தீபாவளியன்று மிருகங்களும் ஸ்பெஷல் தான்!

0

விசாலம்
தமிழ் நாட்டில் தீபாவளி என்றால் நரகாசுரனின் வதமும் ,அவன் இறக்கும் நேரத்தில் கேட்டுக்கொண்ட வரமும்தான் .அதனால் தான் புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். ஆனால் வடநாட்டில் ராமர்,கிருஷ்ணர் , யமராஜன், குபேரன், இலக்குமி பிள்ளையார் என்று  பலர்  இந்தப் பூஜையில்  இடம் பெறுகின்றனர். அத்துடன் நிற்பதில்லை . சில இடங்களில்   சில நாலு கால் பிராணிகளுக்கும் பூஜை நடைப்பெறுகிறது ,

அதைத்தவிர தாவரங்களுக்கும் விசேஷ ஸ்தானம் கொடுக்கப்படுகிறது .பீஹாரில் ஆண்கள் ஒரு கூடை நிறைய   பச்சை பசேலென்ற   புற்களும்  நெற்கதிர்களும் எடுத்துக்கொண்டு கிராமத்தை வலம் வருவார்கள் .குமா வோன்  மலையில் வாழும் மக்கள் சந்தனத்தால் அழகான லட்சுமி செய்து அதை ஒரு தாமிரத்தட்டில் வைத்து அந்த இடம் முழுவதும் மாக்கோலம் போட்டுப்பின்  கரும்புச்சாரால் லட்சுமிக்கு அபிஷேகம் செய்விக்கிறார்கள் பின் கற்பூரம் ஏற்றிப்பிரார்த்திக்கிறார்கள்.   இதில் சந்தனம்  கரும்பு  நெற்கதிர், புல் எல்லாமே தாவர வகையைச் சேர்ந்தவைதான்.

ஜெய்ப்பூருக்கு வந்தால்  அங்கு” தீபாவளி மேலா’  தடபுடல் தான் . பச்சை, ,சிவப்பு .அரக்கு ,நீலம் என்று பல வண்ண கலர்களில் உடை அணிந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக  கடையை நோக்கிப்படை எடுகின்றனர். அன்று எதாவது ஒன்று அவரவருக்குத் தகுந்தபடி பொருள் வாங்கியே ஆகவேண்டும். .அது தங்கமாக இருந்தாலும்  சரி அல்லது சின்ன பாத்திரமானாலும் சரி! .அப்பப்பா இந்த நேரத்தில் தில்லியில் அஜ்மல்கான் ரோடைப்பார்க்க வேண்டுமே .! ரோடு முழுவதும்  சுமார் ஒரு கிமீ தூரம் வரை கீழே கம்பளம் விரிக்கப்பட்டு மேலேயும் பந்தல் போட்டு காகிதப்பூக்களாலும் .வேறு அலங்கார மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இரவு .பகல் என்றே தெரியாமல்  ஜகஜ்ஜோதியாக ஒளி விளக்குகள் மின்ன அட நாம் எங்கே வந்திருக்கிறோம்  இது சுவர்க்கமா என்ன ! என்று வியக்கும் அளவுக்கு இருக்கும்! பின் அந்தத்தெரு முழுவதும் கொலுப்படிகள் போல் கட்டப்பட்டு பாத்திரங்களிருந்து ஆரம்பித்து ஊசி வரை விற்பனைக்கு வைப்பார்கள் ,ஏழைகளும்  மிகவும் சந்தோஷமாக  பாத்திரங்கள் வாங்குவதை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.   இதே போல் ராஜஸ்தானிலும் மேலா நடக்கும்.

தீபாவளி தினம்  வர பூனைகளுக்குக்கொண்டாட்டம் . அது எலி  பிடிக்குமா என்ன !இல்லை….. .அதை ராஜஸ்தான் பெண்மணிகள் ராஜ மரியாதையுடன்  அழைத்து  அதைத் தடவி  அதற்கு ஒரு பெரிய விருந்தே வைப்பார்கள்  அந்த  பில்லியைத் அதான் அந்தப் பூனையை   லட்சுமியின் அம்சமாகப்பாவித்து அதற்கும் டீக்கா என்ற திலகம் இட்டு  வழிபாடு நடத்தி  படையல் படைப்பார்கள். அன்றைய தினம் பூனைக்கு ஸ்பெஷல்  உபசரிப்பு! சக்கர் பேடா என்ற இனிப்பு பட்சணத்தை சுகமாக தின்னும் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதேபோல் கர்ணீமாதா என்ற எலிக்கென்றே இருக்கும் ஒரு  ஆலயத்தில் தீபாவளியின் போது அங்கிருக்கும் எலிகளுக்கு பாலும் இனிப்பும் ஒரு பெரிய தட்டில் போட்டு வைப்பார்களாம். எலிகள் இங்கும் அங்கும் ஓட அதை மிதிக்காமல் போவது ஒரு சர்க்கஸ்தான்! இதைத்  தவிர வெள்ளை எலியைப்பார்த்துவிட்டால் ஐஸ்வர்யம் கொட்டுமாம்!  . ல்ட்சுமியின் அம்சம் போல் இந்த வெள்ளை எலி அதிருஷ்டத்தை அளிக்குமாம்!

இதே போல் ஆந்திராவில் எருமை மாடுக்கும் காலையில்  கங்கா ஸ்னானம் உண்டு. விடியற்காலையிலேயே எருமை மாட்டை அழைத்துக்கொண்டு நதி அல்லது குளத்திற்குள் இறங்க வைத்து நன்றாகக் குளிப்பாட்டுவார்கள்.

நேபாலுக்கு வந்தோமானால் அங்கு தீபாவளி  நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளை அவர்கள் திஹார் என்று அழைக்கின்றனர் .முதல் நாளன்று காக்கைக்குப்பூஜை. இதை கக் திஹார் kag thihar என்கின்றனர். அன்று காகத்திற்காக ஸ்பெஷல் ஸ்வீட் செய்து அதை,  வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று காகத்தை அழைத்து படைக்கிறார்கள். காகத்தின் கறையலை நேபாலியர்கள் ஒரு
வேதனைத்தரும் சப்தமாக எடுத்துக்கொள்கிறார்கள் அதனால் இது போல் இனிப்பு வைத்து காகத்தைத்திருப்தி  செய்ய காகமும் ஆயுளை நீடிக்கச்செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது போல் நாமும் மஹாளய அமாவாசையின் போது காகத்திற்கு  சாதம் வைத்து முன்னோர்களைத்திருப்தி படுத்து அவர்களின்  ஆசியைப் பெறுகிறோம் .எங்கள் வீட்டில் தினமுமே காகத்திற்கு சாப்பாடு உண்டு. சுடச்சுட சாதத்தில் துளி நெய்யும் விட்டு  காகத்தை வரவழைத்து வைப்போம் அதை சுடச்சுட தின்னும் அழகே அழகு …..

அடுத்த நாள் குக்குர் திஹார் . இந்த நாள் நாய்களுக்குக் கொண்டாட்டம்..நாய்களைக்குளிப்பாட்டி  நெற்றியில் சிவப்பில் திலகமிட்டு பூஜை செய்கிறார்கள். கழுத்தில் பட்டைக்கட்டி கௌரவிக்கிறார்கள். யமனிடம் தூது செல்லக்கூடிய மிருகம் ஒன்று இந்த நாய்தான் என்பதால்  அதை மிகவும்  மரியாதையுடன்  நடத்தி வழி படுகிறார்கள். காலபைரவரின் வாகனமும் இந்த நாய்தான் .இதை   கிச்சா பூஜை என்றும் அழைக்கின்றனர்.

மூன்றாம் நாள் நரக சதுர்த்தி .  இன்று பசுவிற்குப்பூஜை. கோமாதாவின் சரீரத்தில்  பல கோடி தேவதைகளும் மும்மூர்த்திகளும் இருக்கின்றனர். இங்கும் பசுவை நன்றாகக் குளிப்பாட்டிவிட்டு நெற்றியில் குங்குமத்தால் சிவந்த திலகம் வைத்து மேலே புத்தாடை யும் அணிவிகின்றனர்.  பசுவின் சாணத்தைக் குவித்து ஒரு சின்ன குன்றுபோல்  செய்து அதில் கோவர்த்தன பூஜை செய்கின்றனர் .
பசுவின் பால்,தயிர், கோமூத்திரம், சாணம் எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையாக அமைகிறதால் கோமாதாவைப் பூஜிக்க வாழ்க்கை  செழிப்பும்  வளமும் கொண்டு  நிம்மதியாக கழிகிறது என்ற நம்பிக்கை யுடன் அவர்கள் பூஜை செய்கிறார்கள் .பசுவிற்கு மிகவும் உசத்தியான புல்லும் அதற்குப்பிடித்த ஆகாரமும் கொடுத்து அன்பைத்தெரிவிக்கின்றனர் .அன்று மாலை லட்சுமி பூஜை. இந்தப் பூஜையின் போது ஆண்களும் பெண்களும் பாடுகின்றனர் .ஆண்கள் பாட்டை   ட்யூஸி   Deusi    என்றும்   பெண்கள் பாடுவதை  பைலோ  {   Bhailo] என்றும் கூறுகின்றனர் .தமிழில் இதன் சரியான உச்சாரணம் தெரியவில்லை. இந்தப் பாட்டைத் தீபாவளிக்கு மட்டும் தான் பாடுவார்களாம். இது தீபாவளி ஸ்பெஷலென்று சொல்லலாம். இந்தப்பாட்டைப்பாட இதற்கென்று சில குழுவினர் சமூகசேவைப் போல் எல்லோருடைய வீட்டிற்கும் சென்று பாடி வருவார்களாம் .

நான்காம் நாள்  கோவர்த்தன பூஜா .இதைக்’  கோரு பூஜா ‘என்கின்றனர் .காளை மாட்டின்  சாணத்தைக்குவித்து கோபுரம் செய்து  பூக்கள் வைத்து  பூஜை செய்கிறார்கள் . இதை அனுஷ்டிப்பவர் நேஹார் என்ற  பிரிவினர் . சாணம் கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசல் முழுவதும் சாணத்தினால் மெழுகி  சுத்தமாக வைத்திருக் கின்றனர் .கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி புயல் , அடை மழையிலிருந்து கோப கோபியர்களைக் காத்த தினமாக இதைக்கொண்டாடுகிறார்கள் .
ஐந்தாம்  நாள் மஹ பூஜா என்று தன் ஆத்மாவுக்குப்பூஜை செய்கிறார்கள். கடவுள் என்பதில் உள் கடந்துப்பார் என்ற அர்த்தம் வருவதற்கொப்ப  இவர்களும் ஆன்மாவில் இறைச்சக்தி இருப்பதை அறிய வேண்டும் என்பதைச்சூசகமாகச்சொல்லி  தன் ஆன்மாவுக்குப்பூஜை செய்கிறார்கள் என நினைக்கிறேன் ,

இதில் சில செய்திகள் கொடுத்து உதவிய எங்கள் வீட்டு நேபாலிக்கு என் நன்றி .

எல்லா அன்பு உள்ளங்களுக்கும்   என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

படத்திற்கு நன்றி

http://www.vishnugaruda.com/products/homas/gomatha-pooja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *