தூரிகை சின்னராஜ்

என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்குக் குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத் தூரிகைகளால் வரைந்து சுருக்கி விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும்  பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என் பிரியமுள்ள குழந்தைகள்.  அவர்களுக்கு வாழ்த்து சொல்லவே விருப்பம்.

அஜயன் பாலா – எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்.
மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய திரைக்கதைகளில்  பங்காற்றியுள்ள இவரை நான் ஒரு எழுத்தாளராகவே அறிவேன். ஆனந்த விகடனில் இவர் எழுதிய நாயகன் தொடர் என்னை ஒரு வாசகனாக அவரிடம் அறிமுகம் செய்தது. காலப்போக்கில் குழந்தைகள் சினிமா பற்றி சிறுவர் மணியில் அஜயன் பாலா எழுதிய கட்டுரைகள் என்னையும் ஒரு குழந்தையாக்கியது.  மாற்றுச் சினிமா குறித்த பல்வேறு வினாக்களுக்கு இவரிடம் நான் உரையாடிய பிறகுதான் எனக்கு விடைகளும் கிடைக்கத்  தொடங்கின. காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரியனைப் பிரத்யேகமாக அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையிலும், எழுத்திலும் தொடரும் இவரது பயணத்தில் வழிமறித்து, வல்லமை செல்லத்தின் குழந்தைகள் தினச் சிறப்பிதழுக்காக  உரையாடியபோது குழந்தைகளுக்கான சினிமா பற்றி நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட வரிகள் இவை.
“உலகத் தரத்தில் குழந்தைகள் சினிமா தமிழில் இதுவரை வணிகம் கலந்தே தயாரிக்கப்பட்டு வருகிறது. வயதில் மூத்தவர்களும் அவசியம் பார்க்கவேண்டிய சில  முக்கியமான உலகக் குழந்தைகள் திரைப்படங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  கலர் ஆப் பேரடைஸ்,  சில்ட்ரன் ஆப் ஹெவன்,  தி  கிட், வேர் இஸ் மை பிரெண்ட்ஸ் ஹோம்,  சென்ட்ரல் ஸ்டேஷன், நித்தில் ராஸ்கல், தாரே ஜாமீன் பர். இவைகளைப் போன்ற குழந்தைத் திரைப்படங்கள் தமிழில் அரிதாகவே உள்ளது. இத்தகைய முயற்சிகள் நிறைய இங்கு வர வேண்டும்.
குழந்தைகள் கண்கள் என்னும் ஒளிப்படக் கருவி  மூலம் உலகத்தைப் பார்க்கும் பொழுது சொர்க்கமாகக் காட்சியளிக்கிறது.  நல்ல குழந்தைகள் திரைப்படங்கள் வணிகம் சாராமல் நிறைய உருவாக்கப்பட வர வேண்டும். இல்லையேல் குழந்தைகள் எதிர்காலம் நரகத்தை நோக்கி நகர்த்தப்படும் அபாயத்தை எதிர் கொள்ள நேரிடும். ” வல்லமை செல்லங்களுக்கு என் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்”
மொனோகாசி, கலை ஆசிரியர், ஓவியர் 

ஓவியக்கலை ஆசிரியரை எனக்கு அறிமுகம் செய்தவர் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர்களில் ஒருவரான திருமிகு செ. கார்மேகம் அவர்கள். மொனோகாசியின் ஓவியத் திறமையைக் கண்டு அரசுப் பாடப்புத்தகங்களுக்கு படம் வரைய இயக்குனர் அவர்களால் சென்னைக்கு அழைக்கப்பட்ட போது அவருடன் என்னையும் இணைத்தார். சில நாட்கள் மட்டுமே அவருடன் பணி புரிந்த போதிலும், தமிழகத்தின் அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு கலை ஆசிரியருக்கு இவ்வளவு திறமையா என வியந்தேன். ஓவியம் தாண்டியும் குழந்தைகளிடம் அன்பு பாராட்டி வரும் அவரிடம் நம் செல்லம் சிறப்பிதழ் குறித்து கேட்டபோது,
” ஒவ்வொரு குழந்தைகளின் மனதிலும் ஓவியம் குடி கொண்டிருக்கிறது. அதை வெளிக் கொணரும் முயற்சி ஆசிரியருக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் உள்ள பொறுப்பு. குழந்தைகள் வரைவதை வாயாரப் பாராட்டுங்கள். எண்ணற்ற வண்ணக் கனவுகளை வான் நோக்கி விரிய விடுவார்கள். குழந்தைகள்  உற்பத்தி செய்யும் ஒவ்வொரு வண்ணக் குமிழியிலும் இந்த உலகம் உலா வரும். வரையும் விரல்களை வாழ்த்திக் கொண்டே இருங்கள். என் வாழ்த்துக்களையும் அவர்களோடு இந்த நல்ல நாளில்  பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.”   என்றார்.

