சென்ற பிறகு யசோதா ஐந்து நிமிடம் உட்காருவாள். டீயைக்குடித்து விட்டு மறுபடியும் வேலை தொடங்குவாள். முதலில் பாத்திரம் கழுவி, வீட்டை ஒதுக்கி, வீடு கூட்டி துடைத்து, சாப்பிட உட்காருவதற்குள் மணி 10.00  ஆகிவிடும். காலை டிஃபன் சாப்பிடுவாள். டி.வி.ல பாட்டு மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வெளியில் வைத்திருக்கும் ரோசாச்செடி, கொய்யாமரம் சாமந்தி செடிக்கடியில் ஏதாவது செய்துவிட்டு இரண்டு பக்கெட் துணியை எடுத்துக்கொண்டு துவைக்கச்செல்வாள். துவைத்து விட்டு அவள் குளித்து வருவதற்குள் மணி 12.00 ஆகிவிடும். ஒரு மணிவரை ஓய்வு. ஒன்று வீட்டில் உள்ள ஏதாவது கிழிந்த தலையணைக் கவர், இல்லை துணிகளை தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை ஏதாவது அறையை சுத்தம் செய்வாள். எப்போதாவது பக்கத்து வீட்டு கீதாவிடம் போய் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருவாள். பல நாட்களில் கணவனின் வண்டி வாடகை வீட்டுப்பக்கம் வந்தால் மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்வான். சாப்பிட்டபிறகு காய்ந்த துணிகளை எடுத்து மடக்கிவைத்து இரவு டிஃபனுக்கு ரெடி செய்வதற்குள் பசங்க ஸ்கூலில இருந்து வந்திருவாங்க. அப்புறம் அவங்களுக்கு பால் கலக்கிக் கொடுத்து சாப்பிட ஏதாவது வைத்துவிட்டு, கொண்டுசென்ற லஞ்ச் பாக்ஸெல்லாம் கழுவிவிட்டு சின்னவனுடன் கொஞ்சநேரம் பாடம் சொல்லிகொடுக்க உட்காருவாள். பெரியவன் டியூசன் போறதால அந்த வேல இல்ல. நைட் டிஃபன் வேல முடிஞ்சதும் அடுத்தநாள் சமையலுக்கான வெங்காயம் காய்கறிகளை எல்லாம் தோல் எடுத்து வைப்பாள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி ஆட்டற வேலயும் இருக்கும். எல்லாம் முடிந்து படுக்கப்போவதற்குள் மணி 10.30 ஆகிவிடும். இதுதான் அவளது அன்றாட ஓட்டம். ஆனால் பேரு ஹெளஸ் வைஃப்.

    செவ்வாய் கிழமை

    வழக்கம்போல காலை சாப்பிட்டுவிட்டு துணி துவைக்க பக்கெட்டை எடுத்து வைத்துக்கொணடிருந்தாள். வீட்டு வாசலில் பைக் சத்தம் அவர்கள் குடியிருக்கும் தெருவில் ஆங்காங்கே சில வீடுகள்தான் இருக்கும் பகல்பொழுது பெரிதாக நடமாட்டமிருக்காது. ஹெல்மெட்டை கழட்டினபிறகுதான் தெரிந்தது வந்திருப்பது நிஷாந்த் என்று. நிஷாந்த் யசோதாவின் அக்கா குமுதாவின் பையன். காலேஜ் முடித்துவிட்டு சொந்தாமாக வர்க்ஷாப் வைத்திருக்கிறான். அக்கா குமுதாவிற்கு கவர்ன்மென்ட் ஆபீஸில் கிளர்க் வேலை. நிஷாந்திற்கு ஒரேஒரு தங்கை ஜோதி. இவனுக்கும் அவளுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். யசோதாவை அம்மா என்றுதான் கூப்பிடுவான் . குமுதாவை மம்மி என்று அழைப்பான்.

    ”வாடா என்ன இந்தப்பக்கம். திடீர்னு.”

    ”ஒண்ணுமில்லம்மா வர்க்ஷாப்ல பெரிசா வேல இல்ல.  அதுதா…. உங்கள பாத்து ரொம்ப நாளாச்சே பாத்துட்டு போலாம்னு வந்தே”

    ”மெலிஞ்ச மாதிரி இருக்கீங்கம்மா. ஏம்மா உடம்பு ஏதும் சரியில்லையா….”

    ”போடா நானே வெயிட் போட்டிட்டேனு இருக்கேன். ”

    யசோதா பேரழகி இல்லையென்றாலும் நல்ல கட்டை தேகம். உயரத்திற்கேற்ற உடல்வாகு. பெரிய  கண்கள். சிறிய மூக்கு, பெரிய உதடுகள், திரண்ட மார்பு, பார்த்தால் இரண்டு பிள்ளைகள் பெற்றவள் போலிருக்கமாட்டாள்.

    ”சரி நீ உட்காரு. காபி போடவா? டீ போடவா?”

    ”இல்லம்மா காலைல சாப்பிடல. டிஃபன் ஏதாவது இருக்கா?”

    அவன் எப்போதும் யதார்த்தம்தான். சின்னம்மா வீடுதானே தயங்கமாட்டான்

    சரி இரு வர்றேன் துணியை சோப்புபொடியில் ஊறவைத்து விட்டு வந்து தோசை வார்த்துக்கொடுத்தாள்.

    ”உங்களோட உளுந்து சட்னி சாப்பிட்டு ரொம்பநாளாச்சும்மா”

    ”சரி சாப்பிட்டு இருடா. நா போயி குளிச்சிட்டு வந்திடறேன்.”

    ”ஏ இனியும் குளிக்கலயா. இல்லேனா காலலயே குளிச்சிருவீங்க.”

    ”இல்லடா இப்ப எல்லா வேல முடியறதுக்கே 12 மணி ஆயிடுது. அதுக்கப்பறந்தா குளிக்கறது. தினமும் இந்த நேரமாயிடும்.”

    ”சரி நீங்க போயி வேலய பாருங்கம்மா. நான் கொஞ்ச நேரமிருந்திட்டு கிளம்பிடுவே.”

    அவள் அவசர அவசரமாக துணிகளை துவைத்து காய போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தாள்.

    டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்த் எழுந்து

    ”சரிம்மா நான் கிளம்பறேன் என்றான். ”

    ”இருடா சாப்பிட்டு போலாம்”

    ”வேண்டாம்மா முடிஞ்சா நாளைக்கி வர்றேன்.”

    ”வர்றேனா முதலலேயே சொல்லுடா. ஏதாவது சிக்கன் கிக்கன் வாங்கி வெக்கறே.”

    ”அதெல்லாம் வேண்டாம்மா நேரம் கிடச்சா வர்றேன்.”

    புதன்கிழமை

    அடுத்தநாள் பசங்கள அனுப்பினதும். டயர்டா இருக்குனு யசோதா படுத்திட்டிருந்தா வண்டி சத்தம் கேட்டு வெளியில் பார்த்தா நிஷாந்த்

    ”வா….டா…..”

    ”உங்க கையால சிக்கன் வெச்சு தர்றேனு சொன்னீங்க. அதுதா மிஸ் பண்ண மனசுவரலம்மா. எங்க  வீட்ல இதெல்லா எங்க செய்றாங்க. எல்லா ஸ்விகிதா”

    ”ஐயோ நீ வர்றேனு உறுதியா சொல்லலயா வராம போயிடுவியோனு வாங்கலடா.”

    ”சரி பரவால்லம்மா ஒடம்ப பாத்துகோங்க. எனக்கு சங்கடமில்ல.” என்று டீ மட்டும் குடித்துவிட்டுச் சென்றான்.

    அன்றிரவு “ஏங்க நிஷாந்த் பாவம் சிக்கன் வெச்சிருப்பேன் சாப்பிடலாம்னு வந்தாங்க. பாவம் பைய ஏமாந்து போனா. அக்கா வேற கேம்ப்க்கு போயிருக்காளாம். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகுமாம். ஆசயா வந்திட்டு பைய சாப்பிடாம போனது சங்கட்டமா இருக்கு.”

    ”அதுக்கெதுக்கு இப்போ உட்கார்ந்து பெனாத்திட்டிருக்கே. நாளக்கி வாங்கி சமச்சு குடுத்திட்டா போச்சு. பேசாம தூங்கு. காலைல நானே வாங்கி குடுத்திட்டு போறேன்.”

    ”ம்ம்…….சரி”

    வியாழக்கிழமை

    ”ஹலோ நிஷாந்த்………. இன்னிக்கு வாப்பா இங்க வந்து சாப்பிடலாம். அவங்களுக்கு தக்காளி சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பீட்டே. இனிமே தா சிக்கன் வேல ஆரம்பிக்கணும்.”

    ”அந்த வேல மட்டும்தானம்மா. குளிக்கற வேல துணி தொவைக்கற வேல எல்லாம் முடிஞ்சுதா.”

    ”இல்லப்பா இனிமேதா……. ஏ எதுக்கு கேட்கற”

    ”இல்ல நா எப்போ வந்தாலும் நீங்க பிசியா இருக்கீங்க. எல்லா வேலயும் முடிச்சு ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசிட்டு போவேன். ”

    ”சரி நீ வா வர்றதுக்குள்ள முடிச்சர்றேன்.”

    அவன் வருவதற்குள் அவசரமாக சமைத்துவிட்டு, துணிதுவைத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவு சாத்தினதும் வண்டி சத்தம் கேட்டது. அவர்களது பாத்ரூம் வீட்டிற்குள் இல்லை. வெளியில் தான் உள்ளது. 5சென்ட் இடத்தில் ஒவ்வொரு அறையாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலும் சமையலறையும் எக்ஸ்ட்ரா ஒரு ரூமும் கட்டி குடி வந்துவிட்டார்கள். காசு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கட்டிக்கொள்ளலாம் என்பதுத் திட்டம். எனவே பாத்ரூம் வெளியிலிருந்தது.

    வண்டி சத்தம் கேட்டதும்

    ”நிஷாந்த்……….. டி.வி போட்டு பாத்திட்டிரு இதோ ரெண்டு நிமிஷத்தில வந்தர்றே.” என்று பாத்ரூமிற்குள்ளிருந்து சத்தமிட்டாள் யசோதா

    ”சரிம்மா மெதுவா வாங்க” என்று டி.வில பாட்டு போட்டு உட்கார்ந்தான்.

    பாட்டு சத்தம் பாத்ரூம் வரை கேட்டது.

    திடீரென பாத்ரூம் கதவோரம் யாரோ ஓடுவது போல தோன்றியது யசோதாவிற்கு.

    வேக வேகமாக பாத்ரூம் கதவை  தாழிட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா. நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

    நிஷாந்த் உங்கூட யாராவது வந்தாங்களா?

    இல்லயே…. ஏம்மா

    இல்ல யாரோ இந்தப் பக்கம் போர்ற மாதிரி சத்தம் கேட்டுது. அதுதா கேட்டேன். அவன் சீக்கிரம் தனது வண்டி அங்கிருக்கா என்று வெளியில் வந்து பார்த்தான்

    அப்பாடா….சாவி வண்டிலேயே இருந்தது ஓடிப்போய் எடுத்து வந்தான்.

    இங்க யாரும்மா ஓடறா. உங்க பிரம்மையா இருக்கும். பகலிலே யாராவது வீடு புகுந்து கொண்ணு போட்டாக்கூட அக்கம்பக்கத்தில யாருக்கும் தெரியாது. இங்க யாரு வர்றா. நான்தா இங்கேயே உட்காந்திட்டிருக்கறனே.

    ஒரு வேள பேய் நடமாட்டம் ஏதாவது இருக்குமோ. ஏதோ யோசித்து விட்டவள் போல சரி வா…… சாப்பாடு போடறேன் என்று சோறு போட்டாள்.

    வயிறு நிறைய சிக்கனும் முட்டையும் தின்றுவிட்டு

    ”கைப்பக்குவம் மாறவே இல்லம்மா……. சூப்பர் லஞ்ச். சரிம்மா வர்க்ஷாப்ல ஒரு பையன உட்கார வெச்சிட்டு வந்திருக்கே. நான் போய் அவன சாப்பிட அனுப்பணும் என்று கிளம்பிவிட்டான்.

    யசோதா ஏதோ குழப்பத்துடன் வேலையைத் தொடர்ந்தாள்

    வெள்ளிக்கிழமை

    இன்றும் நிஷாந்த் சாப்பாட்டிற்கு வருவான் என்று தெரியும். அம்மா ஊரில் இல்லையென்றால் அவள் தங்கை ஏதாவது செய்து ஒப்பேத்திக்கொள்வாள். இவனுக்கு வக்கனையா வேணும்னு குமுதா திட்டிக்கொண்டே இருப்பாள்.

    அன்று என்றும் விட முன்னதாகவே அவள் வேலை முடித்து 11 மணிக்கே குளிக்கப்போனாள். நிஷாந்தின் வண்டி சத்தம்.

    ”நல்ல வேளை ப்பா குளிக்கப்போக பயந்திட்டே இருந்தே. நீ வந்தே”

    ”ஐயோ அம்மா இந்த வயசிலயுமா பயப்படுவீங்க. போங்க நா இங்க வெளியிலேயே உட்கார்ந்திருக்கே. யாரு வர்றாங்கணு பாக்கறே. ”

    ”யசோதா குளித்து முடிக்கும்போது அதேபோல ஓடும் சத்தம் கேட்டது.”

    ”டேய் இங்கதான உட்காந்திட்டிருந்த இன்னக்கி ஓடற சத்தம் கேட்டிச்சில்ல.”

    ”ம்மா… இங்கேயேதா இருக்கறே. எனக்கு ஒரு சத்தமும் கேட்கல.”

    ”நீ ஃபோன பாத்திட்டு உட்காந்திட்டிருந்தா எப்படி கேட்கும். எனக்கு நல்லா கேட்டிச்சு.”

    ”ம்மா பசிக்குது. ஏதாவது தர்றீங்களா. ”

    ”சரிடா வா.சாப்பிடு”

    நிஷாந்த் கிளம்பினதும் யசோதா பயந்துபோய் கதவை சாத்திக்கொண்டு கீதா வீட்டிற்குக் கிளம்பினாள்.

    சனிக்கிழமை

    அடுத்தநாள் காலைல குளிக்கற டைமிங்க மாத்திட்டு கீதா சொன்னமாதிரி பாத்ரூமுக்குள் போனாள். அன்றைக்கு காலைல டிஃபனுக்கே நிஷாந்த் வந்திருந்தான். அவனுக்கு தோசை சுட்டு கொடுத்துவிட்டு குளிக்கப்போனாள். அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

    பாத்ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டு, போட்டிருந்த நைட்டியை கழட்டி வேற நைட்டியை அவசரமாக எடுத்து போட்டாள். மெதுவாக குளிப்பது போல தண்ணீரை மொந்து மொந்து கீழே ஊற்றினாள். தண்ணீரை ஊற்றிக்கொண்டே சுற்றிலும் கண்பார்வையை ஓடவிட்டாள். திக்கென்று ஆனது. பாத்ரூம் சுவர் மேல்புறத்திற்கும் கூரைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ரெட்கலர் ரெட்மி ஃபோன் ஒன்று, தான் குளிப்பதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சத்தம் போடவேண்டும் என்றிருந்தது. வாயை பொத்திக்கொண்டு பதட்டப்படாமல் தண்ணீரை எடுத்து எடுத்து ஊற்றினாள். கொஞ்சநேரம் கழித்து தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தினதும் மெதுவாக ஃபோன் கை கீழே இறங்கியது.

    உள்ளே வந்தவள் நிஷாந்திடம் சொல்லலாம் என்று நினைத்தாள். வேண்டாம் மகனிடம் எப்படி? என்ன நினைப்பான்?

    கிச்சனில் நின்று அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். நிஷாந்த் தண்ணிகுடிக்க சமையலறைக்கு வந்தவன் தண்ணீர் குடித்துவிட்டு ஃபோனை திட்டிலேயே வைத்துவிட்டு போய்விட்டான். கறுப்பு நிற சாம்சங்க் ஃபோன். அப்போ ரெட்கலர் ரெட்மி இல்ல.

    கணவனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறலாம் என்று ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டே யாரிடமோ பேசுகின்ற சத்தம் கேட்டது. கிச்சனில் பார்த்தாள் அவனது ஃபோன் அங்கேயே இருந்தது. அப்போ அவன் யார்கிட்ட பேசுறான். எட்டிப்பார்த்தாள். நிஷாந்த் கையில் அதே ரெட்கலர் ரெட்மி. ஒரு நிமிடம் இதயம் நிற்பது போலிருந்தது. அடக்கிக்கொண்டு மெதுவாக வெளியில் வந்து கதவை வெளியிலிருந்து தாழிட்டாள். சிறிது தூரம் வந்து கணவனுக்கு ஃபோன் செய்தாள்.

    அவன் உடனே வந்தான். நடந்ததை கூறினாள். அவனுக்கு கொஞ்சம் கூட நிஷாந்த் மேல் சந்தேகம் வரவில்லை. ஆதாரமில்லாம எப்படி கையாள்வது யோசித்தான்.

    ”என்ன சித்தப்பா இந்த நேரத்துக்கு”

    ”இந்தப்பக்கம் வாடக வந்துச்சு. சரி ஒரு டீ குடிச்சிட்டு போலாம்னு வந்தே. நீ கிளம்பிட்டியா.”

    ”ஆமா சித்தப்பா ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திட்டு கிளம்பிடுவேன்.”

    ”ஃபோன வண்டில வெச்சிட்டேன்.. ஒரு நிமிஷம் ஃபோன குடு. ஒருத்தங்க இந்த நம்பருக்குக் கூப்பிடசொன்னாங்கணு கூறி ஒரு பேப்பரை கையிலெடுத்தான்”

    நிஷாந்த் திடீரென்று தெரியாம ரெட்கலர் ரெட்மியை எடுத்து நீட்டினான். கிச்சனில் வைத்த ஃபோனை மறந்தே போய்விட்டான். கொடுத்தபிறகுதான் கவனித்தான்.

    ”சரி ஃபோன் பேசிட்டு தந்திருவாரு” என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

    டப்பென்று ஃபோனை கட்பண்ணிவிட்டு கேலரியை பார்த்தான் கணேசன். அதில் யசோதா குளிக்கும் வீடியோ இருந்தது.

    அவள் குளிக்கவில்லை. ஆடையுடன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்

    நாடி நரம்பெல்லாம் துடித்தது. இரண்டு மூன்று நாளா அவ சொல்லிட்டிருக்காளே. அப்போ இவன் குளிக்கறத வீடியோ எடுத்திருப்பானே. ஐயோ அவ சொன்னப்பவே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்.

    வெக்கு வெக்கென்று வீட்டிற்குள் போனான்.

    நிஷாந்தை செயரோடு சேர்த்து எட்டி ஒரு உதை.

    செயரோடு கீழே விழுந்தான்.

    ”என்னாச்சு சித்தப்பா”

    ”என்னடா இது என்று மொபைலை காட்டினான்.

    நகர்ந்து வந்து கணேசின் இருகால்களையும் கட்டிக்கொண்டான்.

    மன்னிச்சிடுங்க சித்தப்பா

    என்ன காரியம்டா செஞ்சிருக்கே. அவ உனக்கு அம்மாடா

    யசோதா வாயை பொத்தி நின்று அழுது கொண்டிருந்தாள்.

    ”நா தப்பான கண்ணோட்டத்தில எடுக்கல சித்தப்பா என்ன நம்புங்க. ஃப்ரண்டஸ்தா சித்தப்பா. யு ட்யூப்ல போட கேட்டாங்க. வீடியோ குடுத்தா காசு தர்றேனு சொன்னாங்க சித்தப்பா. நம்புங்க ப்ளீஸ்……..

    ”அதுக்கு என்ன கார்யம்டா பண்ணி வெச்சிருக்கே”

    என்ன மன்னிச்சிடுங்கம்மா என்று யசோதாவின் கால்களை ஓடிவந்து கட்டிப்பிடித்தான்.

    அவள் எதுவும் பேசவில்லை

    கணேசன் பெல்ட்டை உருவி சரமாரியாக அடித்தான்

    நகர்ந்து நகர்ந்து சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே உட்கார்ந்தான்

    உன் தங்கச்சியையும் அம்மாவையும் இப்படிதா வீடியோ எடுப்பியாடா. மகனப் போல நினச்சிருக்காளேடா…. எப்படிடா மனசு வந்துது.

    என்ன மன்னிச்சிடுங்க சித்தப்பா

    போடா நாயே வெளில…….. இனிமே இந்தப்பக்கமே தல வெச்சு படுக்காத

    ஃபோனையும், சிம்கார்டையும் சுக்கு நூறாக உடைத்தான்.

    ”ப்ளீஸ் சித்தப்பா மன்னிச்சிடுங்க. மம்மிகிட்ட சொல்லிடாதீங்க. ப்ளீஸ் சித்தப்பா மம்மிக்கு தெரிஞ்சா என்ன உயிரோடயே விட மாட்டாங்க”

    ”ப்ளீஸ்……. ப்ளீஸ்…….

    ”கிளம்படா இங்கிருந்து நீ செஞ்ச கார்யத்துக்கு உன்னப் பாக்கறதே பாவம். முதல்ல வெளில போ.

    அழுதுகொண்டே வண்டியை ஸ்டார்ட்செய்தான். சத்தத்தை அந்தத்தெருவே வேடிக்கை பார்த்தது.

    அவனை விரட்டிவிட்டு உள்ளே வந்து பார்த்தான். யசோதா மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பினான்

    அவள் பித்துப்பிடித்தவள் போல ஓரிடத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தாள். ”ஏங்க இப்படியெல்லா…………………………………. நா என்னங்க தப்பு செஞ்…….சே”

    ”ஒண்ணுமில்ல. அவன் வீடியோவ பாத்தே அப்படியொண்ணுமில்ல. ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்திடு.”

    ”இல்லங்க ஊர்க்காரங்க தெரிஞ்சா நான்தா அவன இங்க வரவெச்சதா சொல்லுவாங்களே. என் நடத்தையதானே கேவலமா பேசும்.”

    ”ஊர்க்காரங்கள பத்தி கவலப்படாத. நம்ம வேலய பாப்போம்.”

    ”ஏங்க உங்களுக்கு எம்மேல கோபம் வரலியா. என் மேல சந்தேகமா இருக்கா.”

    ”போ போய் வேலயப்பாரு. பசங்க பாட்டி வீட்டில இருக்கறதும் நல்லதுதா. பசிக்குது ஏதாவது சாப்பிட எடுத்திட்டு வா.”

    ”இல்லீங்க எனக்கு………”

    ”இனிமே இதப்பத்தி பேசாதே. குமுதா வீட்டுக்கு வந்தரட்டும் அதுக்கப்பறம் என்ன பண்றதுனு யோசிக்கலாம்.”

    காபி போடப்போனவள் வெகு நேரமாகியும் வராததால் கிச்சனில் போய் பார்த்தால் மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்துப் பார்த்தான் எழவில்லை. மூச்சுவிட சிரமப்பட்டுகொண்டிருந்தாள்.

    யசோதாவை காரில் ஏற்றி உட்கார வைத்தான்.

    நேராக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்டினான்.

    டாக்டர் இவ வீட்டில தனியாதா இருக்கா. எதையோ பார்த்து பயந்திட்டானு நெனக்கறே திடீர்னு ஃபோன் பண்ணி வரச் சொன்னா.

    பரிசோதித்த டாக்டர் ஒண்ணுமில்ல நல்லா தூங்கி எழுந்திருச்சா சரியாயிடும். ஒரு ரெண்டு பாட்டில் ட்ரிப்ஸ் போட்டிட்டு கூட்டிட்டுப் போய்க்கோங்க. ரொம்ப டயர்டா இருக்காங்க. தூக்க மருந்து போட்டிருக்கே.  பயப்பட ஒண்ணுமில்ல.

    அட்மிட் பண்ணி  ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது

    நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்

    கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    ”ஏங்க சார் எதையோ நினைத்து வருத்தப்படறமாதிரி தெரியுது.” என்றார் டாக்டர்

    ஒண்ணுமில்ல டாக்டர். அவ அழுதிட்டு இருக்காளே அதுதா

    இட்ஸ் குயட் நேச்சுரல். ஓவர் டிப்ரஷனா இருக்காங்க அதனாலதா.

    அவன் சொல்லவும் முடியாமல் தவித்தான்.

    ’இவளுக்கு எதுக்காக தூங்கும்போது கூட கண்ணீர் வருது. மகனா நெனச்சவன் இப்படி செஞ்சிட்டானேன்னு அழுகறாளா? யுட்யூப்ல எல்லாரும் பாத்திருப்பாங்கணு நெனச்சு வருத்தப்படறாளா?. ஊர்க்காரங்கள நெனச்சு கவலப்படறாளா? இல்ல என்னை யோசிக்கறாளா?

    மருந்தின் வீர்யம் இமைகளை மயக்கி. எண்ணங்களை உறக்கியது. ஆழ்மன நினைவலைகளை உறங்க வைக்க முடியவில்லை.

    ஆறுதல்களால் ஆறாத ரணமாக அவள் மனது வலித்தது. நன்றாக மயங்கிய போதும் கண்ணீர் நிற்கவில்லை

    பெண்களின் சில ஆழ் மன உணர்வுகளுக்கும் மௌனமான கண்ணீருக்கும் யாராலும் ஆறுதல் கூறமுடியாது.

    Share
  • கன்னிராசி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    கன்னிராசி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ஒரு வேதியியல் மாணவியான எஸ். மாயாவுக்குப் புவியியலிலும் விருப்பம் இருந்தது. அவள் கரும்பனைகளுக்கு நடுவில் கிழக்காகப் பாய்ந்து செல்லும் பேருந்திலிருந்து வெளியில் கைநீட்டினாள். வெகுதொலைவில் இருண்ட நீல நிறத்தில் மலைகள். அவைகளின் பேரென்ன என்று அவள் உடனிருந்த வினோதிடம் கேட்டாள். ஆனால் அவனுக்கு சொல்ல முடியவில்லை. அவன் படித்தது வரலாறு.

    பஸ் சிவப்பு நிறக் கண்களுள்ள பெரிய  டைனோசரின் படத்திற்கு அருகில் நின்றது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மாயாவுக்கு ஒரு ஃபேன்டசிக்குள் அகப்பட்டது போலிருந்தது. ஆறேழு கிறிஸ்துவ சிஸ்டர்களும்  நூற்றுக்கணக்கான மாணவர்களும் அவளுக்கு முன்பாகக் கடந்து சென்றனர். சீருடை அணிந்த மாணவர்களுக்கிடையில் எங்கேயோ தானிருப்பதாக அவள் உணர்ந்தாள். ஒவ்வொரு மாணவிகளையும் அவள் உற்றுப் பார்த்தாள்.

    “வாங்க”.வினோத் கூறினான். அவன் பாதையைக் கடந்தான்

    மாயா அவனைப் பின்தொடர்ந்தாள்.

    அவர்கள் காற்றாடி மரங்கள் அடர்ந்து நிற்கின்ற ஒரு வழியில் நடந்தனர். நடுவழியின் இருபக்கங்களிலும் சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்டேஜுகள். அவைகளுக்குப்பின்னால் மரத்தில் கற்பூர மாங்காய் காய்த்திருந்தது. காற்றில், பழுத்த கற்பூர மாம்பழங்களின் வாசம். மிகத்தொலைவிலல்லாமல் பள்ளி மணியின் முழக்கம், மாயா அதற்கு செவிமடுத்தாள். மறுபடியும் அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.

    கறுப்புநிற ஃபேண்டும்  வெள்ளைச்சட்டையுமணிந்த  ரூம்பாய்  வலதுபுறத்திலுள்ள நானூற்றி இருபதாம் எண்ணிட்ட காட்டேஜைத்  திறந்தான். அவன் முதலில் செய்த வேலை ஏர்கண்டிஷனை செயல்படச்செய்வதுதான். அதைத்தொடர்ந்து அறை முழுவதும் ஏதோ ஒரு சத்தம் நிறைந்தது.

    “மாயா  குளிக்கறியா?”. சூட்கேஸை கட்டில் மேல் கிடக்கும் கம்பளிப்போர்வைக்கு  மேல் வைத்துவிட்டு  வினோத்  கேட்டான்.

    ரூம் பாய் போகவில்லை. மாயாவுக்கு வினோதின் அநாகரீக விசாரணைப் பிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும் காட்டேஜூக்கு வருவதற்கு முன்பே அவள் குளிப்பதைப்பற்றி  சிந்தித்திருந்தாள். நீண்ட பயணம் முடிந்து வந்தது வேறு. மார்ச் மாதம் வேறு.

    “நான் குளிக்கப்போறேன்.” ரூம்பாய் வெளியில் போனதும் மாயா கூறினாள். அவள் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனாள். கதவுகள் சாத்தப்பட்டிருந்தாலும் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடிகள் வழியாக  வினோத் தன்னை ரசிக்கிறாள் என்பதை அறியாமல் அவள் ஷவருக்குக்கீழே நின்றாள்.

    மாயாவை நினைத்துக் கொண்டே வினோத் படுக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தான். அவளின் உடையில்லாத உடல் வழியாக நீர் வடிந்தது. அதன் ஓசையில் ஒரு பாட்டின் தாளமும் கலந்திருந்தது. “மெஹந்தி கி ராத் ஆயி. மெகந்தி கி ராத்…….”

    மாயா தெளிவான  ஒரு சிரிப்புடன் கதவைத் திறக்கும் போது வினோத் கதவிற்கு நேர் முன்பாக கைகள் நீட்டி நின்று கொண்டிருந்தான். அருமையான நீராடல் மூலம் கிடைத்த உற்சாகம் அவளுக்கு நொடியிடையில் நஷ்டமானது.

    “சே என்னது இது?” அவள் வினோதின் பிடிக்குள் இருந்துத் தன்னை விடுவித்தாள். அதே வேளை கதவைத்தட்டுகிற சத்தம் கேட்டது.

    ரூம்பாய்

    “நைட்டுக்கு என்ன வேணும் சார்?” அவன் பணிவுடன் கேட்டான்.

    “சப்பாத்தியும் சிக்கனும் போதும். ரேண்டு பீரும்” வினோத் கூறினான்.

    மாயா, வானத்தின் நீலநிற ஆடையை தனக்காகத் தேர்ந்தெடுத்தாள். மாலை நேர யாத்திரைக்கு மிகவும் சரியான வேடம் என்று வினோத் புகழ்ந்தான். இருவரும் மாலை நேரப் பாதையில் இறங்கினர். வண்ணவண்ண இறகுகள் வைத்தத் தொப்பிகள் அணிந்த பலச்சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்கு முன்னால் காட்சியளித்தனர்.

    அதே போன்று ஒரு தொப்பி தனக்கும் வேண்டுமென்று மாயா ஆசைப்பட்டாள். தாமதிக்காமல் அவளுடைய ஆசை நிறைவேறியது.

    “எப்படி இருக்கு?” அவள் தொப்பியை தலையில் அணிந்து வினோதிடம் கேட்டாள்.

    “வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்தவள்  போல” அவன் கூறினான்.

    “எர்ணாகுளத்திலிருக்கற ஹாஸ்டல மறந்தர்றலாம் இல்லயா?” மாயா சிரித்தாள். வினோத் அவளின் கன்னக்குழிகளை ரசித்தான். அவை உடனே மறைந்தன.

    ரோப்வேயில் செல்லும்போது எர்ணாகுளத்தில் உள்ள ஹாஸ்டலோ, கருணை மிகந்த குணமுடைய மேட்ரனோ, உடன் தங்கியிருப்பவர்களோ, ஒற்றப்பாலத்தில் உள்ள வீடோ, குடும்ப அங்கங்களோ மாயாவின் மனதில் இருக்கவில்லை. அவளுடைய வலது கைப்பத்தியை வினோத் சேர்த்துப்பிடித்திருந்தான். அவள் உற்சாகத்துடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். வினோத் அடிக்கடி அவளுடையக் கன்னங்களையும் பின்னங்கழுத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை தனது உடல் மேல் விழுவதை அவள் கவனிக்கவில்லை.  ஒரு சிறு சிறுமியின் ஆர்வத்தைப்போல அவள் தனக்குக் கீழே உள்ளக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லுமினேஷன் அவளுக்கு ஒரு புதிய அனுபவமானது.

    இரவு. ஆல்கஹாலைப் போன்ற வீர்யம் நிறைந்த பழுத்த கற்பூரமாம்பழத்தின் வாசனையை சுவாசித்துக்கொண்டு அன்வர் ஹுசைனும், சதானந்தனும் ஒரு காட்டேஜின் வெளியில் உட்கார்ந்திருந்தனர். காற்றாடி மரங்கள் அவர்களுக்கு முன் கிளைகளை அசைக்காமல் நின்றது.

    “அங்கே என்னமோ நடக்குது” அன்வர் ஹுசைன் நேர் எதிர்புறமுள்ள காட்டேஜிற்கு நேராக விரல் சுட்டிக்காட்டிக் கூறினான்.

    அறைக்குள் விளக்கு அணைக்கப்படவில்லை. ஆனால் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்புறமுள்ள அடர்ந்த திரைச்சீலைகள் அறையின் இரகசியங்களை நிலைநிறுத்தப் போதுமானதாக இருந்தன. அன்வர் ஹுசைனும், நண்பனும் சத்தம் போடாமல் காட்டேஜை நெருங்கினர். இருவரும் வராண்டாவிற்குச்சென்று கவனத்துடன் நின்றனர்.;

    “மாயா உனக்கென்னை நம்பிக்கையில்லயா?”

    “நம்பிக்கையில்லேன்னா நான் உங்கூட வருவனா?”

    “அப்பறம் இப்ப என்ன ஆச்சு?”

    “ஒன்னும் ஆகலயே”

    “இப்ப உன்னோட நடவடிக்க எனக்கு விசித்திரமா இருக்கு”

    “எனக்குத் தூக்கம் வருது”

    “சும்மா தூங்கறதுக்காகவா  நாம இவ்வளவு தூரம் வந்தோம்?”

    “நான் நெனச்சுது உங்கூட ஒரு பயணம் மட்டும்தான். எ ப்ளசன்ட் ட்ரிப்”

    “சும்மா வெளயாடறத விடு”

    “நா வெளயாடல”

    “மாயா ப்ளீஸ்”

    “வினோத்! நல்ல பையனாப் போய் தூங்கப்பாரு”

    “நா சொல்றதக் கொஞ்சம் கேளு”

    “இனி ஒன்னும் சொல்ல வேண்டாம்”

    “மாயா……..”

    “நோ……..”

    வெளியில் காதுகளைக் கூர்மையாக்கி நிற்கின்ற அன்வர் ஹுசைனுக்கும், சதானந்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. கொலுசுகள் போட்டக் கால்களை படுக்கையிலிட்டு அடித்துக் கொண்டிருந்தாள்.

    “பகவதி” அவள் விளித்தாள்

    “இந்த அறைக்கு யாரும் வரமாட்டங்க” வினோத் கூறினான்.

    “கடவுளே நான் எதுக்கு உங்ககூடவந்தேன்.” மாயா  விதும்பினாள்.

    அன்வர் ஹுசைனும் சதானந்தனும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆக்கிரமிப்பினுடையவும், எதிர்த்து நிற்பதினுடையவும் ஓசைகள் அவர்களின் காதுகளில் பதிந்து கொண்டிருந்தன. பிறகு நிசப்தத்தின் ஓர் இடைவேளை. வெளியில் நிற்பவர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது.

    “நான் நெனச்சது நாம விரும்பறோமுன்னு” மாயா கூறினாள்.

    ”அதுதானே உண்மை.” வினோத் கூறினான்.

    “ஆனா நீங்க என்ன, ரேப் செய்ய முயற்சிக்கறீங்களே. எதுக்கு?”

    “நீ ஒத்துக்கறதில்லயே”

    “நான் இத எதிர்பார்க்கல”

    “நீ என்னோட பொறுமைய சோதிக்கற”

    “கை வலிக்குது”

    “வலிக்கட்டும்”

    “விடு”

    அன்வர் ஹுசைன், சதானந்தனின் தோளைத் தொட்டு ஒரு சைகைக் காட்டினான். இருவரும் சேர்ந்து ஆலோசிப்பதற்காக நடுவழியில் இறங்கி நின்றனர்.

    “கதவத் தட்டலாமா?” அடக்கிப்பிடித்தக் குரலில்  அன்வர் ஹுசைன் கேட்டான்.

    “அது வேணுமா?” சதானந்திற்கு சந்தேகமாயிற்று.

    “அப்படீனா போலீஸ்க்கு ஃபோன் பண்ணலாம்”

    “பேப்பர்ல செய்தி வந்தா அந்தப்பொண்ணு  அப்பறம்  உயிரோட  இருக்கமாட்டா”

    “வேறென்ன செய்றது”

    “நா இப்பவே எறங்கிப்போயிடுவேன்” காட்டேஜிற்குள்ளிருந்து பெண்ணின் சத்தம் உயர்ந்தது.

    “இந்த இரவிலயா” அவன் கேட்டான்.

    அன்வர் ஹுசைன் என்னமோ சொல்லத் தொடங்கினான்.

    “ஷ்…..ஷ்….. சதானந்தன் அவனைத் தடுத்தான். காட்டேஜின் கதவைப்பார்த்துக்கொண்டு அவர்கள் காற்றாடி மரங்களுக்கு நடுவில் இரண்டு சிலைகள் போல நின்றனர்.

    Share
  • தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    மருங்கர்

    மார்கழி மாதம் முடிந்து, கல்யாண சீசன் தொடங்கிவிட்டாலும், சென்னை மாநகரம் அன்று கடும் குளிரில் சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது. ஒரு அலுவலகத்தின் முன் நன்கு பரந்து விரிந்த வராண்டா. அங்கே கிட்டத்தட்ட 20 பெண்கள் வட்டமாகக் குழுமி இருந்தனர். அவர்களுக்கு நடுவில், ஒரு கை வேக வேகமாய், சற்று நெளிவு சுழிவுகளோடு கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.  அந்தக் கை கோலம் போட்டவாறே,

    “நீங்க எப்போதும்  போடுற கோலம் போல இல்லாம, இந்தக் கோலத்துக்கு  எட்டாவது புள்ளியிலேயே  இப்படி வளைச்சுத்  திருப்பணும்” என்று பல விதமான குறிப்புகளைச் சொல்லியவாறே, அந்தக் கை  கோலத்தைப்  போட்டு முடித்தது. கொரோனா என்ற அரக்கனை,  தடுப்பு ஊசி மூலம் வெல்வது போன்ற ஒரு காட்சி அமைப்பு. அருகில் ஒரு அரசியல் அமைப்பின் கட்சிக் கொடியுடன் அதன் தலைவரது படம்.

    “மீனா, இந்தக் கொரோனா உருவத்தைச் சிவப்பு நிற பூவாலையும், தடுப்பூசியைப் பச்சை நிறப் பூவாலையும் அலங்கரியுங்கள். மணல் சிற்பம் போல 3டீ எபக்ட் தரணும்.” அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கோலம் போட்ட அந்த உருவம் எழுந்து நின்றது. சுற்றி இருந்த அனைத்துப் பெண்களும் ஒரே சமயத்தில் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

    “சூப்பர் சார்! அப்படியே கலர் பிரிண்ட் போட்ட மாதிரி இருக்கு!” என்றாள் மீனா.

    ராதாகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “நான் சொல்லிக் கொடுத்தாலும், அதை நீங்க கரெக்டா செய்யணும் இல்ல! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. எம்.பி. வீட்டுக் கல்யாணம். வேலையில ரொம்ப கவனமா இருங்க” எனச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

    ராதாகிருஷ்ணன் இயற்பெயர் ரவி. பிறந்து ஐந்து வயது வரை நடக்கவில்லை. ஏன், எழுந்து கூட நின்றதில்லை. அவரது அம்மா கஸ்தூரி செல்லாத கோயிலோ, டாக்டரோ  இல்லை. ரங்கோலி கோலம் போடுவதில், அவளை அடித்துக்கொள்ள கிருஷ்ணகிரியில் ஆள் இல்லை என்பார்கள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொன்டே பலவிதமான கோலம் போடுவாள். அதைப் பார்த்துப் பார்த்து, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் ஏறிய  பைல் போல, குழந்தையின் நினைவில் அந்த நுட்பங்கள் ஏறிக்கொண்டன. குழந்தையை கோலத்தின்  அருகில் ஒரு நாள் விட்டுவிட்டு, வீட்டில் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது, அதிர்ச்சியில் மூழ்கினாள்.

    குழந்தை இரண்டு கால்களை முட்டியிட்டபடி, முதுகைச் சற்று குனிந்தவாறு ஏதோ கோலமாவில் கிறுக்கிக்கொண்டு இருந்தது. அருகில் சென்று பார்த்தாள்.  அச்சு வைத்தாற்போல்  “ராதாகிருஷ்ணன்” படம். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அவளைப்  பார்த்ததும், குழந்தை ஓடி வந்து கட்டிக்கொண்டது. இன்று அவரது பூ மற்றும் கோலமாவு கலந்து 3டீ  எபக்ட் ரங்கோலி இல்லாத கல்யாணம் இல்லை எனச்  சொல்லலாம்!

    மூன்று வாரங்கள் வேகமாக ஓடின. கல்யாண வீடு. ராதாகிருஷ்ணன் ரங்கோலி  இறுதி கட்டப்  பணிகளைச் சரி  பார்த்துக்கொண்டிருந்தார்.

    “ராதா சார், சூப்பர். தலைவர் அசரப் போறார் பாருங்க!” என்று  பின்னிருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தார். அது பி.ஏ. சண்முகத்தின் குரல்.

    “சந்தோசம் சார்” என்றார் நிறைவாக ராதாகிருஷ்ணன்.

    “உங்க பினிஷிங் டச் சூப்பர் சார்! கொரோனாவை  எதிர்க் கட்சி சிவப்பு நிறத்திலேயும், தடுப்பூசி நம்ம கட்சி பச்சை நிறத்துல கொடுத்ததுதான் ஹைலைட்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

    “என்ன இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். பேப்பர் எதுவும் பார்க்கலையா. அதுதானே கொரோனா கலர்” என்று மனத்தில் நினைத்தாலும், சும்மா வந்த நன்மதிப்பை நிராகரிக்க மனசில்லாமல் ஆமோதித்தவாறு சிரித்தார்.

    “சார், நான் உங்க பேமண்டை அக்கௌன்ட்டுக்கு அனுப்பிட்டேன். அப்புறம், உங்க காரு பத்தி சொன்னீங்களே, ரொம்ப பழைய காரு போல”

    “ஆமா சார், விண்டேஜ் வோக்ஸ்வேகன் பீட்டில் கார்.   நாலு மாசமா ஒழுங்கா ஓட மாட்டேங்குது.  அப்பா ஞாபகமா வச்சு இருக்கேன். எம்.பி. சாரும்  விண்டேஜ் கார் வச்சு இருக்காருன்னு கேள்விப்பட்டேன்.”

    சிறிய அட்டையை அவர் கையில் கொடுத்தவாறே “எம்.பி. சார் காரை இங்கதான் சர்வீஸுக்குக் கொடுக்கறாரு” என்று சொல்லும் பொழுதே அவருக்கு ஏதோ ஒரு போன் கால் வந்தது. மினிஸ்டர் கிட்ட இருந்து என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றார்.

    மறு நாள். கிழக்கு தாம்பரம் “செங்கதிர் கார் வோர்க் ஷாப்” பன்னிரண்டு மணிக்கெல்லாம் காரோடு ஆஜராகிவிட்டார். எம்.பி.யின் பரிந்துரை வேறு . இராஜ மரியாதையுடன் உள்ளே உட்கார வைத்தனர்.

    சில  மணி நேரங்கள்  கழிந்தன.  ஒரு சின்ன பையன் “சார், உங்களை ஓனர் கதிர் கூப்பிடறாங்க.”

    பட்டறையை நோக்கி நடந்தார்.  அங்கிருந்து சிவப்பு நிற  பீட்டில் கார் கம்பீரமாகத் தெரிந்தது.  அதன் சின்னமான ஹூட், அதாவது வாகன முகடுதான்,  அதன் ஹைலைட்.  சிறு வயதில், அவரது  அப்பா அதில் சறுக்கு மரம் போல, அவரை வைத்து விளையாடியது மனத்தில் வந்து ஓடியது, இல்லை சறுக்கியது!  பழைய பீட்டில் காருக்கு  என்ஜின் பின்பக்கம். யாரோ அங்கே  இருப்பது  தெரிந்தது.  அருகில் சென்று “கதிர் சாரைப்  பார்க்கணும்” என்றார்

    “நான்தான் செங்கதிர், இந்த வோர்க் ஷாப்  ஓனர்” என்றாள் அந்தப் பெண்!

    எந்த ஒரு சலனமும் அவர் முகத்திலோ, குரலிலோ இல்லை. “ஓ, அப்படியா, நீங்க கூப்பிடீங்கன்னு பையன் சொன்னான் ” என்றார்.

    “சார், நீங்க கடைசியா சர்வீஸ் கொடுத்த இடத்துல சொதப்பிட்டாங்க. அவங்க போட்ட இந்தப் பாகம், இதுக்குச் சரிப்படாது . என்ஜின் சீரா இயங்குவதற்கு அதன்  தேவைக்கேற்ப சரியான அளவு எரிபொருளையும் காற்றையும் கலந்து  கொடுக்கணும். இந்தப் பாகம்  செவென்ட்டிஸ்க்கு அப்புறம்  வந்த பீட்டல் காருக்குத்தான் சரியா இருக்கும். அதனாலதான் இந்தப் பிரச்சனை வந்து இருக்கு”

    “ஓ, அப்படியா, உங்க கிட்ட ஒரிஜினல் பார்ட்ஸ் இருக்கா?” எனச் சற்றுக் கவலையுடன் கேட்டார்.

    “உ.பி.யில் இருந்து ஆர்டர் செய்யணும். இரண்டு வாரத்துல வந்துடும்”

    “ஓகே செங்கதிர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டதாரியா நீங்க? கார் சம்பந்தமான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வரவேற்பறையில்  பார்த்தேன்.”

    “இல்லை சார், அப்பாவோட வோர்க் ஷாப்.  அப்பா இப்ப இல்ல. நான்தான் பாத்துக்கிறேன். சின்ன வயசுல இருந்து இங்கேதான் இருக்கேன். அவரோடேயே இருந்து எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பாவுக்கு விண்டேஜ் கார் மேல ஒரு பைத்தியம்” என்று சொல்லிவிட்டு பலவிதமான விண்டேஜ் கார்களைப் பற்றியும், அதன் என்ஜின் அமைப்பு, வேலை செய்யும் விதம் என அரைமணி நேரம் பேசினாள்.

    சிறிது மூச்சு விட்ட பிறகு “சாரி, சார், ரொம்ப போர் அடிச்சுட்டேன் போல” என்றாள்

    “நாட் அட் ஆல்! உங்க அப்பா பைத்தியம்னா, நான் ஒரு வெறியன்” என்றார் சிரித்துக்கொண்டே.

    “ஓகே சார், ஸ்பேர்   பார்ட்ஸ் வந்த உடனே கால் பண்றேன். காரை ஷெட்டுல லாக் பண்ணி வைக்கறோம்” என்றாள்.  சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.

    நல்ல பசி, அருகிலேயே  சிற்றுண்டி உணவகம் .

    “சார், உள்ளே இடம் இல்லை, ஏதாவது மரத்துக்கு கீழே உள்ள ஒரு டேபிள்ல  உட்காருங்க” என்றான் சர்வர்.

    நன்கு உயர்ந்த மரங்கள். அதன்  கீழே சில மேஜைகளும்,  நாற்காலிகளும் இருந்தன. மசால் தோசை, போண்டோ மற்றும்  டீயும் ஆர்டர் செய்தார்.

    “ஹலோ சார், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தா ஓகேவா” என்று பின்னிருந்து  சற்று பரிச்சயமான குரல் செங்கதிர்! “வாம்மா உட்காரு” என்றார்.

    “தனி டேபிள் இல்ல , அதான்  உங்ககிட்ட கேட்கலாமுன்னு நினைச்சேன்” என்றாள்.

    “அதனால என்னம்மா, ப்ளீஸ்” என்றார்

    நன்றி என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் . செங்கதிருக்கு 25 வயது இருக்கும். மாநிறம், சற்று ஒடிசலான தேகம். சுருள் முடி. பார்த்தால் திரும்பப் பார்க்கத் தோன்றும்  முகம். க்ரீஸ் பட்டு பட்டு, அவளது மினுமினுப்பு சற்று குறைந்துவிட்டது.

    “நீங்க தப்பா நினைக்கலேன்னா , நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”  எனக் கேட்டாள்.

    “ப்ளீஸ்”.

    “சார், நீங்க என்னைய முதல்ல பார்த்தப்ப, நீங்க ஒரு ஆண் கிட்ட பேசப் போகிறோம் என்று நினைச்சீங்க. ஆனா நான் யாரு என்று தெரிஞ்சதுக்கு அப்புறம், நீங்க ஆச்சரியப்படவே இல்லை. பொதுவா நான் தான் மெயின் மெக்கானிக் என்று தெரிஞ்சாலே வண்டியக் கூட கொடுக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரீஆக்ஷனும்   காட்டவில்லை” என்று சற்று ஆச்சரியமாகக் கேட்டாள் .

    சிரித்துக்கொண்டே “நான் நீ ஒரு பெரிய மெக்கானிக் என்று நினைச்சேன், ஆனா நீ மனோதத்துவரா இருப்ப போல! நீ அன்பே வா படம் பார்த்து இருப்பே என்று  நினைக்கிறேன். அதுல டீ . ராமசந்திரன் சார், தான் ஒரு புண்ணாக்கு வியாபாரின்னு சொல்லுவாரு”

    உடனே அவள் இடைமறித்து “சார், அதுக்கு புரட்சித் தலைவர் நீங்க கொடுத்த ரீஆக்ஷன் தான் கொடுப்பாரு. வியாபாரியோட திறமையைத்தான்  பார்க்கணும். அவன் செய்யற வேலையை  இல்லை என்பாரு” என்றாள் சற்று பெருமிதத்துடன்!

    “ஸ்மார்ட் கேர்ள்” என்று அவர்  சொல்லும்பொழுதே, அவள் ஆர்டர் செய்த கீரை வடை வந்தது.

    “சார், இங்க கீரை வடை பேமஸ்!”

    “ஓ, அந்த சர்வர் போண்டோ என்று சொன்னான். ஒரு வேலை மீந்து போய் இருக்கும்.” என்றார் நக்கலாக.

    “இன்னொரு கேள்வி. கடைப் பையனுக்கு உங்களைத்  தெரியும் போல, ரங்கோலி ராதாகிருஷ்ணன்தான் உங்க  பெயராமே?” என்று சற்று ஆச்சரியத்துடன்  கேட்டாள் .

    “என்ன நீ, என்னைய பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டு, குறுக்கு விசாரணை பண்ண வந்து இருக்க போல?”

    “என்ன சார், இப்படி சொல்றீங்க. எல்லாம் தற்செயல்” என்று சற்று கலக்கத்துடன் சொன்னாள் .

    ‘சும்மா விளையாட்டாகச் சொன்னேன், கேளு”

    “உங்களைப்  பார்த்தப்ப எங்க அப்பா ஞாபகம் வந்தது. அதான் ஒரு விஷயத்தை  உங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாமுன்னு நினைச்சேன்”

    அதைக் கேட்டதும் அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

    “சொல்லும்மா” என்ற பொழுது , அவர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்தன.

    “நம்ம இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. சாதாரணமா ஒரு ஆண் செய்யற வேலையை நானும், ஒரு பெண் செய்யற வேலையை நீங்களும் செய்யறீங்க” என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல நினைத்துச் சற்று தயங்கினாள் .

    “தயங்காம சொல்லும்மா”

    “நான் ஒரு பையனை லவ் பண்ணறேன் சார், அந்தப் பையனும் தான், நல்ல பையன், ஆனா அவனுக்கு நான் செய்யற வேலை  பிடிக்கலை. நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன் சார்”

    “உன்னைப் பார்த்தவுடன் எனக்கு தெரிஞ்சது செங்கதிர். உனக்கு எந்த மாதிரியான உதவி வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.

    “உங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை உங்க மனைவி கிட்ட இருந்து வந்து இருக்கா, நீங்கள் அதை எப்படி சமாளச்சீங்க”

    “ஓ அதுவா” என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். “செங்கதிர், என் மனைவி மாலதி முதல் முதல்ல  என் அலுவலகத்திற்கு வந்தபோது, ரொம்ப டென்ஷன் ஆயிட்டா. கிட்டத்தட்ட 40 பெண்கள். அவளுக்கு நம்பிக்கை வரணும் என்று அவளைப் பல நாள் ஆபீஸ்ல உக்கார வச்சேன். அவ வேலைக்கு வெச்ச ஆண்கள் மூலமாக, வேலை பார்த்த  பெண்களுக்குப் பல பிரச்சனைகள். கொஞ்ச நாட்களில் என்னோட தொழில் ஆர்வம், பெண்கள் கிட்ட நடந்துக்கிட்ட முறை, எவ்வளவு குடும்பங்கள் என்னை நம்பி இருக்குன்னு எல்லாத்தையும்  புரிஞ்சுக்கிட்டா. இப்ப எல்லாம் அவள் என் அலுவலகத்திற்கு வருவதில்லை. அந்தப் பையனுக்கு  நீ செய்யற வேலை பிடிக்கலையா இல்ல, ஆண்களோட வேலை பார்க்கிறது பிடிக்கலையா?” எனச் சரியான கேள்வியையும், தன் தட்டில் இருந்த ஒரு போண்டோவையும்  அவள் முன் வைத்தார்!

    “சரியா சொல்ல மாட்டேங்கிறான் சார்”

    “அப்ப அவனை உன் பட்டறையில்ல ஒரு நாள் வந்து இருக்கச் சொல்லு . உன்கிட்ட வேலைப் பார்க்கிறவங்க, உன்னை எப்படி மதிக்கிறாங்கன்னு என்பதைப் பார்த்தாலே திருந்திடுவான். இல்லையின்னா, அவனைக்  கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வா, நான் அவன்கிட்ட பேசறேன்” என்றார் பெருந்தன்மையுடன்.

    “ரொம்ப தேங்க்ஸ் சார்! அப்படியே செய்யறேன்” என்றாள் சற்று தெளிவுடன்.

    “அது இருக்கட்டும்., நான் உன்கிட்ட உன் பட்டறையிலேயே ஒரு விஷயம் பத்தி பேச நினைச்சேன். டைம் கிடைக்கலை. இப்ப சொல்லலாமுன்னு தோணுது”

    “என்ன விஷயம் சார்?” என்று ஆச்சரியத்துடன்  கேட்டாள்.

    “நீ ஒரு  ஜி.டி. நாயுடு மாதிரி!  படிப்பறிவு இல்லை, ஆனா உனக்கு தொழில்நுட்ப அறிவு ஜாஸ்தி. ஒரு பாடப் புத்தகத்துல இருக்கற விஷயத்தை, நீ  விளக்கின விதம்   எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கறே!”

    “ஒரு ஆர்வம் தான் சார், அப்பா கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.”

    “மின்சார கார்தான் விரைவில் இந்த உலகை ஆளப் போகிறது என்று சொன்னப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.  ஆனா இன்னிக்கு உலகத்துல ‘எலான் மஸ்க்’ டெஸ்லா முதலாளிதான் பெரிய  பணக்காரராக இருக்காரு. “

    “சார் , இதை ..” என்று  ஏதோ சொல்ல ஆரம்பித்த பொழுது, சற்று கையை உயர்த்தி, பொறுமையாக இருக்கும்படி சைகை செய்தார் .

    தேடிச் சோறுநிதந் தின்று என்ற  மகா கவி பாரதியார் பாடலைக் கேட்டிருக்கிறீயா?”

    “சார், அந்தப் பாடல்  பெரும்பாலான நேரங்களில்  எனக்கு ஒரு ஊக்கம் தரக் கூடிய பாடல்” என்று சொன்னாலும் அவளுக்கு உள் மனத்தில் இன்னும் குழப்பமாகவே இருந்தாள் .

    “என் வேலை ரொம்ப சுலபமா போச்சு.  அவர் தேடித் தேடி உணவு உண்டு, பல வெட்டிக் கதை பேசி, மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து, நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோன்னு கேட்பாரு. “

    “ஆனா அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, புரியலை!”

    “இரு, அவசரப்படாதே, சொல்லறேன்.  உன் வாழ்க்கை முடியறப்போ, நீ சில  ஆயிரம் கார் ரிப்பேர் பண்ணி இருப்ப, நல்ல சம்பாதிச்சும்  இருப்ப. நீ போன பிறகு, ஆனா நீ வந்த தடம் யாருக்கும் தெரியாது. வித்தியாசமா யோசி. எரிபொருள் உட்செலுத்தும் விதத்தில் நீ  ஒரு சின்ன மாற்றம் கண்டு பிடிச்சாலே, ஒரு வருசத்துக்கு இந்தியா பல ஆயிரம் கோடி  சேமிக்கலாம். இந்தியாவுல நிறையா பழைய கார் ஓடுது. நான் விண்டாஜ் காரை சொல்லலை, 90 மற்றும் இரண்டாயிரத்தில் வந்த கார்களைப்  பத்திதான் சொல்லறேன். உனது புத்தக அறிவையும், நடைமுறை அறிவையும்  வச்சு என்ன செய்யலாமுன்னு யோசி”

    அவள் முகத்தில் திடீரென்று 1000 வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசம்.

    “சார், எனக்கு  எப்பவும் வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு என்று ஆசை சார்.  சரியான வழிநடத்தல் இல்லை சார்.  நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு கிளாரிட்டி கிடைத்தது சார் ” என்றாள் சந்தோசத்துடன்.

    “நான் உனக்கு ஒரு கோடுதான் போட்டுக் கொடுத்தேன். ரோடு போடறது உன் கையில்  தான் இருக்கு.  எந்த மாதிரியான விசயத்துல ஜெயிக்கணுமுன்னு முதல்ல கண்டுபிடி. வழி தானே பிறக்கும் . ஆல் தி பெஸ்ட்!”

    சிறிது நேரத்தில் விடைபெற்றாள் . சிறிது தூரம் நடந்தவுடன்  திரும்பி பார்த்தாள். அவளுக்கு அங்கு இருந்த மரம் ஒரு போதிமரமாய் தான் தெரிந்தது. யாருக்குத் தெரியும்.  ஒரு லேடி ஜி.டி. நாயுடுவோ , எலான் மஸ்க்காகவோ அவள்  இன்னும் சில வருடங்களில் வரலாம்! அவளுக்குள் இருந்த விளக்கின் திரியைச் சற்று தூண்டிவிட்டார்  அவ்வளவுதான். ஆனால் இது போன்ற வழி நடத்தல் இல்லாமல், தடம் மாறிய ரயில் வண்டிகள் தான் இங்கு அதிகம்!

    Share
  • மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    வீட்டு வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

    பிள்ளைகள் வீட்டிலிருந்தவரை ஓய்வில்லாமல் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் வளர்ந்து வெளியேறியபின் வீட்டிலும் எங்கள் வாழ்விலும் நிறைய வெற்றிடங்கள் தோன்றியதுபோலிருந்தது. அந்த வெற்றிடங்களை கணவரும் நானும் ஒருவருக்கொருவர் நிரப்ப முயன்றோம்.

    அவரருகில் வந்து அமர்ந்தேன். அவரோ படிப்பதில் கவனமாயிருந்தார். சற்றுநேரம் தொந்தரவுசெய்யாமலிருந்தேன்.

    சட்டென்று திரும்பி “என்ன?” என்று கேட்டார். நான் என்னையுமறியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்போலும். அதை உணர்ந்து சற்றே வெட்கி, “ஒன்றுமில்லை,” என்று சொல்லி வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

    இந்த வயதிலும் அவரது கம்பீரத்தோற்றம் என்னை கவரவே செய்தது. திருமணமான புதிதில் அவர்கவனத்தை ஈர்க்க நான் செய்த குறும்புகளை நினைத்துக்கொண்டேன்.

    அவர் படித்துக்கொண்டிருந்த நூலை மேசையில் வைத்துவிட்டு, மீண்டும் என்பக்கம் திரும்பி, “என்ன சிரிப்பு?” என்றார். ஐயோ, மறுபடியும் மாட்டிக்கொண்டேன்.

    “ஒன்றுமில்லை. நம் தொடக்கநாள்களை நினைத்துக்கொண்டேன்.”

    அவர் புன்னகைத்து, “அப்படியா? என்ன நினைத்துக்கொண்டாய்?” என்றார்.

    “இப்படித்தான் நீங்கள் எதையாவது படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் வந்து உங்களை நோண்டுவேன்.”

    “அப்போதெல்லாம் நான் படிக்கவேண்டியது நிறைய இருந்தது. என் தொழில் அப்படி!”

    “இன்னும் படித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்!”

    “இப்போது பொழுதுபோக்குக்காக நான் விரும்புவதை படிக்கிறேன். படிக்கவேண்டிய கட்டாயமில்லை.”

    “ஆம். இப்போதாவது நான் ஒருத்தி இருக்கிறேனே என்று திரும்பிப்பார்த்து பேசுகிறீர்கள்!”

    “முன்பு மட்டுமென்ன? நீ அருகில் வந்தால் புத்தகங்களை தூக்கியெறிந்துவிடுவேனே!”

    இருவரும் ஒரேநேரத்தில் தொடங்கி பெரிதாக சிரித்தோம். அந்த சிரிப்பில் ஏராளமான மறைபொருள்கள் பொதிந்து கிடந்தன.

    “நாம் தனியாயிருந்து எவ்வளவு கூத்தடித்திருக்கிறோம்!” என்றேன்.

    “ஆம். என் வேலை வெளியூரிலிருந்ததால் தனிமை கிடைத்தது. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.”

    “அதே தனிமை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.”

    “அப்படியானால் இனியும் என்னை படிக்க விடமாட்டாய்?”

    “மாட்டேன்! என்னுடன் பேசுங்கள்!”

    அவர் சிரித்து, “என் தலைவிதி! எங்கு போனாலும் எனக்கு இதே தொல்லைதான்!”

    “என்ன, வேறு யாருமா?”

    “சீ, என்ன நீ? நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பன் வரதன் செய்த குறும்புகளை சொன்னேன்.”

    “ஆமாமாம். அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீது எனக்கு பொறாமையாயிருக்கிறது.”

    அவர் வெடிச்சிரிப்பு சிரித்து, “போயும் போயும் அவன்மீதா உனக்கு பொறாமை? நீ பொறாமைப்பட எத்தனையோபேர் இருக்கிறார்கள்,” என்று என்னை சீண்டினார்.

    “யார், மாலாவா?” என்று நானும் அவரை சீண்டினேன்.

    “ஆம். அவளும் ஒருத்தி.”

    “மொத்தம் எத்தனைபேர்?”

    “எத்தனையோபேர்! அது சரி, மாலாவைப்பற்றி உனக்கு எப்படித்தெரியும்?”

    “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்! அவர்களை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.”

    “அதெல்லாம் வயதுக்கோளாறு; ஒரு இனம்புரியாத கவர்ச்சி! காதலென்றால் என்னவென்று நீ வந்தபிறகுதானே தெரிந்தது!”

    “உக்கும்! ஒன்றும் ஐசுவைக்கவேண்டாம்!”

    இதுபோன்ற பல பொருளற்ற உரையாடல்களுக்காக எங்களுக்கு நிறைய நேரமிருந்தது. மற்றொருமுறை எங்கள் நண்பர் மலரைப்பற்றிய உரையாடல் எழுந்தது. பாவம், அவர் அண்மையில் கணவரையிழந்த துயரத்திலிருந்து மீளாமலிருந்தார்.

    “அவர்களுக்கு கணவரே உலகம். வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்து பழகிவிட்டார்கள்,” என்றார் என் கணவர்.

    “ஆம். அவர் இறந்ததும் எப்படி துடித்துவிட்டார்கள்!”

    சற்றே சிந்தனையிலிருந்தபின் ஒரு பெருமூச்சை வெளியிட்டார். பிறகு சொன்னார், “இன்னும் நம் பெண்கள் தமக்கென்று ஒரு வாழ்வையும் தமக்கென்று ஒரு உலகையும் அமைத்துக்கொள்வதில்லை. கணவரும் குழந்தைகளுமே அவர்களுடைய உலகமாகிவிடுகிறது,” என்றார். அவர் படித்த நூல்களிலிருந்து எதையோ எடுத்துவிட்டார்போலும்.

    “இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மலரும் அவர்கணவரும் பழங்காலத்தினர்.”

    “நாம் அவர்களைவிட மிகவும் இளையவர்கள் அல்லோம். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.”

    “ஆம். நம் பிள்ளைகளாவது அப்படியிருக்கமாட்டார்கள் என்று நம்புவோம்,” என்றேன்.

    “இப்போது மலர் எப்படியிருக்கிறார்கள்? நீ பேசினாயா?”

    “ஆம். அன்று பேசினேன். என்னுடன் பேசுவதில் சற்று ஆறுதலடைகிறார்கள். நாமும் அடிக்கடி போய் பார்க்கவேண்டும்,” என்றேன்.

    நான் அவருக்கு நெருங்கிய தோழி. என்னுடன் எதையும் மனந்திறந்து பேசுவார். எனக்கு தன் துயரங்களை சொல்வதில் அவருக்கு ஒரு நிம்மதி!

    மற்றொருமுறை மாலாவைப்பற்றியும் வரதனைப்பற்றியும் பேச்சு எழுந்தது.

    மாலாவுக்கும் இரண்டு பிள்ளைகளாம். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். இவர் அவருடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை; எனினும் நண்பர்கள்மூலம் அவரைப்பற்றி தவறாமல் தெரிந்துகொள்வார். ஒருமுறை வேலன் என்ற ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது இவர் அவரிடம் மாலாவைப்பற்றி அக்கறையுடன் விசாரித்ததில் எனக்கு இவர்மீது கோபமே வந்துவிட்டது.

    அன்று எங்கள் வீட்டுக்கு வந்தபோதே வேலனுக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது; அது எங்களுக்கு தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து தம் நாற்பத்தாறாம் வயதில் இறந்துவிட்டார். இவரும் இவர்நண்பர்களும் மிகவும் துயரமடைந்தனர். வேலன் திருமணமே செய்துகொள்ளாமலிந்ததால் அந்த துயரத்தில் பங்கேற்க மனைவிமக்கள் இல்லை.

    “உங்கள் நண்பர் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?” என்றேன்.

    “அதுதான் எனக்கும் புரியாத புதிராயிருக்கிறது. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பிவிட்டான். வரதனும் அப்படித்தான்.”

    இதைச்சொன்னதும் அவர்முகத்தில் ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது. பல உணர்ச்சிகள் அவரை தாக்கியதை கண்டேன்.

    “எவ்வளவு முட்டாளாயிருந்தேன்!” என்றார். அவர்கண்கள் நீர்கோத்ததைக்கண்டு நான் பதறிவிட்டேன்.

    “என்னங்க? என்ன ஆனது? திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள்!”

    “வேலனும் வரதனும் திருமணஞ்செய்துகொள்ளாமலிருந்ததன் காரணம் எனக்கு விளங்குகிறது,” என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

    “என்ன?” என்று கேட்டுவிட்டு அவர் பதில்சொல்ல காத்திருந்தேன்.

    மென்குரலில் நிதானமாக சொன்னார், “அவர்கள் காதலர்கள்!”

    “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ காதல் தோல்வியாயிருக்கலாம். அல்லது காதலிகளை வைத்திருந்திருக்கலாம்,” என்றேன்.

    “நான் சொல்வது உனக்கு புரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.”

    நான் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு விளங்கவில்லை. விளங்கியது; ஆனால் தடுமாறினேன். என் மூளை இரண்டுபகுதிகளாக விடுபட்டு தவறான திசையமைவில் மீண்டும் சேர்ந்துகொண்டதுபோலிருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் தெரியாமல் முதுகு தெரிந்தால் எப்படியிருக்கும்? அப்படி உணர்ந்தேன்.

    “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றேன். வேறேதும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் ஐயமில்லை. அவர்களிருவருடைய வாழ்க்கைகளையும் மாற்றுக்கோணத்தில் பார்த்தபோது எல்லாமே தெளிவானது. கோளாறு நம் கண்ணோட்டத்திலே இருந்திருக்கிறது. குருடிக்கு திடீரென்று கண்திறந்ததுபோலிருந்தது.

    இருவருமே படித்த அறிவாளிகள். சமுதாயம் மதிக்கும் பெரிய வேலைகளிலிருப்பவர்கள். வேறு காலக்கட்டமோ இடமோவாயிருந்தால் அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போதைய உலகில் அவர்களுக்கு இடமில்லாததால் மறைவில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்,

    பலநாள்களுக்குப்பிறகும் என் கணவர் துயரத்துடனே காணப்பட்டார். நான் அவரது கவனத்தை திருப்பி கலகலப்பாக்க முயன்றேன். அவர்மனத்தின் உள்ளெண்ணங்களை பகிருமாறு ஊக்கினேன்.

    “மலர் கணவரையிழந்த துயரத்தில் துடித்ததுபோலவே வரதனும் வேலனையிழந்து துடித்திருப்பான். மலருக்கு நீ இருப்பதுபோல் வரதனுக்கு நான் நெருங்கிய நண்பன். வேலன் இறந்ததும் வரதன் முதல்வேலையாக என்னிடமே பேசினான். ஆனால் நீ மலருக்கு அளித்த ஆறுதலை நான் வரதனுக்கு அளிக்கவில்லை. அவனது கவலையை நான் கற்பனையிலும் காணவில்லை. அவன் காதலனை இழந்தது மட்டுமல்லாமல் தன் துயரத்தை வெளியிடவியலாத நிலையிலும் தனியே தவித்திருப்பான்.”

    அவரை என்மீது சாய்த்துவைத்து ஆற்றுப்படுத்த முயன்றேன். சொல்வதற்கு ஏதும் கிடைக்கவில்லை. நாம் வாய்கிழியப்பேசும் இலக்கியமும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் விழுமியங்களும் இந்த நிலையை கையாள்வதற்கு பயிற்சியளித்திருக்கவில்லை. என்மீது சரிந்து குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தவரை உச்சந்தலையில் முத்தமிட்டு முதுகில் தடவினேன்.

    வரதனுக்கு இவர்மீதே முதலில் காதல் என்பதை இவர் உணரவில்லை; நான் சுட்டிக்காட்டப்போவதில்லை.


    About the Author

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged in developing aids necessary for bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    Share
  • முடிவை நோக்கி! (நிஜ விஞ்ஞானப் புனைகதை)

    முடிவை நோக்கி! (நிஜ விஞ்ஞானப் புனைகதை)

    சி. ஜெயபாரதன், கனடா

    டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா? பேசியவள் லாரா ஃபெர்மி தான்! பேச்சில் நடுக்கமும் தடுமாற்றமும் கலக்கமும் எதிரொலித்தன!

    “ஆல்பர்ட்! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெருமூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

    “அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

    இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தறுவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன்முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் பாதிக்கும்! பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும்! விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார்? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார்? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள்! அவர்களது விஞ்ஞான அறிவு, மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத் தான் பயன்பட வேண்டுமா?

    அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும்?

    ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவமனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

    யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரியவில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப்பட்டிருந்தன. அந்த பயங்கரக் பாலைவனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின!

    “பாவம் ஹாரி! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும்? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப்பட்டாள் லாரா.

    “உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

    “வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார். ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

    “இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது! ஹிரோஷிமாவும் நாகசாகியும் நாசமாகியிருக்காது! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

    ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச் சக்திக்கு விதை போட்டவனே நான்தான்! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்!  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று!” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன். லாரா இருவரையும் பார்த்து திகைத்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

    “என்ன, ஆல்பர்ட்! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர்? நம்ப முடியவில்லையே! விபரீதமான விஷப் பரீட்சை! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது! மறக்கவும் முடியாது!” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

    கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகட்டைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர். ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

    “ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

    “மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ்! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

    “இல்லை டாக்டர்! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை! வேறு யாரும் அருகில் இல்லை!” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

    “அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது? எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது? இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா?” பதற்றத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

    “புளுடோனியம் என்பது என் நினைவு!” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

    “கெட்ட வேளைதான்! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம். அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும்!” என்றார் வில்ஸன்.

    “ஹாரி பிழைக்க மாட்டாரா?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

    டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது!” என்றார்.

    “இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

    “பயங்கர அதிர்ச்சியடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி. ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

    பெருமூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயறைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது!

    எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி!  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக?

    “எப்படி இருக்கிறாய் ஹாரி?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்! இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும்?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

    விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள்? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

    “ஆல்பர்ட்! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன!” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடானு கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும்! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா!”

    ‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

    வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை! இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடானு கோடி விண்மீன்கள் கண்சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன! சக்தி இழந்து போய் தடுமாற்றத்துடன் மூவரும் வெளியே மருத்துவமனை நாற்காலில் அமர்ந்தனர்.

    “எப்படி நேர்ந்தது இந்தக் கோர விபத்து?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

    ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா? எப்படிச் சொல்வது?

    “பயப்படாதீர்கள் ஜேம்ஸ்! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான்! என் கணவர் சொல்லாத ரகசியங்களா? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

    அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா. அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும்! இன்று ஹாரிக்கு! நாளை நமக்கு!  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரி தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளன, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் தொடங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகி, கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கியிருக்கின்றன!”

    சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான்! அவன் தெரியாமல் செய்தது!  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம்! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது! அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது! கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின!”

    “நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி, நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி!  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது ! ஆனால் என்ன பயன்? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது!  பல்லாயிரம் ராஞ்சன் வீரியமுடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக்கொண்டுவிட்டான்.  அது அவனுக்குத் தெரியும்! அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும்!”

    “நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்திவிட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகியிருக்கும்!”

    “அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் உடனே வெளியாகும்!”

    “லாரா!  அமெரிக்கா தொடக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

    “அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படியாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும். வாஷிங்டன் ராணுவ மருத்துவக் கூடத்திற்கு போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

    நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே! ஹாரியைக் காப்பாற்று! எங்கள் ஹாரியைக் காப்பாற்று!” என்று மனத்தில் பிரார்த்தனை செய்துகொண்டே நடந்தாள், லாரா.

    கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

    மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புகளையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிச்சை சாதனங்களை ஏற்றிக்கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொண்டார்.

    நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

    “யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

    ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான்! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள்!! குஷ்ட ரோகி போல் காணப்பட்டான் ஹாரி!

    “தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடியிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

    ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா! பார்! இப்போது நானொரு புத்த பிச்சு! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவற்றை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன்!  உயிர்களின் துணைவன்! அணு ஆயுத எதிரி! அணு ஆயுதப் பலிகடா!

    அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணுகுண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி!  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

    ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை! அது நம்மிடம் இல்லை!  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்டதல்லவா ஹைடிரஜன் குண்டு!” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர்! அவர்தான் அணுகுண்டின் பிதா! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி!

    இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணுகுண்டுகளா?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம்? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா?” என்று கடிந்தார், ஜேம்ஸ்!

    ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்தப் பயங்கர அமைதியைக் கலைத்தாற்போல் ‘ஓ’வென ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

    ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டுக் கத்தினான்!  டாக்டர் வில்ஸனும் நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக்கொண்டார்கள்.

    “டாம் ஓப்பி! லிட்டில்பாய் ஓப்பி! டாம் குருவ்ஸ்! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட்! கெட் அவுட்!” என்று ஆர்ப்பாட்டத்துடன் கத்தினான், ஹாரி !

    ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

    “என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

    “லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

    மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ! குடைக் காளான்! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு! அதில் நான் மிதக்கிறேன்! அதோ! அணுக் கோளம்! அனல் கோளம்! கதிர்க் கோளம்! கனல் கோளம்! ஒளிக் கோளம்! வெடிக் கோளம்! விஷக் கோளம்! அழிவுக் கோளம்! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள்! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

    பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்கினான் ஹாரி.

    ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோடு இருபத்து நான்காம் நாள்! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுதுகொண்டிருந்தன!

    ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே!  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதியும் !”

    கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்துகொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன!

    உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்துப் பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம்! அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள்! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம்!” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

    ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார். ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

    ***********************

    [ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மையான சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைகதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைவு]

    harry-daghlians-nuclear-experiment
    (1981 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

    தகவல்:

    http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

    Share
  • இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    அது இப்படியிருந்தது.

    இரவு.

    வானமேகங்களுக்கிடையில் காட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கதவு திறக்கப்பட்டு அதுவழியாக ஒரு அற்புத வெளிச்சம் கடந்து வந்தது.

    மிகவும் இரகசியமாக சுயமாக தயாரித்த திராட்சை ரசத்தின் கடுமையான போதையிலிருந்த காவல்காரன் இரப்பேல் முன்பெல்லாம் அதைப்பார்க்க நினைத்ததில்லை. ஆனால் பிறகு பிரகாசத்தின் தீவிரம் காரணமாக இரப்பேலுக்கு இறுக்கமாக மூடியக் கண்களைத் திறக்காமல் வேறுவழியில்லை. வலது கையை உயர்த்தி பிரகாசத்தை முடிந்தவரை வரவிடாமல் எதிர்க்க முயன்றான். அது வீண் முயற்சி என உணர்ந்த இரப்பேல் பொறுமையற்றுப் புலம்பினான். யாருக்கும் தெரிந்து ஒரு துரோகமும் செய்யாத ஒரு சுத்த ஆன்மாவைத் தண்டிப்பது எந்த முறையில் நியாயம் எனக்கேட்டான். பதில் வரவில்லை. டார்ச்  வெளிச்சம்……………………. இரப்பேல் நினைத்தது போலவே அது ஒரு பெரிய டார்ச்சின் வெளிச்சமாயிருந்தது. நிறுத்தப்படவுமில்லை.

    ஐயே! இரப்பேல் எழுந்திருக்கலாம் என நினைத்து பலமாக முயற்சித்தான். அது அவ்வளவு சுலபமில்லை. நாடி நரம்புகள் முழுவதும் ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் இறுகப் பிடித்துக்கொண்டு இரப்பேல் எழுந்தான்.

    அற்புதப் பிரகாசம் கூறியது. ”இரப்பேல் நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்.”

    அதைக் கேட்டு நோஹாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு போல நிறைந்த வெள்ளத்தில் இரப்பேல் ஒரு பாய்மரக்கப்பலுக்கு இணையாக ஆடினான். இமைகள் அதற்குப்பிறகு ஒரு முறைகூட மூடவில்லை. கண்களின் வெண்மைப்பகுதியிலும், கரு விழியிலும் அற்புதப்பிரகாசம் அருமையோடு நின்றது. கடுமையான பரபரப்புக் காரணமாக இரப்பேலுக்குத் தொண்டை வறண்டது. உடல் முழுவதும் புளகாங்கிதம் அடைந்தது.

    அற்புத வெளிச்சம் மறுபடியும் பெயர் சொல்லி அழைத்து இப்படிக்கூறியது.

    “நான் எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு ஒரு சாவி தருவதற்காக”

    “சாவியா? ” இரப்பேல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

    “ஆமாம். உன்னுடைய சேமிப்பு,  வானத்தில் எங்குள்ளதோ அதன் சாவி” , அற்புதவெளிச்சம் கூறியது.

    இரப்பேலின் கண்கள் அகன்றது. வெளிச்சம் கண்ணிற்குள் கொஞ்சம் கூடுதலாகக் கடந்தது, இரப்பேல் ஆச்சரியத்துடன் நிலைத்து நின்றான்.

    “கைகளை நீட்டு” அற்புதவெளிச்சம் அருளியது.

    இரப்பேல் அதை அனுசரிப்பவனாக இருகைகளையும் நீட்டினான். அவைகளில் என்ன அதிசயம் ஒரு தங்கத் தாக்கோல் (சாவி) வந்து விழுந்தது. அது சிறப்பான வடிவமுடையதும் தக தகவென மின்னக்கூடியதுமாக இருந்தது. ரப்பேல் பக்திப்பரவசத்துடன் சாவியை கண்களிலும் உதட்டிலும் ஒப்பிக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றன. இரப்பேல் விழித்துப்பார்த்தான். அற்புத வெளிச்சம்!……….. பார்க்கப்பார்க்க மறைந்தது.

    இரப்பேல் மூச்சடக்கி நிற்கவே சுற்றிலும் கூரிருட்டாக இருந்தது. ஒன்றும் பார்க்க முடியவில்லை. கையில் ஒரு சாவி இருக்கிறது என்ற பலத்த நம்பிக்கையில் கையை இறுக மூடிக்கொண்டு இரப்பேல் இருட்டு வழியாகத் தட்டுத்தடுமாறி எங்கென்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.

    Share
  • இரசவாதம் (தெலுங்குச் சிறுகதை)

    இரசவாதம் (தெலுங்குச் சிறுகதை)

    தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் பிரசாத்

    பி.அஜய் பிரசாத் (முழுப் பெயர் – பாதர்ல பிரசன்ன அஜய் பிரசாத்) ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு”  என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள், ஆங்கிலம், இந்தி, வங்காளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.

     

    மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

    பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திர மாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

     

    இரசவாதம்

     

    தெலுங்கில்     : பி.அஜய்பிரசாத்

    தமிழில்            : பொருநை க.மாரியப்பன்

     

    அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

    சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும், சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகளை எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது.

    முதல் முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயித்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்கு மிஞ்சி வளரவில்லை.

    அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை.  ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்து வைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல், கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும்.

    அப்படிப் பேசும் பொழுது ஒரு சில சமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துபோன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.

    ஒருமுறை அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, வழக்கம் போல அவரின் மனைவி போன் செய்தாள்.

    அவர் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது போனில் ஸ்பீக்கர் ஆன் ஆனது.

    அந்தப் பக்கத்திலிருந்து, ‘என்ன பேசிட்டிருக்குற? பேரம் பேசும்பொழுது வாதம் செய்யாத. அதெல்லாம் உனக்கெதுக்கு?’ என்ற பேச்சு வெளியே கேட்டது.

    அவர் அவசரமாக, ‘அம்மா தாயி.. அதெல்லாம் ஒன்னும் பேசல. வாதம்லா இல்ல… இருக்குற சங்கதியதான் சொன்னன். அப்படில்லாம் எதும் இல்ல’ என்றார்.

    உச்சி வெயில் மத்தியான புழுக்கத்தில் அந்தப் பழைய புத்தக அலமாரிகளுக்கு இடையில் நின்று அப்படியே தேவையான புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, வெளியிலிருந்து, ‘இரசவாதம் இருக்கா?’ என்று கேட்டது காதில் விழுந்தது.

    நான் கொஞ்சம் இந்தப் பக்கமாக முன் நகர்ந்து வெளியே பார்த்தால் யாரோ ஒருவர்  வெயிலில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் தண்ணீரால் முகம் கழுவியதுபோல் கன்னத்தில் வியர்வை வழிந்தது. அந்த வெயிலிலும் அவர் சிரித்துக்கொண்டிருந்தார். அவரின் உடல்மேல் கறை படிந்த சட்டை, இடது தோளில் தொங்கும் துணிப் பை. அதற்குப் பின்னால் கயிற்றில் தொங்கும் தண்ணீர் பாட்டில்.

    அவரைப் பார்த்தால் சிறுவயதில் நன்றாகத் தெரிந்த மனிதர், பெரியவர் ஆனதும் உருவ மாற்றத்துடன் எவ்வாறு இருப்பாரோ அப்படித் தெரிந்தது. பார்க்கப் பார்க்க நன்றாக அறிந்த முகமாகவே பட்டது. அடையாளம் காண முடியாத, தெரிந்தும் தெரியாத ஒப்பீடுகள்.

    மர ஸ்டூலில் அமர்ந்திருந்த கடை முதலாளி அவர் சொன்னதைக் கேட்டுப் புரியாத மாதிரி, “என்ன வேணும் மறுபடியும் சொல்லுங்க’ என்று சத்தமாகக் கேட்டார்.

    வெளியில் நிற்கும் மனிதர் இன்னும் அதே சிரித்த முகத்துடன் ‘இரசவாதம் வேணும்’ என்றார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரர் போல் தோன்றியது. தோன்றுவது என்ன, பைத்தியக்காரர்தான்.  சற்று நெற்றி ஏறிய நடுத்தர வயது முகம். அந்த முகத்தில் இருந்த கீறல்களைப் பார்த்து இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மனிதர் என்று நினைவுப்படுத்திப் பார்க்க முயன்றேன்.

    கடை முதலாளி அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு “இரசவாதமா?” என்று, வந்த மனிதரை விசித்திரமாகப் பார்த்தார். அவருக்கு இந்தப் பக்கமாகப் பெஞ்ச் மீது தன் கனமான உடலைக் கைகளில் வைத்து முன்னோக்கி வளைத்து அமர்ந்து அரட்டையடிக்கும் சிவப்புச் சட்டை அணிந்த வெள்ளைத் தாடி மனிதர்கூட ஒரேயடியாக இதயம் வெடித்தது போன்று அதிர்ந்துபோனார். அவர்கள் இருவரும் மிரண்டுபோனதைப் பார்த்துக் கொஞ்சம் இந்தப் பக்கமாக வந்து வெளியே நின்றிருக்கும் மனிதரை நான் ஒரு பார்வை பார்த்தேன். அவர் அப்படியே நின்று சிரித்த முகத்துடன் மறுபடியும் “ஆமா.. எனக்கு இரசவாதமே வேண்டும்’ என்றார்.

    கடை முதலாளி ஸ்டூல் மீதிருந்து தடால் என்று வெளியே வந்து நின்று அவரை அடிப்பது போல் கீழே வரை கிடந்த வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சரிசெய்து ‘போய்யா.. போ…இரசவாதமும் இல்ல ஒன்னும் இல்ல.. அது இருந்தா நா எதுக்கு இங்க இருக்கன்’ என்றார்.

    வெளியே நிற்கும் மனிதர் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, “போய்யான்னு சொன்னா புரியாதா” சிவப்புச் சட்டை மனிதரும் கர்ஜித்தார்.

    கடை முன்பிருக்கிற வெயிலின் நிழல் அந்தப் பக்கமாக நகர்ந்தது. யாரோ கூப்பிடுவது போல் இருந்ததால், அந்தப் பக்கம் போனதும், எனக்கு எங்கள் ஊரில் எப்பொழுதும் நூலகத்திலேயே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். சந்தேகம் இல்லை… அவர் சிவலிங்கம் தான். அவரே இவர்..!

    பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சிவலிங்கம் இன்று தற்செயலாகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் அகப்பட்டார். சிவலிங்கம் நினைவுக்கு வந்தாலும் விசாரிப்பதற்கு அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அத்தங்கியில் என் படிப்பு தொடர்ந்த பொழுது அவரைத் தினமும் நூலகத்தில் பார்த்திருக்கிறேன். அந்த ஊரைவிட்டு வந்ததும் அவரைப்பற்றிய நினைப்பும் படிப்படியாக மறந்துபோய்விட்டது.

    என் ஊரில் அமைதியாக இருக்கும் வீதியின் கடைசியில் ‘கிளை நூலகம்’ இருந்தது.  அது எங்கேயோ நடு வீதியிலோ அல்லது அரசு அலுவலகம் மத்தியிலோ இல்லாமல் தெருக் கடைசியில் வீடுகளின் மத்தியில் இருந்தது. நூலக உதவியாளர் வெள்ளைத் தலைப்பாகையுடன் பெஞ்சில் அமர்ந்து சுவரில் சாய்ந்து எப்பொழுதும் கீழே குனிந்துகொண்டே இருப்பார். உள்ளே நுழையும் முன்பே வரண்டாவின் ஒரு பக்கம் செய்தித்தாள் பிரிவு, மறுபக்கம்  அகலமான  மேசையின் மேல் இதழ்கள் இருக்கும்.

    மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து அந்த மரப் பலகை, பெஞ்சுகள் தேய்ந்து ஒரு விசித்திரமான பழுப்பு நிறத்தில் ஒளிர்ந்தன. சிவலிங்கம் இரண்டு வேளையும் நூலகம் திறந்ததில் இருந்து மூடும் வரைக்கும் தினசரி, வாரப் பத்திரிகைப் பிரிவில் அமர்ந்திருப்பார். அவரின் பணி பேப்பர்களைப், பத்திரிகைகளைப் படிப்பது இல்லை. சுற்றி வருவது மட்டுமே. காகிதங்களுக்கு இடையில் தேடுவது… சும்மா ஒன்று மாற்றி ஒன்று. அதே வேலையாகப் பக்கங்களைத் திறந்து  கண்களைச் சுழற்றி, கொஞ்சநேரம் அங்கும் இங்கும் பார்த்து.. மறுபடியும் ஆட்காட்டி விரலால் நாக்கில் எச்சில் தொட்டுப் பக்கங்களைத் திருப்பியவாறு அப்படியே.

    அவர் பைத்தியம் பிடித்திருப்பவரும் இல்லை. நூலக உதவியாளருக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. பத்திரிகை மேசை அருகிலேயே நாற்காலி மீது அமர்ந்து சுவரில் தலை சாய்த்துத் தூங்கும் அந்த நூலகத்தின் உதவியாளர் ஒவ்வொரு முறையும் இருந்தாற்போல் கண்களைத் திறந்து சிவலிங்கத்தையே பார்ப்பார். ஒவ்வொரு முறையும் சிவலிங்கத்தின் கைகளில் இருந்த பேப்பரைப் பிடுங்கி டேபிள் மேல் தூக்கி எறிவார். சிவலிங்கம் மறுபடியும் அந்தப் பேப்பரை திரும்ப எடுத்து வருவார்.

    நூலகத்திற்கு நிறைய இதழ்கள் வந்துகொண்டிருந்தன. நான் கொஞ்ச நேரம் பேப்பரைப் பார்த்து, இதழ்களை மேலோட்டாமாகப் பார்த்துப் புத்தகத்தைத் தேடி உள்ளே போவேன். அவர் யாரிடமும் பேசுவது கிடையாது. நான் தினந்தோறும் அவரைப் பார்ப்பேனே தவிர நூலகத்தின் அமைதி அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. ஒருமுறை பார்வையாளர் பதிவேட்டில் அவர் ‘சிவலிங்கம்’ என்று கிறுக்கலான தெலுங்கு எழுத்துகளிலே கையெழுத்துப் போடுவதைப் பார்த்தேன். எப்பொழுதும் சுத்தமாகத் துவைத்த, சாதாரணத் துணிகளை அணிந்திருப்பார்.

    பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே இப்படிப் பார்க்கிறேன் சிவலிங்கத்தை. இந்த நடுத்தர வயது மனிதரை அந்த நாள் தோற்றத்தோடு என்னால் ஒப்பிட முடிந்தது. பாதி முடி காணாமல் போயிருந்தது.

    ‘என்கிட்டமட்டும் இரசவாதம் இருந்துச்சுனா… அதுக்காக ஐனங்க இங்கயிருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் வரிசை கட்டி நிப்பாங்க. ஆ..’ என்று பின்னால் திரும்பி நாற்காலியில் அமர்ந்தார் கடை முதலாளி.

    பெஞ்ச் மீது அமர்ந்திருக்கிற சிவப்புச்சட்டை வெள்ளைத்தாடி மனிதர் “ஆ..ஆ.. வாங்க வேணாம்.. அத  அஞ்சு நிமிஷம் பாக்குறதுக்குக் குடுத்தாலே போதும்… ஜனம் கூடிரும்” என்று வயிறு குலுங்கச் சிரித்தார்.

    “ஆமா… ஆமா…  பார்க்கக் குடுத்தா போதும்” என்று கடை முதலாளி மீண்டும்  பழைய புத்தகத்தைத் தைக்கும் வேலையில் மூழ்கினார்.

    நான் புத்தகத்தைத் தேடுவது முடிந்தது. எடுத்துக்கொண்ட புத்தகத்திற்கு விலை சொல்லவேண்டுமென்று அவரின் மேசையின் மேல் வைத்து ‘இத்தனைக்கும் அந்த இரசவாதம்னா என்னங்க?’ என்றேன்.

    கடைமுதலாளி என்னை விந்தையாகப் பார்த்தார். சிவப்புச்சட்டை மனிதர் இடைமறித்து, ‘ஒங்களுக்குத் தெரியாம இருக்கும். இரசவாதம் எப்ப இருந்தோ இருக்கு, சுதந்திரத்திற்கு முன்னாடி… யோகி வேமனாவிற்கு முன்னாடி, இல்ல இல்ல அதுக்கும் முன்னாடி… அந்தப் பேச்சை எடுத்தா எப்பயிருந்தோ யாருக்குத் தெரியும்?..”

    புத்தகத்துக்கான விலையைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து வெளியே வந்தேன். சிவலிங்கம் அந்தப் பக்கத்தில் இருந்த வேறொரு புத்தகக் கடை முன்பு நின்று அதே புத்தகம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அதே சிரித்த முகம். அவர் என்ன பதில் சொன்னாரோ என்னமோ சிவலிங்கம் இன்னும் எங்கும் நிற்காமல் கடகடவென்று முன்னே போனார்.

    அப்படிப் பின்னால் நின்று பார்த்தால் அவர் நடை விசேஷமாகத் தெரிந்தது. அவர் கால்களைத் தூக்கி நடந்தார். பக்கவாட்டில் தொங்கும் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கால்களுக்குத் தடையாக அவர் நடக்கும்பொழுதெல்லாம் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அவர் மறைந்துபோனார்.

    ஆனாலும் சிவலிங்கம் தேடுவதை இன்னும் நிறுத்தமாட்டார் என்றே தோன்றியது. அவர் காகிதங்களுக்கு இடையில்… பத்திரிகைகளின் இடையில் இன்னும் எதற்காகவோ தேடிக்கொண்டே இருக்கிறார். நான் புத்தகங்களுக்காக இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

    நாங்கள் இருவரும் சில ஆண்டுகளாக இதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். இருவரும் மாறவில்லை.

    எனக்கு இந்தத் “தேடல்” என்பது சிறுவயதிலிருந்தே அதாவது அநேகமாக எட்டாம் வகுப்பிலிருந்தே பழக்கமாகி இத்தனை ஆண்டுகளாகியும் இப்பொழுதும் போகவில்லை. எங்கள்  நூலகத்தின் உள்ளேகூடப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு சின்னப் படிப்பறை உள்ளது. வட்ட மேசையைச் சுற்றி யாராவது அமர்ந்தால் பழையதாகி, பிடி தளர்ந்து அங்கும் இங்கும் அசையும் நாற்காலி, இரண்டு மூன்று ஸ்டூல்கள். சுவருக்கும் மரமேசைக்கும் இடையில் சிலந்தி வலைப்பின்னல். உள்ளே புத்தக மர அலமாரி, அருகில் பழைய காகித வாசனை.

    அங்கே என் பள்ளிக்கூடத் தெலுங்கு ஆசிரியர் சந்திரமோகன் அவர்கள் முற்றத்தின் பின்புறத்திலிருந்து வரும் பகல் வெளிச்சத்தில் கையில் புத்தகத்துடன் செய்யுள் வரிகளை விரல்களால் தடவிக்கொண்டு எப்பொழுதாவது தென்படுவார். நான் அப்படியே மேசை முன்பு அமர்ந்து பழைய புத்தகத்தைப் படிப்பேன்.

    சாதாரணமாக என்னைப் புதிய புத்தகங்கள் ஈர்ப்பது இல்லை. நான் படித்தவை எல்லாமே பழைய புத்தகங்கள் தான். சிலவற்றில் முதல் பக்கமும் கடைசிப் பக்கமும் இருப்பதில்லை. நூலாசிரியர்களின் பெயரும் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. என் விரல்கள்பட்டு மஞ்சள்நிறக் காகிதங்கள் நொறுங்கிப்போய்விடும். அப்படி நான் படித்த பழங்காலப் புத்தகங்களில் ஒன்று “ரகசிய கங்கணம்”

    என் ஊரிலிருந்து வந்தும், எங்கும் நிரந்தரமாக இல்லாமல், எந்த வியாபாரத்திலும் உறுதியாக இல்லாமல், ஆண்டுகள் கடந்து வயதாக வயதாகப் புத்தகத்தைத் தேடுவது என்பது இன்னும் அதிகமானது. சிறுவயதில் தேடிப் பிடித்துப் படித்த புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் மறந்துபோயின.  சில புத்தகங்களில் வரும் கதைமாந்தர்களின் பெயர்களை நினைவுபடுத்திக் கொள்ள முயல்கிறேன்.

    இன்றைக்கும் நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் தென்பட்டால் என் கால்கள் நின்றுவிடுகின்றன. அவற்றுக்கு இடையில் நின்று எனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி எடுக்கிறேன். லெனின் மையம் தாண்டி இரண்டு திருப்பங்களைக் கடந்து மின்கம்பத்துக்கு அருகில் நின்றேன். அந்தச் சந்தில் மங்கலான பங்களாவின் முதல் தளத்தில் சீ.பி.ராவ் வேலை பார்க்கும் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸ் உள்ளது. இங்கு வரும்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவனை அலுவலகத்தில் சந்திப்பதுண்டு. காலை எத்தனை மணிக்கு வருவானோ தெரியாது. ஆனால், இரவு ஒன்பது மணி கடந்து, கடைசி லாரியை அனுப்பும் வரை அங்கேயே இருப்பான்.

    சீ.பி.ராவ் என்று அழைப்பது எனக்குப் பழக்கமாக இருந்தாலும், சீ.ஹெச்.பாஸ்கர்ராவும் நானும் அத்தங்கியில் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு இங்கெங்கேயோ உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு பிறகு சீ.பி கல்லூரியில் என்னோடு இணைந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தான்.

    அலுவலகத்தில் சேர்ந்தபொழுது வெள்ளையாக ரொம்ப ஒல்லியாக இருந்தான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் குண்டாகிவிட்டான். வெள்ளையாக ஒல்லியாக இருந்த அந்த முகம் கருப்பாகி முதிர்ந்து காணப்பட்டது. முடியைப் பின்னால் சீவி, வளர்ந்த புதர் போன்ற மீசை முன்னால் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் அவனுக்கு அந்த வேலை கிடைத்த புதிதில், ஏதோ மனை விலைக்கு வந்ததென்றும் மறுபடியும் அது மாதிரி குறைந்த விலைக்குக் கிடைக்காதென்றும் என்னிடம் இருந்து இரண்டு லட்சம் கடன் வாங்கினான். வருடம் கடந்தும் அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை.

     நான் அந்தப் பேச்சை எடுக்கும்பொழுதெல்லாம், “தர்ரன்ப்பா, உன் பிச்சைக்காசு எனக்கெதுக்கு” என்பான், சிறுவயது நட்புடன். அவனின் பேச்சைப் பார்த்தால் அப்பொழுதே தருவது போல இருக்கும். ஆனால் கொடுப்பவன் கிடையாது. வருடம் கடந்து ஆறு மாதங்களும் கடந்துபோயின.  தருவனோ தரமாட்டோனா என்ற சந்தேகத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. கொஞ்ச நாட்கள் சந்திப்பதைத் தவிர்த்து, திடீரென்று சந்திப்பேன், அப்பொழுதாவது நினைவுக்கு வந்து பணத்தைத் திருப்பித் தருவானென்று. மற்றும் சில நாட்கள் வேலையற்றுப்போய்த் தினந்தோறும் சந்திப்பேன். ஆனாலும் தரவில்லை.

    இதனால் பலன் இல்லையென்று, வீட்டில் மருத்துவமனை செலவென்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அசலைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்குப் பிறகு ஆறுமாதத்திற்கு வட்டிக் கொடுத்தான். இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆனது. அதற்குப் பிறகு அதனைப் பற்றிய பேச்சு எப்பொழுதும் எங்களுக்கு இடையில் வந்ததில்லை.

    நான் புத்தகங்களுக்காக இந்தப் பக்கம் வரும் பொழுதெல்லாம் அவனைச் சந்திப்பேன். உள்ளே நுழையும் வேளையில் அவனைச் சுற்றி இரண்டு மூன்று போர்ட்டர்கள், லாரி ஓட்டுநர்கள் சூழ்ந்திருப்பார்கள். அந்த அடாவடியில் என்னைப் பார்த்ததும் உள்ளே வா என்றவாறு சைகை செய்வான். உள்ளே வந்ததும் “என்ன விசயம். புத்தகத்துக்காக வந்தயா?’  என்றான் சீ.பி.ராவ். அவனுக்குத் தெரிஞ்சதுதான். பேச்சுக் கொடுப்பதற்காக, எதிரில் அமர்ந்ததும் யாருக்கோ டீ கொண்டு வரச் சொன்னான்.

    சீ.பி.ராவிடம் பகிர்ந்துகொள்வதற்கு எந்த விசயமும் இல்லை. என் சிறுபிராய நினைவுகளில் அவன் ஒரு பாகம். சந்திக்கும் பொழுது எங்களுக்கிடையில் பெரிதாக எந்தப் பேச்சும் இருக்காது. அவன் ஒரு பக்கம் ஓட்டுநர்களையும் போர்ட்டர்களையும் வேலை பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தன் வேலையைச் செய்துகொண்டிருப்பான். தலைப்பாகை அணிந்த போர்ட்டர் இருவருக்கும் டீ க்ளாசைப் பணிவுடன் கொடுத்தார், எங்கே டீ சிந்திவிடுமோ என்ற நிதானத்துடன்.

    மேசையின் மேல் பாக்ஸ்பைலோடு ரசீது எழுதிய பவுண்டு புத்தகம், கசங்கிய வாடிப்போன கார்பன் பேப்பர், மைக்கறை ரப்பர் ஸ்டாம்பு, மூடி இல்லாத பால்பாய்ண்டு பேனா. அறையின் நான்கு புறங்களிலும்  சாய்த்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள். அட்டைப் பெட்டிகளில் மளிகைக் கடை வாசனை. எனக்குப் பிடிக்காத வாசனை! சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீ.பி.ராவிற்கு சிறு வயதிலிருந்தே இந்த வாசனை பழக்கம்தான்.

    அவர்களுடையது மண்ணெண்ணெய் மளிகைக்கடை. என்றைக்காவது பள்ளிக்கூடத்திற்கு வரவில்லையென்றால் அவர்களின் மளிகைக் கடையில்தான் இருப்பான். கடையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குக் கணக்கு நன்றாக வந்தது. கணக்கு நன்றாக வந்ததால் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸில் குமாஸ்தா வேலை கிடைத்தது. எனக்குக் கணக்கும் ஆங்கிலமும் வராது. சீ.பி.ராவ் குறைந்தபட்சம் கல்லூரிப் படிப்பையாவது பூர்த்தி செய்தான். கல்லூரியில் அரியர் வைத்து, அதை முடிக்காமல் சிலநாட்கள் ஹார்டுவேர் கடை வைத்து திவாலாகி, சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கேயும் நில்லாமல் கடைசியாக எதுவும் இல்லாமல் ஆனேன்.

    சரியாக அந்த நாட்களில் நானும் அவனிடம் வியாபாரத்திற்காகக் கடன் வாங்கினேன். பல மாதங்கள் வட்டிகூடக் கட்டவில்லை. அதன் காரணமாக எங்கள் இருவருக்கிடையில் நட்பு கொஞ்ச காலம் கெட்டுப்போனது. ஒருநாள் காலையிலேயே பணம் வசூல் செய்வதற்காக வந்தான். எங்கள் இருவருக்கிடையில் அன்றைக்குப் பெரிய வாக்குவாதம் நடந்தது. தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி அன்றைக்கு அவனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு எங்கள் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் இல்லை.

    மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு  வழக்கமான நண்பர்களானோம். நமக்குள்ளே இருக்கிற சந்தேகங்கள் இப்பொழுதுவரை அப்படியே தான் இருக்கிறது. எங்கள் பேச்சுகள், சந்திப்புகள், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. நான் வாங்கிய புத்தகங்களைச் சீ.பி.ராவ் திருப்பிப் பார்த்து, “இன்னும் உனக்குப் பைத்தியம் போகலையாடா” என்றான்.

    ஊரில் இருந்தபொழுது நான் புத்தகம் படிக்கம் வழக்கம் அவனுக்கு விந்தையாக இருந்தது. “அவ்வளவு நேரம் என்ன பண்றடா? அந்த நூலகத்துல” என்பான். அங்கே பணிபுரியும் வேறு மனிதர் முழங்கால் போட்டு அமர்ந்துகொண்டு சுவரில் சாய்ந்து பார்சலைக் கணக்கிட்டு எண்ணிக்கொண்டிருந்தார். சீ.பி.ராவ் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறானே தவிர எனக்குக் காதில் எதுவும் ஏறவில்லை. அங்கே ஒரே வாசனை! மண்ணெண்ணெய் வாசனை! கோணிப் பை, வெங்காய மளிகைக் கடை வாசனை.. போர்ட்டர்கள் ஏதோ கோணிப் பையில் கட்டிய பெட்டியை உள்ளே தூக்கிக் கொண்டுவந்தார்கள். அங்கே அமர்வதற்கு விரும்பவில்லை. மறுபடியும் பார்க்கலாம் என்று வெளியே வந்தேன்.

    அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நின்றிருந்தேன். விசாலமான அத்திமரம் தன் கைகளை விரித்து நின்றிருந்தது. வெயிலில் மினுங்கிக்கொண்டிருந்த இலைகள் காற்றுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டன. பூமியில் அமைதியைக் கொடுக்கக் கூடிய இடம் எது? ஏதோ பெரிய மிருகம் எதையோ சாப்பிட்டது போல பயத்தைக் கிளப்புகிறது.

    மரத்தின் கீழே நின்றிருந்தேன். முகத்தில் அனல்காற்று அடித்தது. வீதியின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டி அருகில் நாய் எதிலேயோ முகத்தை வைத்துக் கிளறிக்கொண்டிருந்தது. சாலைக்கு அப்பால் காகிதக் குப்பைக் குவியலை ஒட்டி தார்ப்பாய்க் கொட்டகை முன் தரையில் விரிக்கப்பட்டிருந்த அழுக்குப் பாயின் மேல் இளைஞன் ஒருவன் ஸ்மார்ட் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    அதற்கு அப்பால் பக்கத்திலிருக்கிற கூடாரத்தின் முன் மரத்தில் கட்டிய தூளியில் பச்சிளங்குழந்தை தூங்கிகொண்டிருப்பதுபோல் கனமாக அசைகின்ற அமைதி இருந்தது. தொட்டிலுக்குக் கொஞ்ச தூரத்தில் பெண்ணொருத்திப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். சாலைக்கு இரு புறங்களிலும் பாதையோர வியாபாரிகள், அதற்குப் பின்னால் ஷட்டர்கள், கடைகள், துணிக்கடைகள், பூவிற்பவர்கள், நடந்துகொண்டே எவ்வளவு தூரம் வந்தேனோ தெரியாது.

    தூரத்தில் நதி மீதுள்ள இருப்புப் பாலத்தில் செல்லும் ரயில். கிருஷ்ணாவந்தன மலை முடிவில் இருட்டத் தொடங்கியது. அந்தக் கடைசி மேற்குச் சரிவில் கடலை நோக்கி விழுகிற வெளிச்சத்தில் கருநிழல் பரவியிருந்தது. சந்தையில் கூட்டமாகப் போகின்ற மனிதர்களுக்கு இடையில் வேகமாக நடக்கின்ற சிவலிங்கம் தென்பட்டார்.

    அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனிதர்கள் தூரமாக விலகிப்போகிறார்கள். அவரை நோக்கிப் பார்க்கின்றேன் என்று  அறிந்து என்னை நோக்கித் திரும்பினார். படபடவென்று நடந்த கால்கள் நிதானிந்து என்னை நோக்கி வந்தன. முகத்தின் மெல்லிய சிரிப்பு, அருகில் வரவர பெரிதாகியது. சிரிப்பில் அவரின் பல் ஈறுகள் கூடத் தெரிந்தன. கறை படிந்த பற்கள். பக்கத்தில் வந்ததும் ‘சிவலிங்கம்’ என்றேன். அடையாளம் கண்டு பேச்சுக் கொடுப்பது போல.

    “யார் சார் நீங்க?’” என்றார் பயமுறுத்துவது போல்.

    கீச்சுக் குரல். கறைபடிந்த பற்கள். உடல்மேல் காற்றுக்கு அசைகின்ற கந்தல் ஆடை. எந்த மனநலக் குறைபாடு, அவரை மனிதர்களிடமிருந்து பிரித்தது என்று சொல்வது கடினம், சில நேரமோ, கொஞ்ச காலமோ அவருடன் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர. அவரின் சிரிப்பைப் பார்த்துக் கொஞ்சம் பயம் வந்தது. ஊர்ப் பெயர் சொன்னேன். நூலகத்தில் பல வருடங்களாக அவரைப் பார்த்ததைச் சொன்னேன்.

    “நீங்க அத்தங்கியா?” என்று மறுபடியும் அவர் யோசித்துக்கொண்டே தரையைப் பார்த்தார்.

    “ஒங்கள பார்த்த மாதிரி இருக்கு, ஆனா நினைவுக்கு வர்ல, பல வருஷம் ஆயிட்டுலா” என்றார்.

    இருந்தாற்போல “பத்ரய்யாவைத் தெரியும், நான் ரொம்ப வருசமா பார்க்கல. அந்த ஊர விட்டு வந்து ரொம்ப வருசம் ஆச்சு” என்றார். என் சந்தேக முகத்தைக் கவனித்து, “நூலக உதவியாளர்… ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார். நூலக உதவியாளர் பேர் பத்ரய்யா என்று எனக்கு இப்பொழுது வரைக்கும் தெரியாது. சிவலிங்கம்… பத்ரய்யாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அந்தப் பத்ரய்யாவிற்கு இந்தச் சிவலிங்கம் நினைவில் இருப்பாரோ இல்லையோ. அவரே பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சுக்கும்  சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. எதற்குச் சிரிக்கிறார் என்று சொல்வது கஷ்டம்.

    “நீங்க… இரசவாதம்…”

    “இரச… ஓ! அதுவா… இப்பவரைக்கும் கடையில… கிடைக்குமோன்னு. வேடிக்கையும் கூட. பணம் சம்பாதிக்கணும்னு சின்ன வயசுலயிருந்து எங்க அம்மா சொல்லுவா. தங்கம் செய்யும் ரசவாதக் கலையைக் கத்துக்கலாம்னு. அப்படி ஒரு புத்தகம் இருக்கும்னு தெரியும் ஆனா பாத்ததில்ல.” அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

    ‘வாழ்வது எவ்வளவு கஷ்டம் அவ்வளவு சுலபமில்ல. ஆமால்ல… எல்லாம் நம்மைப் பொறுத்துதான் இருக்கிறது பணத்தைப் பணம் சம்பாதிப்பது தெரிகிறது. பணத்தை ஒருத்தன் அரைமைல் ஓடி சம்பாதிப்பது மற்றொருவனுக்கு அது இருந்த இடத்திலேயே கிடைக்கிறது. கொஞ்சபேருக்குத் தெரியாமல், கொஞ்சபேருக்குத் தெரிந்து. அதைத்தான் எல்லாரும் புத்திசாலித்தனம்னு சொல்லுவாங்க’ என்றார் அண்ணியா.

    அவர் வக்கீல். ஒருமுறை நரசராவுபேட்டையிலிருந்து அவருக்குத் திருட்டு வழக்கு வந்தது. நகையை இழந்தவர்கள் வழக்குப் போட்டனர். திருட்டுத்தனம் செய்தவர்கள் உதை வாங்கினார்கள். மத்தியில் காவலர்கள், வழக்கறிஞர்கள் புகுந்தார்கள். பேச்சாலே நொடியில் ஐம்பதாயிரம் சம்பாதித்தார் அண்ணிய்யா. எல்லாம் மாயை! வாழணும்னா தந்திரமாயிருக்கணும்னு சொல்லுவார் எங்க அண்ணிய்யா. யோசிக்கணும்… யோசித்தால் விசயம் தெரியும். யோசனையே இருக்கணும்…’ திடீரென்று தான் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தினார்… ‘இத்தனைக்கும் நீங்க இரசவாதம் படிச்சிருங்கீங்களா?’

    மென்மை விலகிப் போன முகத்தில் கண்கள் உள்ளே போய் இருண்டு, இடது கண்ணில் பார்வையில்லாமல் கோடு  போன்ற வெண்மையான சாறு.  ‘இல்லை’

    ‘உலோகவியல் இல்லை… மாயாஜாலம்..’ சிறுபிள்ளை போலச் சிரித்தார், கண்களை மூடிக்கொண்டு. ஒல்லியான அவரின் சரீரம் மேலும் கீழுமாக ஆடியது. செங்குத்தாக இருக்கிற மூங்கில் குச்சி போல. பைத்தியக்காரனின் வெறித்தனம்!’

    இனி கிளம்புகிறேன் என்பதாகத் தலை அசைத்து முன்னே நகர முற்பட்டேன். அவர் சரியென்றவாறு இரண்டடி எடுத்து வைத்து தடால் என்று பக்கத்தில் வந்து, உள்ளங்கையை நீட்டி, ‘ஒரு  அஞ்சு ரூவா இருந்தா குடுங்க?” என்றார். நான் ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் ‘எதுக்கு அப்படிக் கேட்டாரோ, இதில் எதாவது ரகசியம் உள்ளதா? என்று யோசித்து மேல் பாக்கெட்டில் கைநுழைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்.

    ஒருநொடியில் ஆயிரம் யோசனைகள், நூறு  சந்தேகங்கள். தெரிந்தவர்தான்…. நூறு கேட்டார் என்றால்..? அவர் கேட்கவில்லை சரி.. அப்ப நான் ஐந்நூறு கொடுத்துருக்கலாம்ல…? அப்ப ஏன் ஐந்து ரூவா மட்டும் கொடுத்தேன்…? தர்மம் செய்யுங்கன்னு சொல்றாரா? திரும்பத் தருவாரா?

    நான் கைகளைப் பின்னால் எடுப்பதற்கு முன்பாகவே, அவர் அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு அதே கையால் என் கையில் எதையோ வைத்தார். ஒரு நொடி என்ன நடந்ததோ தெரியவில்லை. என்ன இருக்கும் என்று என் உள்ளங்கையைப் பார்த்தால் பளபளவென்று மின்னுகிற ஐந்து ரூபாய் நாணயம்! ஆனால் அது நான் கொடுத்தது இல்லை. வேறொன்று!

    அவர் ஒரு முறை என் பக்கமாகப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து, பின்னே திரும்பினார். என் உள்ளங்கையில் ஐந்து ரூபாய் நாணயம் எஞ்சியிருந்தது.

    Share
  • அவமானம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    அவமானம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    தெலுங்கு மூலம்: தும்மல ராமகிருஷ்ணா.
    துணைவேந்தர்,
    திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்

    தமிழ் மொழிபெயர்ப்பு: க.மாரியப்பன்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
    திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்

    எங்கள் ஊரில் எந்த ஒரு திருவிழா நடத்துவதாகவிருந்தாலும், ஒரு கங்கம்மா ஜாத்ரை (ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பெண் தெய்வ வழிபாடு – திருவிழா) செய்ய வேண்டுமென்றாலும் வலசை செல்ல வேண்டுமென்றாலும் காப்புக் கட்டுவதாக இருந்தாலும்… வெங்கடபதிராவ் முன்னிலையில்தான். அவர் இல்லாமல் எந்தச் சிறு வேலையும் நடைபெறாது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு அவர் வார்த்தையே வேதம். அவர் கிழித்ததே கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுபவர்கள் எவரும் கிடையாது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவரின் எதிர் நின்று பேசியவர்களை நான் பார்த்ததில்லை. அவர் எதிரில் வந்தால் அவரை விடப் பத்து வயது மூத்தவர்கள்கூடத் தலை குனிந்து ஓரமாகச் சென்றுவிடுவார்கள்.

    வெங்கடபதிராவ் பேரைச் சொன்னால் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பயந்து சாவார்கள். பெரிய பெரிய ஆட்களே பயந்து சாவார்கள் என்று சொன்னால் சின்னஞ்சிறுசுகளின் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    இருபத்தைந்து ஆண்டுகளாக வெங்கடபதிராவ் கர்ணமாக வேலைசெய்து வருகிறார். அப்பொழுதிலிருந்து அவர் வார்த்தைக்கு, அவருக்கு எதிராக எவரும் இல்லை. சுடுகாட்டுக்குப் போனவன்கூடக் கர்ணம் வார்த்தைக்கு மறுத்துப் பேசுவது இல்லை. மறுத்துப் பேசிவிட்டால் சுடுகாட்டுக்குக்கூடப் போகமுடியாது. கர்ணமாக இருந்தாரென்றாலும் பெரிய செல்வந்தர் இல்லை. ஆனாலும் இப்பொழுது அங்குச் சுற்றியுள்ள கிராமத்திலேயே ஓங்கியிருக்கும் பெரிய கை வெங்கடபதிராவே. அவர் எந்த நாளும் வெயிலில் கலப்பைப் பிடித்து உழுதது இல்லை. மண்வெட்டிப் பிடித்து வாய்க்காலில் இருந்து வயலுக்கு நீர்பாய்ச்சியதில்லை. இரவில் லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு வயலைக் காவல் காத்ததில்லை. அவ்வளவு எதற்கு முகத்தில் வெயில்கூடப் பட்டதில்லை. மழையில் நனைந்ததில்லை. பசியால் பட்டினிக்கிடந்தது இல்லை. அதனாலேயே சிவப்பாக, குண்டாக, மென்மையாக, உயரமாக இருப்பவர். அவரின் பெரிய கண்கள், பெரிய காதுகள். நீண்ட கைகளைப் பார்த்து அரைகுறை சாஸ்திரம் தெரிந்தவர்கள் அவரிடம் ஏதோ ஒரு வேலை உள்ளவர்கள் அவர் அதிர்ஷ்ட ஜாதகக் காரர் என்று புகழ்வார்கள். புகழ்ச்சி என்றால் வெங்கடபதிராவிற்கு மிக விருப்பம். அப்படி எல்லாராலும் புகழைப் பெற்றுக் கொண்டு கஷ்டப்படாமலே வெங்கடபதிராவ் நூறு ஏக்கர் நிலம் சம்பாதித்துக் கொண்டார். ஐம்பது ஏக்கர் மாந்தோப்பு, ஐம்பது ஏக்கர் தென்னந்தோப்பு வளர்த்தெடுத்தார். நான்கு பெண்களுக்கு வெகுவிமர்சையாகத் திருமணம் செய்தார். இரண்டு மகன்களும் பத்துத் தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்குச் சொத்துக்கள் சேர்த்துவைத்தார்.

    பக்கத்தில் சுற்றியுள்ள இடங்களில் ஓரிருவர் கர்ணமாக வேலை செய்து வந்தாலும் அவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. வெங்கடபதிராவ் கர்ணம் வேலையில் பழந்தின்று கொட்டைப்போட்டவர். அவ்வப்பொழுது வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் கூட வெங்கடபதிராவை அழைத்து ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்தப் பிர்காவில் எது நன்செய் எது புன்செய் அவர் சொல்வதுதான். எது பட்டா நிலம், எது புறம்போக்கு அவர் தீர்மானித்தது தான். யார் நிலத்தில் எங்கே சர்வே கல்லு உண்டோ, எங்கே என்ன இருக்கிறதோ, எந்தப் பாகம் மேடு, எந்தப் பாகம் பள்ளம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம். நிலத்தை நான்கைந்து முறை சுற்றி வந்து இது இவ்வளவு ஏக்கர், இது இவ்வளவு சென்ட் இருக்கிறது என்று அவர் சொன்னால், அதை அளந்து பார்த்தால் அந்த அளவே தான் இருக்கும். சர்வேயர் சங்கிலி வைத்து அளவெடுத்தால் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கும்.

    அந்த நாள், கங்கம்மா கோயிலில் மரியாதை தாம்பூலம் வாங்கிக்கொண்டு மேலவீதி வழியாக வந்துபொழுது தற்செயலாக வெங்கடபதிராவ் எதிரில் சின்னராயன் வந்தார். ஐராலப்பா அவ்வளவு தூரத்தில் இருந்தபொழுதே வெங்கடபதிராவ் வழியை மாற்றிப் புளியமரத்துப் வழியில் நடந்தார். வெங்கடபதிராவ் பின்னால் நடந்துகொண்டிருந்த தலையாரி சுப்புடுக்குக் கர்ணம் எதற்கு வழி மாறி நடந்தார் என்று புரியவில்லை.

    இரண்டு வருடங்களாகக் கர்ணம் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் ஐராலப்பா இருக்கிற தெருப் பாதையில் போவதில்லை.

    ராமர் கோயிலுக்கு வந்திருந்தபொழுது கூட மேலத்தெரு பாதையிலோ கீழத்தெரு பாதையிலோ போனார். வெங்கடபதிராவ் போன்றவர்கள் மகுடம் இல்லாத ராஜாக்கள் ஐராலப்பா எதிர்வருவதற்கு முன்பாகவே எதற்கு இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறார் என்று புரியவில்லை.

    தோப்பில் வெங்கடபதிராவ், அவருக்குப் பின்னால் தலையாரி சுப்புடு முன்னால் போகிற வெங்கடபதிராவ் பதித்த பாதத்தடத்தில்  தன் பாதத்தை வைத்து நடந்து சென்று கொண்டிருந்தான் தலையாரி சுப்புடு மனசெல்லாம் சின்னராயனை சுற்றிக் கொண்டிருந்தது.

    மனுசன் குள்ளமாக இருக்கிறார். நீண்ட சிவப்பு அங்கவஸ்திரத்தைத் தலையில் வட்டமாகச் சுற்றியிருக்கிறார். முடி போட்ட இடத்தில் வால் போல் தொங்கிக் கொண்டிருந்தது முண்டாசு. புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கு நேராகக் கோடு கிழித்தது போன்;று திருநாமம் வைத்திருந்தார். வலது தோள்பட்டையில் எப்பொழுதும் ஒரு சின்ன மூட்டைத் தொங்கிக்கொண்டிருக்கும். ஒருமுறை பார்த்தாலே போதும் எவ்வளவு தூரம் இருந்தாலும் அப்படியே அடையாளம் காணமுடியும். அவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. பிள்ளைகள், பெரியவர்கள் அனைவரும் அவரை “ஐராலப்பா” என்றே அழைக்கிறார்கள்.

    “இங்க நீ நில்லுடா சுப்பா” என்றார் மேட்டுக்கரைமீது நின்றுகொண்டிருந்த வெங்கடபதிராவ். அந்த நேரத்தில் தலையாரியின் சிந்தனையில் இருந்த ஐராலப்பா உருவம் மறைந்து போனது. சுப்புடு தலையைச் சொரிந்து கொண்டு நின்றான்.

    “என்ன.. சொல்லுடா… பொழுதாயிட்டு இருக்கு” மறுபடியும்

    “ஒண்ணும் இல்ல…சின்னப்ப கோனார் ஒரு வாரம் பத்து நாளா என் உயிர எடுக்குறான். மூணுரோடு பக்கத்துல ஐராலப்பா மானியம் நிலத்தை விற்கப்போறாராம். அதுக்குப் பக்கத்துல சின்னப்பனோட இரண்டு ஏக்கரு இருக்காம். ஐராலப்பா மானிய நிலம் இவனோட நிலத்துல சேர்ந்து இருக்காம். ஒட்டுணி போல யாராவது வந்து சேர்ந்து ஈட்டி மாதிரி உட்கார்ந்துருவான். அதனால சின்னப்பனே அதை வாங்கிக்கிறானாம். நீங்க இன்னொரு முறை ஐராலப்பாவைக் கூப்பிட்டு சொன்னா உங்க வார்த்தையைத் தட்ட மாட்டர்.

    ஐராலப்பா பெயர் காதில் விழுந்தவுடனேயே வெங்கடபதிராவுக்குக் கோபம் எரிச்சலாகியாது. முகம் சிவந்தது. “யாரைப் பத்தினாலும் என்ட்ட பேசு, அந்த நாசுவனைப் பத்தி என்ட்ட பேசாதடா சுப்பா” என்றார் கோபத்தோடு வெங்கடபதிராவ்.

    தலையாரி சுப்புடு வெங்கடபதிராவின் முன் வந்து வணக்கம் செலுத்தித் தன் வீட்டுத் தெருவில் நடந்தான். வெங்கடபதிராவ் சுமையோடு அடியெடுத்து வைத்து வேகமாகச் சென்றார். சுப்புடு மறுபடியும் வயல் வெளியில் நடப்பது சிரமம் என்று அரிசன காலனி வழியாக நுழைந்து வண்டித் தடத்திற்கு வந்தான். “ஜாக்கிரதையா பார்த்து வா! தலையாரி மாமா! முள்ளுகிடக்கும்! என்று கொல்லை வரப்பில் அமர்ந்து அருகம்புல்லைப் பிடுங்கி ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்துக்கொண்டே ஐராலப்பா சுப்பண்ணாவை அழைத்தார்.

    “ஒன் சகவாசம் ரொம்பக் கெட்டதப்பா!

    மிகைப்படுத்திச் சொன்னார் தலையாரி சுப்புடு.

    “என்ட்ட சகவாசம் வச்சுக் கெட்டுப்போனவன் இல்லை வா மாமா!”

    பேச்சைக் குறைத்தார் ஐராலப்பா.

    “சும்மா வந்து என்ன லாபம் சொல்லு” தலையாரி சுப்புடு பேச்சை இழுத்தார்.

    “நீயும் உன் கர்ணமும் லாபம் இல்லாம வேலை எப்ப செஞ்சேங்க! போட்டும்… வெத்தலை பாக்காவது போட்டுட்டு போ! வா!” ஐராலப்பா அழைத்தான்.

    “பக்கத்துல கூப்பிட்டு இன்னும் என் சட்டை பைல இருக்குறத துடைச்சு எடுக்கவா” இனி ஐராலப்பாவிடம் சுப்புடு சொன்னான்.

    “நீயும் ஒன் கர்ணமும் ஊர்ல இருக்கறவங்க சட்டைப்பையில இருக்குறத சுத்தமா தொடச்சு எடுக்குறீங்க நா ஒன் சட்டைப்பையில தொடச்சு எடுத்தா தப்பா!” ஐராலாப்பா தொடுத்த அம்பிற்குத் தலையாரி தலைகுனிந்து நின்றார்.

    ஐராலப்பாவிடம் பேசி nஐயிப்பது தன்னால் முடியாது என்று மனதில் நினைத்துக்கொண்டு, வேலையோடு வேலையாக வெங்கடபதிராவ், ஐராலப்பாவின் எதிர் நிற்காமல் முகம் மறைத்துக்கொண்டு எதற்குப் போகிறார் என்று அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும்…. “வந்துட்டு இருக்கேன், மாமா…! நீ எவ்வளவு பெரிய ஆளு! நீ கூப்பிட்டு நா வராம இருப்பனா…” என்று வேலியைத் தாண்டிக்கொண்டு வயலுக்குள் நுழைந்தான் தலையாரி சுப்புடு.

    இருவரும் வயல்மேட்டில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கு மென்றார்கள்.

    “மாமா! உன்ட்ட நா ஒன்னு கேப்பேன். சொல்லுவயா….? தலையாரி சுப்புடு ஐராலப்பா வார்தைக்காகக் காத்திருந்தான்.

    “தெரிஞ்சா சொல்றன்! கேளு” ஐராலப்பா தலையாரி சுப்புடுவிடம் சொன்னான்.

    “ஒன்னும் இல்ல, மாமா!… நம்ம கர்ணத்தைப் பார்த்தா எல்லாரும் மிரண்டு பார்க்குறாங்க. அவரு என்னமோ உன்ன பார்த்தா வேற பாதையில வழிய மாத்தி போறாரு எதுக்கு மாமா? தலையாரி சுப்புடு கேட்டான்.

    ஒருகணம் ஐராலப்பா மௌனமாக இருந்தான். தலையாரி சுப்புடு அந்த மௌனத்தைத் தாங்கமுடியாமல் இருந்தான். ஐராலப்பா என்ன பதில் சொல்வாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

    “அதெல்லாம் இப்ப எதுக்குப்பா…!”

    “இல்ல, மாமா! உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கணும்”

    “தெரிஞ்சு என்ன செய்யப் போற?”

    “நா என்ன செஞ்சா உனக்கென்ன? முதல்ல நீ அந்த விசயத்தைச் சொல்லு”

    தலையாரி சுப்புடு வற்புறுத்தினான்.

    தப்ப முடியாதென்று ஐரலாப்பா சொல்லத் தொடங்கினான்.

    “நீண்ட காலம் முன்பு அப்ப நீங்கல்லாம் சின்னப் பசங்க. கர்ணம் கிட்ட உன் அப்பா தலையாரியா வேல செஞ்சாரு.  கர்ணம் வீட்டு வேலைகள எங்க தாத்தன் பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து நாங்க செஞ்சுட்டு வந்தோம். முதல்லயிருந்தே நெல், தானியம், புளி வகையறா கொடுத்தது இல்ல. ஏதோ கர்ணம் இல்லயா அதனால எங்க ஆளுக கேட்டதும் இல்ல. கர்ணம் வீட்டுல வேல செஞ்சா போதும் எங்க ஐனங்க மத்தியில கௌரவம் கிடைக்கும்னு எங்க ஆளுகளோட நம்பிக்கை. அன்றாடம் காய்ச்சியா வாழ்றவங்களுக்கு மரியாதை என்ன இருக்கு? அவமரியாதை என்ன இருக்கு? இந்த விசயம் எங்க ஆளுகளுக்குத் தெரியாது.

    எங்க அப்பா பயண்ணா கிலக்கத்தியில் (ஊர்)   வெங்கடபதிராவ் அப்பா சிவய்யசாமியிடம் ஒருநாள் கேட்டாராம்.

    “இதுல என்ன இருக்குடா… பெரிய ஏரிக்குக் கீழ …மான்யம் பக்கத்துல எங்களோட பத்துக் குழி  விளைநிலம் இருக்கு. அதை நீ பயிர்ப்பண்ணிக்கோடா…. பத்து மூட்டை நெல்லு விளையும். நீ புள்ளக்குட்டிக்காரன். தர்மபிரபு அவர் சொன்ன சொல் தவறவில்லை. பத்து மூட்டை விளையுதோ ஐந்து மூட்டை விளையுதோ தெரியாது. அந்தப் பத்துக் குழி நிலத்தை எங்க ஆளுக தான் பயிர்பண்ணிட்டுவந்தாங்க. கிடைத்து விட்டதே என்று அவங்க வீட்டு வேலைய செய்யாம இல்ல. இப்படிப் பெரியவங்க சின்னவங்க காலத்துல இருந்து தொடர்ந்து நடந்து வந்தது. நடுவுல என்ன வந்ததோ என்னமோ….

    வெங்கடபதிராவ், அவர் அண்ணன் சங்கர்ராவ் பெரியவங்களாக ஆனதும் என் அப்பா அங்கு வேலை பார்ப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அண்ணன்தம்பி இரண்டுபேரும் சவுடேபள்ளியில் இருந்து பெயிலாகி வீட்டுக்கு வந்தாங்க. பெரியவரு வயல்வேலை செய்தாரு. சின்னவர் கர்ணம் வேலை கற்றுக்கொண்டிருந்தார். அவர்களின் அப்பா இறந்தபிறகு இவரே முழுநேர கர்ணம் ஆனாரு.

    வெங்கடபதிராவ் மென்மையாகப் பேசக்கூடியவர். உள்ளுக்குள்ள வேரையே வெட்டுறவர். பெரியவர் வழ வழன்னு கூச்சல் போடுபவர். அதுமட்டுமல்ல உள்ளுக்குள்ள எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். சாதிப்பவரும் இல்லை.

    என் பிள்ளைகள் இப்படி அப்படிப் படித்து ஒருவன் டீச்சர் உத்யோகம், ஒருவன் அட்டண்டர்; வேலையில் சேர்ந்து அவர்கள் வழியில் அவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மிச்சமிருப்பது நான், என் மனைவி, பெண்பிள்ளைகள்…நாங்க எங்க போவது. அந்த வயல் வேலைகளைப் பார்த்துக்கொண்டு விளைச்சல் நிலத்தில் ஏதோ பயிரிட்டு விளைந்ததைச் சாப்பிட்டுக்கொண்டு ஊரில் இருக்கிறோம்.

    ஒரு நாள் இருக்கின்றபொழுது உன் அப்பாவிடம் சொல்லி என்னை அழைத்துவரச் சொன்னார் வெங்கடபதிராவ். எங்கயாவது ஊருக்குக்கீருக்கு போகிறாரோ என்னமோ என்று சவரப்பெட்டியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு போனோன். வெங்கடபதிராவ் வீட்டுக்கு முன் உள்ள தாழ்வாரத்தில் நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

    “என்னங்க சாமி, அவசரமா வரச்சொன்னீங்க!” என்று கேட்டேன்.

    “எதும் இல்லடா! ஒன்ட்ட கொஞ்சம் பேசணும். எப்படிச் சொல்றதுனு யோசிக்குறன். நீ என்னமோ புள்ளகுட்டிக்காரன்” என்று குறைபட்டுக்கொண்டார்.

    “என்னன்னு சொல்லுங்க சாமி!” என்று கட்டாயப்படுத்தினேன்.

    அவர் அமைதியாக ஒரு நிமிடம் என்னை மேலும் கீழும் பார்த்து என் அப்பா போனபிறகு நிலத்தைப் பிரிச்சுக்கிட்டோம்டா! வீட்டு வேல செஞ்சதுக்காக மானியம் நிலத்துகிட்ட என் அப்பா உனக்குக் கொடுத்த பத்துக் குழி விளை நிலம் அண்ணன் பாகத்துக்குப் போய்ட்டு. அதை அவர் பெண் பிள்ளைகளுக்குச் சீர்வரிசைக்காக எழுதிகொடுத்தாராம். இப்பொழுது உன்னை அந்தப் பத்துக் குழி நிலத்துல செய்யாதன்னு சொல்லல. பெண் பிள்ளைகள் எங்கேயோ இருக்குறாங்க.  இந்த ஊரில் வயலை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்கள். எதற்காகவோ அதை விற்றுப் பணத்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த விசயத்தை உன்னிடம் சொல்லாமல் இருக்கிறார்கள். என்னைச் சொல்லச் சொன்னார்கள். என்னை நீ கெட்டவனா நினைச்சுக்காத. பத்து ரூபா கொடு கொடுக்காம போ. அந்தப் பத்துக் குழிய நீயே உன் பேர்ல எழுதிக்கோ. அந்த வேலைய நானே செஞ்சு தாரேன்… வீட்டு வேலையைத் தவிர்க்கவேண்டாம்! என்று மனதில் இருப்பதை வெளியில் கொட்டினார்.

    என் வயிறு எரிந்தது. மனுசனை எங்கன்னாலும் அடிக்கலாம் ஆனா வயித்துல அடிக்கக் கூடாது. விசுவாசம் இல்லாத மனிதர்கள். எங்க தாத்தா பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து அவங்களுக்குச் சவரம் செஞ்சோம். அவர்கள் வளர்த்த முடியைக் கத்திரியால் வெட்டினோம். அவர்கள் காலைப் பிடித்துக் கால் நகங்களை வெட்டினோம். ஆனால் என்ன லாபம்? மனிதர்களுக்குப் பணமே முக்கியமாகிவிட்டது. பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்திற்காக எழுதி கொடுக்க வேண்டும் என்ற அந்தப் பத்துக் குழியைத் தான் எழுதித் தர வேண்டுமா? அவர்கள் தலையில எழுதிய நிலங்கள் அவர்களுக்கு உரியது. இந்தப் பத்துக்குழி நிலத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் உள்ள பத்துக் குழியை எழுதிதரக்கூடாதா? எல்லாம் மாயவார்த்தைகள். முதலைக் கண்ணீர்…

    மறுத்துப் பேசாமல்-

    “சரி சாமி…. நீங்களே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லி ஒரு கணமும் நிற்காமல் வந்தேன்.

    கோடைகாலத்தில் நம் ஊரில் கங்கம்மா ஐhத்ரைக்குப் பிள்ளைகள் இருவரும் வந்தார்கள். சாமி சொன்ன வார்த்தைகளைப் பிள்ளைகளிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் கொஞ்சநேரம் குசுகுசுவென்று தனியாகப் பேசி “அப்படியே செய்யலாம்பா’ என்றார்கள். அவ்வளவுதான் நல்லநாளில் வெங்கடபதிராவுடன் புங்கனூர் போய் அவர்கள் கொடுத்த மொத்த இடத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்து அந்தப் பத்துக் குழி விளைநிலத்தை பட்டா செய்துவிட்டு வந்தேன். புங்கனூருக்கு வந்து போன கட்டணத்தையும் என்னிடமே தலையில் கட்டினார். அப்படியான விசுவாசம் இல்லாத மனிதர்கள். உடம்பு முழுக்க விஷத்தை நிரப்பிக்கொண்ட மனிதர்களை நான் எங்கும் கண்டதில்லை. அன்றிலிருந்து அவர்களின் முகத்தைப் பார்ப்பதில்லை. தொழிலை நம்பி வாழ்வதுதான் சரி என்றும் அதற்கு மிஞ்சி எதுவும் இல்லை என்ற தெளிவு வந்தது. மூன்று நான்கு தலைமுறைகளாக எங்கள் சின்னவர்கள் பெரியவர்கள் தொழில் செய்து வாழ்ந்தார்கள். என்ன நல்லாவாயிருக்குறோம்? எதுவும் இல்லை. அதற்குத்தான் பெரிய ஏரியில் தண்ணீர் வந்தபொழுது கூலி கீலிக்குப் போய் வயல் கால்வாய் வெட்டிக்கொண்டு இருந்தேன்;. அப்படிப்பட்ட வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் வெங்கடபதிராவ் அவசரமாக வரவேண்டும் என்று சொன்னார். என்னமோ என்று சென்றேன்.

    “அதைப் பேசி இதைப் பேசி மதனப்பள்ளிக்குப் போய் வரணும் தாடியைச் சவரம்பண்ணு” என்றார்.

    “நான் அவரின் முகத்தைப் பார்த்து நின்றேன். தாடி நன்றாக வளர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சாம்பல் தாடி அருவருப்பாக இருந்தது. நான்கு தினங்களுக்கு முன்பே வழித்திருக்க வேண்டிய தாடி. நான் எதுவும் செய்யமாட்டேன்… நான் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றிருப்பதைப் பார்த்து, “உன்னைத்தான், தாடியைச் செரை!” என்றார்.

    நான் எதுவும் பதில் சொல்லவில்லை. இப்பொழுது நான் அவர் வீட்டு வேலைக்காரன் கிடையாது. ஆவரிடம் நான் எதையும்  எதிர்பார்க்கவும் இல்லை. அதனாலேயே மிகச் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தேன். நாவிதர் பணி விட்டுவிட்டேன்” என்றேன். அநேகமாக என்னிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மறு பேச்சில்லை. என்னைத் தலைநிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வை இறங்கியிருந்தது. தலைகுனிந்து ஏதோ முணு முணுத்தார்.

    அப்பொழுது வெங்கடபதிராவ் என் கண்களுக்கு அடிப்பாகம் வரை வெட்டிப்போட்ட மரம் போல காட்சியளித்தார்.

    ஐராலப்பா சொல்வதை நிறுத்தி –

    “நீயே சொல்லுடா, சுப்பா! நான் செய்தது தப்பு என்கிறாயா?” சுப்புடுவின் முகம் நோக்கிக் கேட்டார்.

    “இங்கிதமானவர்கள் எவரும் நீ செய்தது தப்பு இல்லை என்பார்கள் மாமா! என்று ஐராலப்பாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டான் தலையாரி சுப்புடு.


    தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா. திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர். தெலுங்கு எழுத்தாளர். இவரின் கதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், துளு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் மட்டிப்பொய்யி, அடப்பம் தெலுங்கின் சிறந்த கதைகளாகும். பேசபட்டக் கதைகள். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியவர். ஆந்திர எழுத்தாளர்களில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.

    தும்மல ராமகிருஷ்ணா, திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.

    மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

    பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

    Share
  • பென்ஷன்

    பென்ஷன்

    பாஸ்கர்

    என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன். கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது. அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை. ஏகப்பட்ட கடிதம், தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை.

    “கட் ஆப் எண்பத்தி ரெண்டு. ஒரு வருஷம் கூட.. சாரி” என்றார்கள்.

    “சார், நாற்பது வருஷ சர்வீஸ் என்றேன்”

    “…. கேஸ் போடு …. ஜட்ஜு கிட்ட கூட்டி போ..”

    “தப்பில்லையா சார்…?”

    “பணம் வேணும்னா எதை வேணா செய்யலாம்..”

    “சண்டை போட்டு பணமா… வேணாம். அடுத்த பஸ்ல போயிடலாம்.”

    “இல்ல. நாளைக்கு அம்மாவுக்கும் உபயோகமாக இருக்கும்” என்றேன்.

    அவர் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை.

    “இல்ல பா … ரங்கா விலாஸ்ல காபி சாப்ட்டுட்டு போலாம்.”

    ரெண்டு வாரம் கழித்து ஒரு கடுதாசி வந்தது.

    கலெக்டரின் பச்சை கையெழுத்து.

    “என் எழுத்துக்கு அவ்வளவு பலமா?”

    அப்பாவை எழுப்பினேன். “பத்து மணிக்கு பட்டணம் போகணும்” என்றேன்.

    “என்னத்துக்கு?” என்றார்.

    “பெரிய இடம், கொஞ்சம் நல்லா போனும்… மணியை கூப்பிடவா…?”

    “பிளேடு என்கிட்டே இருக்கு ..தாடியை எடுத்துடு…”

    “உன் இஷ்டம்” என்றார்.

    “அங்கவஸ்திரம் போட்டுப்ப இல்ல …”

    “இப்படி அலங்காரமா போனா எனக்கு வர பணமும் வராது.”

    “அப்படி இல்ல பா … ஒரு மாநேர்ஸ் என்றேன் ..”

    நிறைய பேர் இருந்தார்கள்.

    கலெக்டர் பேசினார். எல்லோரிடம் மன்னிப்பு கேட்டார். பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றார். கூட்டம் கலைந்தது.

    “ஆட்டோ” எனக் குரல் கொடுத்தேன்.

    “பஸ்லயே போலாம்” என்றார். அவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த கனமான மனம் அவர் இறந்த போது கூட வரவில்லை.

    Share
  • நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
                        உதவிப்பேராசிரியர்
                        ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ’எச்’ தாலுக்காவின் ஐம்பதாம் எண் வாக்குச்சாவடி எதுவென்று தெளிவானது. நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள நெடும்பாவில்

    “கலெக்டரின் கணினியில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று இதுதான்” என்பதை முதலாவது சாவடியின் ஆபிஸர் சிவப்பட்டேரிக் கூறினார். உயர் இரத்த அழுத்தத்தைக் காரணம் காட்டி தன்னை தேர்தல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    பழக்கப்பட்ட தாலுக்கா ஆபிசின் வாசிலில் நானும் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒரு வாக்குச்சாவடி அசிஸ்டெண்டும் உடன் இருந்தனர். நாங்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருள்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தோம்.

    அதற்கிடையில் ஒரு பழக்கமில்லாதவன் எங்க பக்கத்தில் வந்தான்.

    ”இங்க எங்கே…….?” அவன் நலம் விசாரித்தான்.

    ”நெடும்பாவிற்கு” நான் சொன்னேன்.

    ”ஹா! நெடும்பா!

    நல்ல இடம்…… .நா பல தடவ அங்க போயிருக்கேன்”  அறிமுகமில்லாதவன் இனம் புரியாத சிரிப்புடன் கூறினான். அவனின் கண்கள் ஜொலித்தது. நான் கொஞ்சம் சந்தேகத்தோடு சிவப்பட்டேரியின் முகத்தைப்பார்த்தேன்.

    ”அங்கே சௌகர்யமா இருக்குமா?”

    சிவப்பட்டேரி அவனுக்கு நேராகத் திரும்பினான்.

    சாரே என்ன சௌகர்யம் வேணும்? நல்ல காட்டுப்பூனை போல இருக்கிற பொம்பளங்க இருக்கற ஊருதா. வெளியிலிருந்து வர்ற ஆளுங்களப் பார்த்தாலே குதித்து விழுவாங்க. கறுப்பா இருந்தா என்ன? தேகத்தோட ஒரு வடிவமிருக்கே? போதாக்குறைக்கு பச்ச மருந்துகளோட மணமும்; அறிமுகமில்லாதவன் இவ்வளவும் கூறி, கூடுதலாக வேறெதுவும் கேட்க இடந்தராமல் கூட்டத்தில் கலந்தான்.

    மதியவேளை. ஜீப் அதிகவேகமாகப் பாய்ந்தது. நான் ரூட் ஆபிசர்க்கும் டிரைவருக்குமிடையில் அமர்ந்திருந்தேன். சிவப்பட்டேரியும் மற்றுள்ளவர்களும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  பின்னால் அவர்களுக்கு நடுவில் இரண்டு வாக்கு பெட்டிகள். எண்ணி அடுக்கப்பட்ட எண்ணூற்றி முப்பது வாக்கு காகிதங்கள். திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை அழியாத மை. அரக்கு. முத்திரை. காடாத்துணிப் பைகள் முதலியவை. ஜீப் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற நகரக்காட்சிகளில் ஆங்காங்கே காமசூத்ராவின் விளம்பரங்கள். அவை படிப்படியாக இல்லாமல் போனது. வெளிக்காட்சிகள் மாறியது.

    காய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செருப்புகளும், தொங்க விடப்பட்ட தோல் சுருளுகளும், நாங்கள் கடந்து செல்வது செருப்பு தைப்பவர்களின் கிராமம் வழியாக என்பதை வெளிப்படுத்தியது.

    வரண்ட உற்சாகமற்றச் சற்றுப்புறங்கள். ஏதோ பழமையான ஒரு கடவுளின் கோயிலுக்கு முன்னால் சில சிறுவர்கள் அம்மணமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். நிழல்களில் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள்.

    ”இனியும் ரொம்பகாலத்துக்கெல்லாம் இவங்க  செருப்பு தயாரிக்க மாட்டாங்க” வயதானவர்கள் மேலிருந்த பார்வையை நகர்த்தி ரூட் ஆபிஸர் கூறினார்.

    ”அது ஏ அப்படி?” டிரைவர் அந்த காரணத்தை அறிய விருப்பம் காட்டினார்.

    ”மிருக வதை நிறுத்தப் போறாங்க இல்லையா?. அப்பறம் இவங்களுக்கு தோல் எப்படிக் கிடைக்கும்” ரூட் ஆபிஸர் கம்யூனிசக் கண்ணோட்டத்தோடு கூறினார்.

    ஜீப் போய் கொண்டிருந்தது.   காய்ந்த கிளைகளுள்ள மரங்களுக்கிடையில் வெயில் மின்னியது. நான் கண்களை மூடினேன். பிறகெப்போதோ குயவர்களின் ஊர் வந்தது. வரிசை வரிசையாக மண்பாண்டங்கள்.

    ”நாம இனியும் அந்த எடத்துக்குப் போகல இல்லையா?” பின்னாலிருந்து மூன்றாம் ஆபிஸரான அரபி  மொழியாசிரியர் கேட்டார்.

    ”பாதி தூரம்தான் ஆயிருக்கு” ரூட் ஆபிஸர் கூறினார். சுவர் விளம்பரங்களோ வெளியில் எங்கும் காணவில்லை. ஒரு பாலைவன பூமி போன்ற இடம் வழியாக ஜீப் நகர்ந்தது.

    முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மஞ்சள் கட்டிடத்தின் முன்பாக ஜீப் தனது பயணத்தை முடித்தது. அரசு அலுவலகம் என்று சுவரில் கறுப்பு நிற எழுத்தால் குறிக்கப்பட்டிருந்தது. நான் வெளியிலிறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். செம்மண் மைதானத்தின் ஓரங்களில் கறுப்பு நிறப் பாறைகளும், நரைத்த முடி போன்ற ஒரு வகை புல்லும், வடக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரமும் அசையாமல் நின்றது.

    ”இங்கேயெல்லாம் யாரையுமே காணோமே” சிவப்பட்டேரி சொன்னான்.

    ”ஆளுக எல்லாம் அங்கக் கீழே இருப்பாங்க. ரூட் ஆபிஸர் காற்றாடி மிஷினுக்கு நேராக கை காண்பித்தார்.

    போலிங் அசிஸ்டெண்டும், மற்ற இரண்டு சாவடி ஆபிஸர்களும் ஜீப்பிலிருந்து தேர்தல் அறைக்கான பொருட்களைக் கீழே இறக்கினர். ரூட் ஆபிஸர் கட்டிடத்தைத் திறந்தார். அதற்குள்ளிருந்து நாற்றம் வந்தது.

    “நாசம் புடிச்ச எலிங்க. நேத்துதா அத்தன எலிப்பீயையும் எடுத்து வீசினேன்” ரூட் ஆபிஸர் கோபப்பட்டார்.

    எலிகளை எங்கும் பார்க்க முடியல ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்கிற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன.

    ”பாத்துக்கோ இன்னைக்கு இங்க ஆளிருக்கு. தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியும்  புடிச்சு ஒரு போலீஸ்காரணும் நிப்பா” ரூட் ஆபிஸர் எலிகளை மிரட்டினார். அவைகளோ அவரின் மிரட்டலை ஏற்றுக்கொண்டது போல மேலும் சத்தமிட்டது.

    “பரவால்லே” ரூட் ஆபிஸர் தனது வேலையில் ஈடுபட்டார். அவருக்கு அவசரமாகத் திரும்பிப்போக வேண்டியிருந்தது.

    ”கீழே ஐயா என்கிற ஆளோட டீக்கடை இருக்கு. சாப்பாடு அங்கே கிடைக்கும். தண்ணிக்கும் பிரச்சனையில்லை. இதுக்கு மேலே ஒரு சௌகர்யம். இந்த மாதிரி இடத்தில எதிர் பார்க்கக் கூடாது இல்லையா?”. அவர் அலுவலகத்தின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கு நேராக நடந்தார்.

    நாங்க வேலை தொடங்கினோம். நெடும்பாவில் வெயில் மங்கத் தொடங்கியது. இருட்டறதுக்கு முன்பு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. அதிகாலைல எழுந்திருக்க வேற செய்யணும். போலிங் ஏழு மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். திடீரென என்னமோ மேலிருந்து வந்து எங்களுக்கு நடுவில விழுந்தது.

    நான் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடினேன். வெளியில் கறுப்புநிறச் சிறுவன். அவனுடைய கண்களில் விசித்திரமானப் பார்வை தெரிந்தது. ஒன்று ரெண்டு நிமிடங்கள் அவன் அப்படியே நின்றுவிட்டு வேகமாக ஓடினான்.

    ஒரு கல்லில் பொதிந்து எதையோ அவன் எங்களுக்கு நடுவில் எறிந்த செய்தியை அதற்குள் அனைவரும் வாசித்திருந்தனர்.

    ”ஒ. இது கொடூரம் தான்” அரபி மொழியாசிரியரின் முகம் வெளிறியது.

    ”நாம என்ன பண்றது”?. ரெண்டாம் போலிங் ஆபீஸரான ஓவிய ஆசிரியர் பயத்தோடு கேட்டார்.

    வெளியில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. எங்களது கவனம் அங்கே திரும்பியது. கரும் நீல நிற வாகனம் ஒன்று மைதானத்திற்கு அருகில் நின்றது. யூனிஃபோம் அணிந்த ஒரு போலீஸ்காரன் கையில் மூங்கில் தடியும் மற்றொரு கையில் பையுடன் இறங்கினான். பையை கீழேவைத்துவிட்டு மூங்கில் தடியை இடது தோளில் சொருகிவிட்டு வாகனத்தின் முன்சீட்டில் இருக்கும் மேலதிகாரியை அதிகாரப்பூர்வமாக வணங்கினார். வாகனம் திரும்பிச் செல்லும்வரை அவர் அதே நிலையில் நின்றார்.

    ”அப்பாடா! சரியான நேரத்துக்கு போலீஸ்காரர் வந்தாரே” போலிங் அசிஸ்டெண்ட் ஆபிஸர் நிம்மதியடைந்தார்.

    ”ஒவ்வொரு கல்லையும் நான் அசைத்து பார்ப்பேன். நெடும்பாவில் இருக்கிற ஒவ்வொரு கல்லையும்” போலீஸ் ஆபிஸர் நெடும்பாவில் கிராமம் வழியாக நடக்கும்போது என்னுடன் வந்த அவர் சத்தம்போட்டுக் கூறினார்.

    ”யாரு அந்த பையன்? பதுங்கி நிக்காம சீக்கிரமா வெளில வர்றதுதான் நல்லது”. அவர் புல்தரையில் நின்றுகொண்டு சத்தமிட்டார் பதிலொன்றும் எழவில்லை

    ”எல்லோரோட முட்டியயும் அடிச்சு ஒடச்சிருவேன். வாடா வெளில” அவர் ஷூக்களணிந்த வலது காலை நிலத்தில் ஓங்கி அடித்தார்.

    ”சார் இங்க நில்லுங்க, நானொரு கை பாக்கறே” அவர் ஒரு வேட்டைநாயைப்போல இருப்பக்கங்களிலும் கவனமாகப்பார்த்துக் கொண்டு ஒரு வைக்கோல் போருக்குப்பின்னால் மறைந்தார். சிறிது நேரம் கழிந்து வெற்றியரவத்தோடு அவர் வெளியில் வந்தார். அவருடன் கூனிக்குறுகி நடுங்குகின்ற ஒரு கிழவனுமிருந்தார்.

    ”நானிந்த ராஸ்கலைப்  வைக்கோலுக்குள்ளிருந்துதான் புடிச்சேன். போலீஸ்காரன் அவரை எனக்கு முன்னால் நகர்த்தி நிறுத்தினார்.

    வயதானவரின் கண்களில் வெண்மைநிற அடையாளம் இருந்து.

    ”சொல்லடா. உன்னோட பேரு என்னான்னு?” போலீஸ்காரர் கர்ஜித்தார்.

    ”சௌக்கார்” கிழவன் கூறினான்.

    ”அந்த திமிரெடுத்த பையன் உன்னோட யாரு?

    கிழவன் பேசவில்லை. அதற்குள் மறைவிடங்களிலிருந்து பலரும் வந்தனர். கறுப்பு நிற சிலை போன்ற முகங்கள்.

    ”ஓ ஒளிஞ்சிருந்தீங்களா? போலீஸ்காரன் ஏளனமாகக் கேட்டு மற்றுள்ளவர்களுக்கு நேராக நகந்தார். அவர்கள் யாரும் அசையவில்லை. உறைந்தக்காட்சிகள்.

    ”பரவாயில்ல. இங்க உங்கக் கூட்டத்தில நிறைய அழகிக இருக்காங்கனு கேள்விப்பட்டேனே. அவங்க எல்லா எங்கே? பச்ச மருந்துகளோட வாசனை தானே அவங்களுக்கு”?

    போலீஸ்காரர் தன்னை உற்றுப்பார்க்கின்றவர்களுக்கு முன்னால் மூங்கில் தடியை வாயுவில் சுழற்றிக்கொண்டு நடந்தார்.

    “காட்டுப்பூனைகளோட அறிவு. பச்சை மருந்துகளோட வாசம்.

    ”நானிங்க வந்ததே அதையும் மனசில வெச்சுதா. ட்யூட்டி மட்டும் வேணும்னா எனக்கு வேற ஏதாவது இடத்தில வாங்கியிருக்கலாம்” போலீஸ்காரன் சிரித்தான். அவருடைய மூங்கில் தடி அப்போது வலது கை தொடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

    “சார் நமுக்குப் போகலாம்” நான் அவரை அழைத்தேன்.

    “உம். ஆனா நா இங்க வருவே. எனக்கு வேண்டியது நல்ல பரங்கி மாங்காய் வற்ற வெச்ச சாராயமும், ஒரு கோழியும், ரெண்டு பொம்பளைகளும். புரிஞ்சுதா? ” அவன் என்னுடன் நடந்தார்.

    நான் திரும்பி பார்த்தபோது. பார்வை, துணுக்கு செய்தி அனுப்பின சிறுவனை எங்களுடைய கண்கள் அடைந்தது. ஒரு நிமிடம் நான் திகைத்துப்போனேன்.

    ”இத பாத்தீங்களா? டீக்கடை நடத்தும் ஐயா, கரிபடர்ந்த சுவரில் உள்ள ஒரு நோட்டீஸை சுட்டிக்காண்பித்தார்.

    ”நெடும்பாவில் சொல்கிறது” அதுதான் நோட்டீஸின் தலைப்பு சிவப்பு எழுத்துக்கள்.

    யாரு இத இங்க ஒட்டனாங்கனு தெரியல, ஆனா புடுங்கி வீச தைரியமில்லை”. ஐயா சொன்னார். அவர் பச்சை நிறமுள்ள அரைக்கை ஆடையும், முழங்கால் வரைக்கட்டிய துண்டும். காதில் சின்ன கடுக்கணும் அணிந்திருந்தார். அவருடைய கால் முழங்காலுக்குக் கீழே சொரிந்து வீங்கியிருந்து.

    பார்த்துக் கொண்டிருக்கவே நெடும்பாவில் இருட்டானது. எலிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. வெளியில் மைதானத்தில் சத்தமிட்டுக் கொண்டு  காற்று வீசியது. இந்த சப்தங்கள் அச்சத்தை உருவாக்கின.

    ”காற்று இப்படி ஓசையிடுவதை நான் இதுவரைக் கேட்டதே இல்லை” சிவப்பட்டேரி கூறினான்.

    தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல்கள் காற்றில் ஆடியது. உடனே வந்தர்றேன்னு சொல்லிட்டுப்போன போலீஸ்காரர் இனியும் வரவில்லை. காற்று சற்று அதிகமானது. நான் கேட்கறது போலீஸ்காரரோட அலறல்னு எனக்கு ஏதோ தோன்றியது. ஒரு வைக்கோல் போருக்கு முன் ஒரு விலங்கைப் போல நின்று அவர் அலறிக்கொண்டிருந்தார். தீ எரிந்து கொண்டிருந்து. அவரின் உருவம் தீ வெளிச்சத்தில் தெளிவானது. அவர் அம்மனமாக நின்றிருந்தார். குறிகள் தொங்கிக் கொண்டிருந்தது.

    ”நாம கூப்பிட்டுப்பார்த்தாலோ” நான் சிவப்பட்டேரிகிட்ட சொன்னேன்.

    அவர் உடனே என்னுடன் புறப்பட்டார். அவரிடம் டோர்ச் லைட் இருந்தது. நாங்க காற்றை எதிர்த்து நடந்தோம். இடைவெளி இல்லாத இருட்டில் காற்று ஆரவாரித்துச் சென்றது. புழுதி எங்களை மூடியது. பாறைகளின் வெப்பம் தணிந்திருக்கவில்லை.

    ”ஓய்”. ஒரு பாறைக்கு மேல் ஏறி நின்று சிவப்பட்டேரி கூவி விளித்தார்.

    அது இருட்டில் எங்கோ கலந்தது. மற்றொரு பாறையில் நான் ஏறி நின்றேன். நெடும்பாவின் கூரிருட்டைப் பார்த்து நான் சத்தமிட்டேன்.

    ஓய்…………….ஓய்.…………………..

    Share
  • தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

    பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

    ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

    செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

    தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

    ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

    அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

    இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

    சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

    “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

    அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

    ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

    “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

    “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

    “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

    “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

    “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

    “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

    முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

    “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

    ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

    குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

    ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

    தைப்பூசத்திற்கு முதல் நாள்.

    எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

    முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

    “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

    அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

    Share