பவள சங்கரி

அன்புச் செல்லங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இந்தக் கணினி யுகத்தில் என்னதான் வீடீயோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம் என்று எண்ணிலடங்கா பொழுது போக்குகள் இருந்தாலும், நம் பழமையான மரபுக் கதைகள் கேட்பதென்றால் ஒரு தனிப்பட்ட ஆனந்தம்தானே! அதுவும் ராஜா கதை என்றால் மேலும் சுவைதானே? இதோ அப்படி ஒரு கதை உங்களுக்காக இந்த குழந்தைகள் தின பரிசாக!

புதிர்

அந்தக்காலத்தில் அரசன் என்றாலே மக்கள் தெய்வமாகக் கொண்டாடுவார்கள். அவரும் அதற்கேற்றார் போன்று மக்களிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார். தன் நாட்டு மக்களை தம் குடும்ப உறுப்பினர்களாகவே கருதி அவர்களின் நலனிலும் இயன்றவரை அக்கறை கொள்ளுவார். தம் குதிரையில் ஏறி நாட்டையும், காட்டையும் கூட அடிக்கொரு முறை வலம் வந்து மக்களின் குறைகள் தீர்ப்பதையே கடமையாகக் கொண்டிருப்பார்.

அது போன்று ஒரு முறை ராஜா மதிவர்மன் ஒரு காட்டிற்குச் சென்றார். மதிவர்மனுக்கு எப்போதும் பெண்கள் என்றால் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. காரணம் பெண்களுக்கு மட்டுமே எசமானர் விசுவாசம் அதிகம் என்பது அவர் கனிப்பு!அதனாலேயே அவர்கள் பூசைக்குரியவர்கள் என்ற திடமான நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

காட்டிற்குள் சென்ற அரசன் மதிவர்மன் , மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும் [அக்காலத்தில் மரம் வெட்டுவது தண்டனைக்குரிய விசயமில்லை. அதனால் மரம் வெட்டி விற்று, பிழைப்பு நடத்துவதுதான் விறகுவெட்டிகளின் தொழிலாக இருந்தது] ஒரு விறகுவெட்டியைக் கண்டார். அருகில் ஒரு அழகிய இளம் பெண்ணும் இருந்தாள். அந்தப் பெண் விறகுவெட்டியின் மனைவியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு, அவனருகில் சென்று பேச விரும்பி அவனை நெருங்கினார்.

அரசன் அந்த விறகுவெட்டியைப் பார்த்து,” ஏனப்பா, உன் சீவனம் எப்படி நடக்கிறது? “ என்று வினவினார்.அவனும், “ அரசே, நான் ஒரு விறகுவெட்டி. விறகு வெட்டி, விற்று நானும் என் மனைவியும் சீவனம் நடத்துகிறோம்” என்றான்.

“ போதுமான வருமானம் கிடைக்கிறதா?” என்று கேட்டார்.

“ ஆம், மகாராஜா. எங்கள் தேவைகளுக்கேற்ற வருமானம் இருக்கிறது. எங்களுடைய சொற்ப தேவைகளுக்கு அது நிறைவான வருவாயாகவே உள்ளது” என்றான் விறகுவெட்டி.

“ சேமிப்பு ஏதும் உள்ளதா?” என்று வினவினார் அரசர்.

“ ஆம்,மகாராஜா,இயன்ற வரை ஏதோ சேமித்துக் கொண்டுதான் இருக்கிறேன்”, என்றான்.

“ ஓ,அப்படியா, பரவாயில்லையே. உன் சேமிப்பைக்கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”, என்றார் அரசர் உற்சாகத்தோடு.

அதற்கு அந்த விறகுவெட்டி, ஒரு புதிரான விடையைப் பகர்ந்தான். அதாவது,
“ நான் என்னுடைய சேமிப்பை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன் அரசே! அதன் முதல் பகுதியை மூலதனமாக்குகிறேன். இரண்டாம் பாகத்தை,
வாங்கியவர்களிடமே கொடுக்கிறேன். மூன்றாவது பாகத்தை வீண் செலவு செய்கிறேன். நான்காவது பாகத்தையோ என் பகைவனுக்குக் கொடுக்கிறேன்”, என்றான்.

அந்தக் காலத்தில் அரசகுல மக்கள் விடுகதைகளில் தீவிர நாட்டமுடையவர்களாக இருந்தனர். அதனாலேயே, அரசர், விறகுவெட்டி தன் வினாவிற்கு நேரடியாக பதில் சொல்லாமல் இப்படி புதிர் போடுகிறானே என்று கோபம் கொள்ளாமல், அதற்கு மாறாக அவனுடைய பதிலால் பெரிதும் மகிழ்வுற்று
அதன் விடையை அறியும் பொருட்டு தம் மூளையை பல வகையில் கசக்கிப் பிழிந்துப் பார்த்தார். ஆயினும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை!

தோல்வியை ஒப்புக்கொண்ட அரசரோ, “ இளைஞனே! உம்முடைய அழகான மற்றும் சிக்கலான விடுகதை எம்மை மிகவும் மகிழ்வுறச் செய்கிறது. ஆகவே நீ என்னருகில் வந்து எனக்கு மட்டும் இதன் பதிலைக் கூறுவாயாக! ஆனால் மற்ற எவருக்கும் இது கேட்கக் கூடாது”, என்றார்.

அந்த இளைஞனும் அரசரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, மனைவியை தூரமாகச் செல்லச் சொல்லிவிட்டு, அரசரின் அருகில் வந்து அவருக்கு மட்டும் கேட்கும்படியாக அதன் விடையைப் பகர ஆரம்பித்தான்.

“ அரசே, என்னுடைய சேமிப்பின் முதல் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுவேன். இதனால் ஆண்டவன் என் நற்செயலினால் மனமகிழ்ந்து விடுவார். அதுவே என்னுடைய மூலதனமாகிறது!”

“இரண்டாவது பாகத்தை என் பெற்றோருக்குக் கொடுத்து, பட்ட கடனை அடைக்கிறேன்”

“ வாழ்க்கைக்குத் தேவையான சில முக்கியமான பொருட்கள் வாங்கியது போக , மீதமுள்ள பணத்தை, சூதாட்டம் போன்ற கேளிக்கைகளுக்கும், மது போன்ற போதைப்பொருட்களுக்கும் செலவு செய்யும் இந்த மூன்றாம் பகுதியைத்தான் வீண் செலவாகக் கூறுகிறேன்!”

“ நான்காவது பாகத்தைத்தான் என் எதிரிக்குக் கொடுக்கிறேன். அதாவது என் மனைவிக்கு! அவள்தான் என் எதிரி” என்றான்.முதன் மூன்று விடைகளைக் கேட்டு, மகிழ்ச்சியுடன் புன்னகைத்த அரசர், அவனுடைய நான்காவது பதிலைக்கேட்டு, புன் சிரிப்பு மறைந்து, சற்றே சிந்திக்கலானார். பிறகு “ என்னது, உன்
மனைவி உனக்கு எதிரியா? என்ன சொல்கிறாய் இளைஞனே? ஏன் இப்படி ஒரு இழிவான எண்ணம் கொண்டவனாக இருக்கிறாய்? நீ தவறு செய்கிறாய் நண்பனே! உன் மனைவி ஒரு நாளும் உனக்கு எதிரியாக இருக்கவே முடியாது” என்றார் கம்பீரமாக.

ஆனால் விறகுவெட்டியோ இதற்கு எந்த பதிலும் சொல்லாமல், மௌனமாக ,அரசரின் முன்னால் மரியாதையுடன் தலை வணங்கிவிட்டு, கிளம்பத் தயாரானான். அரசர் உடனே அவனைப் பார்த்து, “ நில். எங்கே கிளம்பி விட்டாய். உம்முடைய மற்ற விடைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தோம். நான் இந்த விடுகதையை மக்களுக்குப் பாடம் புகட்ட பயன்படுத்தப் போகிறேன். எம் இராஜ சபையில் இதனை அறிவித்து, எந்த பெண்ணாவது அல்லது ஆணாவது இதற்கு சரியான விடை அளித்தால் அவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் . ஆயினும் இந்த விடுகதையின் பதிலை நீ எவருக்கேனும் சொன்னால் உன் ஆயுட்காலம் முழுதும் நீ சிறையில் கிடந்து அவதிப்படத்தான் வேண்டும். “ என்று ஆணையிட்டுவிட்டு, குதிரையில் ஏறி அரண்மனை நோக்கிச் சென்று விட்டார்.

அடுத்த நாள் அரசவையில், இந்த விடுகதையை அறிவித்து, இதற்கு சரியான விடையளிப்பவருக்கு, தங்கத்தாலான, தர்பூசணிப்பழம் பரிசாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். காலம் ஓடிக் கொண்டிருந்தது. பலர் விடையளிக்க முன் வந்தும், எவராலும் சரியான விடையளிக்க இயலாதலால் அரசரின் ஆவலும் எல்லை மீறிக் கொண்டிருந்தது.

இச்செய்தியை நாடு முழுவதும் பறை சாற்றும் படியான அரசரின் ஆணைப்படி, பறை சாற்றுபவன் ஒரு நாள் அந்த விறகு வெட்டியின் வீட்டின் அருகிலும் சென்று அறிவித்துக் கொண்டிருந்ததை காதில் வாங்கிய அந்த விறகுவெட்டியின் மனைவியோ, இந்த விடுகதை தன் கணவன் சொன்னதுதான் என்பதை எளிதாகவே புரிந்து கொண்டாள். எப்படியும் இந்தப் பரிசைத்தானே அடைய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தாள்.

வேலையை முடித்து விட்டு வீடுநோக்கி வந்த அந்த விறகு வெட்டி, தன் மனைவியின் அழகு வதனம் வாடியிருப்பதைக் கண்டு கவலையுற்று அதற்கான காரணமும் கேட்டான்.அவளும் அரசரின் பரிசு அறிவிப்பு பற்றி உற்சாகமாகக் கூறினாள். அவனுக்கு அப்போதுதான் தன்னுடைய விடுகதையும், அரசரின்
ஆணையும் நினைவிற்கு வந்தது.

ஆனால் அவன் மனைவியோ, ஒய்யாரமாக ஆடிக்கொண்டு, “ எனக்கு நீ அந்த விடையச் சொன்னால், நான் அரண்மனைக்குச் சென்று அந்த விடையைச் சொல்லி, தங்க தர்பூசணிப்பழ பரிசை வாங்கி வந்து விடுவேன். நாமும் பெரிய பணக்காரர் ஆகி விடலாமே” என்றாள்.

விறகு வெட்டியோ அதிர்ச்சியுற்று, அரசர் இந்த விடையை வெளியேசொன்னால் தன்னை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்து விடுவார் என்பதையும் கூறினான். ஆனால் அவளோ, எப்படியும் தான் பணக்காரி ஆகியேத்தீர வேண்டும் என்றும் அதனால் யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் உறுதியான எண்ணம் கொண்டாள். இருந்தும் அது பற்றி ஏதும் சொல்லாமல் அழுத்தமாக இருந்தாள்.

இரவும் வந்தது. ஊரே உறங்கும் நேரத்தில் அவள் மட்டும், திடீரென்று ‘ஓ’ வென அலற ஆரம்பித்தாள். அதிர்ச்சியடைந்த விறகுவெட்டியோ, காரணம் புரியாமல் அவளருகில் சென்று பதட்டத்துடன் காரணமும் கேட்டான். ஆனாலும் அவள் ஒன்றும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விறகுவெட்டியும், செய்வதறியாமல் திகைத்து, அவளருகில் சென்று, அவள் தலையை அன்பாக வருடி, ” உன் கண்ணீரைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை கண்ணே. உனக்கு என்ன வேண்டுமானாலும் சொல். என்னால் இயன்றதைச் செய்கிறேன். உன் மகிழ்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம். கண்களைத் துடைத்துக் கொண்டு, உனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கூறி சமாதானம் செய்ய முயற்சித்தான்.

