Tag: சந்திரகௌரி சிவபாலன்

  • காலந்தோறும் தமிழ்க் காதல்

    காலந்தோறும் தமிழ்க் காதல்

     -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்று காதலுக்கு அழகான வரிவடிவம் தந்திருக்கின்றார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாது வாழ்க்கை ஏது! உறவுகள் ஏது! ஏன் உலகுதான் ஏது! வாழ்க்கை வட்டத்திலே உண்மையும், அழகும், அபூர்வமும், அற்புத உணர்வும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு உண்டென்றால், அது காதலே! மனிதன், விலங்குகள், பறவைகள் உயிர்கள் அனைத்திலும் இழையோடிக் காணப்படும் இவ்வுணர்வு வாழ்க்கை முழுவதும் தேவையானதாகவும் அகற்ற முடியாததாகவும் பெற்றோரின் பாசம் போல் தொடர்ந்து வரும் உணர்வாகவும் விளங்குகின்றது. காதல் என்றவுடன் காத்திருக்காமல் நம் முன்னே தென்படும் தாஜ்மஹாலும், வடமொழிக் காதல் மீராவும், தமிழ் மொழிக்காதல் ஆண்டாளும் ஆண்டாண்டுக் காலமாகக் காதலுக்கு அடையாளங்களாகக் காணப்படுகின்றனர்.

    கல்லும், மண்ணும், கடலும், மலையும், உலோகங்களும் எனத் தொடரும் இயற்கை வனப்புக்களை அழகு செய்ய இரத்தமும் சதையும் கொண்டு உணர்வுகளுடன் நடமாடிய மனிதன் தோன்றக் காரணமான உணர்வாக இது காணப்படுகின்றது. அதனாலேயே காதல், முதலில் சங்ககாலத்தில் காமமாகவே சொல்லப்பட்டது.

    ”ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பந்துய்த்து வாழ்தல்” என்று காதல் பற்றி நச்சினார்க்கினியார் அழகான விளக்கம் தந்துள்ளார். இவ்வுணர்வினைச் சங்கப்பாடல்கள் உணர்த்திய  அளவு வேறு எக்காலத்துப் பாடல்களும் உணர்த்தவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்காலப் பாடல்களில் கூட சங்கப்பாடல்களின் தாக்கத்தினை  அதிகமாகக் காண முடியும். காதலும் வீரமும் கலந்து கிடந்த சங்ககாலத்திலே அகத்திணைப் பண்பு தழுவிய காதல் பாடல்கள் மனதுக்குள் இனிமை பயப்பனவாகக் காணப்படுகின்றன. செம்புலப்பெயல் நீரார் எனப்படும் புலவர் குறுந்தொகையில்,

    “யாயும் ஞாயும் யாராகியரோ 
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர்போல
    அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

    ”உன் தாயும் என் தாயும் யாரோ தெரியாது? எனது தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் இல்லை. ஆனால், செம்மண்ணில் மழை நீர் கலந்தால், அந்நீரும் செந்நீராய் கலத்தல் போல நம் இருவர் நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டன” எனக் காதலின் சிறப்பைப் புலவர் விளக்கும் பாங்கானது காதலுக்கு முகவரி தேவையில்லை. உறவுகள் பார்ப்பதில்லை. இரண்டு இதயங்கள் மட்டுமே போதுமானது இரண்டறக் கலப்பதற்கு என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

    குறுந்தொகையில் தலைவியின் நலத்தினைப் பாராட்டித் தலைவன் ஒரு வண்டினைப் பார்த்துக் கேட்பதாக இறையனார் படைத்திருக்கும் இப்பாடல்,

    “கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயற்
    செறி எயிற்று அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ? நீ அறியும் பூவே”

    அதாவது ”பூக்களிலே இருக்கின்ற தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற பண்புடைய அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! உண்மையைச் சொல், மயில் போன்ற மென்மையும், வரிசையான பற்களும் கொண்ட என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நறுமணம் கொண்ட பூவை நீ அறிந்ததுண்டா” என்று பாடுகின்றார். உலகின் எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அவை அத்தனையும் காதலியின் கால் தூசுக்குச் சமம் என எண்ணத் தோன்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை காதல் உணர்வுக்கு உண்டு.

    மறைவாய்க் காதலித்து, யாரும் அறியாது உடன்போக்காய் உற்றார், சுற்றம் துறந்து, வசதி வாய்ப்புக்களை உதறித் தள்ளி  காதலனே துணை, அவனன்றி வேறு எதுவுமே தேவையில்லை என்று எண்ணத் தோன்றும் உணர்வு காதலுக்கு மட்டுமே உள்ளது. இந்த உணர்வினைச் சித்தரிக்கும் ஒரு குறுந்தொகைப் பாடலினை கூடலூர் கிழார் பாடியிருக்கின்றார்.

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
    குவளையுண் கண் குய்ப்புகை கழுமத்
    தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவ னுண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

    தமை விட்டுப் பிரிந்து சென்ற மகள் தன் காதலனுடன் எப்படி வாழ்கின்றாள் என்று அறிந்து வரும் படி செவிலித் தாயிடம் கூறி நற்றாய் அவளை அனுப்புகின்றாள். அதைப் பார்த்து வந்து செவிலித்தாய் கூறிய வார்த்தைகளே இப்பாடலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ”புளித்த தயிரைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்து தாளிதம் செய்யும் போது, அது கருகி விடாது பட்டுச் சேலை முந்தானையிலே கைகளைத் துடைத்துவிட்டுத் தாளிதத்தை முறையாகச் செய்து சமைத்த உணவினைக் கணவனுக்கு இடும்போது அவனும் இனிமை, இனிமை என்று சொல்லி உண்டான்” என்று நற்றாயிடம் கூறுகின்றாள்.

    காதலனின் சுவைக்காகவும் மகிழ்வுக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய தன்மையை ஒரு பெண் காதல் வசப்படும் போது பெற்றுக் கொள்கின்றாள். இதற்காக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ சென்று கற்கவேண்டும் என்ற தேவையில்லை. நமக்குள்ளேயே சுரந்து, நமக்குள்ளேயே தொடர்ந்து, வேளை வரும்போது வெளிப்படும் இக்காதல் உணர்வு இப்பிரபஞ்சத்தின் பெருமைமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலில், காதலின் தியாகத்தை ஒர் அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்.

    “சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்றெண்ணிப்
    பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான்தன்
    கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி”

    சுனையிலே சிறிதளவு நீரேயுள்ளது. ஒரு மானே அருந்தும் அளவுள்ளது. ஆண்மான் குடிக்காது விட்டால் பெண் மான் குடிக்காது. எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல் வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது. காதலிலே விட்டுக் கொடுத்தல்கள், தியாகங்கள், அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கு அதிகமாகவே பேணப்படுகின்றன.

    பல்லவர் காலத்துத் தோன்றிய ஆண்டாள் பாடல்களில் ஒருதலைக் காதல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் சிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவம் கொண்டும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

    சோழர் காலத்தில் புகழேந்தி, செயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்றோர் காதல் சுவை மிக்க பாடல்கள் மூலம் காதல் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் புகழேந்தி நளவெண்பாவில், நளன் தமயந்தி மேல் கொண்ட காதலை அழகாக விரித்துக் காட்டியுள்ளார்.

    நாயக்கர் காலத்திலே குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர்

    வாகனைக்கண் டுருகுதையோ – ஒரு
    மயக்கமதாய் வருகுதையோ
    மோகம்என்பது இதுதானோ – இதை
    முன்னமே நான் அறியேன்! ஓ!
    ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற
    அன்னைசொல்லும் கசந்தேனே
    தாகம் அன்றிப் பூணேனே – கையில்
    சரிவளையும் காணேனே.

    எனக் காதலால் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    தற்காலக் கவிஞர்களின் அற்புதமான கவிதை வரிகள், காதலை வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. கவிஞர் மீரா தம் புதுக்கவிதை ஒன்றில்,

    “ஒருமுறை நீ என்னைப் பார்த்தாய்
    நெஞ்சில் முள் குத்தியத
    முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்        
    மீண்டும் ஒருமுறை என்னைப் பார்”

    என்கிறார். கற்றறியாத பாமரர்கள் கூட நாட்டுப் பாடல்கள் மூலமாகத் தமது காதலை வெளிப்படுத்தியிருக்கின்ற பாங்கு, ரசித்து இன்புற வைப்பதுடன் இளைஞர்கள் உள்ளத்தில் காதல் என்னும் பயிருக்கு விதை ஊன்றுவதாக உள்ளன.

    “கண்டாங்கி பொடவை கட்டிக்
    கைநிறையக் கொசுவம் வச்சு         
    இடுப்பில சொருகிறியே முனியம்மா – அது        
    கொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா”

    முண்டாசுக்கவி பாரதி கூட,

    ”காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்” 

    என்கிறார். ஆனால், மனிதர் தோன்றியது தொடங்கி, தொடர்ந்து வரும் காதலுக்கு எதிர்ப்புகளும் தொடர்வது இயற்கையே. மரபு, கலாச்சாரம், சாதி, மதம் என மனிதனால் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டுக் கோப்புக்கள் காதலுக்குத் தடை போடுகின்றன. முறை தவறிய காதலால் தமது வாரிசுகள் வாழ்க்கை முறை தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இயல்பாகவே தோன்றுகின்ற மகிழ்ச்சியை இடையிலே முறிக்க முயற்சிக்கின்றனர்.

    நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
    பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்றார்
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

    என்று தற்போதைய நிலமையினை மகாகவி பாரதியார் தன் பாடல் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    பகட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது. எனவே காதல் செய்வீர்! காதல் செய்வீர்! காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்!

    Share
  • சுதர்மம்

    சுதர்மம்

    -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ஆண்டவன் சிருஷ்டியின் அற்பதப் படைப்பு மனிதன். இறைவன் மனிதன் கையில் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு அமைதி காணுகின்றான். இப் பொறுப்புக்களில் ஒன்று உன்னத பண்பாகிய நன்மை செய்தல். நன்மை செய்தல் என்ற பதத்தினுள் அடங்கும் உதவி என்ற பதத்திற்குள் உள் நுழைவோம். கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும் கொடையும் உதவியே. ‘உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கு இடுக்கண் களைவதும்”உதவியே

    வாழ்க்கையிலே நிம்மதி இழந்து, உறவுகளைப் பறி கொடுத்து, அல்லல்பட்டு அடைக்கலம் எனப் புகுந்தவர்களை அந்நியநாடு, அன்புக்கரம் கொடுத்து ஆதரவு தந்து அடிப்படை தேவைகள் மட்டுமன்றி ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. சொந்தமா? பந்தமா? சொல்லிக் கொள்ளும் நட்பா? யாரென்று தெரியாத ஒரு அந்நியனை தன் உடன்பிறப்புப் போல் நினைத்து உதவுகின்றது. இங்குதான் உதவியின் உண்மைத் தன்மையை நாம் அடையாளம் காணமுடிகின்றது. இனவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு என மனிதனை மனிதனே பங்கு போட்டுக் கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒரு எடுத்துக்காட்டாக நாம் புகுந்த மனை விளங்குகின்றது. அதைப் போற்றிப் பாடாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டியது எமது கடமை.

    உதவி பற்றி நாம் விரிவாக நோக்குவோமேயானால், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய பொதுமறை திருக்குறள் தந்த தெய்வப்புலவர், திருவள்ளுவர் தான் அநுபவித்து உதிர்த்த வார்த்தைகளான,

    “உதவி வரைத்தன்று உதவி உதவி
    செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”

    என்ற குறளை எடுத்து நோக்கினால், உதவியைப் பெறுபவர்க்கு நாம் செய்யும் உதவி எந்த அளவிற்கு பயன்படுகின்றதோ. அந்த அளவே உதவியின் அளவு அமையும். என்பதே அதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். நாம் உதவியை யாருக்குச் செய்கின்றோம் என்பது முதலில் அறியப்படல் வேண்டும். அதாவது “பாத்திரம் அறிந்து பிச்சை போடு”என்ற பழமொழியோடு இக்கருத்து ஒன்றி நிற்கின்றது. பசித்தவனுக்கு உணவு பரிமாறப்படல் வேண்டும். எனக்குப் பசியில்லை என்று கூறும் விருந்தாளியை நோக்கி இதுதான் சுதர்மம் என்று கூறி வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது எந்தவகையில் நியாயமாகப்படும். கேட்டோமா? கொடுத்தார், பெற்றோம் என்று அவர் கூறும் நிலைதான் ஏற்படும். அவன் சால்பின் வரைத்துத்தானே உதவி அமைதல் வேண்டும். பழங்கள் இருக்கும் வரை பழமரத்தைப் பறவைகள் அண்மிப்பது போல ஒட்டி உறவாடிய சொந்தங்கள், வெறுமையாக வழியிழந்து நிற்கும் போது விட்டு விலகிவிடும். இது நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துக்களே உலகுக்கு ஏற்ற பொதுமொழியாக அமைகின்றன. மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது அட்சயபாத்திரம் அல்லவே, கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் இருக்க. எனவே ‘தனக்குண்டு தானம் வழங்கு”என்பதும் சுயபுத்தி கொண்டு சுயமாகச் சிந்திக்க வேண்டியதுதான். ஆனாலும், மனிதன் கர்மம் செய்யப் பிறந்தவன். ஏதோ ஒருவகையில் அவன் கர்மம் செய்தேயாக வேண்டும் என பகவத்கீதை கூறுகின்றது. தனது மகனுக்காவது ஒரு மனிதன் கருமம் செய்திருப்பான். எனவேதான் இறுதிமரியாதையில் மகன் அவனுக்குக் கர்மம் செய்கின்றான் என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கியுள்ளார். கர்மம் செய். பலனை எதிர்பாராதே என பகவத்கீதை கூறுவது போல் ஒளவையும்