வேலு.சரவணன், பேராசிரியர் , சென்ட்ரல் பல்கலைக்கழகம்.

மற்றும் ஆழி குழந்தைகள் அமைப்பாளர், நாடகப் பயிற்சியாளர்

குழந்தைகளின் கோமாளி மாமா என்று என்னால் செல்லமாக அழைக்கப்படும் வேலு.சரவணன் எனக்கு அறிமுகமாகிப் பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், ‘வணக்கம்’ என்று தமிழில் மட்டுமே தொலைபேசியில் தொடங்கும் அவரது குரல், குழந்தைகள் என உதடு திறந்து உச்சரிக்கும் போதே ஏற்படும் உற்சாகம், இன்று வரை அவரிடம் மாறவில்லை. இயக்குனர் ஷங்கர் அவர்கள் தயாரித்த ரெட்டைச்சுழி படத்தில் வேலு சரவணன் பணிபுரிகிறார் எனும் செய்தி அறிந்து அவரிடம் தொடர்பு கொண்டேன். ‘ எனக்கு அந்தச் சினிமாவில் குழந்தைகளை சந்தோசமாய் வைத்துக் கொள்வதுதான் வேலை’ என்றார் அடக்கமாக.

அதன் பின் நான் பாண்டிச்சேரி சென்ற  பொழுது அவசியம் பார்க்க வேண்டும் என்று பிரியப்பட்ட நபரும், நண்பரும் அவர். குழந்தைகள் தினச் சிறப்பிதழ் வேலுமாமாவின் வாழ்த்து இல்லாமலா? தரங்கம்பாடியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தவரிடம் தொடர்பு கொண்டேன். “வேலு மாமாவின் வாவாவாவாவாவாவாவாழ்த்துக்கள்” என்று அவருக்கே உரிய வாலு மாமாவாய் வாயார வாழ்த்தினார். விரைவில் வல்லமைச் செல்லங்கள் குறித்துப் பேசுவதாகவும் கூறி விடைபெற்றார். வேலு மாமாவின் நாடகத்தைப் பார்க்கும் சந்தோஷ நிமிடங்களுக்காகக் குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நானும் நன்றி கூறி விடை பெற்றேன்.

1 thought on “பிரபலங்கள் வாழ்த்துகிறார்கள்

  1. அன்பு சின்னராஜ் குழதைகளை வைத்து நாடகம் நடத்துவதில் இருக்கும் இன்பம்
    இருக்கிறதே அதைச்சொல்லிமுடியாது .ஒரு சமயம் கண்ணனாக நடித்த ஒரு சுட்டி
    தன் கொண்டையில் இருந்த மயில் பீலி கீழே விழுந்ததும் அழ ஆரம்பித்து
    விட்டாள் . பின் யசோதையை ஓட வைத்து அந்தக்கண்ணன் அழுகையை
    ஒரு மிட்டாய் கொடுத்து நிறுத்தினோம் உங்கள் கட்டுரை என் பழைய ஞாபகத்தை
    அசை போட வைத்தது ஆங்கிலத்தில் தெ கூல் டாக் ‘The cool dog ” படம்
    என்னை மிகக்கவர்ந்தது .
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *