Year: 2020

  • பழகத் தெரிய வேணும் – 44

    பழகத் தெரிய வேணும் – 44

    நிர்மலா ராகவன்

    நம்மையே வருத்திக்கொள்ளலமா?

    எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.

    `தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.

    `தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும்.

    எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.

    கதை

    திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர்.

    எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

    `காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம்.

    கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.

    சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?

    கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.

    “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    கீதோபதேசம்

    ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?

    கதை

    நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).

    செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன.

    `நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று.

    `அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.

    விடாமுயற்சி இங்கு உதவாது

    எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.

    ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.

    நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

    வம்படித்துப் பொழுது போக்குகிறவர்

    நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?

    `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும்.

    அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?

    “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான்.

    அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.

    நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?

    நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.

    ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்

    சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.

    மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.

    தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.

    நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று.

    இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.

    பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.

    பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.

    எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?

    பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்

    வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை!

    எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.

    உனக்காகவும் நேரம் ஒதுக்கு

    நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு.

    இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!

    பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது?

    Share
  • படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    கான மகளும் வான மகளும் துணையிருக்கக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் வேலவனை ஒளிப்படத்தில் பிடித்துவந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்வழகிய படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்படக்கலைஞருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    ”தாமரை போன்ற எழிலார் திருவடிகளையும் பவழமொத்த மேனியையும், குன்றிமணிபோல் சிவந்த ஆடையையும் கிரவுஞ்ச மலையைப் பிளந்த நெடுவேலையும் உடைய சேவலங்கொடியோனாகிய முருகவேள் காப்பதனால் இவ்வுலக உயிர்கள் இன்பமாய் வாழ்கின்றன” என்று அழகன் முருகனின் அருளையும் ஆற்றலையும் வாயூறிப் பேசுகின்றது பெருந்தேவனாரின் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல்.

    தாமரை புரையும் காமர் சேவடி
    பவழத் தன்ன மேனி திகழொளி
    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
    நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்
    சேவலம் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே.
    (குறுந்தொகை – கடவுள் வாழ்த்து)

    படத்தில் மனைவியரோடு மாண்புறக் காட்சிதரும் கந்தவேள் குறித்த தம் சிந்தனைகளைக் கவிதையில் அள்ளித்தரக் காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****
    ”வனத்துக்குக் குறத்தியையும் வான மகளையும் மணந்தவனை, சூரனைச் சீறி அழித்தவனை, அந்த மயில்வாகனனைப் பணிந்தால் அருள்கிட்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அருள்தரும் வேலன்…

    வனத்து வள்ளிக் குறத்தியுடன்
    வான மகளை மணந்தவனை,
    சினத்தில் வந்த சூரனையே
    சீறும் வேலால் அழித்தவனை,
    தனமும் கலையும் தருபவனைத்
    தானே மயிலில் வருபவனை
    மனத்தில் எண்ணிப் பணிந்திடுவாய்
    மறவா தருள்வான் வேலவனே…!

    *****
    ”ஆறுமுகன் ஏறுமுகன் அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    குறவஞ்சி மகன் காரிருள் விலக்கும் கந்தனவன்” என்று முருகனின் தோற்றம் வீரம் பண்பு அனைத்தையும் பாங்குறப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    வள்ளி தெய்வானையுடன்
    வடிவேல் முருகன்
    வேலினைக் கையிலேந்தும்
    வெற்றி வேல்முருகன்

    சூரனை வதம் செய்த
    ஆறுமுக வடிவழகன்
    கடலையே முறியடித்த
    மக்கள் சூழ் மால்மருகன்

    வேழனின் இளையவனிவன்
    புவி வலம் வந்த மருகன்
    ஆறுமுகன் ஏறுமுகன்
    அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    இவனே குறவஞ்சி மகன்
    தணிகை மகன் சாந்த முகன்

    காரிருள் விலக்கும் கந்தனவன்
    அடியார் கொஞ்சுமுகன்
    அருள் மழை பொழியும் மாலன்
    இவனே சரவணன் சக்திமகன்

    *****

    ”ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால் பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து, சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!” என்று சந்தக் கவியில் ஆறுபடையப்பனின் வாழ்க்கை வரலாறுரைத்து நம் சிந்தை கவர்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    ஆறுபடையப்பன்

    நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
    ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
    போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
    பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

    வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்துத்
    தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
    ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்திச்
    சேயோனாய்க் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

    பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
    பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
    சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்கத்
    தென்பொதிகைப் பழனிபதி நின்ற பாலகுருநாதா!

    ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால்
    பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்துச்
    சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
    ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

    துள்ளிவரு வேலெடுத்துச் சூரர்தலை கிள்ளிச்
    சினம்விடுத்துத் தேவவேழ வாகனத்திலேறி
    வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்துக்
    குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

    சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
    ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
    அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்திச்
    சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

    ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
    கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
    குன்றிருக்கு மிடமெல்லாம் குமரன்இடம் எனவே
    செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

    *****

    ”சங்கத்தமிழ்த் துதி துதிக்க…தங்கத்தேர் குலு குலுங்க…வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப வள்ளியோடு நீ வருவாய்!” என்று உள்ளம் அள்ளும் துள்ளிசைப் பாடலில் சிங்கார வேலனை அழைக்கின்றார் திருமிகு. ராதா.

    சின்ன மயில் சிலுசிலுக்க…
    சின்ன இடை தளதளக்க…
    சித்தர் போற்றும் சீமானே
    சிங்காரவேலா நீ வருவாய்!

    பட்டாடை பளபளக்க…
    பார்ப்பவர் மெய்மறக்க…
    பாவங்களைப் போக்கிடவே
    பாலகனே நீ வருவாய்!

    செஞ் சிலம்பு சலசலக்க…
    சேவல்கொடி படபடக்க…
    செந்தூரில் நின்றாடும்
    தேவாதி தேவனே நீ வருவாய்!

    பால்குடம் பொங்கப் பொங்கப்
    பக்தர்களும் பாடி வர
    பாவங்களைப் போக்கிடவே
    பால முருகனே நீ வருவாய்!

    சக்திவேல் மினுமினுக்க…
    சங்கடங்கள் பறந்து
    சரணங்கள் பாடிவந்தேன்
    சண்முகா நீ வருவாய்!

    சங்கத்தமிழ்த் துதி துதிக்க…
    தங்கத்தேர் குலு குலுங்க…
    வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப
    வள்ளியோடு நீ வருவாய்!

    *****
    ”ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன அபிஷேகமில்லை;
    சுத்திகரிப்பான்தான்! அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல்கொண்டு விரட்டி அடித்துத் துரத்த
    மாட்டாயா கொரோனாவை?”  என்று தம் ஆதங்கத்தைப் பாட்டில்
    வெளிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    ஆதங்கத்துடன்…. அரகரோகரா!

    ஆறுமுகத்தோனே உன் அண்ணன்
    ஆனை முகத்தானெங்கே?
    ஆதிமுதல்வனென அவனை
    அனுதினமும் துதிபாடி
    ஆளுக்கொரு சிலைசெய்து
    ஆற்றங்கரையில் கரைத்தோம்!
    அழகாய்த் தீபம் ஏற்றி உன் அப்பன்
    அண்ணாமலையாரைத் தொழுதோம்!
    ஆடித்தபசில் கைகூப்பி உன்
    அன்னையையும் வேண்டினோம்!
    அடுத்துவரும் கார்த்திகையில்
    அன்புடன் வணங்குவோம் உன்னையும்!
    அகிலமெல்லாம் வியக்கச் சூரனை வென்ற நீ
    அடங்க மறுக்கும் நோய்த்தொற்றால்
    அவதியுறும் எம்மக்களின் துன்பம்
    அறியாது வள்ளிதெய்வானையுடன்
    அளவளாவி நிற்கின்றாயோ?
    ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன
    அபிஷேகமில்லை சுத்திகரிப்பான்தான்!
    அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல் கொண்டு விரட்டி
    அடித்துத் துரத்த மாட்டாயா கொரோனாவை…?

    கருத்துச் செறிவான தம் கவிதை மலர்களால் தமிழவேள் முருகனுக்கு அணிசெய்திருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள்; அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    முப்பாட்டன் முருகனுக்கு அரகரோகரா – எங்க
    முத்துக் குமரனன்றோ அரகரோகரா!
    எப்பாடு பட்டாச்சும் அரகரோகரா – எங்களை
    எலக்ஷனிலே வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    ஊர் முழுதும் சுத்தி வந்தோம் அரகரோகரா – எமக்கு
    ஒரு வழியும் தெரியலையே அரகரோகரா!
    தேரிழுத்தும் நாம் வருவோம் அரகரோகரா – எங்களைத்
    தேர்தலிலே ஜெயிக்க வைப்பாய் அரகரோகரா!

    வேலெடுத்து நாம் வருவோம் அரகரோகரா – எமக்கு
    வெற்றியை நீ தந்திடுவாய் அரகரோகரா!
    காலலுக்க நடக்கின்றோம் அரகரேகரா – எங்க
    கட்சியை நீ வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    கள்ளவோட்டுப் போட்டாலும் அரகரோகரா – எங்களைக்
    காட்டி நீயும் கொடுத்திடாதே அரகரோகரா!
    வெள்ளமென ஓட்டு வந்து அரகரோகரா – எமக்கு
    விழுந்திடவே வேண்டுமையா அரகரோகரா!

    அரவிந்த மலரெடுத்து அரகரோகரா – உனக்கு
    அர்ச்சனைகள் செய்திடுவோம் அரகரோகரா!
    தரவேண்டும் ஆதரவை அரகரோகரா – எங்கும்
    தாமரையே பூக்க வேண்டும் அரகரோகரா!

    வெற்றிவடி வேலவனே அரகரோகரா – எமக்கு
    வேறுவழி இல்லை ஐயா அரகரோகரா!
    பொற்பாதம் பணிந்து நின்றோம் அரகரோகரா – நாங்கள்
    போடும் வேஷம் வெல்ல வேண்டும் அரகரோகரா!

    அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்காக முருகனின் பெயராலே செய்யும் வேடிக்கை விநோதங்களைத் தம் பாட்டில் நயம்பட நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம்

    தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம்

    அண்ணாகண்ணன்

    நாங்கள் வசிக்கும் சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.

     

    Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது

    சென்னை, மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அதன் நீர்மட்டம் ஏறுகிறது. வீடுகளிலிருந்து சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பெயர்ந்து வருகிறார்கள். தண்ணீர் வடியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிவர் புயலின் தாண்டவம்

    நிவர் புயலின் தாண்டவம்

    அண்ணாகண்ணன்

    நிவர் புயலின் தாண்டவத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரத்தில் நம் பகுதியில் ஒரு சிறு உலா வந்தபோது கண்ட பாதிப்புகள் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிவர் புயலின் சீற்றம் – 26.11.2020

    நிவர் புயலின் சீற்றம் – 26.11.2020

    நிவர் புயல் கரை கடந்தாலும் காற்றின் வேகம் கிடுகிடுக்க வைக்கிறது. இதோ நம் வீட்டைச் சுற்றிலும் அடித்துத் தூள் கிளப்பும் நிவர் புயல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காற்றின் உறுமல், நிவர் புயலின் சீற்றம்

    காற்றின் உறுமல், நிவர் புயலின் சீற்றம்

    நிவர் புயல் காரணமாக, இடி மின்னலுடன் அதி கனமழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகின்றது. சென்னை தாம்பரத்தில் இன்று பதிவு செய்த காட்சி இதோ.

     

    நிவர் புயலின் சீற்றம்

    நிவர் புயலின் சீற்றத்தைப் பாருங்கள்.

     

    நிவர் புயலின் சீற்றம் – 2

    காற்றின் உறுமல், நிவர் புயலின் சீற்றம், இரண்டாம் பகுதி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புயலில் ஒரு பெண்குயில்

    புயலில் ஒரு பெண்குயில்

    அண்ணாகண்ணன்

    நிவர் புயலின் வீச்சு காற்றாகவும் கனமழையாகவும் மிரட்டும் நிலையில், ஒரு பெண்குயில் இதை எப்படி எதிர்கொள்கின்றது என்று பாருங்கள்.

    சிறகு உலர்த்தும் பெண்குயில் 

    மழையில் நனைந்த பெண்குயில், மழைவிட்ட இடைவெளியில், நம் வீட்டு வேப்பமரத்தில் அமர்ந்து சிறகுகளை உலர்த்தும் காட்சி.

     

    மழையில் நனையும் பெண்குயில்

    அடாது பொழியும் அடை மழையில் நனையும் ஒரு பெண்குயில்

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழக விளையாட்டுகள்

    தமிழக விளையாட்டுகள்

    முனைவர் த. ஆதித்தன்,
    இணைப் பேராசிரியர்,
    அரியகையெழுத்துச் சுவடித் துறை,
    தமிழ்ப் பல்கலைக் கழகம்,
    தஞ்சாவூர் – 613010.

    கலைகளைப் பல்வேறு வகைகளாகப் பகுத்தறிந்துள்ளனர் நம் முன்னோர். அவற்றினுள் விளையாட்டுக் கலை வாழ்வோடு பிணைந்த ஒன்றாகும். “அந்தந்த நாட்டின் இயற்கை அமைப்பு, சுற்றுப்புறச் சூழல், மக்களின் சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், சமயங்கள் முதலியவற்றின் தன்மைக்கேற்ப கலைகள் வளர்ச்சி பெறும்” என்று மயிலை. சீனி. வேங்கடசாமி (தமிழர் வளர்த்த அழகு கலைகள்) அவர்கள் குறிப்பிடுகிறார். அவ்வாறே விளையாட்டுகளும் மக்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப தனித்தன்மைகளுடன் திகழ்கின்றன. அவ்விளையாட்டுக் கலையானது தமிழக நிலப்பரப்பினுள் தொடக்கக் காலம் முதல் இன்று வரை எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறித்ததாக இக்கட்டுரை அமைகிறது.

    மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தபோது பல சவால்கள் அவன் முன் இருந்தன. அவை அவனுக்கு ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், இயற்கையை எதிர் கொள்ளவும் அவனுக்குக் கற்றுத்தந்தது. தொடக்கத்தில் தற்பாதுகாப்புக்காக ஓடவும், சாடவும், தாண்டவும், நீந்தவும் செய்வதன் சமூகவளர்ச்சியில் நிலையான வாழ்க்கைக்கு வந்த போது அவற்றினைத் தன் ஆற்றலின் அடையாளமாகவும், விளையாட்டாகவும் மாற்றியிருக்க வேண்டும். இவ்விளையாட்டுகளின் தோற்றம் குறித்து, “வீரத்தை வளர்க்க, பயத்தைவிரட்ட, நம்பிக்கையை ஊட்ட, நண்பர்களைப் பெருக்க, பொழுது போக்கை வரவேற்க, முரண்பாட்டை உணர்ந்த, வாழ்க்கையினையும், தொழிலினையும் எதிரொலிக்க, போலச் செய்ய எனப் பல நிலைகளில் விளையாட்டுகள் தோன்றலாயின” என்கிறார். சு. சிவசாமிசுந்தரி (சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்)

    மனித சமூகம் சிந்திக்கும் ஆற்றலாலும் உழைப்பாலும் தன்னை தகவமைத்துக் கொண்ட  உயர்த்திக் கொண்ட பெருமையுடையது. தொடக்கக் காலத்தில் தமது உழைப்பு – தொழில் சார்ந்ததாக விளையாட்டுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் சமுதாய வளர்ச்சிப் படிநிலையில் விளையாட்டுகள் தனித்தன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    மிகத் தொன்மையான பதிவுகளாக நமக்குக் கிடைக்கக் கூடிய சங்க இலக்கியங்களில் இவ்விளையாட்டுகள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனை, “பண்டைய தமிழகத்தில்  சங்க காலத்தில் – ஆடவரும் பெண்டிரும் விளையாட்டுகளில் மிகுதியாக ஈடுபட்டிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ‘விளை’ என்ற சொல் பொருள் பொதிந்தது. ‘விளைக’, ‘பொலிக’ என பரிபாடல் (10-86) குறிப்பிடுகிறது. ‘விளைக’, என்பது வாழ்த்துவதாகும். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி 260 ஆம் பாடலுக்கு வரைந்த உரையில்  “விளைக, பொலிக ஒரு வழக்கு என்பாரும் உளர்” எனக் குறிப்பிடுவதிலிருந்து நல்லதே ஆகுக என வாழ்த்துவது விளைதலாகும் என்று  தெரியலாம். எனவே ‘விளை’ என்ற வேர்ச்சொல் நல்லதான இன்பம் பயப்பது என்று பொருள்படும். ‘விளையாட்டாய மொடு ஓரையாடாது’ (நற்றிணை – 68), ‘விளையாட்டு ஆயமொடு’ வெண்மணல் அழுத்தி (நற்றிணை – 172) என்னும் வரிகளிலிருந்து விளையாட்டின் கூட்டுத்தன்மை அஃதாவது பலர் கூடிப் பங்கு பெறும் தன்மை புலனாகிறது. பண்டைத் தமிழகத்தில் சிறார்க்கென்றும், ஆடவர்க்கென்றும், பெண்டிர்க்கென்றும், இருபாவார்க்கென்றும், இருபாவார்க்கென்றும் பலவகை விளையாட்டுக்கள் இருந்தன. அவை நாநிலப் பாகுபாட்டை ஒட்டி அமைந்ததனையும் காணலாம். குறிஞ்சியில் கிளி ஓட்டுதலும் முல்லை, மருதத்தில் ஏறு தழுவுதலும் நெய்தலில் அலவன் ஆட்டலும் எடுத்துக்காட்டுகள்.” என்பதன் (பதிப்புரை, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்) மூலம் அறியலாம்.

