Month: March 2020

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13

    தி. இரா. மீனா      

    காட்டகூட்டய்யாவின் மனைவி ரேச்சவ்வே:

    ரேச்சவ்வே என்ற பெண் வசனகாரரான இவரின் கணவர் பெயர் காட்டகூட்டய்யா. “நிஜசாந்தேஸ்வரன் “ இவரது முத்திரையாகும்.

    “மலடான பசு பால் கறக்குமா?
    விரதம் கடைப்பிடிக்காதவரோடு இணையலாமா?
    விரும்பினால் நீ சேர்ந்து கொள் ;நான் சேரேன்
    நிஜசாந்தேஸ்வரனே”

    காடசித்தேஸ்வரா:

    சித்தகிரி மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க நிர்மாயப் பிரபு“ இவரது முத்திரையாகும்.

    1. “இன்று கவலையுள்ளோர் பன்றிகள்
    நாளைய கவலையுள்ளோர் நாய்கள்
    தன் கவலையுள்ளோர் துறவிகள்
    உன் கவலையிலிருப்போர் சரணர்கள்
    காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
    நிர்மாயப் பிரபுவே”

    2. “ஜங்கமரைக் கண்டால் கோபிப்பர்
    துறவிகளைக் கண்டால் வணங்குவர்
    இலிங்கம் கண்டால் ஒதுங்குவர்
    சிவவழிபாடெனில் திட்டுவர்
    நரபூசையெனில் மகிழ்வர்
    குரு தந்த இலிங்கம் நம்பமாட்டார்
    அந்தணன் உயர்வு பறையன் தாழ்வென
    நூற்றியோரு  சாதிகள் கூடியிருக்க
    கள்வனொருவன் இலிங்கமென நட்டு வைத்த ஒன்றிற்கு
    நோன்பிருந்து நியமம் காப்பர்
    இது போன்ற பக்தர்களுக்கு  எப்படி அருள்வான்
    காடனொளகாத சங்கரப்பிரிய சென்ன கதம்பலிங்க
    நிர்மாயப் பிரபுவே”

    காலகண்ணிய காமம்மா:

    கயிறு திரிக்கும் காயகம் இவருடையது. “நிர்பீத்த நிஜலிங்கம்” இவரது முத்திரையாகும்.

    “இலிங்கத்தில் என் புலன்களை இணைப்பேன்
    குருலிங்க சரணரின் பாதம் வணங்குவேன்
    இழிவான விரதத்தவரை அழிப்பேன்
    நிர்பீதி நிஜலிங்கத்தில்”

    கின்னரி பிரம்மய்யா:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்தவரை பொற்கொல்லனாக காயகம். கல்யாண் நகருக்கு வந்தபிறகு கின்னரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தொதங்கி அதையே காயகமாகக் கொண்டதால் கின்னரி பிரம்மய்யா ஆனார்.அக்கமாதேவியின் மீது உயர்ந்த மரியாதையுடையவர். “மகாலிங்கத் திரிபுராந்தகா” இவரது முத்திரையாகும்

    “ஆடை பாலை பொன் பாத்திரத்தில் பருகுவது பெருமையெனில்
    மண் பாத்திரத்தில் பருகுவது பெருமையற்றதா?
    சிவவழிபாடு செய்கிற உடல் புனிதமின்றிப் போகுமோ
    மகாலிங்க திரிபுராந்தலிங்கமே? “

    கீலாரத பீமண்ணா:

    பசுமாடு வளர்க்கும் காயகம் இவருடையது. “ஹரிபுர திரிபுராந்தகாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும்.

    1. ’கற்பூர விளக்கில் திரி வைத்து எரிக்க முடியுமா?
    புல்லும் தழையும் கொண்டு நெருப்பெரியுமா?
    தன்னுடலில் குத்தி வாளின் கூர்மையை நிரூபிக்கலாமா?
    அந்தந்த குணங்கள் பொருந்தும் அததற்கு
    மெய்லிங்கமறிந்தவனுக்கு வேறுபாடு புரியும்
    திரிபுராந்தகலிங்கமறிந்தவன் செயலிது”

    2. “வேட்டைக்காரன்,மீனவன் ,பொற்கொல்லன் போல
    வெறும் சொல்லில் பிரம்மம் பேசி சம்சார வாழ்வில்
    மூழ்கியும் வெந்தும் போகிறவர் பிரம்மத்தில் எப்படிச் சுகம்
    பெறுவர்?அறிவோடு வேற்றுமைகளைக் களைவோரே
    திரிபுராந்தகலிங்கனை வழிபடுவதற்குரியர்”

    குஷ்டகி கரிபசவேஸ்வரா :

    குஷ்டகி நகரிலுள்ள கல் மடத்தின் தலைமைப் பொறுப்பு இவரது காயகம். ”அகண்ட பரிபூர்ண கனகலிங்க குரு சென்ன பசவேஸ்வரா“ இவரது முத்திரையாகும். இயல்பான நிலையிலான சொற்கள் வசனங்களில் இடம் பெற்றுள்ளன.

    1. “இடுப்பின் இலிங்கம் மறந்து
    கோயிலின் இலிங்கம் முன்னால் நின்று
    சொற்களை வாரியிறைக்கும்
    திருடர் புலையர் முகம் காணக் கூடாது
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    2. “ஒழுக்கம் என்பதென்ன? அது சூலமா?
    பளிங்கு நீரை சட்டியில் எடுத்து வருவது ஒழுக்கமா?
    பரவுகின்ற மனதை கட்டுக்குள் வைப்பதே ஒழுக்கம்
    பெண்ணின் வண்ணம் கண்டு மயங்காததுவே ஒழுக்கம்
    பருவத்தின் கர்மம் வெல்வதே ஒழுக்கம்
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    3. “பல்லக்கில் அமர்ந்தால் பன்றி மன்னனாக முடியுமா?
    சேணம் போட்டால் நாய் குதிரையாக முடியுமா?
    சிறு பெண்ணொருத்தி வேசியாவாளோ?
    பொன் இரும்பாக முடியுமா?
    பக்தியில் பிழை செய்கிறவன் பார்ப்பதற்கு உகந்தவனில்லை
    அகண்ட பரிபூரண கனகலிங்க குரு
    சென்ன பசவேஸ்வரன் சாட்சியாக”

    கூகின மாரய்யா:

    கல்யாணில் புரட்சி நடக்கும் காலகட்டத்தில் சரணர்களைப் பாதுகாக்கும் பணியைக் கொண்டவர். பிஜ்ஜளன் படை வரும்போது அதையறியும் மாரய்யா கூவிக் குரல் கொடுத்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ததால் எச்சரிக்கை இவரது காயகமாகும். பிஜ்ஜளன்-சரணர் போராட்டத்தில் இறந்தவர்.”மக மகிம மாரேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

    “போலியான கல்லை மெருகிடுவாரேயன்றி
    அசலான கல்லுக்கு ஒளிதர முயல்வாரோ?
    சம்சாரத்திலிருப்பவனுக்கு ஆசையும் கோபமுமுண்டு
    உயர் குணம் கொண்ட சரணருக்கு இரண்டும் ஒன்றே.
    வேறுபாடற்ற இவ்வியல்பான இலிங்கம் தரித்தவன்
    மகாமகிமா மாரேஸ்வரனின் சரணராம்”

    கொட்டணத சோமம்மா:

    நெல் குத்துவது இவரது காயகமாகும்.சரணர்களின் வீடுகளுக்குச் சென்று நெல் குத்தி அரிசியாக்கித் தருவது. இந்த காயகத்தால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குருலிங்க ஜங்கம பணி செய்தவர். ”நிர்லஜ்ஜ சாந்தேஸ்வரா“ இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களே வசனத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது.

    “பதமறியாமல் குத்தினால் கிடைப்பதுநொய்யேயன்றி அரிசியில்லை
    ஈனரோடு சேர்ந்தால் நரகமல்லாது சுவர்க்கமில்லை
    அறியாமல் பிழை செய்தால் போகட்டும் ,அறிந்தே செய்யின்
    சுடுகத்தியால் செவியறுப்பார் அறிந்தும் தவறேன்
    ஆணை நிர்லஜ்ஜேஸ்வரனே “

                                 [தொடரும்]

    Share
  • சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

    சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

    தமிழிலக்கிய மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறை, 2/3/2020 திங்கள் அன்று சிக்கண்ணா அரசு கலைக்கலூரி, திருப்பூரில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்ரமணீயன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் சி.வி. தீபா தொடக்க உரை நிகழ்த்தினார். அவரின் உரையில் :

    தமிழ் உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்றாகும். படித்து உணர்ந்து கொள்ள தமிழில் பல்வேறு செவ்விலக்கியங்களும் நவீனப் படைப்புகளும் உள்ளன. நம் நாட்டுப் பிதா காந்தி அவர்கள் தன் தாய் மொழியான குஜராத் மொழியில் எழுதுவதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் சுயசரிதையையும் அவரின் தாய்மொழியில்தான் எழுதினார். தாய்மொழியில் கற்பதும் எழுதுவதும் பேரின்பம் தரும். இதயத்தைத் தொடும்.. தமிழில் மாணவர்கள் படைப்பிலக்கியங்களைப் படிப்பதும், படைப்பதும் அவர்களீன் வாழ்க்கையை மேம்படுத்தும்  என்றார்.

    பொருளியல் துறைத்தலைவர் மு.கி. விநாயகமூர்த்தி, வரலாற்றுத்துறைத் தலைவர் சங்கமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்

    எழுத்தாளர்கள்  எஸ் ஏ காதர், துசோபிரபாகர், சுப்ரபாரதிமணியன், ஆகியோர் சிறுகதைப் பயிற்சிப்  பட்டறையை நடத்தினர். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், வடிவங்கள், நவீன சிறுகதை அம்சங்கள் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளித்தனர்.

    முனைவர் பி. கருணாகரன், தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் நன்றி கூறினார்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நாங்குநேரி வாசஸ்ரீ

      120. தனிப்படர் மிகுதி

    குறள் 1191

    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி

    தான் நேசிக்கவரே தன்னைய நேசிக்குத பேறு பெத்தவுக தான் காதல் வாழ்க்கயோட பயன் ங்குத விதையில்லாத பழத்த அடைஞ்சவுக.

    குறள் 1192

    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி

    நேசிக்குத ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அன்பா இருக்கது வானம் தேவைப்படுத நேரம் மழையப் பெய்ய வச்சி உசிருகளக் காப்பாத்துததுக்கு சமானம்.

    குறள் 1193

    வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு

    நேசத்தால பிணைஞ்சு கெடக்கவுகளுக்குத்தான் (பிரிவுத் துயர்) திரும்ப வந்த பொறவு வாழலாம் ங்குத அகராதி இருக்கும்.

    குறள் 1194

    வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்

    தான் காதலிக்கவரோட நேசம் தனக்குக் கெடைக்காமப் போவுதவுக தீவினை வசப்பட்டவுகதான்.

    குறள் 1195

    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை

    நான் ஆசையா நேசிக்கவரு என்னய ஆசையா நேசிக்கலன்னா அவரால எனக்கு என்ன சந்தோசம் கெடைக்கப் போவுது?

    குறள் 1196

    ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
    இருதலை யானும் இனிது

    ஒருதலக் காதல் கொடும. காவடியோட பாரம் கணக்கா ரெண்டு பேர்க்கிட்டயும் காதல் இருக்கணும்.

    குறள் 1197

    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்

    மன்மதன் ரெண்டுபேர் பக்கமும் வாராம ஒருத்தர் பக்கமா நிக்கதால எம் மேனி முழுக்க காதல் நோயால பசலை படருதத புரிஞ்சிக்கிடல போல.

    குறள் 1198

    வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்

    தான் நேசிக்கவரு சொல்லுத நல்ல சொல்லக் கேக்காம பிரிஞ்ச சங்கடத்துல வாழுதவங்களப்போல கல்நெஞ்சக்காரரு வேற யாரும் இருக்க ஏலாது.

    குறள் 1199

    நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
    டிசையும் இனிய செவிக்கு

    நான் நேசிக்கவரு எம்மேல அன்பா இல்லாங்காட்டியும் அவரப் பத்தி சொல்லுத புகழ்ச்சி என் காதுக்கு சந்தோசத்தக் குடுக்குது.

    குறள் 1200

    உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு

    நெஞ்சே நீ நல்லாயிரு! உன்கிட்ட நேசமில்லாதவுககிட்ட உன் சங்கடத்தச் சொல்லுத. அதுக்குப் பதில சுளுவா கடல தூர் எடுத்துவுட்டுப் போ.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 70 (மூண்ட)

    சேக்கிழார் பாடல் நயம் – 70 (மூண்ட)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
    பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
    வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
    தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்

    திருநீலகண்டரின் தொழில் தந்த வருவாய் அதிகமாக இருந்தமையால் பெரும் பொருட் செல்வர்களின்  கூடாநட்பால்  இளமைத்  துறையில் எளியரானார்! பொருட் செல்வம், காமத்துடன் சேர்ந்தமையால் அவர் ஒரு பரத்தையுடன்  சேர்ந்து வாழலானார். அதனைக் கேள்வியுற்ற அவர் மனைவியார் பரம்பரைக்  கற்பொழுக்கம் கற்பித்த  மானம் பொறாத நிலையில் கணவருடன் பிணங்கி ஊடல்   கொண்டார்!   அவர் தம் கணவருக்கு  உரிய கடமைகளுடன் , புற  வாழ்க்கைத்  தொண்டுகளையும்  செய்து வந்தார்.

    ஆனால் கணவருடன் கூடி இணைந்து வாழும் இல்லறஉறவைப் புறக்கணித்து வாழ்ந்தார்.  ‘தேன் நிறைந்த தாமரையில் வீற்றிருக்கும்  திருமகள் போன்ற பேரழகுடையவர்’ அவர் என்ற தொடரால் அவள் கணவர் அழகிய மனைவியைத் துறந்த இழிநிலையைக்  குறிப்பிடுகிறார். இவ்வாறு தவறு செய்த திருநீலகண்டர், மனைவியின் புலவியாகிய  ஊடலைத் தீர்த்து அவருடன் கூடி வாழ முயன்றார்!

    அதன்பொருட்டு, அவர் தம் மனைவியார் விரும்பும் வண்ணம் வேண்டிய உதவிகளை செய்தார். அவரிடம் பணிவும் பரிவும் கலந்த இனிய சொற்களைக் கூறினார். இனிய  இயல்புடைய அவர்தம் களங்கமற்ற முகம், அவரிடம் எவ்வகைக்  கோபத்தையும் காட்டாமையால், அவருடைய ஊடல் நீங்கி விட்டதாக நினைத்துக் கொண்டார்.  மெல்ல அவரை நெருங்கிப்  பணிவு  கலந்த    இனிய சொற்களைக் கூறி,  அவரைத்   தழுவிக் கொள்ள  முயன்றார்! அப்போது அவர் மனைவியார் சரேல் என விலகி, நின்று கொண்டு தம் கணவனாரிடம் ‘’என்னைத் தொடாதீர்!’’ என்றார். ‘’என்னை மீண்டும் நெருங்க முயன்றால். ‘’என்று சினத்துடன் கூறி அவரை இழிவு படுத்தும் எல்லாச் சொற்களையும் வசவாக்கிச் சொல்ல நினைத்தார்!  ஆனால் நல்ல சொற்களையே கூறிப்  பழகிய அவர் வாயிலிருந்து, ‘’திருநீலகண்டம்’’ என்ற அவர் கணவர் போற்றும் சிவநாமமே   வந்தது! ‘’நீங்கள் வழிபடும் திருநீலகண்டத்தின் ஆணையே உங்கள்மேல் இருக்கட்டும்!’’ என்று அவர் கூறினார். சினங்கொண்ட போதும் தீய சொல்லைச் சொல்லாத அவர் ‘திருநீல கண்டம்‘ என்ற  சொல்லை மட்டும் கூறிய பண்புநலம் பெற்றுத் திகழ்ந்தார்.

    தம் வாழ்முதலாகிய சிவபெருமானின்  தியாகத்தை எண்ணி  வழிபட்ட  ‘திருநீலகண்டம்’  என்ற சொல்  அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. சிவபிரானிடத்தே அவர் பக்தி மேலும் மிகுந்தது!

    அவர் மனைவி கணவனின் அன்பு கருதி அணிந்து கொண்டிருந்த நகைகள் அனைத்தும்  ஒளியிழந்து விட்டன! இதனைச்  சேக்கிழார் ‘’பூண் தயங்கு  இளமென்சாயல் பொற்கொடி‘’ என்று குறிக்கிறார். அவர் உள்ளம் வருந்திய காரணத்தால் நகைகளும் ஒளி வீசத் தயங்கினவாம்!கணவரின் புறக்கணிப்பு, அவர்தம்   இளமை, மென்மை ஆகியவற்றுடன் ஐம்புலன்களும் ஈடுபடும்  சாயலும் உடைய பொற்கொடியை  ஒளியிழக்கச் செய்து விட்டனவாம்.

    ‘’மனைவி  உயர்வும்  கிழவோன் பணிவும்
    நினையுங்  காலைப்  புலவியுள்  உரிய‘’ என்பது தொல்காப்பியம்.

    ‘’சேல்தான்   திகழ்வயல்  சிற்றம்   பலவர்தில்  லைநகர்வாய்
    வேல்தான்   திகழ்கண்  இளையார் வெகுள்வர்மெய்ப்  பாலன்செய்த
    பால்தான்   திகழும் பரிசினம்  மேவும் படிறு  உவவேம்
    கால்தான்  தொடல்  தொடரேல் எம் கைத்தலமே! என்பது திருக்கோவையார்.

    ‘’எம்மைத்தீண்டுவீராயின் திருநீலகண்டம்‘’ என்ற தொடர், திருநீல கண்டரின்  வாழ்முதலாகிய சிவபிரானின் தியாகத்தைப் போற்றிய உயிர்த் தொடராகும். அத்தொடரை ஆணையாக்கிய அம்மையின் வாக்கு அடியாரின் உள்ளத்தை உலுக்கி விட்டது. ஆணை என்பது யாராலும் கடக்கவியலாத சக்தி!

    “நடுவிருள்   ஆடும்  எந்தை நனிபள்ளி யுள்க , வினைகெடுதல்  ஆணைநமதே“,

    “ஆனசொல்  மாலையோதும்  அடியார்கள் வானில் அரசாள்வர்  ஆணை நமதே“

    முதலிய திருவாக்குக்கள் காண்க. இந்த ஆணையில், ‘’எம்மை‘’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லின்  ஆற்றலைத் திருநீலகண்டர் உணர்ந்து கொண்டார்!   எம்மை என்றமையால்  உன்னை மட்டுமல்லாது, மற்றைய  மாதரையும், என் மனத்தாலும் நினையேன்!‘’ என்ற உறுதியை  அவருக்கு உண்டாக்கி விட்டது!  நீல கண்டம் என்ற சொல்  வேதத்தின் மையத்தில் உள்ளது என்று  புறநானூறு கூறுகிறது.

    ‘’கறை மிடறு அணியலும்  அணிந்தன்று  அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!’’ என்பது அப்பாடல்.இப்பாடலில் இறைவன் திருநாமத்தைக்   கூறித்  ‘’தீண்டா தீர்!’’ என்ற ஆணை! எச்சிற் பண்டத்தைத் தொட்ட உடம்பால் என்  நல்லுடலைத் தீண்டாதீர்!’’ என்று கூறியதால் ‘’மந்திரச் சொல்’’ விளைவித்த மகத்துவத்தை அறிந்து கொள்கிறோம்.

    Share
  • திருப்பு முனை

    திருப்பு முனை

    சு. திரிவேணி
    கோயம்புத்தூர்

    சுபாஷ் குட்டியோட வீடு ரொம்ப அழகா இருக்கும். வீட்டுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் பெரிய வேப்பமரம் நிக்கும். ஒரு குட்டி அணில் தினமும் ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரத்திற்குத் தாவித் தாவி விளையாடும். கொஞ்ச நேரம் தனியாக விளையாடும்; அப்புறமா அதைவிடப் பெரிய இன்னொரு அணிலைக் கூட்டிட்டு வரும். வேப்ப மரத்தின் கிளை பிரியற இடத்துல வரிசையா மூணு சின்ன ஓட்டை இருக்கும். இந்த ரெண்டு அணிலும் ஒவ்வொரு ஓட்டையா போய் எட்டிப் பார்க்கும்; ஓடிவந்து ஒண்ணா நிற்கும்; திரும்ப தனியா போய் எட்டிப் பார்க்கும்; மறுபடி ஓடி வந்து பக்கத்து பக்கத்துல நின்னுக்கும். சுபாஷிற்கு ரொம்பப் பிடித்த வேடிக்கை இதுதான். தினமும் பார்த்தாலும் சலிக்காது. வேறு எங்கேயும் அதிகமா போகமாட்டான். யாரு கூடயும் அதிகமா பேசவும் மாட்டான்.

    சுபாஷ் குட்டி ஏன் மத்த பசங்க கூட அவ்வளவு விளையாடுவது இல்லைன்னு அவங்க அம்மாவுக்கு ஒரே யோசனையா இருந்துச்சு. அன்னிக்கு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவங்களும் அணில அவனை மாதிரியே வேடிக்கை பார்த்தாங்க. சுபாஷுக்கு சந்தோஷம் தாங்கலை!

    “பண்ணும் பிரெட்டும் ரொம்ப க்யூட் மா!” காமிச்சு காமிச்சு கைகொட்டி சிரித்தான். இரண்டு அணில்களுக்கும் அவன் அப்படித்தான் பெயர் வைத்திருந்தான்.

    அவங்க அம்மாவுக்கு அவனோட உலகமே அந்த ரெண்டு அணில்தான்னு புரிஞ்சது. ஆனா ஏன்னு புரியல.

    மெதுவா பேசிக்கிட்டே கேட்டாங்க, “சுபாஷ் குட்டிக்கு பண்ணும் பிரெட்டும் தான் பிரெண்ட்ஸா? ஜாம் எல்லாம் இல்லையா?”

    ஜாம் பக்கத்து வீட்டுப் பையன். அவன் பேரு ஜெரோம். ஆனால் எல்லோரும் “ஜாம்” என்று தான் கூப்பிடுவார்கள். அம்மா கேட்டதும் சுபாஷுக்கு முகம் வாடி போச்சு.

    “இல்லமா.. அவங்க எல்லாம் என்னை சேர்த்துக்க மாட்டாங்க. என்னால வேகமா ஓட முடியல. கீழே விழுந்துட்டா என்னைப் பார்த்து சிரிப்பார்கள். ‘நீ வேணாம். போடா ஓரமா’னு திட்டுவாங்க. அதான் நான் யார் கூடயும் விளையாடுவதில்லை. ஆனா என்னோட பண்ணும் பிரடும் என்னோட நல்ல விளையாடும் தெரியுமா. என்ன எதுவுமே சொல்லாது”.

    சுபாஷ் அம்மாவுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. சுபாஷுக்கு காலில் பலம் குறைவு. அவன் ஓடி ஆடி விளையாட, விளையாட அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சுபாஷ் விளையாடவே போகமாட்டேன் என்று இருப்பது வருத்தமா இருந்துச்சு அவங்களுக்கு. அவன் மனசுல எவ்வளவு வருத்தம் இருக்கு. அதை முதல்ல சரி பண்ணனும்னு முடிவு பண்ணாங்க.

    “சுபாஷ்! நாளைக்கு ஸ்கூல் இருக்கா” ன்னு கேட்டாங்க.

    “இல்ல மா. காந்தி ஜெயந்தி. லீவு”

    அம்மாவுக்கு சந்தோஷமா இருந்தது. நம்ம பையனை சரிப்படுத்த ஒரு ஆள் கிடைச்சுட்டாங்க என்று தோணுச்சு.

    “காந்தி யாருன்னு தெரியுமா தம்பி?” ன்னு கேட்டாங்க.

    “காந்தித் தாத்தா”

    “அவரோட கதை தெரியுமா?”

    கதை கேட்க ஆசைப்படாத குழந்தை இருக்குமா?

    “அம்மா! அம்மா! ப்ளீஸ் சொல்லுங்க”

    “காந்தித் தாத்தா சின்ன வயசுல ரொம்பப் பயந்தாங்கொள்ளியா இருந்தாரு. அவங்க கிட்ட ஒரு அம்மா, உனக்கு எப்பல்லாம் பயமாயிருக்கோ அப்பல்லாம் உன்கூட சாமி இருக்கிறதா நினைச்சுக்கோனு சொல்லி ‘ராமா ராமா’ என்று சொல்ல கத்துக் கொடுத்தாங்க. அவரும், நாம தனியா இல்ல, நம்ம கூட சாமி இருக்குன்னு நினைச்சு நினைச்சு தைரியம் ஆயிட்டாரு.

    சரி, தைரியமா இருக்காரேன்னு அவங்க அப்பா தன்னை மாதிரியே வக்கீல் ஆகட்டும்னு படிக்க வச்சாரு”

    “அப்புறம்?”

    “வக்கீலுக்குப் படித்து முதன்முதலாகக் கோர்ட்டுக்கு வாதாடப் போன காந்திக்குப் பயத்துல கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ரொம்பப் பயந்து போய் பேச ஆரம்பிக்காமலேயே ஓடி வந்துவிட்டார். இனிமே கோர்ட் பக்கமே போக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு”.

    “அச்சச்சோ! அவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியா காந்தித்தாத்தா? அப்புறம் அவரை ஏம்மா தேசத்தந்தை என்று சொல்றாங்க? ஆனா அவர் தானே ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை போட்டு ஜெயிச்சது? அது வேற காந்தியா? அப்போ இந்த காந்தி அதுக்கப்புறம் வேலைக்குப் போகலையா? அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணினார்?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினான்.

    “பொறு! பொறு! சொல்றேன்… எல்லார் முன்னாடியும் பேச பயந்துக்கிட்டு ஓடி வந்தார் இல்ல, அது இங்கே இல்லை; தென்னாபிரிக்கா!

    கொஞ்ச நாள் கழிச்சு தென்னாப்பிரிக்காவில் ட்ரெயின்ல போயிட்டு இருந்த அவரைக் கீழே தள்ளி விட்டார்கள்…”

    “ஏன்மா டிக்கெட் வாங்கலையா?”

    “இல்ல, டிக்கெட் வச்சிருந்தாரு. இவரு கருப்பா இருக்காருன்னு சொல்லிக் கீழே தள்ளி விட்டுட்டாங்க.”

    “கருப்பா இருக்கிறதுக்கும் கீழே தள்ளறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”

    “இருக்குப்பா. அங்க எல்லாம் வெள்ளையா இருக்கிறவங்க சொகுசாய் இருப்பாங்க. கருப்பாய் இருக்கிறவங்களை ரொம்ப மோசமா நடத்துவாங்க. அதான் காந்தியையும் கீழே தள்ளி விட்டுட்டாங்க. அப்புறம் கீழே விழுந்த காந்தி திரும்ப எந்திரிச்சு நான் ஏன் கீழே இறங்கனும்?னு எதிர்த்துக் கேள்வி கேட்டாரு அவரை அடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். மூஞ்சியெல்லாம் காயம்! குப்பை மாதிரி அவரோட திங் செய்யலாம் தூக்கி வீசி இருந்தாங்க.

    அங்க ஸ்டேஷன்ல நின்னுகிட்டு இருந்த இந்தியர்கள் எல்லாம் ஓடி வந்து தூக்கி விட்டு மருந்து போட்டுவிட்டாங்க. காந்தியைக் கூட்டிட்டுப் போக வந்தவர் சொன்னாரு, ‘இங்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம். எங்களுக்குப் பழகிடுச்சு. நீங்க பேசாம இந்தியாவுக்கே போயிடுங்க. கஷ்டப் படாதீங்க’ அப்படின்னாரு”.

    “அப்படித்தானே பண்ணனும். இவர்தான் ஏற்கனவே பயந்தாங்கொள்ளி ஆச்சு!”

    “இல்லப்பா! இல்ல! காந்தி அன்னைக்கு அப்படிப் பண்ணியிருந்தா யாரோ ஒருத்தர இருந்திருப்பார். நமக்கெல்லாம் அவர் யாரென்று கூட தெரிந்து இருக்காது. நம்ம நாட்டுக்கே தேசத்தந்தையாக ஆக இருக்க மாட்டார்.”

    “அப்ப அவர் என்னம்மா பண்ணினாரு?”

    “அவர் எந்திரிச்சு முகத்தைத் துடைத்துகிட்டார். என்னை அவன் அடித்து கீழே தள்ளினதுக்கு காரணம் என் பெயரோ, நாடோ, என் குணமோ இல்லை, வெறும் நிறம்!

    இப்படி அர்த்தமில்லாத காரணத்தை வைத்துக் கொண்டு எத்தனை பேரை கஷ்டப்படுத்துகிறார்கள்! என்ன ஆனாலும் சரி, எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகள் என்னை மாதிரி கஷ்டப்பட விடமாட்டேன்! இவங்களோட இந்த எண்ணத்தை மாற்றியே தீருவேன்.

    நிறத்துக்கும் உருவத்துக்கும் மனுஷன் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று புரிய வைப்பேன்னு தெளிவா முடிவெடுத்தார். நிறைய போராட்டம் நடத்தினார். பேச பயந்து ஓடி வந்த அவர், பேசிப் பேசி பெரிய தலைவரானார்”.

    “எப்படிமா? அவர்தான் பயப்படுவாரே… அப்புறம் எப்படி?”

    “ஆமாப்பா. அவர் பயப்படுவார் தான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு இருக்குமில்லையா? ஒரு மொட்டு பூவாகிற மாதிரி, பூ காயா ஆகற மாதிரி அவருக்குள்ள இருந்த அறிவு அவருக்கு நம்பிக்கை கொடுத்து தைரியம் ஆகிடுச்சு”

    “சூப்பர்மா” கைதட்டினான் சுபாஷ்.

    “அவர் மட்டும் இல்ல, என்னோட செல்லக்குட்டியும் மனசு நெனச்ச எதையும் சாதிக்கலாம். நீ நினைச்சா பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா கூட வரலாம் தெரியுமா?”

    சுபாஷ் சிரித்தான்.

    “கண்டிப்பா தம்பி. முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. நீ மட்டும் மனசுல என்ன பண்ணனும்னு யோசி. தினம் பிராக்டிஸ் பண்ணு. உன்னால கண்டிப்பா முடியும். பேசவே முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்த காந்தித்தாத்தா ஒரு நாள் பெரிய தலைவரான மாதிரி நீயும் ஒருநாள் கண்டிப்பா பெரிய ஆளா வருவ! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குப்பா.”

    யோசனையில் ஆழ்ந்து போனான் சுபாஷ்.

    ஐந்து வருடங்கள் கழித்து நேஷனல் கவுன்சில் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசுப் பதக்கத்தை கழுத்தில் வாங்கி சிரிச்சிகிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்த சுபாஷைப் பார்க்க முடியாமல் அவங்க அம்மாவோட கண் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்திருந்தது.

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க, சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

    ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க, சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

    சி.ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

    துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு

    2020ஆம் ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்து, மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  இதுவரை உலகில் முப்பெரும் அணுவுலை விபத்துகள் [அமெரிக்காவில் திரிமைல் ஐலண்டு விபத்து, சோவித் ரஷ்யாவில் செர்நோபிள் விபத்து, ஜப்பானில் புகுஷிமா விபத்து]  நேர்ந்து பொதுமக்கள் பலரைப் புலப்பெயர்ச்சி செய்தும், பலருக்குக் கதிரடி கொடுத்தும், பேரிடர் அளித்தும்  அச்சமூட்டி வந்துள்ளன.  இந்த விபத்துகளால், பொதுநபர் இடரோடு, அணுவுலை இயக்க அமைப்பாளருக்குப் பெருத்த நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளன.  மேலும் உலகில் புதிய அணுமின் உலைகள் கட்டுவது நிறுத்தப்பட்டோ, தாமதிக்கப்பட்டோ, பழைய அணுவுலைகள் மூடப்பட்டோ, அல்லது செம்மை செய்யப்பட்டோ, புதிய அமைப்பு முறைகள், கட்டுப் பாட்டு விதிகள் மாற்றப்பட்டோ செலவுகள் எல்லைக்கு மீறிவிட்டன.  ஆகவே அவற்றைப் பாதுகாப்புடன் இயக்க விட்டுப் புதிய சுற்றுச் சூழல் மாசில்லா முறைகளில் சூரிய மின்சார உற்பத்தி, காற்றாலை மின்சார உற்பத்தி செய்ய நாடுகள் தொடங்கி விட்டன.

    Image result for small modular reactors

    Concept Drawing of GE High Temperature Gas Cooled Reactor.

    Image courtesy of World Nuclear Association

    ஆனால் நிலக்கரி, இயல்வாயு எரிசக்தி மின்சாரம், அணுசக்தி  மின்சாரம்  போன்று தொடர்ந்து பேரளவு அடிப்பளுத் திற மின்சாரம் [Baseload Power] பரிமாற, சூரிய சக்தியோ, காற்றாலை சக்தியோ ஈடு செய்ய முடியவில்லை. மேலும் சூரிய சக்தியை இரவில் பரிமாறச் சேமித்து வைக்க முடியவில்லை.  காற்றில்லா சமையங்களில் மின்சாரப் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தம் அடைகிறது. அடுத்து அணுப்பிணைவு சக்தி [Nuclear Fusion Energy] வாணிப ரீதியாக வசதிப்படும் முறை, இப்போதுள்ள அணுப்பிளவு சக்தி [Nuclear Fission Power] நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வரவேண்டும்.

    இப்போது  மேலும் ஒரு பிரச்சனை  உண்டாகிவிட்டது.  துருவப் பிரதேசங்களில் ஆயில் கிணறுகள் தோண்டவும்,  வட அமெரிக்க, ஐரோப்பிய வடக்குக் குளிர்ப் பகுதி வீடுகளுக்கு கணப்பு சக்தி, மின்சாரம் அனுப்பவும், கடலிருந்து சுவைநீர் எடுக்கவும், உள்நாட்டில் சிறு நகரங்களுக்கு அடிப்பளு மின்சாரம் பரிமாறவும் சிற்றணுவுலை தேவைப்படுகிறது.  இந்தத் தேவை, கனடா, அமெரிக்கா, ரஷ்யா, ஃபின்லாந்து, ஜப்பான், சைனா, இந்தியா போன்ற நாடுகள் 200 MWe முதல் 300 MWe மின்திறம் உடைய பற்பல தொழிற்கூட கட்டமைப்புச் சிற்றணுவுலை நிலையங்கள்  [Small Modular Reactor] (SMR-200 MWe, SMR-300 MWe) நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.  இச்சிறு அணுமின் உலை உறுப்புகள் தொழிற்கூடத்திலே சேர்ப்பாகித்  தயாராகிக் குறிப்பிட்ட கட்டுமான இடத்துக்கு முழுமையாக வந்து சேரும்.

    ++++++++++++++++

    https://www.world-nuclear.org/information-library/nuclear-fuel-cycle/nuclear-power-reactors/small-nuclear-power-reactors.aspx

    https://neutronbytes.com/2018/05/20/ge-hitachi-to-offer-300-mw-smr/

    https://en.wikipedia.org/wiki/World_Association_of_Nuclear_Operators

    +++++++++++++

    ++++++++++++++++++++++++++++++

    தொழிற்கூடக் கட்டுமான சிற்றணுவுலைச் சிறப்புகள், தயாரிப்பு நிறைபாடுகள் 

    1.  கட்டுமானம்,. சோதிப்பு, சீர்ப்படுத்து போக்குவரத்து செலவுகள் குறைவு.
    2. கட்டுமான எளிமை, மாற்றுதல் எளிமை, சோதிப்பு எளிமை.
    3. மாநிலத்தில் உள்ள நடுத்தர மின்வடங்கள் ஏந்திச் செல்ல வசதி
    4. சிற்றணுவுலை தயாரிக்கும், இயக்கும் காலம்  குறைவு
    5. யந்திர சாதன இணைப்பு, அடுக்கு எளிது.
    6. விபத்து நேர்ந்தால் விளையும் கதிரியக்க மாசுகள் குறைவு.
    7. அணு உலை மாற்றம் செய்வது, சோதனை செய்வது எளிது.
    8. தூர இடங்களுக்கு, துருவப் பகுதி இடங்களுக்கு தூக்கிச் செல்வது எளிது.

    +++++++++++++++++++++++

    Image result for small modular reactors

    Image result for small modular reactors

    Because of radiation given off in the fission reactions, the reactor core is completely contained and separate from the electric generation part of the plant.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    http://www.westinghousenuclear.com/docs/AP1000_brochure.pdf

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    இந்தியாவில் அமெரிக்கா கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட, வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டுகளாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது?  அணு உலை இயக்கும் இந்தியாவா?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக்கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள், ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்துகொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்தத் திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்தத் திட்டம் உறுதியானது.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப்படவில்லை.

    Image result for indian electric power generation

    ++++++++++++++++++++++++++++++++++++++++

    ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக அணு மின்சார நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றித் தீர்மானங்கள் -1

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீட்டர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழில்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்படவில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக்கொண்டோர் வீடிழந்தும், தமது உடைமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகாவாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி, அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும் ஊதியமும் நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் தொடங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது!  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாட்டு நெறிமுறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று, நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய்வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1. புகுஷிமா விபத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    33. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents

    34.  https://www.japantimes.co.jp/news/2018/03/29/national/seven-years-radioactive-water-fukushima-plant-still-flowing-ocean-study-finds/#.XJaYFR-JK70  [February 21, 2018]

    35. https://www.statista.com/statistics/268154/number-of-planned-nuclear-reactors-in-various-countries/

    36. https://www.statista.com/topics/1087/nuclear-power/

    37. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/

    38. https://www.iaea.org/newscenter/news/iaea-releases-country-nuclear-power-profiles-2017

    39. https://world-nuclear.org/getmedia/b392d1cd-f7d2-4d54-9355-9a65f71a3419/performance-report.pdf.aspx  [WANO 2018 REPORT]

    40. http://www.world-nuclear-news.org/RS-WANO-reports-on-post-Fukushima-improvements-27061803.html  [June 27, 2018]

    41. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf  [WANO – WORLD NUCLEAR POWER WATCH DOG]

    42. https://www.euronuclear.org/info/encyclopedia/n/nuclear-power-plant-world-wide.htm   [March 24, 2019]

    43. https://en.wikipedia.org/wiki/AP1000

    44.http://www.westinghousenuclear.com/docs/AP1000_brochure.pdf

    45. https://thehill.com/policy/international/india/483820-westinghouse-to-sign-deal-for-six-nuclear-reactors-in-india-during

    46. https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1MP

    47. https://www.world-nuclear.org/information-library/nuclear-fuel-cycle/nuclear-power-reactors/small-nuclear-power-reactors.aspx

    48. https://inl.gov/trending-topic/small-modular-reactors/what-people-are-saying/

    49. https://www.world-nuclear.org/information-library/nuclear-fuel-cycle/nuclear-power-reactors/small-nuclear-power-reactors.aspx

    50. https://neutronbytes.com/2018/05/20/ge-hitachi-to-offer-300-mw-smr/

    ************************

    Share
  • வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    சக்தி சக்திதாசன்

    “இங்கிலாந்து”, “லண்டன்”, “ஐக்கிய இராச்சியம்” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஐக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே!

    இராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜாவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலக நாடுகளில், முன்னணியில் இருப்பது ஐக்கிய இராச்சியம் என்றால் அது மிகையில்லை.

    எனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை, கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வரும் நாடுகளில் ஐக்கிய இராச்சியம் முதன்மையானது என்பதுவே.

    இந்த இராஜ குடும்பத்தினைப் பராமரிப்பதனால் நாட்டிற்கென்ன நன்மை எனும் கேள்வி எழலாம். 2017ஆம் ஆண்டு ஒரு நிதியறிக்கை சமர்ப்பிக்கும் ஸ்தாபனத்தின் கணிப்புப்படி இராஜ குடும்பத்தினால் சுமார் 330 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் உல்லாசப் பிரயாணிகளின் வரவினாலும் மேலும் சுமார் 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் இராஜ குடும்பத்தினரின் தாக்கத்தினால் கிடைக்கும் வர்த்தக உடன்படிக்கைகளினாலும் நாட்டின் நிதிக் களஞ்சியத்துக்குக் கிடைக்கிறது என்கிறது.

    அப்படிப் பார்க்கையில் இராஜ குடும்பத்தினரால் நாட்டிற்கு நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த இராஜ குடும்பத்தைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறது.

    இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகம் அபார வேகத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய ஒரு வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இத்தனை செலவு செய்து இராஜ குடும்பத்தைப் பேணுவது அவசியமா? எனும் கேள்வி முடியாட்சிக்கு எதிரானவர்களிடம் இருந்து பலமுனைகளில் எழுவதையும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இந்நிலையில் தான் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள சலசலப்பு எங்கே இதுதான் இராஜ குடும்பத்தின் சிதைவுக்கு வழிகோலிவிடுமோ என்று பல இராஜ குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.

    எது எப்படி இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் சம்பிரதாயத் தலைவியாக இருக்கும் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் திடகாத்திரமான வழிநடத்துதலையும், உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது.

    நான்கு குழந்தைகளுக்குத் தாயாரான எலிசபெத் மகாராணியாரின் மூத்த புதல்வரும் மகாராணிக்கு அடுத்து முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸ் 1981ஆம் ஆண்டு டயானா அவர்களை மணம் முடித்தார். அதேபோல மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ 1986ஆம் ஆண்டு சாரா அவர்களை மணம் முடித்தார்.

    1992ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியாரின் பிரச்சினைகள் பூதாகாரமாகின. 1992 மார்ச் மாதம் மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான ஆண்ட்ரூவும், அவரது மனைவியும் தாம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். அதே வருடம் டிசம்பர் மாதம் மகாராணியாரின் மூத்த புதல்வரும் முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவியும் சமரசமாகப் பிரிந்து செல்வதாக அன்றைய பிரதமர் டோனி பிளேயர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர்,

    1993ஆம் ஆண்டு நாட்டிற்கான புதுவருடச் செய்தி அளித்த எலிசபெத் மகாராணியார், நடந்து முடிந்த 1992ஆம் ஆண்டை “Annus Horriblis“ என்று வருணித்தார். லத்தீன் மொழியில் மிகவும் பாரதூரமான வருடம் என்று குறிப்பதாகும். அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதலில் இளவரசர் ஆண்ட்ரூவும், அடுத்து இளவரசர் சார்ல்ஸ்ம் தமது மனைவியரை விவாகரத்து செய்தார்கள்.

    இளவரசர் சார்ல்ஸின் மனைவியான லேடி டயானா விவாகரத்தின் பின்னாலும் ஊடகங்களின் பரிசோதனைக்கு உள்ளானார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களில் அவதானிக்கப்பட்டு, அதன் தாக்கங்களை இராஜ குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியதாகியது.

    இவையனைத்தையும் தனக்கேயுரிய மனோதைரியத்துடன் எதிர்கொண்டார் எலிசபெத் மகாராணியார். விவாகரத்து பெற்ற டயானா, காதல் விவகாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை மகாராணியார் தனது குடும்பத்தின் சார்பில் எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது.

    பாரிஸ் நகரத்தில் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த டயானா அவர்களின் மீது வீசிய மக்களின் அனுதாப அலையின் தாக்கத்தினால் மகாராணியார் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுவும் அவரைக் கடந்து போகும் வகையில் உறுதி குலையாமல் தனது விவகாரங்களைக் கையாண்டார்.

    இங்கே எலிசபெத் மகாராணியரைப் பற்றி முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 93 வயதான எமது மகாராணியார் 21 வயதில் திருமணமாகி அவரது தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னால் 27 வயதாகும் போது இங்கிலாந்தின் மகாராணியானார். அந்த இளம் வயதில் போதிய அனுபவமின்றிப் பாரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவர், தனது இங்கிலாந்தின் மகாராணி எனும் பாத்திரத்தினுள் தன்னை வளர்த்துக்கொண்டார். வெறுமனே வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் தன்மீது எவ்விதமான பாதகமான விமர்சனம் வராமல் நடந்துகொண்டார்.

    இங்கிலாந்து மட்டுமல்ல பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பதவியேற்று, தமது தலைமையின் கீழ் அவரது முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியாட்சி பெற்ற நாடுகளை அனுசரித்து அரவணைத்துக் கொண்டார்.

    இத்தகைய பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரத்தில் அதிக காலம் அரசிலமர்ந்தவர் எனும் சாதனை படைத்த எலிசபெத் மகாராணியார், அவரது 93ஆவது வயதில் புதுச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    மகாராணிக்கு பின்னால் அரசிலமரும் உரிமை கொண்டவர், இளவரசர் சார்ல்ஸ். இவரது இரண்டாவது புதல்வர் இளவரசர் ஹாரி. இவர் மணந்துகொண்டது கலப்பின மங்கையான மெகேன். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அமெரிக்க ஹாலிவுட்டில் நடிகையாயிருந்தவர். விளம்பரங்களில் இடம்பெற்ற ஒரு மாடல் ஆவார்

    இவர்தான் ஐக்கிய இராச்சிய இராஜ குடும்பத்தில் இணைந்த முதலாவது கலப்பு இனத்தவர் ஆவார். இவரின் தந்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெள்ளை இனத்தவர், இவரின் தாயார் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவர் தன்னை ஒரு கறுப்பு இனப் பெண்மணி என்று கூறிக்கொள்வதில் பெருமையடைபவர்.

    இவர்களின் திருமண வைபவமே சிறிய சலசலப்புடன்தான் நடந்தேறியது. வழக்கமான ஐக்கிய இராச்சிய அரச குடும்பத் திருமணங்கள் ஆங்கில கிறீஸ்தவ பாதிரிமாரால் நடத்தப்படும். ஆனால் இவர்களது திருமணம் கறுப்பு இனப் பாதிரியொருவரால் இவஞ்சலிக்கல் சேர்ச் எனும் முறையில் கிறீஸ்தவ பாடல்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. அத்துடன் வழக்கம் போலல்லாது அப்பாதிரியாரின் வைபவப் பேச்சு நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது, பலரின் புருவத்தையுயர்த்தியது. இத்திருமண வைபவத்தில் மணமகளான மெகன் மார்க்கல் அவர்களின் விருப்பமே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. காலத்தின் கட்டாயமாக இங்கிலாந்து அரச குடும்பமும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால்தான் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. அதற்கேற்ப அவர்கள் தமது நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் உண்மையே.

    ஆனால் இம்மாற்றங்கள் எனும் பெயரில் இக்காலாச்சார விழுமியத்தின் அடிப்படையையே ஆட்டிப் பார்க்க முயல்கிறார்களோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. மெகன் மார்க்கல் அவர்களின் வருகை, அரச குடும்பத்தினுள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதலாவதாக இளவரசர் சார்ல்ஸ்க்கு அடுத்து முடியுரிமை கொண்டவரான இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் விழுந்துள்ளது என்கிறார்கள், அரச அவதானிகள். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இளவரசர் ஹாரி தாம் விலகிக் கொள்வதாகக் கூறியது இதற்குச் சான்றாகிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் வெள்ளை இனத்தவரிடையே தேசியவாத மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் உலகில் பல நாடுகளை வெற்றிகொண்டு உலகின் அதிமுக்கிய நாடாக வலம் வந்த நாட்களே தமது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவை என்றே இவர்கள் எண்ணுகிறார்கள். தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்கும் உள்ள எல்லைக்கோடு மிக மெல்லியதே.

    இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் மனத்தில் தமது இராஜ குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானம், ஒரு பக்தி என்றே கூறலாம். அந்த இராஜ குடும்பம், கலப்பில்லாத ஒரு வெள்ளை இனத்தவரின் வெளிப்பாடு என்பதில் இவர்களுக்குப் பெருமை இருந்தது.

    ஐக்கிய இராச்சியத்தில் பல இனத்தவர் குடியேறி இன்று அது ஒரு பல்கலாச்சார நாடாகக் கருதப்பட்டாலும் தமது இராஜ குடும்பம், தமது நாட்டின் தனித்தன்மையைப் பழமையை எடுத்துக் காட்டுகிறது என்றே அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது

    இந்நிலையில்தான் இளவரசராக இருந்த ஹாரி, இராஜ குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர், ஒரு கலப்பு இனத்துப் பெண்மணி, அதுவும் தன்னைக் கறுப்பு இனப்பெண்மணி என்று இனங்காட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணான மெகன் மார்க்கல் அவர்களை மணமுடித்து இராஜ குடும்பத்தில் இணைத்துள்ளார்.

    வெள்ளை இனத்தவரின் மேன்மையே தமது தேசியவாதத்தின் அடிப்படை எனக் கொண்டவர்களால் இதனை ஜீரணிக்க முடியுமா என்ன? மெகன் மார்க்கல் பற்றிய விமர்சனங்கள், அவரின் பின்னணி, குடும்ப உறுப்பினர்களின் கருத்து எனப் பலதரப்பட்ட விடயங்கள் ஊடகங்களிலே ஆராயப்பட்டன.

    இவை ஒருபுறமிருக்க, புதிதாய் இராஜ குடும்பத்தில் இணைந்துகொண்ட மெகன் மார்க்கல் அவர்களின் செயற்பாடுகள் இவ்வூடகத்துறையின் விமர்சனங்களுக்கு வலுச் சேர்ப்பவையாக இருந்தன, இந்தக் குடும்பத்தில் தான் ஒரு வித்தியாசமானவராக நடப்பதற்கு எத்தனித்தார். இராஜ குடும்பத்தின் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட பொது நடைமுறைகளை விமர்சித்து தான் அதனை ஏற்றுக்கொள்ளாதது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்

    இளவரசர் ஹாரியும் தம் மனைவியின் விருப்புக்கு எதிராக நடக்க விரும்பாதவராக, தானும் இராஜ குடும்பத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இளவரசர் ஹாரி, போரினால் அங்கவீனர்களாக்கப்பட்ட முன்னாள் போர்வீரர்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் தூதுவராகச் செயற்படுகிறார். அதேபோல மெகன் மார்க்கல் ஆப்பிரிக்க நாட்டின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இத்தம்பதியருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மெகன் மார்க்கல் அவர்களைப் பற்றி ஒரு சாராருக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இராஜ குடும்பத்தின் புதிய வரவினை , வம்ச விருத்தியை நாடு முழுவதும் கொண்டாடியதோடு உலக நாடுகளும் மிகவும் ஈடுபாடு கொண்டு நிகழ்வுகளை அவதானித்தன.

    வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் இராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் மகாராணியார் இல்லத்தில் ஒன்றுகூடுவார்கள். மெகன் மார்க்கல் அவர்களின் வரவு, இக்கலாச்சார நடைமுறைக்கு முட்டுக்கட்டையானது. முதன்முறையாக இளவரசர் ஹாரி, மெகன் மார்க்கல் அவர்களது குழந்தை கிறிஸ்துமஸ் சமயத்தை, மெகன் மார்க்கல் வளர்ந்த நாடான கனடாவில் 2019ஆம் ஆண்டு கழித்தார்கள்.

    இதைப் பற்றிப் பல கருத்துகள் ஊடகங்களில் விவாதங்களாகவும் விமர்சனங்களாகவும் இடம்பெற்றன..

    இதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரியினதும், மெகன் மார்க்கலினதும் அறிவித்தல் தான் அனைவரின் மனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தான் இராஜ குடும்ப சம்பிரதாயங்களிலிருந்து முற்றாக விலகப் போவதாகவும், இராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களாகத் தமது எஞ்சிய வாழ்க்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

    தமக்கான தமது உத்தியோக இல்லத்தை 25 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து திருத்தியமைத்தார்களே அது பொதுப் பணமல்லவா? எப்படி அவர்கள் திடீரென இப்படி அறிவிக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அப்பணத்தைத் தாம் திரும்ப அரசாங்கத்துக்கு அளிக்கப் போகிறோம். அத்தோடு இனி தமது சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து தாம் கனடா தேசத்தில் வாழ்வை அமைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார்கள்..

    இவ்வறிவித்தல்களுக்கு உத்தியோகப்பூர்வமாக பதிலிறுக்க வேண்டிய நிலைக்கு மகாராணியார் தள்ளப்பட்டார். இளவரசர் ஹாரியினதும், அவரது மனைவியினதும் விருப்பத்தைப் புரிந்து கொள்கிறோம். இளவரசர் ஹாரி உத்தியோகப்பூர்வமாக தாம் இராஜ குடும்பத்தினர் எனும் அடையாளத்தை உபயோகிக்க முடியாது என்று அறிவித்தார்கள். ஹாரி அவர்கள், இராஜ குடும்பத்தின் சார்பாகப் பங்கு கொள்ளவிருக்கும் அனைத்து உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகளிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறார் என்றும் அறிவித்தார்.

    அனைத்தும் ஓரளவு சுமூகமாக நடந்தேறி விட்டது என்று இருக்கும்போது சிலநாட்களின் முன்னாள் இளவரசர் ஹாரியினதும் அவர் மனைவியினதும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. தம்மை இராஜ குடும்பத்தினர் அதாவது ஆங்கிலத்தில் Royals என்றழைக்க முடியாது என்று சொல்லும் உரிமை, இராஜ குடும்பத்துக்கு இல்லை என்று அந்த அறிக்கை கூறியதோடு, இராஜ குடும்பத்தின் தூரத்து உறவுகளே தம்மை இராஜ குடும்பத்தினர் என்று அழைக்கும்போது நாம் அழைப்பதில் என்ன தப்பு என்கிறார்கள்.

    இத்தனையையும் மெளனமாக எதிர்கொண்டு எந்த விதமான கருத்துகளையும் பொதுவில் கூறாமல் அனைத்தையும் சாதுரியமாக நாகரீகமாக கையாண்டு கொண்டிருக்கும் 93 வயதான எமது எலிசபெத் மகாராணியார் இராஜதந்திரத்துக்கே ஓர் எடுத்துக் காட்டாகிறார்.

    இளவரசர் ஹாரியின் நடவடிக்கைகளுக்குக் காரணமிருக்கலாம். அவரது அன்னையும், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்னைநாள் மனைவியும் மறைந்தவருமான லேடி டயானா அவர்களின் மீதான தொடர்ந்த ஊடகங்களின் ஆர்வமும், விமர்சனங்களுமே அவரது மறைவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய மனைவியும், குழந்தையும் அத்தகைய ஒரு ஊடகத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அது நியாயமானதாகக் கூட இருக்கலாம்.

    ஆனால் இங்கே பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பம் என்பது ஒரு சாதாரண கலாச்சார விழுமியமில்லை. நாட்டின், மக்களின், கலாச்சாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. வெளிநாட்டவரின் ஐக்கிய இராச்சியத்தின் மீதான பார்வைக்கு ஓர் அத்திவாரமாகிறது. இத்தகைய ஒரு குடும்பத்தோடு இணையும் போது அதனோடு சேர்ந்து வரும் ஊடகங்களின் உபத்திரவத்தை எதிர்பார்க்காமலா மெகன் மார்க்கல் அவர்கள், இளவரசர் ஹாரி அவர்களை மணமுடிக்க விரும்பியிருப்பார்?

    ஒருநாட்டின் பாரம்பரிய கலாச்சார விழுமியத்துடன் இணைகையில் தாமும் அந்நாட்டினுடன் தம்மை இணைத்துக்கொள்கிறோம் என்பதை அறியாமலா மெகன் மார்க்கல் இருந்திருப்பார்?

    இதையெல்லாம் அறிந்துகொண்டு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசரரை மணந்துகொண்ட மெகன் மார்க்கல், அக்குடும்பத்தின் நல்ல மருமகளாக அக்குடும்பப் பெருமைகளைக் காப்பாற்ற முடியாமல் தமது இச்சைக்கு ஏற்ப, தொன்மை மிக்க இராஜ குடும்பத்தினையே மாற்றியமைக்க முயல்வது போலத் தென்படுகிறது.

    இத்தகைய செயற்பாடுகள் நடுநிலையாக இருக்கும் வெள்ளை இனத்தவர் பலரைக்கூடக் கொஞ்சம் இனவேற்றுமை எனும் நிலைக்குத் தள்ளுகிறது. இதுவரை தமது விதிமுறைகளைக் கடைப்பிடித்து வந்த இராஜ குடும்பத்தினுள் நுழைந்த வேற்றுநிறப் பெண்மணி, குழப்பத்தை உண்டாக்குகிறார் எனும் வகையில் எண்ணுகிறார்கள்.

    இத்தகைய எண்ணம் பொதுவாக நாட்டில் நிலவும் நிறத் துவேஷத்தினை அதிகரிக்கச் செய்கிறது போலவும் தோன்றுகிறது. நாட்டில் கலக்கும் வேற்று இனத்தவரால் நாட்டின் பாரம்பரியத் தன்மை மாற்றப்படுகிறது எனும் இவர்களது வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்ப அமைப்பினை முற்றாகக் கலைத்து விடவேண்டும் எனும் கருத்துக் கொண்ட பலர், அரசியல்வாதிகள் உட்பட இருக்கிறார்கள். ஹாரி தம்பதியினரின் செயற்பாடு அவர்களுக்கெல்லாம் மேலும் உந்துசக்தியாக இருக்கப் போகிறது.

    இந்தச் செயற்பாடுகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரமே அதன் மக்களின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. அத்தகைய வழியில் சட்ட திட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க உதவிய கலாச்சார அடிப்படையை அழித்துவிடுவது அந்நாட்டின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்ப்பது போலாகாதா?

    எது எப்படியிருப்பினும் தமது அறிவித்தலை இவர்கள் தெரிவித்தது ஒரு சரியான நேரமா? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

    நாடு ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கு முகம் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துள்ளது.

    நாட்டின் மக்களிடையே இந்நிகழ்வு கொடுத்த பிரிவினையின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.

    ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு ஏற்படுத்திய ஒரு இனத்துவேஷ உணர்வு இன்னும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இம்முடிவில் மெகன் மார்க்கல் வகித்த பங்கு, எரிகின்ற இந்த இனத்துவேஷ நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகாதா?

    இராஜ குடும்பக் கலாச்சாரக் கட்டுப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வது இளவரசர் ஹாரியினது தனிமனித உரிமைக்கு உட்பட்டது என்றாலும் இதனை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் தவிர்த்து தமது இராஜ குடும்பத்து ஈடுபாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மெதுவாக இதனைச் செய்திருக்கலாம்.

    இந்தத் தலைமுறை, கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறதோ?

    Share
  • சென்றதினி மீளாது

    சென்றதினி மீளாது

    பாஸ்கர் சேஷாத்ரி

    நீங்கள் தமிழுக்குத் தாலாட்டு என்றீர்கள்
    கைகள் இன்னும் ஆட்டிக்கொண்டு இருக்கின்றன.
    இந்திக்கு என்றும் வாலாட்டு என்றீர்கள்
    வால் வளர்ந்து முகமே மூடிப்போனது.
    சேட்டுக்கடையில் வாங்காதே என்றுரைத்தீர்
    அண்ணாச்சிக்கடையே ஆஸ்தானமாய்ப் போனது.
    பல்லுடைத்துப் பார் பார்ப்பானை என்றே கூவினீர்
    நாங்கள் இங்கு பொக்கை வாயுடன் நிற்கிறோம்.
    மேல்துணியில் கைதட்டிக் குதித்த போது
    கொடியேற்ற நீங்கள் புழுதி பறக்க வந்தீர்கள்.
    கண்களில் விழுந்த மண்ணை விலக்கும் முன்
    கும்பலாய் வந்த ப்ளஷரில் ஏறிப் பறந்தீர்கள்.
    பீடி இழுத்த உடலுக்கு, கொடியே இன்று பெருந்துணி
    கோஷமிட்டே வருஷமெல்லாம் கரைந்தே போயின
    கட்டாந்தரையில் இன்றும் கிடக்கிறோம் நாங்கள்
    கட்டிபோட்ட பேச்சால் கனவிழந்து நிற்கிறோம்
    மல்லாக்கக் கிடக்கும் எமைக் கட்டித் தழுவ வேண்டாம்
    கொடியே கொண்டாரும்-உடலே சுருங்கிப் போச்சு
    நிர்வாணம் நாங்கள் – கொடியாவது மறைக்கட்டும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நாங்குநேரி வாசஸ்ரீ

    119. பசப்புறு பருவரல்

    குறள் 1181

    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க் குரைக்கோ பிற

    என்னைய நேசிச்சவரு பிரிஞ்சி போவுததுக்கு சம்மதிச்சிட்டேன். இப்பம் தாங்கமாட்டாம எம் மேனி பசலை படந்து கெடக்கத யார் கிட்ட போய் சொல்லுவேன்?

    குறள் 1182

    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு

    நேசிச்சவரு உண்டாக்கி உட்டதுங்குத தலகனத்துல பசலை வண்ணம்  எம் மேனி முழுக்க ஊர்ந்து பரவுது.

    குறள் 1183

    சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து

    நேசங்குத நோயையும் பசலை வண்ணத்தையும் தந்துபோட்டு என் அழகையும் வெக்கத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டாக.

    குறள் 1184

    உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு

    நான் நெனைக்கதும், சொல்லுததும் அவரோட நல்ல தன்மயத்தான். அங்ஙன இருக்கையில பசலை நோய் வந்தது வஞ்சகமோ. வேறு ஏதாமோ?

    குறள் 1185

    உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
    மேனி பசப்பூர் வது

    என் காதலர் அங்ஙனகூடி பிரிஞ்சு போவுததுக்குள்ளார இங்ஙன பசலை வண்ணம் எம் மேனியில வந்து அப்பிக்கிடுது.

    குறள் 1186

    விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

    விளக்கு ஒளி சொல்பமா மங்குத சமயம்பாத்து இருட்டு பரவுதது கணக்கா நேசிக்கவரு தழுவுதத எப்பம்  தளத்துவாருனு காத்துக்கெடக்கு  பசலை படருததுக்காவ.

    குறள் 1187

    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு

    அணைச்சுக்கிட்டுக் கெடந்தேன். பொறவு செத்த வெலகினேன். அங்ஙனக்குள்ளார பசலை வண்ணம் என்னய அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு.

    குறள் 1188

    பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
    துறந்தார் அவரென்பார் இல்

    இவ மேனியில பசலை படர்ந்து கெடக்குனு பழிக்குதாகளே ஒழிய நேசிச்சவரு பிரிஞ்சு போனதப் பத்தி பேச்சேயில்ல.

    குறள் 1189

    பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்

    பிரிஞ்சுபோவுததுக்கு என்னயச் சம்மதிக்க வச்சவுக நல்லா இருப்பாகன்னா எம் மேனி பசலை படர்ந்துக்கிட்டுக் கெடக்கட்டும்.

    குறள் 1190

    பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்

    பிரிவுக்கு சம்மதிக்க வச்ச என் காதலர நேசங்கெட்டவருனு தூத்த மாட்டாகன்னா நான் பசலை படர்ந்தவனு பேர் எடுக்கதும் நல்லதுதான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(290)

    குறளின் கதிர்களாய்…(290)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(290)

    அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
    மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

           – திருக்குறள் –461 (தெரிந்து செயல் வகை)

    புதுக் கவிதையில்…

    செயலொன்றைச்
    செய்யத் தெடங்குமுன்
    அரசன்
    அச்செயலால் எற்படும்
    அழிவு ஆக்கம்
    அதன்வழி வரும் ஊதியம்
    ஆகியவற்றை ஆய்ந்தறிந்து,
    சிறந்ததாயின்
    செய்ய வேண்டும்…!

    குறும்பாவில்…

    செயலொன்றால் வரும் அழிவுடன்
    ஆக்கம் அதனால்பெறும் ஊதியம் இவற்றை
    ஆய்ந்தறிந்து செயலில் இறங்கிடு…!

    மரபுக் கவிதையில்…

    செயல தொன்றைத் தொடங்குமுன்னே
         செய்ய வேண்டும் சிலவற்றை,
    செயலதால் வந்திடும் அழிவினையும்
         செயலது தன்னால் ஆவதையும்
    செயலின் வழிவரும் ஊதியமும்
         சேர்ந்த யிவற்றை ஆய்ந்தறிந்து
    செயல்படச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தே
         செயலி லிறங்கித் தொடர்வாயே…!

    லிமரைக்கூ..

    செயல்படத் தொடங்கிடும் முன்னே
    ஆய்ந்தறி செயலால்வரும் அழிவாக்கம் ஊதியமெலாம்,
    செயல்படு நன்கறிந்த பின்னே…!

    கிராமிய பாணியில்…

    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்..

    ஒருசெயலச் செய்யத்
    தொடங்குமுன்னாலயே அதால வருற
    நல்லது கெட்டது ஆதாயம்
    எல்லாத்தையும்
    அலசி ஆராஞ்சி,
    அதுல நல்லதாப் பாத்துத்
    தெரிஞ்சிச்
    செயல்பட ஆரம்பிக்கணும்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்…!

    Share