Month: May 2016

  • ஊடகங்களின் நாடகம்

    உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி,

    முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி,

    பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு,

    கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று,

    சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி,

    எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்!

    நண்பர்களே…..

    கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல,

    கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்!

    இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை,

    இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்!

    உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை,

    உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்!

    இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும்,

    நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று,

    சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும் சொல்லுங்கள்!

    உழைக்காமல் உயிர்வளர்த்து திமிரெடுத்த திருடர்களை,

    மழைக்காலக் காளானெனக் களைந்திடலாம் வாருங்கள்!

    கற்றறிந்த தமிழர்களே கரம் கோர்த்து நில்லுங்கள்,

    கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்!

    கைகூப்பிக் கேட்கின்றேன் கூண்டை விட்டு வாருங்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 63-இன் முடிவுகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. போட்டிக்கான படமாக இதனைத் தெரிவுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

    monkeys

    குரங்குகளின் இயல்பை கவனித்தால், தாய்க்குரங்கு குட்டியைச் சுமந்து செல்லும் வழக்கமில்லை. மாறாகக் குட்டிதான் தானாக முயன்று தாய்க்குரங்கைக் கட்டிக்கொள்ளும். குரங்குகளின் இவ்வியல்பை ஒட்டி எழுந்ததே வைணவத்தின் (வடகலையார் பின்பற்றும்) ’மர்க்கட நியாயம்.’ இதன் பொருளாவது: இறைவனை அடைய (மானுட) ஆன்மாக்கள்தாம் முயலவேண்டும்; இறைவனே நம்மை வலிய ஆட்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

    இதோ இந்தப் புகைப்படத்தில் தாய்க்குரங்கும் அதனை அணைத்துக்கொண்டிருக்கும் குட்டிக்குரங்கும் ஆவலோடு எதையோ உற்றுநோக்கிக்கொண்டிருப்பதுபோல் காண்கிறதே! (ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் யாரையேனும் விந்தையோடு நோக்கிக்கொண்டிருக்கின்றனவோ?!)

    சரி…போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சற்று கவனித்துவருவோம்!

    ***

    மரங்களை அழித்து இயற்கையை முடமாக்கும் மானுடனைக் குறிப்பாய்ச் சாடுகின்றது திருமிகு. ஹிஷாலியின் கவிதையில் குரல்கொடுக்கும் குரங்குக்குட்டி! 

    அனுதினமும் நேசிக்கும்
    என் தாயிக்கு
    எப்படித் தெரியும்
    அடுத்த தலைமுறைக்கு
    இந்த மரக்கிளை
    சொந்தமில்லை என்று!

    ***

    இனி நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    மரத்தின் உச்சிக்கிளையில் அச்சத்தோடு அமர்ந்தபடி மருண்டுநோக்கும் மந்தியும், அதனை அணைத்தபடி அமர்ந்திருக்கும் கல்லா வன்பறழும் (குரங்குக்குட்டி), மனிதர்களின் தொடர்பே வேண்டாமென்றுதான் அவ்வாறு அமர்ந்திருக்கின்றன என்று இந்த மர்க்கடங்களின் செய்கைக்கு நியாயம் கற்பிக்கின்றது ஒரு கவிதை!

    தாய்மை யென்பது தலைமைவரம்,
    தலையது அதனைக் குனியவைக்கும்
    வாய்மையைக் காட்டிட வந்ததுவோ
    வழியி லுள்ள குப்பையுடன்
    வாய்மெய் விறைத்த பிள்ளையுடல்,
    வேண்டாம் மனிதன் தொடர்பென்றே
    தாய்சேய் குரங்குகள் தனியேதான்
    தாவி அமர்ந்ததோ மரத்தினிலே…! 

    மரத்தினில் அமர்ந்திருக்கும் கவிகளுக்கென (குரங்குகளுக்கு) இந்தக் கவியை வடித்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். படக்கவிதைப் போட்டியில் வாராவாரம்  பேரார்வத்தோடு பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • நினைவு நல்லது வேண்டும் (7)

    சதா பாரதி
    ………………………………………………

    நெகிழ்வான தருணமே …

    Man on top of mountain. Conceptual design.

    “தம்பி உனக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அவ்ளோ சந்தோசமா இருக்கேன். நேத்துல இருந்து எப்பவுமே எரிஞ்சு எரிஞ்சு விழும் என் பேத்தி நேத்து சாயந்திரம் வந்ததும் கட்டி பிடிச்சு அழுதா …அப்புறம் தான் நேத்து நீ வகுப்புல தாத்தா பாட்டி பத்தி பேசுனத சொன்னா. உன்னை இத்தனை நாள் புரிஞ்சுக்கல நான் னு பெரிய மனுசியாட்டம் பேச ஆரம்பிச்சுட்டா ..” என்றவாறு தொடர்ந்தது அந்த அன்பு பாட்டியின் பேச்சு …அதன் பின்பு அவள் பேசிய எதுவும் கேட்கவில்லை …என் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. பேசியது என் மாணவியின் பாட்டி …

    இது போன்ற அழைப்புகள் எனக்கு புதிதல்ல. முன்னரே நம்பிக்கை நிமிடங்களிலே இது போன்ற பதிவு ஒன்றை எழுதியுள்ளேன் .ஆனால் ஒவ்வொரு அழைப்பும் எனக்கு முக்கியமே. வகுப்பறைகளை தாண்டி மாணவர் மனதில் அமர்வது அத்தனை எளிதல்ல. வகுப்பறைகளில் உறவுகள் பற்றி அடிக்கடி பேசிவருகிறேன். இயந்திர உலகில் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இயந்திரங்களாக எனது மாணவர்களை உருவாக்க விரும்பவில்லை. எனது மாணவர்களிடம் மட்டுமல்லாமல் நான் போகும் மேடைகளில் எல்லாமே உறவுகளின் உன்னதங்களை பேசி வருகிறேன். அது எத்தனை வலிமையானது என்பது உணர்ந்தவர்களுக்கே புரியும். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் நமக்கு ஆறுதலளிக்கவோ நாம் ஆறுதல் படுத்தவோ உறவுகள் அவசியம். அதுவும் தாத்தா ,பாட்டி போன்ற உறவுகள் இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்றே.

    வன்முறைகளைகளையும் வக்கிரங்களையும் வரைமுறை இல்லாமல் இளம் தலைமுறையினரிடையே விதைக்கும் சற்றே மோசமான கலாச்சாரம் மாற வேண்டுமெனில் மாணவர்கள் மனதில் நல்ல செய்திகள் பகிரப்பட வேண்டும். நீங்கள் அவர்களை வழிநடத்த தேவையில்லை. வழிகாட்டவும் வேண்டாம். தடுமாறும் சமயங்களில் தாங்கிப் பிடித்தாலே போதுமானது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களோடு பேசினாலே போதும்.

    ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் என்பார்கள். மிகப்பெருமையோடு இந்த பணியினைச் செய்து வருகிறேன். நல்ல மாணவர்களை உருவாக்குவதோ தயாரிப்பதோ எனது வேலையில்லை. அவர்களுக்குள் இருக்கும் நல்ல மனிதர்களை அடையாளம் காட்டினாலே போதும். அதையே நான் செய்தும் வருகிறேன்.

    என் இரண்டு தாத்தாக்களுமே ஆசிரியராக இருந்ததால் அவர்களின் ஆசியே என்னை வழிநடத்துகிறது என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன் என் அன்பு மாணவர்களோடு …

    சில தருணங்களே
    நம் வாழ்வினை அர்த்தப்படுத்திவிடுகின்றன …
    சதா பாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி வண்ணம்

    ec48f3f8-b70f-4399-8876-9860be1deb3a

    HE is the PLAY
    HE is the PLAYER
    HE is the PLAYGROUND
    HE PLAYS for HIMSELF….BAGAWAN SRI AUROBINDO….

    ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
    கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
    சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
    ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்

    Share
  • நல்லதொரு குடும்பம்..

