Tag: சுபாஷிணி டிரெம்மல்

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 51

    முனைவர்.சுபாஷிணி

    ஆதிகலாமணி எகிப்து கோயில், மட்ரிட், ஸ்பெயின்

    ஸ்பெயின் நகரின் தலைநகரமான மட்ரிட் நகரில் பணி நிமித்தமாக 18 மாதங்கள் ஒவ்வொரு வாரமும் செல்லும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. ஜூலை மாதம் 2012 தொடங்கி 2014 இறுதி வரை இப்படி ஒவ்வொரு வாரமும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சமயங்களில் மாலை வேளைகளில் கிடைக்கும் நேரத்தில் நான் எனது தங்கும் விடுதிக்கு அருகாமையில் நடைப்பயணம் செல்வதுண்டு. அப்படி செல்லும் போது அடிக்கடி நான் கண்டு தரிசித்த ஒரு கோயில் ஆதிகலாமணி கோயில்.

    asu

    கோயிலின் முன் வாசல் தோற்றம்

    ஆதிகலாமணி கோயிலா..?
    ஸ்பெயின் தலைநகரமான மட்ரிட் நகரிலா?
    இது தமிழ்ப்பெயராக இருக்கிறதே?
    இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் கட்டிய கோயிலாக இருக்குமோ என்ற சிந்தனை உங்களுக்கு வரலாம்.

    இக்கோயிலைச் சென்றடைந்து அதன் முகப்புப் பகுதியில் உள்ள கோயில் பெயர், கட்டிய ஆண்டு ஆகியன பற்றி அறிந்து கொள்ள விபரங்களை நான் வாசித்த போது ஆச்சரியத்தில் அதிசயித்துப் போனேன், இந்த ஆதிகலாமணி கோயில் என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயரைப் பார்த்து. பெயர் நமக்கு தமிழ்ப்பெயரை நினைவுறுத்தினாலும் இது தமிழர்கள் கட்டிய கோயில் அல்ல. தமிழகத்தில் கட்டிய கோயிலுமல்ல? பிறகு எங்கே யாரால் கட்டப்பட்டதாக இருக்கும் என்ற ஐயம் எழுகின்றதல்லாவா? அதே ஆவல் தான் எனக்கும் எழுந்தது. அதனை அறிந்து கொள்ள கோயிலே அருங்காட்சியமாக இருக்கும் இக்கோயிலுக்குள் சென்றேன்.

    இது எகிப்து நாட்டில் கட்டப்பட்ட கோயில். எகிப்து நாட்டின் தெற்குப் பகுதியில் அதாவது சூடான் எல்லைக்கு மேலே ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் அஸ்வான் ஏரி என்ற ஒரு மாபெரும் கடலை ஒத்த ஏரியின் பெயரை கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கோயில் தான் இது.

    என்ன புதிராக இருக்கின்றதே.. இருந்த கோயில் என்று சொல்கின்றேனே என்ற ஆச்சரியம் உங்களுக்கு எழலாம். ஆம். இது அங்கே இருந்த ஒரு கோயில் தான். முழுமையாக எகிப்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டு ஸ்பெயின் நாட்டின் தலைநகராம் மட்ரிட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றதா..? வாருங்கள் ஆலயத்தின் உள்ளே சென்று மேலும் பல விபரங்களை அறிவோம்.

    இக்கோயில் ஐசிஸ் எனப்படும் தாய்தெய்வத்திற்காக உருவாக்கப்பட்ட நைல் நதிக்கரை ஓரத்து வளாகத்தில் ஆமூன் என்ற கடவுளுக்காக பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட கோயில். இது கட்டப்பட்ட காலம் கி.மு 2ம் நூற்றாண்டு. இதனைக் கட்டியவர் தாம் ஆதிகலாமணி [Adikhalamani (Tabriqo)] என்ற குஷைட் பகுதியின் அரசர். ஆதிகலாமணி இக்கோயிலை முதலில் கட்டினாலும் இதனை சிறிது சிறிதாக விரிவாக்கியவர்கள் 4ம் தாலமி, 8ம் தாலமி, 12ம் தாலமி ஆகிய கிரேக்க அரசர்கள். பிறகு எகிப்து ரோமானிய அரசின் ஆட்சிக்குட்பட வேளையில் இதே கோயிலை மேலும் விரிவாக்கினர் மன்னன் ஆகஸ்டஸும் மன்னன் டிபேரியஸும்.

    மன்னன் ஆதிகலாமணி ஹார்ப்போக்ரெட்டஸ் வாட்ஜே ஆகிய கடவுளர்களுக்கு நைவேத்தியம் அளிக்கும் காட்சி மேலே கோயிலின் உள்ளே கல்வெட்டாக, கீழே வரை படமாக.

    asu1

    asu2

    1960ம் ஆண்டு எகிப்தின் விவசாயத்தை வளமாக்க அஸ்வான் ஏரிப்பகுதியில் அணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அஸ்வான் பகுதி எகிப்தை பொருத்த வரை மிகப் பிரமாண்டமான பல கோயில்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களையும் கொண்டிருக்கும் பகுதி. ஆக இங்கே இருந்த ஏரியைப் பெரிதாக்கி அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது யுனெஸ்கோ இந்தப் பகுதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கவும், எகிப்திற்கே நீர்வளத்தைப் பெருக்கும் அணையைக் கட்டவும் உதவ கரம் கொடுக்கக்கோரி உலக நாடுகளுக்கு விண்ணப்பம் வைத்தது.

    அப்போது ஸ்பெயின் நாடு எகிப்தில் இருக்கு உலகப் பிரசித்தி பெற்ற அபு சிம்பெல் கோயிலை பெயர்த்து எடுத்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கே வைத்து எழுப்பி அதனை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு செய்து காட்டியது. எகிப்தின் மிகச்சிறந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கி.மு.13ம் நூற்றாண்டு எகிப்திய பண்டைய கோயில் அபு சிம்பல்.

    ஆக, இந்த மாபெரும் உதவியைச் செய்த ஸ்பெயின் நாட்டிற்கு தமது நன்றியை செலுத்தும் முகமாக தனது கோயில்களில் ஒன்றை எகிப்து நாடு ஸ்பெயின் நாட்டிற்கு வழங்கியது. அது தான் Temple of Debod என அழைக்கப்படும் இந்த ஆமூன் கடவுளுக்காக ஆதிகலாமணி அரசன் கட்டிய கோயில்.

    எங்கோ ஒரு மன்னன் கட்டிய கோயில், எங்கோ ஒரு நாட்டில் முழுதாக கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பு  தரக்கூடிய ஒரு விசயம் அல்லவா?

    asu3

    ​கோயிலின் கர்ப்பக்கிருகம்

    டெபோட் என்னும் கிராமத்தில் ஆதியில் இக்கோயில் இருந்ததால்  இங்கே மட்ரிட் நகரிலும் இந்தக் கோயில் அதே பெயருடன் அழைக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே சென்றால் ஒரு பக்கத்தில் ஆமூன் ரா வின் கர்ப்பக்கிரகப் பகுதி அமைந்திருப்பதைக் காண்போம். அடித்தளம் சென்றால் இக்கோயிலின் அருங்காட்சியகத்தைக் காண்போம். இந்த அருங்காட்சியகத்தில் முதலில் இக்கோயில் இருந்த அஸ்வான் நகரப் பகுதிகள், அங்கிருந்து எவ்வாறு இக்கோயில் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டது, விமானத்தில் எவ்வாறு இக்கோயிலின் முழு பகுதியும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன ஆகியன தொடர்பான எல்லாத் தகவல்களும் புகைப்படங்களும் விளக்கங்களுமாக வழங்கப்பட்டுள்ளன.

    asu7

    கடவுள் ஆமூன் – லேசர் வெளிச்சமாக

    மட்ரிட் நகரில் இக்கோயில் இருக்கும் இடத்தின் முகவரி Ferraz, 1 28008 Madrid, Parque del Cuartel de la Montaña
    இக்கோயிலைச் சென்று காணவும் உள்ளே உள்ள அருங்காட்சியகம் செல்லவும் கட்டணம் ஏதும் தேவையில்லை.

    asu5

    கோயில் நுழை வாயில் பகுதி

    நான் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் மாலையில் இக்கோயில் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்கும் விடுதியில் தங்கியிருந்தமையால் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு நடக்கச் செல்வேன். கோயிலின் அழகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சூரிய வெளிச்சத்தின் நிலைக்கேற்ப தென்படும். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இக்கோயிலின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இக்கோயில் என்ன முதலில் ஈர்த்தமைக்குக் காரணம் இதனைக் கட்டிய அரசன் ஆதிகலாமணியின் பெயர்தான். தமிழ் பெயர் போல ஒலிக்கின்றதே என யோசித்துத் தான் உள்ளே சென்று பார்த்தேன். மேலும் எகிப்தின் தெற்கு பகுதியின் வரலாற்று விபரங்களை அறிந்து கொள்ள முனைந்து நூல்களை வாசிக்க முனைந்த போதும், இணையத்தில் மேலும் என் ஆய்வுகளை மாலை வேளைகளில் தொடர்ந்த போதும் எகிப்தின் எல்லைப் பகுதி நாடான சூடானுக்கும் அதன் அருகே இருக்கும் எத்தியோப்பிய நாட்டிற்கும் தமிழ் இன மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்தேன்.

    2007ம்  ஆண்டில் 16 நாட்கள் பயணமாக எகிப்து சென்று 7 நாட்கள் நைல் நதியில் பயணித்து சூடான் வரை சென்றேன். அங்கே செல்லும்போது என்னைப் பார்த்த உள்ளூர் எகிப்திய மக்கள் பலர் என்னைப் பார்த்து நான் நூபியனா என்று வினவினார்கள். காரணம் எனது உடல் தோற்றம் கண்கள் ஆகியவை சூடானிய, எகிப்திய எத்தியோப்பிய மக்களின் சாயலை ஒத்ததாக அவர்கள் கருதியதுதான்.

    asu6

    ​2007ம் ஆண்டு என் எகிப்து பயணத்தில் கைரோவில் சியோப் ப்ரமிட்டின் முன்பகுதியில்

    எகிப்தின் பண்டைய இறை வழிபாடு, தெய்வ உருவங்கள் ஆகியன பற்றி நான் ஆராய முனைந்தபோது குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. என் எண்ணப்படி பண்டைய எகிப்து, சூடான், எத்தியோப்பிய நாடுகளிலிருந்து வந்த மக்களில் பலர் இன்றைய தமிழக நிலப்பரப்பிற்கு குடியேறி இருக்கலாம். இதனை மேலும் வலுவாக்கும் வகையில் தமிழகத்தில் திருமயம் போன்ற பகுதிகளில் கிடைக்கின்ற பாறை ஓவியங்கள் அமைகின்றன. 2007ம் ஆண்டில் நான் எகிப்தின் லுக்ஸூர், மற்றும் ஏனைய பகுதி ஆலயங்களில் பார்த்த சில பண்டைய எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களுக்கு ஒத்ததான உருவங்களை தமிழகத்தின் காரைக்குடிக்கு அருகாமையில் இருக்கும் திருமயம் நகரில் உள்ள பாறைகளில் ஓவியங்களாக நான் எனது தமிழகத்திற்கான 2012ம் ஆண்டு பயணத்தில் கண்டு வியப்புற்றேன். இது என்ன இப்படி ஒரு ஒற்றுமை என என்னை திகைக்க வைத்தன அந்த உருவங்கள்.

    எகிப்து, சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கும் இன்றைய தமிழகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய வேண்டியது வரலாற்று ஆய்வுப் பணிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று ஆய்வுத்துறையும் தமிழ்த்துறையும் இணைந்து இவ்வகையான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வகையில் ஆய்வுகள் தொடங்கப்படும் போது இந்த இரு வேறு நிலப்பகுதிகளுக்கும் இடையிலான மொழி, பண்பாட்டு, இறையியல் கூறுகளின் ஒற்றுமைகள் அறியப்பட நிறைய வாய்ப்புகள்  உள்ளன.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 50 (3)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா 

    சுபாஷிணி

    கெடா அரிசி அருங்காட்சியகம் மிக விரிவான ஒரு கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. நுழைவாயிலில் நுழைந்தவுடன் ஏறக்குறைய 2 மீட்டர் உயரம் கொண்ட நெல்லின் உருவ வடிவமைப்பை முகப்பில் காண்போம். அதனைத் தொடர்ந்து வளைந்து மேல் செல்லும் படிகளில் ஏறி அடுத்தடுத்த தளங்களில் உலகில் விளையக் கூடிய பல் வேறு நெல் வகைகளைப் பார்த்து பரிச்சயம் செய்து கொள்ளலாம்.

    asu

    உலக நாடுகளில் எங்கெல்லாம் நெல் விளைகின்றதோ அங்கெல்லாம் கிடைக்கின்ற நெல்வகைகளை எடுத்து வந்து அதன் வகைப்பெயர் சேர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கே காணக்கிடைக்கும் அரிசி வகைகளை எடுத்துக் கொண்டால் நேபாளம், நியூசிலாந்து, ஸ்பெயின் தென் அமெரிக்க நாடான உருகுவே., ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து ஆகிய நாடுகளின் நெல்வகைகளைக் காணலாம். அது மட்டுமல்ல.. இத்தாலி, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், தான்சானியா, நார்வே, புருணை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரிசி வகைகளையும் இங்கு காணமுடிகிறது.

    asu

    மலேசிய நாடு நெல் வயல்கள் சூழ்ந்த நாடு. அதிலும் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கெடா மாநிலம் நெல் களஞ்சியம் என சிறப்புடன் அழைக்கப்படும் மாநிலம். ஆக மலேசிய நெல் வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் இல்லாமல் போகுமா? ஆம். இங்கே மலேசியாவில் விளைவிக்கப்படும் ஏறக்குறைய 60 நெல் வகைகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது அல்லவா?

    அரிசி என்றாலே பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி, கருப்பு அரிசி, குத்தல் அரிசி என்று மட்டுமே அறிந்திருக்கும் பலருக்கு இந்த அருங்காட்சியகம் உலகில் விளைகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நெல்வகைகளை அறிமுகம் செய்து வைக்கின்றது என்பது வியப்பளிக்கும் ஒன்றே.

    asu

    இந்த வெவ்வேறு வகை நெல் விதைகளைப் பார்த்து அடுத்த தளத்திற்குச் சென்றால் அங்கே நெல்வயல், உழவுத் தொழில் ஆகியனவற்றை விவரிக்கும் செயற்கைக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவை கிராமத்து இயற்கை காட்சியைப் படம் பிடித்தார் போல நம் முன்னே உலவ விடும் முயற்சிகளாக அமைந்திருக்கின்றன. அதனை அடுத்தார் போல அரிசியினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு வந்து சேர்வோம்.

    இந்த அருங்காட்சியகத்தை முழுதுமாகச் சுற்றிப் பார்த்து விட்டு வெறுமனே சென்று விடாமல் அங்கு கட்டிடத்திலேயே அமைந்துள்ள உணவு விடுதியிலும் சாப்பிட்டு விட்டுச் செல்வது வருகையாளர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இருக்கும்.

    மலேசியா செல்பவர்கள் அதிலும் குறிப்பாக கெடா மாநிலம் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்குக் கட்டாயம் சென்று வரவேண்டும். இதன் முகவரி

    Muzium Padi
    Lot 798 Jalan Gunung Keriang, Mukim Gunung Keriang
    06570 Alor Setar, Kedah Darul Aman
    Tel: 04 735 1315

    ​இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மனி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ​

    ​2004ம் ஆண்டு 12ம் தேதி அக்டோபர் மாதம் இந்த அருங்காட்சிகம் மாட்சிமை தங்கிய கெடா மாநில சுல்தான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஏனைய மூன்று அரிசி அருங்காட்சியகங்கள் ஜப்பான், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளன. அந்த வரிசையில் நான்காவது அரிசி அருங்காட்சியம் என்ற சிறப்புடன் இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    asuகெடா மானிலத்தின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தது. கெடா மாநில மலாய் மக்களின் உடை மிக எளிமையான தன்மை கொண்டது. இந்த அருங்காட்சியகம் வருகின்ற பொது மக்கள் கெடா மாநில ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகளை தாங்களும் அணிந்து பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டால் அதற்கும் ஒரு வழி இருக்கின்றது. இங்கே கெடா மாநில மக்களின் எளிய ஆடை அலங்காரத்தைக் காட்டும் உருவ அட்டைவைக்கப்பட்டுள்ளன. அதற்குள் வருகையாளர்கள் நம் முகத்தைப் பதித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    asu

    ஏறக்குறைய 2 மணி நேரம் இந்த அருங்காட்சியக வளாகத்தில் கழித்தேன். 2011ம் ஆண்டில் எனது மலேசிய பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்த போது இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்து வரவேண்டும் என்று சென்ற முயற்சியும் இங்கு நான் கண்டு களித்த காட்சிகளும் மனதில் மிகப் பசுமையாகவே உள்ளன.

    சரி. இங்கிருந்து புறப்படுவோம். அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். காத்திருக்கவும்!

    தொடருவோம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 46

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்சியத்திற்கு உண்டு. அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் மாற்றுக் கருத்தை விதைத்த சித்தாந்தங்களில் மார்க்சியம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மார்க்சியம் என இன்று அழைக்கப்படுகின்ற இந்த அரசியல் சித்தாந்தத்தை வழங்கியவர் கார்ல் மார்க்சு. 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சரித்திரத்தை மார்க்சின் சித்தாந்தங்களிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பது இயலாத ஒன்று. அத்தகைய ஆளுமையான கார்ல் மார்க்சு பற்றிய வரலாற்றுச் செய்திகளை வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும் கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் பற்றிய தகவல்களே இன்றைய பதிவாக அமைகின்றது.

    asuba

    கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் ஜெர்மனியின் ட்ரியா நகரில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மிகப் பழமை வாய்ந்த உரோமானிய பேரரசு கோட்டை கட்டி வாழ்ந்த ஒரு அரச நகர்ப்பகுதி என்ற தனிச்சிறப்பும் கொண்டது. ட்ரியா நகர் அமைந்திருக்கும் இடம் ஏனைய பிற அண்டை நாடுகளான பிரான்சு, லுக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது அக்காலத்தில் கார்ல் மார்க்சு மட்டுமன்றி ஜெர்மானிய தொழிற்சங்கவாதிகளும், அரசுக்கு எதிர்மறையான அரசியல் சிந்தனைப் போக்கு கொண்டோருக்கும் ஓர் பெரும் நகரத்திலிருந்து மற்றொரு நகரம் சென்று கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்த மிக ஏதுவாக அமைந்திருந்தது என்பது ஒரு முக்கிய விசயம்.

    asub5

    கார்ல் மார்க்சு ஜெர்மனியில் பிறந்து தன் இளம் பிராயத்தை ட்ரியா நகரில் கழித்து பின்னர் பெர்லினில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை மீண்டும் ட்ரியாவில் தொடங்கினாலும் அவர் தன் வாழ்நாளில் ஜெர்மனியை விட்டு ஏனைய நாடுகளில் செலவழித்த ஆண்டுகள் தான் அதிகம். ஜெர்மனியில் தனது அரசியல் சித்தாந்தத்திற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். பிரான்சில் பணியாற்றிய காலத்தில் புறச் சூழலும் தன் நட்பு வட்டாரமும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு புரட்சியாளராக வடிவெடுத்தார். பின்னர் பெல்ஜியத்தில் சில நாட்கள் அகதி நிலை போன்ற வாழ்க்கை அவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கினாலும் தனது கொள்கையில் அவர் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இறுதியில் அவரது இங்கிலாந்து வாழ்க்கை அவரை உலகம் போற்றும் ஒரு பெரும் அறிஞராக வடிவமைத்தது.

    asub4

    கார்ல் மார்க்சின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து பிரிக்க முடியாத இருவர் என்றால் அது அவரது மனைவி ஜெனியும் அவரது நண்பர் ஃப்ரெடெரிக் எங்கெல்சும் என்று தயங்காது கூறலாம். இவர்கள் இருவரும் அவரோடு இணைந்து இருந்தவர்கள் மட்டும் அல்ல. கார்ல் மார்க்சிற்கு எல்லா சிரம காலங்களிலும் உடன் துணையாக இருந்து அவரை உள்ளமும் உடலும் சோர்வடையாது இருக்க உதவியவர்கள். வரலாறு இவர்களை மறக்காது!

    asub3

    கார்ல் மார்க்சு அடிப்படையில் ஒரு யூத இனத்தவர். அவரது தந்தையார் ஹைன்ரிக் மார்க்சு பின்னர் கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டு ட்ரியா நகரிலே வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். மத நம்பிக்கைகள் மிக ஆழமாக வேறூன்றிய காலகட்டத்தில் ஜெர்மனி அப்போது இருந்தது. இன்றைய ஜெர்மனியிலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட மக்கள் இருந்த காலகட்டம் அது. வக்கீல் தொழில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் ஹைன்ரிக்மார்க்சு. ஹென்ரிட்டே என்னும் பெண்மணியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடந்தி வந்தார். இவர்களுக்கு 1818 மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் கார்ல் மார்க்சு. பிறந்து வளர்ந்து தன் இளமை காலத்தை கார்ல் என்னும் இளைஞன் கழித்த அந்த இல்லமே இப்போது கார்ல் மார்க்சு அருங்காட்சியகமாக இருக்கின்றது.

    asub2

    ஒரு நாட்டின் எல்லா வளங்களுக்கும் அடிப்படையில் மனித சக்தியே இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பாளிகளை விட அவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளே பெரும் அளவில் லாபத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். உழைத்து வளத்தைப் பெருக்கும் உழைப்பாளி வர்க்கமோ அந்த வளத்தை அனுபவிக்க இயலாத ஒரு சமூகமாகவே இருக்கின்றது. இது மனித இனத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் அமைகின்றது.

    கார்ல் மார்க்ஸ் கையெழுத்து

    asub1

    மக்கள் வாழ்க்கையில் பொருளாதார சமன்பாடு என்பது நடந்தால்தானே ஒட்டு மொத்த சுபிட்சத்தை ஒரு நாடு அனுபவிக்க முடியும்?

    மக்களில் பெருவாரியானோர் சுபிட்சமாக இருந்தால் தானே நாடு வளமுடன் இருக்கும்?

    ஒரு சிலர் மட்டுமே பொருளாதார அனுகூலங்களை அனுபவிப்பதும் ஏனையோர் வருமையில் வாடி துன்பத்திலும் நோயிலும் கிடந்து அல்லல் படுவதும் மட்டும் நிகழ்ந்தால் அந்த நாட்டில் அமைதி எவ்வாறு நிலவும்?

    மக்களின் தொடர்ச்சியான அதிருப்தியானது சமூகப் பிரச்சனைகளான கொள்ளை, போராட்டம் பொருள் சேதம் ஆகியவற்றில் தான் ஒரு நாட்டை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அல்லவா அமையும்?

    தொடரும்..

    ​​

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (44)

    இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

    சுபாஷிணி

    ஜெர்மானிய அகழாய்வுக் குழுவினர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வுப் பணிகளில் 30,000 முதல் 37,000 ஆண்டுகள் வரை பழமையானது எனக் கணக்கிடப்படும் மிகப் பெரிய அளவிலான இசைக் கருவிகளைக் கண்டெடுத்தனர். இவை எலும்புகளால் செய்யப்பட்ட குழல் போன்ற இசைக்கருவி வகை. இவையே இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான இசைக்கருவிகள் என நாம் கணக்கிடலாம்.

    உலகின் எல்லா நாடுகளில் வாழும் மக்களும் தங்கள் இனக்குழுக்களில் நாகரிகம் படிப்படியாக வளரும் காலம் தொடங்கி தங்கள் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாக இசை, இசைக்கருவிகள், நடனம் என்ற பண்பாட்டுக் கூறுகளை வளர்த்து வந்தனர் என்பதை வரலாற்று நூல்களையும் தகவல் களஞ்சியங்களையும் நோக்கும் போது உணர முடிகின்றது.

    நம்மில் பலருக்கு நாம் பார்த்து பழகிய அல்லது பிறர் வாசிக்கக் கேட்டு அறிமுகமான சில இசைக்கருவிகளே நினைவிருக்க சாத்தியமுண்டு. ஒரு சிலர் தமது இனக்குழுவில் அதிகம் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை மட்டும் அறிந்திருப்பர். ஒரு சில அண்டை நாட்டு அல்லது தூர தேசத்து மக்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றி போதிய அறிமுகம் கிட்டாத சூழலிலும் பலர் இருப்பர். ஆனால் தகவல் தொழில்நுட்பம் மிகத் துரிதமாக வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் உலக மக்கள் பல்வேறு நாடுகளில் தங்கள் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக தனித்துவம் வாய்ந்த இசைக்கருவிகளை மீட்டும் வாய்ப்பை, அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து அறிந்து கொள்ளவும் கேட்டு மகிழவும் யூடியூப், வலைப்பக்கங்கள், ஒலிக்கோப்புக்கள் ஆகியன உதவுகின்றன என்பதை மறுக்க முடியாது.

    இசைக்கருவிகளுக்காக அருக்காட்சியகங்களும் உள்ளன. ஜெர்மனியில் லைப்ஸிக், பெர்லின் ஆகிய நகரங்களில் இசைக்கருவி அருங்காட்சியகங்கள் உள்ளன. இசைக்கருவிகளுக்காக அருங்காட்சியகங்கள் அமைத்திருக்கும் ஏனைய நாடுகள் என்று சொல்வதென்றால் உதாரணமாக ஸ்வீடன், நெதர்லாந்து அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அந்த வகையில் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் இருக்கும் இசைக்கருவி அருங்காட்சியகத்தைப் பற்றியதே இன்றைய பதிவு,

    asub

    இந்த இசைக்கருவி அருங்காட்சியகம் தொடங்கிய கதையே நமக்கு சுவாரசியமான தகவலாக இருக்கின்றது. ஆரம்பத்தில் பெல்ஜியம் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்தது இந்த இசைக்கருவிகளின் காட்சிக் கூடம். இசையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அறிமுகம் அளிப்பதே இதன் செயல்பாடுகளின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. இதன் தொடக்க காலத்தில் இந்தஅருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்தவை இந்திய மன்னர் சௌரிந்த்ரோ மோகுன் தாகூர் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்டுக்கு 1876ம் ஆண்டில் அளித்த 100 இந்திய இசைக்கருவிகளும் பெல்ஜியத்தின் இசை வல்லுநர் ஃப்ரான்ஸுவா ஜோசப் ஃபெட்டிஸ் அவர்களிடமிருந்து அரச குடும்பம் விலைக்கு வாங்கிய இசைக்கருவிகளும் ஆகும்.

    asu1
    படிப்படியாக இந்த கண்காட்சிக்கூடத்தின் சேகரிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. 1924ம் ஆண்டில் 3,666 இசைக்கருவிகள் இந்த காட்சிக் கூடத்தில் சேகரிப்பில் இருந்தன. இப்போது இந்த அருங்காட்சியகத்தில் 7000க்கும் அதிகமான இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் போது ஆச்சரியம் மேலிடுகின்றது அல்லவா?

    asu2

    ஆறு மாடிகளில் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவுகளில் என்ற வகையில் கண்காட்சி அமைப்பு அமைந்துள்ளது.

    asu3

    பழமையான சமூகங்களின் இசைக்கருவிகள். தற்காலப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும் இசைக்கருவிகள், சீன, இந்திய, இந்தோனேசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய தேசத்தின் பல்வேறு இனக் குழுக்கள், அரேபிய, ரஷ்ய என உலகின் எல்லா மூலைகளிலும் பழங்காலம் தொட்டு இன்று வரை உருவாக்கப்பட்ட இசைக்கருவிகள் இந்த சேகரிப்பில் அடங்குகின்றன.

    asu4

    நான் இந்த அருங்காட்சியகம் சென்ற போது மதிய வேளை. ஏறக்குறைய 90 நிமிடங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தேன். எல்லா இசைக்கருவிகளையும் பார்த்தும் அதன் இசை ஒலிப்பதிவுகளைக் கேட்டும் ரசிக்க இந்த நேரம் நிச்சயம் போதாது என்பதை அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறிய போது உணர்ந்தேன். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சில இசைக்கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன். அதுவரை எந்த இசைக்கருவியை நீங்கள் வாசிக்க விரும்புகின்றீர்கள் என யோசித்துக் கொண்டிருங்கள்!

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 43

    அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

    சுபாஷிணி

    இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக, பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

    அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.

    asu4

    ​அஞ்சல் அட்டைகள் – இதே அருங்காட்சியகத்தில்

    உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மாநிலங்களிலும். கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இதேபோல சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.

    asu3

    அருங்காட்சியக முகப்பு பகுதி

    இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமைப்படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.

    asu2

    ​அஞ்சல்தலை சேகரிப்புகள் வரிசையாக அலமாரியில்

    இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புகளே நிறைந்துள்ளன. 1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடிக் கதவுகள் பாதுகாப்பாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புகள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.

    asu1

    ​அஞ்சல்தலைகளில் சில..

    இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மே மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.

    asu
    பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

    சுவிட்சர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புகளும் கருவிகளும் இருந்தாலும் அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

    சரி.. இந்த அருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 42

    42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)

    சுபாஷிணி

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கிறது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் பண்டைய பழங்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக்கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

    கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகிறது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதை பொதுக்கூறுகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களை இவ்வகையில் இருக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    a

    மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.

    1

    இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது. ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.

    உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம் உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும். மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2

    மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம் என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு, வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.

    மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது. மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

    Was ist der Mensch? (மனிதன் என்பர் யார்?)
    Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
    Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
    Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
    -Immanuel Kant

    3
    நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (41)

    ​ நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (2)

    சுபாஷிணி

    *குரங்கு விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்த இனம் தான் மனித இனமா?

    *நியாண்டர்தால் எனக்குறிப்பிடப்படும் மனித இனக்குழு இன்று காணப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பில் மட்டும் தான் இருந்தனரா?
    *உலகின் எல்லா பாகங்களிலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியதா?
    *ஆப்பிரிக்கா தான் மனித இனத்தோற்றத்தின் முதல் நிலப்பகுதியாக அமைந்திருந்ததா?
    *விவசாயம் என்பதும், உலக நாகரிகம் என்பதும் உலகின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினவா?
    ​*மனித குலத்தை ஆக்கிரமித்திருக்கும் உலகத்தோற்றம், மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பற்பல கேள்விகளில் மேற்குறிப்பிட்ட இவையும் அடங்குவன.

    aru
    ​ஆதி மனிதனின் வாழ்க்கை முறையைக் காட்டும் மெழுகு வடிவங்கள்

    இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தியரியின் படி மனித குலத்தின் ஆரம்பம் என்பது, அதாவது மரத்திலிருந்து தாவிச்செல்லும் குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான பரிணாம மாற்றம் என்பது உடன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிகழ்ந்ததல்ல என்றும் பல்வேறு சமகால நிகழ்வுகளில் சூழலியல், தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றங்களாலும் நீண்ட கால அளவிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பது ஆய்வறிஞர்களின் கூற்று.

