காணொலிகள்சிறுவர் சிறுகதைபவள சங்கரி

பிள்ளையாரும் ஔவையாரும்

பவள சங்கரி

dsc00084
ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா?

விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா?

சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை.

விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா? முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் இட்டுக் கணபதியை வணங்க வேண்டும். சிதறு தேங்காய் ஏன் உடைக்கிறோம்? நம் பாவங்கள் விநாயகர் அருளால் உடைத்து சிதறுவதாக நினைத்து தேங்காயை ஓங்கி அடித்துச் சிதற விட்டு நம் தீவினைகள் தொலைந்ததாக எண்ண வேண்டும்.

சிவபெருமானுக்குப் பிள்ளையார் முருகர் வீரபத்திரர் என்று மூன்று குமாரர்கள் உண்டு. இவர்களில் விநாயகரே சிவனுடைய பிள்ளைகளில் முதன்மையானவர் .விந்தையான வடிவம் கொண்டவர் விநாயகப் பெருமான். யானைத் தலையும், பெருவயிறும், மனித உடலும், ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவத்தில் பெரும் தத்துவம் உறைந்துள்ளது. உடலின் மேல்பாகம், யானைத்தலையுடன், கழுத்துவரை தேவ உடம்பும், பூதப்பெருவயிறும், ஒரு புறம் ஆண் தன்மையும், மற்றொரு புறம் பெண் தண்மையும் கொண்டவர் விநாயகப்பெருமான். அதாவது விநாயகப் பெருமான் , தேவராகவும், மனிதராகவும், பூதராகவும், விலங்காகவும், ஆணாகவும், பெண்ணாகவும், அனைத்துமாய்த் திகழ்கிறார் .
ஐந்து திருக்கரங்கள் உடையவர் விநாயகர். துதிக்கையில் அமிர்த குடமும், பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம், முன் கைகளில் வலக்கையில் ஒடிந்த கொம்பும் உடையவர். இடக்கையில் மோதகமும் கொண்ட திருவடிவுடையவர்.

திருமூலரின் விநாயகர் வழிபாட்டுப் பாடல் பாருங்கள்…

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு யானைப்பாகன் யானையை விழாமல் காக்கும்பொருட்டு, அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி நேர்வழி நடத்துவது போன்று, மனித உயிர்களும், பாசபந்தங்கள் எனும் குழிகளில் விழாமல் காத்து நேர்வழியில் நடத்தி நம்முடைய ஆசாபாசங்களை கட்டுப்படுத்தி நற்பேறு அருளுகிறார்.

கஜமுகாசுரன் எனும் அரக்கனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றியதன் அறிகுறியாக, முன் கைகளில் வலது கையில் ஒடிந்த கொம்பினை வைத்திருக்கிறார் விநாயகர். மோதக விரும்பியான இவர் இடது கையில் அமிர்த கலசம் என்கிற மோதகத்தைத் தாங்கி இருக்கிறார். மோதகம் என்பதன் பொருள் அழிவற்ற தன்மை என்பதாகும்.

விநாயகப் பெருமானின் ஆயுதங்கள்

பாசம் அங்குசம் தந்தம் வேதாளம் சக்தி அம்பு வில் கத்தி கேடயம் சம்மட்டி கதை நாகபாசம் சூலம் குந்தாலி மழு கொடி தண்டம் கமண்டலம் பரசு கரும்பு வில் சங்கம் புஷ்ப பாணம் கோடாரி அட்சரமாலை சாமரம் கட்டுவங்கம் சக்கரம் தீ அகல் வீணை.

இப்படித்தான் விநாயகரின் திருமேனி வடிவம் நமக்கு பல அரிய உண்மைகளை உணர்த்துகின்றது. பிள்ளையாரை வணங்குவதால் நம்முடைய அஞ்ஞானம் விலகுவதோடு, திருமகள் நம்மோடு வந்து உறைகிறாள். நம்முடைய துன்பங்கள் அகன்றுவிடும். நாம் பிள்ளையாருக்குப்போடும் தோப்புக்கரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கம்.

935934_144249892438651_327709184_nதம் இளமைக்காலத்திலிருந்தே பிள்ளையார் மீது அளவிலா பக்தி கொண்டவர் ஔவைப்பாட்டி. யார் இந்த ஔவைப்பாட்டி? ஔவையார் 9ஆம் நூற்றாண்டில் நம் தென்னிந்தியாவில் வாழ்ந்த ஒரு பெண் புலவர். ஔவைப்பாட்டி ஒரு புலவர் மட்டுமல்லாமல், மிக உயர்ந்த இலட்சியங்களும், புனிதமான சிந்தைகளும் உடைய ஒரு துறவி. தம்முடைய 4ஆம் வயதிலேயே, பெரும் புலவர்கள்கூட எழுத முடியாத அற்புதமான பாடலை எழுதியவர். இவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்தவர் இவர். தன்னோட அழகு உருவம் இதற்குத் த்டையாக இருந்ததால் விநாயகப்பெருமானிடம் வேண்டி இந்த வயதானத் தோற்றத்தைப் பெற்றவர். இயல், இசை, நாடகம் படைக்கும் வல்லமை மட்டுமே வேண்டிப்பெற்றவர் இவர்.

ஒரு சமயம், ஔவையார் நம் விநாயகப்பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாயத்தில் வெள்ளை யானையில் அமர்ந்து கயிலை மலைக்குச் செல்வதைப் பார்க்கிறார். சுந்தரர் தாம் பிறவி எடுத்ததன் கடமை முடிந்துவிட்டதால் கைலாயம் சென்று ஆண்டவனுக்கு சேவை செய்ய முடிவெடுத்தார்.

ஔவைப்பாட்டி ‘ சுந்தரருக்கு முன்னால் நான் கயிலை மலைக்குச் சென்று, அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார். அதனால் வேகமாக பூசையை முடிக்கவேண்டும் என்று நினைத்தார். இதைப்பார்த்த விநாயகப் பெருமான் ‘ஔவையே இவ்வளவு வேகமாக பூசை செய்ய என்ன காரணம் ?’ என்று கேட்டார். ஔவையும் தானும் கயிலை செல்லும் ஆவலாக இருப்பதைச் சொல்கிறார்.

விநாயகப்பெருமானும் புன்சிரிப்புடன், ‘ஔவையே பதற்றம் இல்லாமல் நிதானமாக பூசை செய்வாயாக. சுந்தரருக்கு முன்பாகவே உம்மை கயிலை கொண்டு சேர்ப்போம்’ என்று சொல்கிறார். இந்த நேரத்தில்தான் ஔவையார் ‘விநாயகர் அகவல்’ என்னும் 72 வரிகளைக் கொண்ட பாடலை இயற்றினார். மிகவும் எளிதான பாடலிது.

அகவல் கேட்டு பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைத் தூக்கி, ஒரு நொடியிலேயே கயிலை மலையில் கொண்டுபோய் சேர்ப்பித்துவிட்டார். இதற்குப்பிறகு ரொம்ப நேரம் கழித்துதான் சுந்தரர் வருகிறார். தாம் விரும்பியபடியே அவரைச் சிறப்பாக வரவேற்கிறார் ஔவைப்பாட்டி.

நாம் எந்த பூசை, யாகம் செய்தாலும் முதலில் விநாயகருக்கு வழிபாடு செய்து அவரோட ஆசியினால்தான் அதைச் சிறப்பாக நடத்துகிறோம். வி’ நாயகன்’ என்றால் ‘தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத’ பரம்பொருள் என்று பொருள். முழுமுதற் கடவுள் அல்லவா நம் விநாயகப்பெருமான்! நாமும் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து அவர் அருளைப்பெறுவோம்! மீண்டும் சந்திப்போமா?

Print Friendly, PDF & Email

Comment here