சமையல்சிற்றுண்டி வகைகள்

சோளே பட்டூரா

 

ஜெயஸ்ரீ ஷங்கர்

பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்ததும் தட்டையே முழுங்கும் அளவுக்குப் பெரிய பூரியை எடுத்துச் செல்வதைப் பார்த்ததும் ஆசையோடு …. குழந்தைகள் , அம்மா எனக்கும் அது என்று கையைக் காட்டிக் கேட்கும்போது,(சோளே பட்டூரா வேண்டும்) ..நமக்கும் கூட நாவில் நீர் ஊற வைக்கும்  வட இந்திய பூரி இது..சுவை மிக்கது.
பொருட்காட்சியில் டெல்லிவாலா கடைகளில் இது சக்கை போடு போடும் டிபன்  ஐட்டம் இது தான்.
ஆவி பறக்க பறக்க தொட்டுப் பார்த்து சுடச் சுட சன்னாவோடு சேர்த்து சாப்பிடும் போது இதன் ருசி அலாதி தான்…நாமும் இதை வீட்டில் செய்து அசத்தலாம்.
இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.
சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.

பட்டூரா (பெரிய பூரி ) செய்ய :-
தேவையானவை :

மைதா மாவு 1/2 கிலோ
நெய்  100 கிராம்
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை சமையல் சோடா
தயிர் ஒரு கப்
பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :

முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்பிக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.
மாவு பிசையும் முறை:
ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் நெய்யை விட்டு  நன்கு குழைக்கவும். குழைக்க  குறைந்தது ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப் பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், நெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும்.  கலக்க  கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொற பொறவென்று  வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவை  நன்கு கெட்டியாகப் பிசைந்ததும், ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும். குறைந்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.

சன்னா செய்ய தேவையானவை :

1 கப் ஊற வைத்த  வெள்ளை கொண்டைக்கடலை
2 உருளை கிழங்கு
2 வெங்காயம்
1 துண்டு இஞ்சி
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1 சின்ன துண்டு வெல்லம்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
2 ஸ்பூன் நெய்.

செய்முறை :

ஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளைக் கிழங்கை, உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும்.
அது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.
கரம் மசாலா பொடியை போடவும்.
நன்கு கொதித்து கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.
வெல்லத்தை தட்டி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
கொத்துமல்லித் தழைகளைத் சிறிதாக நறுக்கித் தூவவும்.

பட்டூரா (பூரி) செய்யும் விதம்:
பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.

செய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
புளிப்பு அதிகம் தேவைபடுப்பவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email

Comment here