குழந்தைகளைக் கொண்டாடுவோம்
சாந்தி மாரியப்பன்
ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தின் சிறப்பு.
நவம்பர் 20-ஐ அனைத்துலகக் குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலிலிருந்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் ஒன்றாம் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14-ஐ குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்?. அதற்கு முழுக்க முழுக்க நம் நேருமாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேரு என்றும் தெற்கில் நேருமாமா என்றும் அழைக்கப்படும் நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 1889ஆம் வருஷம் பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் ரொம்பவும் பாசம் கொண்டவர். அதனால்தான் அவருடைய பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அவர்களது வெள்ளை மனதுதான். எந்தக் கவலையுமே இல்லாமல் ஆடிப்பாடி விளையாடித் திரிந்த நம் குழந்தைப் பருவத்தை நினைக்கும் போது,.. ”ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு வருவதையும், கூடவே இப்போதைய குழந்தைகளின் குழந்தைப் பருவம் எப்படிக் கழிகிறதென்று ஒப்பிட்டுப் பார்க்கிறதையும் நம்மால் நிச்சயமாகத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், இப்போதைய குழந்தைகள் வாழும் சூழல் அப்படி. அதை நாமே உருவாக்கி வைத்து விட்டோம் என்பதும் வேதனைக்குரிய உண்மையே.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40% இருக்கும் குழந்தைகள் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது ஆண் குழந்தை மோகத்தால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காமல் இருப்பது, பிறந்த குழந்தைகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் சிறுவயதிலேயே இறந்து விடுதல், குழந்தைகள் மீதான வன்முறைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன.
இந்தக் காலத்துக் குழந்தைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கும் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டுமென்று குறிக்கோளுடன் இருக்கிறார்கள். அப்படி இருப்பது தவறில்லைதான். ஆனால், அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயித்ததாகவும், அப்படியில்லையென்றால் தான் எதற்கும் லாயக்கில்லை என்றும் நினைத்து விடுகிறார்கள். சின்னத் தோல்விகளைக்கூட தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களுக்கில்லை. எது சரி?.. எது தப்பு? என்று சரியான முடிவெடுக்கத் தெரியாமல் சட்டென்று குழம்பி விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் நம் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருவதும், பள்ளிகளில் ஒழுக்கம் பயிற்றுவிக்கும் வகுப்புகளென்று எதுவும் நடப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும் மற்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதுதான் இப்போதெல்லாம் நடக்கிறது. “ஓடி விளையாடு பாப்பா” என்று பாரதி பாடி வைத்து விட்டுப் போய் விட்டார். ஆனால், இப்போதைய குழந்தைகளின் குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னால் இல்லையென்றால் வீட்டில் தொலைக்காட்சி, அல்லது கணினி முன்னால் மட்டுமே கழிகிறது. இதில் எங்கே ஓடி விளையாடுவது?
குழந்தைகளுக்கு அந்தக் காலத்தில் நல்லது கெட்டது, நம் கலாச்சாரப் பண்புகள், மற்றும் மற்றவர்களுடன் நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித் தரும் அனுபவப் பெட்டகங்களாகத் தாத்தா பாட்டிகள் இருந்தார்கள். இப்போது அவர்களெல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போய் விட்டார்கள். வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிகளும் பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதில் மும்முரமாகி விடுவதுதான் சில வீடுகளில் நடக்கிறது.
கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தை இப்போது தொலைக்காட்சியும் கணினியும் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தொலைக்காட்சி குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான நல்ல சினிமாவோ, இல்லை கேலிச்சித்திரத் தொடர்களோ கூட வருவதில்லை. நிதர்சனத்தைக் காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு காண்பிக்கப்படும் அடிதடி, ரத்தம், முறையற்ற உறவுகள் மற்றும் வன்முறைகள் நிரம்பி வழியும் அந்தக் காட்சிகள் குழந்தைகளின் பிஞ்சு மனதில் நிச்சயமாக விஷ விதைகளைத் தூவுகிறது. சமுதாயத்தைப் பற்றிய அவர்களின் சிந்திக்கும் கோணத்தையே நிச்சயமாக மாற்றி விடுகிறது. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் தவறு கூட சரிதான் என்ற மனப்பாங்கு வளர்ந்து விடுகிறது.
இப்போதைய கல்வியமைப்பும் குழந்தைகளுக்கு ரொம்பவே மன அழுத்தம் கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவர்களுக்குப் பிடித்ததையோ அல்லது அவர்கள் எதில் திறமைசாலியோ அதைப் படிக்க அனுமதிக்கப்படாமல், பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். எல்லாவற்றிலும் முதலிடம் வந்தேயாக வேண்டுமென்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்திலிருந்து வரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் திணறிப் போகும் குழந்தைகள் எக்கச்சக்கம்.
குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதென்று எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும், சட்டம்,அபராதம்,தண்டனையென்று அரசாங்கம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் அந்தக் கொடுமை ரகசியமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்குக் குறைவான கூலி கொடுத்தால் போதும். ஆனால், அதற்குப் பதிலாக விலையுயர்ந்த அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறித்துக் கொள்கிறோமென்று யாருக்குமே தோன்றுவதில்லை.
குடும்பச் சூழல் காரணமாகக் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப் படாமல் வேலைக்கு அனுப்பப்படுவதாகக் காரணம் சொல்லப்படுகிறது. பள்ளியில் சேர்க்கப்படும் பத்துக் குழந்தைகளில் நான்கு பேர் ஆரம்பப் பள்ளிப் படிப்புடன் நின்று விடுகிறார்கள், பத்தில் ஐந்து பேர் ஐந்தாம் வகுப்பைக் கூடத் தாண்டுவதில்லை. பத்தில் ஏழு பேர் மேல் நிலை வகுப்போடு நின்று விடுவதாகப் புள்ளி விவரம் சொல்லுகிறது. இப்படிப் பள்ளிப்படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவு பெண்குழந்தைகளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழித்து, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினால் நிச்சயமாக அடுத்து வரும் தலைமுறைகளும் பயனடையும். இதற்குப் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் என்று எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சியும் நிச்சயமாகத் தேவை.
இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதாக ஆக்க வேண்டியதும், அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் பாதையை இடைஞ்சல்கள் இல்லாமல் சீர்திருத்திச் செப்பனிட்டுக் கொடுப்பதும், தேவைப்படும்போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் நமது கடமைதானே?. இதைச் செய்தால்தானே குழந்தைகள் தினம் கொண்டாடுவதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படியொரு நல்ல சூழலில் வளரும் குழந்தைகளுக்கு வருஷம் முழுக்கக் குழந்தைகள் தினக் குதூகலமும் கிடைக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம், வாழ்த்துவோம். அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
இந்தியாவைத் தாங்கிப்பிடிக்கும் அஸ்திவாரம் நமது குழந்தைகளே அவர்களை
நல்ல வழிக்குக் கொண்டுவருதல் நமது கடமையே என்று சொல்லியிருப்பது
மிக உண்மை.அருமையான கட்டுரை
குழந்தைகளை நல்ல அம்சமாக கொண்டு வர
E.H V. {EDUCATION IN HUMAN VALUES} என்று
நாங்கள் எங்கள் பள்ளியில் பாபாவின் ஆசிகளுடன் நடத்திக்கொண்டிருந்தோம் ,
இதில் அன்பு அஹிம்ஸை ,சத்தியம் தர்மம் என்று பல தலைப்புகள்
வருகின்றன .
இன்றும் சில பள்ளிகளில் இது நடத்தப்பட்டு வருகிறது இது எல்லா மதங்களுக்கும்
பொது .குழந்தைகள் ஒரு பாகுபாடுமில்லாமல் எல்லா மதத்தலைவர்கள் பற்றியும்
அவர்களது கலாசாரங்கள் பற்றியும் படிப்பதால் மனம் விரிவடைகிறது
கருத்துரையிட்டதற்கு ரொம்ப நன்றி விசாலம்மா..