    ‘நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கொல்? என வேண்டா – நின்று
    தளரா வளர் தெங்குதாள் உண்ட நீரைத்
    தலையாலே தான் தருதலால்”

    என்று தன வாக்குண்டாம் என்றும் நூலில் கூறியிருக்கின்றார். அதாவது அடியிலேயிருந்து வேர் மூலமாகக் குடித்த நீரை இளநீராகத் திரும்பவும் தென்னைமரம் தருவதனால், அதேபோல் ஒருவருக்கு நன்றி செய்தால் அந்த உதவிக்கு எப்பொழுது பதில் உதவி புரிவாரோ என்று நினைக்க வேண்டியதில்லை.

    உதவி பற்றிக் கீதையும் வள்ளுவமும் முரண்பட்டு நிற்பது போல் தோன்றினாலும் வள்ளுவம் கூறுவது, நீங்கள் செய்யும் உதவியின் பயன் அதனைப் பெற்றுக் கொள்ளுபவனின் மனதைப் பொறுத்தது. என்பது மட்டுமே. அந்தப் பலனைத்தான் எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கின்றது. வள்ளுவம் கூட பலனை எதிர்பார் என்று கூறவில்லை. பலனானது உதவி பெற்றுக்கொள்பவர் மனதைப் பொறுத்தே அமையும் என்கிறது. இந்துமதத்தின் அடிப்படை பகவத்கீதை. பகவான் கிருஷ்ணபரமாத்மா மூலம் இறைவாக்காக அருளப்பட்டது. கீதையைத் தலைமேற்கொண்டால், ‘உன்னுடைய கர்மம் நன்மை செய்வதாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் செய் அதுவே சுதர்மம்|| என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதை அடிப்படை வித்தாக மனதிலே ஆழமாகப் பதிக்க வேண்டும். நன்மை செய்வதாக இருந்தால், சொந்தமோ, பந்தமோ, உறவோ, பகையோ, யாருக்கு வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இதனையே ஒளவைப்பிராட்டியும்

     ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
      உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
      மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
      அம் மருந்து போல் வாரும் உண்டு”

    என்கிறார். உடன்பிறப்பு, சுற்றம் என்று உன் கவனத்தைக் குறுக்கி விடாதே. உறவினர்கள் தான் நன்மை செய்வார்கள் என்றிருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மருந்து உன் நோயைத் தீர்க்கின்றது. அந்த மருந்து போன்ற அந்நியர்களும் உதவிக்கு வருவார்கள் என்று அழகாகச் சொல்லியிருக்கின்றார். அதனால் எமது பார்வையானது விரிய வேண்டும். அகலக்கண் கொண்டு பார்க்க வேண்டும்.

    எனவே ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” “முடிவு இறைவன் கையில் இருக்கின்றது. நீ வெறுமனே செயற்படு” என்னும் வாக்கியங்களை அகங் கொண்டு ஆட்டி வைப்பவன் இருக்கின்றான். ஆவதைப் பார்ப்போம். எனத் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். நாம் பெற்ற உதவிகளை மனதில் பதித்திருக்கும் என மனந்தெளிவோம். ஒரு கரம் வழங்க மறுகரம் அறியாதிருக்கும் எனத் தொழிற்படுவோம்.

    Share
  • சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்

    -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)

    காலங்காலமாய் விரைகின்ற பொழுதுகளிலே சில அற்புதமான அவதாரங்கள் தோன்றித் துளங்கி மறைந்து போகின்றனர். ஆனால், காலம் காலமாய் அவர்கள் ஆற்றிய சேவைகள் அவர்களை இறவாப் பேறு பெற்ற பெரியார்களாக உலக அரங்கிலே வாழ வைக்கின்றன. மகத்தான மக்கட் பிறப்பிலே இறைவனால், பார்த்துப் பார்த்து நுண்ணறிவை ஊட்டிப் படைக்கப்பட்ட படைப்புக்களே கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் போன்ற துறவிகள்.

                    அறிவுப்பசி மட்டுமன்றி அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, சாதிமத பேதமின்றி ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, சமூகத்துறவியாக, சமூகச்சீர்திருத்தவாதியாக, சமயம், மொழி, கல்வி, கலை என ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேயே பல பக்க சாதனைகள் புரிந்து,  வாழ்ந்து உலக வாழ்க்கையைத் துறந்த அடிகளார் அவர்களின் வாழ்க்கையும், அதற்கான சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்தமையும், அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டமையும், கற்றதைக் கொண்டு தன்னை விளங்கச் செய்தமையும், காலம் காலமாய் அழியாப் புகழை தேடிக் கொண்டமையும் ஆச்சரியத்தில் ஆற்றும் விடயங்களாகக் காணப்படுகின்றன. கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு பிரமாண்டமாக என் மனக்கண்ணில் தோன்றுகின்றார்.

                    தமிழர்களுக்கு விபுலானந்த அடிகளார் அடையாளம் என்றால், விபுலானந்த அடிகளாருக்கு மட்டக்களப்பு மண் அடையாளமாகக் காணப்படுகின்றது. திருகோணமலை, அம்பாறை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட மீன்பாடும் தேனாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலே காரைதீவு என்னும் பிரதேசத்திலேயே அடிகளார் அவதரித்தார். கிழக்குத் திசையிலே வங்கக்கடல் காட்சியளிக்க மேற்குத் திசையிலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகள் பச்சைப்பசேலென்று படர்ந்து காணப்பட தென்றல் இசையெழுப்பும் தென்னைமரச் சோலைகளும், அல்லி, ஆம்பல், கலைமகள் வீற்றிருக்கும் கண்கவரும் தாமரைகள், இதழ் விரிந்து அழைத்திருக்கும் அழகுத் தடாகங்கள், மா,பலா, கமுகுத் தோட்டங்களும் அமையப்பெற்று காரைதீவு மகள் காட்சியளிப்பார். இயற்கை எழில் பொங்கும், இயல்பாகவே கவித்துவத்தை ஊட்டுகின்ற நிலம் அடிகளாரின் இயல், இசை அறிவுக்கு அடித்தளமிட்டது.

    இதனையே கவிஞர் பரஹம்ஸதாசர் ~~கமுகு, மா, கதலி தென்னை, கன்னல் நெற் தென்னலொடு திமு திமுவெனச் செழுந்தமிழ் வளரச் செய்யும் அமைதி காரேறு தீவு அம்புவிக்கும் உவந்தளித்த தமிழ்மணி விபுலானந்தன் என்று பாராட்டுகின்றார்.

                    அடிகளார் அவர்களுக்குத் தம்பிப்பிள்ளை என்னும் நாமத்தையே பெற்றோர் சூட்டினர். இளமையில் நோய்வாய்ப்பட்டதனால் கதிர்காமம் கொண்டு சென்று அவருக்கு மயில்வாகனன் என்னும் நாமம் சூட்டப்பட்டது. எப்பொழுதும் சாந்தமாகவே காணப்படும் இவரை, மயில்குஞ்சு என்று இளமையிலே அனைவரும் அன்புடன் அழைப்பார்கள். 1922 ல் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருந்த இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து பிரபோதசைதன்யர் என்னும் பிரமச்சரிய ஆச்சிரமப் பெயர் சூட்டப்பட்டார்.  1924 ஆம் ஆண்டு பௌர்ணமி சித்திரை தீட்சையின் பின்பே விபுலானந்த அடிகளார் என்னும் நாமம் சூட்டப்பட்டது. விபுலம் என்றால், அறிவு. ஆனந்தம் என்றால், மகிழ்விப்பவர். அறிவினால் உலகை மகிழ்விப்பவர் என்னும் அதி அற்புதமான கருத்தமைந்த பொருத்தமான பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. இவர் குணம் நாடி, குறிப்பிட்ட நாமங்கள் அவரை வந்து அமைந்தாலும் காரணப் பெயராக அமையும் விபுலானந்த அடிகளார் என்னும் நாமமே உலகலாவிய ரீதியில் நின்று நிலைக்கின்றது.

                       ஒருமுறைதான் படிப்பார் உள்ளத்தில் பதித்துவிடுவார். இவர் அறிவுத் திறமை மேலும் வெளிப்பட இவரின் தந்தையார் சாமித்தம்பி அவர்கள் வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரியபுராணவசனம், பஞ்சதந்திரம், வினோதரசமஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிகாண்டம், முதலிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தந்தையாரால் தரப்பட்டது. நுனிப்புல் மேய்வது போலன்றி ஒவ்வொன்றையும் முழுவதுமாகக் கற்றாலன்றி மற்றைய நூல் தரப்படமாட்டாது. துறைபோக ஒன்று கற்றதன் பின்பே மற்றைய நூல் தரப்படும் என்னும் தந்தையாரின் கட்டளையின் படியே தான் கற்றதாக அடிகளார் கூறியுள்ளார். பொறுப்பான தந்தை அமையப்பெற்றதும் அடிகளாருக்கு ஆரோக்கியமாகவே பட்டது. அவர் வழிகாட்டலில் கற்றகல்வி நுண்மாண் நுழைபுலம் போல் அறிவுடையவராக்கியது.

                       இவர் வடமொழி, இலத்தின், கிரேக்கம், பாளி, சிங்களம், ஆங்கிலம், வங்காளம், அரபு ஆகிய மொழிகளில் கொண்ட ஆழ்ந்த அறிவே ஏனைய இலக்கியங்களுடன் தமிழ்மொழியை ஒப்பிட்டுத் தமிழின் இன்பம் நுகரக்கூடியதாக இருந்ததுடன் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் ஒன்றாகவே ஆய்வுசெய்த முதல் வித்தகராகவும் திகழக்கூடியதாகவும் இருந்தது.

    கிரேக்க இலக்கியங்களை ஒப்பிட்டு சிறப்பான நூல்கள் எழுதியுள்ளார். மதங்கசூளாமணி என்னும் நூல் தமிழ் நாடகம் பற்றிய ஆய்வுப் பெட்டகமாகத் திகழ்கின்றது. தரங்கயனாரின் தசரூபத என்னும் வடமொழி நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வடமொழி நாடகம் எப்படி இருக்கவேண்டுமென்று  அதிலுள்ள எடுத்துக்காட்டியல் என்னும் பகுதியில் விளக்கியுள்ளார். செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு மேற்கு நாட்டு நாடகங்களில் நாடக உறுப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகின்றார். இவ்வாறு செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு தமிழ் நாடகங்களுடன் ஆய்வு செய்ய இவருக்கு ஆங்கில அறிவு மேம்பட்டுக் காணப்பட்டது. இவ்வாறு ஆங்கில அறிவு மேம்பட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி என்னும் ஆங்கிலப் பாடசாலை மெதடிஸ்த மிஷனரிமாரும் கத்தோலிக்கக் குருமாரும் அடியெடுத்துக் கொடுத்தனர். காலைப்பொழுது பாடசாலைப் பாடங்கள், மாலைப்பொழுது பாரத வசனங்கள் கற்பது என பழகிய பழக்கமானது பின் நாளில் தமிழும் ஆங்கிலமும் ஒன்றாகக் கற்க இலகுவாக இருந்தது. அதேபோல் கணிதத்தை இவர் புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இருந்த பிரெஞ்சு அதிபர் வண.பொனல் என்பவரிடம் கற்றார். இது இவரது கணிதத்திறமைக்கு அடிகோலாக அமைந்ததுடன், யாழ்நூல் ஆராய்ச்சிக்குக் கணிதத் திறமையும் காரணமாக அமைந்தது.

                     இசைமேல் ஆர்வம் தோன்ற மட்டக்களப்பு வாவியிலே பூரணநிலவு பொங்கிப் பூரிக்கும் பொழுதினிலே அங்கு பொங்கி எழும் நீரரமகளிர் காந்தர்வ இசையில் களிப்புற ஆழக்கடல் நோக்கி வாவியிலே பயணம் செய்வார். அவ்விசை கேட்டு மகிழ்ந்தின்புறுவார்.

    அதனை அடிகளார் வர்ணிக்கும் பாங்கை நோக்குவோம்

    அஞ்சியிறை புள்ளொலியும் ஆன்கன்றும் கழுத்தில்
    அணிமணியின் இன்னொலியும் அடங்கியபின் நகரார்
    பஞ்சியைந்த அணிசேரும் இடையாமப் பொழுதில்
    பாணனொடும் தோணியிசை படர்ந்திரனோர் புலவன்
    தேனிலவு மலர்பொழில் சிறைவந்து துயில
    செழுந்தரங்கத் தீம்புனலில் நண்டினங்கள் துயில
    மீனலவன் சிலவந்து விண்ணிலவன் துயில
    விளங்கு மட்டு நீர்நிலையில் எழுந்ததொரு நாதம்

    அதுபோல், ஆண்டுதோறும் ஆனித்திங்களிலே மட்டக்களப்பு மாநிலமெங்கும் காணப்படும் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும் சிலப்பதிகார பாடல்களின் சிலம்பொலிகளும் விபுலானந்த அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்கு அடிமனது ஆரம்பக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.   விஞ்ஞானத்தையும் தமிழையும் ஒன்றாகக் காணும் திறமை அடிகளார்க்கு இருந்ததனால்,  கணிதம், பௌதிக விஞ்ஞானம், தமிழ் இசை அறிவு கலந்து இவர் யாத்து, 1947ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட யாழ்நூலானது அரங்கேறக் காரணம் பற்றி அவரே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். ~~எந்த நூலை வாசித்தாலும் தேனாகத் தித்திக்கவில்லை சிலப்பதிகாரமே தேனாகத் தித்தித்தது|| எனத் தன் வாயாலேயே எடுத்துரைத்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையை ஆராய்ந்தார். சிலப்பதிகாரத்தின் உரையில்லாத பகுதிகளுக்கு உரைதேடப் புகுந்த ஆராய்ச்சியின் பயனும், மாதவியும் கோவலனும் கடற்கரையிலே இருந்து மாறிமாறி மீட்டிய யாழ் இசையும் இவர் கருத்தைக் கவர்ந்தது. இவ் யாழை யாம் ஏன் மீண்டும் பெற முடியாது என்று சிந்தித்தார். வங்கக்கடலன்னை கொண்டு சென்ற முளரியாழ், சுருதிவீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டிவீணை, போன்றவற்றை அடிகளார் பழந்தமிழ் நூல்களில் கற்றவற்றைக் கொண்டு மீண்டும் 23 ஆண்டுகள் உழைத்து உலகிற்கு செய்தளித்தமை கண்டு இசைத்தமிழ் அன்னை ஆச்சரியத்தில் அகலக்கண் விரித்தாள்.

                 யாழ் கருவியை பெண்ணின் 7 வகைப் பருவத்துடன் ஒப்பிட்டு அடிகளார் வர்ணித்திருக்கும் பாங்கு இன்புறத்தக்கது. ~~சரித்திரகால எல்லைக்கெட்டாத காலத்திலே வில் யாழெனக் குழவியாயுதித்து மழலைச்சொற்பேசி சீறியாழ் என்னும் பேதைப் பருவமெய்தி, பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன்சொல் கூறிப் பின் பேரியாழ் என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப் பெரும் பாணரோடு சென்று குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடைவள்ளல்களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரைபகர்ந்து அதன்பின் மங்கைப்பருவமெய்தி அப்பருவத்திற்கேற்ப புதிய ஆடையும் அணிகலன்களும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப் பருவம் வந்தெய்தலும், திருநீலகண்ட பெரும்பாணரோடும், மதங்கசூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம் வந்து தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் வித்தகராற் பாராட்டப்பட்டு அரிவைப் பருவம் வந்து எய்துதலும் அரசிளங்குமரிகளுக்கு  இன்னுயிர்ப் பாங்காகி அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்துச் சீரும் சிறப்பும் எய்தி இன்று யாழ் என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்|| என்று எடுத்துரைத்தார். மீண்டும் உயிர் பெற வைத்தார்.

               அடிகளாரின் சமூகசேவைக்கு வாலிபப் பருவத்தில் அவர் பயின்ற படைப்பயிற்சி உரமெடுத்துக் கொடுத்தது. ஐரோப்பிய மகாயுத்த காலத்திலே தரைப்படையில் சேர்ந்து குதிரையேற்றம், துப்பாக்கிப் பிரயோகம், முதலிய படைப்பயிற்சிகள் பெற்றார். கடற்;கரையில் காவல் இருந்து எதிரிகளை நாட்டுக்குள் புகவிடாமல் காத்தார். சமூகத்தொண்டு தீண்டாமை ஒழிப்பு, சமயத்தொண்டு இவை எல்லாம் இவரை ஒரு வீரத் துறவியாகவே காட்டுகிறன.

                     யோக சுவாமிகளின் தொடர்பே இவருக்கு ஆன்மீக வளர்ச்சிக்குத் துணையாகத் திகழ்ந்தது.

                    பாரதிமேல் கொண்ட தீராத நாட்டம், தமிழை நவீனப்படுத்தும் பண்பு, ஒப்பியல் கல்வி இவையே பாரதியை உலகுக்கு வெளிப்படுத்த உதவியாக இருந்தன. பாரதியைப் பித்தன் என்றும், கஞ்சாக்கவி என்றும், அவர் பாடல்கள் வீண் உரைநடையென்றும், தூற்றிய தமிழறிஞர்களைக்  கற்றறிந்தார் ஏற்றுவது கலித்தொகை மட்டுமன்று கண்ணன் பாட்டுமே என்று கூறிப் புரியவைத்தவர் விபுலானந்த அடிகளாரே என்பது வெள்ளிடைமலை. “தமிழர்களின் பண்பாட்டை பாரதியார் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும்|| என்று பாரதியைப் பெருமைப்படுத்தினார். பாரதி பெருமையை உலகுக்குணர்த்த முதற்காரணம் அடிகளார் என்றால், அது மிகையில்லை. இது மறைக்கப்பட்ட உண்மையுமாகின்றது.

                    அடிகளார் தமிழிசை  சம்பந்தமாக நிகழ்த்திய சொற்பொழிவுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இப்பொழுது நூல்களாக வெளிவந்துள்ளன. எதையும் ஆழ்ந்து நோக்கும் அவர் சிறப்பை நடராசவடிவம் என்னும் நூல் விளக்குகின்றது. ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கிலமொழிக் கவிநயத்தை எடுத்துக்காட்டக் கருதி எழுதப்பட்ட பாட்டுடை உரைத்தொடரே ஆங்கிலவாணி என்னும் கட்டுரையாகும். அடிகளாரின் கற்பனை வளத்தினையும், கவித்துவத்தினையும் அவரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள், தில்லைமாநகர் திருவமர்மார்பன் திருக்கோயிற்காட்சி,  கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர் இன்னிசைப்பாடல், மொழிபெயர்ப்புப் பாடல்கள் போன்றன மெய்ப்பிக்கின்றன.

                 முத்தமிழ் வித்தகர், சென்னை இராமகிருஸ்ண மடத்துறவி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல் பேராசிரியர், கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் தமிழவேள் உமாமகேஸ்வரனாரின் ஆருயிர்த் தோழர், பன்மொழிப் புலமையாளர் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகும் அறிவுஞானம் பெற்ற அடிகளாரின் நினைவுநாளை இலங்கைஅரசு அகில இலங்கை தமிழ்மொழி தினமாக பிரகடனப்படுத்தி கௌரவித்தது என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல.

                    முற்றுமுழுதான அறிவுத் திறனும், அயராத உழைப்பும் தமிழ், இலக்கியம், சமயம், கலை, சமூக நாட்டுப்பணிகளும் இவர் உள்ளத்தில் ஊற்றாய் ஊறிக்கொண்டிருந்தமையே இறவாப்புகழ் பெற்று என்றும் உலகமெலாம் போற்றப்படும் உத்தம துறவியாக, வித்தகராக, அடிகளார் திகழ்வதற்கு காரணமாகின்றன. கலியுக அகத்தியர், புதுமைக்கபிலன், குருபரம்பரையின் குலவிளக்கு, வீரத்துறவி இவ்வாறாக அறிஞர்களால் போற்றப்படும் அடிகளார் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்னும் போது எனக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கின்றது.

    சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
    B.A. Dip.in.EDu (Cey)
    சோலிங்கன்
    ஜேர்மனி

    Share