Category: கவிப்பேழை

  • என்னுயிரின் பொன்னொளியே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

    என்னுயிரின் பொன்னொளியே!
    (பாடல்)

    s-ilayaraja-indian-artist

    என்னுயிரின் பொன்னொளியே! என்மனதின் பூமழையே!
    என்னசொல்லிப் பாடுவேன்? இன்னும் ஏக்கம் தொடர்கிறதே!
    சொன்னதெல்லாம் போதாதே! சொல்லாமல் தீராதே!
    சொல்லிச்சொல்லிப் பார்க்கிறேன் இன்னும் தாகம் வளர்கிறதே!

    பாடும்போது உந்தன் முகமே பல்லவியாக எழுகிறதே
    படுக்கும்போது பஞ்சுமடியில் நெஞ்சம் அமிழ்ந்து குளிர்கிறதே, தாளம்
    போடும் விரல்கள் நெஞ்சைத் தட்ட
    பேதைமனது விண்ணை முட்ட
    உயிரின் சுனையாய்க் குவியும் இதழ்கள் நெருங்கி வருகிறதே! அந்த
    ஒருகணத்தில் உயிரே விலகி புதிதாய் உயிரொன்று மலர்கிறதே!

    என்கனவின் ரகசியமே! தினம்வளரும் அதிசயமே!
    என்கவிதை எங்குமே உன் முகமே தெரிகிறதே!
    நெஞ்செல்லாம் கரைகிறதே! நெகிழ்ந்து நெகிழ்ந்து வருகிறதே!
    புன்னகையின் மின்னலில் புது புவனம் விரிகிறதே!

    கண்ணும் கண்ணும் கண்டபோது காலம் கலங்கித் திகைத்ததம்மா
    கால்சதங்கை கேட்டபோதே கதையும் முழுதாய்ப் புரிந்ததம்மா!
    காதலிலே தேகம் நெய்து
    போதையிலே விழிகள் பெய்து
    மீதமிலாமல் உயிரின் உணர்வை மீட்டும் தேவதையே! இனி
    மீள்வதும் இல்லை வாழ்வதும் இல்ல என்னுயிர் உன்வசமே!

    என்வாழ்க்கை உன்வரமே! என்சுவாசம் உன் தயவே!
    என்னசெய்து உன்னைப் பெற்றேன் கருணையின் திருவடிவே!
    மழலைகொஞ்சும் உன்பேச்சு! மழைபோலே உன் சிரிப்பு
    யாவும்தந்து இன்னும் தரவே
    ஏங்கும் தெய்வதமே! உயிர்
    என்றும் உன் பதமே!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

     

    Share
  • அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

    {கேட்டு மகிழ}

    10346451_671691352922340_5932846411327986116_n

     

    பொழிய ஆரம்பித்தால்
    நிறுத்தவே தெரியாமல்
    கொட்டிக் கொண்டிருக்கிறது மழை.

    ஆற்றங்கரை அரச மரத்தில்
    ஆயிரம் பதினாயிரம் இலைகள்
    ஒவ்வொன்றும் ஒன்றினிடத்தில்
    ஓயாமல் ரகசியம் பேசி
    வீசப்படுகிறதாம் காற்று.

    நாகர்கோயில் மணிக்கூண்டிலிருந்து
    நேரெதிரே பார்த்தால்
    நீல மலைகளின் மெளனம் அவிழ்ந்ததுபோல்
    செல்லுவதே தெரியாமல்
    மளமளவென்று
    வந்துகொண்டே இருக்கிறது காற்று.

    எங்கிருந்து என்று தெரியாமல்
    எங்கு என்றும் புரியாமல்
    அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ
    அவளும் அவனும்?

    பாஷையெல்லாம் காலியாகிப்போய்
    கவிதையெல்லாம் ஆளை விடு என்று
    களைத்தபின்னும்
    பேசிக்கொண்டே இருப்பதற்கு
    ஏதேனும் இருந்துகொண்டே இருக்குமோ?

    கண்களைக் கண்கள் கவ்வியபடி
    கட்டிப் பனியாய் உருகியபடி
    உருகிக் கரையவே உருவெடுத்தவர்கள் போல்
    அவளும் அவனும்
    இன்னும் எத்தனை நேரம்தான்
    ஆறிப்போன பாழும் காப்பியை
    உறிஞ்சுவதாகவும் ரசிப்பதாகவும்
    உட்கார்ந்து பேசுவார்கள்?

    ஒருநாள் அவனுக்குத் தோன்றிவிட்டது
    தான்தான் ரொம்பவும் பேசுவதாக
    நாணத்தால் அவன் சாம்பத் துவங்கியது
    அந்தப்
    பட்டாம் பூச்சிக் கண்களில்
    படாமல் இல்லை.

    ‘’இவனுடைய விரலின் முனை
    இவளுடைய நிழலைக்கூடத்
    தீண்டாது போனாலும்
    எப்போதும் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கும்
    இதயக் கோப்பைகளை
    இவர்கள் மாறி மாறி அருந்திக்கொண்டிருப்பார்கள்’’
    என்று
    அவர்களுக்காக மட்டுமே
    அசரீரி சொன்னது.

    அவன் பேச்சை நிறுத்திவிட்டான்
    அவள், அவனை நிறுத்தவில்லை

    கால்கள் அவனை வீட்டுக்கும்
    சிறகுகள் அவளைக் கூட்டுக்கும்
    கூட்டிச் சென்றன.

    மறுநாள் காலை
    அவன் வீட்டு மணி ஒலித்தது
    வாசலில்
    படபடத்து நிற்கிறது
    பட்டாம் பூச்சி
    பெட்டியோடு..

    Share
  • ஒரு ரயில் பயணத்தில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

     

    ஒரு ரயில் பயணத்தில்….

    {கேட்டு மகிழ}

    10301055_285979498239973_6877421676757917975_n

    தூசு, சத்தம், துர்நாற்றம்
    கூட்டம், குப்பை, தள்ளாட்டம்
    ஈசல் பறக்கும் நெஞ்சங்கள்
    ஈக்கள் மொய்க்கும் வியாபாரம்

    ஓசை மிகுந்த குலுக்கலிலே
    தூளிக் குழந்தை அயர்கிறது
    நேசம் நெருக்கம் இவையெல்லாம்
    பேசும் குரலில் மிளிர்கிறது

    இறங்குவ தொன்றே நினைத்தபடி
    இதையும் அதையும் செய்கின்றார்
    இறங்கி விடாத பண்டத்தை
    ஏனோ விரும்பித் தின்கின்றார்

    இடிக்கக் கூட முடியாமல்
    இத்தனை நெரிசல் ரயிலில்தான்
    புழுதி விசிறும் வெய்யிலிலும்
    பொறுமை காப்பது இந்தியர்தான்

    இத்தனை நெருக்கடி மத்தியிலும்
    இருக்கையில் எழுந்து நின்றபடி
    சித்திர நடனம் செய்கின்ற
    சிறுமியை வியந்து பார்க்கின்றேன்!

    வேரில்லாத பேச்சுக்கள்
    வேடங் காட்டும் வீச்சுக்கள்
    யாரென் றிலக்கே இல்லாமல்
    வீசப் படுகிற ஏச்சுக்கள்

    சாமியாடும் சில தலைகள்
    சதா பேசும் சில தலைகள்
    சாமரம் போடும் சில தலைகள்
    தளைகள் மண்டிக் கிடக்கும் தலைகள்…

    சுமையை
    இறக்கி வைப்பார் சிலர்
    ஏற்றி வைப்பார் சிலர்
    ஏற்றவும் இறக்கவும் மனமின்றி
    சுமந்து சுமையாய்ச் சிலர்…

    நாற்றம் பிடித்த கழிவறைகளுக்கு
    நடுவே
    டோக்கன் போடும் பக்தனாக
    நின்றபடி
    துப்பல் தேசத்தின் தொண்டர் குழாத்தின்
    தூரிகை லாகவம் பார்த்தபடி
    அத்தனை கூட்டத்திலும் நாற்றத்திலும்
    அவசரத்திலும்
    அவுக் அவுக்கென்று பிரியாணியை
    அள்ளிப் போட்டுக் கொள்பவரையும்
    ரசித்தபடி

    பொருள்களோடு பொருட்டின்றி
    நின்று கொண்டிருக்கின்றேன்…

    எப்படி என்னால் முடிந்தது?

    இப்போது
    உன் பத்து விரல்களும்
    என் கன்னத்தைப்
    பற்றிக்கொண்டால்
    எப்படி இருக்குமென்று பாவித்தேன்

    நனவின் நடப்பை
    கனவுத் துடுப்பால்தானே
    கடக்க வேண்டும்?!

     

     

     

    Share
  • கனவிலே கண்ணன்

    இசைக்கவி ரமணன்

     

    கனவிலே கண்ணன் (பாடல்)

     images (1)

     

    கனவிலே கண்ணன்
    நினைவிலே கண்ணன்
    கனவும் நினைவும் கலந்து மயங்கும்
    கவிதை யாவும் கண்ணன்
    கனவும் நினைவும் கண்ணன்
    கவிதை யாவும் கண்ணன்

    தன்னை உருக்கிக் கரைந்து போகும்
    தவத்தின் கனலில் கண்ணன்
    தானில்லாத லஹரியில் வந்து
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை யாவும் கன்னியராகி
    அவர்கள் நடுவில் கண்ணன்
    திசைதொலைந்து திணறும்போது
    தெருவின் முனையில் கண்ணன்

    தவத்தின் கனலில் கண்ணன்
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை நடுவில் கண்ணன்
    தெருவின் முனையில் கண்ணன்

    சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
    சுழலும் ஜோதி கண்ணன்
    சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
    தொடரும் மெளனம் கண்ணன்
    எல்லை யாவும் தீர்ந்த போது
    இன்னும் இன்னும் கண்ணன்
    எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
    இதய வாசன் கண்ணன்

    சுழலும் ஜோதி கண்ணன்
    தொடரும் மெளனம் கண்ணன்
    இன்னும் இன்னும் கண்ணன்
    இதய வாசன் கண்ணன்

     

    Share
  • சில நாட்கள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (25)

     

    சிலநாட்கள்

    {கேட்டு மகிழ}

    0_5cd93_2d2431e3_orig[1]

    சிலநாட்கள் இப்படித்தான்
    கையில் எடுத்ததெல்லாம் கீழே விழும்
    காகிதம் கூட கனக்கும்
    எத்தைச் சொன்னாலும் தப்பாய்ப் போகும்
    அவளுக்கே கூட
    என் சொற்கள் சலிக்கும்

    சில நாட்கள் அப்படித்தான்
    உறங்கவே முடியாத உற்சாகம்
    ஒவ்வொர் அடியிலும் வெற்றிக் கல்
    அவளாகவே வந்து
    கழுத்தைக் கட்டிக்கொள்வாள்

    நாட்களே ஏனிப்படி இருக்கிறீர்கள்?
    ஏன் நடிப்பு? ஏதுக்கு நொடிப்பு?

    தேதியைக் கிழித்தான் சிறுவன்
    மீதி,
    நாட்காட்டியில்
    மிஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தது
    செய்த கப்பலைச் செலுத்த வேண்டி
    மணலில் சரிந்து நதியில் இறங்கினான்

    வளர்ந்தும் குறுகியும் தளர்ந்தும்
    கரைதிமிறும் வெள்ளமாகவும்,
    அவ்வப்போது
    கரையோடு ஒதுங்கி ஆதங்கம் பேசியும்
    வறண்டும் கூட
    வளைந்து வளைந்து தொடரத்தான் செய்கிறது நதி.

    ஆற்றுக்குக் கடலும் முடிவில்லை என்றால்
    அது நடுவே நின்றாலென்ன?
    அடித்துக்கொண்டு சென்றாலென்ன?
    நதிபோலத்தானே நமது நாட்களும்?
    நகர்த்த முடியாத நிறுத்த இயலாத
    நிரந்தரத் தொடர்ச்சிதானே?

    ஒருநாள்
    கெண்டைகள் விழிகண்டு துள்ள, கூந்தலில்
    மண்டும் வண்டுகள் கண்ணில் மயங்கவும்
    மின்னற் கைகளால் விலக்க, நீரில்
    கண்ட முகத்தைக் கண்டு நாணிக்
    கல்லெறிந்து முகம் தேடியபடி
    ஆற்றங் கரையில் ஆறே உயிர்த்ததுபோல்
    தன்னைப் புறந்தள்ளிப் பாயும் கவிதையில்
    தானே மயங்கிக் கிடக்கும் கவிஞன்போல்

    அந்த மாலைப் பொழுதுகளில்
    அவள் தென்படுவாள்
    அடுத்தநாள் மாலை
    அந்த மாலையாய் இருக்காது
    அதற்கு அடுத்த நாள்
    மாலையே இருக்காது
    ஆனாலும் மாலை மீண்டும் வருமென்று
    ஆற்றுக்கும் மீனுக்கும் காற்றுக்கும் தெரியும்

    நேற்றைய நிகழ்வின் நினைப்புத்தானே
    இன்றைய வெறுமையை, நாளைய மறுப்பைக்
    கடப்பதற்கான சுவாசம்?

    அவற்றைத் தாண்டி அங்கே நின்றால்
    ஆற்றங் கரையில் அவள் இருப்பாள்
    அலைகள் புரளப் புன்னகைத்தபடி..

    அப்படித்தானே கண்ணே?

    படத்திற்கு நன்றி

     

    Share
  • நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (24)

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (4).forblog

     

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா ஒன்ன
    நெறெச்சு வச்சிருக்கேன் தாயி தாயி
    ஒன் காவலும் நான் கொண்டைச் சேவலும் நான், இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!
    கொஞ்சிக்கொஞ்சி மனசுக்குள்ளே கோயில் கட்டினேன், அங்க
    குயிலு ராகத்துல வண்ணம் பூசினேன்
    அஞ்சி அஞ்சிக் கண்ணீரால் கழுவித் தொடெச்சேன், அங்க
    அன்பு என்னும் ஒரே ஒரு கொடிய வளத்தேன்

    நெஞ்சாரச் சொல்லுறேண்டி உசுர தீபமாக்கினேன்
    நெனெப்பு முழுக்க ஒன்ன நெனெச்சு நெனெச்சு ஏங்கினேன்
    கண்ணுரெண்டும் சிமிட்டிச் சிமிட்டிக் கலகலன்னு சிரிப்பவளே!
    காட்டுக்குள்ள நொழெஞ்சவனத் தடுத்து வழி மறிச்சவளே
    கண்ணெல்லாம் இருண்டபோது காலைபோல வந்தவளே!
    காதோரம் பாடுகிறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி! (நெஞ்சுக்குள்ள)

     
    மேகத்தையும் மேகத்தையும் காத்து சேக்குது
    ஆத்தையும் ஆத்தையும் பூமி சேக்குது
    தேகத்தையும் தேகத்தையும் தாகம் சேக்குது
    தவிப்பையும் தவிப்பையும் சோகம் சேக்குது

    பாத்ததும் புரிஞ்சதடி சேந்து பிரிஞ்சு பொறந்தகத
    பழகித் தெரிஞ்சதடி பிரிக்க முடியாத கத
    ஆனந்தமானவளே! அன்பின் மறுபெயரே!
    அலைகடல் நடுவினிலே அமைதி தரும் நிலவே!
    தாயாகி சேயாகி தழுவவந்த தேவதையே!
    கண்ணில்மணியாக ஒன்னக் காப்பேன் தாயி! ஒன்
    கண்ணாளன் சொல்லுறதக் கேளு தாயி! என்
    மார்பில் ஒன்னெ ஏந்திக்குறேன் தாயி தாயி, எம்
    மடியில் சாச்சுக்குறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!

     

    படத்திற்கு நன்றி: இளைய ராஜா

     

     

    Share
  • பராசக்தி!

    இசைக்கவி ரமணன்

     

    பராசக்தி! (கேட்டு மகிழ)

    10530681_820952731257554_5883851054705537964_n

     

    அறிந்தவர்க்கே புதிராய், ஆனந்த வெள்ளமாய்
    முடிந்தெரிந்து போனபின்னும் மூங்கில் தளிர்போலே

    தெரிந்து முளைப்பவளாய், தேசத்து நாயகியாய்,

    திசைகளாய் வாழ்வில் திகழ்பவளின் தாள்போற்றி!

     
    தன்னந் தனியளாய்த் தனித்திருந்தும், உயிர்மீட்டும்

    சின்னஞ் சிறிய சிரிப்புச் சிரிப்பவளாய், ஆங்கோர்

    வன்னக் கடற்கரை வாசலிலே நின்றிருக்கும்

    வாலையே உன்றன் வசந்தப் பதம் போற்றி

     
    செம்மைத் தமிழுக்குத் தெம்புதரும் மதுரையில், என்

    பிள்ளைக் கவிதைகளை இடையொசிந்து கேட்டிருக்கும்

    அம்மே! அலங்காரி! அனற்புயலைப் புன்னகையில்

    அமைதிசெயும் ராஜ மாதங்கி அடி போற்றி!

     
    பரந்து கிடக்குமிந்தப் பார்வெளியில், நிலவாய்

    பவனிவரும் உறவு எங்கள் பராசக்தி! துன்பமே

    விரிந்திருக்கும் பாழில் நான் விழுந்து தவிக்கையிலே

    விசைத்துச் சிலிர்க்கவைக்கும் வீரகீதம் பராசக்தி!

     
    ஒற்றைப் பொய்க்கும் ஒருநூறு சவுக்கடிக்கும்

    உண்மையின் தாயெங்கள் பராசக்தி! மானத்தை

    விற்றுவிட்டுப் பற்றிலார்போல் விரவிக் கிடக்குமந்த

    வீணருக்கோ கொள்ளிப் பேயெங்கள் பராசக்தி!

     
    சின்னக் குழந்தையிடம் சிரிப்பாக, ஞானத்

    திகிரியிலே கனலும் நெருப்பாக, அந்தக்

    கன்னற் கணுக்களிலே ரசமாக, உயிர்க்

    கவிதையிலோர் சாயைமட்டும் வசமாக

     
    கட்டவிழ்ந்த காட்டாற்று வெள்ளமாக, மெத்தக்

    கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக, புத்தி

    முட்டமுட்ட முழைக்கின்ற பாறையாக, எங்கோ

    முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

     
    ஓட ஓடச் சரியும் தொடுவானாக

    உந்த உந்த விலகும் நிலவாக

    பாடப் பாடப் பணிய மறுக்கும்

    பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி!

     
    பிடரியுள் குடியிருக்கும் பீதியுள் புகுந்து ஏதோ

    பிதற்றுகின்ற பேதையிவள்! பெரும்புதிர் இவள் தாதை! பனி

    படர்ந்திருக்கும் இமயத்தின் பயம்சரிந்த சரிவுகளில்

    பல்லவி மறந்து அலையும் பசுமழலை பராசக்தி!

     
    உலகிலே இருக்கின்ற உயிரெலாம் கொன்று

    உயரப் பறக்கின்ற ஒருகோடித் தீக்குழம்பை

    உலையிட்டுக் கொதிக்கவைத்து உதிரமாய்க் கொட்டினாலும்

    நிலைகொணாது தவிக்கின்ற நீலி எங்கள் பராசக்தி!

     
    ஓடுகின்ற ஒருகோடி நரம்பெல்லாம் துடித்தாலும்

    ஒவ்வோ ரணுவுமிவளை ஓஹோ என் றழைத்தாலும்

    ஓடிக்கொண் டேயிருந்து ஒருநோக்கில் நகைவெட்டி

    ஒளிசிதறி மறைந்துவிடும் ரெளத்திரமே பராசக்தி!

     
    தீக்குழம்பில் தோணிவிட்டு, திமிர்பிடித்த கரிகளிடம்

    திமில்தேடித் தலைதிருகித் திண்மைக்கு மலையுடைத்து

    போக்குக்கே புரியாத போக்கில், புவியதிரப்

    புறப்பட் டுலாவுகின்ற பெளருஷமே பராசக்தி!

