தீபாவளிச் செய்திகள்
புத்தாடையில் புதுப்பொலிவோடு திகழப்போகும் உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த இனிய நன்னாளில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இச்சமயத்தில் வடமாநிலங்களில் தீபாவளி கொண்டாடுவதைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனது அலுவலகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் பணிபுரிகிறார்கள், தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் போல், தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இங்கே ஒரு நாளில் தீபாவளிப் பண்டிகை முடிந்து விடுகிறது, ஆனால் வடமாநிலங்களில் முக்கியமாக மூன்று நாட்களும், ஒரு சில இடங்களில் ஐந்து நாட்களும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். முதல் நாள் ‘சிறிய தீபாவளி’ (சோட்டா) என்றும், இரண்டாம் நாள் ‘பெரிய தீபாவளி’ (படா) என்றும் முன்றாம் நாள் மாயக்கண்ணனுக்கு பூஜை, நான்காம் நாள்தான் ஸ்நானம் செய்து தீபம் ஏற்றுவார்கள், ஐந்தாம் நாள் வித்தியாசமாக எமன் வழிபாடும் உண்டு. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது என்பது மொகலாய மன்னர் பாபர் காலத்திலிருந்து தொடங்கப் பட்டதாக ஒரு வரலாறு உண்டு, தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதுபோல் வடமாநிலங்களில் தீபம் ஏற்றுவதற்கு முதலிடம். பரமேஸ்வரன் முடியிலிருந்து கங்கை பூமிக்கு வந்து பாய்ந்தோடியதால், தீபாவளி அன்று தேவர்கள் கூட அந்நாளில் பூமிக்கு வந்து கங்கையில் நீராடியதால், அன்று பூலோகத்தில் வசிப்பவர்கள் எங்கு குளித்தாலும் கங்கையில் ஸ்நானம் செய்ததாகவே கருதப்படுகிறது.
“ஆவளி” என்றால் வரிசை என்ற பொருள்பட, வரிசையாக தீபம் ஏற்றி, இருள் நீக்கி வாழ்வில் ஒளிதரும் இந்த இனிய பண்டிகையைக் கொண்டாடும் இந்நன்னாளில், அருமையான தமிழ் பழமொழி ஒன்றைப் பற்றியும் சற்றே அறிந்து கொள்வோம்.
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடவேண்டும்”
சாதாரணமாக எல்லோராலும் அடிக்கடி வழக்கத்தில் பயன்படுத்துகின்ற ஒரு பழமொழி. நம்முடைய வீடுகளில் அன்றாடம் சிலபொருட்களை ‘தேவைப்படாது’ என்று சிறிது சிறிதாக சேர்த்து வைக்கப் போக, ஒரு நாள் அது மலை போல குமிந்துவிடும். உபயோகமற்ற பொருட்களை மொத்தமாக தூக்கி எறிந்துவிட்டு மறுபடி அதிலிருந்து ஏதாவதொரு பொருளைத் தேடும் சமயத்திலும், தனக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருக்குத் தானம் செய்துவிட்டு மறுபடி தனக்குத் தேவை என்கிற போதும்….இம்மாதிரி சந்தர்ப்பங்களிலெல்லாம் இந்தப் பழமொழி அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும். எல்லாவற்றையும் ஆத்துக்குள்ளே (நதி) போட்டால் யாருக்கும் உதவாது, அதனால் அடித்துச் செல்லுகின்ற ஆற்று வெள்ளத்தில் எதைப் போட்டாலும், அளந்து போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாமெல்லாம் இப்பழமொழிக்கு வெளிப்படையாக அர்த்தம் கொள்கிறோம், ஆனால் இதற்கு மற்றொரு வகையில் உட்பொருள் உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
பழமொழியைப் படிக்கும் போது அதனுடைய எழுத்துக்களைச் சற்று மாற்றிப் படித்தோமானால் அதன் உள் அர்த்தம் நமக்குத் தெளிவாகும். அதாவது ‘ஆற்றிலே’ என்பதை ‘அகத்திலே’ என்று படிக்க வேண்டும். அகம் என்றால் வீடு, நமது உள்மனது, உடலுக்குள்ளே உள்ளே செயல்படும் அங்கங்கள் (organs) என்றெல்லாம் பொருள் படும். இங்கே நமது வயிற்றை ‘அகம்’ என்று எடுத்துக்கொள்வோம். “அகத்திலே போட்டாலும் அளந்து போடவேண்டும்” என்பதே இதன் முதல் தோற்றமாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் மறுவி ‘அகத்திலே’ என்பது ஆற்றிலே என்று வழக்கத்தில் கொள்ளப்பட்டது. ஆக உண்ணும்போது அளவாக உண்ணவில்லையெனில் உடல் உபாதைக்குள்ளாக வேண்டும் என்பதும் நாம் அறிந்ததே. ‘அப்பப்பா தீபாவளி வந்தாலும் வந்தது, ஒரே சுவீட்டா சாப்பிட்டு வயிறு ஒரு மாதிரி ஆயிடுச்சு’, ‘ஆத்திலே போட்டாலும் அளந்து போடணுன்னு’ தெரியாம கொஞ்சம் நெறயாவே இனிப்பு சாப்பிட்டேன் என்று நகைச்சுவையோடு சொல்வதை நம் அனுபவத்தில் கண்டிருப்போம். இதே பழமொழியை மற்றொரு வகையில் நோக்கும்போது ‘அகம்’ என்றால் ‘மனது’ என்றும் பொருள்படும். அகத்திலே போட்டாலும் அளந்து போடவேண்டும் என்பதற்கு இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம், அதாவது தேவையற்ற எண்ணங்களை மனதில் சேர்க்காமல், தேர்ந்தெடுத்த நல்லவற்றை மட்டுமெ மனதில் போட்டுக் கொள்ளவேண்டும். அகம் என்று வரும்போது தெரியாத மற்றொன்றையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தீபாவளி அன்று பட்சணங்கள் பலதும் செய்தாலும் முடிவில் ‘தீபாவளி மருந்து’, ‘தீபாவளி லேகியம்’ செய்வதும் தமிழர்களின் வழக்கம். 10 வகையான மருந்துப் பொருட்களுள் ‘ஜீரகம்’ என்ற மருந்துப் பொருளும் அதில் அடங்கும். உண்மையில் அதை ‘சீரகம்’ என்று உச்சரிக்க வேண்டும். நமது அகத்தை (உடம்பிலுள்ள அனைத்து சுரப்பிகள் – organs and glands) சீர் செய்வதால் தான் அதற்கு ‘சீரகம்’ என்று பெயர் வந்ததாகவும், சித்த மருத்துவத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆக எந்தக் காரியத்தைத் செய்தாலும் அளந்து, வசதிக்கு ஏற்றாற்போல் நிதானித்துச் செய்யவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, புத்தாடை வாங்கும் போதும், பட்டாசு வாங்கும்போதும் அதிக அளவில் பணம் செலவழிக்காது சிக்கனமாக இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதை இந்த இனிய தீபாவளி நன்னாளில் நம் வீட்டு பெரியோர்கள் நமக்கு நினைவு கூறும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்து இன்றும் வழக்கத்தில் உண்டு.
அனைவருக்கும் வல்லமை சார்பாக “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”.
அருமையானதொரு, நாம் அறியாத சில செய்திகள் கொண்ட, பதிவு. பெருவை பார்த்தா அவர்கள் வலைப்பூ என்ற ஆற்றில் பதிவுகளை அளந்துதான் போடுகிறார். வாழ்க வளமுடன். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி தின வாழ்த்துக்கள்.
Nice