    சு.சிவகாமிசுந்தரி அவர்கள் சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் தமது ஆய்வு நூலில் ‘37’ வகையான விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். அவை,

    1. அசதியாடல் – Pleasing talk and cutting jokes with One another
    2. அம்புலி அழைத்தல் – Pleading with the moon to come down to earth and Play with the child
    1. அலவன் ஆட்டல் – Taking crabs in the hand and waving on either side
    2. உலாவல் – A pleasurable walk
    3. ஊசல் – Playing on the swing
    4. எண்ணி விளையாடல் – To play by counting a large number of things seen at a place
    1. எதிரொலி கேட்டல் – To play by shouting and thon hearing the echo
    2. ஏறு கோள் – Tanning the bull
    3. கண் பதைத்து ஒளித்தாடல் – Playing hide and seek
    4. கவண் – Playing with a catapult – like object called ‘kalanku’
    5. கழங்கு – Playing with ball – like object called Kalamka
    6. குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும் – Spending time by riding horse and elephant
    1. குரவை (கூத்து)  – To perform a kind of dance called karavai
    2. குறும்பு விளையாட்டுகள் – To play by doing mischievous things for fun
    3. சாம விளையாட்டு – To play by corning suitable names for each other.
    4. சிறு சோறு ஆக்கல் – To play by imitating cooking
    5. சிறுதேர் – To play by pulling Chariot like cart
    6. சிறு பறை – To play by beating the drum
    7. சிற்றில் செய்தல் – To play by building houses in sand
    8. சுண்ண விளையாட்டு – To play by throwing scented powder called Cunnam on other
    1. சூது  – Gambling
    2. செடி கொடி வளர்ப்பு – Spending time on nursing flower plants
    3. நீர் விளையாட்டு – Water sports
    4. பந்து – Ball game
    5. பறவைகளைக் காணலும் அவற்றின் செயல்கள் போல் செய்தலும் – Watching birds and their activities and imitating than
    1. பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்  – To Spend time in rearing pet birds and animals.
    1. பறவை விலங்குகளுடன் விளையாடல்  – To play with pet birds and animals
    1. பாவை விளையாட்டு – To play with dolls known as pavai
    2. பிசி – நொடி விளையாட்டு – To play puzzle games and story telling
    3. புள் ஓட்டல் – To scare away birds
    4. மணற் குவியலில் மறைத்தாடல் – To play hiding an object into the heap of sand and seek it
    1. மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்   –To play plucking flowers and weaving them into garlands.
    1. மல் – Wrestling
    2. வட்டு – To play with marble – like object called vattu.
    3. வள்ளை – To play UL (halling)the grains and singing
    4. வில் விளையாட்டு – To play with bow and arrow
    5. வேட்டை – Hunting for pleasure

    தொ. இரா. நஞ்சுண்டன் அவர்கள் காப்பியங்களில் விளையாட்டுகள் என்னும் நூலில் இதே போன்று 34 விளையாட்டுகளை அட்டவணைப்படுத்தியுள்ளார். அதில் மேல்குறிப்பிட்டுள்ளவற்றில் இல்லாத பத்து விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவை

    1. அம்மானை – Playing and singing with ball-like objects, called ‘ammanai’.
    2. இடுதேளிடல்-Having fun by throwing scorpion-like object on somebody
    3. உகிரால் பற்பல உருவம் கிள்ளல்-To play by making various designs with leaves etc. Using nails
    4. கருவுற்ற பெண்போல் நடித்து விளையாடல்-To Play by imitating a pregnant lady
    5. கள்வர் – காப்பவர் – மறிகள் என நடித்து விளையாடல்-Playing by acting like thieves, guards and sheep
    6. சம்மங்கோரை கொண்டு விளையாடல்-To imitate a sword-game by using a kind of grass called ‘campu’
    7. சிவம்பம்- To play with a staff called ‘cilampam’
    8. செண்டாடல் –Playing polo-like game called ‘centu’
    9. பட்டம் –Kite – flying
    10. படகு விளையாட்டு –Boating Sports

    சங்க இலக்கிய விளையாட்டுகளுள் அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆட்டல், உலாவல், ஊசல், எண்ணி விளையாடல், சுண்ண விளையாட்டு, சூது, நீர்விளையாட்டு, பந்து, பறவைகளைக் காணலும் அவற்றின் செயல்கள் போல் செய்தலும், பறவை, விலங்குகளுடன் விளையாடல் என்றும் பன்னிரெண்டு விளையாட்டுகளும் இருபாலாரும் விளையாடும் விளையாட்டுகளாம். அதே போன்று, ஏறுகோள், குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும், குறும்பு விளையாட்டுகள், சாமவிளையாட்டு, சிறுதேர், சிறுபறை, மல், வில் விளையாட்டு, வட்டு, வேட்டை முதலானவை ஆண்பாலாருக்கும், எதிரொலி கேட்டல், கண்பதைத்து ஒளிந்தாடல், கவண், கழங்கு, குரவை, சிறுசோறு, சிற்றில் செய்தல், செடி – கொடி வளர்ப்பு, பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும், பாவை விளையாட்டு, பிசி – நொடி விளையாட்டு, புள் ஓட்டல், மணற் குவியலில் மறைத்தாடல், மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும், வள்ளை முதலானவை பெண்பாலாருக்கு உரியனவாகக் குறிப்பிடப்படுகிறது.

    இதே போன்று இன்றளவிலும் நம்மவர்கள் விளையாடும் விளையாட்டுகளை ஆண்களுக்கு உரியன, பெண்களுக்கு உரியன, இருபாலருக்கும் உரியன என்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு, பெரியவர்களுக்கான விளையாட்டுகள் என்றும் பகுத்தறியலாம்.

    தமிழ் நாட்டு விளையாட்டுகளுள் இன்று சிறார்களால் மிகுதியாக விளையாடப்படும் விளையாட்டுகளான கோலி, கில்லி (கிட்டிப்புள்) அல்லது சில்லாங்குச்சு, எறிபந்து, காயா பழமா, பம்பரம், கிளித்தட்டு, சடுகுடு(கபடி), பூக்குதிரை, பாய்ச்சல் குதிரை ஆகியன உள்ளன.

    கோலி

    கண்ணாடியாலும் கல்லாலும் ஆன சிற்றுருண்டைகளை விரல்களால் சுண்டியும், உருட்டியும், எறிந்தும் ஆடும் ஆட்டம் கோலி ஆட்டம் எனப்படும்.

    கில்லி

    கில்லி ஆட்டத்திற்குக் கிட்டிப்புள், சில்லாங்குச்சு ஆகிய பெயர்களும் உள்ளன. சிறு குச்சு ஒன்றை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டமாக இது அமைகிறது

    எறிபந்து

    பந்தினை ஒருவர் மேல் ஒருவர் எறிந்தாடும் ஆட்டமாகும்.

    காயா பழமா?

    நீர் நிலைகளில் நின்று கொண்டு காயா பழமா? என்று கேட்டு தண்ணீரில் விரலால் சுண்டி ஓசை எழுப்பி ஆடும் ஆட்டமாகும்.

    பம்பரங்களை ஆடவிட்டு ஆடும் பம்பர ஆட்டம் ஓயாக்கட்டை, உடைந்த கட்டை, பம்பர குத்து, இருவட்டக் குத்து, தலையாரி என்றும் முறைகளில் விரும்பிய வகையில் ஆடப்படுகிறது.

    கிளித்தட்டு

    நீள் நாற்கோண வரப்புக் கோடுகள் அமைக்கப்பட்டு அவற்றின் குறுக்கே விளையாடுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்து குறுக்காகத் தட்டுக் கோடுகள் அமைத்து விளையாடுவர். இரு அணியாகப் பிரிந்து ஒரு அணியின் தட்டுள். இறங்குவர் மறு அணியினர் மறிப்பர். பிடி கொடாமல் தப்பிப்பதற்குப் பயிற்சியாக அமையும் இவ்விளையாட்டு.

    சடுகுடு (கபடி)

    தமிழர் விளையாட்டுகளுள் முதன்மையான ஒன்றாக சடுகுடு திகழ்கிறது. ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிகட்டு) தயாராவதற்கு முன் மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இதனை சிலர் குறிப்பிடுகின்றனர். கை + பிடி = கபடி என்று இதற்கு பெயர் வந்திருக்க வேண்டும் என்பாரும் உளர். இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் போட்டியாக இது திகழ்கிறது.