     
    கவிதையாம்! பக்தியாம்! இவளைக் கண்டாராம்! கொண்டாராம்!

    கதையிலெத்தனை கதைகள்! காளியடா காளியிவள்!!

    சிவிகையிலே புயலமர்ந்து திருவுலா வருமோடா?

    சிற்றெறும்பு தின்வடுத்தால் யானைகளைத் தேடுமோடா?

     
    அம்மா! என்றே அலறி, அகம் சிதறிச் சிதறி

    அதோ அந்தத் தரைமீது தலைபிளந்து வீழ்ந்திருப்போம்!

    தம்மால் ஆகாததெல்லாம் தயவில்தான் சாத்தியம், இந்தத்

    தழலுக்குத் தனையறியாச் சரணம்தான் பாத்திரம்

    Share
  • என்ன செய்வது?

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (23)

    என்ன செய்வது?

    {கேட்டு மகிழ}

    ht1971

    உன்

    நிழலைக்கூடத் தழுவிடாமல் விலகி நிற்பதா? ஓர்

    இழையும்கூட விலகிடாமல் தழுவிநிற்பதா? என்னைக்

    கழுவிலேற்றும் கண்களைநான் கண்டு வாழ்வதா? அதில்

    விழுந்து கலந்து புரண்டு விளிம்பில் கரைந்து போவதா?

     

    வாழ்க்கை என்னும் யாழ்நரம்பில் ராகம் மாறலாம், ஒரு

    வசந்தகால மாலைகூட சோகமாகலாம்

    மீட்டும்விரல்கள் மீட்டியபின் மீள முடியுமா? ஒரு

    மின்னல்சன்னல் ஏறிவந்தால் தாள முடியுமா?

     

    மண்ணில் போட்ட கோலம் சற்று மாறுவதுண்மை, ஒரு

    மழைவிழுந்தால் மண்ணிலெங்கோ மறைவதும் உண்மை

    எண்ணி வைத்த புள்ளிகளா என்ன சொல்வது? அவை

    இஷ்டம்போல இணையும்போது என்ன செய்வது?

     

    வானில் புள்ளிவைத்துப் போன விரல்கள் என்னவோ? அவை

    வைத்தபடி வைத்துச் சென்ற விவரம் என்னவோ?

    மோனவிழிகள் காண்பதெல்லாம் கோலமாகுமா? அதில்

    மூண்டுவரும் கனவையெல்லாம் வானம் ஏற்குமா?

     

    அந்தப் புள்ளி இந்தப் புள்ளி இணைவதும் இல்லை, யுகம்

    ஆயிரங்கள் போனாலும் பிரிவதும் இல்லை

    சொந்தங்கள் சொல்லிச்சொல்லிப் புரிவதும் இல்லை, ஏதும்

    சொல்லாமல் இருப்பதாலே குறைவதும் இல்லை

     

    அன்பு என்றும் தியாகமின்றி வாழ முடியுமா? தன்னை

    அர்ப்பணிக்காமல் திரியும் தீபமாகுமா?

    ஒன்றிலொன்று உயிரைப்பெய்து ஒன்றுபட்டபின், அங்கு

    உறவுமேது பிரிவுமேது ஒன்றுமில்லையே!

     

    புள்ளியென்றும் கோலமென்றும் விரல்கள் எண்ணுமா? இரவுப்

    பொழுதில் மறைவில் கண்பனிக்கும் கதையை அறியுமா?

    வெள்ளிமுளைக்க ஏதுமில்லை வெட்ட வெளியிலே, மாலை

    விழுந்தபின்பு மீதமில்லை நீல வானிலே

     

    இரவும் பகலும் ஒன்று நீங்க ஒன்று வாழலாம், அந்தி

    இடையில் மட்டும் ஒன்றையொன்று நின்று காணலாம்

    ஒருமுறைதான் உயிரில்தோன்றும் உறவு என்பது, அதை

    ஓயாமல் உறுதிசெய்யும் பிரிவு என்பது……….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • என்மனம் ரொம்பப் பாவமே

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக  (22)

    என்மனம் ரொம்பப் பாவமே

    (பாடல்)

    10011167_254221321415791_728106104_n

    என்மனம் ரொம்பப் பாவமே

    உன்மேல் தீராத காதலே!

    எந்த நாளும் மாற்றமின்றி

    நீளும் இந்த போதையே

    உந்தன் எதிரில் வண்ணக் கனவுகள்

    கண்ட ஊமை ஆனதே! நீ

    வந்து சென்றபின் நொந்த நெஞ்சினில்

    நூறு மின்னல்கள் தாக்குதே! கொடும்

    நாணமே உயிரானதே! (என் மனம்)

     

     

    கவிஞன் நானெனில் கவிதை நீயெனில்

    வாழவைப்பது நீ

    காதல் நீயெனில் கனவு நானெனில்

    வீழவைப்பதும் நீ

    தவிப்பு நானெனில் தவம் நீயெனில்

    தகிக்க வைப்பது நீ, நான்

    தவிடுபொடியாய்ச் சிதறும்போது

    தாவி அணைப்பது நீ! உயிர்

    தழுவித் தருவதும் நீ!

