பவள சங்கரி

முதலையும், குரங்கும்!

ஹாய் குட்டீஸ், நலமா?

முதலை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? முதலைக் கண்ணீர் அப்படீன்னு உதாரணம் சொல்லுவாங்களே… அது ஏன் தெரியுமா, முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும் இல்லைதானே. அதுபோலத்தான் சில பேர் உலகத்துல தன் காரியம் ஆகணும்கறதுக்காக முதலையாட்டமா போலிக் கண்ணீர் வடிப்பாங்க.. நாமதான் அவங்ககிட்ட சூதானமா இருந்துக்கணும். இல்லேனா முதலைக் கண்ணீர் வடிச்சி நம்மளையும் ஏமாத்திப்புடுவாங்க… இந்த முதலையோட தோல் ரொம்ப மொத்தமா, உறுதியா இருக்கும். அதிலயிருந்து பர்ஸ், பெல்ட், கைப்பை போன்ற பல பொருட்கள் அதனைப் பதப்படுத்திச் செய்யலாம்.

இந்தக் கதையைக் கேட்டீங்கன்னா நான் ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கும் புரியும். இந்தக் குரங்கு அண்ணாச்சி பாருங்க எப்புடி சாமார்த்தியமா தப்பிக்குதுன்னு.. ஆதியில் குரங்கிலிருந்து வந்தவன் தான் மனிதன் அப்படீன்னு அறிவியல் சொல்லுது. நீங்கள்லாம் போகப்போக டார்வின்ஸ் தியரின்னெல்லாம் படிப்பீங்க அதைப்பத்தி..   அதனால மனிதன்கிட்ட இருக்கிற பல குணங்கள் குரங்குகள்கிட்டயும் இருக்கும், கவனிச்சுப் பாருங்களேன். ஆனா ரொம்ப கிட்ட போகாதீங்க கடிச்சுதுன்னா விசம். இப்ப புதுசா வௌவால் கடிச்சா வெறி நாய்க்கடி போல ரேபீஸ் (rabies) நோய் வரும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.. வௌவால்கிட்டயும் ரொம்ப ஜாக்கிரதையா ஒதுங்கி இருக்கணும். அது இரவுலதான் வரும்.. சரி கதைக்கு வருவோம்..

ஒரு ஊரில, ஒரு முதலையும், குரங்கும் நண்பர்களா இருந்தாங்களாம். தண்ணீருக்குள்ளேயே இருக்கற முதலைக்கு அந்த ஆத்தோரம் இருக்கற நாவல் மரத்துக்கனி சாப்பிடறதுன்னா அவ்வளவு ஆசையாம்.. அதனால அந்தக் குரங்கு வாடிக்கையா அதுக்கு அந்த மரத்துலயிருந்து பழம் பழுக்கறப்பல்லாம் பறிச்சுப் போடுமாம். அந்த முதலையும் சந்தோசமா அந்த நாவல் பழத்தை தின்னுட்டுப் போகுமாம். அப்படி இரண்டு பேரும் ரொம்ப நட்பாயிட்டாங்களாம்.. குரங்கு அந்த முதலையே அப்படியே நம்பியிருந்துச்சாம். ஒருநாள் அந்த முதலை நாவற்கனிக்காக காத்திருந்தப்ப மரத்துல ஒரு பழமும் இல்லையாம். நாவற்பழம் சீசன் அப்பதானே கிடைக்கும். ஆனா இந்த முதலை மனசுல வேறதிட்டம் ஓடுதாம். இந்த நாவற்பழம் இவ்வளவு இனிப்பா இருக்குதே. இதை தினமும் சாப்பிடுகிற இந்தக் குரங்கோட ஈரல் எவ்வளவு ருசியா இருக்கும்னு கற்பனை பண்ண ஆரம்பிச்சதோட நிக்காம, அதை எப்படியும் சுவைத்துப் பார்த்துவிட வேண்டும்னு திட்டம் போட்டுதாம்.  அதுதான் முதலை குணம். எந்த ஒரு மிருகத்துக்கும் அதோட பிறவிக்குணத்தை மாத்தறது ரொம்ப சிரமம்… மனிதர்களுக்கும்கூட பல சமயம் அப்படித்தான்.

அந்த முதலை தன் காரியத்தை சாதிக்கறதுக்காக குரங்குகிட்ட நயமாப்பேசி அடுத்த கரையில இருக்கிற பழத்தோட்டத்திற்குக் கூட்டிச் செல்வதாகக் சொல்லி, தன் முதுகின் மீது ஏறி உட்கார்ந்துக்கச் சொல்லிச்சாம். அந்தக் குரங்கும் முதலை தன்னோட நல்ல நண்பன்னு நினைச்சு நம்பி அதோட முதுகுல போய் குந்திக்கிச்சாம். முதலை ஆத்துல மிக ஆழமான நடுப்பகுதிக்கு வருகிற வரை அழகா, அன்பா பேசிக்கிட்டிருந்தது, மெல்ல மெல்ல குரல் மாற ஆரம்பிச்சுதாம். தன்னோட மனசுல இருக்கற அந்த கெட்ட எண்ணத்தை, குரங்கோட ஈரலை சுவைக்கற ஆசையிலதான் குரங்கை கூட்டி வந்திருப்பதையும் சொன்னவுடன் அந்தக் குரங்கு அதிர்ச்சியில உறைந்து போனாலும், உடனே சமாளிச்சிக்கிட்டு,

“அடடே, முதலை அண்ணாச்சி, இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா? நான் வரும்போதுதான் என்னோட ஈரலைக் கழட்டி காய வச்சிருந்தேன். நீங்க கூப்பிட்ட அவசரத்துல அதை எடுத்து போட்டுக்க மறந்துட்டே வந்துட்டேன். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடல.. என் ஆத்ம நண்பனான உனக்கு நான் இந்த சின்ன ஆசையக்கூட நிறைவேத்தலைன்னா எப்படி, அதனால இப்பவே என்னை அந்த நாவல் மரத்துக்கிட்டயே கொண்டு விட்டாயானால் நான் போய் அந்த ஈரலை எடுத்துக்கிட்டு வந்துடுறேன்” அப்படீன்னு சொன்னதாம்.

அந்த முட்டாள் முதலையும் அதனை உண்மைன்னு நம்பி அந்தக் குரங்கை அதே இடத்துக்கு கூட்டி வந்ததாம். உடனே குரங்கு டபார்ன்னு தாவி அந்த மரத்து மேலே ஏறிக்கிச்சாம். முதலையும் குரங்கு ஈரலை எடுத்துக்கிட்டு திரும்ப வரும்னு ஆவலா காத்திருந்துச்சாம். சீக்கிரம் வா நண்பான்னு குரல் கொடுத்தும் பார்த்துச்சாம். ஆனா அந்த குரங்கு என்ன அவ்வளவு முட்டாளா மீண்டும் மாட்டிக்கறதுக்கு..

“அடேய் நன்றி கெட்ட முட்டாள் முதலையே, யாராச்சும் ஈரலைக் கழட்டி வச்சுட்டு உயிர் வாழ முடியுமா…? போடா போ.. போய் வேற எவனாவது இளிச்சவாயன் கிடைப்பான், அவனை நண்பன்னு சொல்லி ஏமாத்தி உன் காரியத்தை சாதிச்சுக்கப்பாரு.. நான் உன்னை மாதிரி முட்டாள் இல்லை”ன்னு  சொல்லிச்சாம். அப்பத்தான் அந்த முதலைக்குப் புத்தி வந்ததாம் ஆத்திரத்துல அறிவிழந்தது புரிந்ததாம். இப்போது நல்ல நட்பையும் இழந்து, நாவல் கனியையும் இழந்துட்டோமேன்னு வேதனையில் தன்னையே வெறுத்துப்போனதாம்…

இதிலிருந்து நாம என்ன தெரிஞ்சிக்கணும்.. யாரையும் அவங்களோட உண்மையான குணத்தை தெரிஞ்சிக்காம சட்டுனு நம்பிடக் கூடாது. அதோட நாம முன்னெச்சரிக்கையா இருப்பதையும் மீறி இப்படி ஏதாவது நடந்து போச்சின்னா, கொஞ்சமும் பதட்டப்படாம, நிதானமா இருந்து சமயோசிதமா, இந்தக் குரங்கு அண்ணாச்சி போல அதிலயிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கணும்.. வாழ்க்கையிலும் இப்படி ப்ல முதலைகள் நம்மை அடித்துத் தின்ன காத்துக்கிட்டுத்தான் இருக்கும்.. நாமதான் சூதானமா பிழைக்கக் கத்துக்கணும்.. சரியா… மீண்டும் சந்திப்போம்.

தொடருவோம்

படங்களுக்கு நன்றி:

http://www.examiner.com/slideshow/crocodile-s-tears-monkey-see-monkey-draw-the-jungle-grapevine#slide=42690201

http://www.villiersterrace.com/tabs/index.htm

http://mlfun.org.ua/gifs/3/monkey.shtml

http://animals.nationalgeographic.com/animals/photos/alligators-and-crocodiles/#/american-alligator-wetland_5795_600x450.jpg

Leave a Reply

Your email address will not be published.