குழந்தைகள் தினம்
இராஜராஜேஸ்வரி
“இந்தியாவில் ஆசிய ஜோதியாக, ரோஜாவின் ராஜாவாக, குழந்தைகளின் அன்புக்குரிய நேருமாமாவாக,சாச்சா நேருவாகத் திகழ்ந்த ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகள் மீதான நேருவின் அன்பை நினைவு கூரும் வகையில் தான் அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, “”குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்” என்றார். குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர்.
நேரு இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிகப் பிரியம் கொண்டவர். அத்துடன், முதல் பிரதமரானதால் சுதந்திர இந்தியாவின் பெருமை மிகுக் குழந்தையாக நேருவைத் தலைவர்கள் போற்றினர். இதன் காரணமாகவே அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவேடப் போட்டிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இந்த தினத்தில் நடைபெறும். இந்த தினத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி நிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று!!!” குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்..
குழந்தைகள் நாள் (Children’s Day) உலகின் பல நாடுகளில் ஆண்டு தோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்துலகக் குழந்தைகள் நாளை (Universal Children’s Day) டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன.
இறைவன் படைத்த படைப்பில்.. அருமையானது குழந்தைப் பருவம்!!
ஓடி விளையாடு பாப்பா,- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.
என்று குழந்தைகளுக்காகப் பாப்பா பாட்டுப் பாடியவர் பாரதியார்..
வருங்கால இந்தியாவின் தூண்கள் குழந்தைகள். தீரச் செயல் புரியும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வீர விருது அளித்துக் கெளரவிக்கிறது.
குழந்தைகள்…விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்படும் வெள்ளை உள்ளங்கள்!
“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிறு வயதில் அவர்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களைப் பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரிய வரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாகப் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.