குழந்தைகள் குழந்தைகளாகட்டும்…

0

தாண்டவக்கோன் அன்புடன்


குழந்தைகள் என்றொரு பட்டாம்பூச்சிக் கூட்டமும் நம்மோடு பயணிக்கிறது எனும் திடீர் ஞாபகத்தை வருடந்தோரும் தருகிறது இந்நாள். சட்டை சைக்கிள் நாற்காலி பீஸா உள்ளிட்ட நுகர்வுச் சந்தை வேண்டுமானால் கல்லாப் பெட்டியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு குழந்தைகள் மீது அசாத்திய அக்கறை காட்டுகிறது. ஆனால் சமூகக் கப்பலின் தலைமை மாலுமியான பண்பாட்டுச் சந்தையோ குழந்தைகளின் இருப்பையே கிட்டத் தட்ட மறந்து விட்டுப் பேயாட்டம் போடுகிறது.
பிறப்பது முதல் இறப்பது வரை எதெதை எப்படிச் செய்ய வேண்டும் என்று முந்தைய தலைமுறையினர் அனுபவித்துச் சிபாரிசு செய்ததைப் பண்பாடு என்கிறோம். பண்பாட்டு நிறுவன வடிவங்களில் ஒன்றுதான் பள்ளிகள் கல்லூரிகள்.அறிவு கேட்டுத்தான் தாயின் மடியிலிருந்து குழந்தை இறங்கி பள்ளிகளுக்குள் நுழைகிறது. அறிவுககு ஈடாக அதனிடமிருந்து பறிக்கப்படுவது குழந்தையின் அடிப்படை உரிமையான குழந்தைத்தனம். நவரச குணங்களுள்ளவன்தான் மனிதன். ஆனால் படிப்பாளியாகவும் பட்டம் பெற்று வேலை பெறவும் வேறெந்த குணமும் வேண்டாம் வெறி ஒன்று போதும். என்ன, ஆரம்பத்தில் படிப்பு வெறி படித்து முடித்ததும் பண வெறி அம்புட்டுத்தான்.
அவ்வெறியில் படிக்கிறவர்கள்தான் பத்திருபது வருடங்கள் எனத் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டு வெளியே வந்து இன்று ஹைடெக் குற்றங்களில் ஈடுபட்டு சமூகத்தை அதிரவைக்கிறார்கள். ராணுவத்திலிருந்து அமைச்சகப் பொறுப்பாளர்கள் வங்கி மேலாளர்கள் ஆசிரியர்கள் என்று நீளும் குற்றப்பட்டியல் சொல்கிறது மெத்தப் படித்தவர்களின் லட்சணத்தை.படிப்பிற்கும் ஒழுக்க நெறிகளுக்கும் சம்பந்தமில்லாது போனதெப்படி? படித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்மால் சொல்ல முடியாதென்றால், ஏறத்தாழ இருபது வருடங்கள் கல்விக் கூடங்களில் ஒரு மனிதன் செலவிட்டும் அவன் சமூக முரண் ஏதுமில்லாத யோக்கியனாக உருவாக முடியாதென்றால் இன்னும் என்ன நம்பிக்கையில் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம் குழந்தைகளை?
சரி, பண்பாட்டுத் துறைகளான கோவில் நூலகம் பத்திரிகை சினிமா போன்றவற்றின் தற்போதைய நிலைகளென்ன? எங்கேயாவது குழந்தைகளுக்கான குழந்தைமை மறுக்கப்படாத காலியிடம் இருக்கிறதா..?
முன்பெல்லாம் கோவில்களைச் சுற்றிக் குழந்தைகள் கூடிக் களிப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவில் மைதானங்களில் குழந்தைகள்தான் நிரம்பியிருப்பார்கள். ஆனால் இப்போது கோவில் அருகில் குடியிருப்பதே ஒரு ஆபத்தான காரியமாகிவிட்டது. கோவில்களுக்கு விளையாடுவதற்கே என்று வரும் காலம் போய் கோவில் வளாகங்களுக்குள் அம்மா அப்பா கை பிடித்து ராணுவ ஒழுங்குடன் வலம் வரும் சிறார்களைத்தான் காண முடிகிறது. ஏனெனில் பழைய சாமிகள் சாதாரணக் காரை பூசிய தளத்தில் குடியிருந்தன. இன்றைய சாமிகள் அரசியல் மினுக்கிற்காக சலவைக் கல்லில் கோவில் கட்டிக் கொண்டு சிறுமியின் கொலுசுப் பாதம் ஓடினால் கூட வாட்ச்மேன் வைத்து அலறும் பொல்லாத பூதங்களாகி விட்டன.
முன்பெல்லாம் நான்கைந்து சிறுவர்களாகக் குழுவாக நூலகங்களுக்குச் செல்வோம். நூல்களை அடுக்குவதில் நூலகருக்கு உதவி செய்து விட்டு பிரியப்பட்ட புத்தகங்களையெல்லாம் எடுத்துப் படிக்க முயற்சிப்போம். அங்கே வாசித்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் எங்கள் குறும்பு கூச்சல்களைப் பொறுக்காமல் நூலக வளாகங்களில் சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தடிகளுக்குப் போய் விடுவார்கள். பெரும்பாலும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அலமாறியின் கீழ்த் தட்டுக்களில் அடுக்கப்பட்டிருக்கும். இன்றைய பெரும்பாலான நூலகங்களில் அப்படிப்பட்ட அடுக்குகளும் காணோம் குழந்தைகளையும் காணோம். அப்படி குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கு இடம் தந்து விட்டு இன்றைய படிப்பாளிகள் மரத்தடிக்குப் போவார்களா என்றும் சொல்ல முடியாது.
முப்பது வருடங்கள் முன்பு அம்புலிமாமா ரத்னபாலா எனச் சொற்ப பத்திரிகைகளே குழந்தைகளுக்காக இருந்தன என்றால் ஏழு கோடியாகி விட்ட இன்றைய தமிழ் மக்களின் பெருங் கூட்டத்திற்கும் அதே சொற்ப எண்ணிக்கையில்தான் சிறுவர் பத்திரிகைகள் வருகிறதென்றால் தப்பு யாருடையது? குழந்தைகளுக்காகப் புத்தகம் வாங்கித் தர வக்கில்லையா அல்லது இருக்கிற பாடங்களைப் படிக்கவே குழந்தைகளுக்கு ஏலவில்லையா..?
முன்பு குடும்பத்தோடு பார்க்கும் சினிமா என்றால் குழந்தைகளோடு பார்க்கிற சினிமா என்று பொருள். இன்று குடும்பப் படம் என்பதற்கு வேறு பொருள். அதாவது அதிக பட்சம் பெண்டாட்டியோடு மட்டும்தான் பார்க்க முடியும். வணிகச் சினிமாக்களைப் பொறுத்த வரை குழந்தைகள் கணக்கிலேயே இல்லை. சமூகப் படங்களை குழந்தைகளுக்குத் தேவையில்லாததாக்கி வைத்திருக்கிறார்கள். வயது வந்தவர்களுக்கு மட்டும் காட்டிக் காட்டிக் காசு பார்க்கிற கோணல் புத்தி செய்த வேலை இது. 18 முதல் 30 வயதினரின் பாக்கெட்டுகளைக் குறி வைத்து எடுக்கப்டும் சினிமாக்களைத்தான் குழந்தைகளும் பார்க்க வேண்டி வருகிறது. அதை விட்டால் சிறுவர்களுக்கு நடைமுறைக்கே உதவாத கார்ட்டூன்களும் கிராபிக்ஸ் படங்களும்தான் கதி.
குழந்தைகள் தாங்களாகக் கூடும் விளையாட்டு வடிவங்களான வரைதல் பாடுதல் கதைசொல்லல் தெருவிளையாட்டுக்கள் போன்ற குழந்தைகளின் ஒட்டு மொத்தக் கலை வடிவங்களையும்கூட அடித்து நொறுக்கி ஒரே மூட்டையாகக் கட்டி கம்ப்யூட்டர் விளையாட்டுக்களுக்கும் டிவி ஷோக்களுக்கும் தாரை வார்த்து விட்டு குழந்தைகளைக் கூண்டுக் கிளிகளாக்கி வைத்திருக்கிறது உலகம். நிச்சயம் இது பாதுகாப்பல்ல எதிர்காலத்தில் அணு வெடிப்புக்கு நிகரான ஒரு சமூக வெடிப்பை உருவாக்க வல்ல அத்தனை அழுத்தங்களையும் உள்ளடக்கிய ஒரு அபாய அடையாளம்.
ஒரு விசயத்தை நாம் உற்று நோக்கியாக வேண்டிய அவசரத்திலிருக்கிறோம். 14 வயதில் உயிரின் எல்லாத் தேவைகளுக்கும் உடலைத் தயார் செய்து விடுகிறது இயற்கை. ஆனால் 21ல்தான் திருமணத்தை அனுமதிக்கிறது மனிதர்களின் பல்லாண்டு காலச் சமூகப் பரிணாமம். இந்த 14 முதல் 21 வயது வரை வளரிளம் வயதினரைக் கையைப் பிடித்து அப்படி மறுகரையில் பத்திரமாக 21ல் இறக்கிவிட ஒரு ஏற்பாடும் இல்லை நம்மிடையே. அதேசமயம் எல்லா எல்லைகளையும் தகர்த்தெறிந்து விட்டு தலைவிரித்தாடும் காமுக வக்கிரச் சமூகப் பரப்புக்குள் புதிய பட்டாம் பூச்சிகளாய் நுழையும் அந்த 14 வயதினர் சட்டென எதிர்க் கொள்ளும் பாலியல் தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன. எனவே இந்த 14ஐ எதிர்க் கொள்ளத் தேவையான வலுவான மனப் பாங்கை இன்றைய சிறுவர்கள் உலகில் ஏற்படுத்துவது தற்கால உடனடித் தேவையாக இருக்கிறது.
உலகில் குழந்தைகளின் ஒட்டு மொத்த வெளியையே ஒழித்துக் கட்டும் வேலையை எல்லோருமே நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் வாரிசுகளுக்கு ராக்கெட் விடத் தெரிந்தால் மட்டும் போதாது எதிர்காலச் சமூகத்தில் சக மனிதனோடு மனிதனாகப் புழங்கவும் தெரிந்திருக்க வேண்டும். ரோபோக்களை உருவாக்குவது மனிதனுக்குச் சாதனையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை ரோபோக்களாக ஆக்குவது எப்படிப் பெருமையாக இருக்க முடியும்?
குழந்தைகளுக்கான உரிமை வெளி இனியாவது அகலத் திறக்கப்பட வேண்டும். குழந்தைகள் விசயத்தில் அரசுகள் உடனே தலையிட வேண்டும். தெருக்கள் மைதானங்கள் கோவில் மற்றும் பொது இடங்கள் எங்கும் குழந்தைகளே நிரம்பியிருக்கும்படி சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும். எடுக்கிற கொள்கை முடிவுகள் மூலம் குழந்தைகளுக்கான உலகத்தில்தான் மற்றவர்கள் வாழ்கிறோம் என்ற சொரணையை ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசுதான் கொடுக்க வேண்டும்.காதல் அழகு ரசனை காமம் வக்கிரம் என பதின்ம வயதில் குழந்தைகளைப் பலிவாங்க பயங்கர ரசாயனங்களோடு காத்திருக்கிறது வணிகம் சூழ்ந்த வெளியுலகம். இன்றைய கூண்டுக் கிளிகளால் எதிர்க் கொள்ள முடியாத பேராபத்து நிறைந்திருக்கிறது அங்கே.
அரசும் சமூகமும் குழந்தைகளை இன்று குழந்தைகளாக நடத்தினால் மட்டுமே நாளை அவர்கள் மனிதர்களாவார்கள். எதிர்கால ஆபத்துக்களை மனிதர்களால் மட்டுமே சமாளிக்க இயலும், ரோபோக்களால் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *