வரி வாலாட்டிக் குருவி (White-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஓர் இடம்பெயரா வாலாட்டிக் குருவி. இதன் உடலின் மேலே கருப்பு மற்றும் கீழே வெள்ளையுடன், வெள்ளைப் புருவமும் கொண்டது. இது தனது நீண்ட வாலிறகைத் தொடர்ந்து ஆட்டும் பண்பினைக் கொண்டது. நீண்ட தூரங்களுக்கு மிக வேகமாகப் பறக்கும். மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பயணிக்கும்.
இந்தியாவில் பண்டைய காலங்களில், இந்தச் சிற்றினம் கூண்டுப் பறவையாக வளர்க்கப்பட்டது. இதன் குரலுக்காகப் பாராட்டப்பட்டது. இதன் மார்பில் விஷ்ணுவின் சாலிகிராம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இதைக் காண்பதை நல்ல சகுனமாகக் கருதினர். இந்தப் பறவை எங்கு அமர்கிறது, என்ன செய்கிறது என்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் சரத்சந்திர மித்ராவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (விக்கிப்பீடியா)
பலவிதமான ஒலிக் குறிப்புகளுடன் கூடிய இதன் குரலைக் கேளுங்கள்.
தமிழக வீதிகளில் மார்கழிக் கோலங்களைப் போலவே புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் கோலம் வரைவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் இத்தகைய கோலங்களைக் கண்ணுற்றால், எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம்.
இதன் பெயர் விஷ மூங்கில் (Spider Lily). பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஆங்கில விளக்கத்தில், நாட்டு மருந்து என்பதை folk remedy எனக் குறித்திருப்பது சரியா? பார்த்துச் சொல்லுங்கள்.
கோவை மாவட்டம், ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர் ரயில் ஒன்று ஓடுகிறது. பெரியவர்களும் உடன் செல்லலாம். மிகப் பழைய ரயில். உட்காரும் இருக்கை உள்பட, முழுவதும் இரும்பினால் ஆனது. சற்று தடதடவென்று செல்லும். தலா ரூ.30 கட்டணத்திற்கு எத்தனை ரவுண்டு அடிக்கிறார்கள் என்று பாருங்கள்.
தேசிய விவசாயிகள் தினமாகிய இன்று, நம் மாடித் தோட்டத்து அறுவடையைப் பாருங்கள். தம்பட்டை அவரை, மூக்குத்தி அவரை, நட்சத்திர வெண்டை உள்ளிட்டவற்றைப் பறிக்கும் காட்சிகள், இதோ உங்களுக்காக.
நிறைய இரட்டைவால் குருவிகளைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள் மீது அமர்ந்து வந்ததைப் பார்த்த நினைவு இல்லை என நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன், நோக்கர் (Facebook) உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார். இதோ, எருமையின் மீது இரட்டைவால் குருவி அமர்ந்து வருவதைப் பாருங்கள்.
ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.
இன்று கணித மேதை ராமானுஜனின் 134ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.
குரங்குகளைக் காண்பதற்கு முன்னதாக முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.
கோவை மாவட்டத்தின் வால்பாறை நகராட்சியில், ஆழியாறு பகுதியை அடுத்துள்ள கவியருவி என்ற குரங்கு அருவிக்குச் சென்று வந்தோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.
வெறுங்கையால் முழம் போடலாம். காற்றிலும் காவியம் தீட்டலாம். வெட்டவெளி, பொட்டல் காடு என்று வர்ணித்த இடங்கள், இன்று கோடிகளைக் குவித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான காற்றாலை மையங்களுள் ஒன்றாக, உடுமலைப்பேட்டை திகழ்கிறது. ஆண்டு முழுவதும் காற்று வீசும் இடங்களையே இதற்குத் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு காற்றாலையும் பல கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. அதே போல, இவற்றிலிருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுகிறார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காற்றாலைகளைக் கண்டு களியுங்கள்.