காணொலிகள்சிறுவர் சிறுகதைபவள சங்கரி

பாப்பா .. பாப்பா கதை கேளு! (48) நம்பிக்கை!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா? இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா? ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ அப்படீன்னு சொல்லிக்கிட்டு மட்டுமே இருக்காமல் சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர். அவர்தான் நம் தாமஸ் ஆல்வா எடிசன். நாமெல்லாம் இன்னைக்கு பல விதமான வசதிகளுடன் சுகமாக வாழ்ந்திட்டிருக்கோம்னா அதற்கு அடிப்படையான கண்டுபிடிப்புகளை நமக்கு அளித்தவர். இதுவரை உலகிலேயே மிக அதிகமான 1907 கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் இவர். இத்தனைக்கும் படித்துப் பட்டம் பெறாத மேதை இவர்.

download-1
thomas-alva-edison-at-age-8எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, அமெரிக்காவில், ஒஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில், பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார். எடிசனுக்கு சின்ன வயதிலேயே காது செவிடாகப் போய்விட்டது. அது மட்டுமல்ல, பிறவியிலேயே அவருடைய தலை, பின்புறம் நீட்டிய நிலையில் சற்று கோணலாகவே இருந்தது. அவர் வளர்ந்த பிறகும் அதே தோற்றம்தான் இருந்தது. அவரோட அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பள்ளி செல்லும் வயதில் அவரை பள்ளிக்கு அனுப்பினார்கள். இரண்டு நாளில் சக மாணவர்கள் அவரை ‘கோண மண்டையன்’ என்று கேலி பேசியதால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று வந்துவிட்டார். மீண்டும் அவருடைய தாய் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் இரண்டு மாதம்தான் தாக்குப்பிடித்தார். தன்னை ‘மூளைக்கோளாறு உள்ளவன்’ என்று ஆசிரியர் திட்டுவதாகக் கூறி அழுதுகொண்டு வந்துவிட்டார். மீண்டும் அவர் அம்மா சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் அவர் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். வீட்டிலேயே அவர் தாய் பாடம் கற்றுக்கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், பிற்காலத்தில் ‘மெண்டோ பார்க்கின் மந்திரவாதி’ என்று பாராட்டப்பட்டவரும் இவர்தான். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. ஆம், நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போன பல்வேறு கண்டுபிடிப்புகளின் நாயகன் இவர்தான்!

தன்னோட 84வது வயதில் இவர் இறந்தபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத வகையில் இவருக்காக சுதந்திர தேவியின் கை விளக்கின் ஒளியிலிருந்து, ஊரின் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்திருந்தார்களாம். இவர் இறந்த பின்பு இவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஆனால் எல்லோருக்கும் உள்ள அதே அளவு மூளைதான் அவருக்கும் இருந்ததாம். ஆனால் கோணலாக நீட்டிக்கொண்டிருந்த அந்த பின் மண்டையில்தான் ஏதோ அதிசயம் இருக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது இல்லையா.. யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. தோல்விகளைக்கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது.

12_fb__large
அடுத்து இன்னொரு விதமான நம்பிக்கை சம்பவம் பாருங்கள். கனவுகளுக்கு பலன் இருக்கு, இல்லை என்று பலவிதமான நம்பிக்கைகள் இருக்கு. நம் அப்துல்கலாம் ஐயா கூட ‘நிறைய கனவு காணுங்கள்’ அப்படீன்னு சொல்லியிருக்கார் இல்லையா. நாம் இன்னைக்கு அழகழகா உடை போட்டிருக்கோமே. அதை தயாரிக்கிற நவீன தையல் இயந்திரம் பற்றி தெரியுமில்லையா. அதை கண்டு பிடித்தவரையும், அவர் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கனவுதான் காரணமாக இருந்தது தெரியுமா. 1846 ஆம் ஆண்டு இலியாஸ் ஹோ (Elias howe) என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் பாடுபட்டுக்கிட்டிருந்தார். அவர் உருவாக்கிய அந்த இயந்திரம் முழுமை அடையாமல் இருந்ததால் அவர் கவலைபட்டுக்கிட்டிருந்தார். அதாவது இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஹோவே அதில் ஊசியை எங்கே வைப்பது என்பதை கண்டு பிடிக்கமுடியாமல் தவித்தார் , அந்த நேரத்துலதான் ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். என்ன கனவு தெரியுமா அது?

நர மாமிசம் சாப்பிடுகிற ஒரு அரசன் இருக்கிறான். சில காட்டுமிராண்டிகள் வந்து அந்த விஞ்ஞானியை அரசனிடம் கொண்டு செல்கிறார்கள். அந்த அரசன், ‘இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு தையல் இயந்திரத்தை இவன் உருவாக்கவில்லையானால், இவனை ஈட்டிகளால் கொன்று விடுங்கள்’ என்று ஒரு உத்தரவு போடுகிறான். ஆனால் 24 மணி நேரத்திற்குள் அவரால் தையல் இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் அரசனுடைய ஆணைப்படி அவரை கொலைக்களத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவரை கீழே தள்ளி அந்த காட்டு மிராண்டிகள் ஈட்டிகளைத் தூக்கி குத்த வருகிறார்கள். படுத்த நிலையிலிருந்து தன்னை நோக்கி பாய்ந்து வரும் ஈட்டிகளையும், அந்த ஈட்டிகளின் முனையில் கண் போன்ற ஓட்டை அமைந்திருப்பதையும் பார்த்த அந்த விஞ்ஞானிக்குத் தெளிவு பிறந்து விடுகிறது. அவ்வளவுதான் தெளிவு பிறந்தது, கனவும் தூக்கமும் கலைந்த நொடியில் தன் சோதனைச் சாலையை நோக்கி ஓடுகிறார். கனவில் வந்தது போல ஈட்டியின் முனையில் உள்ள கண் போன்ற ஓட்டையின் வடிவத்தில், தையல் இயந்திரத்தின் ஊசியில் ஒரு கண் போன்ற ஓட்டை வடிவமைக்கப்பட்டால், அதில் நூல் கோர்த்தவுடன் அது துணியை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கி வரும்போது, அந்த ஊசி தையல் வேலையை அழகாகச் செய்யும் என்றும் கண்டுபிடித்துவிட்டார் அவர். இன்றும் நாம் அந்த முறையில்தான் ஆடை வடிவமைத்து அணிகிறோம்.

எந்த செயலாக இருந்தாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால்மட்டும் போதும், அந்த உள்ளுணர்வின் சக்தியே அதனை ஏதேனும் ஒரு வகையில் நடத்திவிடும். ஆக, நமக்கு வேண்டியதெல்லாம் ஆக்கப்பூர்வமான உறுதியான நல்ல சிந்தைகள் என்பது புரிகிறதல்லவா மீண்டும் சந்திப்போமா.

Print Friendly, PDF & Email

Comment here