Tag: எசேக்கியல் காளியப்பன்

  • புத்தியில் தெளிகிலாரே!

    -எசேக்கியல் காளியப்பன்

    ‘கலையெலாம் நன்கு கற்றுக்
    காரியம் வெளிநாட்    டில்தான்
    நிலைபெற வாழல்’ என்னும்
    நினைப்பினைப்  பெற்றோர் பிள்ளை
    தலையிலே பதிக்கின்  றாரே!
    தமிழதற்(கு) உதவா தென்றும்
    கலைமகள்  ஒதுக்கி வைத்துக்
    காசினைப் பூசிப் பாரே!

    உற்றது பிறரும் பார்க்க
    உயர்ந்ததாய் வேண்டு மென்றே
    கற்றதின் மேலே வைத்த
    காதலா இந்தப் போக்கு?
    மற்றைய நாடு சென்று
    மங்காத செல்வம் சேர்க்கப்
    பெற்றவர் தமக்குள் கொண்ட
    பித்தமே இந்த நோக்கு!

    ‘இதந்தரும் தமிழைக் கற்றால்
    என்வரும்? இங்குள் ளோர்போல்
    பதர்களாய்  மடிவ  தற்கோ?
    பணந்தரும் வெளிநா  டெ’ன்றே
    விதந்துரை செய்து பிள்ளை
    வெளிநாடு செல்ல வைத்து
    நிதமவர் நினைப்பில் ஏங்கி
    நிம்மதி இழக்கின்  றாரே!

    மதங்களைப் போல இன்று
    மற்றொரு நாடு சென்று
    விதவித மான இன்பம்
    விரும்பிடு கின்ற  ஆசைச்
    சிதைவளர்க் கின்றார்! தங்கள்
    சிறுவரைப் பலிகொ டுப்பார்!
    புதைகுழிக் குள்ளே போகும்
    புத்தியில் தெளிகி லாரே!

     

    Share