    aru1

    ​முழுமையான ஒரு நியாண்டர்தால் எலும்புக்கூடு

    குரங்கினத்திற்கு வாழ்க்கையை நடத்த ஆயுதங்களும் கருவிகளும் தயாரிக்கும் திறன் இல்லை. மனித இனமோ தனது சிந்தனைத்திறத்தை பயன்படுத்தி கற்களால் ஆயுதங்களையும் கருவிகளையும் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டது. கருவிகள் வருவதால் வேட்டையாடுதல், உணவை தேடுதல் இனையைத் தேடுதல், குழுவாக வாழ்தல், என்ற திறனையும் படிப்படியாக மனித இனம் பெருக்கிக் கொண்டது. உணவுத்தேவையும் இனப்பெருக்கத்தேவையும் மட்டுமே அடிப்படை என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாறி குடும்பம், சமூகம், விவசாயம், குழு தலைமைத்துவம், கிராமம், நகரம், நாடு, அரசியல், வியாபாரம், கல்வி எனப்படிப்படியாக மனித இனம் தன து சிந்தனை வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே வந்துள்ளது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு புதுமையை உட்புகுத்திக் கொண்டு வசதிகளை மேலும் மேலும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மனித இனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. உலகியல் தேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உள நிலை தேடலையும் மனித இனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணத்தினால் பல்வேறு சடங்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் தோன்றுவதற்கும், தத்துவங்கள் பிறப்பதற்கும் காரணமாகின்றது.

    aru2

    நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

    நியாண்டர்தால் அருங்காட்சியகத்தில் உள்ளே நுழையும் போதே அங்கே நம்மை வரவேற்க ஒரு நியாண்டதால் மனித உருவச்சிலை உள்ளது. ஒருவருக்கு 8 யூரோ கட்டணம் கட்டி டிக்கைட்டை பெற்றுக் கொள்வதோடு விளக்கம் கொடுக்கும் கருவியையும் பெற்றுக் கொள்ளலாம். 6 தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முதன் முதலாக நியாண்டர்தால் மனித எலும்புகளும் அதன் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒலிப்பதிவு இருப்பதால் அவ்வொலிப்பதிகளைக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து செல்லலாம். ஒலிப்பதிவுகள் அனைத்தும் டோய்ச் மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

    aru3

    ​நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த எலும்புகளில் எச்சம்

    அதனை அடுத்து வரும் தளத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், உலோகக் கருவிகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில கருவிகள் 50,000லிருந்து 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்ற குறிப்புக்களைப் பார்த்து வியந்து போனேன். மனித குல கண்டுபிடிப்புக்களில் அடங்கும் கற்கருவிகள் பல, விலங்குகளின் உடலைக் கொல்லவும், அப்படிக் கொன்ற உடலை கீறி இரைச்சியைக் கிழித்து எடுக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள். படிப்படியான இந்த வளர்ச்சியில் கற்கருவிகளிலிருந்து பின்னர் உலோகக் கருவிகளை மனித குலம் கண்டுபிடிப்பதும் பின்னர் மட்பாண்டங்களை உருவாக்கி சமைத்தல், சேகரித்தல் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் இந்த மனித குல வளர்ச்சியில் ஒரு முக்கிய வளர்ச்சியாகத்தான் காண வேண்டும்.

    aru4

    ​அருங்காட்சியகக் கூடத்தின் உள்ளே

    தொடர்ந்து மேலே செல்லும் போது எலும்புக் கூடுகளும், மனித எலும்புகளில் சில பகுதிகளும் இங்கு அறிவியல் தகவல்களோடு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை மிகச் சிறப்பான வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 2 மாடித்தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்கே நியாண்டர்தால் மனிதர்களின் முந்தைய கால நிலையை விளக்கும் வகையில் சில்லிகானில் செய்யப்பட்ட உருவ வடிவங்களை காட்சியாக வைத்திருக்கின்றனர்.

    aru5

    ​புலி மனிதன் (ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்புர்க் மானிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 40,000 ஆண்டு பழமையான வடிவம்)

    மேல் தளத்தில் இந்த நியாண்டதால் அருங்காட்சியகத்தின் அதி முக்கியசேகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்த நியாண்டர்தால் மனித இனத்தின் DNA க்கள் கன்ணாடி அலமாரிக்குள் மிகப்பாதுகாப்பாக அதே வேளை பொது மக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

    aru6

    ​நியாண்டர்தால் அசல் DNA

    இந்த DNA சேகரிப்பைக் குடுவையில் பார்க்கும் போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு வியப்பு கலந்த பிரத்தியேக உணர்வு காண்போர் அனைவருக்கும் நிச்சயம் உண்டாகும் என்பதில் சந்தேகவில்லை.

    தொடரும்.

    Share