    பாறை நான், அதில் ஈரம் நீ, அதில்

    புல் நான், அதில் பூவும் நீ!

    மெளனம் நான், எழும் வார்த்தை நீ, அதன்

    பொருள் நான், அதன் உருவம் நீ

    எதையும் மீறும் அதிசயம் நீ

    வீதி ஏழை நான்! நீ

    இதையும் மீறி என்னை ஏற்றால்

    புலரும் இன்னொரு வான்! அதிலும்

    குலவும் நிலவே நீ! அதில்

    குழையும் மலரே நான்!

     

    Share
  • அவையும் மலர்கள்தான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (21)

    அவையும் மலர்கள்தான்

    {பாடல் கேட்டு மகிழ}

    Paintings of rural indian women - Oil painting (9)

    வினையாலணையும் பெயர் என்றார்

    துயிலாலணையும் இமைகளோடு போராடிக் கொண்டிருந்தேன்

    ”இலக்கியமும் இலக்கணமும் இரண்டு கண்கள் என்றார்”

    இரண்டுமே செருகிவிட்டன

    ”அன்புதான் பாசம் அதுதான் நேசம் அதுவேதான் நட்பு

    அதனால்தான் காதல் அதன்முகமே தேசபக்தி…”

    கனவில் கேட்ட வாசகங்களின் விழிப்பில்

    கைகளை விலக்கிக் கழுத்தைத் திருப்பினேன்

    சன்னல் வழியே மைதானத்தில்……….

     

    அழகான மரம் அது

    ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒய்யார தேவதைகள் போல்

    பெருத்தும் சிறுத்தும் விடலை மனங்களைப்

    பின்னி எடுத்தபடிப்

    புரண்ட கோலத்தில் கிளைகள்

     

    ரீதி மாறாத காதல் மனம்போல்

    ஒரேவிதமாய் ஆயிரம் மலர்கள்

    ஒரே குடும்பம்தான் என்றாலும்

    குழுக்களாய்ப் பிரிந்து வம்பளந்து

    கூடும்போது குலாவிக் கொள்ளும்

     

    விடியும் முன்னேயே ஈரத் தலையை

    முடிந்தபடி வந்துநிற்கும் மூக்குத்திப் பெண்ணின்

    மூக்கை உரசும் மலர்கள்

    பூக்குடலையில் மூச்சுவிட்டுப்

    பூசைக்குப் போய்ச்சேரும்

     

    பள்ளிக்கூடக் காலை நேரம்

    பாரத மாதா புகழ்பாடி

    கொடியேற்றி விறைக்கும்போது

    நம்பற்குரியோர் சூழ்ந்திருக்கும்

    கம்பத்திருந்து கொட்டும் சில

     

    கூந்தல் கருமையைக் கூட்டிக்காட்டும் சில

    ஏந்தி மண்டியிட்டு

    இதயத்தைக் கொடுப்பதற்காகச் சில

     

    அம்மாவுக்கும் அக்காவுக்கும்

    ஆசை ஆசையாகச் சில

    சும்மாவேனும் பறித்துப் பார்க்க்ச் சில

    இம்மியும் விலகாமல் மரத்தோடு சில

    இறந்தவரின் வெந்த நெஞ்சில் சில

     

    ஒரே மரம். ஆயிரம் பூக்கள்

    உள்ளுக்குள்ளே நூறு குழுக்கள்

    ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயன்கள்

     

    சில மலர்கள் மட்டும்

    காயாமலும் கனியாமலும்

    யார்கையிலும் சேராமலும்

    யாரும் பார்க்காமலும்

    அடிமரத்தின் நிழலிருட்டில்

    உதிர்கின்றன,

    உன் கண்ணில் இன்னும் படாத

    என் காதலைப் போல்

     

    அவையும் மலர்கள்தான்

    அதே மனதைச் சேர்ந்தவைதான்

    என்று நீ உணர்கின்ற நேரம்

    உதிர்ந்த மலர்கள் உரமாகி

    ஒவ்வொரு கிளையிலும் முகங்காட்டி

     

    எவ்வழியேனும் உன்

    மென்விரல் தீண்ட

    எப்படியேனும் உன்

    வன்னக் கால்களை வருடிப் பார்க்க

     

    எழுந்த கண்ணீரைத் தேனாய் இறுக்கி

    ஏங்கிச் சிரித்திருக்கும்…………

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • ராத்திரியில் மனசுக்குள்ளே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (20)

     

    ராத்திரியில் மனசுக்குள்ளே
    (பாடல்)

    1900087_510462785753528_5400619279422432625_n

    ராத்திரியில் மனசுக்குள்ளே பூத்திருக்கும் கனவையெல்லாம்
    ரகசியமா மாலையாகக் கட்டினேன், அதெப்
    பாத்திருந்த வெண்ணிலவ பறிச்செடுத்துப் பதக்கமா, ஒன்
    நெஞ்சத்தொட்டுச் சூட்டிப் பாக்க வந்தேன்
    கண்சிமிட்டும் வெண்ணிலவா முன்னவந்து நிக்கும்போது
    கையிலுள்ள மாலைகொஞ்சம் நாணுதே! உன்
    செவந்த இதழ் சின்னதாகப் பிரியும்போது மின்னல்வீசி
    ஏழைமனசு பாவம்ரொம்பக் கூசுதே!

    காத்திருக்கும் நேரத்துல காலம்பாரு வக்கணையா
    காலநீட்டி நிம்மதியாத் தூங்குதே! ஒன்னெ[ப்
    பாத்திருக்கும் ஒருகணத்தில் பலயுகமும் பொலபொலன்னு
    பஞ்சப்போலக் காத்திலெங்கோ பறக்குதே!
    சேத்துவச்ச சிறுவாடு நேத்துவந்த கனவோடு
    சில்லரையும் மிஞ்சாம தீர்ந்ததே! ஒரு
    செறகில்லாம ஒம்முன்னே மொறெயில்லாம நிக்கும்போது
    பட்டாம்பூச்சிக்கண்ணு விரிஞ்சு சிரிக்குதே!

    காத்தடிச்சா மழவரலாம் கட்டோடு கலெஞ்சிடலாம்
    கடலுக்குள்ளே சிப்பியொண்ணு கலங்குதே
    மனசுக்குள்ளே மத்து ஒண்ணு மாறிமாறிச் சுத்துறப்போ
    பகலும் இரவும் கையைக்கொட்டிச் சிரிக்குதே
    சந்தனத்தைத் தடவிக்கிட்டு வந்துநின்ன காத்துக்குள்ளெ
    எம்மனசச் சேதியாக்கி வச்சேன், அது
    வந்துனக்கு சேந்துருச்சோ வழியில்வம்பு பண்ணிருச்சோ
    வானத்துல புள்ளிவச்சுச் சொல்லேன்

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

     

    Share
  • வருவாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (19)

    வருவாயா?

    {கேட்டு மகிழ}

    10486783_299956013508635_266905490165609309_n

    என்றோ பெய்யும் மழையின்

    ஏதோ ஒரு சிறு துளி

    எப்படியோ மண்ணில் நுழைந்து

    விதையின் கதவைத் தட்டி

    விழியோடு விழி பேசலாம்

    பரந்து விரியும் சோலைக்குப்

    பரிசம் போடலாம்

     

    விலக்க முடியாத இருளில்

    விழிக்க முடியாத விழிகள்

    வெறித்துக் கிடக்கும்போது

    ஏதோ ஒரு கரம் கூந்தலை விலக்க

    நெற்றி தெரிவதுபோல்

    நேருக்கு நேரே நேர்ந்து விடலாம் விடியல்

     

    ஊமையின் நெஞ்சுக்குள்

    ஊசியாய் மின்னலொன்று

    உயிர்சிலிர்க்க நுழைந்தபின்னும்

    உதடு பிரிக்க முடியாமல் துயருறும் போது

    வானம், என்றோ கேட்ட

    கானத்தை நினைத்துக்கொண்டு

    சற்றே சிலிர்க்க

    வயிரங்களெல்லாம் வார்த்தைகளாகலாம்

     

    இப்படித்தான்

    இப்படியேதான் நானும்……..

     

    வந்துவிடுவாய்தானே?

     

     

    Share
  • உன் கண்கள்!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (18)

    உன் கண்கள்!

    (பாடல்)

    10537115_733346410056383_5641177453017657101_n

    உன் கண்கள்! அதில் மலரும்

    என்னெஞ்சம்! அதில் சிரிக்கும்

    உன் கண்கள்! வாழ்க்கை இதே!

     

    தீபங்கள்! தினம்தினமும்

    தீ வேண்டும்! எனக்கென்றும்

    நீ வேண்டும்! நீதான் வேண்டும்!

     

    அருகினில் உருகுகிறேன்

    தொலைவினில் மருகுகிறேன்

    ஒருகணம் பலயுகமாய்

    உதிர்ந்துதிர்ந்து ஏங்குகிறேன்!  (உன் கண்கள்)

     

    காற்றோடு தவழ்ந்துவரும்

    கனவென்றன் பூநெஞ்சம்

    சொல்லாத கவிதை போலே

    சோதிக்கும் உன் பாதம்

     

    பாதத்தில் சேரும் வரை

    பனித்துளியும் பாரம்

    நில்லாமல் உன்னில் தீர

    என்றுவரும் நேரம்?

     

    ஊரில்லை! உயிரன்றிப்

    பேரில்லை! உறவன்றி

    வேறில்லை! விந்தையிதே!

     

    உன்வார்த்தை போதாது

    உன் மெளனம் தாங்காது

    இவையன்றி வேறேதும்

    என்னெஞ்சம் ஏங்காது!

     

    வாழாமல் வாழ்கின்றேன்

    வளராமல் கரைகின்றேன்

    உன்வாசல் ஓரத்தில்

    ஒரே கீதம் பாடுகிறேன்!

     

    நீயின்றேல் ஒருதுளியும்

    நானில்லை! ஒருதுளியும்

    நானிருந்தால் நீயில்லையே!

     

     

     

    Share
  • நீ சொல்லாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (17)

     

    நீ சொல்லாதே!

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள்மேலே}

     

    ஒரு

    19

    சுழலின் தவிர்க்கவொண்ணாச் சூழ்ச்சியும்

    ஒரு

    மழலையின் தானறியாத ஆட்சியும்

     

    சாமரம் வீச

     

    நீ

    நெருங்கி நெருங்கி வந்தபோதெல்லாம்

    வற்றிய என் உதடுகளை

    வரியோடும் உன் வசந்த இதழ்கள்

    பற்றிக்கொண்டுவிடும் என்று

    பகற்கனவு காணவில்லை

     

    புண்ணியன் அல்லன் நான் என்பது

    புரிந்தே இருக்கிறது எனக்கு

     

    ஆம்

    நினைக்கவில்லை

    நீ முத்தமிடுவாய் என்று

     

    ஆனால்

    நீ வந்து, மூச்சுப்பட நின்று

    நெருப்பை வீசுவாய் என்று

    நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

     

    எட்டி இருக்கச் சொல்

    எங்கேனும் போகச் சொல்

    ஏன், சாகச் சொல்

    ஏதும் கேட்காமல்

    ஏதும் காட்டாமல்

    செய்து முடிவேன் சேவகனாய்..

     

    ஆனால்—–

    உனக்குள் என்னையும்

    எனக்குள் உன்னையும்

    உருட்டி உருட்டிப் பார்க்கிறதே!

     

    உனக்கும் எனக்கும் நடுவில்

    உயிரை மண்ணாய்ப் பிசைகிறதே!

     

    உறக்கம் கனவு நினைவெல்லாம்

    ஊடுருவிப் புரட்டி எடுக்கிறதே!

     

    ஒன்றையும் வேண்டாமல்

    உயிரை அள்ளி அள்ளி இறைக்கிறதே!

     

    இதயத்தைத் தொட்டுச் சொல்

    இதையா காதலில்லை என்றாய்???

     

    என்-

    காதலை மறுத்துவிடு

    கவலையில்லை! செத்துவிடலாம்

     

    இதைக்

    காதலில்லை என்று மட்டும்

    கண்ணே! நீ சொல்லாதே!!

     

    அவமானத்திற்கு மரணம் கிடையாது

    அது நரகங்களின் தலைநகரம்………..

     

     

     

     

     

    Share
  • விழுப்புரம் சந்திப்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (16)

     

    விழுப்புரம் சந்திப்பு

     {பாடலைக் கேட்டு மகிழ}

    indian-couple-love-romantic-honeymoon-cool-picture

    விழுப்புரம் சந்திப்பு…..ம்..

    எப்போது நம் சந்திப்பு?

     

    இப்போதுதானே சந்தித்தோம் என்று

    மனித பாஷை பேசலாமா நீ?

    ஓ!

    முத்தங்களுக்கும் பட்டியல்?

     

    சந்தித்த போதெல்லாம்

    சிந்தித்துக்கொண்டே இருந்தோமே

    விதி மகிழ மகிழ

    பிரிவைப் பற்றி?

     

    சந்திக்க ஏங்குகிறோம்

    சந்தித்தால் உருகுகிறோம்

    சந்தித்தபின் மருகுகிறோம்

     

    சந்திக்கத்தான் பிரிகிறோமா

    பிரியத்தான் சந்திக்கிறோமா

     

    இந்த நெடும் பயணத்தில்

    இத்தனை சந்திப்புகள்

    இருப்பதெல்லாம்

     

    பிரிவும் சந்திப்பும்

    என்றேனும் ஓர்நாள்

    சமன்பெறும் என்ற நம்பிக்கையாலா?

     

    எனக்கென்னவோ இந்தப்

    பிரிவுப் பிடாரிதான் சந்திப்பு மோகினியாய்

    வித்தை காட்டுகிறாள் என்று தோன்றுகிறது

     

    எல்லோரும் இறங்கிவிடும்

    ஏதோவொரு சந்திப்பில்

    என்ன இருக்கப் போகிறது

    எனக்கும் உனக்கும்?

     

    என்றைக்குச் சந்தித்தோமோ

    அன்றைக்கே முழுமையாக

    இறக்கிவிட்டு விட்டோமே

    எல்லோரையும்!

     

    உனக்கென்ன தோன்றுகிறது?

    ஒய்யாரக் கழுத்தை ஒசித்து

    உயிரை உதட்டில் குவித்து

    மூச்சு நிற்கும்படி

    முத்தமிட்டு விட்டால்

    சங்கமத்தின் நிரந்தரத்தில்

    பிரிவு தொலைந்தே போய்

    சந்திப்பு நிலைக்குமென்று

    சிந்திக்கிறாயா?

     

    விழுப்புரம் விலகிவிட்டது

    வேண்டுமென்றால்

    சங்கிலியை இழுத்துவிட்டுத்

    தண்டவாளத்தின் நடுவே

    சற்றும் நழுவாமல்

    முற்றும் தழுவியபடி

    சந்திப்போமா?

    படத்திற்கு நன்றி

     

    Share