    பூக்குதிரை

    ஒரு பூவின் பெயரைச் சொல்லி ஒருவர் மேல் ஒருவர் குதிரையேறி விளையாடுவது பூக்குதிரை.

    பாய்ச்சல் குதிரை

    ஒருவர் கீழே அமர்ந்தும், பின் குனிந்தும் தன் உயரத்தைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே இருப்பார். வரிசையாக தாண்டுபவர்கள் எந்நிலையிலேனும் தாண்ட முடியாது நின்றால் அவர் குனிந்து நிற்க, பிறர் அவ்வாறே தாண்டி விளையாடுவது பாய்ச்சல் குதிரை.

    அதே போன்று பெண்களால் ஆடப்படுவனவற்றுள் கழங்கு, பாடல் ஆட்டம், பாண்டி, கண்ணாம்பொத்தி போன்றவை சிறப்பிடம் பெறுவனவாகும்.

    கழங்கு

    பெண்கள் விளையாடும் விளையாட்டுகளுள் கழங்கு சிறப்பிடம் பெற்றுள்ளது.  பெண்கள் சிறு கற்களைக் கைகளால்  தட்டிப்பிடிக்கும் விளையாட்டாக இது அமைகிறது.  கழங்கு வீட்டினுள்ளும் வீட்டு முற்றத்திலும் விளையாடப்படும்.  இவ்விளையாட்டானது பயன்படுத்தப்படும் சிறு கற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.  அவை மூன்றாங்கல், ஐந்தாங்கல், ஏழாங்கல், பல நாலொருகல், பன்னிருகல், பலகல், பதினாறாங்கல் என்பனவாகும். தட்டாங்கல் என பொதுவாகவும் அழைப்பதுண்டு.

    பாடல் ஆட்டம்

    சிறுமியர் இருவராகவோ, இரு அணியினராகவோ நின்று கொண்டு புதிர்பாடல்கள் பாடி ஆடும் ஆட்டம் பாடல் ஆட்டம் எனப்படும்.

    உதாரணமாக ஆடும் – ஓநாயும் ஆட்டம்.

    இதில் வரிசையாக ஒருவர் இடுப்பை மற்றவர் பிடித்தபடி நிற்பார்கள்.   இவர்கள் ஆடுகள், ஒருவர் மட்டும் சுற்றிவந்து வரிசையில் இருந்தது பிரிபவரைப் பிடிக்க முயல்வார்.  அவர் ஓநாய். கீழ் உள்ளது போல், தங்களின் உள்ளம் போல் பாடிக்கொண்டே ஆடுவர்.

    ஓநாய்:என்னாட்டைக் காணோமே
    ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ
    ஓநாய்: அடுப்பு மேல ஏறுவேன்
    ஆடு: துடுப்பைக்கொண்டு சாத்துவேன்
    ஓநாய்: நெல்லைக் கொறிப்பேன்
    ஆடு: பல்லை உடைப்பேன்
    ஓநாடு: வடி தண்ணியைக் கொட்டுவேன்
    ஆடு:வழிச்சு வழிச்சு நக்கிக்கோ
    ஓநாய்:கோட்டை மேலே ஏறுவேன்
    ஆடு: கொள்ளிக் கொண்டு சாத்துவேன்
    ஓநாய்:என்னாட்டைக் காணோமே?
    ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ.

    இவ்வாறு கேள்வி-பதில் வடிவில் தொடரும். குழந்தைகள் கேள்விகளுக்குச் சட்டென்று(உடனடியாக) பதிலளிக்கும் பழக்கத்தை இவை போன்ற விளையாட்டுகள் உருவாக்கும்.  சிறுவர், சிறுமியர் இருபாலரும் இத்தகைய பாடல் ஆட்டத்தை ஆடுவர்.

    கண்ணாம்பொத்தி

    ஒருவர் கண்களைப் பொத்தி கொண்டிருக்கும்போது மற்ற சிறார்கள் ஓடி ஒளிவர்.  பின்னர் கண்களைப் பொத்திக்கொண்ட சிறுவர் ஓடிப்போய் அங்கும் இங்கும் பார்த்து ஒளிந்து கொண்டிருக்கும் சிறுவர்களுள் ஒருவரைத் தொடமுயல்வார்.  முதலாவது தொடப்பட்ட சிறுவர் அடுத்த முறை கண்களைப் பொத்த ஆட்டம் தொடரும்.

    குலைகுலையாய் முந்திரிக்காய்

    சிறார் பலரும் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருப்பர்.  ஒருவர் திரிபோல முறுக்கிய துணியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’  என்று கூறியபடி சிறாரைச் சுற்றி வலமாக ஓடிவரும்போது யாருக்கும் தெரியாமல் கையில் உள்ள திரியை ஒருவர் பின்னே வைத்து விடுவார்.  வைக்கப்பட்ட திரியின் நேரே உள்ளவர் உடனே கண்டு எடுக்காவிடின் சுற்றி வருபவர்  அருகில் வரும்போது அவர் முதுகில் திரியால் மெதுவாகத் தட்டி எழுப்பிவிடுவார்.  ஓடிவந்தவர் அங்கு அமர்ந்துவிடுவார். எழும்பியவர் திரியுடன் ஓடிவர வேண்டும்.  இவ்விளையாட்டிற்குத் திரித்திரி பந்தம் என்ற பெயரும் உண்டு.

    நொண்டி

    கட்டமாகவோ, சதுரமாகவோ கீறப்பட்ட கோட்டினுள் அணியாக நிற்பர்.  ஒருகாலை மடக்கி நொண்டி செல்பவர் ஒருவரையோ, பலரையோ தொட்டு வெளியேற்றவேண்டும்.

    கும்மி

    சிறுமியர் கைகளைக் குவித்து தட்டி ஓசையெழுப்பி பாடலோடு ஆடும் ஆட்டம் கும்மியாகும்.  இதற்கென தனியாகப் பாடல்கள் உள்ளன.

    தாயம்

    தாயம் மிகத்தொன்மையான விளையாட்டுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  தமிழில் கிடைக்கப்பெற்றுள்ள முதல் நூலான தொல்காப்பியத்திலும் இது குறித்தக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.  இது பலவகைப்படும்.  நாயும், புலியும், பரமபதமம், குறுக்குக் கட்டத்தாயம் போன்றவையும் இதன் வழிவந்தவையே என்பர்.

    இதே போன்ற விளையாட்டுகள் மட்டுமல்லாமல் ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், களரி போன்ற வீர விளையாட்டுகளும் தொன்மையான காலந்தொட்டே தமிழர்களால் விளையாடப்பட்டு வருகின்றன.

    ஏறுதழுவுதல்

    காளைகளை அடக்கும் வீரவிளையாட்டாக இது திகழ்கிறது.  தொன்மையான இலக்கியங்கள் பலவற்றிலும் இது தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன. இன்றைய ஜல்லிக்கட்டு இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆநிரைகளை அடக்குதல், காளைகளை அடக்கும் முன் குரவைக்கூத்து நிகழ்த்துதல் போன்ற தகவல்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்டாலும் இவ்விளையாட்டு குறித்த விரிவான தகவல்கள் அவற்றில் இடம்பெறவில்லை.  இருப்பினும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்ற ஒன்றாக இதனைக் கருதுகின்றனர்.

    சிலம்பம்

    இது தமிழர்களின் தற்பாதுகாப்புக்கலை.  வீரவிளையாட்டாகவும் திகழ்கிறது.  கம்பு சுற்றுதல் என்றும் கூறுவதுண்டு. இதில் கம்பு சுற்றும் முறை, கால் மற்றும் உடல் அசைவுகள் முதன்மை இடம் பெறுகின்றன.  கலிங்கத்துப் பரணியில் “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே” என்று வரும் இடத்தில் தண்டு எனக்குறிப்பிடுவது சிலம்பக்கம்பினையே என்பர். கம்புசூத்திரம், குறுந்தடி சிலம்பம் என்றும் சுவடிகள் சிலம்பப்பயிற்சி தொடர்பானவை என்றும் கூறுகின்றனர்.

    களரி

    களரிக் கலையும் பழந்தமிழகத்தில் தோன்றிய வீரவிளையாட்டுகளுள் ஒன்றாகும். இது வடக்கன்களரி,  தெக்கன் களரி என இரு வகைப்படும்.  தமிழகத்தின் தென்பகுதியிலும் இன்றைய கேரளாவான சேரநாட்டிலும் இக்கலை வடிவம் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றது.  வாள், கத்தி, மான்கொம்பு, சுருள்வாழ், மழு, கோடாலி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டமாகும்.

    இதே போன்ற எண்ணிடலங்காத விளையாட்டுகளுக்கு உரிமையுடையவர்களாக நம்மவர்கள் திகழ்கின்றனர்.  நமது இயற்கைச் சூழல், பண்பாடு போன்றவற்றிற்கு ஏற்ப இவ்விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

    இவ்விளையாட்டுகளைக் குறித்து நுணுகி ஆய்வுகள் மேற்கொண்டால் தமிழக மக்கள் எத்தகைய விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து ஆடிவந்தனர் என்பது வெளிப்படும்.  மேலும் தொன்மையான விளையாட்டுகள் பலவும் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்று ஆடப்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    திருவார் பெருமை திகழ்கின்ற “தேவா சிரிய னிடைப்பொலிந்து    
    மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது  வந்தணையா
    தொருவாறொதுங்கும்வன்றொண்டன்புறகென்றுரைப்பச்சிவனருளாற்
    பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெறநின்றார்.

    பொருள்

    அருட்டிரு நிறைந்த பெருமை  எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடி யார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன், ‘புறகு’ என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார்.அதுவேயுமன்றிமேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்

    விளக்கம்

    ‘’திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்’’ என்ற  தொடரில்,   திரு -அருட்டிரு. ஆர் பெருமை – அடைந்தாரை உய்விக்கவல்ல திருநீறு, கண்டிகை,பஞ்சாக்கரம் முதலிய சாதனங்களும் இவை பூண்டொழுகும் சீர் அடியார்களும் எப்போதும் இடையறாது விளங்குதல் குறித்தது.

    இவை பற்றி முன்னர்த் திருக் கூட்டச் சிறப்பிலே சிறப்புறச் சில திருப்பாட்டுக்களில் உரைத்துள்ளார்.

    மாவா ழகலத்து மால் என்றதனால் இங்குத் திரு என்றதும் இலக்குமியைக் குறித்தது என்று உரைப்பாரும்  உண்டு.

    பொலிந்து – சிவசாதனங்களாலே பொலிவு பெற்று. “புரந்த அஞ்செழுத்து  ஓசை பொலிதலால்“ (438)என்றதும் காண்க. இச்-சிவசாதனங்கள் ஆன்மாக்களைத் தம்வசமாக்கிக் கொள்ள இறைவனால் அருளப்பெற்றவை களவு செய்வானொருவன் மிகு செல்வமுடையோனை மந்திரத்தாலும், மருந்தாலும், தந்திரத்தாலும் பேதித்துத் தன்வசமாக்கி அவன் பொருளை வௌவுதல்போல இறைவனும் திருநீறென்கிற மருந்தாலும், சீபஞ்சாக்கரம் என்கிற மந்திரத்தாலும், சொரூபமென்கிற தந்திரத்தாலும் ஆன்மாக்களைப் பேதித்துத் தன்வசமாக்கி அவரவர் வினைகளை அபகரிக்கின்றான்.

    “கள்ளரோ டில்ல முமையார் கலந்திடில்.
    வெள்ள- வெளியாமென்றுந்தீபற,
    வீடு மெளிதாமென் றுந்தீபற“ – திருவுந்தியார்-23.

    தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்றொண்டன் – நம்பியாரூரர் திருவாரூரில் தினமும்  பூங்கோயிலுக்குச் சென்று இறைஞ்சி வருகின்ற நியதிப்படி ஒருநாட்செல்வார், “இங்குத் தேவாசிரியனிற் கூடி எழுந்தருளி யிருக்கும் அடியார்களுக்கு என்னை அடியேனாகப் பண்ணுநாள் எந்நாளோ?“ என்று இறைவர் பாதங்களைச் சிந்தித்துக் கொண்டே செயல் மறந்து திருக்கோயிலினுட் சென்றார். இறைவரும் அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டித் திருவாயிலின் நேரே எழுந்தருளி வந்து, எதிர் காட்சி தந்து, ‘இவர்கள் பெருமைகளைத் தேற்றிப் பாடெ’ன்று பணித்து, அதற்குத் “தில்லை வாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்“ என்று அடியும் எடுத்துக் கொடுத்தருளினர்.அதன்வழியேஎடுத்து நம்பிகள் இவ்வடியவர்க ளுக்கெல்லாம் தனித்தனி வேறடியேன் என்று, ‘திருத் தொண்டத்தொகை’ பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவணைந்தார் என்ற வரலாறு தடுத்தாட் கொண்ட புராணத்தினுட் கூறப்பெற்றது. இவ்வரலாற்றின் சரித நிகழ்ச்சியிலே நம்பிகள் திருக் கோயிலினுட் சென்றபோது எழுந்தது, இப்பாட்டிற் கண்ட விறன்மிண்ட நாயனாரின் செற்றம் பற்றிய செய்தி.

    அங்கு ஒருபுறம் நம்பி ஆரூரர் இவ்வடியவர்களுக்கு ஆளாகப் பண்ணுநாள் எந்நாள் என்று இறைவனை வேண்டி நேரே கோயிலினுட் செல்கின்றார்; அதனை நோக்கி இங்குத் தேவாசிரியனில் இருந்த விறன்மிண்ட நாயனார் நம்பிகள் திருக்கூட்டம் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கி உட் செல்கின்றார் என்று சினந்து மொழிகின்றார். திருக்கூட்டத் தெதிர்முன் பரவும் அருள்பெற்றே பின் இறைவர் பாதந் தொழப்பெற்றார் விறன்மிண்டர்

    அந்நியதியே விதி எனக்கொண்ட அவர் அதன்வழி ஒழுகாது உட்சென்றது பற்றி நம்பிகள்பாற் சினந்தார். நம்பிகளும், அடியாரை வணங்கி அணையா விடினும், அடியாரைப் பணிய வேண்டியே இறைவனைத் தொழ உட்சென்றனர். எனவே, இருவர் கருத்தும் அடியார்பணி என்ற ஒரு வழியிலே படிந்திருந்தன என்க. ஆயின் கருத்தினைப் பின்பற்றிய புற வழிபாடு நிகழாமையின் “புறகு“ என்ற மொழியும் எழுந்தது. இருவருள்ளும் உயிர்க்குயிராய் உடன் இருந்த இறைவன் இருவர் கருத்தையும் முற்றுவித்துத் திருத்தொண்டின் திறத்தை உலகம் உய்ய உணர்த்தி யருளினார் என்பதனை ஈண்டுச் சிந்திக்க.

    அணையாது ஒருவாறு ஒதுங்கும் – அணைந்தோர் அடியவர்கள். அவரை அணைவது சீவன் முத்தர் நிலை என்பது சாத்திரம்.

    “அன்பரொடு மரீஇ“ – சிவஞானபோதம். அவ்வாறு அணையாது நேரே உட்சென்று ஒதுங்கும். அடியார் வழியே நேர்வழி; பிற வழிகள் ஒதுங்கிய தூர வழியாம் என்பது இந்நாயனார் கொள்கை. ஆதலின் அடியார் தம்மைத் தொழுது வந்தணையாது இறைவரை வணங்கச் செல்லுதலை ஒதுங்கும் என்று  ஒதுக்கினார் நாயனார்.

    புறகு – புறம்பாவான். பெருகாநின்ற பெரும் பேறு – பேறு – பாக்கியம். இப்பேறுபெரியது. இயல்பிற் பெரிதா யிருப்பதுடன் பின்னும் மேன்மேலும் பெருகி வளர்கின்றது என்க. பெருகுதலின் விரிவு மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் குறித்தன. அவை யன்றியும் திருத்தொண்டத் தொகையால் உலகம் என்றும் உய்ந்து நிகழ்கின்றதும் குறிப்பாம்.

    அவர்பாற் பேறு பெற்றார் – புறகு என்று நாயனார் சொல்லியதும் திருவருளாலே ஆகியதாம். “அகில காரணர் தாள்பணிவார்கள் தாம், அகில லோகமு மாளற்குரியர்“  என்றபடி அடியவர்களே முதல்வராவார் என்பது இந்நாயனார் கொள்கை.

    அதற்கிணங்க இறைவரும் உலகம் உய்யத் திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர் என்க.

    மற்றும் பெற நின்றார் – மற்றும் – வன்றொண்டர் புறகென்றதேயன்றி அவருக்குப் பிரானாகிய சிவபிரானும்  புறகு என்பது. இதுவும் திருவருள் வழியே நிகழ்வதாகலின், மற்றும் – என எச்சவும்மை கொடுத்தோதினார். அதனோடு மேலும், “அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த“ தமது திருவாக்கினாலே இறைவர் “தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்“ என்று அடியார்க்கு அடிமைத்திறம் தாமே வகுத்தருளப் பெற்றதும், அவ்வருட்டுணை கொண்டு, அதுவே உண்ணின்று உணர்த்திப் பாடுவிக்க  நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவண் வந்து அணையப்பெற்றதும்  ஆகிய பேறுகளுமாம். பெற நின்றார் – இனிப் பெறுதற்குரியராய் நின்றார்.

