Tag: மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா

  • கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்!

    கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    நாட்டுக்கோட்டை  தந்த நல்லதமிழ்  முத்து
    நந்தமிழின் கவிதைக்கு அவரென்றும் சொத்து
    பாட்டுக்கோட்டை கட்டியவர் பரிமளிக்க மகிழ்ந்தார்
    பாட்டுத்தேரில்  ஏறியவர் பலர்வியக்க  வந்தார்

    கண்ணதாசன் என்றவரும் பெயர்சொல்லி வந்தார்
    கண்ணனுக்கே தாசனென்று காலமெலாம் வாழ்ந்தார்
    எண்ணம் எலாம் கண்ணனாகி  எப்பொழுதும் இருந்தார்
    எண்ணரிய கவிதைகளை எழுதியவர் குவித்தார்

    கம்பனாகி நிற்பார் காளிதாசன் ஆவார்
    இளங்கோவாய் எழுந்து கவிபாடி நிற்பார்
    வள்ளுவராய் மாறுவார் வாழ்வியலைப் பாடுவார்
    உள்ளமதைத் திருத்திவிட  உகந்தபடி பாடுவார்

    மதுவாற்றில் நீந்தினார் மங்கைசுகம் நாடினார்
    எதுவுமே அறியாமல் எடுத்தெறிந்தும் ஏசினார்
    சமயத்தை இகழ்ந்தார் தத்துவத்தை வெறுத்தார்
    சடம்போல கவிஞர் தன்வாழ்வை வாழ்ந்தார்

    ஆண்டவனின் அருளாலே மீண்டார் நம்கவிஞர்
    அஞ்ஞான இருளிலே வாழ்ந்ததாய் உணர்ந்தார்
    மெஞ்ஞானம் பேசினார் மெஞ்ஞானம் எழுதினார்
    மேலான தத்துவங்கள் விளங்கும்படி பாடினார்

    பட்டினத்தார் திருமூலர் பலசித்தர் கருத்தை
    படித்தவரும் பாமரரும் விளங்கும்படி பாடினார்
    கட்டிலுக்கும் பாடினார் தொட்டிலுக்கும் பாடினார்
    காடுவரை போகும்வரை கண்ணதாசன்   பாடினார்

    கண்ணதாசன் தனிப்பாடல் அத்தனையும் படித்தால்
    எண்ணரிய தத்துவங்கள் எமக்கெல்லாம் விளங்கும்
    கண்ணனது கருணையினால் கண்ணதாசன் பாடினார்
    கண்ணதாசன் கவியுலகில் காலமெலாம் வாழுவார்

    பாசமலர் ஆகியும் கண்ணதாசன் இருப்பார்
    பாலும் பழத்தையும் பக்குவமாய் கொடுப்பார்
    படிக்காத மேதையாய் பாட்டுலகில் திகழுகிறார்
    பார்த்தால் பசிதீர பலகவிதை  அளித்துள்ளார்

    சங்கத் தமிழுடுத்துச் சந்தமுடன் பாடுவார்
    சபையேறிக் கவிஞர் தமிழ்மணக்கப் பாடுவார்
    பொங்கிவரும் ஊற்றாக புறப்பட்டுக் கவிதைவரும்
    எங்கிருந்து வருகிறதோ எல்லாமே கண்ணனென்பார்

    அர்த்தமுள்ள இந்துமதம் அருங்கருத்துப் பெட்டகமே
    யேசுபிரான் காவியமோ நெஞ்சுக்கு ஒத்தடமே
    கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்
    புவிமீது கவியரசர் கவிதையாய்  வாழுகிறார்!

    Share
  • அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பத்து அவதாரம் பரந்தாமன் எடுத்தார்
    பழிபாவம் போக்கிடவே அவதாரம் எடுத்தார்
    அத்தனையும் இத்தரையில் அறமோங்கச் செய்ய
    அவரெடுத் தாரென்று  அகமிருத்தி வைப்போம்

    மச்சமாய் வந்தார் கூர்மமாய் வந்தார்
    வராகமாய் வந்தார் நரசிம்மன் ஆனார்
    வாமன வடிவத்தில் வந்தாரே பரந்தாமன்
    பரசுராம ரானார் அரக்கர்மாளச் செய்தார்

    உத்தமனாய் வந்தார் சத்தியத்தைக் காத்தார்
    உயர்வுடைய இராமனாய் அவதாரம் எடுத்தார்
    சத்தியத்தைச் சந்தர்ப்பம் ஆக்கியே நின்று
    கிருஷ்ணாய் மலர்ந்தார் கீதையைத் தந்தார்

    ஒன்பது அவதாரம் எம்பெருமாள் கொண்டார்
    உட்பகையை உடைத்துமே உயர்பொருளாய் உயர்ந்தார்
    பாரினிலே பலதுஷ்டர் பல்கி வருகின்றார்
    பத்தாவ தவதாரம்  பரந்தாமன் எடுப்பார்

    கஷ்டங்கள் ஓங்கும் துட்டர்கள் வருவார்
    கண்ணியத்தில் உள்ளார் கண்ணீரில் மிதப்பார்
    சத்தியமும் தர்மமும் தடுமாறித் தவிக்கும்
    இத்தருணம் எம்பெருமாள் அவதாரம் எடுப்பார்

    அவதாரம் அனைத்துமே அல்லெலாம் போக்கும்
    அவதார தத்துவத்தை அறியாதார் அறியார்
    அறிந்துணர்வார் அனைவருமே அஞ்ஞானம் இல்லார்
    அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    Share
  • தவமுதல்வர் சம்பந்தர்!

    தவமுதல்வர் சம்பந்தர்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சிவபாத விருதயர் செய்ததவப் பயனாலே
    தவமுதல்வர் சம்பந்தர் புவியினுக்கு வந்தார்
    உமையோடு சிவனுமே சேர்ந்துமே வந்து
    ஊட்டிய பாலாலே உயர்ஞானம் பெற்றார்

    உயர்ஞானம் பெற்றதனால் தவமுதல்வர் ஆனார்
    தவமுதல்வர் ஆனதனால் உமைபிள்ளை ஆனார்
    அவர்பெற்ற ஞானத்தை வழியாயாக்கி நின்று
    அதனூடாய் தவமுதல்வர் நடைபயின்று நின்றார்

    வைதீகக் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார்
    மனமுழுக்கச் சைவத்தை தூக்கியே சுமந்தார்
    அந்தணராய் பிறந்தாலும் அனைவரையும் அணைத்தார்
    அரனடியார் அனைவரையும் போற்றியவர் நின்றார்

    உண்ணா முலையாள் உவந்தளித்தாள் ஞானப்பால்
    பண்ணாகக் கொட்டினார் பைந்தமிழில் பதிகத்தை
    வண்ணத் தமிழில் கொட்டினார் வகைவகையாய்
    பண்ணார்ந்த தமிழாய் பரவியதே பாரினிலே

    மண்ணிலே நல்லவண்ணம் வாழலாம் என்று
    நம்பிக்கை வித்தினை விதைத்தாரே சம்பந்தர்
    பெண்மையைச் சம்பந்தர் பெருதுமே மதித்தார்
    உண்ணா முலையம்மை ஊட்டிவிட்டா பாலாலே

    சைவத்தை வளர்த்தெடுக்கத் தமிழெடுத்தார் சம்பந்தர்
    அய்யராய் பிறந்தாலும் அகமுழுக்கத் தமிழானார்
    தமிழ்ஞான சம்பந்தன் சைவத்தைப் பரப்புதற்கு
    இறை ஞானத்தோடு இணைத்தாரே இன்தமிழை

    சமணமும் பெளத்தமும் மேலோங்க முனைந்தன
    சைவத்தை நடைமுறையைத் தகர்த்தெறிய வந்தன
    சிவனருளால் திருஞான சம்பந்தர் வந்தார்
    செம்மையுடன் சைவத்தைச் சிறந்தோங்கச் செய்தார்

    சைவத்தை எதிர்த்தன பெண்களை வெறுத்தன
    சங்கீதம் நடனத்தை ஒதுக்கியே வைத்தன
    ஒறுத்ததை வெறுத்ததை  உளங்கொள்ளா சம்பந்தர்
    ஒறுத்ததை வெறுத்ததை உயர்வாக்கி நின்றார்

    சமணமம் பெளத்தமதம் ஒதுக்கியதைச் சம்பந்தர்
    சைவத்தின் வளர்ச்சிக்குத் தானுரமாய் ஆக்கினார்
    சம்பந்தர் உத்வேகம் சம்பந்தர் புதுநோக்கு
    சைவத்தை தாழவிடா தளைந்தோங்கச் செய்ததுவே

    நாவுக்கு அரசரை நற்றமிழால் சம்பந்தர்
    அப்பரே என்றழைத்து அன்பினைக் காட்டினார்
    சம்பந்தர் அப்பர் சைவத்தைப் பரப்புதற்கு
    ஊரூராய்ச் சென்றார் உளமார உழைத்தார்

    இளங்கன்று சம்பந்தர் இயற்கையினை ரசித்தார்
    இயற்கையிலே சம்பந்தர் இறையினையே கண்டார்
    இசைஞானம் மிக்கவவராய் சம்பந்தர் மிளிர்ந்தார்
    பண்ணோடு சந்தங்களை பக்குவமாய் இணைத்தார்

    சந்தத்தின் தந்தையாய் சம்பந்தர் திகழுகிறார்
    அருணகிரிக் காசானாய் ஆகிவிட்டார் சம்பந்தர்
    சம்பந்தர் பலவகையில் பாடல்களைத்  தந்தார்
    தந்தவைகள் அத்தனையும்  தமிழ்சைவச் சொத்தே

    ஞானத் தனிமுதல்வன் நான்மறையைப் போற்றுபவன்
    மேலாக சைவத்தை மேதினியில் உயர்த்தியவன்
    காழியர்கோன் சம்பந்தன் கறைக்கண்டன் பிள்ளையவன்
    ஆழமுடை  தொண்டதனை அகமிருத்தி வைத்திடுவோம்!

    Share
  • விசாகத் திருநாள் வேலவன் திருநாள்!

    விசாகத் திருநாள் வேலவன் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வரம்பெற்ற வல்லரக்கன் வழிதவறி நடந்தான்
    வானவரை வதைப்பதிலே குறியாகி நின்றான்
    வரமீந்த சிவனாரோ கொதித்துமே நின்றார்
    வல்லரக்கன் வழிமாற வழிவகுத்தார் சிவனார்

    வல்லரக்கன் எண்ணாத வழியொன்று கண்டார்
    வரத்துக்கு ஏற்றதாய் வழிசமைத்தார் சிவனும்
    தன்சக்தி கனற்பொறியாய் எழுந்துவிடச் செய்தார்
    கனற்பொறியும் கந்தனாய் உருப்பெற்று வந்தது

    அருவமும் உருவமாகி அறுமுகக் கடவுளாகி
    பெருவுருப் பெற்றுவந்து பேரருள் புரிந்தநாளே
    வைகாசி விசாகமாகி மாசினையகற்றும் நாளாய்
    மாநிலம் மலர்ந்தாக மனமதில் எண்ணுவோமே

    மாறுபட்ட  நின்ற மாவரக்கர் தம்மை
    மாறிவிட  வைத்தான் மால்மருகன் முருகன்
    வேலனவன் கையில் வேல்கொடுத்த நாளாய்
    வைகாசி விசாகம் மனமெல்லாம் நிறைகிறது

    ஆதியும் அந்தமுமும் இல்லா அரும்பொருள்
    சோதியாய் ஆகியே சுடர்விடும் பெரும்பொருள்
    வைகாசி விசாகத்தில் வல்வினை போக்கிட
    கந்தனாய் வந்ததைக் கருத்தினில் இருத்துவோம்

    கந்தனின் பிறப்பொடு பற்பல சம்பவம்
    வைகாசி விசாகத்தில் வந்துமே இணையுது
    அர்ஜ்ஜுனன் அரிய அஸ்த்திரம் பெற்றான்
    நலமிகு நம்மாழ்வார் நாநிலம் பிறந்தார்

    விரதம் இருப்பார் காவடி எடுப்பார்
    வேலவன் சன்னதி அடியார் குவிவார்
    வினைகள் அகற்றிட வேண்டியே நிற்பார்
    வேலவன் வினைகளை அகன்றிட  வைப்பார்

    விசாகத் திருநாள் வேலவன் திருநாள்
    மனவிருள் அகற்றும் மாண்புடைத் திருநாள்
    பொய்யும் களவும் பொடிப் பொடியாகி
    உய்யும் வகையினை உணர்த்திடும் திருநாள்

    நம்பிக்கை வைத்து நாட்களைப் பார்ப்போம்
    நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
    நல்லது நடக்க நம்புவோம் இறையை
    இறையை நம்பினால் எல்லாம் இன்பமே

    நாளும் பொழுதும் நல்லதைச் செய்வோம்
    நாளும் பொழுதும் நல்லதை நினைப்போம்
    தீமை என்பதைத் தீண்டா திரும்போம்
    தினமும் பொழுதும் இறையை நினைப்போம்!

    Share