கிரேசி மோகன்
சித்தன்ன வாசல் சிலையாய் சமைத்தனை –
அத்தன் அமுதன் அரங்கனை -ரத்தின வண்ணனை
கேசவ் வரைந்தாய்விதவிதமாய் –
கண்ணனுன் கையின்ரே கை “….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
சித்தன்ன வாசல் சிலையாய் சமைத்தனை –
அத்தன் அமுதன் அரங்கனை -ரத்தின வண்ணனை
கேசவ் வரைந்தாய்விதவிதமாய் –
கண்ணனுன் கையின்ரே கை “….கிரேசி மோகன் ….
-மேகலா இராமமூர்த்தி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றிட்ட ஆன்றோர்கள் நெறிப்படி
ஆண்டொன்று சென்றதே நம்மிடம் விடைபெற்று – புத்
தாண்டொன்று வந்ததே நம்மில்லம் தேடியே!
புத்தம் புதுஆண்டில் புத்தொளி பரவட்டும்!
நித்தமும் மகிழ்ச்சியில் நம்மனம் திளைக்கட்டும்!
பசிப்பிணி அகலட்டும் பகையுமே நீங்கட்டும்!
கசப்புகள் நீங்கியே களிப்பது ஓங்கட்டும்!
மதத்தின் பெயராலே மதங்கொண்டு அலையாமல்
இனத்தின் பெயராலே இன்னல்கள் இழைக்காமல்
இதமாய் இன்சொற்கள் யாவரும் பேசிநல்
விதமாய் நடப்பதே நன்மைகள் விளைத்திடும்!
உலகத்தை வென்றிட்டோம் தொழில்நுட்ப வளர்ச்சியால்
கலகத்தை வெல்லலாம் மதிநுட்பச் செயல்களால்!
வேற்றுமைக் களைதனை வேரோடு அழித்துநாம்
ஒற்றுமைப் பயிர்தனை வளர்ப்போம் என்றுமே!
பார்போற்றும் வண்ணமே நம்செயல் அமையட்டும்!
நேரான பாதையில் நம்முளம் செல்லட்டும்!
பொங்கிடும் மகிழ்வோடு புத்தாண்டை வரவேற்போம்!
தங்கட்டும் மங்கலம் எங்குமே இனிதாக!
-ரா. பார்த்தசாரதி
கதிரவன் குணதிசையில் பன்முகமாய் உதித்தான்
புலரும் புத்தாண்டாய்ப் புதிதாய் உருவமெடுத்தான்!
நதியால் இணைந்த மாநில மக்கள்
அவலம் அழிந்து போகாதோ புத்தாண்டே!
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் புத்தாண்டே!
சுயநலங்கள் சூழ்ச்சிகள் சுவடு தெரியாமல்
அவனியில் அழிந்து போகாதோ புத்தாண்டே!
தீவிரவாதம் ஒடுங்கிப்போகாதோ புத்தாண்டே
வேற்றுமையில் ஒற்றுமை ஓங்காதோ புத்தாண்டே !
நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம் சமாதானம் மட்டும்
தானமாய்க் கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும் அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தைத் தீர்க்காதோ புத்தாண்டே !
பூமியெங்கும் அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ புத்தாண்டே!
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தி நா(ன்)கைப் (2014 )போல
இல்லாது! நீ மலர்க! இவ்விரண்டாயிரத் துப்பதி னைந்தே !
சோக நிலை மாறி யொரு சுகந்தம் வீச!
சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்
முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம்
இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற
இரண்டாயிரத்துப் பதினைந்தே நீ இதமாய் வாராய்!
கொலை மலிந்து தலைபுரளக் கோபம் கொண்டே!
கொடுவதைகள் செய்வோர் தம்உள்ளம் மாறி
வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த
விலையில்லா அமைதியினை உலகுக்கீன்று
விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து
கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்
களிப்பூட்ட நீவாராய்பதி னைந்தே!
இனமென்றும் மொழியென்றும் மதங்களென்றும்
இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி
மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம்
மாண்போடு சோதரராய் வாழ்ந்து நிற்கத்
தினந்தொரும் ஏழ்மையிலே வாடுவோர்கள்
செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கிக்
கனவெல்லாம் வினையாகிக் கண்டு உய்ய
கனிவோடு புதுமாற்றம் கொண்டுவாராய்!
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
இரண்டாயிரத்துப் பதினைந்தை
இன்பமுடன் வரவேற்போம்
எங்களது வாழ்வினிலே
ஏற்றமுற வேண்டுமென்று!
சங்கடங்கள் போவதற்கும்
இங்கிதங்கள் வருவதற்கும்
பொங்கிவரும் புதுவருடம்
புதுமருந்தாய் அமைந்திடட்டும்!
வங்கக்கடல் கடைந்த
மாதவனைக் கேசவனை
வாழ்த்திநின்ற மார்கழியை
மனமார வணங்கிடுவோம்!
எங்களது வாழ்விலினிலே
மங்கலமே வருகவென
சங்குகொண்டு ஊதிநின்று
சந்திப்போம் புதுவரவை!
மனங்களில் மாற்றம்வந்து
மதங்களால் அமைதிவந்து
தினம்தினம் எங்கள்வாழ்வு
திருந்திட வேண்டிநிற்போம்!
புலர்ந்திடும் பொழுதுபோல
பூரிப்பு வந்துசேர
மலர்ந்திடு வருடமென்று
மனத்தினால் வரவேற்போமே!