    இப்பாடல்  அடியார் பெருமையை  ஆண்டவனே ஏற்று மகிழ்வார் என்பதைத்  தெளிவாக்குகிறது.

    Share
  • தமிழகத்தில் நிவர் புயல்

    தமிழகத்தில் நிவர் புயல்

    நிவர் புயல் காரணமாக, 2020 நவம்பர் 24 அன்று கனமழை தொடங்கியது. சென்னை, தாம்பரத்தில் தண்ணீரில் அலையெழுப்பியபடி மழை பொழிவதைப் பாருங்கள்.

    நிவர் புயலுக்கு மரங்கள் நடனம் ஆடும் காட்சி.

     

    நிவர் புயல் மையம் கொண்டுள்ள இடம், நகர்ந்து வருகின்ற இடம், காற்றோட்டத்தின் திசை, காற்று வீச்சு அதிகமுள்ள இடங்கள், நிவல் புயலின் பயணப் பாதை உள்ளிட்ட பலவற்றையும் எளிதில் காண, இதோ ஒரு வழி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டிரோன் மூலம் டெலிவரி

    டிரோன் மூலம் டெலிவரி

    அண்ணாகண்ணன்

    அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும்.

    ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவதை விட, விமானத்திலிருந்து டிரோன்கள் பறந்து பயனாளிகள் கையில் சேர்ப்பது போல் செய்தால் இன்னும் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

    டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த முடியும்.

    பொருள்களைக் கொண்டு சேர்ப்பதுடன், அவரவர் வீட்டிலிருந்து குப்பைகளைத் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் பணிகளிலும் இவற்றை ஈடுபடுத்தலாம். சற்றே பெரிய டிரோன்களைத் தனி வாகனமாகவும் பொது வாகனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே, விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவது போல், டிரோன் போக்குவரத்தையும் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் தேவை உள்ளது. இதற்கெனத் தனி ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

    Share
  • உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு

    உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு

    அண்ணாகண்ணன்

    உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவருடன் பற்பல கவியரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவார். ஒருமுறை என்னைப் பார்த்து, நீங்க அழகா இருக்கீங்க, நடிக்கப் போலாமே என்றார்.

    உ.வே.சா. கவியரங்கில் நான் கவிதை படித்த பிறகு, தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். சும்மா பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டணும் என்பார். அவரை ஒரு முறை பேட்டி கண்டேன். அதை இங்கே படிக்கலாம். http://annakannan.blogspot.com/2005/07/blog-post_30.html

    இந்தப் படத்தில் சுரதா, 1996ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 24 மணி நேரத் தொடர் கவியரங்கில் நான் பங்கேற்றதைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்குகிறார்.

    இந்த நூறாவது ஆண்டில் சுரதா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.  அவருடனான உங்கள் அனுபவங்களையும் அவரது படைப்புகள் பற்றிய உங்கள் பார்வைகளையும் வல்லமையுடன் பகிருங்கள்.

    Share
  • சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    செம்மீசைக் கொண்டைக்குருவி, செங்குதக் கொண்டைக்குருவி என இரு வகைகள் உண்டு. இவற்றுள் செங்குதக் கொண்டைக்குருவி என்று அழைக்கப்படும் சின்னானின் கொண்டை சற்றே சிறியது. இதைச் சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும். செங்குதக் கொண்டைக்குருவியை நம் வீட்டருகே அடிக்கடி காண்கிறேன். இன்று காலையில் நம் வீட்டுக் கொய்யா மரத்தில் அமர்ந்த சின்னான் பாடுவதைக் கேளுங்கள்.

     

    முகப்புப் படத்துக்கும் விவரங்களுக்கும் நன்றி: விக்கிப்பீடியா

    Photo By J.M.Garg – சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2994302

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

    மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

    வளவ. துரையன்

    காத்தவராயன் நேற்றிரவு காலமானார். எந்தக் காத்தவராயன் என்று கேட்பீர்கள்? நீங்கள் கேட்பதும் ஒருவகையில் நியாயம்தான். அற்பிசம்பாளையத்தில் மூன்று காத்தவராயன்கள் இருந்தனர். முதலாமவர் கால்நொண்டிக் காத்தவராயன். இவரைச் சிலபேர் இவர் காதில் விழாமல் களவாணிக் காத்தவராயன் என்றும் சொல்வர். எந்த வீட்டில் மாங்காய்கள் காய்த்திருக்கின்றன? எங்குத் தேங்காய்கள் பறிக்கலாம்?. எந்த வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை காய்த்துக் குலுங்குகிறது? என்பதெல்லாம் தெரிந்து யாரும் அறியாவண்ணம் திருடுவதில் வல்லவர். அப்படித் தென்னை மரம் ஏறும்போதுதான் வீட்டுச் சொந்தக்காரர் வந்துவிட அவசரத்தில்  இறங்கக் கீழே விழுந்து கால் முறிந்து கால்நொண்டிக் காத்தவராயன் ஆனார்.

    இரண்டாமவர் கடுவனூர் காத்தவராயன்; இவர் மூதாதையர் யாரோ கடுவனூரிலிருந்து இங்கு வந்து குடியேற அவர் குடும்பத்திற்கே கடுவனூர் பட்டப் பெயராக வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. மூன்றாமவர்தான் இப்பொழுது காலமான கல்லுவீட்டுக் காத்தவராயன். முதன் முதல் அந்த ஐயப்பன் கோயில் தெருவிலேயே கல் வீடு கட்டியவர் அவர் என்பதால் அப்பெயர் வந்தது. அப்படி வாழ்ந்தவர் அவர். ஆனால் போனமாதம் கூட அவர் சொன்னார். ”ஆமாம் அந்தக் காலத்தில் அனுமாரு கூடக் கடலைத் தாண்டினாராம். இப்ப ஒரு வாழைப்பழத்துக்குப் பிச்சை எடுக்கராரு”.

    காலை மணி ஏழாகி விட்டது. வாசலில் இருந்து பார்க்கும்போதே காத்தவராயனைக் கூடத்தில் பெஞ்ச் ஒன்றில் கிடத்தி இருப்பது தெரிந்தது. அவரைச் சுற்றி ஆறேழு பெண்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நேற்று இரவிலிருந்து தொடங்கி அவர்கள் அழுது முடித்து விட்டனர். இளையமகன் சீனுதான் உள்ளுக்கும் வெளிப்பக்கத்துக்கும் வந்து போய்க்கொண்டிருந்தான். அவன் வெளியில் வந்த போது, பல்லக்குக் கட்ட வந்தவர்கள், “ஏங்க வேலய ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டது, நாட்டாமை சுப்பிரமணியக் கவுண்டர் காதில் விழுந்தது.

    அவரே பதில் சொன்னார், ”யார்ரா இவன், பல்லக்குக் கட்டிக் காக்கக் கூடாதில்ல; பெரிய புள்ளயும் செங்கல்பட்டுலக் குடுத்திருக்கற பொண்ணும் வரணும்ல; அப்படிப் போயி ஒக்காரு; நானே கூப்பிடறேன்;” ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் தனஞ்செயன். ”அவனுவளுக்கு அவங்க வேலய முடிச்சுட்டுப் போலாம்முன்னு நெனப்பு” என்றார். தெருவெங்கும் அவரவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு வாசலுக்கு வந்து உட்கார்ந்த அடுத்தத் தெரு கம்சலா, சும்மா இருக்காமல் அந்த வீட்டுப் பவுனாம்பாளின் வாயைக் கிளறினாள். “ஏன் ஆயா; இன்னும் யாரு வரணும்னு இப்படிக் காத்திருக்காங்க” அது போதாதா பவுனாம்பாளுக்கு. அவள் ஆரம்பித்து விட்டாள்.

    “ஆமாண்டி நீ சொல்லுவ; ஒனக்கென்னா தெரியும்? நீ அசலூர்லேந்து வந்து வாக்கப்பட்டவ; பெரியமவனப் படிக்க வச்சு வக்கீலாக்கி மெட்ராசுல ஒக்கார வச்சிருக்காரு. அவன் பொண்டாட்டி காலேசுல வாத்தியாரு. ரெண்டு புள்ளங்க அவனுக்கு; அவன் தங்கச்சியைச் செங்கல்பட்டுல ஒரு டாக்டருக்குக் குடுத்திருக்கு. அவங்கள்ளாம் வரவேணாமா?” “அப்படியா ஆயா? இங்க இருக்கவருக்கு மேல ஒரு அண்ணாரும், கீழ ஒரு தங்கச்சியும் இருக்காங்களா?” ”ஆமாண்டி, அவங்கள்ளாம் ரொம்பவே நல்லா இருக்காங்க. சீனுதான் பாவம்; அப்பாருக்காக நெலத்தைப் பாத்துக்கிட்டான். வேலக்கே போகல. இவனுக்கும் ரெண்டு புள்ளங்கதான். ஒருத்தன் இப்பதான் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கான். மத்தவன் வளவனூர்லக் கடை வச்சிருக்கான்”.

    சீனு வெளியே வந்தவன் நாற்காலியில் உட்கார்ந்தான். ”ஏண்டா, எங்க வராங்களாம்? கேட்டியா?” என்று கேட்டார் நாட்டாமை. “இப்ப கேக்கல மாமா; இந்தாங்க நீங்களே கேளுங்க” என்று கூறிய சீனு தன் கைப்பேசியில் அண்ணன் காமராசின் எண்ணைப் போட்டுக் கொடுத்தான். அவர், ”என்னா ராசு எங்க வரீங்க?” “இதோ வந்துட்டன் மாமா; பாண்டிச்சேரியில நுழைஞ்சிட்டோம்” “ஏம்பா இவ்ளோ நேரம்?” “இல்ல மாமா அப்படியே செங்கல்பட்டு வந்து ராசாத்தியையும் கூட்டுக்கிட்டு வரேன்; அதான்” ”சரி, சீக்கிரம் வந்து சேருங்க; இன்னிக்கு செவ்வாக் கெழமை; பன்னண்டு ஒண்னரை குளிகன்; அதுக்குள்ள எடுக்கணும்” என்று பேசி முடித்து விட்டார்.

    தனஞ்செயன் “என்னா சொல்றாங்க” என்று கேட்டார். “ம்….வழியிலத் தங்கச்சியையும் கூட்டுக்கிட்டு வரானாம். அதான் இவ்ளோ நேரம் ஆடுயிடுச்சாம்” என்றார் நாட்டாமை. “ஏங்க ராத்திரி பத்து மணிக்கு உசிரு போன ஒடனேயே மொதல்ல அவனுக்குதான் தகவல் சொன்னோம்; ஒடனே கெளம்பியிருந்தா விடியறதுக்குள்ள வந்திருக்கலாம்” என்று சொல்லிய ஊர்த் தலைவர் சீனுவைப் பார்த்தார்.

    அவனோ தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலத் தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தான். நாட்டாமையின் குரலே கொஞ்சம் உச்சக்கட்டம்தான். பவுனாம்பாளின் காதிலும் அது விழுந்தது. அவள் ஆரம்பித்து விட்டாள்.

    “ஏண்டி கம்சலா கேட்டியா கதையை. தங்கச்சி ஊட்டுக்குப் போயி சீராடிட்டு வரான் போலிருக்கு. என்னாடா அங்கத் தம்பி தனியா இருப்பானே ராப்பொணம் காத்துக்கிட்டுன்னு நெனப்பு இருந்தா கோழி கூவறதுக்கு முன்ன வந்திருக்க வேணாம்” அதற்குக் கம்சலா, “அவங்களுக்கு உள்ள என்னா இருக்குதோ யாரு கண்டா?” என்றாள். “என்னா இருக்குது? வசதிதான் காரணம். ரெண்டு காசு சேந்ததுமே அப்பாரு, அம்மாக்காரி யாருமே வாணாம். அவங்கள்ளாம் நகரத்து வாசியா ஆகியாட்டாங்க இல்ல”

    “அதுக்காக சொந்தம்லாம் உட்டுப் போயிடுமா?” ”அட போடி இவளே; ஆறு மாசம் முன்னாடி காயலா கெடந்து செத்துப் போனாளே ராக்காயி, அதாண்டி சீனுவோட அம்மா அவ கண்ணால தண்ணி உட்டுக் கதைகதையா சொல்லியிருக்கா. அங்க போனாலே பெரியவன் ரெண்டு பேரையும் வேலைக்காரனாதான் நடத்துவானாம். அவன் தங்கச்சி அதுக்கு மேல; அவ ஆசையா ஆயான்னு வர்றப் புள்ளயக் கூட சேர உடமாட்டாளாம்.அப்பறம் ஏன் இவங்க போனாங்கன்னு கேப்ப? எல்லாம் பேரப்புள்ளங்க மேல இருக்கற ஆசைதான்”

    வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நின்றது. நான்கு பெரியவர்களும் நான்கு சிறுவர்களும் இறங்கியது தெரிந்தது. காமராசு தூக்கவே முடியாமல் பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனான். அவன் தங்கை காரை உட்டு இறங்கியதுமே, ”அப்பா என்னை நடுத்தெருவுல உட்டுட்டுப் போயிட்டியே?” என்று பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டு உள்ளே போனாள். சிறுவர்களும் காமராசுவின் மனைவியும், டாக்டர் மருமகனும் சென்றனர். சிறிதுநேரம் உள்ளே அழுகையாக இருந்தது. அதற்குள் பல்லக்குக் காரர்கள் வந்துவிட நாட்டாமை ”ஆரம்பிங்கடா’ என்று உத்தரவிட்டார்.

    உள்ளிருந்து ஒருவர் ஒருவராக வெளியே வர ஆரம்பித்தனர். முதலில் வந்த டாக்டர் தனியாக இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டனர். காமராசுவின் மனைவி மட்டும் உள்ளேயே இருந்தாள். காமராசும் அவன் தங்கையும் வந்தனர். காமராசு சீனுவுக்கும் நாட்டாண்மைக்கும் நடுவில் உட்கார்ந்து கொள்ள, அவன் தங்கை ராசாத்தி பக்கத்து வீட்டுப் பவுனாம்பாளைப் பார்க்கச் சென்றாள். சற்று நேரம் கழித்து அவளும் அங்கே வந்து திண்ணையில் உட்கார்ந்தாள்.

    “எத்தினி நாளு கெடந்தாரு?” என்று பொதுவாகக் கேட்டான் காமராசு. தனஞ்செயன் உடனே  ”படுத்த படுக்கையாக் கெடந்தது என்னமோ நாலு நாளுதான். ஆனா ஒரு பத்துப் பதினைஞ்சு நாளாவே அவருக்கு சொகமில்ல” என்றார். “அவ்ளோ சீரியஸ்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் வந்து கண்டுக்கிட்டுப் போயிருப்பேன்ல” என்றான் அவன் பதிலுக்கு. சீனு மௌனமாக இருந்தான். நாட்டாண்மைக்குத்தான் தாங்க முடியவில்லை. “ஏம்பா, இந்தப் பத்து நாள்ல ஒங்கிட்ட ஆறு முறை சொல்லியாச்சு; நானே நாலு தடவ போட்டுப் பேசினேன். நீ ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டுத்தானே இருந்த” என்று அவர் உரக்கப் பேச எல்லார் கவனமும் இங்கே திரும்பியது.

    காமராசுவிற்கு ”ஏண்டா கேட்டோம்” என்றாகி விட்டது. ஏதாவது பேச வேண்டுமே என்று சீனு பக்கம் திரும்பி, மெதுவாக “எப்படா உசிரு போச்சு” என்றான். சீனு, ”பத்து மாசம் இருக்கும்ணே” என்றான். எல்லாரும் சீனுவைப் பார்த்தனர். ”என்னாடா சொல்ற” “ஆமாண்ணே; அப்பாரு செத்துப் போயிப் பத்து மாசம் ஆகியிருக்கும்ணே” காமராசு நாட்டாண்மை பக்கம் திரும்பி “என்னாங்க இவன் பேசறான்?” என்றான். “சீனு என்னா ஒடம்பு சரியா இல்லியா?” என்றார் நாட்டாண்மை. இல்லீங்க; எனக்கு ஒண்ணுமில்ல;  நான் உண்மையத்தான் சொல்றேன். அவரு எப்ப செத்துப் போனார் தெரியுமா?” என்று கேட்டு சும்மா இருந்தான்.

    யாரும் ஒன்றும் புரியாமல் இருக்க சீனு எழுந்திருந்தான். அவன் குரல் உச்சமாக எழுந்தது. “நாட்டாமை ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? இதே எடத்துல, நீங்க. தலைவரு, அப்பறம் இன்னும் ஆறேழு பெரிய மனுஷங்கள்ளாம் வந்திருந்தீங்க; அன்னிக்குதான் இவரு அதான் எங்கண்ணன், சொத்தைப் பிரிக்கணும்னு ஒத்தக் கால்ல இருந்தாரு. சரின்னு அப்பாருவும் ஒத்துக்கிட்டுத்தான் ஒங்கள எல்லாம் வரவழைச்சாரு; அப்பக் கூட எனக்கு இந்த ஊட்டத் தர்றதால நெலத்தைக் கொஞ்சம் கொறச்சிக்கணும்னு இவரு ஒரே பிடிவாதமாகத்தான் இருந்தாரு.

    ஊட்டை வச்சுக்கிட்டு அவன் என்னா செய்யப்போறான்? நெலமா இருந்தாலும் அவனுக்கு ஏதாவது வருமானம் வரும். ராசு நீ வேணா ஊட்டை எடுத்துக்க. நெலத்தைக் கொறைச்சுக்கன்னு அப்பாரு சொன்னாரு. அதுக்கு இவரு எனக்கு எதுக்கு இந்த ஊடு? மெட்ராசுல பெரிய ஊடு கட்டப் போறேன்; பாகம் பிரிச்சு ஒடனேயே நெலத்த விக்கப்போறேன்னு சொன்னாரு. அப்பாருக்கு அப்பதான் விஷயம் புரிஞ்சிருக்கு. நெலத்தை மட்டும் விக்காதடா; நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்னாரு. இவரு அதை நீ சொல்லாதன்னாரு. அப்படியே பேச்சு அதிகமாச்சு. நீங்களும் எவ்வளவோ தடுத்துப் பாத்தீங்க.

    ஒரு சமயத்துல அப்பாரு, ஊடு கட்ட நான் வேணாப் பணம் தரேன்னாரு.  இவரு ஒடனே என்னா செஞ்சாரு ஞாபகம் இருக்காருங்களா? ஓடிப் போயி காருலேந்து எடுத்தாந்த மூணோ இல்ல நாலோ ரூபாக் கட்டுகளை அப்பாரு மேலியே போட்டாரு; நீ எனக்குப் பணம் தரியா? எங்கிட்ட இல்லாதப் பணமா? ஒங்க சங்காத்தமே வாணாம்னுதான நான் எல்லாத்தையும் உட்டுட்டுப் போறேன்னாரு. அந்த சொல்லைக் கேட்டதுமே அப்பாரு உசிரு போயிடுச்சு. ஊரு ஜனங்க மத்தியில இவ்ளோ அவமானமா போயிடுச்சேன்னு அவரு ஒண்ணுமே பேசாம உள்ளப் போயிப் படுத்துக்கிட்டாரு”

    இதெல்லாம் காதில் விழுந்ததும் அவன் தங்கை ராசாத்தி வேகமாக எழுந்து வந்தாள். சத்தமாக, ”என்னாண்ணே, நீ பாட்டுக்கு பெரியண்ணனைப் பேசிக்கிட்டே போற?” என்று கேட்டாள். சீனு, ”வாடியம்மா என் தங்கச்சி ராசாத்தி; அப்பாரைப் பொதைக்க மாட்டாங்கம்மா; எரிக்கத்தான் போறாங்க தெரியும்ல” என்றான். எல்லாரும் சீனுவை வியப்புடன் பார்த்தனர். காமராசு தலை நிமிரவே இல்லை. ”என்னா சொல்ற சீனு?” என்றார் ஊர்த்தலைவர். பல்லக்கு வேலையை முடித்துவிட்டவர்கள் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தனர். மேளச் சத்தமும் ஓய்ந்து விட்டது. வாசலில் ஒரு பெஞ்ச் கொண்டுவது போடப்பட்டது.

    சீனு ஊர்த்தலைவரைப் பார்த்தான். “இல்லீங்கய்யா, ராசாத்திக்குத் தெரியும்; பாகம் பிரிச்சப் பத்தாவது நாளு இவ வந்தா. சரி அப்பாரு எப்படி இருக்காருன்னுப் பாக்க வந்திருக்கான்னு நெனச்சா, அம்மாக்கிட்டப் போயி ரகசியமா, ”அம்மா, எனக்கு அந்த ரெட்டைவடம் சங்கிலியைக் குடு”ன்னு கேக்கறா. அம்மா, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ போயி ஒங்கப்பாருகிட்டக் கேட்டுக்கன்னு சொல்லிட்டாங்க; நேர அப்பாருக்கிட்ட வந்தா. நானும் அப்ப கிட்ட இருக்கேன். அப்பா நல்லாவே சொல்லிட்டாங்க.

    ”ராசாத்தி, ஒனக்கு எல்லாம் வேணும்ற அளவுக்குச் செஞ்சாச்சு; அறுபது பவுனு போட்டுதான் கட்டிக் குடுத்தது. வெள்ளி சாமான்லாம் நம்ம சாதி சனங்க இவ்ளோ வாங்கியே தரமாட்டாங்கன்னு ஊரே அதிசயித்துப் போச்சு. இன்னும் மிக்சி, கிரைண்டர், மரக்கட்டிலு, மேசை, நாற்காலி, பிரிட்ஜு, மரபீரோன்னு எல்லாம் ஒரு கொறையுமில்லாம செஞ்சாச்சு; அப்பறம் ஒன் புருசன் கிளினிக்கு வைக்கப் போறார்னு ரெண்டு லட்சம் பணம் குடுத்தேன். கல்யாணத்துலப் பெரிய வண்டி வாங்கித் தரலன்னு அப்பதான் கேட்ட நீ. அதையும் வாங்கிக் குடுத்தேன். இப்ப இதைக் கேக்காத” “ஏம்பா அம்மா சங்கிலி எனக்குக் குடுக்கக்கூடாதா? அதை நீ என்னா செய்யப்போற?”

    ”என்னாவோ செஞ்சுட்டுப் போறேன்; ஆனா ஒனக்கு மட்டும் கெடையாது. இது நிச்சயம்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டதும் இவ சாமி வந்தமாதிரி ஒரு ஆட்டம் ஆடினா. அப்பா அம்மான்னு ஒரு மரியாதை இல்லாம என்னா பேச்சுப் பேசினா தெரியுமா? கடைசில என்னா சொல்லிட்டுப் போனா தெரியுமா? அந்தச் சங்கிலியை ஒன்னோடயே போட்டுப் பொதைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போனா; இல்லன்னு சொல்லச்சொல்லுங்க பாப்போம்” ராசாத்தி பேசாமல் நின்று கொண்டிருந்தாள். சீனு தொடர்ந்தான். ”அந்த சொல்லுக் கேட்டப் பத்தாம் நாளு எங்கம்மா நெஞ்சு வலி வந்து போயிட்டாங்க” சொன்னவன் அழுதுவிடுவான் போல இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.

    காமராசு எழுந்து வந்தான். “சரிடா, நீ இப்ப என்னா செய்யணும்னு சொல்ற? நாங்கள்ளாம் இல்லன்னு ஆயிடுமா? நான் கொள்ளி வைக்கத்தான் வந்திருக்கன்; தெரியும்ல” சற்று நேரம் சும்மா இருந்த சீனு, ”அண்ணே! ஊர்ப்பெரியவங்க இருக்காங்க; அவங்க சொல்லுவாங்க” என்று மெதுவாகச் சொல்ல, காமராசு தலைவரையும், நாட்டாமையையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    நாட்டாமை உரக்கக் கூறினார். “ராசு, சீனு சொன்னதெல்லாம் எங்கக்கிட்ட ஒன் அப்பாரே பல தடவை சொல்லியிருக்காரு. அதெல்லாம் உடு; நம்ம வழக்கம் தாயிக்குத்தான் தலப்புள்ள; அப்பாருக்கு எளையவன்தான்; சீனு கொள்ளி வச்சாதான் ஒன் அப்பாரு நெஞ்சு வேகும். இஷ்டமிருந்தா இருங்க; இல்லன்னா சுடுகாட்டுப் பக்கமா கெழக்கப் பாத்து உழுந்து கும்பிட்டுப் போங்க” என்றார்.

    பல்லக்கு கிளம்பி விட்டது. ஊர்வலம் புறப்பட்டு விட்டது.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 19

    பரிமேலழகர் உரைத்திறன் – 19

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

    முன்னுரை

    ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

    உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

    உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

    ‘அழுக்காறு’ – பொருள் வரையறை

    அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    ‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

    மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

    “அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்” (35)

    என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

    ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

    “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

    என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

    “எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

    என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

    “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
    பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
    அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

    என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

    அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

    மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

    “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

    என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

    “அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

    என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

    “அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

    என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

    “நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
    தேரினும் அஃதே துணை” (242)

    இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    அளவைகளாவன,

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

    பொருந்தும் ஆறாவன,

    “இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

    இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

    எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

    ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

    “அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

    “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

    இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

    “அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

    ‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

    என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

    1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
    2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
    3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

    எப்படிக் கொடுப்பது?

    ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

    “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி” (477)

    என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

    “ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

    “ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

    என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

    1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
    2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
    3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

    என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

    உடன் நிகழ்ச்சியும் உண்டு

    ‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்” (484)

    “ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

    என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

    ‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

    என்று எழுதிக் காட்டுகிறார்.

    இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

    முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

    “கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

    என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

    ‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

    நிறைவுரை

    ‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

    (தொடரும்…)

    Share