இனிப்பு வகைகள்சமையல்சாந்தி மாரியப்பன்

கேரட் அல்வா

சாந்தி மாரியப்பன்

உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.

இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.

தேவையான பொருட்கள்:

கேரட்-1 கிலோ

சர்க்கரை-400 கிராம்

இனிப்பில்லாத கோவா-100 கிராம்

இது கிடைக்கவில்லையென்றால் கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைத்துப் போடவும்)

பால்- கால் லிட்டர்

ஏலக்காய்-2 பொடித்தது

செய்முறை:

கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.

இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும்.

லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும்.

பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும்.

இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.

விரும்பினால் வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்க்கலாம்.

வீட்டில் இருக்கிறது என்பதற்காக கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்காமல் அல்வாவாகவே சாப்பிடுங்கள். வடமா நிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    அருமை சாந்தி, நல்ல முன்னுரை + ரெசிப்பி…… நன்று.

Comment here