பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், ‘மகராசர் காமராசர்’ என்ற எனது பாடலைக் கேளுங்கள். ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடி, இதற்கு இனிமையும் பெருமையும் சேர்த்துள்ளார். கர்மவீரர் நினைவைப் போற்றுவோம்.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.
மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.
இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு.
வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!
வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!