Tag: ஷா. முஹம்மது அஸ்ரின்

  • (Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு

    (Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு

    ஷா. முஹம்மது அஸ்ரின்,
    முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு,
    ஜமால் முகமது கல்லூரி,
    திருச்சி-620020.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு

    சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் “பதினெண் மேற்கணக்கு நூல்கள்” என அழைத்தனர். இவை காதலையும் வீரத்தையும் மட்டுமே எடுத்தியம்பின. மக்களுக்கு அறத்தையும் அறம் தவறுவதால் ஏற்படும் விளைவுகளையும் வலியுறுத்த எழுந்த 18 நூல்களைப் “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்” என வழங்கினர். இதனை

    “நாலடி நான்மணி நானாற் பதைந்திணைமுப்
    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
    இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
    கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு” 1

    என்ற வாய்மொழிப் பாடல் வழியாக அறிய முடிகிறது.

    மெய்ப்பாடு:

    ’மெய்ப்பாடு’ என்னும் சொல்லுக்குப் ’பொருட்பாடு’, ’வெளிப்பாடு’, ’புலப்பாடு’ எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய்ப்பாடு என்பது “உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு” 2 . எனவே, மெய்ப்பாடு என்றால் உடலால் வெளிப்படுத்தும் உள்ளத்து உணர்ச்சிகள் என்பது தெளிவாகிறது. இதனை,

    ”நகையே அழுகை இளிவரல் மருட்கை
    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
    அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப”

    – (தொல்காப்பியம். 1194)

    என்ற தொல்காப்பிய நூற்பா தெளிவாக உணர்த்துகிறது.

    நகை:

    ’நகை’ என்னும் சொல்லுக்கு ‘சிரிப்பு’, ‘இகழ்ச்சி’, ’இன்பம்’ எனப் பல பொருள்களை அகராதி 3 தருகிறது. ’நகை’ என்பது ’இகழ்ச்சியிற் பிறப்பது’ என இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில்,

    ”கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்
    இல்லாதாள் ஏக்கழுத்தும் செய்தலும், இல்லாதான்
    ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,
    நல்லார்கள் கேட்பின் நகை.”

    – (சிறுபஞ்சமூலம். 04)

    என்ற பாடல் கல்லாதவனின் அறிவும் காதுகளை இழந்தவனின் அழகும் தேவையற்ற பொருளை பிறருக்கு வழங்கும் குணமும் நல்லவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும் என்கிறது. மேலும், நாணமில்லாதவனின் அமைதி, நன்னடையில்லாதவனின் நோன்பு, உண்பொருளில்லாதவனின் ஈகை, வலியில்லாதவனின் வீரம், தமிழ் தேர்ச்சியற்றவனின் கவி ஆகியனவும் நகைக்கு இடமாகும் என்பதனை இவ்வாறு எடுத்துரைக்கிறது.

    “நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
    ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
    சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவு செயலும்,
    நாவகம் மேய் நாடின் நகை.”

    – (சிறுபஞ்சமூலம். 11)

    செல்வர்களும் நல்லவர்களும் தங்களது பணத்தாலும் குணத்தாலும்
    நகைக்காமல் வாழ வேண்டும் என்பதை,

    “…………… ……. ………. பல் பொருளால் பல்லார்
    நகை கெட வாழ்வதும், நன்று.”

    – (சிறுபஞ்சமூலம். 15 அடி. 3-4)

    எனப் பேசுகிறது.

    கல்லாதவரும் கற்றவர் கூட்டத்தைச் சேராதவரும் நகைக்கத்தக்கவர்கள் என
    சிறுபஞ்சமூலம் எடுத்தியம்புகிறது.

    ”கல்லார், கற்றார் இனத்தார் அல்லார், பெறுபவே,
    நல்லார் இனத்து நகை.”

    – (சிறுபஞ்சமூலம். 55 அடி. 3-4)

    ஒருவன் இல்லாத நேரத்தில் அவனை இகழ்வதும் விளையாட்டின் போது
    ஒருவனை இகழ்வதும் தீமையை உண்டாக்கும் என்பதை,

    “அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறன்அழீஇப் பொய்த்து நகை.”

    – (திருக்குறள். 182)

    “நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி …………”

    – (திருக்குறள். 995)

    போன்ற குறட்பா வாயிலாகத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். சமண முனிவர்களால்
    இயற்றப்பட்ட “நாலடி நானூறு” பொது மகளிரால் ஏழ்மை நிலையை அடையும்
    செல்வந்தர் நகைக்கத்தக்கவர் எனக் கூறுகிறது. இக்கருத்து செல்வந்தனாக இருந்த
    கோவலன், மாதவிபால் காமம் கொண்டு அனைத்தையும் இழந்த கதையை மையமாகக்
    கொண்டுள்ளது.

    “ஆமாபோல் நக்கி, அவர் கைப்பொருள் கொண்டு
    சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
    ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,
    தாமாம் பலரால் நகை.”

    – (நாலடியார். 377)

    பிறரால் மணமுவந்து கொடுக்கப்படாத பொருளைப் பெற்று வாழ்பவன்
    இகழ்ச்சிக்குரியவன் என்பதை,

    “…………………… ……………. ……………. ……………..; தெற்ற
    நகை ஆகும், நண்ணார்முன் சேறல்; ….. ……”

    – (நான்மணிக்கடிகை. 60)

    என்று குறுப்பிடுகிறது. மேலும் பிறரது திறனை அறியாது அவரை இகழ்ந்து பேசும்
    மக்கள் நகைத்தக்கவர்கள் என்பதை,

    “மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
    ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
    ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்.”

    – (பழமொழி. 298)

    என பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நகை என்னும் மெய்ப்பாட்டைப் பல பாடல்கள்
    வழியாக வளக்குகின்றன.

    நகையின் நிலைகள்:

    நகை என்னும் மெய்ப்பாடு தனது பொருளைக் கொண்டு நான்கு நிலைகளில்
    தோன்றுமென்பதை,

    “எள்ளல் இளமை பேதைமை மடனென்று
    உள்ளப் பட்ட நகைநான் கென்ப.”

    – (தொல். 1195)

    என்ற தொல்காப்பிய நூற்பா, நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைகளை
    விளக்குகிறது.

    1. எள்ளல்:

    ’எள்ளல்’ என்னும் சொல்லுக்கு ’இகழ்ச்சி’, ‘நிந்தை செய்தல்’, ‘நகைத்தல்’ என பல
    பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ‘ஒருவனுடைய
    முட்டாள்தனத்தைப் பிறர் சிரிக்கும்படியாக சுட்டிக்காட்டும் பரிகாசமும் கேலியும்’ எனப் பொருள் கொள்ளலாம்.

    மேலும், எள்ளல் என்பதற்குப் “பழிச்சொல்” என்ற பொருளைத் திருவள்ளுவர்,

    “எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.”

    – (திருக்குறள். 281)

    என்ற குறளில் பிறரின் பொருளைக் கவரும் எண்ணமில்லாதவன் பழிச்சொல் கேட்காமல் வாழ்வான் எனக் குறிப்பிடுகிறார்.

    2. இளமை:

    ’இளமை’ என்னும் சொல்லுக்குச் ’சிறுபருவம்’, ‘அறிவின்மை’, ‘முதிராமை’ எனப் பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ’உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் பெற்ற முதிராத அறிவையுடைய பருவம்’ எனப் பொருள் கொள்ளலாம். இதனை,

    ”இழுக்கல் இயல்பிற்று இளமை;”

    – (திரிகடுகம். 14)

    என இளமைப் பருவமானது நகைத்தலுக்குரிய பருவமென்பதை உணர்த்துகிறது.

    3. பேதைமை:

    ’பேதைமை’ என்னும் சொல்லுக்கு ’அறிவின்மை’, ‘மடமை’ எனப் பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ’எந்த ஒரு செயலையும் பகுத்தறியத் தெரியாத தன்மை’ என்று பொருள் கொள்ளலாம். பேதைமையை திருவள்ளுவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்,

    “பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
    ஊதியம் போக விடல்”

    – (திருக்குறள். 831)

    பேதையாக விளங்கும் ஒருவனுக்கு அவனது செயலால் பிறரால் இகழப்பட்டு துன்பமடைவான் என்பதை,

    ”பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;”

    – (இன்னா நாற்பது. 38)

    என்ற பாடல் வழியாக விளக்குகிறது.

    4. மடன்:

    ’மடன்’ என்னும் சொல்லுக்கு ’அறிவிலான்’ என்ற பொருளையே ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. மேலும் சில அகராதிகள் ’மடமை’ என்றும் பொருள் தருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருத்துவ நூலாக விளங்கும் சிறுபஞ்சமூலத்தில் ‘அடக்கம்’ என்னும் பொருளில் ‘மடன்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

    “மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
    ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவ-தொக்க
    அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு-ஐந்தும்
    தலைமகனைத் தாழ்க்கும் மருந்து.”

    – (சிறுபஞ்சமூலம். 52)

    என்ற பாடல் பெண்களுக்குரிய ஐந்து குணங்களுள் மடன் (அடக்கம்) இடம்பெறுகின்றது. இக்குணங்களுள் ஒன்று கெடுமானால், அவளது கணவனே அவளை இகழ்வான் எனக் குறிப்பிடுகிறது.

    முடிவுரை:

    மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் “நகை” என்னும் மெய்ப்பாட்டை நான்கு நிலைகளாகப் பிரித்து முழுமையாக கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறிய பல செய்திகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல பாடல்களில் இடம்பெற்று உணர்வுகளை வெளிப்படுத்துவதை தெளிவாக அறிய முடிகிறது.

    அடிக்குறிப்புகள்:

    1. பக்கம் 5, ந.மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, சங்க இலக்கியம்,
    பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962.
    2. Tamil Oxford Living Dictionary
    3. தற்கால தமிழ்ச்சொல்லகராதி, திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை,
    மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை.

    பயன்பட்ட நூல்கள்:

    1. தொல்காப்பியம் தெளிவுரையுடன், புலியூர்க் கேசிகன், அருணா பப்ளிகேஷன்ஸ்.
    2, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

    =====================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கிய நூற்றொகுதிக்கு அடுத்துப் பெரும்தொகுதியாக இருப்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். இப்பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ள மெய்ப்பாடுகளைத் தொல்காப்பிய இலக்கணத்தோடு இணைத்துப் பேச முயல்கின்றது இக்கட்டுரை. குறிப்பாக எண்வகை மெய்ப்பாடுகளை அறிமுகப்படுத்தி, நகை என்னும் மெய்ப்பாட்டின் நான்கு நிலைகளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறுவதைச் சில சான்றுகளோடு கட்டுரையாளர் பொருத்திக் காட்டுகின்றார். ஆய்வுக் கட்டுரை நிலையில் இக்கட்டுரை அமையாவிட்டாலும், கட்டுரையாளரின் முயற்சியைக் கருத்திற்கொண்டு இதனை இலக்கியக் கட்டுரையாக வெளியிடுகிறோம்.

    =====================================================================

    Share
  • திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை

    ஷா. முஹம்மது அஸ்ரின்,
    முதுகலைத் தமிழ் முதலாமாண்டு,
    ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.
    E-mail:  smdazrin1998@gmail.com.

    ********************************************************

    பதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல் 9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகின்றன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும் திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் இக்கட்டுரையில் ஆய்வுப் பொருளாகின்றன.

    நிலையாமை – விளக்கம்:

    நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்தபின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம்.  மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    யாக்கை நிலையாமை:

    திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல்  211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப்பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

    ”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
    உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
    மண்டி அவருடன் வழிநட வாதே.”      (திருமந்திரம் – 188)

    என்ற பாடலில் கூரைபோல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும்  துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

    ”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.” (திருமந்திரம் – 189)

    என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு வைத்த  பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

    ”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
    உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”  (திருமந்திரம் – 202)

    என்ற பாடலில் உடைந்த குடத்தைக் கூட ஓடென்று வீட்டிலோர் ஓரத்தில் பல நாட்கள் வைக்கமுடியும். ஆனால், உயிரில்லாத உடலை அவ்வாறு வைக்க இயலாது என உயிரற்ற உடலின் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

    ”பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
    தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்.”  (திருமந்திரம் – 211)

    என்ற பாடலில் உயிரானது உடலைத் தோற்பையாகப் பயன்படுத்திவிட்டு தனது தொழில் முடிந்த பிறகு உணவருந்திய எச்சில் வாழையிலை போன்று தூக்கி எறிந்திடும் என்கிறார், திருமூலர்.

    செல்வம் நிலையாமை:

    திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 212 முதல்  220 வரை இடம்பெற்றுள்ளன. நிலையில்லாத செல்வத்தை உவா (அமாவாசை) நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அப்பாடல்,

    ”இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
    துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா. ” (திருமந்திரம் – 213)

    உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற கருத்தை பின்வரும் பாடலில் கூறுகிறார்.

    ”ஈட்டிய தேன்பூ மணங்கண்  டிரதமும்
    கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
    ஓட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்
    காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.” (திருமந்திரம் – 215) 

    மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனைச் சேர்த்துத் தமது கூட்டில் வைக்கும். அத்தேனைப் பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே அது பிறரால் கவரப்படுகிறது என செல்வத்தின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.

    ”மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
    கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்.”  (திருமந்திரம் – 217) 

    முன்னர், செல்வத்தைத் தேனீ சேர்க்கும் தேனுக்கு ஒப்பாகக் கூறிய திருமூலர் இப்பாடலில் நீரில் செல்லும் கலத்திற்கு (படகுக்கு) ஒப்பாகக் கூறியுள்ளார். செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்கலம் கவிழ்வது போல அழிந்தொழியும் எனச் செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடுயுள்ளார்.

    இளமை நிலையாமை:

    திருமந்திரத்தில் இளமை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 221 முதல்  228 வரை இடம்பெற்றுள்ளன. இளமை என்பது மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் பருவம். மனிதனின் உடல் உறுதியோடு காணப்படும் பருவம். அப்பருவத்தின் நிலையாமையைத் திருமூலர்,

    ” கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்.”     (திருமந்திரம் – 221)

    என்ற பாடலில் சூரியன் கிழக்கில் உதயமாகி (பிறந்து) மேற்கில் மறையும் வரையுள்ள (இறப்பு) இடைப்பட்ட கால அளவே மனிதனின் இளமை என்று குறிப்பிடுகிறார். மேலும்,

    ” தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை.”  (திருமந்திரம் – 223)

    என்ற பாடலில் இளமை தேய்ந்து ஒழியக்கூடியது எனப் பாடியுள்ளார்.

    உயிர் நிலையாமை:

    திருமந்திரத்தில் உயிர் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 229 முதல்  238 வரை இடம்பெற்றுள்ளன. உடல் (யாக்கை), செல்வம், இளமை ஆகியவற்றை முதலில் கூறிய திருமூலர் உயிரின் நிலையாமையை இறுதியாகக் குறிப்பிடுகிறார். உடலையும் செல்வத்தையும் இளமையையும் உயிரில்லாமல் அனுபவிக்க இயலாது. உயிரின் நிலையாமையைக் குறித்து,

    ” தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்
    இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்.”    (திருமந்திரம் – 229)

    என்ற பாடலில் பல கிளைகளைக் கொண்ட மரத்திலிருந்து பழுப்புற்று உதிரும் இலை போலப் பல உறுப்புகளைக் கொண்ட உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் எனக் கூறுகிறார்.

    முடிவுரை:

    இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 70 வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் வாழப்போகும் சில ஆண்டுகளாவது உயிரைக் கொண்டு இயங்குகின்ற உடலாலோ, செல்வத்தாலோ, இளமைத் துடிப்பாலோ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையை விளைவிக்காது வாழ்வதற்குத் திருமூலரின் இப்பாடல்கள் துணைபுரியும்.

    துணைநின்ற நூல்கள்:

    1. திருமூல நாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை – 01.
    2. தமிழ் இலக்கிய வரலாறு, ஜமால் முகமது கல்லூரி வெளியீடு, திருச்சி – 20.

     

    Share