     

    ” வாசு,  சிவா… சீக்கிரம் வந்து சாப்பிட்டு போங்கடா.. அடுத்தவா சாப்பிட வேண்டாமா”  சமையல் அறையிலிருந்து குரல் கேட்க, இருவரும் சுவரில் மாட்டியிருந்த அலுமினிய தட்டுக்களை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதே தட்டில் சாப்பிட அடுத்த இருவர் தயாராக இருக்க… ஒரு கூட்டுக் குடும்பத்தில் இது முதல் காட்சி.

    “எனக்கும் பசிக்கிறது… அவர்கள் சாப்பிடும் வரை நான் எதுக்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும் ” என்ற மணியின் துயர் கண்டு  “இதோ வந்துட்டேன் ” என்று அத்தை கல்சட்டியிலே தயிர் சாதத்தை பிசைந்து வந்து “இப்படி உட்காரு.. நான் கையிலே உருட்டி போடறேன்… சாப்பிடு ” என்று ஆறுதல் வார்த்தை கூற, அடுத்த   மூன்று பேர் தரையில்  உட்கார, அந்த சோற்று உருண்டைகளுக்கு நடுவே பழங்குழம்பை சுட வைத்து விட, சப்புக் கொட்டி சாப்பிடும் அந்த வீட்டு சிறுவர்களுக்கு சோற்றோடு  அன்பையும் கலந்து ஊட்டும் அந்த வயதான அத்தை… இது இரண்டாம் காட்சி..

    சிறிய ஹாலின் ஓரத்தில் அமர்ந்து வெற்றிலை பாக்கை ருசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் அப்பா, சித்தப்பா, வெளி வராண்டாவில் ஒருபடி அரிசியை ஊறப்போட்டு இட்லிக்கு மாவை அறைத்துக்கொண்டிருக்கும் அம்மா, பழைய மர்பி ரேடியோவில் “காற்றினிலே வரும் கீதம்” பாட்டை ரசித்துகொண்டிருக்கும் சித்தி, இவர்களுக்கு நடுவே பள்ளி பரிட்சைக்காக படித்துகொண்டிருக்கும் ரவி, “கொஞ்சம் மெதுவா படிடா. நாங்களெல்லாம் பாட்டு கேட்டுகொண்டிருகிறோம் என்பது தெரியாம கத்தறே ” என்று முனகும் அக்கா,,,, இது குடும்பத்தின் மூன்றாவது காட்சி…

    ஒரு மண் பொந்துக்குள் முடங்கிக்கிடக்க உள்ளே செல்ல போட்டியிடும் முள்ளம்பன்றிகள்  ஒன்றையொன்று  தள்ளிக்கொண்டு உள்ளே  ஒதுங்க,அதன் கூர்மையான முற்கள் உரசி அடுத்ததின் உடலிலிருந்து ரத்தம் கசிவது போல்,  ஒரே ஹாலில் எல்லோரும் போர்வையில் படுத்துகொள்ள “நீ தள்ளிப் போடா .. ராத்திரி முழுதும் காலாலே  மிதித்துத் தள்ளுவே ” என்று அம்மா அண்ணனை விரட்ட.”நான் மொட்டை மாடியிலே படுத்துக்கப் போறேன் போ ” என்று அவன் கிளம்ப.. ” வேண்டாண்டா.. ராத்திரில காத்து கருப்பு அடிச்சுடும் ” என்று கவலையோடு அம்மா பதில் சொல்ல.. ..,,நான்காம் காட்சி.

    “என் செருப்பு அறுந்து போச்சே ” என்ற கவலையில் இருக்கும் சிவாவிடம் ” எனக்கு லீவ் தாண்டா.. என் செருப்பை போட்டிண்டு போ .. உன்னோட செருப்பை மதியம் தைத்து வைக்கிறேன் “என்று சொல்லும் மணியிடம் புன்சிரிப்புடன் “தேங்க்ஸ் .மணி.. அப்படியே உன்னோட புது சட்டையையும் கொடு ஒரு நாளைக்கு “என்று கேட்கும் மணி.. இவர்கள் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் மற்றவர்களுடைய துன்பத்தை அறிந்துகொள்ளும் உறவுகளின் வழியில் ஒரு குடும்பம் … ஐந்தாம் காட்சி…

    வயதான காலத்தில் வாத நோயால் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளே மெதுவாக நகர்ந்தே செல்லும் தாத்தாவை இன்று குளிப்பாட்ட முடியாமல் சுரத்தில் தவிக்கும் பாட்டிக்கு பதிலாக மெதுவான சூட்டில் அவர்மேல் நீரூற்றி தேய்த்து துடைத்து விட்ட பேரனைப் பார்த்து “நல்ல பிள்ளை.. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே ” என்று தாத்தா வருத்தப்பட … தாத்தாவுக்கு உதவிசெய்யப் போய் வகுப்பிற்கு தாமதமாக வந்து வகுப்பிற்கு வெளியே காவல் தெய்வமாக நிற்கும் அந்தப் பிள்ளை… ஆறாம் காட்சி..

    மலரும் நினைவுகள்…

    அன்பால் பிணைக்கப்பட்ட உறவுகள்.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டு மகிழ்வில் திளைக்கின்ற ஒரு குடும்பம்… கற்பனையல்ல… இது நாம் பல்லாண்டுகளாய் வாழ்ந்து வந்த முறை..

    மாறுகின்ற காலத்தில்..

    உறவுகளை நொறுக்கி உயரங்களைத் தேடுகிறோம்..

    அன்புப் பாலங்களை உடைத்து அகலமான வீடுகளை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.

    வாரம் ஒரு முறை வீதி உலா சென்று சொந்தங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் ..

    மனிதர்களை இழந்து பொருள்களை வீட்டில் அடைத்துகொண்டிருக்கின்றோம்

    சிந்திக்க ஒரு நொடி…

    “நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்..” பாடிய பாவலனை நன்றியோடு நினைக்கவேண்டும்…

    மே 15….. உலக குடும்ப தினம்… !!

     

     

    Share
  • வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    c1508f89-ee03-4738-9542-f9d36e45eb3e

    இன்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றுத் திருப்புமுனை நாள்.

    தமிழரசுக் கட்சியின் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் அங்கிருந்தார். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அங்கிருந்தார். மலையகத்தின் மாபெரும் தலைவர் சௌ. தொண்டமான் அங்கிருந்தார். மூவர் தலைமையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இலங்கைத் தமிழர் இயற்றினர்.

    1976 மே மாதத்தில் அந்தத் தீர்மானத்தின் ஆங்கில வாசகங்களைத் தட்டச்சிட்டேன், தவறற்ற ஆவணமாகத் தயாரித்தேன் என்பதால் வரலாற்றுக்குச் சாட்சியாக இருந்தேன்.

    இத்தீர்மானத்தை இயற்றலாமா? வேண்டாமா? என நீண்ட காலம் இத்தலைவர்கள் கலந்துரையாடினர். தீர்மானத்தால் வரும் நன்மை தீமைகளை நோக்கினர். இக்கலந்துரையாடல்களுக்கும் சாட்சியாக இருந்தேன்.

    மூதறிஞர் செல்வநாயகத்தின் இல்லம். மு. திருச்செல்வமும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். Sir, this is not a bearer cheque. This is not a crossed cheque. This is an account payee cheque. It is a non-negotiable instrument. மூதறிஞர் செல்வநாயகமும் மற்றவர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். பெரியவருக்குக் கேட்டிருக்குமா என்ற ஐயம் மு. திருச்செல்வத்துக்கு. Sir, did you hear me? என்றார், கொஞ்சம் உரத்த குரலில். உதட்டைத் திறக்காமல் சிரிப்பைத் தவழவிட்டுக் கண்களை விரித்து மழலையானார் செல்வநாயகம், கேட்டதாகத் தலையாட்டினார். நான் சாட்சியாக நின்றேன். மு. திருச்செல்வத்துடன் மகிழுந்தில் நான் திரும்புகையில், Thamby, we are entering the most challenging phase in our recent political history. Periyavar knows what is best for the Tamil people என என்னிடம் கூறினார்.

    அவசரமாக எடுத்த முடிவல்ல. ஆலோசிக்காமல் எடுத்த முடிவல்ல. இளைஞர்களின் ஆவேசத்தால் எடுத்த முடிவல்ல. படிநிலைகள் வழி ஏறாமல் எடுத்த முடிவல்ல.

    இந்த முடிவைத் தவிர வேறு அரசியல் வழி இல்லையாதலால் இம்மூவர் தலைமையில் ஈழத் தமிழினமே வட்டுக்கோட்டைக்குச் சென்றது. பண்ணாகத்தில் திரண்டது.

    எந்தப் படியிலும் ஏறாமல் விட்டேனா? எந்தக் கதவையும் தட்டாமல் விட்டேனா? எந்த வழியையும் நாடாமல் விட்டேனா? கீழே இறங்கமால் விட்டுக்கொடாமல் விடாப்பிடியாக நின்றேனா? நியாயமான உடன்பாடுகளுக்கு மறுத்தேனா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

    சொன்னவர் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம். திருகோணமலையில் தன் வீட்டில் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தவர் இன்றைய தமிழர் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன்.

    1949 திசம்பர் 18ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முதலாவது மாநாட்டுத் தலைமை உரையில் கூறிய சில வரிகளைத் தருகிறேன்.

    “……… பெரிதும் சிறிதுமாக உள்ள மொழிவழி இனங்களிடையே எழும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசுகளும் இணைந்துள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உள.

    “ஒவ்வொரு மொழி இனத்துக்குமாக, இறைமையுடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப்பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி.

    “ஒவ்வொரு மொழி இனத்துக்குமாகத் தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து, மாநிலங்கள் சேர்ந்து நடுவண் அரசை அமைக்கின்ற கூட்டாட்சி அரசைக் கொண்ட ஒரே நாட்டை அமைத்தல், மற்றொரு எளிதான வழி.

    “இத்தகைய வழிகளுக்கமையச் செயற்படுவதாயின் மொழிவழி இனங்கள் தத்தமக்கெனத் தனியான நிலப்பகுதிளைக் கொண்டிருக்க வேண்டும்.”

    “…..நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுவே. தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், தன்னாட்சி உடைய சிங்கள் மாநிலம், இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான நடுவண் அரசு. இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு. சிறியதான தமிழ்ப் பேசும் நாட்டினம் அழிந்து போகமலும், பெரியதான சிங்கள நாட்டினத்தினால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இதுவே.”

    57 ஆண்டுகளின் பின்னரும் அதேயளவு ஆகக் குறைந்த ஏற்பாடுகளையே தமிழ் தலைவர்கள் அனைவரும் இன்றும் பேசுகின்றனர். மூதறிஞர் செல்வநாயகம் தொலைநோக்கினர், அரசியல் தெளிந்தவர். மனித நேயமும், மனித உரிமையும் பேணுபவர்.

    1949 தொடக்கம் கடுமையாக உழைத்தார். அவரது ஒவ்வொரு அரசியல் காய் நகர்த்தலும் தமிழருக்கு அரணாயின. 27 ஆண்டுகளின் பின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அவரது தேடலின் தெளிவு. அரசியல் முதிர்ச்சியின் பேறு.

    “ஒவ்வொரு மொழி இனத்துக்குமாக, இறைமையுடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப்பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி  என 1949இல் அவர் கூறிய முதலாவது வழியே, 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாயது.

    பிரித்தானியரும் சிங்கள அரசியல் தலைவர்களும் களம் அமைத்ததாலன்றோ ஈழத் தமிழர் வட்டுக்கோட்டையை அடைந்தனர்.

    மூதறிஞர் செல்வநாயகம் உறுப்பினராக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு, ஜீ ஜீ பொன்னம்பலம் தலைவர். 1944 நவம்பர் 27இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் ஜி ஜி பொன்னம்பலம் தலைமையுரை ஆற்றினார். கூட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது. அவர் ஆற்றிய உரையின் சில வரிகள் குறிப்பிடத்தக்கன.

    “…… இலங்கைக்கு நாம் அடிமைகளாக வரவில்லை. உரிமைகொண்ட ஆட்சியாளர்களாக இருந்தோம். நமது நிலத்தில் நாம் உரிமை கொண்டாடி வாழ்ந்தோம். இதை நினைவுபடுத்துகிறேன். தமிழரே இந்தத் தீவின் ஆதிக் குடிகள். இதை நமது சிங்கள நண்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஆட்சிசெய்த அரசை நாம் பெற்றிருந்தோம். இதனை இலங்கையின் வரலாற்றில் காணலாம். ஐரோப்பியக் கடலாடிகள் வரும்வரை நம்மை (தமிழரை) அந்நியர் ஆளவில்லை. நம்மை நாமே ஆண்டோம்……”

    இலங்கையின் ஆட்சியுரிமையை இலங்கையில் வாழ்கின்ற இருபெரும் மொழி வழிச் சமூகங்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கூறினர். இலங்கை விடுதலை பெற்றால், தமிழர் ஒத்த குடியுரிமை பெற்றவர்களாகவே சிங்களவருடன் வாழ ஒப்புக்கொள்வார் என்ற கருத்தைச் சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐயம் திரிபு அற ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களின் இந்தக்கோரிக்கை, “ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை” எனப் பிற்காலத்தில் புகழ்பெற்றது.

    தமக்கென ஆட்சியைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் எனத் தமிழர் சார்பில் தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை. தமிழர் தனியான தேசிய இனம் என்பதால், தமிழர் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிநாட்டுக் கோரிக்கையைச் சோல்பரி ஆணைக் குழுவின் முன் வைக்கவில்லை. தமிழரின் பராம்பரியங்களையும் வாழ்வு முறைகளையும் முன்னெடுக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பையுமே தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை.

    ஈழத் தமிழரின் மென்மையான கோரிக்கையைப் பிரித்தானியர் ஏற்கவில்லை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற தளத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களவர், எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழரை மேலாட்சி செய்யும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை இலங்கைக்குக் கொடுத்தனர். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முதற் தளம்.

    எண்ணிக்கைப் பெரும்பன்மையை மேலும் உயர்த்தச் சிங்களவர் கொணர்ந்த முதலாவது இன ஒழிப்பு அம்பு, தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இரண்டாவது தளம்.

    1948 திசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (குடியுரிமைச்) சட்டம், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுள் மூன்றில் ஒரு பங்கினரை நாடற்றவர்களாக்கியது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒரே “குற்றத்திற்காக” இவர்கள் வாக்குரிமையை இழந்தனர்; நாட்டுரிமை இழந்தனர்; குடியுரிமை இழந்தனர்; ஆட்சியுரிமை, அரசுரிமை அனைத்தையும் இழந்தனர்.

    1948ஆம் ஆண்டு தொடக்கம் இந்நாட்டில் தமிழ் மக்களுடைய வாழ்வு கீழடைந்துகொண்டே வருகிறது. 95 உறுப்பினரைக் கொண்டிருந்த அன்றைய நாடாளுமன்றத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் பிரதிநிதிகளாயிருந்த தமிழ் உறுப்பினர்கள் இன்று இங்கு இல்லை. அவர்களுடைய இடத்தை இன்று அவர்களிலும் இரட்டித்த எண்ணிக்கையான சிங்களஉறுப்பினர் எடுத்திருக்கின்றனர்”, என வேதனையுடன் 1972 அக்தோபர் 3ஆம் நாள் அன்றைய தேசிய அரசுப் பேரவையில் உரைத்தார் மூதறிஞர் செல்வநாயகம்.

    வட்டுக்கோட்டையில் தீர்மானத்துக்கு வருவதற்குரிய காரணங்களாக, மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம், ஜீ ஜீ பொன்னம்பலம், சௌ தொண்டமான் (சில மனத்தடைகளுடன்) முன்வைத்த அனைத்தும் இன்றும் தீர்க்கப்படாத சிக்கல்களாகவே உள். அக்காரணங்களாவன:

    வரலாற்றிற்கு முன்னான காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளூடாக, வளவை நதியிலிருந்து சிலாபம் வரைக்கும் உள்ள தெற்கு மேற்குப் பகுதிகளிலும் நடுப்பகுதிகளிலும் சிங்கள மக்களும், வடக்கு, கிழக்கு, வடமேற்கு நிலப்பகுதிகளில் தமிழ் மக்களும் வாழ்ந்து இந்நாட்டின் ஆளுகையைச் சிங்கள நாட்டினமும், தமிழ் நாட்டினமும் தமக்குள் பகிர்ந்து வந்ததாலும்,

    சிங்கள அரசுகளோடு தொடர்பற்ற வகையில் 1619ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் தமிழ் அரசைப் போர்க்களத்தில் தோற்கடித்துக் கைப்பற்றி, அவர்களிடமிருந்து ஒல்லாந்தரும் பின் ஆங்கிலேயரும் அதேவிதமாக வெற்றி கொண்டதாலும்

    சிங்கள அரசுகளின் நிலப்பகுதிகளையும், தமிழ் அரசுகளின் நிலப்பகுதிகளையும் வேறு வேறாக ஆட்சி செய்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் 1833ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவின் விதப்புரைகட்கு அமையத் தம் ஆட்சிவசதி கருதி வலுக்கட்டாயமாக இந்நிலப்பகுதிகளை ஒன்றாக இணைத்ததாலும்,

    ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான விடுதலைக் கிளர்ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து, இறுதியில் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாலும்,

    மேற்கூறிய வரலாற்று உண்மைகளைப் முற்றாகப் புறக்கணித்து, எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் முழுத் தீவின் மீதுமான அரசியல் அதிகாரம் சிங்களநாட்டினத்தின் கைக்குமாறி அதனால் தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்ந்ததாலும்,

    சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அனைத்தும், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தைத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக:

    1. தமிழ் மக்களில் அரைப்பங்கினர் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்து அதனால் நாடாளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும்,
    2. திட்டமிட் டு அரசாங்க உதவியுடன், நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், இரகசியமாக ஊக்கிய சிங்களக் கள்ளக் குடியேற்றங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்தலாலும், பண்டைய தமிழ் அரசின் நிலப் பகுதிகளில் சிங்கள மக்களை நுழைத்துத் தமிழரைத் தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும்,
    3. இலங்கை முழுவதும் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக்கி தமிழர் மீதும்,தமிழ் மொழி மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,
    4. குடியரசு அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டின் இந்து, கிறித்தவ, இசுலாமிய மக்களை இரண்டாந்தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்,
    5. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு, பொருளாதார வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம வாய்ப்பை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், வளர்ச்சித் திட்டங்களில் தமிழ் நிலங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,
    6. இலங்கையில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில், தமிழ் நாட்டுக் கலாச்சாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாசார இனக்கொலையை நோக்கி ஈழத்தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்,
    7. 1956ஆம் ஆண்டு கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1961ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர்துறக்கக் காரணமான, காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976ஆம் ஆண்டில் புத்தளத்திலும், இலங்கையின் வேறு பல பாகங்களிலும், காவல் படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும், தமிழ் பேசும் முசுலீம்கள் மீது நடத்தியதாக்குதல் போன்றும், தமிழ்ப்பேசும் மக்கள் மீது வகுப்புவெறிப் பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தும் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்துவிட்டும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழப் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆளுமையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,
    8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும், பல்லாண்டுகாலக் கணக்கில் சிறைச்சாலைகளில் அடைத்து வதைத்தும்,
    9. எல்லாவற்றிற்கும் மேலாக நெருக்கடி நிலைச் சட்டத்தின் கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி, குடிஉரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கும், விகிதாசாரத்துக்கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு யாக்க அவையாக அமைத்து முந்தைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு பாதுகாப்புக்களையும் நீக்கி, அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும், தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்

    பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், நாடாளுமன்றத்துக்கு உள்ளும், வெளியும் கிளர்ச்சி செய்தும், தமிழ் மக்கள் தன்மானத்தோடு வாழக்கூடிய ஆகக்குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்களப் பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனதாலும்,

    ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்களை நசுக்காதவாறு நாடாளுமன்றத்தில் சமபல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு, எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதைத் தடைசெய்யும் பொருட்டுச் சோல்பரி அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்ட29ஆவது விதியின் அற்பப் பாதுகாப்பையும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கியதாலும்,

    ஐக்கிய இலங்கைக் கூட்டாட்சிக் குடியரசின் ஓர் அங்கமாக ஒரு தன்னாட்சித் தமிழ் அரசை நிறுவவதன் வழியாக தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமையைப் பேணும்பொருட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியலமைப்பு யாக்க அவைக்கு முன்வைத்த திட்டங்களை அவற்றின் தகுதி ஆராயப்படாமலே முழுதாக நிராகரித்தபடியாலும்,

    வல்வெட்டித்துறையில் 1971 பெப்ருவரி 7ஆம் திகதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டு எடுத்த ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின்படி அரசியலமைப்பு யாக்க அவையின் அடிப்படைத் தீர்மானங்களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங்கட் சியில் இருப்போர் உட்படத் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராலும் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் அரசாங்கமும் அரசியலமைப்பு யாக்க அவையும் நிராகரித்தபடியாலும்,

    1965ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழிச் சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளையாவது அரசியல் அமைப்பில் இடம் பெறச் செய்யும் பொருட்டும் மொழி உரிமை, மத உரிமை, அடிப்படை உரிமைகள் பற்றியும் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட மூலத்திற்கான திருத்தங்கள் அனைத்தையும் தோற்கடித்த காரணத்தினால் மிகப் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்ததாலும்,

    1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழர் கூட்டணி 1972 யூன் 25ஆம் திகதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ்த் தேசிய இனத்தின் வேட்கைகளை நிறைவு செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்தும், அரசு அவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்கத் தமிழர் கூட்டணியானது அரசுக்கு எதிராக அறவழி நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்ததாலும்,

    நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற முறையில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியல் சட்டரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இந்த இறுதி முயற்சியைப் பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித்தள்ளியதாலும்,

    தமது அரசியல் அமைப்புக்குத் தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலைநாட்டுவதற்குத் தேசிய அரசுப் பேரவையில் தமது உறுப்புரிமையைத் துறந்து ஒர் இடைத் தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்திவைத்த காங்கேயன்துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் மக்களாட்சி உரிமையைப் புறக்கணித்ததாலும்,

    1975 பெப்ரவரி 6ஆம் திகதி நடை பெற்ற இடைத் தேர்தலில் காங்கேயன்துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கம், தமிழ் மக்கள் மீது திணித்த குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்ததாலும்,

    வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இயற்றவேண்டிய கட்டாயத்துக்குப் பிரித்தானியாவும் சிங்கள அரசியல் தலைவர்களும் (ஈழத் தமிழர் சொன்ன மாற்று வழிகளையும் புறந்தள்ளி) உந்தித் தள்ளினர் என்றே வரலாறு எழுதும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    80476b30-b664-49a5-b783-fd36c70e4cc7

    ”காலாட் படைபோலக் கண்ணனைப் பின்னிருந்து,
    கால்ஆட் கொளத்துள்ளும் கன்றுதன், – வாலாட்ட,
    வாள்விழி ராதை வெயிடிங்கே (Waiting) ஆனாலும்,
    தாள்கொடுப்பான் தோழமைக்கு தாமு”….
    தீக்குள் தகிப்பாய், துளிநீரில் தாகிப்பாய்,
    காய்க்குள் கனிவாய், கொடியமனப் -பேய்க்குள்
    முனியாய் இருப்பாய், முகுந்தா எனக்கு,
    தனியாய் தரிசனம் தா ….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    b23593b7-6b0b-4129-9e3b-5f99d40e37a4

    “இடுப்பில் வலம்வைத்(து) இடக்கையில் மத்தோ(டு)
    உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
    “இன்றை யMENUவாய், ஈரேழ் உலகுண்ணத்
    தின்றிடு பார்த்தாகீ தை”….கிரேசி மோகன்….

    Share
  • அவர் இரங்க வேண்டுவமே !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
    கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்
    தமிழ்நாடு வந்தாராம்
    தமிழர் வெறியாய் ஓடித்திரிவதைத்
    தெரிவினில் கண்டாராம்
    காரணம் புரியா நிலையில் கடவுள்
    கைகட்டி நின்றாராம் !

    தோரணம் கட்டித் தமிழர்கள் எல்லாம்
    துடிப்புடன் நின்றாரும்
    ஆரது ஆட்சியைப் பிடிக்கிற தென்று
    அடிபட்டுக் கொண்டாராம்
    வாயிலே வந்ததை வார்த்தைகள் கொட்டி
    வாக்குகள் கேட்டனராம் !
    தோழமை என்றவர் சொல்லிலே சொல்லி
    சொத்தெலாம் குவித்தனராம்
    நாளைய வளர்ச்சி எதனையும் எண்ணா
    நல்லதைச் சுருட்டினராம்
    வேரொடு களைவோம் ஊழலை என்றவர்
    விண்ணென உயர்ந்தனராம்
    வியர்வையில் நின்றவர் அத்தனை பேருமே
    விக்கித்து நின்றனராம் !
    மதுவினை ஒழிப்போம் என்றுமே சொன்னவர்
    மதுக்கடை திறந்தனராம்
    மதியினை இழந்து மற்றவர் நின்றிட
    மரமென இருந்தனராம்
    நீதியைக் கையில் எடுத்துமே நின்று
    நிட்டூரம் செய்தனராம்
    சாதியைக் காட்டி சமயத்தைக் காட்டிய
    சரித்திரம் படைத்தனராம் !

    வேதனையில் மக்கள் வாழ
    விதம்விதமாய் வீடு கட்டி
    காதலுடன் கார் வாங்கி
    கணக்கின்றிப் பணம் பதுக்கி
    உலக வங்கி அனைத்திலுமே
    உழைப்பின்றி வந்த பணம்
    உபயோகப் படும் என்று
    ஒதுக்கி வைப்பார் பக்குவமாய் !
    படிப்பறியார் உடுப்பறியார் படுத்திருக்க இடமறியார்
    பசியாற வழியின்றி பரிதவிக்கும் நிலையினிலே
    துடித்தெழுந்து ஓடிவந்து துயர்துடைக்கும் மனமின்றி
    அடித்தெழுந்து பேசுகின்றார் ஆட்சியிலே அமர்வதற்கு !
    காந்திபோட்டி போடவில்லை கவிதாகூர் விரும்பவில்லை
    சாந்திமனம் கொண்டவர்கள் சண்டைதனை விரும்பவில்லை
    சரியான தேர்தலெனின் சண்டைக்கே இடமில்லை
    சனநாயகம் தளைக்கச் சரியான வழிசமைப்போம் !
    குத்து வெட்டு அத்தனையும்
    சுத்தி வந்து பார்த்துவிட்டு
    சத்தியமாய் தமிழ் நாட்டை
    தான் நினைப்ப தில்லையென
    உத்தமராம் எம் கடவுள்
    உடனடியாய்ச் சென்று விட்டார்
    அத்தனைபேர் மனம் மாற
    அவர் இரங்க வேண்டுவமே !

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ?

    Posted on May 12, 2016

    Dark Matter

    (கட்டுரை: 4)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++

    http://www.pbs.org/wgbh/nova/physics/dark-matter.html

    “மனித வரலாற்றிலே சவால் தரும் மாபெரும் தீவிர விடாமுயற்சியாகச் செய்து வருவது, பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது, எங்கிருந்து வந்தது என்னும் ஆராய்ச்சியாகும்! பால்மய வீதியில் சூரிய மண்டலத்தின் ஓர் மிகச் சிறு அண்டக் கோளில் இருந்து கொண்டு, பிரமாண்டமான வடிவமுடைய பிரபஞ்சத்தை அறிந்து கொள்ள மனிதர் முனைகிறார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை. உலகத்திலே படைக்கப்பட்ட ஒரு சின்னப் மனிதப்பிறவி அகிலத்தின் உன்னத முழுப்படைப்பை அறிய முடியும் என்று உறுதியாக நம்புவது மகத்தானதோர் சிந்தனையாகும்.”

    முர்ரே ஜெல்-மான் (Murray Gell-Mann) From the Book Stephen Hawking’s Universe

    The Composition of the Cosmos

    பிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் புதிரான பொருட்கள் என்ன ?

    காரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன ? சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் ! அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன ? அவை எல்லாம் சூனிய மண்டலமா ? வெறும் இருள் மண்டலமா ? இந்தக் கேள்விக்குப் பதில் காண முயல்கிறது இந்தக் கட்டுரையின் முதற்பகுதி.

    Dark Matter & dark energy

    சுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter). சற்று விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars], உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos]. இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் கருமைப் பிண்டம் என்பது என்ன ? அதைத் தெரிவதற்கு முன் பிரபஞ்சத்தில் ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, அணுசக்தி பற்றி அறிந்த நாம் அடுத்து புதிதாகக் கருமைச் சக்தியைப் பற்றி தெரிந்து கொள்வோமா ?

    The Composition Details

    பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத கருமைப் பிண்டங்களா ?

    அகிலத்தில் நாமறிந்த அண்டங்களின் பிண்டம் உள்ளது. அத்துடன் கருமைச் சக்தி என்னும் புதிதான ஒன்றும் உள்ளதாக அறியப்படுகிறது. கருமைச் சக்தி என்பது பிரபஞ்சத்தை வேக நீட்சியில் விரிவுக்கும் ஓர் புதிரான விசை (Dark Energy is a mysterious Force that is accelerating the expansion of the Universe). பிரபஞ்சத்தின் கட்டுமானச் செங்கல்களில் ஒன்றான கரும் பிண்டத்தின் கூட்டுப் பண்பாட்டை மெதுவாக்குவது (Slowing the Clustering of Dark Matter) பிரபஞ்சத்தின் தொடர் விரிவியக்கமே ! துல்லியமாக நம்மால் ஹப்பிள் விரிவின் வரலாற்றை அளக்க முடிந்து, திணிவு அமைப்பின் (Mass Structure) வளர்ச்சியை வரைபடமாக்க முடிந்தால், கருமைச் சக்தியின் பௌதிக நியதியை வகுத்திட இயலும். பல்வேறு நியதிகள் பல்வேறு பிரபஞ்சக் காட்சிகளை யூகித்துச் சொல்லும்.

    அமெரிக்காவில் கட்டுமானமாகும் மாபெரும் LSST தொலைநோக்கி [Large Synoptic Survey Telescope (LSST), Arizona] கருமைச் சக்தியை நான்கு வித வழிகளில் ஆய்வு செய்யும். அவற்றின் விபரங்களைப் அடுத்த வாரம் வரும் கட்டுரைப் பத்திகளில் அறிவோம்.

    Dark Energy & Dark Matter

    பிரபஞ்சத்தின் கரும் பிண்டம் என்றால் என்ன ?

    கரும் பிண்டத்தைப் பற்றிய புதிர் இருந்திரா விட்டால் பிரபஞ்சத்தின் அம்சங்களை விஞ்ஞானிகள் சிக்கலின்றி எளிதாக நிர்ணயம் செய்திருப்பார். தொலைநோக்கிகள் மூலம் உளவு செய்து பிரபஞ்சத்தை ஆராய்ந்ததில், கண்ணுக்குப் புலப்படாத, என்ன வென்று தெளிவாய் விளங்காத, புதிரான பிண்டங்கள் சுமார் 25% கொள்ளளவில் குடியிருந்தன ! விஞ்ஞானிகள் பல்வேறு வழிகளில் பிரமாண்டமான அந்த விந்தைப் பிண்டத்தை அளக்க முற்பட்டார்கள் ! நாமறிந்த அகிலக் கோள்களின் மேல் விழும் கரும் பிண்டத்தின் பாதிப்புகளைக் கண்டார்கள் விஞ்ஞானிகள்.

    1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக் கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது, முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார். அவரது அதிசய யூகம் இதுதான். நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன. அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாதபடி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார். அந்த கனமான பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கப் படுகின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.

    The Giant LSST Telescope

    ஜான் ஓர்ட் சூரியனுக்குப் பக்கத்தில், விண்மீன்களின் நகர்ச்சியை நோக்கிய போது, சூரிய ஒளிப் பண்டத்தை விட அத்தகைய கரும் பண்டத்தின் திணிவு மூன்று மடங்கு இருக்க வேண்டும் (Dark Matter Existed 3 times as much Bright Matter) என்னும் தனது கருத்தை வெளியிட்டார். பின்னர் ஆய்வுகளைத் தொடர்ந்த வானியல் வல்லுநர்கள் ஒளித்தட்டுகளையும் (Luminous Disks), காலாக்ஸிகளைச் சுற்றிலும் தெரிந்த ஒளி வளையங்களை (Halos) கண்ட போது ஓர்டின் கரும் பிண்டத்தின் அளவு உறுதியாக்கப்பட்டது.

    (தொடரும்)

    *********************

     

    https://youtu.be/-lVxCoustNc
    https://youtu.be/CwHH2mymUdI
    https://youtu.be/AmbgVtA0IGw

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html(பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html(பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]

    10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html (May 16, 2007)

    11. “Beyond Einstein” Search for Dark Energyof the Universe

    [www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html (July 10, 2007)

    12. Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html (April 12, 2007)

    13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)

    14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

    15. http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

    16.  https://en.wikipedia.org/wiki/Dark_matter  [May 12, 2016]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) May 12, 2016 [R-1]

    Share
  • ஓட்டுப் பெட்டி சொல்கிறது

    மீ.விசுவநாதன்

    evm

    வாக்களிக்க வாருங்கள் மக்களே – உங்கள்
    மனச்சாட்சி சொல்கேட்டால் நன்மையே !
    ஆக்கமுள பணிநானும் செய்கிறேன் – இந்த
    அழகான நாடுவாழ மையினால் !

    நல்லபாம்பு மான்குட்டி குணத்திலே – இங்கு
    நமதூரில் வேட்பாளர் நிற்கிறார் !
    வெல்வதற்குக் குறிவைப்பார் பணத்திலே -நீங்கள்
    விழவேண்டாம் அவர்விரிக்கும் குழியிலே !

    ஆட்காட்டி விரலில்மை தீட்டிடும் – அந்த
    அரைநொடியில் தலையெழுத்தே மாறிடும் !
    ஓட்டின்று உங்களது கையிலே – தேச
    உயர்வுக்கே தந்தாலே வெற்றியே !

    (12.05.2016)

    Share
  • அறவியல் நோக்கில் இரட்டைக்காப்பியங்கள்

    –து.கார்த்திகேயன் 

    தமிழ்மொழியில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம். அதனைத்தொடர்ந்து தோன்றியது மணிமேகலை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டனவாகும். இரண்டு என்பதற்கும் இரட்டை என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டு என்பது வெவ்வேறான இரண்டைக்குறிக்கும். இரட்டை என்பது மிக நெருங்கிய ஒற்றுமையுடைய இரண்டைக் குறிக்கும். உலகியலிலும் ‘இரட்டை வாழைப்பழம்’ என்ற வழக்கை நன்கு அறியலாம். ஆகவே சிலம்பும் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சி மட்டுமல்லாமல் வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களைச் சொல்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சமய நோக்கில் மட்டுமே இவை இரண்டும் வேறுபடுகின்றனவே தவிர மற்றபடி அறவியல் நோக்கில் இவை ஒன்றுபட்டே விளங்குகின்றன. நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகியவற்றைப் பல்லாற்றானும் இவ்விரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

    பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத – நினைக்காத வாழ்க்கையே பண்பட்ட வாழ்க்கையாகும். அதற்கு அடிப்படையாக அமைவது நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகிய மூன்றும் ஆகும். இம்மூன்றும் சரிவர ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால், அவன் வீட்டின்பத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறான். அத்தகைய நல்லறங்களைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    மனித வாழ்வும் பயனும்:

    மண்ணுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்த எல்லா உயிர்களின் நோக்கமும் இனிப்பிறவாப் பெருநிலை அடைய வேண்டும் என்பதே! ஆனால், உயிர்களோ அதனை அறியாது அறியாமையில் உழன்று அல்லற்பட்டு நிற்கின்றன. இவ் வுயர் நோக்கத்தை உணர்ந்து மனித உயிர்கள் உய்யவேண்டும் என்பதையே திரு நாவுக்கரசர்,

    “வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்”  (திருமுறை:4: பாடல்: 784)

    என்றார். ஆனால் மனித உயிர்களோ உலகியலில் மூழ்கிச் சிற்றின்பச் சேற்றில் திளைத்து மகிழ்கின்றன. இவ்வாறு பெண்வழிச் சேரலும், உண்டி பெருக்கி உடலை ஓம்பலும் மனிதர்க்குத் துன்பத்தையே தருகின்றன. இதனைச் சிலப்பதிகாரம்,

    “பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகின்
    கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்” (சிலம்பு: ஊர்காண் காதை.3940)

    என எடுத்துக் காட்டுகின்றது. பிறப்பின் நோக்கத்தை உறுதிபட  உணராமல் அறவழிப்பட்ட மனையற வாழ்வியலை வகுத்துச் சிற்றின்பத்தை நாடித் திரிந்தான் கோவலன். மனைவியோடுகூடி மனையறம்  காக்கும் உயர்வினை மறந்தான்; அறிவுமயங்கி, ஐம்புல நுகர்ச்சியினை விரும்பினான். இறுதியில் களவுப்பழி ஏற்று உயிரை இழந்தான். மக்கள் அருந்தவம் உடையோர் என்றாலும் அவர்களின் முன்வினைப் பயன்களால் கீழ்நிலை ஏற்படும். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் அறவாழ்வு ஒன்றே, அரணாக நின்று காக்கும். அப்படி இல்லாது அறத்திலிருந்து மாறுபடுகின்றபோது – அறவாழ்வைத் தவிர்க்கும்போது, முந்தைய நல்வினைகூடக் காவலாகாது என்பதைச் சிலப்பதிகாரம்,

    “உம்மை வினைவந்து உருத்த காலைச்
    செம்மையில் லோர்க்குச் செய்தவம் உதவாது” (சிலம்பு-கட்டுரை காதை.171-172)

    என உரைக்கிறது. எனவே ஐம்புலன்களை நல்வழிப்படுத்தி நல்லறம் புரியும் நல்வாழ்க்கையே நன்னிலை நல்கும் என்பதை இதன்வழி உணரலாம்.

    நற்சொல் நவிலல்:

    சொற்கள் மிகுந்த வலிமை மிக்கன. சொற்களால் பகை நட்பாகலாம்; நட்புகூடப்  பகையாகலாம். நல்லசொற்கள் அன்பை மலரச்செய்யும், நட்பை வளரச்செய்யும், உறவை நிலைபெறச் செய்யும், ஆறுதலைத் தரும், மாறுதலைத் தரும். இப்படி, பலவாறாகப் பயன்பாட்டில் உள்ளன நற்சொற்கள். அதனாலேயே இன்மொழி உரைத்தலை மக்கட்பண்புகளில் ஒன்றாகவே எடுத்துக்காட்டினார் வள்ளுவர்.

    “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு” (குறள்-129)

    என்பார் வள்ளுவப் பெருந்தகை. தீயசொற்களைச் சொல்லிவிடின் அவை ஏற்படுத்தும் காயம் நிலைபெற்றுவிடும். எனவே தீச்சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

    கவுந்தியடிகளோடு கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் பயணித்தார்கள். இடைவழியில் ஒரு பரத்தையும், காமுகனும் அவர்களிடம் வந்தனர். கோவலன், கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர் என அடிகளிடம் வினவினர். கவுந்தியடிகள் ‘இவர்கள் என்மக்கள்’ என விடைபகர்ந்தார்.’ அதைக்கேட்ட அவர்கள் “இவர்கள் உமது மக்களாயின் உடன்பிறந்தோர் கணவனும் மனைவியுமாக வாழ இயலுமோ?” என்றனர். இத்தீச் சொற்களைச் செவியுற இயலாது பெரிதும் நடுக்குற்றாள் கண்ணகி. இதனைக் கண்ட கவுந்தியடிகள்,  அக்கீழ்மக்களைச் சினந்து முள்ளுடைக் காட்டில் முதுநரிகளாகத் திரியும்படி சாபமிட்டார்.

    “உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக்
    கடவதும் உண்டோ! கற்றறிந்தீர் எனத்
    தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
    காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
    எள்ளுநர் போலும் இவர்என்பூங் கோதையை
    முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக எனக்
    கவுந்தி இட்டது தவந்தரு சாபம்” (சிலம்பு: நாடுகாண் காதை.227-233)

    என்னும்  அடிகள் தீச்சொல் உரைத்தமையால் வரும் அவலநிலையை உணர்த்துகின்றன.

    ஒருவனைக் கண்ட அளவில் அவர்தம் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகிய திறங்களை உய்த்துணர்ந்து தமக்கும் அவர்க்கும் தீமைதராத  சொற்களை உரைத்தலே திறனறிந்து உரைத்தலாகும். ஒருவரது திறனறிந்து அவரிடத்தில் நற்சொல் உரைத்தலைக் காட்டிலும் வேறு சிறந்த அறமும் பொருளும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

    “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்”  (குறள்-644)

    எனவே திறனறிந்து பேசுதல் என்ற தன்மை இல்லாமையால் விளைந்த அவலம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றது. 

    நற்செய்கை புரிதல்:

    அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உயிர்க்கு உறுதிப்பொருளாகும். உயிர்கள் தம் பிறவிப் பயனே வீடுபேறாகும். அவ்வீடுபேற்றினை அடைய வேண்டுமானால் பற்றறுத்தல் வேண்டும். ’அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கு நினையத் தகும். பற்று நீக்கமும் அதன்வழியிலான நற்செயலாக்கமும் வீடுபேற்றுக்கு அழைத்துச் செல்லும் கருவிகளாகும். உலகியல் இன்பத்திற்கு காரணமான இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றிலிருந்து பற்று நீங்குதலே பற்றறுத்தல் எனப்படும். வாழ் நாள் படாமல் ஒருவன் நற்செயல் புரிந்தால் அதுவே அவனது பிறவியின் பெருவாயிலை அடைக்கும் கல் என்றார் வள்ளுவப் பேராசான்.

    “வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்குங் கல்” (குறள்-38)

    என்ற திருக்குறள், நற்செயல்களே வாழ்வின் பிறவித்துன்பங்களைப் போக்கும் அருமருந்து என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    பிறர்வாழ நற்செயல் புரியும் நல்லறச் சிந்தனையை கண்ணகி மூலம் சிலப்பதிகாரம் இவ்வுலகிற்கு வழங்குகிறது. கண்ணகி, தன் கணவன் பிரிந்து சென்றபோது இல்லற இன்பங்களை நுகரவில்லையே என வருந்தவில்லை. அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோரைக் காத்தல், விருந்தோம்பல் செய்தல் போன்ற அறச்செயல்களைப் புரியஇயலாமற் போயிற்றே என வருந்துகிறாள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு.கொலைக்களக்காதை:71-73)

    என்னும் அடிகள் சிற்றின்பத்தைக் கடந்து பேரின்பத்திற்கு வழிகோலும் அறச்செயல்கள் புரிகின்ற உயர்வாழ்வியலை உணர்த்துகின்றன. இல்லற வழியமைந்த நல்லறச் செய்கைக்கும் சிலப்பதிகாரத்தின் இவ்வடிகள் சான்று பகர்கின்றன.

    துறவறத்தின் வழியமைந்த அறச்செய்கைக்கு மணிமேகலை வாழ்வைச் சான்றாகக் கொள்ளலாம். அறத்தால் வருவதே இன்பம் என்பதை உணர்ந்த மணிமேகலை, பிறப்பு, மூப்பு, பிணி என்பனவற்றையுடைய கொள்கலனாக விளங்குவது மக்கள் யாக்கை என்பதையும் நன்றாக உணர்ந்திருந்தாள்.

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை:பாத்திரம் பெற்றகாதை.95-96)

    என்னும் அறக்கோட்பாட்டை நிறுவி, பாரினில் உள்ளோரின் பசிப்பிணி அகற்றும் அறச்செயல் புரிந்தாள். அதன்வழி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாள்.

    தொகுப்புரை:

    மனித வாழ்க்கை ஒரு வரம். அதன்மூலம் பிறவியின் வேரறுத்துப் பிறவாநிலை எய்த மனித உயிர்கள் முயலல்வேண்டும். அத்தகைய நிலைக்கு அடிப்படை இயல்புகளாக விளங்குவன பண்பட்ட நன்னடத்தையும், அருளுணர்வோடு பிறக்கும் நற்சொற்களும், தன்னலம் மறந்து பிறர்க்காக முயலும் நற்செயல்களும் ஆகும். அத்தகைய இயல்புகளை மக்கள் சமுதாயம் எய்துகின்றபோது தீயவை தானாக அழிந்துபோகும். மனித வாழ்க்கை மாண்புடையதாக மலரும். அதன்வழி, பேரின்பப் பெருவாழ்வை மக்கள் அடைய இயலும் என்பதையே இவ் விரட்டைக் காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

    ***

    து.கார்த்திகேயன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
    தருமபுரம்மயிலாடுதுறை
    tamilkarthik82@gmail.com

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 196 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் மீண்டும் அடுத்தொரு மடலில் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலத்தின் சுழற்சி கனவேகத்தில் நிகழ்கிறது. காலமாற்றத்தின் நிகழ்வோடு சார்ந்து நிகழும் பலமாற்றங்களில் அரசியல் மாற்றம் என்பது மிக முக்கிய நிகழ்வாகிறது.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அரசியல்களம் இப்போது மிகுந்த வித்தியாசமான ஒரு கோலத்தை எடுத்துள்ளது. அன்றாடம் ஊடகங்களில் உலவிடும் பல செய்திகளில் சில உள்ளத்தைச் சிலிர்ப்படையச் செய்ய வல்லவை. அடுத்தமாதம் 23ஆம் திகதி நடைபெறவிருக்கும் “ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதா? விலகுவதா? எனும் பொதுஜன வாக்கெடுப்பு இப்போது ஊடகங்களை முழுவதுமாகப் பாதித்திருக்கிறது.

    நிலைத்திருக்க வேண்டும் எனும் அணிக்கு தலைமைத்துவத்தை எமது பிரதமர் கமரன் எடுத்திருப்பதைப் போலத் தென்படுகிறது. அதேநேரம் விலகுவது எனும் அணியைப் பிரதமரின் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கடந்தவாரம் வரை லண்டன் நகரபிதா (மேயர்) வாகப் பதவி வகித்த பொரிஸ் ஜான்சன் அவர்களும் எடுத்திருக்கிறார்.

    இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்படும் விவாதங்களினால் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நிரந்தரமான மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்த ஒரு நிலையில்தான் கடந்தவாரம் லண்டன் நகரபிதாவுக்கான (மேயருக்கான) தேர்தல் இடம்பெற்றது. பல கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அந்தத் தேர்தலில் நின்றிருந்தாலும் அனைத்துப்பேரின் கவனமும் இருவரின் மீதே இருந்தன.

    அவர்களில் ஒருவர் கன்சர்வேடிவ் வேட்பாளர் சாக் கோல்ட்சிமித் (Zac Goldsmith), மற்றவர் லேபர் கட்சி வேட்பாளர் சாடிக் கான் ( Sadiq Khan ). இங்கே முக்கியமான விடயம் என்னவெனில் சாடிக் கான், ஒரு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பிரித்தானிய ஆசியப் பிரஜை ஆவார்.

    யார் இந்த சாடிக் கான்?

    Sadiq_Khanபாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஜந்தாவது குழந்தை சாதிக் கான். இவரது தந்தை ஒரு சாதாரண பஸ் சாரதி. நகரசபை மூலம் வசதி குறைந்தவர்களுக்காகக் குறைந்த வாடகையில் கொடுக்கப்படும் இல்லத்தில் வாழந்தவர் இவர்.

    இங்கிலாந்தின் வடலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் மத உரிமைச் சட்டப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். லேபர் கட்சியில் இணைந்து அரசியலில் குதிக்கும் வரை மனித உரிமை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு லேபர் கட்சியில் இணைந்து தான் வாழ்ந்த பகுதியான டூட்டிங் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களின் அமைச்சரவையில் சமூகப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் லேபர் கட்சி எதிர்க்கட்சியானதும் எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் அவர்களின் நிழல் அமைச்சரவையில் நிழல் சட்ட அமைச்சராகப் பணிபுரிந்தார்.

    இன்று மேற்குலக நாடுகளின் தலைநகரங்கள் ஒன்றில் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய இஸ்லாமியர் எனும் பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை நடந்த மேயர் தேர்தல்களில் என்றுமில்லாத அளவில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று லன்டன் நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வை மாசுபடுத்துவது என்ன? இந்தத் தேர்தலின் முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் அரசியல் நாகரிகச் சீரழிவே! ஆமாம் சாடிக் கான் அவர்களின் வெற்றி நிச்சயம் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய வேளையில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சக் கோல்ட்சிமித் அவர்களின் சார்பாக நடைபெற்ற பிரசார வழிமுறைகள் பலரின் வெறுப்புக்கு அவரை ஆளாக்கி விட்டது.

    ஆமாம்! சாதிக் கான் இஸ்லாமியர் எனும் காரணத்தால் சமீபத்திய மேற்குலக பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ஒருவிதமான பீதியுடன் அவரைச் சம்பந்தப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இப்பிரசார யுக்திகளை கேள்விக்குறியாக்கியது.

    பலமுனைகளில் இருந்து கன்சர்வேடிவ் கட்சியின் மீதும், அதன் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் மீதும் காரசாரமான விமர்சனங்கள் விழுந்தன. கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்தவர்களே இத்தகைய பிரசாரங்கள் அரசியல் நாகரிகத்திற்கு முரணானது என்று விமர்சித்தார்கள்.

    சாக் கோல்ட்சிமித் அவர்களின் சகோதரி இத்தகைய பிரசார யுக்தியைத் தனது சகோதரரா கையாளுகிறார் என்று பகிரங்கமாகவே ஆச்சரியப்பட்டார்.  என்னுடைய சகோதரர் இத்தகைய வழிகளைக் கையாளும் சுபாவம் படைத்தவரல்ல என்று விசனப்பட்டார்.

    அதுதவிர சாதிக் கானுடன் ஒன்றாக மேடையில் தோன்றிய ஒரு இஸ்லாமிய மதகுரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் உடன் தொடர்புடையவர் என்று பிரதமர்  கமரன் அவர்களே பாராளுமன்றத்தில் கூறியது மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவர்கள் குறிப்பிட்ட அம்மதகுருவுடன் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தொடர்பிருக்கிறது என்பதோடு அவர் எந்த வகையிலும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் என்பதும் நிரூபணமாகியது.

    இப்போது அம்மதகுரு பிரதமரிடமிருந்தும், பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தும் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார். சாதிக் கான் வெளியிட்ட கொள்கைப் பிரகடனங்களுக்காகவும், அவரது திறமையான தேர்தல் பிரசாரத்தினாலுமே அவர் வெற்றியீட்டினார்; அதற்குரிய கெளரவத்தை அளிக்காமல் அவரின் மதத்தைத் சுட்டிக்காட்டிச் சிறுமைப்படுத்த விளைவது எவ்வகையில் நியாயமாகும் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து கிளம்புகிறது.

    எதுவித ஆதாரமுமில்லாமல் அவர் இஸ்லாமியர் எனும் ஒரே காரணத்திற்காக அவரின் மீதான விமர்சனங்களை முன்வைப்பது என்பது நிறத்தூவேஷத்தின் அடிப்படையில் எழுந்ததா? எனும் கேள்விகூட நியாயமானதே!

    லண்டன் ஒரு பல்லினக்கலாசார தலைநகரம். இங்கு பல்லின மக்கள், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இத்தகைய ஒரு நகரின் மேயராக ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் தெரிவு செய்யப்படுவது இந்நகரின் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்நாட்டு மக்களுக்கும், எனக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தை அளித்த மக்களுக்கும் உண்மையுள்ளவனாகச் சேவையாற்றுவேன் என்று சூளுரைக்கிறார் சாதிக் கான்.

    மதத்தின் அடிப்படையில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவது என்றுமே அறத்துடனான அரசியலுக்கு வழிவகுக்காது. புலம்பெயர்ந்து இந்நாட்டில் வாழும் எம் அனைவருக்கும் இவரது வெற்றி ஒரு மனத்துணிவையளிக்கிறது. அதேபோல் அவரும் மிகவும் திறமையாக மக்களுக்குச் சேவையாற்றி எம் அனைவருக்கும் அவர் மேலுள்ள அபிப்பிராயங்களையும் உயர்த்தி வைப்பார் எனும் நம்பிக்கையோடு அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • ஏழை

     

    ஏழை வீட்டு அடுப்பில்
    அழுதபடி ஈரமாகிறது
    விறகு
    வியர்வைக் கடலில்
    குளிக்கிறான் ஏழை
    ஒரு பிடிச்சோற்றுக்காய்

    மூன்று வேளையும்
    வயிற்றுக்கு விழாயெனில்
    அது நிலா நாள்தான் ஏழைக்கு

    ஒவ்வொரு நாளையும்
    அவன் உழைப்புக்கு அடகு வைத்தாலும்
    இழக்கிறான் முதலும் வட்டியும்

    சுவாசிக்கவும் காசெனில்
    பிறந்தபோதே மூச்சிழந்திருப்பான்
    ஏழை

    ஏழைக் குடிசை சோற்றுப்பானைக்குள்
    இருக்கும்
    உண்மை நேர்மை உழைப்பு

    சிப்பிகளுக்கு ஏக்கம்
    ஏழை வியர்வை எடுத்து முத்தாக்க

    பணக்காரன் வெள்ளிப் பாத்திரத்தில்
    உணவு
    ஊழல் பொய் சுரண்டல்

    மழைக்காலம் கண்ணீரால் நிரம்பியது
    ஏழைக் குடிசை
    ஏழை புன்னகைபோல் அழகில்லை
    சொர்க்க
    பூக்களுக்கும்

    சோழ மன்னனைவிட மேல்
    ஏழைக்குத் தொழில் கொடுத்து
    சோறுபோடும் முதலாளி

    ஏழை கண்ணீர் துடைத்த விரலால்
    சூரியன் தொடினும்
    அது குளிரும்

    மண் குடிசைகளில் ஏழை இதயங்கள்
    பொன் முட்டைகள்

    வறுமைக்குத் தீ கண்டு பிடிக்காதவரை
    அறிவு இல்லை
    எந்த விஞ்ஞானிக்கும்

    ஏழை வாழும் பூமியில் வெளிச்சம் மகிழ்ச்சியில்லை
    நூறு நூறு சூரியன்
    உதித்தாலும்

    ஏழை பசிபோக்கும் செல்வத்தில் தெரியும்
    ஒளிப் புன்னகை

    – ராஜகவி ராகில் –

    Share
  • கோடை மழை

     

    கடுங்கோபம் கொண்டு கதிரவன் சினந்து எழுந்தான்

    தன் வெப்பத்தை கடுமையாய் உமிழ்ந்தான்

    சில இடங்களிலே முகில் சூழ்ந்து மழை பொழியும்

    வீதிகள் தோறும் மழை நீரோடும் !

    கோடை மழை வெப்பத்தை தணிக்கும்

    மக்களின் தாகத்தை சற்றே தீர்க்கும்,

    கோடை காலத்திலே குற்றால அருவிலே

    நீராடும் போது மனம் மகிழும் வேளையிலே !

    வெய்யிலில் அலைபவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்

    குளிர் பானங்கள் எல்லாம் தாகம் தீர்க்கும்,

    கோடை மழை வந்தாலும் சுகமாய் நனைவேனே

    மழை வந்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வேனே !

    ரா.பார்த்தசாரதி

    Share