அவன் மனைவியோ, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு, கேவலுடன், மெலிந்த தொனியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். ஆம், “ நீ ஏன் உன் விடுகதையின் பதிலை எனக்குக் கூறவில்லை ?“ என்று பவ்யமாகக் கேட்டாள்.

“ அந்த விடுகதையின் பதில் எனக்குத் தெரிந்திருந்தும் நான் ஏன் கூறவில்லை என்பது உனக்கேத் தெரியுமே என் கண்மணியே! உனக்கு விடையைச் சொன்னால் அரசர் என்னை ஆயுட்சிறையில் அடைத்து விடுவார் என்பதும் உனக்குத் தெரியுமல்லவா?” என்றான்.

உடனே அவள் இன்னும் பலமாக அழுதாள். “ உனக்கு என் மீது நம்பிக்கையே இல்லை – இது என்னுடைய துர்பாக்கியம். கடவுளே! என் மீது நம்பிக்கையே இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு என் வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டேனே, என் தலையெழுத்து இப்படி ஆகிவிட்டதே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அந்த ஏழை விறகு வெட்டியோ மனம் நொந்துப் போனான். “ எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. விடையை உன்னிடம் சொன்னால் நீ உடனே அரசரிடம் எடுத்துச் சென்று விட்டால் அவர் கட்டாயம் நீ என் மூலம்தான் அறிந்து கொண்டாய் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடுவாரே. பிறகு என்ன நடக்கும் என்பது உனக்கே தெரியுமே”

அவளோ,” அவரால் எப்படி என்னை உங்கள் மனைவி என்று கண்டுபிடிக்க முடியும். அவர் என்னை சரியாக பார்க்கவே இல்லையே” என்றாள்.அவள் மீண்டும் மீண்டும் அழுது புலம்பிக் கொண்டே இருந்தாள். “ உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்பதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நான் ஏன் அரசரிடம்போய் சொல்லப்போகிறேன், நீ வேண்டாம் என்று கூறியபின்பு.” என்றாள் அன்பாக அவன் கழுத்தை இறுகக்கட்டிக் கொண்டு!

இப்படி பல்வேறு தகிடுதத்தங்கள் செய்து பலவாறு பேசி, நடித்து இறுதியில் அவனிடமிருந்து விடையைத் தெரிந்து கொண்டாள்.

அடுத்த நாள் விறகுவெட்டி காட்டிற்குச் செல்லக் காத்திருந்தவள் அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அரண்மனைக்குச் செல்லத் தயாராகிவிட்டாள். அங்கு சென்று காவலாளியிடம் தான் விடுகதைக்கு விடை சொல்லவே வந்திருப்பதாகத் தெரிவிக்க மறு வினாடி அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். அரசர் விடுகதையைக் கூற, விறகுவெட்டியின் மனைவியும் உடனடியாக விடையைக் கூறினாள். அரசர் சரியான விடையைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்து தங்க தர்பூசணிப்பழத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

அந்தப் பெண்ணும் பெருமகிழ்ச்சியுடன், அந்த விலையுயர்ந்த பரிசைப் பெற்றுக் கொண்டு புறப்பட தயாரானபோது , அரசர் அவளைப் பார்த்து ,”சற்று பொறு பெண்ணே! உன்னை எங்கோ பார்த்தது போல் உள்ளதே. எங்கே என்றுதான் நினைவு வரவில்லை ” என்றார்.

அரசர் கேட்டவுடன், அச்சத்தில் அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. அனைத்து உண்மைகளையும் கூறி விட்டாள். தான்தான் விடுகதை போட்ட அந்த விறகு வெட்டியின் மனைவி எனபதையும் தெளிவாகச் சொல்லி விட்டாள்.

இதைக்கேட்ட அரசரின் கோபம் எல்லைக் கடந்து போனது. அவளிடம் திரும்பவும் கேட்டு இதை உறுதிபடுத்திக் கொண்டு, அவளை பரிசுடன் அனுப்பி விட்டார்.

உடனே சிப்பாய்களை அனுப்பி, அந்த விறகுவெட்டியை கைது பண்ணிக் கொண்டு வருமாறு பணித்தார். சிறிது நேரத்திலேயே, அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான் அந்த விறகுவெட்டி.

அரசர் அவனைப் பார்த்து மிகவும் கோபமாக, “ என் கட்டளையை மீறி அந்த விடுகதையின் விடையை உன் மனைவியிடம் ஏன் கூறினாய்? ஆயுள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தும் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த காரியத்தைச் செய்திருப்பாய்?” என்றார்.
ஆனால் அந்த விறகுவெட்டியோ மிக சாந்தமுடன் அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தான் – “ அரசே, என் மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். அவள் அழுது அடம் பிடித்து கேட்டதால் , அவள் கண்ணீரைச் சகிக்க முடியாமல் தங்களுடைய எச்சரிக்கையையும் மீறும்படி ஆகிவிட்டது”, என்றான்.
அரசர் மிகவும் கோபமடைந்து, “ முட்டாளே… உன் பலவீனத்தால் இப்போது தண்டனை அனுபவிக்கப் போகிறாய். “ என்று சத்தம் போட்டு, சிப்பாய்களின் பக்கம் திரும்பி, ’உடனடியாக இவனை சிறையில் கொண்டு போடுங்கள் ’ என்று கட்டளையிட்டார்.

உடனே விறகுவெட்டி, “ மகாராஜா, ஒரே ஒரு விசயம் மட்டும் பேச அனுமதி கொடுங்கள் ஐயா” என்று கேட்டான்.

“எதைப்பேசி உன் தவறை மறைக்கப் போகிறாய்? என் எச்சரிக்கையையும் மீறி நீ தெரிந்தே இந்த வேலையைச் செய்திருக்கிறாய்” என்றார் கோபமுடன்.

“ அரசே, எனக்கு என் மனைவி மீது நம்பிக்கை இருந்தது. அவள் என்னை எப்படிப்பட்ட பேராபத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டாள் பாருங்கள். உங்களுக்கு என்னுடைய விடுகதையின் நான்காம் பகுதி நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அப்போது கோபமடைந்தீர்கள். இப்போது என் நிலைமையைப் பாருங்கள். நான் சொன்ன அந்த பதிலின் உண்மை உருவம் இப்போது தங்கள் முன்னிலையில் நிற்கிறது பாருங்கள்!” என்றான் கண்ணீர் மல்க.

இதனைக்கேட்ட அரசர் சிந்தனையில் மூழ்கினார். பின்பு விறகுவெட்டியின், திறமையை எண்ணி ஆச்சரியமடைந்தார்.அந்த விறகுவெட்டியை மன்னித்து, நிறைய வெகுமதிகளும் கொடுத்து அனுப்பி வைத்தார்!

 

படத்திற்கு நன்றி

படங்களுக்கு நன்றி

 

3 thoughts on “புதிர்

  1. அன்பு பவள சங்கரி அருமையான கதை நிஜமாகவே புதிர் தான் ,நல்ல
    கருத்தும் கொண்ட இது போன்ற கதை சிறுவர்களுக்கு மிகவும் தேவை

  2. கதை நன்றாக உள்ளது. இது சற்று வித்தியாசமாக பள்ளிப் பாடப் புத்தகத்தில் உள்ளது. நான்காம் புதிர் தங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது. அதைத் தவிர மற்ற மூன்று புதிர்கள் அப்படியே. பாராட்டுகள்.

  3. சுவாரசியம் நிறைந்த புதிர்களுடன் கூடிய கதை.படிக்க சுவையாக இருந்தது.
    தர்மம் செய்வதுதான் நமது மூலதனம் என்பது போன்ற நற்கருத்துக்கள் நிறைந்த கதை.பகிர்விற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *