ராஜி வெங்கட்

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும்  உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின்  மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.

1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு முயல், ஒரு மீன்,ஒரு பூனை மற்றும் ஒரு சீகல் இவை மாணவர்களாக இருந்தன. பள்ளியின் பாடத்திட்டத்தில் மரமேறுதல், நீந்துதல், குழி தோண்டுதல் ஆகியவை இருந்தன. இதில் முயலானது குழி தோண்டுவதில் எப்போதும் முதல் மாணவனாகவும்,மீன் நீந்துதலில் முதல் மாணவனாகவும், பூனை மரமேறுதலில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தன.ஆனால் இவை எல்லாமே மற்ற இரண்டு பாடங்களில் தோல்வியையே சந்தித்தன.சீகலோ கொஞ்சம் மரமேறுதல்,கொஞ்சம் நீந்துதல்,கொஞ்சம் குழி தோண்டுதல் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்து தேர்ச்சி பெற்றிருந்தது.

இதில் நாம் அறிவது என்னவென்றால், ஒன்றில் பிரமாதப் படுத்தும் குழந்தைக்கு மற்றொன்று வராமல் போகலாம். ஒரு சில குழந்தைகள் எல்லாவற்றிலும் ஓரளவு செய்து முடிக்கும் நிலையில் இருப்பார்கள்.ஆங்கிலத்தையோ கணக்கையோ வெறுக்கும் குழந்தைக்கு வேறொன்றில் நாட்டம் இருக்கலாம்.ஆங்கிலம் பிடிக்காத குழந்தையை தமிழ்ப் பண்டிதனாகவோ அல்லது சிறந்த ஃப்ரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாகவோ வளர அனுமதியுங்கள். கணக்கை விரும்பாத குழந்தையின் வாழ்வில், தயவு கூர்ந்து கணக்கைத் திணித்து அக்குழந்தையை மழுங்கச் செய்யாதீர்கள். அந்த குழந்தையின் விருப்பமறிந்து அதனைச் சிறந்த ஓவியனாகாவோ,  பாடகனாகவோ புகைப்பட கலைஞனாகவோ வளர அனுமதியுங்கள்.

இனி அடுத்த கதைக்குச் செல்வோம்.

2.ஒரு குயவனிடம் இரண்டு மண்பானைகள் இருந்தன. அவன் தினமும் ஆற்றுக்குச் சென்று அவற்றில் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவான். திடீரென ஒரு நாள் ஒரு பானையில் சிறிய ஓட்டை விழுந்து விட்டது. அப்படியும் அவன் அதே இரண்டு பானைகளிலேயே தண்ணீர் எடுத்து வந்தான். நன்றாக இருந்த பானையோ ஓட்டைப் பானையைப் பார்த்து சிரித்து, “உன்னால் தண்ணீரை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் நீ எதற்கு?”  என்று ஏளனம் செய்தது. இதைத் தாங்க இயலாத ஓட்டைப் பானை குயவனிடம், “நான்தான் ஓட்டையாகி விட்டேனே. இன்னும் என்னைத் தூக்கி எறியாமல் என்னுள் நீர் எடுத்து வந்து ஏன் என்னைப் பிறர் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு ஆளாக்குகிறாய்?” என்று கேட்டது.

குயவன் அந்தப் பானையிடம் “நாளை தண்ணீர் எடுத்து வரும் பொழுது உன்னில் ஓட்டை இருக்கும் பக்கமாக தெருவைத் திரும்பிப் பார்”  என்று கூறினான். மறுநாள் அவ்வண்ணமே அந்த பானையும் செய்தது. ஓட்டை வழியே தண்ணீர் வழிந்த பக்கமெல்லாம் பூச்செடியும் காய் கனி செடிகளும் செழிப்பாக வளர்ந்து  நிமிர்ந்து நின்றன. நல்ல பானையின் பக்கம் வறட்சியாக இருந்தது.

இதில் நாம் அறிவது என்னவென்றால் எந்த ஓட்டையையும் அதாவது குறைகளையும், நிறைகளாக்குவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் உள்ளது.

பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?

குழந்தைகள் தினத்தன்று அவர்களை நல்ல முறையில் கையாள நாம் உறுதி கொள்வோம்.சரிதானே?!

குழந்தைகள் படத்திற்கு நன்றி

குயவர் படத்திற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *