சமையல்ஜலீலாகமால்பழரச வகைகள்

அத்திப்பழ, பேரீட்சை,வாழைப்பழப் பழரசம்

ஜலீலா கமால்

அவரே கூறுவதான அவரைப்பற்றிய சிறு குறிப்பு:
என் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். பரம்பரை சமையலும் அதன் வழி என் புதுமையான சமையலுமாக சமையலில் இருபது வருடத்துக்கும் மேலான அனுபவமுண்டு. பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சமையல், தையற்கலை, மற்றும் என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றும் பிரபல வலைத்தளங்களிலும் இவற்றை கடந்த நான்கு வருடங்களாகக் கொடுத்து வருகிறேன். கீழக்கரை அஞ்சல் மாத இதழ், 2005 யில் துபாயில் வெளியான தென்றல் மாத இதழ்,  2010 விகடன் தீபாவளி மலரிலும் என் சமையல் குறிப்புகள் வெளி வந்துள்ளன.

நான் கொடுக்கும் ஒவ்வொரு குறிப்புக‌ளும் சொந்த அனுபவமும், நேரில் க‌ண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளுமாகும். வெளிநாட்டில் திரும‌ண‌ம் ஆகிச் செல்லும் ப‌ல‌ பெண்க‌ள் ச‌ரியாக‌ ச‌மைக்க‌ தெரியாம‌ல், க‌ண‌வ‌ன் ம‌னைவிக்கிடையே பெரும் ச‌ண்டையும், பெண்க‌ளுக்கு ம‌ன‌வேத‌னையும் ஏற்படுகிறது. ஆகவே, அவ‌ர்க‌ளுக்கு உத‌வும் வ‌ண்ண‌ம் என் குறிப்புக‌ளைப் போட்டு வ‌ருகிறேன். இம்ம‌ண்ணில் பிறந்த நாம், நம்முடைய திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும் என்ற எண்ணத்தில், அன்றாடக் கடமைகள் போக எனக்கிருக்கும் நேரத்தில், எனக்கு தெரிந்த விஷயங்களைப் பதிவிட்டு வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு

ஜலீலா பானு, (துபாய்.)

இப்பொழுது உங்களுக்காக ஒரு பழரச வகையை பகிர்ந்திருக்கிறேன்.

தேவையான பொருட்கள்

அத்திப்பழம் (தேனில் ஊறியது )– இரண்டு மேசைக்கரண்டி

பழுத்த பேரீட்சைப் பழம் – 10 (கொட்டை நீக்கியது)

கிசுமிசுப் பழம் – 10

பால் – இரண்டு டம்ளர்

ஐஸ் கட்டிகள் – 15

பெரிய வாழைப்பழம் – 1

அலங்கரிக்க : பிஸ்தாத் துருவல் சிறிது

செய்முறை

அத்திப்பழம் மற்றும் கிசுமிசுப் பழத்தை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வாழைப்பழத்தை பொடியாக அரியவும். மிக்சியில், ஊறிய அத்திப்பழம், கிசுமிசு,பேரீட்சை,வாழைப்பழம்,பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து, பழங்கள் நன்கு மசியும் வரை அரைக்கவும். பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி பிஸ்தாத் துருவல்கள் கொண்டு அலங்கரித்து குடிக்கவும்.

குறிப்பு.

எல்லாமே இரும்பு சத்து அதிகம் உள்ளது, உடம்பிற்கு மிகவும் ஊட்டச்சத்து மிக்கது, குழந்தைகள் சாப்பாடு சரியாச் சாப்பிடலையேன்னு கவலைப் பட தேவையில்லை. ஒரு டம்ளர் குடித்தாலும் நல்ல ஆரோக்கியம் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் சோர்வை நீக்கும். அத்திப்பழம்,வாழை, கிசுமிசு, பேரீட்சை எல்லாவற்றிலும் இனிப்புச் சுவை இருப்பதால், சர்க்கரை தேவையில்லை. அதிக இனிப்பை விரும்புவோர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

அத்திப்பழம் ரொம்பவும் கட்டியாக இருக்கும். ஆகவே ஊற வைத்தால் கொஞ்சம் மிருதுத் தன்மை கொடுக்கும். இல்லையென்றால் அரைக்கும் போது மிக்சியில் அடியில் தங்கி விடும். பேரீட்சை பழுத்ததாக இருப்பதால் ஊற வைக்க தேவையில்லை.

வாழைப்பழம் சேர்ப்பதால் அதிக நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால், கருத்துப் போய் விடும். உடனே குடிப்பது நல்லது. நோன்புக் காலங்களில் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது, விரதம் இருப்பவர்களும் இதை ஒரு டம்ளர் குடிக்கலாம்.தேனில் ஊறிய அத்திப்பழம் கடைகளில் கிடைக்கிறது, அப்படி கிடைக்கவில்லையென்றால் தனியாகவும் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email

Comment here