Category: ஏனைய கவிஞர்கள்

  • திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்

    கவிஞர் பூவை செங்குட்டுவன்

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..

    திரையுலகம் எத்தனையோ கவிஞர்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது.  காணப்போகிறது.  இந்த வரிசையில் நாத்திகக் கருத்துக்களில் நாட்டமும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களில் ஈடுபாடும் கொண்ட ஒரு கவிஞர் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதெல்லாம் பக்திப் பாடல்களில்தான் என்கிற செய்தி புருவங்களை விரியவைக்கும்!

    வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் –

    வேல் போல் இருக்குதடி என்கிற சிந்தனையைப் பதித்தவர்!

    பக்தியில் உருகிநிற்கும் உள்ளத்திலும்கூட தோன்றாத சிந்தனைகள் இவர் உள்ளத்தில் உற்பத்தியானதை என்னவென்று சொல்வது?

    காலத்தின் கருணை என்று சொல்வதா?  கந்தனின் கருணை என்று சொல்வதா?

    ஆம்!  கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் அதன் பின்னணியும் இவரை முன்னுக்கு கொண்டுவந்தன என்றே சொல்லலாம்!

    கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் கந்தன் கருணை திரைப்பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது..குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக் காட்சிக்கு கவிஞர் பாடல் எழுத முற்பட்டபோது,  பக்திப் பாடல்கள் வரிசையில் வெளியாகியிருந்த ஒலிநாடாவில் தான் கேட்ட ஒரு பாடல் இந்தக் காட்சிக்கு முற்றிலும் பொருத்தமாய் இருக்கும் என்று கண்ணதாசன் எண்ணம் கொள்ள, அதை இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல.. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் உருவாகியிருந்த அப்பாடலை.. எழுதிய இளைஞர் பூவை செங்குட்டுவன் என்றறிந்து அவருக்கு வாகனம் அனுப்பி வரவழைக்க.. அவரின் பாடலை இப்படத்தில் இடம்பெறச் செய்தார் கண்ணதாசன்!

    திருப்பரங்குன்றத்தில்நீசிரித்தால்முருகா

    திருத்தணிமலைமீதுஎதிரொலிக்கும்
    திருச்செந்தூரிலேவேலாடும்
    திருப்புகழ்பாடியேகடலாடும்

    (திருப்பரங்குன்றத்தில்)

    பழநியிலேஇருக்கும்கந்தப்பழம் – நீ
    பார்வையிலேகொடுக்கும்அன்புப்பழம்
    பழமுதிர்ச்சோலையில்முதிர்ந்தபழம் –
    பக்திப்பசியோடுவருவோர்க்குஞானப்பழம்

    (திருப்பரங்குன்றத்தில்)

    சென்னையிலும்கந்தகோட்டம்உண்டு – உன்
    சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு
    உனக்கானமனக்கோயில்கொஞ்சமில்லை – அங்கு
    உருவாகும்அன்புக்கோர்பஞ்சமில்லை!

    (திருப்பரங்குன்றத்தில்)

    இளம்கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமானது.  மேலும் பாடலில் ஒரே ஒரு வார்த்தையை கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் அனுமதி கேட்டார்.  என்ன தெரியுமா? சென்னையிலே கந்த கோட்டமுண்டு .. என்கிற வரியை சிறப்புடனே கந்த கோட்டமுண்டு என்று மாற்றியமைத்தார்.  கவிஞர் பூவை செங்குட்டுவன் இதுபற்றி நினைவுகூரும்போதெல்லாம் கவியரசர் தனது பாடலுக்கு சிறப்பு சேர்த்தார் என்பார்.

    சிறப்புடனேகந்தகோட்டம்உண்டு – உன்

    சிங்காரமயிலாடத்தோட்டம் உண்டு

    ஒரு கவிஞர் தான் எழுதவேண்டிய பாடலை மற்றொரு கவிஞருக்கு தந்திட எத்தகைய பெருந்தன்மை வேண்டும்?  அதனால் தான்

    இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் அரசராக – கவியரசாக.. இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    Thiruparamkundrathil Nee Sirithal – Kandhan Karunai – Jayalalitha & K.R. Vijaya
    Share
  • பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

     

     சின்னப் பயலே.. சின்னப் பயலே.. சேதி கேளடா..

    · (பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!)

    aaaதமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு பாட்டாளியின் குரல் – ஒடுக்கப்பட்டவர்களின் ஓசை – உழைப்பவர்களின் வியர்வை – நெசவாளர்களின் குமுறல் – சாலைவண்டி இழுப்பவர்களின் சுமை – சாமான்ய மக்களின் பிரதிநிதித்துவம் – சமத்துவ சமுதாயப் பார்வை – அவலங்களைத் தட்டிக்கேட்கும் உறுதி – மானிட குணங்களின் கசடுகளை களையத் துடிக்கும் கூர்மை! பாமரர்களும் புரிந்துகொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை – ஆயிரமாயிரம் கவிஞர் பெருமக்கள் வந்து எழுதி வைக்க வேண்டியவற்றை தன் 29 வயதில் மரணத்தைத் தொட்ட மக்கள் கவிஞன் ஒட்டுமொத்தமாய் ஓங்கி ஒலித்தான் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையே குறிக்கும்!

    ஏழைகளின் தோழனாய்.. பாட்டாளிகளின் கூட்டாளியாய்.. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாய்.. முத்து முத்தாய் இவன் எழுதி வைத்தப் பாட்டு! தஞ்சை மண்ணிலிருந்து தவழ்ந்து வந்த தமிழ்!! அர்த்தபுஷ்டிகளோடு இவன் படைத்த வரிகள் சமுதாய அவலங்களின்மீது எப்போதும் விழுகின்ற சவுக்கடிகள்!!

    சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் வலியோர் கை ஓங்கி நிற்பதும் மெலியோர் கை தாழ்ந்திருப்பதும் இல்லான் எனும் நிலை மாற்றிடவும் மக்கள் புரட்சியால் கைகூடும் என்கிற திடநம்பிக்கையோடு சத்திய வரிகளைத் தந்தவன் இவன் என்பது மறக்க முடியாதது.

    பொற்காலப் பாடல்கள் இவைதான் என்று வருங்காலச் சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் அங்கே நிச்சயமாய் பரிணமிக்கும்! ஏட்டிலே இவன் பாடல்கள் பதிந்திருப்பதைக் காட்டிலும் மக்கள் இதயங்களில் பதிந்திருப்பதே அதிகம்!! நூற்றுக்கணக்கில் விளைந்த இவர்தம் முத்துக்குவியலில் நான் முதல் முத்தாகக் கருதும் பாடலிது.

    அரசிளங்குமரி என்னும் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்.. மக்கள் திலகம் பாடுவதாய் அமைந்த பாட்டு! எளிய வரிகள் இனிய இசை இவைகளின் கலவைதான் என்பதுடன் தன் இனிய குரலால் வருடங்களைத் தாண்டி வாழுகின்ற பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் டி.எம்.செளந்திரராஜன்.

    சின்னப்பயலேசின்னப்பயலே சேதி கேளடா நான்
    சொல்லப்போற வார்த்தையை நன்றாய் எண்ணிப்பாரடா – நீ எண்ணிப்பாரடா
    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

    ஆளும்வளரணும் அறிவும்வளரணும் அதுதாண்டாவளர்ச்சி – உன்னை
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்காலம் தரும்பயிற்சி – உன்
    நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே)

    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
    தனியுடைமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம்பழைய பொய்யடா (சின்னப்பயலே)

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க – உன்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ
    வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே (சின்னப்பயலே)

    இது எழுதிவைத்த பாடல் மட்டுமல்ல! வளரும் மழலைக்கு சொல்லப்படும் கருத்துக்களாய்

    நிறைந்திருந்தாலும் வளர்ந்தவர்களுக்கும் தேவைப்படும் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.

    பட்டுக்கோட்டையார் பாடல் என்றால் அதில் பட்டுத்தெறிக்கும் முத்துக்கள் கொட்டிக்கிடக்குமோ? என்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒரு திரைப்பாடலாய் இப்பாடல் உலா வருவதை எவர் இங்கே மறுக்க முடியும்?

    வீரம், விவேகம், தன்மானம், பகுத்தறிவு என்றெல்லாம் மனித உணர்வுகளை மீட்டியெடுக்கும் உன்னதமான பாடல் உண்டென்றால் அது இப்பாடல் அன்றி வேறு எது??

    சுருக்கமாய் சொல்ல விழைகிறேன்.. இது தன்மானமுள்ள தலைமுறைகளுக்காக அன்றைக்கே பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    Share
  • முத்தான கவிஞர் நா முத்துகுமார்! பத்தாண்டுகளாய் முதலிடம்!!

     

    வற்றாத கவியுள்ளம் வைத்திருக்கும் முத்து இவர்…

    வழிந்தோடும் நேசத்தால் மனம் கவரும் முத்துக்குமார்!!

    பத்தாண்டு காலங்கள் முதலிடத்தில் இருப்பதெல்லாம் 

    முத்தான கவிஞர் இவர் என்பதையே காட்டுகிறது!!

     

    பரபரப்பு துடிதுடிப்பு இவைகளுக்கு மத்தியில் 

    உயிர்த் துடிப்பாய் பாடல் வர என்ன செய்வார்?

    இசைக் குறிப்பு எனும் வரிக்குள் வார்த்தைச்சிலைகளை 

    அசைய வைத்துக் காட்டுகின்ற கவிஞர் இவரன்றோ?

     

    வெற்றிக் கொடிகட்டி புகழைத் தொட்டாலும் 

    சற்றும் மமதையின்றி தன் பணியைத் தொடர்கின்றார் 

    கற்றும் கவித் துறையில் கால்பதித்த   காஞ்சி மைந்தன் 

    எட்டும் புகழ் அனைத்தும் தமிழ்த்தாய்க்கே என்கின்றார்!!

     

     

    ……..

     

    வாழ்க.. இவ்வையகம் உள்ளமட்டும்

    தங்கத் தமிழ்போல் 

     

    என வாழ்த்தும்..

    காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல், சென்னை 600 075

    தற்போது – துபாய்.
    00971 50 2519693
    kaviri2012@gmail.com

    Share
  • தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு

    கவிஞர் ஆலங்குடி சோமு

     

    தாயில்லாமல் நானில்லை

     

    பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் …  பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன.  சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன்.  இந்த  வாரம்  கவிஞர் ஆலங்குடி சோமு.

    தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்!  தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்!  தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!

    அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை!  ‘அவள் அன்னை மட்டுமல்ல!  வாழ்வின் ஆதாரம்!  கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!

    எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார்.  40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார்.  அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.

    தாயில்லாமல் நான் இல்லை
    தானேஎவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

    • ·       
      ஜீவநதியாய் வருவாள்
      என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
      தவறினை பொறுப்பாள்
      தர்மத்தை வளர்ப்பாள்
      தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)

    தூயநிலமாய் கிடப்பாள்
    தன்தோளில் என்னைசுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)

    மேகவீதியில் நடப்பாள்
    உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள்
    மலர்மணம் தருவாள்
    மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
    மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)

    ஆதிஅந்தமும் அவள்தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
    அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)

    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாயில்லாமல் நான்இல்லை

     

    திரைக்கதையின்படிதன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி!  அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது!  அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபடதாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.

    அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்

    திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!

    எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!

    எம்.ஜி.ஆர்  தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!

    http://www.youtube.com/watch?v=2K096xYEtsY

     

    மேற்கண்ட பாடல் பற்றிய தங்கள் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.  இன்னும் இன்னும் இனிய பல தகவல்களோடு உங்கள் வாசலில்  காத்திருப்பேன்.

     

     

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Thai Illamal Naan Illai HD Song
    Share
  • பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்…

     காவிரிமைந்தன் 

    அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!

    இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன்.  மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.

    உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.

    சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!

    வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்!  இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!

    எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு.  வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!

    புலவர் புலமைப்பித்தன்

    • ·         இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..

    திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்!  கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்!  மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய்  நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!

    பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்..  மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள்.  இதில் கவி விருந்தும் உண்டு!  நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!

    தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..

    நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..

    எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”

    பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு!  பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!

    மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..

    • இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
      தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில்
      பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
      மெல்லெனஇட்டுவைத்தேன்
      நான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்டஎந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      எந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      பின்நல்லவராவதும்தீயவராவதும்
      அன்னைவளர்ப்பதிலேநான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்ட

      தூக்கமருந்தினைப்போன்றவை
      பெற்றவர்போற்றும்புகழுரைகள்
      நோய்தீர்க்கும்மருந்தினைப்போன்றவை
      கற்றவர்கூறும்அறிவுரைகள்
      கூறும்அறிவுரைகள்  (இந்தப்பச்சைக்கிளிக்கொரு)

    ஆறுகரையில்அடங்கிநடந்திடில்
    காடுவளம்பெறலாம்
    தினம்நல்லநெறிகண்டுபிள்ளைவளர்ந்திடில்
    நாடும்நலம்பெறலாம்

    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட

    பாதைத்தவறியகால்கள்விரும்பிய
    ஊர்சென்றுசேர்வதில்லை
    நல்லபண்புத்தவறியபிள்ளையைப்பெற்றவள்
    பேர்சொல்லிவாழ்வதில்லை

    இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
    தொட்டிலைக்கட்டிவைத்தேன்  அதில்
    பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
    மெல்லெனஇட்டுவைத்தேன்
    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..

    பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்!  பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை!  நம்மையும்தான்!!

    எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?

    வாழ்க்கைக்கு விளக்கம்!  பயணத்திற்கு பாதை!  உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்!  சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்!  சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!

    கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்!  கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்!   உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்!  இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!

    http://www.youtube.com/watch?v=ApWApnJisy0
    Intha pachai HD Song

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share